Sunday, November 6, 2011

8-5-1969-adyar-chennai-our marriage

Posted by Picasa
தாய்மை போற்றுதும்

மிகப்பெரிய பரந்தவெளி. எங்கும், எங்கெங்கும் மனிதத் தலைகள். நின்ற நிலையில் மனிதர்கள். அனைவரும் இணைந்து ஒட்டு மொத்தமாகத் தட்டையாய் காட்சி அளிக்கின்றனர். சற்று உற்றுப் பார்க்க அனைவரும் பெண்கள் என்பது புலப்படுகிறது. பெண்கள்! பெண்கள்! எங்கெங்கும் பெண்கள். பனிரெண்டு முதல் நூறு வயதிற்கு அருகில் வரை பல வயதில் பெண்கள். அழகான, அழகற்ற, உயரமான, குட்டையான, நிற மாறுதல்களுடன் என எல்லாவிதமான மாறுதல் களுடனும் நிறைந்திருந்தது அந்த மைதானம். ஆனாலும், அனைவரும் பெண்கள். விதை நன்றாக மண்ணிலிட்டு, அது ஒன்றுபோல வளர்ந்து, பின் பல கட்டங் களில் நடப்பெற்று, ஒன்றாக வளர்ந்து, ஒன்றாக பருவம் எய்தி, ஒன்றாய்ப் பூத்து, ஒன்றாக நெல்மணிகளை சூல்கொண்டு, அதுமுற்றி தலைதாழ்த்தி அசைந்து நிற்கும் அறுவடைக்குத் தயரான வயலின் கதிர் தாங்கிய நெற் செடிகள் போல, எல்லோரும் பெண்கள். முற்றிய, தலைசாய்ந்த கதிரான எல்லாப் பெண்களின் கைகளிலும் ஒரு சிறு குழந்தை. பிறந்து சில நாட்களேயான குழந்தைகள். அவை அனைத்தும் பெண் குழந்தைகளா? அடையாளம் தெரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் ஒரு தலை இருப்பதைப்போல எல்லோரின் இடுப்பிலோ தோளிலோ ஒரு புத்தம் புது சிசு. பனிரெண்டு வயதுப் பெண்ணின் கைகளிலும் குழந்தை; தொண்ணூறு வயதுக் கிழவியின் கையிலும் குழந்தை. ஆண் என ஒருவரையும் காணக் கிடைக்காத அந்த மைதானத்தில் அனைவர் கைகளிலும் ஒரு குழந்தை.

குழந்தைகள் பிறந்து அதிகபட்சமாக பத்து நாட்களே ஆகியிருக்கலாம்; அல்லது சில மணிகளே ஆகியிருக்கலாம். குழந்தையின் கையில் ஒரு குழந்தை, குழந்தையின் தாயின் கையில் ஒரு குழந்தை; பாட்டியின் கையில் ஒரு குழந்தை; அத்தை, சித்தி, அக்கா என அனைத்துப் பெண் உறவுகளிடமும், உறவுகளற்ற பெண்களிடமும் ஆளுக்கொரு குழந்தை. என்றாலும் ஒன்றுபோல இல்லை; நிறம், அளவு தரம் என எல்லாமே மாறுபட்டுத்தான். ஆனாலும், எல்லாப் பெண்களின் கைகளிலும் குழந்தை. குழந்தைகள் ஒன்றொன்றாகவோ, அல்லது ஒட்டு மொத்த மாகவோ, விட்டு விட்டோ அழுதுகொண்டே இருந்தன. அந்த அழுகை குழந்தையின், குழந்தைகளின் வாயிலிருந்து வெளியேறி பெரும் குரலாக மாறி விண்ணை நோக்கி உயர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு குழந்தையின் அழுகையும் எறியப்பட்டு எறியப்பட்டு, வானத்துக்கும் பூமிக்கும் இடையில் குறுக்கு இழைகளாக நெய்யப்பட்டது போன்ற, மழைத் தரை போல, ஆனால் வானத்திலிருந்து நிலத்துக்கு மேல் கீழாக இல்லாமல் கீழிருந்து வான்நோக்கி எழும்பி எழும்பி கோடிழுத்துக் கொண்டிருந்தன. கோடுகள் அருகருகாக ஒன்றன்மீது ஒன்றாக ஏறி ஏறி அடுக்காக மாறி, திரையைப்போல அசைந்து நெளிந்து புகையைப் போல மேலெழும்பிக் கொண்டிருந்தது. புகை கெட்டிப் பட்டு கண்ணாடியைப் போல ஊடுறுவி அசையாத் திரை ஆயிற்று. அசையாத் திரை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்டு தடித்த, கனத்த, நகர்த்த இயலாத திரையாகியது. வானத்தில் ஏற்ற இறக்கம் கொண்ட நுனியையும் பெண்களின் தலைமீதாக சீரான அடிக்கோடிட்டு அடுக்கப்பட்ட குரல்களாகவும், எம்பி எம்பி ஹைட்ரஜன் பலூன்போல பறந்து கொண்டிருந்தன.

இத்தனை பெண்களுக்கும் வயிற்றில் பிள்ளை திணித்த ஆண்கள் எங்கு சென்றனர்? என்னவானார்கள்? எல்லாப் பெண்களும் பிரசவ வலியில் அலறிய குரல் எங்கு சென்று ஒளிந்து கொண்டிருக்கும்? எத்தனை வயிறுகள் கீறப்பட்டு குழந்தையை வெளித் தள்ளியிருக்கும்? எத்தனை குழந்தை யோனி வழி தலை முதலாக வந்திருக்கும்? கால் முதலாக வந்தது எத்தனை? கருப்பை சுறுங்கி வற்றிய உடல் கொண்ட பாட்டிக்கு திரும்பவும் கருப்பை விரிந்த ரகசியம் என்ன? மனிதர் தவிர மற்ற இயற்கையின் உயிர்கள் அனைத்தும் ஒரே பருவத்தில் குட்டிகள் ஈனும். தெருவெங்கும் ஆங்காங்கே நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகள், மாமரத்தில் காய்கள், மல்லிகைப் பூக்கள், ரோஜா, டிசம்பர் பூக்கள். மனிதனுக்கு ‘சீசன்' உண்டா? வயல்களில் கரும்பு, நெல், கம்பு, ராகி எல்லாம் நிறையலாம்; மைதானத்தில் பிள்ளை நிறைய முடியுமா? முடியும் என்று ஆகியிருக்கிறதே அனைவரின் கையிலும்! பள்ளிப் பருவ பெண்கள் தாய்மைப்பேறு அடைந்து கையில் குழந்தையுடன் தனித்து நிற்கின்றனர். அதன் தாக்கம்தானா இந்தக் காட்சி?

‘பெண்களே பள்ளிப்பருவத்தில் பிள்ளைகள் உங்களுக்குத் தொல்லையே.' இரு நாள் கருத்தரங்கு. நிறைய பள்ளி மாணவிகளின் ஒருங்கிணைப்பு இருந்தது. 12 முதல் 16 வயது வரைக்குமான பெண்கள் சீருடையில் அமர்ந்திருக்க ஆளுக் கொரு பொம்மைக் குழந்தை கொடுக்கப்பட்டது, வினாத்தாள் வினியோகம் போல. அனைவரின் கவனமும் பாடத்தின்மீது. கல்வியின் பொருள் ‘பள்ளிப் பருவத்தில் பிள்ளைச் சுமை'. பொம்மைக் குழந்தைகள் நன்கு அழுது புட்டிப்பால் குடித்தன. உடனே கழிந்தன. உறங்கின. சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த பொம்மைகள் முன்னரே முறைப்படுத்தப் பட்டிருந்த நேரத்தில் மிகச் சரியாக அழுதும், கழிந்தும், களைத்தும், உறங்கியும், விழித்தும் உண்டும் பிழையின்றி செயற் பட்டன. ஆனால் பொம்மைக்கு பொம்மை அந்த இயக்கங் களின் நேரம் வேறு வேறாக அமைக்கப் பட்டிருந்தது. எனவே அவற்றின் அழுகை இடம் மாறி இடம் மாறி தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தது.

