Friday, January 11, 2013

க்ருஷாங்கினி (Bio-Data)

இயற்பெயர்: பிருந்தா நாகராஜன் M.A.(ஹிந்தி)புனைப்பெயர்: க்ருஷாங்கினி
பிறந்தஊர்: தாராபுரம் (கோவை மாவட்டம்) தமிழ்நாடு
பிறந்த ஆண்டு: 20.11.1948
திருமணமான ஆண்டு: 8.5.1969
கணவர்: அ.நாகராஜன் (ஓவியர்)
மகள்: நீரஜா ரமணி கிருஷ்ணா (பரதநாட்டியக் கலைஞர்)
மகன்: சத்யாஸ்ரயன்( முதுநிலைப் பட்டதாரி) சதுரங்க ஆட்டக்காரன்

திருமணமானபின்: புதுவையில் 15 வருடமும் கும்பகோணத்தில் 5 வருடமும் வாழ்ந்த இவர் 1990 முதல் சென்னையில் வசிக்கிறார்.

ஃ இவருடைய முதல் சிறுகதை 'புஷ்பித்தல்' 1982ஆம் ஆண்டு கணையாழி மாத இதழில் வெளிவந்தது. இவரது சிறுகதைகள் பெரும்பாலும் தீபம், கணையாழி, ஞானரதம், ராகம், சுபமங்களா, நவீன விருட்சம், புதிய பார்வை, சுந்தர சுகன், கனவு, அரும்பு போன்ற இலக்கியம் பேணும் இதழ்களில் வெளிவந்தன.ஃ நவீன கவிதைகளும் இவ்வாறான சிறு பத்திரிகைகளில் பிரசுரமாயின. இந்தியா டுடே, கல்கி, ஆனந்த விகடன், குமுதம், திணமணி கதிர் போன்ற வெகுஜன பத்திரிகைகளிலும் இவருடைய கவிதைகள் வெளிவந்தன.ஃ ஓவியம், நடனம், இலக்கியம் தொடர்பான பல விமரிசனக் கட்டுரைகள் தின மணி, சுதேச மித்திரன், நுண் கலை (தமிழ் நாடு ஓவியம், நுண்கலை குழு) தினகரன் போன்ற வாராந்திர இதழ்களிலும் தொடர்ந்து வெளிவந்தன.

ஃ பின்வரும் தொகுதிகளில் இவரது படைப்புகள் இடம் பெற்று உள்ளன. 1. இலக்கிய வட்டம் சிறுகதை தொகுப்பு-1985
2. இந்த நூற்றாண்டுச் சிறு கதைகள்-1993. கலைஞன் பதிப்பகம் (விட்டல் ராவ் தொகுத்தது)
3. நவீன விருட்சம் சிறுகதைத் தொகுப்பு-1992. நவீன விருட்சம் வெளியீடு.
4. நவீன விருட்சம் கவிதைத் தொகுப்பு-1994. நவீன விருட்சம் வெளியீடு.
5. நதிகள் தமிழுறவு-தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், 1998
6.  யானைச்சவாரி தொகுப்பு- 2001 எஸ்.ஷங்கரநாராயணன் (புதிய நூற்றாண்டின் துவக்கத்தில் சில சிறுகதைப் பதிவுகள்.)
7. The Unhurried City - Edited by C.S.Lakshmi -Ambai (Penguin books & The Hindu)
8. ந.பிச்சமூர்த்தி நினைவாக (சிறுகதைகள், கவிதைகள் & கட்டுரைகள்) தொகுதி - 2

மேலும்,மளையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் இவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுளன. இவரது சிறுகதைகள் எம்ஃபில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ஆறாம் திணை, மின்னம்பலம், திசைகள், திண்ணை போன்ற இணைய இதழ்களில் ஓவியம், நடனம், பற்றின கட்டுரைகளும், கவிதைகளும் சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. சிங்கப்பூரில் உள்ள தமிழ்முரசு என்னும் இணைய இதழிலும் இவரது கவிதைகள் வெளி வந்துள்ளன. 1992 இல் ஸ்காண்டினேவியா- தமிழ்நாடு கலாச்சாரப் பரிமாற்றம் சென்னையில் நிகழ்ந்தது. அவ்வமயம் தமது கவிதையை இவர் படித்தார். பின்னர் வெளிவந்த ஆங்கிலத் தொகுதியில் அது இடம் பெற்றது.1995 இல் அகில உலகப் பெண் ஓவியர்களின் ஓவியக் கண்காட்சி சென்னையில் 'அலயான்ஸ் பிரான்ஸே' வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கவிதை வாசித்தல் என்ற நிகழ்வில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழ் மற்றும் ஆங்கிலப் பெண் கவிஞர்களுடன் இவரும் பங்கு கொண்டார். ஆறாம்திணை இணைய இதழில் 1998 ஆம் ஆண்டு சென்னை இசை விழாக் காலத்தில் இவரது மகள் நீரஜாவுடன் இணைந்து எழுதிய 'பரதம் புரிதல்' என்னும் பரதக்கலை பற்றிய எளிமையான தொடர் வெளிவந்தது. பலரின் பாராட்டைப் பெற்ற இது பின்னர் சென்னை ஆன்லைன் (ஆங்கில இணைய இதழ்) இல் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு தொடர்ச்சியாக வந்து பெருவாரியான வாசகர்களின் பாராட்டைப் பெற்றது. தமது கணவர் அ.நாகராஜனுடன் இணைந்து 'ஓவிய நிகழ்வு' என்னும் தலைப்பில் 1900திலிருந்து 2000வரை உலக அளவில் சிற்ப, ஓவியத் துறையில் இதுவரை நிகழ்ந்த மாற்றங்கள், நிகழ்வுகள், பரிசோதனைகள், அதில் பெண்களின் பங்களிப்பு பற்றிய தொடர் ஒன்று 'கணையாழி' 2000 இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தது. 2001 ஆம் ஆண்டு மகளிர் தினத்தை ஒட்டி 'கவிதைக் காட்சி' என்ற பெயரில் 32 தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகள் இவரது முயற்சியால் பெரிய அளவில் (4'x6') சென்னை அருங்காட்சியக் கலைக்கூடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டன. அவற்றுக்கு பெண் ஓவியர்களின் ஓவியங்களும் இடம்பெற்றன. அதே ஆண்டு சென்னையில் டிசம்பர் மாதம் திருமதி நீரஜா ரமணி இன்றையத் தமிழ் பெண் கவிஞர்களின் புதுக் கவிதைகளில் சிலவற்றை 'அவ்வைக்குப் பின்னும் ஆங்காங்கே' என்னும் தலைப்பில் மரபு வழுவாத பரதநாட்டியப் பாணியில் நிகழ்த்தினார். இதன் பின்புலமாகக் 'க்ருஷாங்கினி' இருந்தார். இவற்றின் தொடர்ச்சியாக உலகளாவிய பெண் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து 'பறத்தல் அதன் சுதந்திரம்' என்னும் தலைப்பில் காவ்யா மூலம் வெளியிட்டார். இதில் ஏராளமான பெண் ஓவியர்களின் கோட்டு ஓவியங்களும் இடம் பெற்றன. 2001 இல் 'அஸ்மிதா' என்ற மகளிர் அமைப்பு, பெண் எழுத்துக்கள், அதன் மீதான தடை என்ற கருத்தரங்கை மாநில அளவிலும், பின்னர் அனைத்திந்திய அளவிலும் நடத்தியது. Women's world என்ற பெண்கள் அமைப்பு 2003இல் நடத்திய 3நாட்கள் கருத்தரங்கில் உலகம் அனைத்திலுமுள்ள பெண் எழுத்துக்களை மொழி மாற்றம் செய்து பரவச் செய்வது பற்றிய பொருள் அலசப் பட்டது இந்த இரு நிகழ்ச்சிகளுக்கும் பங்கேற்க அழைக்கப்பட்டு இவர் கலந்துகொண்டார். பெண்களின் எழுத்தைப் பற்றிய சர்ச்சைகளும் விவாதங்களும் தொடர்ந்து வாந்து கொண்டு இருந்த காரணத்தால் பெண் எழுத்து பற்றிய பிரக்ஞை ஏற்படுத்தும் முகமாக 2004 மார்ச் 27 அன்று 'இலக்கிய மரபும் பெண்ணும்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் மாலதி மைத்ரியுடன் இணைந்து 'அணங்கு' என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்தினார். அது பின்னர் 'மருது' வெளியீடாக 2004ல் வெளி வந்துள்ளது.

 மொழிபெயர்ப்பு:
ஜெர்மன் நாடக ஆசிரியர் பெர்டோ ல்ட் ப்ரெக்ட் இன் நூற்றாண்டு நினைவு அஞ்சலியாக அவரது 'மதர் கரேஜ்' (mother courage) என்ற நாடகம் 'தீரத் தாய்' என்ற தலைப்பில் 1999இல் சென்னையில் தேசிய நாடகப் பள்ளியின் மூலம் அரங்கேறியது. அதன் தமிழ் வடிவம் ஹிந்தி மொழியிலிருந்து இவரால் செய்யப் பட்டது.

பரிசு:
1. சமகாலப் புள்ளிகள் சிறுகதைத் தொகுதி-1998 தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையால் அவ்வாண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான 2ஆம் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டு, 16.1.2000 திருவள்ளுவர் தினத்தன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்ந்த விழாவில் அளிக்கப் பட்டது.
2. கானல் சதுரம் கவிதைத் தொகுதி-1998 கவிஞர் தேவமகள் அறக்கட்டளை (கோவை) 2002க்கான கவிச்சிறகு விருது அளித்துச் சிறப்பித்தது.

இந்திய அரசாங்கத்தின் அமைப்பான மனித உரிமைக் கமிஷனில் அமையப்பெற்றுள்ள கலை மற்றும் கலாசார மையத்தின் உயர் நிலை மான்யம் 2002-2004 (senior fellowship) பெற்றுள்ள இவர் தமிழில் 50களுக்குப் பிறகு எழுதப்பட்ட புதுக் கவிதையில் பெண்களின் கருப் பொருள், அணுகுமுறை பற்றின ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். சதுரம் பதிப்பகம் என்ற பெயரில் பதிப்பகமும் தொடங்கி உள்ளார். இதில் பெண்ணெழுத்துக்களுக்கு முன்னுரிமை அளித்து பதிப்பித்துக் கொண்டும் இருக்கிறர்.
இதுவரை வெளிவந்துள்ள தொகுப்புகள்:

1. கானல் சதுரம்- கவிதைத் தொகுதி-1998 'கனவு' வெளியீடு '8/707. பாண்டியன் நகர், 12, வாணிய வீதி, திருப்பூர்
2. சமகாலப் புள்ளிகள்  -1988 சிறுகதைத் தொகுதி அருள் பதிப்பகம்' வெளியீடு -641 602 குறிஞ்சிப்பாடி-607 302 
3. பறத்தல் அதன் சுதந்திரம் தொகுப்பாசிரியர்கள் கிருஷாங்கினி, மாலதி மைத்ரிஉலகளாவிய தமிழ் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு காவ்யா பதிப்பகம்,
 4. பரதம் புரிதல் சதுரம் பதிப்பகம்,சென்னை-47 சென்னை
5. கிருஷாங்கினி கதைகள்  சதுரம் பதிப்பகம், சென்னை-47
6. அணங்கு  'இந்திய மரபும் பெண்ணும்' பெண்ணியம் சார்ந்த கட்டுரைகள் 2004
மருதா பதிப்பகம்226(188) பாரதி தெருராயப்பேட்டைசென்னை-600014.

