Sunday, November 6, 2011

தாய்மை போற்றுதும்

மிகப்பெரிய பரந்தவெளி. எங்கும், எங்கெங்கும் மனிதத் தலைகள். நின்ற நிலையில் மனிதர்கள். அனைவரும் இணைந்து ஒட்டு மொத்தமாகத் தட்டையாய் காட்சி அளிக்கின்றனர். சற்று உற்றுப் பார்க்க அனைவரும் பெண்கள் என்பது புலப்படுகிறது. பெண்கள்! பெண்கள்! எங்கெங்கும் பெண்கள். பனிரெண்டு முதல் நூறு வயதிற்கு அருகில் வரை பல வயதில் பெண்கள். அழகான, அழகற்ற, உயரமான, குட்டையான, நிற மாறுதல்களுடன் என எல்லாவிதமான மாறுதல் களுடனும் நிறைந்திருந்தது அந்த மைதானம். ஆனாலும், அனைவரும் பெண்கள். விதை நன்றாக மண்ணிலிட்டு, அது ஒன்றுபோல வளர்ந்து, பின் பல கட்டங் களில் நடப்பெற்று, ஒன்றாக வளர்ந்து, ஒன்றாக பருவம் எய்தி, ஒன்றாய்ப் பூத்து, ஒன்றாக நெல்மணிகளை சூல்கொண்டு, அதுமுற்றி தலைதாழ்த்தி அசைந்து நிற்கும் அறுவடைக்குத் தயரான வயலின் கதிர் தாங்கிய நெற் செடிகள் போல, எல்லோரும் பெண்கள். முற்றிய, தலைசாய்ந்த கதிரான எல்லாப் பெண்களின் கைகளிலும் ஒரு சிறு குழந்தை. பிறந்து சில நாட்களேயான குழந்தைகள். அவை அனைத்தும் பெண் குழந்தைகளா? அடையாளம் தெரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் ஒரு தலை இருப்பதைப்போல எல்லோரின் இடுப்பிலோ தோளிலோ ஒரு புத்தம் புது சிசு. பனிரெண்டு வயதுப் பெண்ணின் கைகளிலும் குழந்தை; தொண்ணூறு வயதுக் கிழவியின் கையிலும் குழந்தை. ஆண் என ஒருவரையும் காணக் கிடைக்காத அந்த மைதானத்தில் அனைவர் கைகளிலும் ஒரு குழந்தை.

குழந்தைகள் பிறந்து அதிகபட்சமாக பத்து நாட்களே ஆகியிருக்கலாம்; அல்லது சில மணிகளே ஆகியிருக்கலாம். குழந்தையின் கையில் ஒரு குழந்தை, குழந்தையின் தாயின் கையில் ஒரு குழந்தை; பாட்டியின் கையில் ஒரு குழந்தை; அத்தை, சித்தி, அக்கா என அனைத்துப் பெண் உறவுகளிடமும், உறவுகளற்ற பெண்களிடமும் ஆளுக்கொரு குழந்தை. என்றாலும் ஒன்றுபோல இல்லை; நிறம், அளவு தரம் என எல்லாமே மாறுபட்டுத்தான். ஆனாலும், எல்லாப் பெண்களின் கைகளிலும் குழந்தை. குழந்தைகள் ஒன்றொன்றாகவோ, அல்லது ஒட்டு மொத்த மாகவோ, விட்டு விட்டோ அழுதுகொண்டே இருந்தன. அந்த அழுகை குழந்தையின், குழந்தைகளின் வாயிலிருந்து வெளியேறி பெரும் குரலாக மாறி விண்ணை நோக்கி உயர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு குழந்தையின் அழுகையும் எறியப்பட்டு எறியப்பட்டு, வானத்துக்கும் பூமிக்கும் இடையில் குறுக்கு இழைகளாக நெய்யப்பட்டது போன்ற, மழைத் தரை போல, ஆனால் வானத்திலிருந்து நிலத்துக்கு மேல் கீழாக இல்லாமல் கீழிருந்து வான்நோக்கி எழும்பி எழும்பி கோடிழுத்துக் கொண்டிருந்தன. கோடுகள் அருகருகாக ஒன்றன்மீது ஒன்றாக ஏறி ஏறி அடுக்காக மாறி, திரையைப்போல அசைந்து நெளிந்து புகையைப் போல மேலெழும்பிக் கொண்டிருந்தது. புகை கெட்டிப் பட்டு கண்ணாடியைப் போல ஊடுறுவி அசையாத் திரை ஆயிற்று. அசையாத் திரை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்டு தடித்த, கனத்த, நகர்த்த இயலாத திரையாகியது. வானத்தில் ஏற்ற இறக்கம் கொண்ட நுனியையும் பெண்களின் தலைமீதாக சீரான அடிக்கோடிட்டு அடுக்கப்பட்ட குரல்களாகவும், எம்பி எம்பி ஹைட்ரஜன் பலூன்போல பறந்து கொண்டிருந்தன.