இரண்டு நாள் கருத்தரங்கம் முடிந்தபின், அதனை வடிவமைத்து செயற் படுத்தியவர் தொலை காட்சிப் பேட்டியில் கருத்தரங்கம் மகத்தான வெற்றி என்று கூறிக் கொண்டிருந்தார். “பிள்ளை பிறத்தல், மாணவப் பருவத்தில் காதல், உடல் உறவு எல்லாம் ஆபத்தானது, தொந்தரவானது என மாணவிகள் உணர்ந்து கொண்டு விட்டனர், இனி பள்ளி மாணவியரின் பிரசவ எண்ணிக்கையின் விகிதாசாரம் கண்டிப்பாகக் குறையும். அவர்களுக்கு ஆண் நண்பர்களின் எண்ணிக்கை எப்படியிருந்தாலும் குழந்தைப் பிறப்பு எண்ணிக்கை கண்டிப்பாகக் குறையும். இது எங்கள் மூன்றாவது ஆண்டுத் தொடர் கருத்தரங்கு. அதன் தாக்கமாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பைவிட புள்ளி ஐந்து சதவிகிதம் இந்த மாநிலத்தில் குறைந்திருக்கிறது. கருத்தரங்கிற்கான செலவுப் பட்டியல் கோடிக்கணக்கில்” என்று மேலும் மேலும் சொல்லிக்கொண்டே போனார்.

“மன்னிக்க வேண்டும் குறுக்கிடுவதற்கு. கருத்தரங்கு பிள்ளை பெறும் மாணவிகளுக்கு மட்டும் ஏன்?”

சற்றே முகம் சிவக்க, பேட்டியை ஒரு இனிய சிரிப்புடன் முடித்துக் கொண்டார் ஏற்பாட்டாளர்.

“இங்கு பங்கேற்ற மாணவிகளில் பலருக்கு உண்மையிலேயே நிஜமாகவே அழுது, உணவருந்தி, உறங்கி, மலம் கழிந்து, தவழும், நடக்கும் ஒன்றுக்கு மேற் பட்ட குழந்தைகள் உள்ளன. அவர்கள் இதுபற்றி ஏதும் கருத்துகள் தெரிவித்தனரா?”
“மன்னிக்கவும். பேட்டி நேரம் முடிந்துவிட்டது. நன்றி, மிக்க நன்றி அன்பரே. தொலைகாட்சிக்கும் நன்றி.” சற்றே சிவந்த முகத்துடன் சிரிப்பின்றித் திரும்பினார் ஏற்பாட்டாளப் பிரமுகர். பேட்டி எடுத்தவர் தொலைகாட்சி நிலையத்தின் அரங்கத்தில் செயற்கை வெளிச்சமூட்டப்பட்ட இதம் தரும் அறையில் ஒப்பனையுடன் பிரமுகரைப் பற்றி முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, சற்றே கிண்டல் கலந்த குரலில் கருத்தரங்க ஏற்பாட்டாளர் எதிர் கொள்ள நேர்ந்த சிரமங்கள் பற்றி பேசி நிகழ்ச்சியை முடித்தார்.

பள்ளி மாணவப் பருவத்துத் தாய்மார்கள் சந்திக்கும்போது முகமனுக்குப் பின் கேட்கப்படும் கேள்வி, “என்ன, இது உன் பிள்ளையா?” “ஆம்” என்னும் சிரிப்புடன், “இது உன் பிள்ளையா?” என்ற கேள்வி இன்னொருத்தியிடம் கேட்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் நண்பர்களையும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளையும் சுமந்து செல்லும் பள்ளிச் சிறுமிகள்.

பால்ய விவாஹத்தை மிகப்பாடுபட்டு ஒழித்த நாட்டிலிருந்து சென்றவர் களுக்கு விவாகமற்ற தாய்மையும் பெண்ணுக்கே பாரமாவது குறித்த கவலை கொள்ளத் தோன்றியது.

இளம் தாய்மார்கள் தங்களது உணர்வுப் பகிர்தலுக்கும் பின் பிரிகின்றனர். அவரவர் வேலைத் தளத்திற்கு - ஏதோவொரு கண்ணாடித் தடுப்புக்குப் பின் புறம் கால் வலிக்க நின்று ஈட்டும் சொற்பப் பணம் அவர்களின் உதட்டுப் பூச்சுக்கும், வாழ்க்கையின் மேல் பூச்சுக்கும் பிள்ளையின் வயிற்றுக்குமாகப் பகிர்ந்தளிக்கப் படும். எதிர்பார்ப்பும் இல்லாத ஆண் நண்பர்கள் எனில், ஏமாற்றம் குறைவு. எதிர்பார்த்து ஏமார்ந்தாலும், எதிர்பாராமல் எதிர்பார்ப்பற்று விலகிச் சென்றாலும் பெறும் பிள்ளை என்னவோ பெண்ணோடுதான்.

‘தனிப்பெண், பிள்ளையுடன்' என்னும் அடைமொழியுடன் அல்லது ‘ஒற்றைத் தாய்' என்ற சொல்லோடு பெண்கள் உலகெங்கும் வயிற்றிலும் கையிலு மாக பிள்ளைகள் சுமந்து அலைகின்றனர். தந்தையற்ற பிள்ளைகள் தாயோடு அங்கம் ஒன்றென துருத்திக்கொண்டு நிற்கும் மருக்களைப்போல, கை வண்டி, தள்ளு வண்டி, கருப்பையில் சுமக்கும் தாய் வண்டி என எப்போதும் அசைந்து கொண்டும், இடம் பெயர்ந்து கொண்டும் இருக்கின்றனர்.

எதிர்பார்ப்பும் அற்று, அதனால் ஏமாற்றமுமற்று பிள்ளையுடன் அலையும் பெண்கள், தம் வாழ்வில் எதிர்கொண்டதுஒற்றை ஆணெனில் அவன் தலையை டாலர் போல சங்கிலியிலோ, அழகுக் கயிற்றிலோ மாட்டி நெஞ்சின் நடுவே பிறர் பார்க்க அலைகின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களின் தலைகளை கழுத்தில் மாலையாய் அணிந்துகொண்டும், உள்ளங் கழுத்து நெக்லஸ் போல சம இடைவெளியில் கோர்த்து முகத்துக்குக் கீழாக பட்டையாக அணிந்துள்ளனர். எதிர்பார்ப்பும் இருந்து, ஏமாற்றமும் அடைந்த சமூக அவமானமாகக் கருதப்படும் பெண்களும் தங்கள் கோபத்தைக் கொண்டு கொய்த ஆண் / ஆண்களின் தலைகளை ஊசி கொண்டு கோர்த்துத் துவளத் துவளத் தொங்கும் அவற்றை காடை கௌதாரியென ஒரு கையிலும், பிள்ளை மற்றொரு கையிலுமாக, தொங்கும் தலைகள் இடிபடும் பேரோசையுடன் பாதைகளைக் கடந்து கடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

ஏமாற்றப்பட்டது, துப்பப்பட்டது எதையும் இயம்ப இயலாதவர்கள் தம் ஆண்களின் கொய்த தலைகளை அவசர அவசரமாகத் தட்டையாக்கித் துளையிட்டு, கயிறு கொண்டு பிணைத்து, இடுப்பு உடைக்கு அடியில் அரைஞாண் கயிறென திறந்த வெளியில் காட்சிப்படுத்தத் தயக்கம்கொண்டு, சலங்கைபோல கோர்த்துக் கொண்டு அலைகின்றனர். உலகின் வீதிகளில், சாலை ஓரங்களில், புல்வெளிகளில், பாதைகள் எங்கும் தம் கால்களின் அணிகள் ஒலியெழுப்ப, கோர்க்கப்பட்ட தலைகள் சப்திக்க, குழந்தைகளின் அழுகை சப்தங்களுடன் இருவருக்கும் இடையிலான உரையாடல்களின் ஒலிகளுடன், இடம் பெயர்ந்து இடம் பெயர்ந்து தந்தைகளை நோக்கி இட்டுச் செல்லும் பயணத்துடன்- பிள்ளைகளுடன் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கின்றனர்.