முகவரி
க்ருஷாங்கினி(பிருந்தா நாகராஜன்)
ப.எண்.98/ பு.எண். 34.சிட்லபாக்கம் 2வது பிரதான சாலை
தாம்பரம் சானடோரியம்(கிழக்கு)
சென்னை-600 047தொ.பே.எண். 044-2223 1879
e.mail: nagarajan63@gmail.com

அறிவைத் திறக்கும் போதையும், கண்களை மறைக்கும் போதையும்-கட்டுரை

சென்ற ஆண்டு புத்தகக் கண்காட்சி சார்ந்த புதுப்புனலில் இடம்பெற்றது
 
அறிவைத் திறக்கும் போதையும்,
கண்களை மறைக்கும் போதையும்

ஜனவரி மாதம், வரும் பொங்கலையும், மாட்டுப் பொங்கலையும், திருவள்ளுவர் தினத்தையும் ஒட்டி மூன்று நாட்கள் அல்லது வார இறுதியில் என்றால் தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் கூட விடுமுறை விடப்படும். பள்ளிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் (இரண்டு நாட்கள்) என அனைவருக்கும் கிடைக்கும் விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றும் பொருட்டு அமைக்கப்பட்டது புத்தகக் கண்காட்சி. இது கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டு அறுபது லட்சம் புத்தகங்கள் விற்பனையாகி இருக்கிறது. ஆறு லட்சம் மக்கள் கண்காட்சியைக்கண்டு களித்துள்ளனர். குழந்தைகளும், ஆண்களும், பெண்களுமாக அந்த இடமே நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. அந்த வழித் தடங்களைப் பார்க்கும் பொழுது இந்த விற்பனை குறைவுதான். மக்கள் கூட்டத்திற்கு இடையில் நீந்தி, நீந்தி நூல் வாங்கும் கடை எண் தேடி அலைந்த போது எனக்கு மாம்பலம் ரங்கநாதன் தெருவுக்குள் சென்று கொண்டிருக்கிறேனோ என்ற ஐயம் ஏற்பட்டது. அத்தனை விதமான,  அத்தனை நிலைகளில் மனிதர்கள் சென்று கொண்டே இருந்தனர்.

இந்த ஆண்டு புதுப் புத்தகங்களின்  வரவு அவ்வளவாக இல்லை என்றே சொல்ல வேண்டும். நூலக ஆணையை மூன்று ஆண்டுகளாகக் காணாத என் போன்ற சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் புத்தகம் போடத் துணியவில்லை. புத்தகத்தை வெறும் பொருளாகப் பார்க்காமல் உயிராகப் பார்க்கும் என்னைப் போன்ற பலரும் இதையே கூறினர்.

ரங்கநாதன் தெருவுக்குள் செல்வோருக்கு நிச்சயம் ஒரு நோக்கம் இருக்கும். துணி, நகை, அல்லது மின்சாதனங்கள் என எதையோ ஒன்றை வாங்க வேண்டியிருக்கும். அதை வாங்கும் கடைகளைத் தேர்வு செய்வதில்தான் குழப்பம், விவாதம் இருக்கும். எனவே எல்லோரும் எதோ ஒரு கடையின் முத்திரை இடப்பட்ட பிளாஸ்டிக் பைகளில்- அந்தந்தப் பொருட்களின் அளவுக்கு ஏற்ப பெரியதாகவோ சிறியதாகவோ -நிச்சயம் கைகளில் கொண்டு தம் இருப்பிடம் திரும்புவர். அங்கு பணப்புழக்கமும், வியாபாரமும் ஏற்றமாகவே இருக்கும்.

ஆனால், புத்தகக் கண்காட்சிக் கூட்டம் நிறையப் பார்வையாளர்களைக் கொண்டதாக மட்டுமே தங்கி விட்டதாக  எனக்கு எண்ணம். நிறைய மக்கள் வெற்றுக் கைகளுடன், அல்லது எதோ கொறிக்கும் பொருட்களுடன் வெளியில் வந்து கொண்டிருந்தனர். சென்ற ஆண்டு ஐந்து லட்சம் மக்கள் கண்டு களித்தனர். ஐம்பது லட்சம் புத்தகங்கள் விற்பனை என்று புள்ளிவிவரம் குறிப்பிட்டாலும்கூட.

இதே பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி தொடர்ந்து ஏறுமுகத்தில் உட்சபட்ச வருமானத்தை எட்டிப்பிடித்த மற்றொரு வியாபாரம் மது. இக்கடைகளினால் அரசுக்குக் கிடைத்த இந்த ஆண்டு வருமானம் - அதிகமில்லை ஜெண்டில் மேன் 260 கோடிதான். மதுக்கடைகளில் காணும் கூட்டமும் திருவிழாக் கூட்டம்தான். ஆனால் அங்கு வரும் மக்களின் எண்ணிக்கையை விட வசூல் ஆகும் பணம் பெருந்தொகை. ரங்கநாதன் தெருவையும், புத்தக் கண்காட்சியையும் இன்ன பிற பிற இடங்களைக் காட்டிலும் வருமானம் மிக மிக அதிகம்.

உடல் பணிபுரிவோரின் உழைப்பையும், அதன் வலியையும், நாற்றத்தின் பிடியிலிருந்தும் விடுவித்துக் கொள்ள, அவைகளை மறக்கச் செய்யும் ஒரு பொருள் மது என்பதில் மாற்றுக் கருத்து  இருக்க முடியாது. அது போன்ற ஒரு தொழில் புரியும்  மக்களே இல்லாத நிலை உருவாக வேண்டும் என்று எல்லோரும் எண்ணவும் எண்ணுகிறோம். எனவே அது சிலருக்குத் தேவையானது என்று சொல்லப்படுவது ஏற்கக் கூடியதே. அது உண்மையும் கூட. தெருவில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் சக மனிதரைப் பணியாளரைக் காணும் போதெல்லாம் உறைக்கும் உண்மைதான் அது. ஆனால், 260 கோடி ரூபாயும் உடலுழைப்பைத் தொழிலாகக் கொண்ட உழைப்பாளின் வருமானமாக மட்டும் இருக்கவே முடியாது. இவ்வளவு பணம் செலவழிக்கும் அளவிற்கு தொழிலாளியின் வருமானமும் கிடையாது. இந்த வாருமானம் மூன்று தலை முறையாகப் படித்த அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் பெறப்படுகிறது. படிப்பறிவு இல்லாத உடலுழைப்பின் வாரிசாக இருக்கும் படித்த மக்கள், படித்த பெற்றோரின் அடுத்த தலைமுறை, அடுத்த தலைமுறையின் கல்லூரியில் படிக்கும்  மக்கள் என கொத்துக் கொத்தாய் கூடி இருக்கின்றனர் இவர்கள். கல்வி அறிவைத் திறக்கும், கல்வி அதன் பசியை அதிக்கப்படுத்தும், எனவே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். நூல்கள் எல்லோர் இல்லங்கள¨யும் அலங்கரிக்கும், பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு நூல்களயும், அதனால் தாம் பெற்ற அறிவையும் சொத்தாக விட்டுச் செல்வர். தீயால் அழிக்க முடியாத, வெள்ளத்தால் கொண்டு செல்ல இயலாத அறிவு பல்கிப் பெருகும், என்பதெல்லாம் வெறும் மாயையாகிப் போனது. எல்லோரும் (ஆண்கள்) தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியைக் குடியில் செலவிடுகின்றனர். அதற்கு அடுத்த தலைமுறையையும் போதைக்குள் இழுத்து விடுகின்றனர் என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது. இல்லா விட்டால் பன்னிரெண்டு நாட்களில் 6 கோடி ரூபாய்க்கு புத்தகமும், (ஒரு குறியீடாக சொல்லப்பட்ட பணம் இந்த அளவு. இன்னமும் குறைவாகவும் இருக்கலாம்.) மூன்றே நாட்களில் 260 கோடி ரூபாய் மதுவும் விற்பன¨யாகுமா? கூட்டம் என்பது வேறு. வியாபாரம் என்பது வேறு. இந்த ஆண்டும் இந்த மூன்று நாட்கள் விடுமுறை இதைத்தான் உறுதி செய்துள்ளது.