இத்தனை பெண்களுக்கும் வயிற்றில் பிள்ளை திணித்த ஆண்கள் எங்கு சென்றனர்? என்னவானார்கள்? எல்லாப் பெண்களும் பிரசவ வலியில் அலறிய குரல் எங்கு சென்று ஒளிந்து கொண்டிருக்கும்? எத்தனை வயிறுகள் கீறப்பட்டு குழந்தையை வெளித் தள்ளியிருக்கும்? எத்தனை குழந்தை யோனி வழி தலை முதலாக வந்திருக்கும்? கால் முதலாக வந்தது எத்தனை? கருப்பை சுறுங்கி வற்றிய உடல் கொண்ட பாட்டிக்கு திரும்பவும் கருப்பை விரிந்த ரகசியம் என்ன? மனிதர் தவிர மற்ற இயற்கையின் உயிர்கள் அனைத்தும் ஒரே பருவத்தில் குட்டிகள் ஈனும். தெருவெங்கும் ஆங்காங்கே நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகள், மாமரத்தில் காய்கள், மல்லிகைப் பூக்கள், ரோஜா, டிசம்பர் பூக்கள். மனிதனுக்கு ‘சீசன்' உண்டா? வயல்களில் கரும்பு, நெல், கம்பு, ராகி எல்லாம் நிறையலாம்; மைதானத்தில் பிள்ளை நிறைய முடியுமா? முடியும் என்று ஆகியிருக்கிறதே அனைவரின் கையிலும்! பள்ளிப் பருவ பெண்கள் தாய்மைப்பேறு அடைந்து கையில் குழந்தையுடன் தனித்து நிற்கின்றனர். அதன் தாக்கம்தானா இந்தக் காட்சி?

‘பெண்களே பள்ளிப்பருவத்தில் பிள்ளைகள் உங்களுக்குத் தொல்லையே.' இரு நாள் கருத்தரங்கு. நிறைய பள்ளி மாணவிகளின் ஒருங்கிணைப்பு இருந்தது. 12 முதல் 16 வயது வரைக்குமான பெண்கள் சீருடையில் அமர்ந்திருக்க ஆளுக் கொரு பொம்மைக் குழந்தை கொடுக்கப்பட்டது, வினாத்தாள் வினியோகம் போல. அனைவரின் கவனமும் பாடத்தின்மீது. கல்வியின் பொருள் ‘பள்ளிப் பருவத்தில் பிள்ளைச் சுமை'. பொம்மைக் குழந்தைகள் நன்கு அழுது புட்டிப்பால் குடித்தன. உடனே கழிந்தன. உறங்கின. சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த பொம்மைகள் முன்னரே முறைப்படுத்தப் பட்டிருந்த நேரத்தில் மிகச் சரியாக அழுதும், கழிந்தும், களைத்தும், உறங்கியும், விழித்தும் உண்டும் பிழையின்றி செயற் பட்டன. ஆனால் பொம்மைக்கு பொம்மை அந்த இயக்கங் களின் நேரம் வேறு வேறாக அமைக்கப் பட்டிருந்தது. எனவே அவற்றின் அழுகை இடம் மாறி இடம் மாறி தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தது.