ஓரிரு வினாடிகள் தடைபட்ட பயணத்தின் இடையில் ஒரு இடத்தில் அல்லது ஒரே இடத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட பெண்களின் சங்கமமே பிள்ளைகளுடன் பெண்களின் பெரும் கூட்டம். இன்னமும் சில நொடிகளில் ஒளிக்கதிர்கள் பரவுவதைப்போல தனித்தனிப் பாதையிலோ, பின் தொடரும் அணிவகுப்பாகவோ அனைவரும் கலைய நேரிடலாம். இனி எங்கும், எப்போதும் சந்திக்காதவர்களாகவும் பயணப்படலாம். புதுப் புதுத் தாய்களுக்கும் தமது பிள்ளைகள் பின் தொடர முன் சென்ற தாய் வழிகாட்டலாம். கையிலிருக்கும் பிள்ளை ஆணாயினும், வளர்ந்துவிட்ட அனைவரும் பெண் களாகவே இருப்பதாக அமைந்த அந்தப் பயணத்தின் பாதை சென்றடையும் முடிவு பாழாக இருக்கலாகாது.

at tiruvanmiyur beach-1967

Posted by Picasa

Saturday, October 29, 2011

In the garden-2006

Posted by Picasa

கவிதை

07-12-2008 அன்று சென்னை மெரீனா கடற்கரையில் கூடிய தமிழ் நவீன கவிஞர்களின் ஒருநாள் அடையாள போராட்டம் ஈழத்தமிழர் வாழ்வமைதி மற்றும் உரிமைகளுக்காக தமிழகமெங்கும் ஆதரவைத் தெரிவிக்க எழுதப்பட்ட கவிதையிது-
க்ருஷாங்கினி

இக்கரையில்

கடல் அனைவராலும் விரும்பப்படுகிறது
பாதுகாப்பாகவும் நிலம் இயல்பாகவும் இருப்பதால்.
குழந்தைகள் குனிந்து குனிந்து
கிளிஞ்சல் சங்கு சேகரிக்கிறார்கள்
சிறு சிறு நண்டும் பூச்சியும் கண்டு
மகிழ்ந்து கைகொட்டுகிறார்கள்.

அக்கரையிலோ

சுற்றிலும் கடலால் சூழப்பட்ட நிலமது
அலைகள் எப்போதும் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன,
பீதியால் சூழப்பட்ட இந்நிலத்தில்
குழந்தைகள் குனிவதில்லை-படுக்கிறார்கள்
பயந்து பயந்து பதுங்குகிறார்கள்,
சதைத்துண்டுகள் குழந்தைகள் பொறுக்குவதில்லை

இக்கரையில்

இளைஞர்கள் காதலைக் கொண்டாடுகிறார்கள்
அலைகளின் நடுவே சலிக்காமல் அமர்ந்து
பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள்.
மற்ரொருவருக்காக காத்தும் இருக்கிறார்கள்
கைகளில் ரோஜாமலர் ஏந்தி.

அக்கரையிலோ

போரால் சூழப்பட்ட நிலத்தில் இருக்கிறார்கள்
ஆண்-பெண் ஈர்ப்பு காணாமல் தொலைத்துவிட்டிருக்கிறார்கள்
பூக்களுக்கு பதிலாககைகளில் துப்பாக்கி திணிக்கிறார்கள்
போர் செய்யப் பணிக்கப்படுகிறார்கள்
கணவன், காதலன், சகோதரன், மகன்
அணைந்த உறவுகளில் ஆண்கள் பலர்.

இக்கரையில்

தீவுகளைக் கண்டுகளிக்க
கப்பற்பயணம் செய்கிறார்கள்-இனிதாய்
விமானப் பயணமும் மேற்கொள்கிறார்கள்
திரும்பவும் தம் மண் மிதிக்கும் பத்திரத்துடன் திரிகிறார்கள்.

அக்கரையிலோ

உயிர், மண்ணில்விதைத்திருக்கிறார்கள்
இருளையும் சோகத்தையும் சுமந்து திரிகிறார்கள்
மண்விட்டு, பொருள்விட்டு, உறவுவிட்டு
அலையிடைப் பயணிக்கும் இவர்கள் உடல்மட்டும்;
வேற்றுமண்ணில் வேறற்று மிதக்கிறார்கள்.

இக்கரையில்

கவிதை வாசிக்கிறார்கள் சகோதரர்களுக்காய்
சுதந்திரமாய் சுவாசித்துக்கொண்டு
கடலையும் அலையையும் கண்டு நெகிழ்ந்துகொண்டே
கையசைத்து அலைகள் நோக்கி.


அக்கரையிலோ

கருப்பைகளும் விதைப்பைகளும் அற்ற வெற்று
மயானபூமியில் மறு உற்பத்தி மறுக்கப்பட
அபாயம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும்
அந்த நிலத்தில் யாரை யார் ஆள
இரண்டு தலமுறைக்கும் மேலாய்
இப்போர்?

Thursday, October 27, 2011

பிறை சூடா பித்தி(சிறுகதை)

பிறை சூடா பித்தி

முதலில் நான் உணர்ந்தது என்னுடைய இடையில் மிகச் சிறிய ஒட்டுத் துணியுடன் மட்டுமே தார்ச் சாலையில் நடந்து கொண்டிருக்கிறேன். தார்ச் சாலையின் சூட்டில் கால்கள் சுடுகின்றன. சூட்டின் மீது கவனம் விழுந்தாலும், உடையற்று நான் திரிவது மேலோங்கி நிற்கிறது. சுற்றிலும் யாரும் என்னைக் கண்டு அதிர்ச்சி அடையவோ அல்லது உடை கொடுக்கவோ முற்படவில்லை. எல்லோரும் ஏதோ வேலைகளை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கின்றனர். தார்ச் சாலை சூட்டை எப்படித் தணிப்பது என்ற குழப்பம், சற்றே மணலில் மாற்றி நடந்தால் தீர்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் சாலையின் ஓரத்தில் சிதறிக் கிடக்கும் மணல் மீது வெற்றுக் கால்களைப் பதிய வைக்கிறேன். சூடு அதிகமாக உணர முடிகிறதே தவிரக் குறையவில்லை. கால்களின் சூட்டையும்விட ஆடையற்ற அவமானம் மேலோங்கி நிற்கிறது. என் உடலை நானே உற்று நோக்குகிறேன். நான் எண்ணுவது போன்றன்று, வற்றிச் சுருங்கி, கருத்து, யாரோபோலத் தோற்றம் தந்துகொண்டிருக்கிறது. உறக்கத்திலிருந்து திடீரென விழித்தாற்போல உலகம் எனக்கு தோற்றம் தருகிறது. தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள் எனக்கு பரிச்சயமற்றுத் தெரிகின்றனர். நடுத்தர வயதுடையோர், முதியோர் யாருமே எனக்குத் தெரிந்தவர் இல்லை போலும். யாரையுமே அடையாளம் காண இயலாமல் திரிகிறேன். தலை மீது தன்னிச்சையாகக் கை விழுகிறது. அடர்ந்த நீண்ட கூந்தல், அதன் பெருமிதம் ஒருசேர என்னிடம் நிமிர்ந்து நிற்கும். தலையின் மீது வெற்றுத் தோல் மிதக்கிறது. வெற்று கால்கள், வெற்று உடம்பு, வெற்றுதலை.

சாலையோர மரங்களும், சில வீடுகளும் எனக்கு அடையாளமாகிறது. நடக்கும் தெரு பரிச்சயமாகிறது. அசையும் உயிர்களில் தெளிவற்ற நான், அசையா உயிர்களில் என்னையும் அவற்றையும் இணைத்து அடையாளம் காண்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக உறக்கத்திலிருந்தது, இப்போது விழித்ததற்கும் இடையிலான காலம் சரியாக கணக்கிடப்பட முடியவிலை என்றாலும், ஓரளவுக்கு புரியத் தொடங்குகிறது.

தலையில் முடியெல்லாம் புழுக்களாக மாறி, என் உறக்க காலத்தில் என்னுடைய தலையை எப்போதும் துளைத்துக் கொண்டே இருந்தன. எனவே அவற்றை ஒவ்வொன்றாக பிடுங்கி எறிந்தேன். தரை புழுக்களால் நிரம்பத் துவங்கியது. புழுக்கள் என் மீது மறுபடியும் ஏறி ஏறி திரும்பவும் தலையில் வந்து அமர முயல்கின்றன. தலையில் ஓட்டையிட்டு குத்திட்டு நிற்க ஆரம்பிக்கின்றன. புழுக்களைக் கண்ட காகங்கள் உற்சாகமாக தலையிலமர்ந்து கொத்தித் தின்ன ஆசை கொள்கின்றன. கையில் கோலுடன் காக்கைகளையும், புழுக்களையும் விரட்ட ஆரம்பித்தேன். தலையில் ஓயாத துளையிடும் சப்தத்தையும், துளையிடுவதால் உண்டாகும் வலியையும் எத்தனை நேரம் பொறுத்துக் கொண்டிருப்பது? உடையின் மீதாக ஏறிச்சென்று தலையை அடைய முயலும் புழுக்களுக்காக உடையை உதறி அவிழ்த்தெறிவேன். இலைகளை கட்டி எடுத்து தரையைப் பெருக்கி எல்லாவற்றையும் நெருப்பிட்டுக் கொளுத்த வேண்டும். இப்போதுதான் தரையைப் பெருக்கத் துவங்கி இருந்தேன். ஓயாமல் புழுக்கள். ஓயாமல் துடைப்பம். ஓயாமல் காக்கைகள். ஓயாத மக்கள் என்னைச் சுற்றி வட்டமிட்டபடி. புழுக்கள் அங்கும் இங்குமாக ஓடத்துவங்க, நானும் தப்பிக்க முன்னே ஓடத்துவங்குவேன்.