Wednesday, December 26, 2012

கட்டுரை-பாரம்பரிய பரதத்தில் நுழையும் புதுமையும், காக்கப்படும் பழமையும்

பாரம்பரிய பரதத்தில்
நுழையும் புதுமையும், காக்கப்படும் பழமையும்

    பத்து ஆண்டுகளுக்கு முன் நான் எனது தோழியுடன் (ஆங்கிலத்தில் எழுதுபவள்) தஞ்சாவூரில் பல கிராமங்களூக்குச் சென்று நாதஸ்வரக் கலைஞர்களைக் கண்டு அவர்களின் தற்கால நிலை பற்றி அறிந்து ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் எழுதுவதற்காக சென்றிருந்தேன். எங்களுடன் ஒரு மூத்த நாதஸ்வரக் கலைஞர் அவர்களின் பேரனும் உடன் வந்திருந்தார். அவரும் நாதஸ்வரக் கலையை இன்னமும் பரவலாகச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். கோவில்களில் பரந்த மண்டபங்களிலும், வெளிப் பிரகாரங்களிலும், கோவிலைச் சுற்றியுள்ள தெருச் சந்திப்புக்களிலும் நாதஸ்வர ஓசையும், தவிலின் கம்பீரமும், சலங்கையின் நாதமும் நிறைந்து வழிந்து ஓடிக் கொண்டிருந்தது என் மனதில்.  
    ஒரு கோவிலில் கல் நாயனம் கண்டேன். அதை  அதற்காவே ஏற்படுத்திய ஸ்டாண்டில் வைத்து வாசிப்பார்கள் என்றனர். யானையின்  தந்தத்தில் இரண்டு நாதஸ்வரம் அக்கோவிலில் இருந்தது எனவும், அதில் ஒன்று தற்போது சென்னையில் ஒரு பெரிய மனிதரிடம் இருப்பதாகவும், மற்றொன்று வேறு ஒருவரிடம் இருப்பதாகவும் தெரிவித்தனர். தந்த நாயனமோ, கல் நாயனமோ இப்போது உபயோகத்தில் இல்லை எனினும், அதை வாசித்த பரம்பரை இன்னமும் இருக்கிறது. தந்த நாயனத்தில் காற்று ஊதி உள்ளிழுக்கும் பொழுது அதன் ஊடாக ஊடாடி வரும் காற்று உடலுக்கு மிகுந்த உஷ்ணத்தை கொடுக்கும், அதனால் வாய் மற்றும் மூக்கு வழியே குருதி வெளிப்படும். அதை ஈடுகட்ட நிறைய உருக்கிய நெய் சாப்பிட வேண்டும் என்றும் கூறினார். அதன் நாதம் எவ்வாறு இருக்கும்? கல் நாயனத்தின் உள்ளே காற்று செலுத்த நிறைய பிரயத்தனப் பட வேண்டுமா?அதை முதலில் கண்டு பிடித்தவர் யார்? அதை வாசிக்கத் தெரிந்தவர் இன்னமும் யாராவது இருக்கிறர்களா? 
    நாதஸ்வர இசை செழித்து எல்லோர் இல்லங்களிலும் சலங்கையும், ஓசையும் பொங்கிக் கொண்டு இருக்கும் என்று என் மனதில் குதூகலம் இருந்தது. எனது குதூகலம் வெறும் புனைவாகவே இருந்தது. நிறைய நாதஸ்வர வித்வான்களின் வீடுகளில் வாசிப்போர் இன்றி ஒரு தூசி படிந்த உறையில் இட்டு நாதஸ்வரம் தொங்கிக் கொண்டு இருந்தது. அடுத்த அடுத்த சந்ததியினர் பல பணிகளைக் கற்று வேற்றூரில் அல்லது நாட்டில் வசிப்பதை 'அப்பாடா' என்ற நிறைவுடன் கூறினர். இசை கல்லூரியில், நாதஸ்வரம் கற்றுக் கொள்ள உதவித் தொகை அளித்தும் கூட ஐந்து அல்லது ஆறு மாணவர்களே கல்வி மேற் கொண்டிருந்தனர். கோவில்களில் பூஜைக்காக வாசிக்கும் சிலர் இருந்தனர். மனம் மிகவும் கனத்தது. சென்னை போன்ற பெரு நகரங்களில் டிசம்பர் மாதத்தில் மட்டும் அதாவது, இசை விழாக் காலத்தில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன என்று ஒரு கூற்று தெரிவிக்கிறது .அதில் எத்தனை நாதஸ்வரக் கச்சேரி? விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்போதும் சில விரல்கள் மீதமாக நெரலாம். ஆரம்ப நாட்களில் இசைக்கப்படும் மங்கள இசை தவிர. ஆனால் அதற்கு பிறகு பெரும் முயற்சியில் தற்போது நாதஸ்வரத்திற் கென்றும் கச்சேரிகள் ஏற்பட்டுள்ளன. அதே இசை வேளாளர் பரம்பரைச் சார்ந்த பெண்கள் பலர் தன்னை இறைவனுக் கென்றே அற்பணித்துக் கொண்டு, மிகுந்த அறிவும், சுதந்திரமும், கல்வியும் கொண்டு விவாதங்கள் புரிந்து, விரிவுரை ஆற்றி கலை நிகழ்த்தி கலைக்காகவே வாழ்ந்து இருக்கின்றனர். வாழ்ந்தும் வருகின்றனர் இன்னமும் வெகு சிலர், மீதமுள்ளோர்.

    பரத நாட்டியம் என்பது நாட்டிய சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. அது கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டுகளுக்குள் எழுதப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. பரத  சாஸ்திரம், ரிக் வேதத்தில் இருந்து சொற்களையும், உரையாடலையும், சாம வேதத்திலிருந்து இசையையும், யஜுர்  வேதத்திலிருந்து உணர்வுகளையும், அதர்வண வேதத்திலிருந்து அழகியலையும் எடுத்து, திரட்டி ஐந்தாவது படைக்கப்பட்ட ஒன்று என்றும் புராணம் கூறுகிறது. ஆனால் இப்படிப்பட்ட நாட்டிய சாஸ்திரத்தை வைத்துக் கொண்டு வெறுமே படித்து அதை உடலில் கொணர்ந்து ஆடிவிட யாராலும் இயலாது. நாட்டியத்தை நிகழ் கலையாக உருவாக்கியதை  பல நூற்றாண்டுகளாக கற்பித்து, நிகழ்த்தியும் காத்தும் வரும் நட்டுவனார்கள் இல்லை என்றால் இது உயிரோடு இருந்திருக்குமா? கற்பித்தலை மட்டுமே வாழ்வாகக் கொண்டிருந்ததினால், தனது நிகழ்ச்சிகள்,. அதன் மேடை ஏற்றம், அதன் மூலம் மற்றவை என எதைப்பற்றியும்  அக்கறை கொள்ளாமல் சொல்லிக் கொடுத்து  வளர்ப்பதிலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்தி இருக்கின்றனர்.

    கற்பவரின் உடல் பாங்கு, அவர் வாழ்விடத்தின் சூழல் என சில அடிப்படை மாற்றங்களைக் கணக்கெடுத்து, சொல்லிக் கொடுத்து அக் கலையை வளர்த்தனர். மெல்ல மெல்ல கலைஞர்களின் வாழ்வியல் முறை மாற்றத்திற்கு ஆளாகிப் போயிற்று. பரத கலை கோவில்களையும், பக்தியையும் விட்டு நகரம் நோக்கிப் இடம்பெயரத் தொடங்கியது. இசை வேளாளர் பாரம்பரையில் இல்லாத மற்றவர்களும் பயில்வது   ஆரம்பம் ஆயிற்று. நகரம் நோக்கி எடுத்து வந்தவர்கள் பலர். கற்பிக்கும் பலரும் பரத்தத்தில் தமக்குத் தோன்றிய மாற்றங்களை செய்ய முற்பட்டனர். மெல்ல மெல்ல பரதம் பரவத் தொடங்கியது நகரத்தில் தன் இயல்பை விடுத்து. இதற்கான பெருமை, புகழ், பரவப் பரவ கற்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக கற்பிப்போர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. கற்பத்தலில் பணம் பண்ண ஆரம்பித்தனர். கலை சிறிது சிறிதாக நீர்க்கத் தொடங்கியது.

    நகரங்களில், பெரு நகரங்களில் கற்பிக்க என காளான்கள் போல் அனுபவமற்ற, சிறிதே கற்ற  பலரும், தங்களுக்குத் தெரிந்த அந்தக் கொஞ்சத்தில் கொஞ்சத்தை  தனி நிறுவனமாகவும், கல்விக் கூடங்களிலும், பெரிய நாட்டியத் தாரகைகளின் பள்ளிகளில் ஆரம்பப்பாடம் கற்பிப்பவராகவும்  பணிபுரிய ஆரம் பித்தனர். அந்தக் கொஞ்சத்தில் கொஞ்சத்தை சில வருடங்கள் பகுதி நேரமாகப் பயின்றனர் பலர். அதில் பொருளாதார மற்றும் செல்வாக்கு உள்ளவார்களின் பிள்ளைகள் மேடை ஏறத் தொடங்கினர்.

    வெளி நாடுகளில் வாழும் இந்தியர்களும், தங்கள் குழந்தைகள் இந்திய பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதில் ஒரு பகுதியாக பரதத்தை உணர்ந்து கொண்டிருக் கின்றனர். எனவே நீண்ட நாட்களாக வாழும் இந்தியர்கள், தற்காலிகமாக குடி பெயர்ந்து இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை பரதம் பயில அனுப்புகின்றனர். இது வெளி நாட்டுப் பணம் மற்றும் மோகத்தை இங்கிருக்கும் நாட்டிய ஆசிரியர்ககளுக்கு ஏற்றி விட்டிருக்கிறது. எனவே, சில நாட்கள் பயணம் என வெளி நாடுகளுக்குக் கற்பிக்கப் பயணப்படுபவர்கள் அதிகமாகி விட்டனர்.

    ஆனால் வெளி தேசத்தில் வாழும் மக்களிலும் கலையை மிக உன்னதமாகக் கருதி, அதில் தம் முழு நேரத்தையும் செலவிட்டுக் கற்பிக்கும், கற்கும் மக்கள் மிக அதிகமாக இருக்கின்றனர். ஆழத்தையும் உணர்ந்து கற்று நிகழ்ச்சிகள் தந்து, கற்பிக்கும் கலைஞர்களும் இருக்கின்றனர். அவர்களிடம் புதுமை, பழமைக் குழப்பம் இருப்ப தாகத் தெரியவில்லை. புதுமையைத் தனியாகவும், முழுதான பாரம்பரியத்தை தனியாகவும் உணர்ந்து செயல் படுகின்றனர். கலையின் வேரைத் தேடி இந்தியாவிற்கு வரும் பொழுது முழுமையாக தனது நேரத்தை அதற்காக செலவு செய்கின்றனர். பணத்தையும் கூட.. தேடித் தேடி அலைந்து கற்றுக் கொள்கின்றனர்.  டிசம்பர் மாத விழாக்களில் பல சபாக்களில் அவர்களைக் காணலாம். இதன் மற்றொரு பகுதியும் வெளி தேசங்களில் நிகழ்கிறது.சீசனுக்கு இந்தியா வந்து, நடனக்கலைஞர்களிடம் மணிக்கு இவ்வளவு டாலர் எனக் கொடுத்து இரண்டு அல்லது நான்கு வாரங்கள் மட்டும் கற்றுக் கொண்டு ஊர் திரும்புகிறவர்களும் உள்ளனர்.  அப்படிக் கற்றுக் கொண்டவர்கள் இன்னாரின் சிஷ்யர் என்று போட்டுக் கொண்டு அவர்களின் வழி பரதம் எனக் கூறிக் கொண்டு கற்பிக்கவும் செய்கின்றனர். விவரம் தெரியாதவர்கள் இவர் பெரிய குருவிடம் ஏதோ பத்தாண்டுகள் பயின்றவர் என்று எண்ணுகின்றனர்.  இப்போது இன்னமும் ஒரு வடிவமும் பரதம் பெற்றுள்ளது. அதாவது, வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை இந்தியாவில் கொடுத்தோம் என்று சொல்லிக் கொள்வதற்காக பல சபாக்களில் பணம் கொடுத்து ஆடி, சி.டியும் , வந்த விமர்சனங்களையும் எடுத்துக் கொண்டு திரும்புகின்றனர். எனவே, சில சபாக்கள் Only for N.R.Is என ஏற்படுத்திக் கொடி கட்டிப் பறக்கின்றனர்.