இரண்டு நாள் கருத்தரங்கம் முடிந்தபின், அதனை வடிவமைத்து செயற் படுத்தியவர் தொலை காட்சிப் பேட்டியில் கருத்தரங்கம் மகத்தான வெற்றி என்று கூறிக் கொண்டிருந்தார். “பிள்ளை பிறத்தல், மாணவப் பருவத்தில் காதல், உடல் உறவு எல்லாம் ஆபத்தானது, தொந்தரவானது என மாணவிகள் உணர்ந்து கொண்டு விட்டனர், இனி பள்ளி மாணவியரின் பிரசவ எண்ணிக்கையின் விகிதாசாரம் கண்டிப்பாகக் குறையும். அவர்களுக்கு ஆண் நண்பர்களின் எண்ணிக்கை எப்படியிருந்தாலும் குழந்தைப் பிறப்பு எண்ணிக்கை கண்டிப்பாகக் குறையும். இது எங்கள் மூன்றாவது ஆண்டுத் தொடர் கருத்தரங்கு. அதன் தாக்கமாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பைவிட புள்ளி ஐந்து சதவிகிதம் இந்த மாநிலத்தில் குறைந்திருக்கிறது. கருத்தரங்கிற்கான செலவுப் பட்டியல் கோடிக்கணக்கில்” என்று மேலும் மேலும் சொல்லிக்கொண்டே போனார்.

“மன்னிக்க வேண்டும் குறுக்கிடுவதற்கு. கருத்தரங்கு பிள்ளை பெறும் மாணவிகளுக்கு மட்டும் ஏன்?”

சற்றே முகம் சிவக்க, பேட்டியை ஒரு இனிய சிரிப்புடன் முடித்துக் கொண்டார் ஏற்பாட்டாளர்.

“இங்கு பங்கேற்ற மாணவிகளில் பலருக்கு உண்மையிலேயே நிஜமாகவே அழுது, உணவருந்தி, உறங்கி, மலம் கழிந்து, தவழும், நடக்கும் ஒன்றுக்கு மேற் பட்ட குழந்தைகள் உள்ளன. அவர்கள் இதுபற்றி ஏதும் கருத்துகள் தெரிவித்தனரா?”
“மன்னிக்கவும். பேட்டி நேரம் முடிந்துவிட்டது. நன்றி, மிக்க நன்றி அன்பரே. தொலைகாட்சிக்கும் நன்றி.” சற்றே சிவந்த முகத்துடன் சிரிப்பின்றித் திரும்பினார் ஏற்பாட்டாளப் பிரமுகர். பேட்டி எடுத்தவர் தொலைகாட்சி நிலையத்தின் அரங்கத்தில் செயற்கை வெளிச்சமூட்டப்பட்ட இதம் தரும் அறையில் ஒப்பனையுடன் பிரமுகரைப் பற்றி முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, சற்றே கிண்டல் கலந்த குரலில் கருத்தரங்க ஏற்பாட்டாளர் எதிர் கொள்ள நேர்ந்த சிரமங்கள் பற்றி பேசி நிகழ்ச்சியை முடித்தார்.

பள்ளி மாணவப் பருவத்துத் தாய்மார்கள் சந்திக்கும்போது முகமனுக்குப் பின் கேட்கப்படும் கேள்வி, “என்ன, இது உன் பிள்ளையா?” “ஆம்” என்னும் சிரிப்புடன், “இது உன் பிள்ளையா?” என்ற கேள்வி இன்னொருத்தியிடம் கேட்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் நண்பர்களையும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளையும் சுமந்து செல்லும் பள்ளிச் சிறுமிகள்.