இன்றுவரை ஓடிக்கொண்டே இருந்திருக்கிறேன் என்பதை விழித்தெழுந்த நான் கனவு போல உணரத்தொடங்குகிறேன். உறக்கத்திற்கும் விழிப்புக்குமான இடைப் பட்ட காலம் என்பது எனது வளமான அங்கங்களிலிருந்து, வறண்டு சுண்டிப்போனது வரையிலானதாக காலமாக இருக்கிறது. சிறிது சிறிதாக நான் என்னை உணர்கிறேன். எனது வீடு, எனது தெரு, எனது குடும்பம் எல்லாமே மேலேறி கிளர்ந்து நினைப்பின் மேல் அடுக்கில் வந்து அமர்கிறது. யாரோ ஒருவர் மேல் துணி கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால், அணிந்திருக்கும் ஒற்றை உடையைத் தவிர ஏதுமற்றுத்தான் திரிந்து கொண்டிருக்கிறார்கள் போலும். எல்லோரும் இல்லை என்கின்றனர். இதற்குள் விழிப்புற்ற என் உடலின் ஆடையற்ற நிலை என்னுள் இயல்பாகி போகிறது. யாரும் கவனிக்காத, அல்லது கவனிக்கத் தேவையற்றதான நிர்வாணத்திற்காக நான் ஏன் அல்லலுறவேண்டும்? கால்கள் தரையில் பரவ, ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நான் எனது அறிமுகமான தெருக்களின் இடையே நடந்து செல்கிறேன். சூடுடனும், சூடற்றும் பாதங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன, எனது வீட்டின் முன் நிற்கும் வரை.

வீடு அழிக்கப்பட்டு விட்டிருக்கிறது. வீட்டின் மக்களின் நினைவுகளிருந்தும் நான் அழிக்கப்பட்டும் நெடுங்காலமாகி விட்டிருக்கிறது. எனது அடையாளத்தை நான் உணரவும், என்னை அடையாளம் காணப்படவுமாக நான் எனது தாயைத் தேடுகிறேன். தாய் உடன் பிறப்பின் இடத்தில் இருப்பதாக அறிகிறேன். நெடுந்தூரம் நடந்து அடைய வேண்டிய தொலைவில் இருக்கும் சகோதரன் வீட்டிற்கு செல்ல வாகனம் ஏற முற்படும் பொழுதுதான் எந்த வாகனமும் காசற்றுக் கிடைக்காது என்பதையும் அறிவு மேலடுக்கிற்கு அனுப்புகிறது. கையில் கைப்பை, காசிருக்கும் பர்ஸ், அனுமதிச்சீட்டு, முகவரிக் காகிதம் ஏதுமற்று வெற்றுக் கைகளாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன இருபுறமும்.

திரும்பவும் நடக்கத் தொடங்குகிறேன். சாலையோரம் எறியப் பட்டிருந்த சிறு துணித் துண்டெடுத்து என் மேல் உடலைப் போர்த்திக் கொள்கிறேன். மிகப் பெரிய ஆசுவாசம் கிடைக்கிறது. சற்றே அமைதியும். அறிந்த பாதையிலும், அறியாத பாதையிலுமாக எனது பயணம் தொடர்கிறது. கால்கள் சோர, வெற்றுடம்புடன் வெற்று வயிறும், வெற்றுக் கால்களும் காய அன்னையைக் காண்கிறேன்.

உடன் பிறந்தவன் வீட்டில் மிகப் பெரிய கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. பெரிய பெரிய அடுப்புகள், பெரிய பெரிய எண்ணெய் சட்டி. எல்லோரும் முகங்களின் மீது மகிழ்ச்சியை அப்பிக்கொண்டு அலைந்து திரிந்துகொண்டு இருக்கின்றனர். ஆனால் யாருக்கும் என்னை அடையாளம் தெரிய வில்லை. அன்னையின் முன்பாக நிற்கிறேன். அவளும் அடையாளம் கடந்த வயோதிகத்தில் இருக்கிறாள்.

திடுக்கிட்டு அறுவருப்புடன் ஏறிட்டுப் பார்க்கிறாள் அவள். என்னைக் கண்ட அதிர்ச்சி முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. “இந்தப் பைத்தியம் இப்போது இங்கே எப்படி? “வா, வா, எப்படி வந்தாய்?” விசாரிப்பு ஊட்டப்பட்ட செயற்கை மகிழ்ச்சியுடனும், முகம் ஏற்காத பாவனையிலும், உடனே அப்புறப்படுத்தும் எண்ணத்திலும் இருக்கிறது. பைத்தியம் என்ற ஒற்றை சொல் என் மனதின் குழப்பத்தைத் தெளியச் செய்கிறது. நான் உறக்கத்தில் இருந்ததாக எண்ணிக் கொண்டிருக்கிறேன். இவர்களுக்கோ அது பித்தென்று புரிகிறது.

வெற்றுக் கால்களுக்கும், வெற்றுடம்பிற்கும், வெற்றுக் கைகளுக்கும், வெற்று வயிற்றிக்கும் காரணம் சற்றே புரிபடத்துவங்குகிறது. ஒளி பொருந்திய முகத்தை ஏந்தியபடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த முகங்கள் மங்கிப் போகின்றன. சங்கடமாக நெளிகின்றனர். என்னாலும் என்ன செய்வதென்று தீர்மானிக்க முடிய வில்லை. திகைக்கத்தான் முடிகிறது. என்னை எதிர்கொள்ளும் நிலையில் அங்கிருந்த யாருமே இல்லை அன்னையையும் சேர்த்து. ஏற்றுக் கொள்ளவும் முடியாது என்ற உண்மையும் புரிகிறது.

மனதிற்குள் கடல் பெரும் ஓசையை எழுப்புகிறது. கடல் பொங்கி, பொங்கி எனது எல்லா துவாரங்களின் வழியாகவும் வெளியேறத் தொடங்குகிறது. நீராக வழிகிறது கடல் என்னிலிருந்து. நீர் கீழிறங்கத் துவங்குகிறது. வெளியேற்றப்பட்ட நீரின் தாரை அறையில் பரவுகிறது. எல்லோரையும் அது கவலை கொள்ளச்செய்கிறது. விழாக் கோலத்தை மாற்றி அமைக்கவோ, நான் திரும்பி வந்ததை விழாவாக அறிவிக்கவோ அங்கு யாரும் தயாராக இல்லை. நான் பெருக்கெடுத்து ஓடும் என்னுள் ஓங்கும் கடலை ப்ரும்ம முயற்சிக்குப் பிறகு என்னுள் திரும்பவும் எடுத்து அடைத்துக் கொள்கிறேன்.

ஆனாலும் ஆடை ஒன்றாவது எனக்குக் கொடுக்கும் படி அங்கிருக்கும் உறவு அனைத்திடமும் கெஞ்சியபடியே இருக்கிறேன். விழா நாயகிக்கோ எனது வற்றல் உடலுக்கும், அவளது பூரித்த இளம் உடலுக்கும், எந்த விதத்திலும் ஒப்பிடமுடியாத சந்தேகம் இடையே நெளிகிறது. “உன்னுடைய சிறுவயது உடை ஏதாவது இருந்தால் எனக்குக் கொடு. மேலங்கி இவ்வளவு நீளமாக வேண்டாம்.” கொடுக்கப்பட்ட உடையை அங்கேயே அணிந்து கொள்கிறேன். மேலிருக்கும், இடுப்பிலிருக்கும் துண்டுத் துணிகளை உதறிவிட்டு. அனைவரும் அபாயகரமாக உணர்கின்றனர். ஆடையை அணிந்து கொள்வேனோ, அல்லது உதறிய நிலையில் நடுக்கூடத்தில் அமர்ந்து விடுவேனோ என்று. எனக்கு விழிப்பு ஏற்பட்டு விட்டது என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், என்னாலும் நிரூபிக்க முடியவில்லை. உடை அணிந்து, அதுவும் சரியான முறைப்படி அணிந்து கொண்டவுடன் எல்லொருக்கும் பெரிய ஆசுவாசம்.