    இசை வேளாளர்கள் பாரம்பரியத்தில் வந்த நாதஸ்வரம் ஒரு பக்கம் குறுகிக் கொண்டு வந்துள்ளது. அவைகளின் பரதம் நகர மற்றும் பணக்கார மேட்டுக் குடி மக்களால் பறிக்கப்பட்டு பணம் கொழிக்கிற வியாபாரமாக மாறி விட்டிருக்கிறது. இரண்டும் இன்றி ஒரு சாரார் மிகவும் பின் தங்கி இருகின்றனர். நிறைய எதிர் மறையாகவே பேச வேண்டி வருவது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது.

    டிசம்பரில் செனையில் 2000க்கும் மேற்பட்ட நிகழ்வுகள். ஒருவரே பல சபாக்களில் நிகழ்ச்சி தருதல், எங்கெங்கும் சபாக்கள், எங்கெங்கும் சலங்கை ஒலிகள். ஆனால், அவைகள் அநேகமாக வெகு சிலரே அமர்ந்திருக்க, பெரும் பாலான இருக்கைகள் காலியாக இருக்கும் அரங்காகவேதான் காட்சி அளிக்கறது. இதில் மிகவும் பரபரப்பாக இயங்கி பணம் பண்ணுகிறவர்கள், பக்க வாத்யக்காரர்களும், பாடகர்களும்தான். பலருக்கும் ‘ரிகர்சல்' எனப்படும் பயிற்சிக்காக நேரம் ஒதுக்க முடியாமல், காலை ஒரு நடனமணிக்கு, மதியம் ஒரு நடனமணிக்கு, மாலை ஒரு நடன மணிக்கு எனப் பறந்து பறந்து காரில் சென்று கொண்டிருக்கின்றனர்.

    எனவேதான், நாம் உண்மையான கலையை அதன் ஆழத்தையும், நேர்த்தியையும் உணர்ந்து  அவற்றை அடைய முயலும் கலைஞர்களைக் கண்டு கொண்டு அவர்களின் பாரம்பரியம் வழுவாக் கலையை இன்னமும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, காளான்களை அழித்து விருட்சங்களை போஷிக்க வேண்டும். இங்கு நான் சில நிகழ்வுகளை இதற்காகத்தான் பதிவு செய்து உள்ளேன். நடனத்தில் நவீன முயற்சிகளும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அது இன்னமும் செழுமையையும், உறுதியான வடிவமைப்பையும், ஆழத்தையும் பெற வேண்டும் என்பது என் எண்ணம்.
வளரும்

Friday, December 21, 2012

குப்பை-காகிதங்கள்-குப்பை- கட்டுரை

குப்பை-காகிதங்கள்-குப்பை


‘சுடிதார் தைக்கணுமாம்மா' பணிவன்புடன் கை நீட்டி காகிதம் ஒன்றைத் திணித்துத் திரும்புகிறான் ஒரு சிறுவன்.'  கணிணி படிப்புங்கண்ணா' மற்றொரு சிறுவன் கை நீட்டி அளிக்கிறான், ஒரு வண்ணக் காகிதத்தை.'உடல் பருமன் ஒரு வாரத்தில் குறைய' என்ற சொற்கள் தாங்கிய பெரிய தொப்பை கொண்ட பெண் உருவம் அச்சிடப்பட்ட வழவழத்தாளை நீட்டுகிறாள் ஒல்லியான ஒரு இளம் பெண்.  இந்த மூன்று வகைக் காகிதங்களாலும், அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் விநியோகிக்கப்படும் காகிதங்கள் என் கைக்குக் கிடைக்காது. நான் எப்போதும் அவற்றை வாங்க மாட்டேன். காகிதத்தின் அருமை தெரியும்.

பெண் முகமும் தலையும் இல்லாமல் பிதுங்கிய மார்பகங்களுடனும், அதற்கு கீழே சட்டையை விட்டு வெளியே பேண்டுக்கும் இடையே நீட்டிக் கொண்டிருக்கும் இடைப் பட்ட வெள்ளைத் தோல் பிரதேசத்துடனும், நடுவில் துருத்திக்கொண்ட தொப்பையும் வண்ணப்படத்தில் அச்சிடப் பட்டிருக்கும் .

அட்சய திருதியைக்கு கடவுள் படமிடப்பட்டு, ((கைகளிலிருந்து தங்கக்காசு கொட்டிக்கொண்டிருக்கும், மற்றொரு கையால் அருள் பாலிக்கும் காசின் கடவுள் படம், சில நொடிகளுக்குப்பின் எல்லோருடைய  காலடியின் கீழும் மிதிபட்டுப் புரளும்.) கடையின் பெயர்களுடன் தள்ளுபடியில் தங்கக்காசுகள், நகைகள். .கடையின் பெயரில் மட்டுமே மாற்றம் இருக்கும். மிகுந்த  விலை உயர்ந்த தாளில் வண்ணத்துடன் கூடிய  நோட்டீஸ்  கூட்டம் அலை மோதும் தெருவில் எல்லோர் கைகளிலும் கொடுக்கப்படும். அந்தத் தெருவில் யாருடனும் இடிக்காமல் நடக்க முடியாது. பெண்களைக் கவர்ந்திழுக்க கடையின் வாசலில் அழகழகான வண்ணக்கோலங்களும், வாழை மரங்கள், தோரணங்கள் கட்டப்பட்ட  நுழைவாயிலில்  ஏறும் போதே தங்கள் வீட்டில் திருமணம் கைகூடி விட்டதாக கனவுடன் படி ஏறும் கூட்டம். கடைக்கதவு எப்போதும் திறந்தே இருக்கும். எரிக்கும் வெய்யிலுக்கு இதமாக செயற்கைக் குளிரூட்டப்பட்ட காற்றும் என எல்லாவற்றையும் கடந்துதான் நான் செல்கிறேன். இலவசமாக விநியோகிக்கும் எதையும் எல்லோரும் கைநீட்டி வாங்கிக்கொள்கிறார்கள். வண்ணவண்ண அந்தக் கையகலத் தாள்கள், பெரியவர்கள் கைகளில் கொடுக்கப்பட்டவுடன் தனக்கும் ஒன்று என்று கைநீட்டி வாங்கிக் கொள்ளும் குழந்தைகள். பெரியவர்கள் செய்வதையே தானும் செய்யும் குழந்தைகள். இளைஞர்கள் நடுத்தர வயதினர், வயோதிகர் என எல்லோரும் கைநீட்டி வாங்கிக் கொள்கின்றனர். ஓரிரு அடிகள் நடப்பதற்குள், காகிதத்தை படித்தும் படிக்காமலும், மடித்தும் மடிக்காமலும், எந்தவித நுண் உணர்வும் இல்லாமல், தங்கள் காலடியில் நழுவ விடுகின்றனர். ஏறக்குறைய நூறு அடிகளுக்குள் வழியெங்கும் (ரயிலடியின் வெகு அருகில் கடைகள் மட்டுமல்ல குப்பைகளும் நிறைந்திருக்கும்) ரயில் நிலையம் செல்லும் வழியில், படி எங்கும், நிறைந்து இறைந்து கிடக்கும் அவற்றைப் பார்க்க பார்க்க மனம் கொதிக்கும்.அட்டைக்கு மட்டுமே வண்ணத்தை ஓடவிட்டு விட்டு, அதுவும் மிகுந்த சிரமத்திற்கு இடையில்,  உள்ளே அனைத்தையும் கருப்பு வெள்ளையில் அடைத்து திணித்து நிரப்பி உயிரையும், உயிர்காற்றையும், வலியையும், வேதனையும், காதலையும், காமத்தையும் கொட்டி எழுதிய நூல்கள் தயாரிக்கிறேன். என் ஆசை அளவிற்கு எந்த நூலையும் செலவு செய்து கொண்டுவர முடியவில்லை. ஓவியம் பற்றிய நூல்களைக்கூட கருப்பு வெள்ளையில் வடித்தும், அதையே படித்தும் வர வேண்டிய நிலை. .நிகழ்த்துக்கலைகளைக் கூட அப்பி வைத்த கருப்பு வெள்ளையில் வண்ணங்களைத் துடைத்து எறிந்துவிட்டு அதையே வெள்ளையாக்கி வண்ண ஜாலம் காட்டி வித்தையும் காட்டுகின்றன நூல்கள். வண்ணத்தில் அடிக்க பணம் கொடுத்து மாளாது.

சிற்றிதழ் தயாரிப்போர் ஒவ்வொரு இதழையும் வழ்க்கையைப் பணயம் வைத்து உறவுகளுடன் முரண்பட்டு வெறி பிடித்தது போல வெளிக் கொண்டு வருகின்றனர்.

ஆனால் இந்தப் பணக்கார வியாபாரிகளின் விளம்பரமோ வழவழ வண்ணத்தாளில், அழாழகாக அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. அதை வாங்கி ஓரிரு நொடிகளில் நழுவ விடுகின்றனர். எத்தனை மரங்கள்? அதிலுள்ள எத்தனை சிற்றுயிர்களை அரைத்துப் பூசிய காகிதமது?  

தேர்வு முடிந்து அடுத்த கட்டத்துக்குப் போகும் மாணவர்களைக் கவர்ந்திழுக்க இப்போது ஜூன் ஜூலையில் என்ன படிக்கலாம், எப்படிப் படிக்கலாம், என்று வழிகாட்டும்(?)  காகிதங்கள் தெருவெங்கும்.  என்னால் இப்ப்டி செலவு செய்ய முடியவில்லையே என்ற பொறாமையும் இதில் கொஞ்சம்  கலந்துதான் இருக்கிறது. வெள்ளைத் தாள்கள் வண்ணம் பூசப்படுவதற்கான காரணம் இன்னமும் கொஞ்சம் மக்களை வழி நடத்துவதாகவோ, மக்களை விழிக்கச் செய்வததகவோ இல்லாமல் முட்டாளாக்கும் செயலைத் திறம்பட அதிகம் செலவழித்து விழும் விட்டில் பூச்சி ஆக்குகிறார்களே என்ற கவலையும் இணைந்துதான்  இதைச் சொல்ல வைக்கிறது.

.

கவிதை

மெய்__ஞானம்

அறியாத வயதில் கேட்டதுண்டு,
காயம் போய், காற்றடைத்த பை என்று.

ஒரு நாள்,

பிளாஸ்டிக் பையில்  காற்றடைத்து
பின் நீரில் விட்டேன் அது பெரும்
உருவெடுத்து உப்பி கம்பீரமாக --
மிதந்து மிதந்து சென்றது.

பின்னர் ஒரு நாள்,

மழையில் ஓடும் சிறு நீர்த் தாரையில்
காகிதப் படகு செய்து மிதக்க விட்டேன்
காற்று நிறைந்து அது காற்றுடன் கலந்து
காற்றிருந்த மட்டும்
மிதந்து பின் நீர் நிறைந்தவுடன் --
மிதக்காமல் மூழ்கியது.