பசி உணரத்தொடங்குகிறேன். விதம் விதமான பலகாரங்கள் அடுக்கப் பட்டவைகளிலிருந்து கையேந்திக் கேட்கிறேன். முகச் சுளிப்புடன் அளிக்கப் படுகிறது. ஆனாலும் ஆறுதலாய் உணர்கிறேன். எனது உறக்கதுக்கான காரணத்தை அன்னையிடமாவது கூற மனம் விழைகிறது. கூற முற்படும்போது வரவேற்பு அற்றதுடன், எதிர்ப்பும் காட்டும் முகத்தைக் காண்கிறேன். “அம்மா என்ன ஆயிற்று? என்று எனக்குப் புரிந்தவரை கூறட்டுமா?” எதையும் கேட்கப் பொறுமையற்ற முகங்கள். எங்காவது பூமியின் அடியில் என்னை ஒளித்து வைத்துவிட்டு தங்கள் கொண்டாட்டத்தை தொடர தயாராகிறார்கள். நானோ, சொற்கள் கோர்வையற்று உரைக்கிறேன்போலும், இன்னமும் தெளிவாக விளக்க முற்படுகிறேன். எதிரில் ஏந்துகிற கைகளற்ற வெற்றுச் சொற்கள். வீடெங்கும் இரைந்து கிடக்கின்றன. உறக்கத்திலும் இப்படித்தான் ஓயாமல் சொற்களை வீசினேனோ? என் விழிப்பின் அடையாளம் காக்கவேண்டும் என்றால் சொற்கள் அரிதாக வெளியேற்றப்பட வேண்டும். ஆனாலும் என் விழிப்பின் நிலையை, உறுதியை சொற்களைத் தவிர வேறு எதை நான் நம்ப இயலும்? எனது சொற்களோ கேட்பாரற்றுப் பாதாளச் சாக்கடையிலிருந்து, அடைப்பை நீக்கி வெளியேற்றப்பட்டு குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் துர் நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது.

“எனக்குக் குளிக்க வேண்டும். தயவு செய்து உதவுங்கள்.” “குளிப்பதற்கும், குடியிருப்பதற்கும் முற்படாதே. ‘சாப்பிட்டாயிற்றென்றால் இடத்தைக் காலி செய் விழாக்காலத்தில் சனியன் போல இது ஏன் இப்போது வந்து கழுத்தை அறுக்கிறது?'

‘அடர்ந்த கருங்கூந்தலோடு என்னை அனுப்பினாயே அம்மா, கணவன் வீட்டிற்கு. எல்லாக் கூந்தலும் புழுக்களாக மாறியது எந்த நாள் என்று நான் கூற வேண்டாமா? எல்லாப் புழுக்களையும் எவ்வளவு கஷ்டத்துடன் எடுத்து எறிந்தேன் என்று நீ அறிய வேண்டாமா? அதை நான் உன்னோடு பகிர்ந்து கொள்ள வேண்டாமா?'

‘இதோ பார். இங்கு இன்னொரு தலைமுறையின் முதல் திருமணம் நடக்க இருக்கிறது. பார் அவளை, எவ்வளவு அழகோடும், இளமை பொங்கும் அங்கங் களோடும் சுற்றித் திரிந்துகொண்டு இருக்கிறாள் என்பதை. வாருங்கள் பெண்களே! அக்கம் பக்கம் அழைக்க வேண்டும். எவ்வளவுதான் பார்த்து பார்த்துச் செய்தாலும், முக்கியமானவர்கள் விடுபட்டு விடுவார்கள். வாருங்கள் அழைக்கப் போகலாம்.'

பளபளப்பான உடைகளில் ஒரு குழு அழைக்கக் கிளம்புகிறது. என்னுள்ளும் உற்சாகம் பொங்கி வருகிறது. ‘நானும் கூட வருகிறேன். எனக்கும் எல்லோரையும் பார்த்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன. பல முகங்கள் மறந்து கூட போய்விட்டது. எவ்வளவு கால உறக்கம் கணக்கில்லாமல். இவளாவது உறக்கத்திற்கு ஆளாகமல் விழிப்புடனேயே எப்போதும் இருக்கும் படியான வாழ்வு அமைத்துக் கொடுப்பீர்களா? நான் பங்கு கொள்ளாமலா அழைப்பு? எனக்கும் நல்ல உடை கொடுங்கள். எல்லா தவறுகளுக்காகவும் உங்கள் அனைவரின் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.'

திரும்பவும் தெருவோரத்தில் குவிக்கப்பட்டிருக்கும் பாதாளச் சாக்கடையின் கழிவுக் குவியலைப்போல என்னை அனைவரும் பார்க்கின்றனர். நான் விழித்து விட்டவள் என்று நிரூபிக்க நான் செய்யும் முயற்சிகள் அனைத்துமே, புதைகுழிக்குள் எம்பித் தவிக்கும் ஒரு கனத்த உடல் இன்னமும் இன்னமும் மூழ்கிப் போவதை ஒத்ததாக முடிகிறது.

குடும்பத்தில் ஒரு பெண் மட்டும் என்னை அழைத்துச் செல்வதாக வாக்களிக்கிறாள். முகம் கழுவ குளியலறை செல்கிறேன். அங்கு இருக்கும் சீயக்காய்த் தூளைப் பார்க்கிறேன். கரு கருவென்று நீண்ட அடர்ந்த கூந்தலை குளித்து அலசி உதறி விரித்துப் போட்டால், உடலும் உலகமும் மயங்காதோ? தண்ணீரில் கரைத்து எடுத்து அப்பிக் கொண்டு வெளியில் வருகிறேன். நீரற்ற குளியல் அறையில் எப்படி குளிப்பதாம்? தண்ணீர் வேண்டும். குளிக்கத் தண்ணீர் வேண்டும். எடுத்துத்தாருங்கள். கண்கள் எரிகின்றன என்று அலறுகிறேன். அலற அலற எரிச்சலும், பயமும் என்னை நோக்கிப் பாய்ந்து வருகிறது.

முன் நின்ற ஒருத்தி வந்து ‘என்னுடன் வா. தண்ணீர் இருக்கும் இடம் காண்பிக்கிறேன்', என்று சொல்லி நான் அடைய முடியா வேகத்துடன் முன்னால் ஓடிக்கொண்டே இருக்கிறாள். நானும் பின் தொடர முயன்று ஓடிக் கொண்டே இருக்கிறேன். படிகளைக் கடந்தும், படிகளில் ஏறியும் பின் இறங்கியும், பின் சம தளத்தில் நடந்தும் செல்கிறாள். ஓடி ஓடிப் பின் தொடர்கிறேன். ஆனாலும் தண்ணீரும் குளியலறயும் மட்டும் காணவே இல்லை. இன்னமும், இன்னமும் நடை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நெடும் தொலைவு கடந்த பின்னே ஒரு பூட்டப் படாத கதவு காணக்கிடைக்கிறது. அப்பெண் அக்கதவருகில் புன்சிரிப்புடன் நின்று கொண்டிருக்கிறள். நான் அவள் அருகில் செல்லும் வரை அக்கதவு திறக்கப் படாமல் எனக்காகக் காத்துக் கிடக்கிறது. நான் சென்ற உடன் கதவு திறக்கப் பட்டு சட்டென்று பின் அறைந்து மூடப்பட்டும் விடுகிறது. ‘பக்கெட் எங்கே? தண்ணீர் எங்கே? என்று நான் தேடத் துவங்க அது அறையே இல்லை. அது ஒரு தெருவின் முனை.

ஆட்கள் அரவமற்ற அத்தெரு நீண்ட நெடும் தார்ச்சாலை கொண்டதாய் இருக்கிறது. அது முடிக் கற்றைகளாய் மாறி சீயக்காய் படிந்த என் தலையினுள் உள் நுழைந்து தொங்க ஆரம்பிக்கிறது, கரும் பாம்பென அலை அலையாய்.

மனம் கொள்ளாப் பெருமிதத்துடன் எனது ஆடைகளை ஒவ்வொன்றாய் வீசி எறிகிறேன். பொங்கும் அங்கங்கள் தளும்பித் ததும்புகின்றன.
க்ருஷாங்கினி

{ அணங்கு-இதழ்/7-அக்டோபர்-டிசம்பர்-2009 }

Wednesday, October 26, 2011

இடப்பெயர்ச்சி (சிறுகதை)

இடப்பெயர்ச்சிபாட்டியின் ஓயாத அறிவுரைகளும் எனது சந்தேகங்களுக்குமாக பந்துபோல எழும்பி எழும்பி திரும்ப வருகிறது இருவரிடமும்.

'எச்சப்பண்ணாதேடீ! வாழபழத்த கடிச்சுத்தான் திங்கணுமா? உரிச்சுப் பிச்சுப் போட்டுக்கோ'

'அப்போ முறுக்க கடிக்கலாமா பாட்டி'

'அதயும் விண்டுதான் வாயிலே போட்டுக்கணும்'

என்ன பாட்டி, எப்பப்பாத்தாலும் என்ன எச்சப்பண்ணாதேடீ, எச்சப் பண்ணாதேடீன்னுண்டே இருக்க'

'எச்ச எறக்க அடிக்கும், பத்து பறக்க அடிக்கும்டீ பொண்ணே'

'எந்த வயசு வரைக்கும் பாட்டீ?'