பிறகும் ஒரு முறை,

காலியான டப்பாவில் மூடியிட்டுக்
காற்றடைத்துத் தொட்டியிலிட்டேன்
அதுவும் நீரில் மிதந்து அலை அலையென
அசைந்து அசைந்து நெளிந்தது.
திரவம் நிரம்பிய அக்கணமே
உள்சென்று மூழ்கியது.

விவரம் அறிந்து,
விஞ்ஞானமும், மெய்ஞானமும் கற்றபின்


நீரைவிட அடர்த்தி குறைவெனில்
திரவத்தில் மிதக்கும்
கெட்டிப்படுத்தப்பட்ட நீரும்
நீரில் மிதக்கும், அசையும்.

பிரம்மாண்டமான கப்பலும்
பெரும் நீரில் மிதக்கும் காற்று மட்டும்
உள்ளிருந்தால் அடிநீர் 
மூழ்கித்தான் போகும் என்றும் அறிந்தேன்.

எல்லா உயிர்களிலும் மேலானவன்.
ஆறறிவு உள்ளவன்.
அவனே கடவுள்.
அவனே மனிதன்.

ஆனால்,

நானறிந்த பெண் ஊர் அறியா
வயிற்றுச் சுமையுடனும், வளர்ந்த
தன் மற்றொரு சிசுவை வயிற்றுடன்
துண்டிணைத்துக் கட்டி
சப்தமின்றி நடுநிசியில்
வீட்டுக்கினற்றுள்
காற்று நிறைந்த பைகளாய்
கீழிறங்கி வீழ்ந்தனர்.

காற்றுடன் பைகளாக இருந்த போது
நீருக்குள் மூழ்கியும், மூச்சற்றுப்
பேச்சற்றுக் காற்றும் அற்ற பைகளாய் நீர் நிறைந்திட்ட பின்
ஈருயிரும் சிசுவும்  மேலெழும்பி
அசைந்தன உப்பி, அப்போது

என்னுள் இருந்த விஞ்ஞானமும்
சித்தரின் மெய்ஞானமும்
என எல்லாமே நொறுங்கிப்போய்
ஏன், ஏன், ஏன் என்ற கேள்வியே
மேலெழும்பி மிதந்தது என்னுள்
காற்றும் நீரும் நிறைக்காமலேயே.

Friday, November 23, 2012

பதினேழு கவிதைகள் (சென்னை வானொலி நிலயத்தில் படித்தவை)

மாற்று பிம்பம்

தெருவோரம் தேங்கிநிற்கும் தெளிவான
நீரில் விழுந்துவிட்ட நிலவையும்
உச்சி வெயில் வெளிச்சத்தில்
அடிக்கற்கள் தெரிய அசையாத கிணற்றையும்
இடைவெளி தூரத்தை மாற்றிக்காட்டும்
பிரதிபலிக்கும் பிம்பங்கள்.


ஒரேமண்

களிமண் பூமியில் சூளையிட்டு
அறுத்தெடுக்கும் செங்கற்கள்
களிமண் விளைபூமியைப் பிரிக்கும்;
அடுக்கடுக்காய் சிமென்டுடன்
அழகான சுவராக்கி- பயிரற்று.

உறக்கமல்ல, பறத்தல்

ஊர்ந்துவரும் புழு, நெளிந்து நெளிந்து.
இன்றோ அதுவுமற்று கூடுகட்டிக்கொண்டு.
சிறையில் மரண உறக்கம் என்றெண்ணி
எக்களிக்காதே! இது உறக்கமல்ல; பறத்தலின்
விஸ்தரிப்பு. வண்ணம் கொண்டு உந்திப்
பறக்கும் முன்னதான ஓய்வெடுப்பு. ( 9-4-2006-கல்கி)

சூரிய மலர்

வாசலில் சூரியன்(காந்தி மலர்)
இரவில் மலர்ந்து பகலில் உறங்கும்
மின்சாரத் தடைபாட்டில் மெலிதான மஞ்சள்
மேகம் சூழ்ந்த சூரியன், மழை வரும்
என்றெண்ணினேன், பின் மாயை அகன்றேன்.


ஓசோன்

விஞ்ஞானத்தால் வந்த துளை.
விரிந்து பெரிதாகும் என்றால்
ஊர்வன, பறப்பன ஏதுமற்றுக் காலியாகும் பூமி
செடிகளும் மரங்களுமற்று.
உடையும் உலகத்தை ஒட்டவைக்க-ஒரு
பசையுள்ள நாடா உண்டா உன்னிடம்?

கற்றாழை

பிரம்மாண்டமான பச்சை முள் தூண்கள்,
மேலொரு கலசமென விரிந்த சிவப்பு மலர்
மலர் பிரிதொரு நாள் முள்ளாய் மாறும்
மற்றொரு முட்செடி உருவாகும்- என்றாய் நீ;
மற்றொரு முட்செடியில் இன்னொரு
வண்ணமலர் உச்சிக் கொண்டையாய்-
என்றேன் நான்.


கணிப்பொறி

காற்றின் மூலம் காதில் மிதந்துவந்தன
அன்று, அனைத்துச் செய்திகளும்
வாழ்க்கைக் குறிப்பும் வாழும் முறையும் கூட.
அது, பிறகு கல்வெட்டாகி, காகிதமாகி,
அச்சாகி அரங்கேற, இன்றோ- அது
திரும்ப ஒளிரும் மின் அஞ்சல் எழுத்தாகி
மீண்டும் காற்றினூடே!

அவரவர் சதுரம்

கலந்துரையாடல் அனைவருடனும்- வீட்டின்
உள்ளேயும் வெளியேயும் மக்கள்
கூட்டமாய் சமூகமாய் உறவாய்.
இன்றோ, நகர வாழ்வில்
ஆளுக்கொரு பெட்டி, வசதிக்கேற்ப.
தொலை காட்சி, கணிப்பொறி விளையாட்டு என,
அவரவர் சதுரத்தில் அவரவர் தனித்தனியே.

உறவு

ஜடங்களின் உரசல் சப்தமும்
உயிர்களின் உணர்வில் குரல்களும்
அடிவயற்று ஓலமும், நுனிநாக்கு நளினமும்
இணையாத இரு குரல்கள்;
பல்லாண்டாய் ஓர் அறையில்
எதிர் எதிராய்.

சாம்பல் காடுகள்

எரிமலைக் காட்டிடை
வெடித்துச் சிதறும் எரிமலைத் தீயில்
எத்தனை எத்தனை வண்ணங்கள்!
ஆரஞ்சு, ஊதா, மஞ்சள், நீலமென
அனைத்தையும் விழுங்கி முன்னேற
எஞ்சி நிற்பது- சாம்பல் காடுகள்.

அன்பு

இளம்பிள்ளை அச்சமற்று நிற்கும்
எதிரி யாரென்று அறியாத தருணத்தில்;
எல்லாம் கடந்தவரும் அஞ்சார்; அன்பால்
எதிரி யாரென்று அறிந்தாலும் கூட.



நேர்மை

முளையிலேயே கண்டுணரப்படும்
நேர்மையின் முளை எதுவென்று.
பார்த்தனீயமும் பச்சைதான்-எனினும்
பயன்படாதது அழித்தெடுக்கப்படும்.
எங்கும் நேர்மை முளை பரவ
களையெடுப்போம் எல்லோரும்.

பிள்ளைப் பருவம்

வண்ணத்தோடு  ஒப்பிட்டு பெயரிடப்படும்
மலர்கள், உருவத்தோடு ஒத்ததாய் இருக்கும்
காய்கனிகள், இணைத்து சமைத்து
இணைந்து கூடி மகிழ்ந்த நாட்கள்- இன்று,
மற்றோரையும் தொடர்ந்து
சுமந்து செல்கிறது வாழ்க்கை.

நீரும் நானும்

மழை நடந்து வரும், என் இருப்பிடம் தேடி
வெள்ளம் ஓடிவரும், என்னைக் கடந்து
குளம் தேங்கி நிற்கும், என்னை எதிர்பார்த்து.
கடல், அலை கொணரும் கரை நோக்கி
என்னை அடைய, உள் இழுக்க.

வட்டம்

நிலவைச் சுற்றி சிறு வட்டம், கோட்டை
மேகக் கூட்டம் காட்டப்- பின்
வரும் மழை காட்ட. நிழல்
விளக்கைச் சுற்றி வட்டம்
இருளைக் கரைத்து ஒளியை உமிழும்
விளக்குக் காட்ட.

மரம்

மலையிடை உடைசலில் விழுந்த விதை
முளைத்து இன்று ஒரு மரமாகி.
மரத்தின் உடல் போலப் பரந்து
விரிந்த வேர் பாறை பற்றி
உள் ஓடும் நரம்பாய், எலும்பாய்
உயிர் காக்கும் தேவதையாய்.


கவிதை

அன்று ராவணன் தூக்கிச் செல்ல
தொடரும் வழி காட்டலுக்காய்
விட்டெறிந்த அணிகள் நிலத்தில்
வீழ்ந்து கூறியது கதை.
வழி தொலைத்து என்னை இழக்க
தேய்த்துத் தரும் கரைந்த கவிதைகள் இவை.

Monday, October 29, 2012

முன்னுரை-பஞ்சதந்திரம்

 சதுரம் பதிப்பகம் மூலம் விரைவில் 'பஞ்சதந்திரம்' நூல் வெளிவர உள்ளது. அதற்கான முன்னுரை இது.

பஞ்சதந்திரம்: சிறு அறிமுகம்


    நாங்கள் புதுச்சேரியில் வசித்துவந்த போது டெல்லியில் இருந்துவந்த எழுத்தாள நண்பர் ஒருவர் வேலை மாற்றலில் புதுச்சேரிக்கு வந்தார்.  குடும்பத்துடன், அடிக்கடி அவர்களின் வீட்டிற்கு நாங்களும் எங்கள் வீட்டிற்கு அவர்களுமாக சந்தித்துக் கொள்வோம். (1984,85) அப்போது அவர்கள் ‘பஞ்சதந்திரம்' என்னும் இந்தப் புத்தகத்தை எங்களிடம் கொடுத்தனர். 

    பஞ்சதந்திரம் மிக அருமையான நூல் என்பதால் இதில் உள்ள பல விஷயங்கள் குறித்தும் நிறைய பேசி இருக்கிறோம். அப்போதெல்லாம் நூல் வெளியிடுவது என்பதெல்லாம் இல்லை. அந்தப் புத்தகம் அவர்களிடமிருந்து வந்த பின் எங்கள் வீட்டில் யார் கைகளிலாவது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு ஆர்வத்தைத் தூண்டுவது பஞ்சதந்திரம். படிக்கத் தொடங்கியவுடன் அது உங்களை உள் இழுத்துக் கொண்டுவிடும். எந்தப் பக்கத்திலிருந்தும் படிக்கலாம்.