ஆயுசு முழுக்கவுந்தான்'

அண்ணா கடிச்சுத் திங்கறானே பாட்டீ'

'அதான் நீ அதைத் தொடச்சிடறேயேடீ ஜலம் தெளிச்சு'

'அண்ணா எச்சப் பண்ணலாமா?'

'எதுத்துப் பேசாதேடீ, அவன் ஆம்பள.'

'ஆம்பளேன்னாக்க எச்ச ஒசத்தியா?'

'பொம்மனாட்டிக்குட்டி எல்லாத்துக்கும் கேழ்வி கேக்கப் படாது.'

‘ஏன் பாட்டி?'

அதுக்குங்கூடவா கேழ்வி கேப்போ? ஈஸ்வரா! இந்தப் பொட்டகுட்டி எப்படித்தான் இன்னொரு ஆத்துக்குப் போயி காலந்தள்ளப்போறதோ? நீ தான் காப்பாத்தணும்.

'ஏ குட்டி! பரமாற வா, அண்ணாவும் அப்பாவும் சாப்படணும் பாரு, சாதம் போடு.'

'சரி'

'இதோ பாரு, கால அகட்டி வச்சிண்டு பரமாறப்படாது. கால ரெண்டையும் சேத்தி வச்சுக்கோ. இடுப்பக் குனிஞ்சு பரமாறு. உட்காந்துண்டு பரமாறக்கூடாது. கால சேத்தி வையி'

'பாட்டி, நான் ஒருநா அப்பாவோட சாப்பட உக்காந்துக்கறேனே, அண்ணா பரமாறட்டுமே எனக்கும்'

வாய மூடுடீ.'

‘குட்டி சாதத்த தூக்கிப் போடு. எச்சத்தட்டுலே இடிச்சுடப்போறது'

‘சரி, பாட்டி'

'கொழம்ப உசத்தி ஊத்த்துடீ, தட்டுலே கரண்டி இடிச்சுடப்போறது.'

'ஏன், பாட்டி'

'கரண்டி எச்சலாயிடும், அத அலம்பிட்டு அப்பறமாத்தான் கொழம்புலே போடணும்.'

''ஏம்பாட்டி?கரண்டி வழியா கொழம்பு தட்டுலே விழறதே? அப்ப எச்சல் ஒட்டிக்காதா? அப்பறமா அதே கரண்டியத்தானேத் திரும்ப கொழம்புலே போடறோம்?அப்ப முழுக் கொழம்பும் எச்சத்தானே?'

'ஒன்னோட யாரு மல்லுக்கு நிக்கறது? எப்பப்பாத்தாலும் கேள்வி, கேள்விக்கு எதிர்க்கேள்வி. கேள்விக்கு கேள்வி, எதிர் வாதம். விவாதம். நன்னாத்தான் வளத்தினா பொண்ண, உங்கம்மா?'

'ஏன் பாட்டி நான் நன்னாஇல்லயா? இதோ பார் பாவாட, சட்டை எல்லாம் போட்டுண்டு நன்னாத்தானே இருக்கேன்?'

'நாம்போறேண்டியம்மா, அந்தாண்ட, என்னால முடியாது.'

சில நிமிடங்களில் திரும்பவும் பாட்டி,

' ஏய்! குட்டீ, இங்கவாடீ. சோத்தபோட்டுட்டு, மோர ஊத்திட்டு ஓடாதேடி. எச்சலிடனும், பாரு.'

'சரி'

'தோ பாரு, கால ரெண்டையும் சேத்தி வச்சுக்கோ. இப்படி இடுப்ப குனி. எச்சலிடறதுக்கு முன்ன, பாவாடய தூக்கி இடுப்புலே சொருகிக்கோ. இடது கையால ஜலப்பாத்திரத்த வச்சுக்கோ, ஜலத்த கொஞ்சங்கொஞ்சமா ஊத்து. அத வலது கை நாலுவிரலாலெ இப்படியும் அப்படியுமா இழுத்துண்டு வா, மொழுகற மாதிரி,'

'பாட்டி, கைய எரியறது. வெறுமன துணி போட்டுத் தொடச்சுடறேனே?'

'அழகுதாம்போ. எப்போவோ லீவுக்கு வரும்போதுதான் உங்காத்து வண்டவாள மெல்லாந் தெரியறது? ஊர்லே இப்படித்தான் பண்ணுவாளா உங்கம்மா? நான் எப்படிடீ உங்காத்துக்கு வந்து சாப்படறது? வீடே எச்சலும் பத்துமா இருக்கும் போல இருக்கே? இதோ பருடீ, ஜலந்தீந்து போச்சு. இன்னுங் கொஞ்சமா ஜலம் விட்டுக்கோ. உட்காந்துண்டு எச்சலிடப்படாதுடீ. நின்னுக்கோ. நாலு எச்சலிடறத்துக்கே இந்தப்பாடா? எனக்கு உன்னோட வயசுலே நாலு புள்ளப் பொறந்தாச்சு. புக்காத்துலே ஒரு வேளைக்கு சாப்பாட்டுக்கு வீட்டு மனுஷாளே இருவது பேருக்கு மேல இருப்பா. ஒரு பந்தி பரமாற ஏந்துண்டாக்க எச்சலிட்டு துணி போட்டுத் தொடைக்கறத்துக்குள்ள முதுகு வலி கண்டுடும். ஆனா வாயத் தொறக்க முடியுமா?'

'போறும் பாட்டீ. எத்தன தடவ கேட்டாச்சு இதையே, போரடிச்சுப் போச்சு.'

'ஏய், என்னடி பாட்டிய எதுத்துப் பேசறே?'

இது அப்பா.

கேள்வி கேட்டுக் கேட்டுத்தான் எங்கும் வளர வேண்டி இருந்தது. கேட்கும் கேள்விக்கு பதில் தெரியாது, அல்லது பெண் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தேவையில்லை. எங்கும் எப்போதும் இதே போல பார்த்தும், கேட்டும் பழகிவிட்டிருக்கமாட்டேன் என்கிறது. இந்தக் குளிர் பிரதேசத்தில், அமெரிக்காவில் ஒரு சிறு நிலத்தில், எல்லோருடனும் கேக்கைக் கடித்து சாப்பிடவும் சற்றே யோசிக்க வேண்டியிருக்கிறது.

'எச்சலிட எச்சலிட தொடைக்கக்கூடாதுடீ பொண்ணே. எச்சலிட்டு முடிச்சப்பறந்தான் தொடைக்கணும். இல்லையானாக்க, சாணித்துணி எச்சலோட ஏகமாயி அதுவும் எச்சலாயிடும். எச்சலிட்டு முடிக்கட்டும். கொஞ்சம் காத்திண்டிரு.'

கேள்வி அம்மாவிடம்.

'அம்மா, எச்சலிடச் சொல்றே, செய்யறேன். ஆனாக்க என் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிடு.'

'என்னடீயம்மா, இன்னக்கிப் புதுக் கேள்வி?'

'ஏம்மா? எல்லோருந் தரையிலேதானே உட்காந்துண்டு சாப்படறோம். அப்ப தட்டு வச்ச இடமட்டுந்தான் எச்சலாகுமா? தரை முழுக்கதானே எச்சல் ஆகும்? அப்ப வீடே முழுக்க எச்சல்தானே? அப்படீன்னாக்க ஒவ்வொரு தடவையும் வீட்ட முழுக்கக் கழுவறோமா? தட்டு வச்சு சாப்பட இடத்த மட்டுந்தானே எச்சலிடறோம்? ஏன் தட்டச்சுத்தி நீர் சுத்தின இடத்த மட்டும் எச்சலிடணும்?"

'அது ஒரு விதமான சுத்தம்தான். சாப்ட இடத்திலே சாத்துப்பருக்க இருக்கும். அது கால்ல பட்டு வீடு முழுக்க பிசு பிசுன்னு அப்பும். எறும்பு, ஈ மொய்க்கும் அதுக்காகத்தான்.'

'அப்படியா, அப்ப சரி.'

'ஏ குட்டி! எச்சலிட வா. ஓடாதே. தாவணி போட்டுண்டாச்சு. அதிந்து நடக்காதே.'