    கதைகள் என்பதால் பஞ்சதந்திரம் குழந்தைகளுக்கான நூல் என்பதாக ஒரு தவறான எண்ணம் மனதில் பதியவைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குழந்தை களுக்கானதாகப் பார்க்கப் படுவதும் ஓரளவுக்கு சரிதான் என்றாலும் கூட, அரசியல் தந்திரங்கள் நிறைந்த இந்த ‘பஞ்சதந்திரம்' குழந்தைகளுக்கான கதையாக சிறு சிமிழில் அடைக்க முடியாதது. மேலும் குழந்தைகளுக்காக வடிவமைத்த பஞ்சதந்திரக் கதைகள் மிகவும் நீர்த்துப் போனதாக இருக்கிறது. எளிமைப் படுத்துவது என்பது வேறு, நீர்த்துப் போக வைப்பது என்பது வேறு.

    பண்டிட் ஜ்வாலா பிரசாத் மிஸ்ரா 1910ம் ஆண்டு,  பஞ்சதந்திரத்தை சம்ஸ்கிருத ஸ்லோகங்களுக்கு ஹிந்தியில் உரை தந்து முதன் முதலாக பதிப்பித் திருக்கிறார். அதில் விஷ்ணு சர்மன் நீண்ட காலத்திற்கும் முன்னதாக நமது நாட்டில் வசித்தவர். அவருடைய இரண்டாம் பாடலான அறிஞர்களுக்கு வந்தனம் என்னும் ஸ்லோகத்தில் சாணக்கியரின் பெயர் இடம் பெற்றிருப்பதனால் அவர் சாணக்கியருக்கும் பின்னான காலத்தவர் என்கிறார்.  வெகு காலத்திற்கு முன்னதாகவே பஞ்சதந்திரம் செவிவழிக் கதைகளாக இருந்து வந்திருக்கிறது. கால ஓட்டத்தில் இந்தப் பஞ்சதந்திரம் வெளி நாட்டவர்களால் உயர்வாக உணரப்பட்டு, ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பியா ஆகிய நாடுகளில் பரவலாக அறியப்பட்டு இருக்கிறது.  விஷ்ணுசர்மன்  என்பது அவரது உண்மைப் பெயராக இருக்க வேண்டியதில்லை. நம் நாட்டில் பல நூல்களை எழுதிய அறிஞர்கள் தமது அடையாளத்தை வெளியிடுவது இல்லை.  எந்த இடத்தைச் சார்ந்தவர்கள், என்ன குலம், எந்தப்பகுதி, எந்த சந்தர்ப்பத்தில் எழுதப் பட்டது போன்ற எந்த அடையாளத்தையும் அவர்கள் சொல்வதில்லை. அது தேவை என்றும் அவர்கள் கருதியதில்லை. மகாபாரதம், ராமாயணம் போன்ற நூல்களை எழுதியவர்களின் பெயர்கள் கூட காரணப் பெயர்களாக இருக்கின்றன. அவர்களின் உண்மைப் பெயர் நமக்குத் தெரியாது. புற்றிலிருந்தவர் அதனால் வால்மீகி என்றும், வேதத்தை உரைத்தவர் என்பதால் வேதவியாசர் என்ற பெயராலும் நாம் அறிகிறோம் என்கிறார்  ஜ்வாலா ப்ரசாத் சர்மா.

    ‘பஞ்சதந்திரம்' மற்றும் ‘ஹிதோபதேசம்' ஹிப்ரூ, லத்தீன், கிரேக்கம், இத்தாலி,  ஜெர்மனி, பிரெஞ்சு, ஸ்பானிஷ், அரபி, பாரசீகம், துருக்கி, சீனா, உருது ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாகி இருப்பதாக 1910 லேயே ஜ்வாலா பிரசாத் சர்மா பதிவு செய்திருக்கிறார்.

    ஒரு நவீன இலக்கியப் படைப்புப் போல, எதிர் எதிர் கண்ணாடிகளின் பிரதி பிம்பம் போல பஞ்சதந்திரக் கதை தொடங்குகிறது. மகிளாரூப்யம் என்ற நாட்டை ஆண்டு வந்தவன் அமரசக்தி. அவனது மூன்று மகன்களும் புத்தி சாதுர்யம் அற்றவர்கள். அவர்களுக்குப் பாடம் கற்பிக்க விஷ்ணுசர்மன் என்கிற எண்பது வயதான அறிஞர் அமர்த்தப்படுகிறார். நூலை எழுதியவரின் பெயரும் விஷ்ணுசர்மன். முட்டாள் அரசகுமாரர்களுக்குக் கதைகள் மூலம் பாடம் சொல்லித்தருகிறார். முதல் கதை நடைபெறும் இடத்தின் பெயரும் மகிளாரூப்யம்.

    ஒரு மன்னன் தன் நாட்டின் பாதுகாப்பை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அரசாட்சி முறை இந்நூலில் மிகத் தெளிவாக சொல்லப் பட்டிருக்கிறது. ஆரம்பத்திலேயே தலைவன், அவனது ஆட்சி என்பவை சொல்லப் பட்டு உள்ளன. சதுர்மண்டலாஸ்தானம், நால்வகைப் படை, அரசைக் காக்கும் கவசம் என பிரிந்து நிற்கும் விதத்தைத் தெளிவாக்குகிறது.

    பிங்களகன் என்ற சிங்கத்திடம் மந்திரியாயிருந்த ஒரு நரியின் பிள்ளைகள் இருவர் என்று நகர்கிறது கதை. ‘சிங்கம் சாப்பிட்டு மிச்சமான ஆகாரம் நமக்கு இருக்கிறது. புத்திசாலிகள் அநாவசிய விஷயங்களில் தலையிடலாகாது' என்று ஒரு நரி சொல்வதாய் வருகிறது. இந்த இடத்தில் இரண்டு விதமான விவரங்கள் இருக்கின்றன. அரசன் நேர்மையானவனாகவும், சுயகௌரவத்துடனும் இருப்பவனாக இருந்தாலும், அவரது அடுத்த வட்டத்தைச் சேர்ந்த மந்திரிகள் எதிர் மாறாகக் கிடைத்ததைச் சுருட்டிக் கொள்கிறார்கள் என்பது தெரியவருகிறது. எப்போதும் இப்படித்தான். நரி சுயமாக வேட்டை ஆடாது. வேட்டையாடிய உணவின் பகுதியை, விட்டுச் சென்றதை சாமர்த்தியமாகத் தின்று பசி ஆறும். விலங்குகளின் வாழ்க்கை முறையை நன்கு உணர்ந்து அதைப் பயன்படுத்தி வாழ்க்கையைச் சொல்லும் அரசியல் நிர்வாகம் இந்த முறையைப் பஞ்சதந்திரத்தில் முழுவதுமாகக் காணமுடிகிறது.

    விலங்கினங்கள் பற்றிய ஆவணப் படங்களும், அதன் வாழ்க்கையைப் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகங்களும், ஊடகங்களும் இல்லாத அக்காலத்தில், நாம் கண்டறியும் விலங்கின வாழ்க்கையை மிக அழகாக நுட்பமாக மனித இனத்து குணாம்சங்களுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார் விஷ்ணுசர்மன். ராஜ தந்திரம், ஞானம், விவேகம் மட்டுமல்லாமல், உயிரினங்கள் பற்றிய தெளிந்த அறிவும் கொண்டவராய் இருந்திருக்கிறார் விஷ்ணுசர்மன்.

    பிறருக்குத் தலை வணங்கிக் குழைந்து பேசும் வழக்கம் பிங்களகன் என்ற சிங்கத்திற்குக் கிடையாது. பொறுமையின்மை, கோபம், ஆக்ரோஷம், பரபரப்பு ஆகியவற்றைக் கொண்டு தன் காரியங்களைச் சாதித்து வந்தது. பயமின்றித் திரிவது, இச்சகம் பேசுவதை இகழ்வது, காலைப் பிடித்துக் கெஞ்சுவதை வெறுப்பது, மனக் கலக்கமின்றி இருப்பது இவைதான் சிங்கராஜனின் அடையாளங்கள். ஒரு அரசன் எப்படித் தலை நிமிர்ந்து நேர்மையாக சிங்கம் போல இருக்க வேண்டும் என்பது இதில் உணர்த்தப்படுகிறது. தற்கால அரசியல் போக்குகளின் எதிர்மறை நிலையிலிருந்துதான் கதை தொடங்கிறது.

    புத்தகம் நெடுகிலும் வரும் பாத்திரங்கள், விலங்குகள், மனிதர்கள், அரசர்கள், குடும்பங்கள் எந்த நேரத்தில் (விலங்கு மனிதனாக, மனிதன் விலங்காக) எதுவாக எந்த தளத்தில் மாற்றம் கொள்கிறார்கள் என்பதை இடைவெளிக் கோடிட்டுப் பிரித்தறிய முடியவில்லை.

    பஞ்சதந்திரம் முழுக்க முழுக்க அரசியல் தந்திர நூல். இன்றைய அரசியல் கூட்டணிகள், துரோகங்கள், பொய்கள், புரட்டுக்கள் இவை இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது நினைவுக்கு வராமல் படிக்க முடியவில்லை. அதே சமயம் இதிலுள்ள ஸ்லோகங்கள் என்றென்றைக்குமாக மனித இனம் அறிந்துணர வேண்டிய பொன்மொழிகள். இந்த ஸ்லோகங்கள் ஆழமானவை. ஸ்லோகங்கள் சார்ந்த அனுபவங்கள் நமக்குக் கிட்டும் போது இன்னமும் ஆழமும், நெருக்கமும் அதிகமாகும்.

    அவரவர் குணத்திற்கும் நிகழ்வுகளுக்கும் பொருத்தமானதாக கதாப்பாதிரங் களுக்கு பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை காரணப் பெயர்கள். இடங்களின் பெயர்களும் அப்படியேதான். ஆனால் பெண் பாத்திரங்களின் பெயர்கள் ஆண்களின் பெயர்களுடன் சேர்ந்தே வருகின்றன. விலங்குகளில் பெண்ணினப் பெயர்களும் அப்படியே. பெண்ணின் பெயர்கள் ஓரிரு இடங்களில் வந்துள்ளன. மற்றபடி முதலையின் மனைவி, குரங்கின் மனைவி, அரசகுமாரி, ராணி, என்பதாகவே வருகிறது. பெண்கள், சாதிகள் பற்றி பஞ்சதந்திரத்தில் கூறியிருப்பது பொருத்த மற்றதாகவும் சற்றே கோபம் கொள்ள வைப்பதாகவும் இருக்கிறது. அரசியல் நிர்வாகம் பேசப்படுவதால் பெண்கள் பெயர்கள் தவிர்க்கப் பட்டிருக்கின்றனவா? மூல நூலாசிரியருக்குத்தான் தெரியும். இந்தகாலத்திலும் கூட, நிர்வாகத்திலும், அரசியலிலும் பெண்களின் பங்கு மிகக் குறைவுதான். அன்றைய கால கட்டத்தில் அரச பரிபாலனத்தில் பெண்களின் பங்கு அறவே இருந்திருக்காது. அவர்களின் நடமாட்டம் அந்தப்புரத்துடன் சரி. 

    பெண்களைப் பற்றி பஞ்சதந்திரம் சொல்லும் கருத்துக்கள், மாதிரிக்குச் சில கொடுக்கப்பட்டிருக்கின்றன.

‘மேலும்  ஸ்தீரிகள் விஷயம் தான் தெரிந்ததாயிற்றே ஒருத்தனோடு வம்பளப்பாள். இன்னொருத்தனைக் கனிவுடன் பார்ப்பாள். மூன்றாவனை மனதில் நினைத்துக் கொண்டே இருப்பாள். யாரைத்தான் பெண் திடமாகக் காதலித்தாள்'

‘எத்தனை கட்டைகள் போட்டாலும் நெருப்புக்குத் திருப்தி இல்லை.
எத்தனை நீரைக் கொட்டினாலும் சமுத்திரத்திற்குத் திருப்தி இல்லை.
எத்தனை ஜீவராசிகளைக் கொன்றாலும் யமனுக்குத் திருப்தி இல்லை.
எத்தனை ஆண்களைச் சேர்ந்தாலும் பெண்களுக்குத் திருப்தி இல்லை.'

    இதுபோல இன்னமும் பல நூல் நெடுகிலும் இருக்கின்றன.

    பஞ்சதந்திரத்தில் கடவுள் இடம் பெற்றதாகக் கூறமுடியாது. கடவுள் வாழ்த்து என்ற முதல் பாடல் உள்ளது. காளை மாட்டைப் பற்றிக்  குறிப்பிடும் பொழுது, சிவனுக்கு அது வாகனம் என்று வருகிறது. ‘தச்சனும் நெசவாளியும்' என்கிற கதையில் நெசவாளி விஷ்ணு வேஷம் தரித்து அரசகுமாரியை சந்திக்கிறான், அதற்கு விஷ்ணுவினுடைய வாகனம் போல கருட வாகனத்தை தச்சன் செய்து கொடுக்கிறான் என்று வருகிறது. கடைசியில் அரசர்களுக்கிடையில் சண்டை ஏற்படும் பொழுது நெசவாளியை உண்மையான விஷ்ணு என்று நினைத்துக் கொண்டிருக்கும் அரசன், மாப்பிள்ளையிடம் உதவி கேட்கும் பொழுது விஷ்ணு வேஷம் தரித்தவன் தோற்றால் நமக்கு அவமானம் என்று விஷ்ணுவின் மனைவி லட்சுமி கருதுவதால், அந்தக் கணம் உண்மையிலேயே நெசவாளிக்கு சக்தி உண்டாகி எதிரியைத் தோற்கடிப்பதாக வருகிறது. கடவுள் வாழ்த்துடன் தொடங்குவது அந்தக்கால மரபு என்பதால் இந்த நூலும் கடவுள் வாழ்த்துடன் தொடங்குகிறது.

    குழந்தைகளுக்கானது பஞ்சந்திரம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நமக்கு பஞ்சதந்திரத்தில் குழந்தைகளே இடம் பெறவில்லை என்பது முரண் தானே. அரச குமாரர்கள் என்ற முட்டாள் சிறுவர்கள் நால்வரைத் தவிர நூல் நெடுகிலும் குழந்தைகளின் பங்கு இல்லை. அரசியலில் குழந்தைகள் இடம் பெறமுடியாது.

    பஞ்சதந்திரத்தில் கடவுள் வாழ்த்துச் செய்யுளில் விஷ்ணுசர்மன் ப்ரம்மா, விஷ்ணு, கார்த்திகேயன், மழை, காலன், நெருப்பு, இந்திரன், சந்திரன், குபேரன், சரஸ்வதி, கடல், நான்கு வேதங்கள், மலை, காற்று, பூமி, வாசுகி முதலான பாம்புகள், நதி, அஸ்வினி குமாரர்கள், லட்சுமி, காஸ்யபரின் மனைவி, தேவர்கள், புனித நீரிடங்கள் (காசி முதலாவை), யக்ஞம் (திதிகள்), வசு (எட்டு திசை) முனிவர் (வியாசர் போன்ற) கோள்கள் (ஒன்பது கிரகங்கள்) எல்லாவற்றையும் கூறி எங்களைக் காப்பற்றுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறார்.

    அடுத்து தனக்கு முன்பு வாழ்ந்த அறிஞர்களுக்கு வந்தனம் சொல்கிறார். சுயமாய்த் தோன்றிய முனிவர், சுக்கிரன் வியாசர் பராசரர் போன்றவர்களுக்கும், சாணக்கியன் போன்று தனக்கு முன்னதாக நீதி சாஸ்திர நூல்கள் எழுதிய அனைவருக்கும் வணக்கம் சொல்கிறார்.

    அரசியல் பாடங்களும், அன்றாட வாழ்க்கைப் பாடங்களும் கதைகள் மூலம் எளிதாக எடுத்துச் சொல்லப் படுகின்றன. இடையிடையே வரும் ஸ்லோகங்களில் நீதியும், இலக்கிய நயமும் இருக்கின்றன.

    ‘மித்ரர்களுக்கு உபகாரமும், சத்ருக்களுக்கு அபகாரமும்  செய்து (அரசனின்) புத்திமான்கள் அரசனைத் திருப்தி செய்கிறார்கள்.'

    இன்றைய நாட்களில், சத்ருக்களுக்கு உபகாரம் செய்து அரசனின் பயத்தை அதிகரிக்கச் செய்து அருகில் அருகில் செல்கிறார்கள் அரசியல்வாதிகள்.

    ‘அரசர்கள், ஸ்திரீகள், கொடிகள் இவை மூன்றும் அருகில் எது இருக்கிறதோ அதைப் பற்றிக் கொள்கிறது'
    என்று விலங்கு மற்றும் செடி கொடி போன்ற  இயற்கையை சார்ந்தும் பலதும் பஞ்சதந்திரத்தில் இடம் பெற்றுள்ளன.

    விஷ்ணுசர்மன் முட்டாள்களுக்குச் சொன்ன அறிவுரையை விட அதில் விரவிக் கிடக்கிற விஷ்ணுசர்மனின் புத்திசாலித்தனமும், சொல்ல வேண்டியதை மிக எளிய முறையில் சிறு சிறு சம்பவங்களாகக் கோர்த்துக் கொடுக்கும் முறையும் பிரமிப் பூட்டுவதாக இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட இவை, இன்றைக்கும் பொருத்தமாக இருப்பதால், இந்த நூல் நம்மை அதிசயத்தோடும் பார்க்க வைக்கிறது.

    அரசியல் நிர்வாகம் பற்றிய கருத்துக்கள் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கின்றன.

    அரசனிடம் நடந்து கொள்கிற மாதிரியே அரசனின் தாயார், ராணி, அரச குமாரன், முக்கிய மந்திரி, புரோகிதன், வாயில் காப்போன் ஆகியோரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்ற பொருள் தரும் இந்த ஸ்லோகத்திலிருந்து, அரசனுக்கு அருகிலிருக்கும் மனிதர்களை அனுசரித்துக் கொண்டு நற்பெயர் எடுத்துவிட்டால், மற்ற கதவுகள் விரைவில் திறக்கும் என்பதையும் அறியமுடிகிறது.

    ‘குத்தலும், ஏளனமுமாக அரசன் பேசும்போது யார் பதிலுரைப்பதில்லையோ, அவனை அரசன் விரும்புகிறான்'.

    ‘காலத்தில் பெய்த மழையால் ஒரு விதையிலிருந்து மற்ற விதைகள் முளைப்பது போல, வார்த்தைக்குக் கிடைக்கும் பதிலிலிருந்து மற்ற பேச்சுக்கள் முளைக்கின்றன.'

    ‘அரசன் விடாமல் சங்கடங்களில் மாட்டிக் கொண்டிருந்தால்தான் மந்திரிகளுக்கு சுகம்'

    இது போன்ற ஸ்லோகங்கள் ‘நட்பு அறுத்தல்' என்ற முதல் தந்திரத்தில் வருகின்றன.

    இது போலவே பரவலாக ஐந்து தந்திரங்களிலும் அதற்கேற்றவாறு கதைகளும், அதனுள் மற்றொரு கிளைக் கதையும், என்று பின்னிப் பின்னி கதை சொல்லும் முறை, இன்றைய பின்நவீனத்துவம், மாஜிக்கல் ரியலிஸம் அன்றே கையாளப் பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. இன்றைய அரசியல் கூட்டணிகளும் அக்காலத்தியவையே என்றும் சொவது போல உள்ளன.

‘அரசர்கள் நாடுகளை விழுங்குகிறார்கள்.
வைத்தியர்கள் நோயாளிகளை விழுங்குகிறார்கள்.
வியாபாரிகள் சரக்கு வாங்குபவர்களை விழுங்குகிறார்கள்.
பண்டிதர்கள் மூடர்களை விழுங்குகிறார்கள்.
.....................................
எல்லோரையும் வேலை விழுங்குகிறது.'

இதுதானே வியாபாரம்?
இதுதானே அரசியல்?

‘பற்றற்றவன் அதிகார பீடத்தில் அமர மட்டான்.
புத்தியற்றவன் முகஸ்துதி செய்ய மாட்டான்.'

    இந்த ஸ்லோகம், சூரியனுக்கும் குடிகாரனுக்குமான சிலேடை.

    அரசனுக்கும், அவனுக்குக் கீழே உள்ளவர்களுக்குமான அரசியல் நிர்வாகம்.
அரசனின் அருகில் இருக்க வேண்டியவர்களுக்கான, அரசனின் குண தோஷங்களைக் கண்டு தனது இடத்தை நிர்ணயம் செய்ய வேண்டிய நிர்வாகம்.
கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் குழப்பங்கள், அதைச் சீர் செய்யும் நிர்வாகம்.
ஆணுக்குத் தனியாகவும், பெண்ணுக்குத் தனியாகவும் நிர்வாக முறை.
பணத்தை சம்பாதிக்க நிர்வாகம்.
பணத்தை இழந்த பிறகு அடையும் வேதனையிலிருந்து வெளியேற நிர்வாகம்.
கிடைத்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், தொடரவுமான அரசியல்.
ஒருவன் அடைந்த இடத்திலிருந்து அவனைக் கிளப்பி, அந்த இடத்தைப் பிடிப்பதற்கான அரசியல்,

    என்று எதிரெதிர் துருவங்களுக்குமான அரசியல் தந்திரங்களையும் பஞ்சதந்திரத்தில் விலாவாரியாக விஷ்ணுசர்மன், எடுத்தாளப்பட்ட ஸ்லோகங்கள் மூலமும், கதைகள் மூலமும் சொல்லியிருக்கிறார்.