'பாட்டி, நானுஞ்சாப்படறேன், அண்ணாவுந்தான் சாப்பறான் தினமும். அப்படீன்னாக்கா, ஒருநாள் நான் எச்சலிடறேன். ஒருநாள் அண்ணா எச்சலிடட்டுமே? ஏன் என்ன மட்டும் தினமும் எச்சலிடச் சொல்லி தொந்தரவு பண்றே? மாத்தி மாத்தி எச்சலிடக்கூடாதா?'

‘சிவ, சிவ! இந்தப்பொண்ணு ஏன் இப்படிக் கேழ்வி கேக்கறதோ தெரியல்லயேடா ஈச்வரா? நல்ல படியா காப்பாத்து.'

'பாட்டி எனக்கு பதில் சொல்லாம, எதேதோ பிராது கொடுக்கறேயே?'

'ஏண்டி? ஆம்பள தொடப்பத்தை எடுத்து பெருக்கினாக்க அவனுக்குக் கொழந்த பொறக்காம போயிடும். ஆம்பள சாணியைத் தொட்டு எச்சலிட்டாலும் அதுவேதான். அப்பறமா வம்ச விருத்தி ஆக வேண்டாமா? ஆம்பள சாணியத் தொட்டு எச்சலிடலாமா, சொல்லு, இப்போ?'

'போ, பாட்டி. நம்மாத்து மாட்டுத்தொழுவத்த பெருக்கி சாணி அள்ளறது, பால் கறக்கறது ஆம்பளதானே?'

'பூத்தொடுத்தாக்க நாரைக் கடிச்சுத்தான் அறுக்கணுமா? தோ பாரு, தரையிலே இப்படி ரெண்டு இழுப்பு இழுத்தாக்க நாரு அறுகப் போறது. எப்பப் பாத்தாலும் எச்சப்பண்ணிண்டு. என்ன விதியோ போ?'

அண்ணாவை மாட்டிவிட எனக்குத் தெரிந்த ஒரே வழி, அவன் காபி குடிக்கும் போது மட்டும்தான்.

'காபிய ஒசத்திக் குடி, என்ன கடிவாளம் போட்டுண்டு' என இருவருக்குமே வசவு விழும். வாரத்தில் இரண்டு நாட்களாவது அண்ணனின் அருகில் சென்று காபி குடிப்பேன். அப்போது அம்மாவோ, பாட்டியோ இருக்கும்படியாக பார்த்துக் கொள்வேன். என் டம்பளரில் என் நகத்தால் ஒரு சிறு தட்டு தட்டுவேன். ‘டங்' என்ற சப்தம் எழும்.

'பாட்டி, அம்மா, இதோ பாருங்கோ அண்ணா காபி குடிக்கும் போது டம்பளர் பல்லுலே பட்டுடுத்து. எச்சலாயிடுத்து. அவன அலம்பச் சொல்லுங்கோ. என்ன மட்டும் எதுக்கெடுத்தாலும் திட்டறேளே? என அலறுவேன். அது சில சமயம் அண்ணனை டம்பளர் அலம்ப வைப்பதில் முடியும்.

ஆனால் அதுவே எனக்கு எதிராகவும் முடியும்.

'பாட்டி, அது அவ டம்பளரிலிருந்து வந்த சத்தம். பொய் சொல்லறா பாரு, பொம்மனாட்டி போய் சொல்லலாமா?' அண்ணாவின் புகாரும், சில சமயம் மட்டுமே எடுபடும். என்ன முடிவு எப்போது பெரியவர்கள் எடுப்பார்கள் என்பது அறிய முடியாத புதிர்தான், எப்போதும்.

எம்.எஸ்ஸி படித்து முடித்த பின்னும் பி.ஹெச்டி செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தேன். பாட்டியின் மறுப்பும், அம்மாவின் அரைச் சம்மதமும், அப்பாவின் ஊக்குவிப்பும், அண்ணனின் உறுதுணையும் என்னைப் படிக்க வைத்தது.

என் அம்மாவிற்கு என்னை வேலைக்கு அனுப்ப இருந்த தைரியம், என்னைத் திருமணம் செய்து கொல்ளாமல் தனித்திருக்க விரும்பிய முடிவிற்கு இல்லாமல் போயிற்று. இணங்க இயலவில்லை. பாட்டியின் மறைவிற்குப் பின் அம்மா, பாட்டியின் வேடத்தையும் சேர்ந்த்தே தரிக்கத் தொடங்கினாள். பாட்டியாயும் பல முறை மாறினாள்.

பணிக்குச் சென்று வரும் போது என்னைப் பார்த்த அவனின் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் மருமகளாக்கிக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டது. அமெரிக்கா வரன். அப்பா, அம்மாவிற்கு அமெரிக்க வரன்மீது மகிழ்ச்சி. எனக்கும் ஆசாரத்திலிருந்து விடுதலை. விசா கிடைக்கும் வரை தொடர்ந்து வேலைக்குச் செல்ல அனுமதி கிடைத்தது. பரந்த மனம் கொண்டவர்கள் என்று அம்மா மிகவும் பாராட்டினாள்.

திருமணத்திற்குப் பின் கணவன் வீட்டில் எனக்கு நிறைய பசித்தது. எப்போதும் வயிறு பசி நிரம்பியதாகவே இருந்தது. ‘பெண் உணவுக் கட்டுப்பாட்டுடந்தான் இருக்க வேண்டும். வீணாக உடல் பருக்கக்கூடாது. பருத்த பெண்களை என் மகனுக்குப் பிடிக்காது' என்றனர். எப்போதும் பசியுடனே வேலைக்குச் சென்று வர இயலவில்லை.
அலுவலகமும் கணவனின் வீட்டிற்கு வெகு அருகிலேயே இருந்தது. வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் இடையில் உள்ள மற்றொரு தெரு வழியாக நான் சற்றே சுற்றி இளைப்பாறி, பின் வீடு அடைவதை வழக்கமாகக் கொண்டேன். இடையிலிருந்த தெருவில் என் தோழி இருந்தாள். தோழியின் வீட்டிற்கு சற்றே மூச்சுவிட சென்று வாருவதையும் வழக்கமாகக் கொண்டேன்.

ஒரு நாள் மிகுந்த பசியினால், என் நிலையை தோழியிடம் அறையும் குறையுமாகத்தான் சொல்ல முடிந்தது. அவள் வயிறு நிரம்ப உணவு அளித்தாள். தினமும் போக எனக்குத் தயக்கமாகவும், அவமானமாகவும் இருந்தது. ஆனால், அவளோ 'இது நிரந்தரமல்ல. கணவனிடம் சென்றுவிட்டால் இந்தக் கட்டுப் பாடுகள் இருக்காது. சில நாட்கள்தானே பொறுத்துக்கொள்' என்றாள்.

இடைப்பட்ட தெருவில் நான் வந்து கொண்டிருந்தபோது, கணவனின் வீட்டார் என்னக் கண்டு கொண்டனர். அன்று மிகுந்த கலவரத்துக் குள்ளானேன். வீடு திரும்பிய என்னை மிகவும் கேள்விகள் கேட்டதோடு அவமானப்படுத்தவும் செய்தனர். என்ன தோன்றியதோ அவர்களுக்கு என் வலது உள்ளங்கையை எடுத்து மூக்கருகில் கொண்டு சென்று, முகர்ந்து பார்த்து நான் சாப்பிட்ட விஷயம் அறித்தனர். ‘இதுதான் நீ தினமும் லேட்டா வரத்துக்குக் காரணமா?' என்று கேட்டுவிட்டு அன்று இரவு உணவை வெட்டிவிட்டனர்.

அன்றும் வழக்கம் போல நானே அனைவருக்கும் பறிமாரினேன். எச்சலிட்டேன். அதாவது டேபிள் துடைத்தேன். சொப்புப் போட்டுத் திரும்பத் துடைத்தேன். சாப்பாட்டு மணம் டேபிளில் வீசினால், மாமனாருக்குப் பிடிக்காது. அன்று நிரம்பிய பசியுடன் காலியான வயிற்றுடன் இரவு படுத்தேன்.

இங்கு அமெரிக்காவில், கணவன் டேபிள் துடைத்தான். சமயலறை வேலைகளைப் பகிர்ந்து கொண்டான். எச்சல் டேபிள் துடைத்தபோது அன்பென்று உணர்ந்தேன்.

ஆனால், ஒரு சில நாட்களில் மட்டுமே அவன் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுவதும், அன்று படுக்கை உறவும் இருந்ததும் சில நாட்களிலேயே அனுமானிக்க முடிந்தது. உறவின் தேவைகளுக்காக வன் முகத்தருகில் வந்து முத்தமிட்டபோது ‘எச்சல், எச்சல்' என்று பாட்டியும், அம்மாவும் மாமியாரும் கூட அலறியதாகப் பட்டது. நானும் சிறிது முனகி இருக்கலாமோ என்னவோ.