    ஆங்காங்கே சிலேடை இருக்கிறது. தூணுக்கும், மந்திரிக்குமான சிலேடை, பாம்புக்கும் அரசனுக்குமான சிலேடை, சூரியனுக்கும் குடிகாரனுக்குமான சிலேடை போன்றவை இருக்கின்றன. மூல மொழியில் இருக்கும் இதன்  சிலேடைச் சுவையை அதில்தான் உணர முடியும்.
   
    சம்ஸ்கிருத மொழியில் ஸ்லோகங்கள் கவிதை நடையில் உள்ளன. ஸ்லோகங்கள் எவற்றிலிருந்து எடுத்தாளப்பட்டவை என்பது தெரியவில்லை.

    எல்லோரிடமும், எப்போதும் வியந்து சொல்லிக்கொண்டிருக்கும் பஞ்சதந்திரம்  பற்றியும், அதைப் பதிப்பிக்க வேண்டும் என்பது பற்றியும் என் நண்பர் ஹிந்து நடராஜனிடமும் சொன்னேன். அவர் பஞ்சதந்திரத்தை நிர்வாகவியல் கோணத்தில் விளக்கி புத்தகம் எழுதிக் கொண்டிருப்பதாகச் சொல்லிக் குறிப்புக்களைக் காண்பித்தார். தான் இதற்காக எடுத்துக்கொண்ட ஆதர நூலான சக்தி காரியாலயம் பதிப்பித்த அன்ன பூர்ணா ஈஸ்வரனின் மொழிபெயர்ப்பை நல்லி குப்புசாமி செட்டியாரிடமிருந்து வாங்கி ஜெராக்ஸ் எடுத்து பைண்ட் செய்து வைத்திருந்தார். உடனே அவரிடம் என் பதிப்புக்கு ஒரு அணிந்துரை கொடுக்க முடியுமா என்று கேட்டேன். என்னால் நம்பவே முடியவில்லை. இரண்டே நாட்களில் அதை எழுதி கணினியில் பதிவு செய்து அனுப்பியும் விட்டார். அணிந்துரைக்காக காத்திருந்த அனுபவம் உள்ளவர்களுக்கு இது ஒரு மாறுதல்.

    பஞ்சதந்திரம் முழுக்க முழுக்க நிர்வாக அரசியல் என்று இந்தப் பதிப்பிற்கு அணிந்துரை கொடுத்துள்ள ஹிந்து ஆர். நடராஜன் சொல்கிறார். அரசியல் நிர்வாகம், நிர்வாக அரசியல் இரண்டும் கலந்த வாழ்க்கை முறை முக்கியமாக சாதாரண மக்களுக்கு என்றில்லாமல் ஆளும் அரசர்களுக்கும், தலைமை ஏற்று நடத்தும் முன் வரிசை மக்களுக்கும் சொல்லப்பட்ட (எல்லாமே எளிய கதைகள் மூலம் கொடுக்கப்பட்ட)  நீதி போதனை என்று நேரடியாக இல்லாமல் கொடுக்கப்பட்ட நூல் இது. வாழ்க்கையின் பாடங்கள் எல்லாம் எளிமையாகவும், நேர்த்தியாகவும்  தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பு மிக எளிமையாகவும், மூலத்திற்கு மிக நெருக்கமாகவும் அழகாகவும் உள்ளது. சம்ஸ்கிருத மொழி அறிந்தவர்கள் மிகவும் புகழ்ந்து சொல்லக் கேட்டேன். அன்னபூர்ணா ஈஸ்வரனுக்கு நன்றி.

    அரசியல், நிர்வாகம், இவற்றுடன் வாழ்வியலும் நிறைந்த பஞ்சதந்திரம் வெவ்வேறு தளங்களில் ஆராய்ச்சிக்கு இன்னமும் இடம் கொடுக்கிறது.

    மேலும் சில விஷயங்களை இந்த முன்னுரையில் கூற வேண்டும். இன்டெர் நெட் பற்றிக் குறிப்பிடாமல், கணினியைப் பற்றிக் குறிப்பிடாமல் எதையுமே சொல்ல முடியாத காலம் இது. ஆங்கிலத்தில் வலைத்தளத்தில் பஞ்சதந்திரம் பற்றிய குறிப்புக் களைக் கண்டு மகிழ்ந்தேன். எத்தனை அழகழகான ஓவியங்கள். அவற்றிலிருந்து சிலவற்றை எடுத்து முகப்போவியமாகவும், பின் அட்டை ஓவியமாகவும் உள்ளே சில கருப்பு வெள்ளைப் படங்களாகவும் கொடுத்திருக்கிறோம்.

    எல்லாவகையிலும் பிரமிப்பையே கொடுத்த பஞ்சதந்திரம் எனக்கு அதிர்ச்சியையும் தந்தது. வலைதளத்தில் பஞ்சதந்திரம் என்று தமிழில் தட்டினால், கொட்டுவது கலஹாசன் நடித்திருக்கும் பஞ்சதந்திரம் திரைப்படம் மட்டுமே.  இனிமேல் மொழிபெயர்ப்பு பஞ்சதந்திரமும் தமிழில் இடம் பெற வேண்டும். மற்றபடி  ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் என்று எல்லாவற்றிலும் விஷ்ணுசர்மனின் பஞ்சதந்திரம் பற்றிய தகவல்கள் கொட்டுகின்றன. பல்கலைக் கழகங்களில் (காசி போன்ற) இந்நூல் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவை எத்தனை பிரதிகள் அச்சிடப்பட்டன, எத்தனை பதிப்புக்களைக் கண்டது என, எல்லா விவரங்களும் கிடைக்கின்றன. தமிழ் வலைத்தளமும் பஞ்சதந்திரம் பற்றிய முழுமையான தகவல்களைத் தரவேண்டும் என்பது என் விருப்பம். அச்சில் படிக்க விரும்பும் அனைவருக்கும் இந்நூலின் மறுபதிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.

    சக்தி. வை. கோவிந்தன் கூறியிருப்பது போல சில வாசகங்கள் இக்காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கிறது. அதைக் கால மாறுதல் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும் சொல்லப்பட்ட காலத்தையும், யார், யாருக்காக எழுதியது என்பதையும் மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. உள்ளதுஉள்ளபடி பதிப்பிப்பதே பதிப்பாளரின் கடமை. அதையே அவர் செய்தார். 1958 இல் பதிப்பித்த அன்னபூர்ணா ஈஸ்வரின் மொழிபெயர்ப்பு இன்றும் சிறப்பாக இருக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஆதரமான பஞ்சதந்திரம்  பூர்ணபத்திரரின் சம்ஸ்கிருத  நூல்.

    கணினியும், கைபேசியும் இல்லத தொடர்பு சாதனங்கள் அற்ற அக்காலத்தில் (இக்காலத்தில் கணினியின் அவ்வளவும் வேதவாக்கு என்று புகழ் பாடும் குழு ஒன்று இருக்கிறது.) இது தொடர்பான தகவல்களுக்காக அலைந்து, பாடுபட்டு, தகவல்ளைச் சேகரித்து, ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கும் அவர் எவ்வளவு உழைத்திருப்பார்?  அவர் தமிழுக்கு, பதிப்பு உலகுக்குச் செய்த பணி அளவிட முடியாதது. பஞ்சதந்திரம் எந்த எந்த மொழிகளில் அக்காலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது என்ற தகவலையும் கொடுத்திருக்கிறார்.

    எழுத்துப் பிழைகளே அற்ற, தரமான அச்சில், மலிவு விலையில், நல்ல தாளில், கெட்டி அட்டையில், வெளிவந்த சக்திகாரியாலப் பதிப்பு இன்றையப் பதிப்பாளர் களுக்கு ஒரு முன்னுதாரணம். ஓரிரு நூல்கள் வெளிவந்த உடனேயே  தான் மிகுந்த தமிழ்ச் சேவை செய்து களைப்படைந்து விட்டதாகவும், இந்தத் தமிழ் கூறும் நல்லுலகம் அதற்குத் தகுந்த அங்கீகாரத்தைத் தனக்குக் கொடுக்கவில்லை எனவும், அடுத்தவர்களின் எழுத்துக்கள் வெறும் குப்பை என்றும், பரிசுகள் குவியவில்லை என்றும் புலம்பும் எழுத்தாள, பதிப்பாளர்களிடையே , நம்மிடையே இப்படியும் சிலர் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள்.

    நூலைப் பதிப்பிக்கத் தமிழ் வளர்ச்சித் துறையின் நிதி உதவிக்கு விண்ணப்பித் திருந்தேன். அதைத் தேர்வு செய்து எனக்கு ஊக்கம் அளித்த தமிழ் வளர்ச்சித் துறைக்கு நன்றி. ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அச்சிடப்பட்ட (1958) பழைய நூல், பழுப்பு நிறத்திற்கு மாறியிருந்த நூல். தொட்டால் பக்கங்கள் பொடிந்து உதிரும் நிலை. அதை தட்டச்சு செய்ய என் தோழி அமுதாவை அணுகிய போது மறுக்காமல், புத்தகத்திற்கு சேதாரம் விளைவிக்காமல் சரியான நேரத்திற்கு தட்டச்சு செய்து தந்தார். அமுதாவுக்கு நன்றி.

    நூலாவதற்கு முன்பு பஞ்சந்திரம் பலரைச் சென்றடைந்தால் நன்றாக இருக்குமே என்று ‘திண்ணை' இணைய இதழாசிரியர், நண்பர் ராஜாராமனை அணுகிய போது, தொடராகப்போட சம்மதித்துத் தொடராக இன்னமும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கும் நன்றி.

    பொருளிட்டுவதற்காக இதை மறுபதிப்பு செய்யவில்லை. தமிழில் தரமான நூல்கள் வெளியிட்டு லாபம் அடைந்ததாக வை.கோவிந்தன் காலத்திலும், தற்காலத்திலும் யாரும் உதாரணத்திற்குக் கூடக் கிடைக்க மாட்டார்கள். நூலக ஆணை இருந்தால்தான், நூல்கள் அடுத்தடுத்து வெளியிட பணமும், குடும்பத்தில் அனுமதியும், குழந்தைகளிடம் மரியாதையும் கிடைக்கும்.

சக்தி வை.கோவிந்தன் நூற்றாண்டில் இதை மறுபதிப்பு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி.
க்ருஷாங்கினி


அக்டோபர் 2012.
சென்னை-47.