அமெரிக்காவில் கணவனுடன் வாழ்ந்த நாட்களில் முதல் வீட்டு விலக்கு ஏற்பட்ட போது, என்னை அவன் தனியே படுக்கச் சொன்னான். ‘கட்டில் தீட்டாயிடும்' என்றான் கடுங்குளிரில் மற்றொரு அறையில் தனியே படுத்தேன்.

மறுநாள் காலையில், ‘குளிச்சுட்டு சமைச்சுடு. ஆபீஸ் போகணும் பாரு' என்றான். என்னுள் எப்போதும் போல கேள்விகள் எழும்பத் தொடங்கின.

'குளிச்சா தீட்டுப் போயிடுமா? ராத்திரி கட்டில்லே படுக்கக் கூடாதுன்னேள்? நான் சமைச்சா சாப்பிடுவேளா?'

முறைத்தான்.

அன்று என்னை டைனிங் டேபிளில் சாப்பிடக்கூடாது என்றான். தரையில் உட்கார்ந்து சாப்பிடச் சொன்னான்.

'சமயலே நான் செஞ்சதுதானே?'

குளிரில் தரையில் அமர்ந்து சாப்பிட்டேன்.

சொன்னபடி கேட்டு வளர்ந்த பிள்ளை. அம்மாவின் வளர்ப்பு. வளர்க்கப்பட்ட பிள்ளை. வளர்ந்த பிள்ளையல்ல.

எதிர்க் கேள்விகள் அற்ற ஆண்.

உணவருந்திய பின் எச்சலும் இட்டேன். சுடுநீர் கொண்டு.

அடுத்த முறை தீட்டு வராத போது சந்தோஷப்பட்டேன்; குளிரில் எச்சலிட வேண்டாம் என்று. பிரசவம் அமெரிக்காவில்தான் என்றான். அப்போதுதான் பிறக்கும் பிள்ளை அமெரிக்கப் பிரஜையாக முடியுமென்றான். 'மசக்க, சீமந்தம் ஒரு புண்ணாக்கும் வேண்டாம். இங்கேயே இரு. புள்ள சரியாத்தான் பொறக்கும்'

எச்சில் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் உடல் விரியும்தான். உள் செல்லும்தான். இது அவ்வப்போது நிகழும்,
கருவும் உண்டாகும்

இரண்டாடுகளுக்குள் அவன் நிறையக் குடிப்பது தெரிய வந்தது. நிறையக் குடித்தான், நிறைய அடித்தான். எச்சில் ஒழுக ஒழுக குழறி குழறிப் பேசினான்.

சமைத்தேன்.

சாப்பாடு பறிமாறினேன்.

எச்சில் டேபிள் துடைத்தேன்.

குழந்தையின் ஜொள் துடைத்தேன்.

அவனின் வாந்தியையும் துடைத்தேன்

முத்தமே எச்சிலாயிருந்தது.

எச்சில் நாற்றமாயிருந்தது.

எச்சில் உணவுக்கானதாக இல்லாமல், உணவு வாசனைகளோடு இல்லாமல், நாற்றம் சம்பந்தப்பட்டதாய் இருந்தது.

எச்சில் உஷ்ணநாட்டோடு உணவாகவும், குளிர்நாட்டோடு நாற்றமுடையதாகவும், என் உடலில் இரு பாகங்களாக ஒட்டிக்கொண்டும், ரத்தத்தினுள் ஓடிக் கொண்டும் இருந்தது. எந்த நீரில் கழுவ இதை? எப்படி எச்சலிட்டுத் துடைக்க? எந்த சாணித்துணி போட்டுத் துடைக்க? சுத்தமாக்க பசுஞ்சாணி போட வேண்டுமா? எருமைச் சாணியா?

'பாட்டி நீ உன் அம்மாவின் எச்சில். அப்பா உன் எச்சில். நான் என் அம்மாவின் எச்சில். எச்சில் வாயிலிருக்கிறது. வாய் உடலில் இருக்கிறது. வாய் வழியாகப் பேசுகிறோம். எனவே எல்லா சொற்களும் எச்சில் எச்சில் நிரம்பியது. எல்லாச் சொற்களையும் கழுவி எடு. சாணி போட்டுக் கழுவு,

பாட்டி. பாட்டி! நீ பஸ்ஸில் போகும்போது சின்ன பாட்டிலில் நீர் கொண்டு போவாயே, கண்டக்டர் டிக்கட்டை எச்சில்படுத்திக் கிழித்துக் கொடுப்பதால் ஒவ்வொரு முறையும் டிக்கட்டை வலக்கையிலிருந்து மாற்றாமல், பத்திரமாக எடுத்துக் கொண்டு, பஸ்ஸை விட்டு இறங்கியவுடன், டிக்கட்டை தூர எறிந்து விட்டு, எச்சில் டிக்கட் பிடித்த கையையும் கழுவுவாயே. சொற்களை மட்டும் கழுவக் கூடாதா பாட்டி? சாப்பாட்டு எச்சில் இலையைப் போடுவதால், தெரு எச்சில் ஆகிவிட்டது. எச்சில் இலையை சாப்பிட்டதால் நாயும், அது நடந்து வரும் பாதையும் எச்சில் ஆகிவிட்டது. காகம் உட்காரும் காம்பவுண்ட் சுவரும் எச்சில் நிறைந்ததே. ஈக்கள் புழங்கும் சமயலறையும், காகத்தால் மற்றும் ஈயால் கிணறும், செடியும், கொடியும், மரமும் என எல்லாமே எச்சிலாகி விட்டது. அம்மா, இத்தனையும் எப்படிக் கழுவ?

நீ கவலையே படாதே அம்மா, அதற்காகத்தான் மழை பெய்கிறது. மழை எல்லா இடங்களையும் எச்சலிடுகிறது. கடல் நீர் உள் நுழைந்து தன்னால் ஆனவரை கடற்கரையின் எச்சில் போக்குகிறது. எல்லாமே வம்சவிருத்தி செய்கிறது. அதனால் எல்லாம் எச்சில். எனவே உலகம் முழுவதும் எச்சிலாக நிரம்பியுள்ளது.

'பாட்டீ, அம்மா! யாராவது சொல்லுங்களேன். என் பிள்ளை என் எச்சிலா? அவன் எச்சிலா? எனக்கு சிலசமயம் அவர்களைப் பார்க்கும்போது என் எச்சிலாகத் தோன்றுகிறது. ஆனால், பலசமயம் அவன் எச்சிலாகத்தான் தோன்றுகிறது. அவன் புழங்கிய இந்த உடல் கூட எச்சிலாகத்தான் இருக்கிறது. அதனால்தான் நான் இங்கும் அடிக்கடி குளிக்கிறேன். நிறைய வாசனை திரவியங்கள், இல்லாவிட்டால் எச்சில் போக்க உடல் முழுவதும் சாணி தேய்த்துக் குளிக்கிறேன். தலையிலிருந்து எச்சில் ஒழுகி, ஒழுகி எப்போதும் என் உடல் கொழகொழப்பாக என்னிலிருந்து வழுக்கிக் கொண்டே இருக்கிறது.

நான் நம் வீட்டு வாசலில் நிற்கும் போது உனக்கு பயம் தோன்றலாம் அம்மா. என்னைக் கேள்விகள் கேட்கத் தோன்றலாம், அம்மா. இந்த முறை பதில் என்னிடமிருந்து எதிர் பார்ப்பாய். ஆனால் என்னால் சரியான, சரியாக பதில் சொல்ல முடியுமா? தெரியவில்லை. ஆனாலும் இந்தக் குளிர் பிரதேசத் திலிருந்தும், எச்சில் கணவனிடமிருந்தும் எனக்கு விடுதலை. அவன் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது சாதம் போட, எச்சலிட நான் இருக்க மாட்டேன். நன்றாக ஏமாறட்டும். என்னை மட்டும் அவன், அவனின் அப்பா, அம்மா எல்லோரும் ஏமாற்ற வில்லையா? எனக்கு என் பணி இருக்கிறது. எச்சில் படாமல் எனக்காகவே. திரும்பவும் நான் வயிறு நிரம்பச் சாப்பிடுவேன், நன்றாக உடை அணிவேன். எங்கும் வலம்வருவேன். அம்மா சொல்லாமலே சாதம் போடுவேன், சமைப்பேன், எச்சிலும் இடுவேன். அவன் எச்சில் படாமல் என் குழந்தைகளை நான் வளர்ப்பேன்.

க்ருஷாங்கினி