பால்ய விவாஹத்தை மிகப்பாடுபட்டு ஒழித்த நாட்டிலிருந்து சென்றவர் களுக்கு விவாகமற்ற தாய்மையும் பெண்ணுக்கே பாரமாவது குறித்த கவலை கொள்ளத் தோன்றியது.

இளம் தாய்மார்கள் தங்களது உணர்வுப் பகிர்தலுக்கும் பின் பிரிகின்றனர். அவரவர் வேலைத் தளத்திற்கு - ஏதோவொரு கண்ணாடித் தடுப்புக்குப் பின் புறம் கால் வலிக்க நின்று ஈட்டும் சொற்பப் பணம் அவர்களின் உதட்டுப் பூச்சுக்கும், வாழ்க்கையின் மேல் பூச்சுக்கும் பிள்ளையின் வயிற்றுக்குமாகப் பகிர்ந்தளிக்கப் படும். எதிர்பார்ப்பும் இல்லாத ஆண் நண்பர்கள் எனில், ஏமாற்றம் குறைவு. எதிர்பார்த்து ஏமார்ந்தாலும், எதிர்பாராமல் எதிர்பார்ப்பற்று விலகிச் சென்றாலும் பெறும் பிள்ளை என்னவோ பெண்ணோடுதான்.

‘தனிப்பெண், பிள்ளையுடன்' என்னும் அடைமொழியுடன் அல்லது ‘ஒற்றைத் தாய்' என்ற சொல்லோடு பெண்கள் உலகெங்கும் வயிற்றிலும் கையிலு மாக பிள்ளைகள் சுமந்து அலைகின்றனர். தந்தையற்ற பிள்ளைகள் தாயோடு அங்கம் ஒன்றென துருத்திக்கொண்டு நிற்கும் மருக்களைப்போல, கை வண்டி, தள்ளு வண்டி, கருப்பையில் சுமக்கும் தாய் வண்டி என எப்போதும் அசைந்து கொண்டும், இடம் பெயர்ந்து கொண்டும் இருக்கின்றனர்.

எதிர்பார்ப்பும் அற்று, அதனால் ஏமாற்றமுமற்று பிள்ளையுடன் அலையும் பெண்கள், தம் வாழ்வில் எதிர்கொண்டதுஒற்றை ஆணெனில் அவன் தலையை டாலர் போல சங்கிலியிலோ, அழகுக் கயிற்றிலோ மாட்டி நெஞ்சின் நடுவே பிறர் பார்க்க அலைகின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களின் தலைகளை கழுத்தில் மாலையாய் அணிந்துகொண்டும், உள்ளங் கழுத்து நெக்லஸ் போல சம இடைவெளியில் கோர்த்து முகத்துக்குக் கீழாக பட்டையாக அணிந்துள்ளனர். எதிர்பார்ப்பும் இருந்து, ஏமாற்றமும் அடைந்த சமூக அவமானமாகக் கருதப்படும் பெண்களும் தங்கள் கோபத்தைக் கொண்டு கொய்த ஆண் / ஆண்களின் தலைகளை ஊசி கொண்டு கோர்த்துத் துவளத் துவளத் தொங்கும் அவற்றை காடை கௌதாரியென ஒரு கையிலும், பிள்ளை மற்றொரு கையிலுமாக, தொங்கும் தலைகள் இடிபடும் பேரோசையுடன் பாதைகளைக் கடந்து கடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

ஏமாற்றப்பட்டது, துப்பப்பட்டது எதையும் இயம்ப இயலாதவர்கள் தம் ஆண்களின் கொய்த தலைகளை அவசர அவசரமாகத் தட்டையாக்கித் துளையிட்டு, கயிறு கொண்டு பிணைத்து, இடுப்பு உடைக்கு அடியில் அரைஞாண் கயிறென திறந்த வெளியில் காட்சிப்படுத்தத் தயக்கம்கொண்டு, சலங்கைபோல கோர்த்துக் கொண்டு அலைகின்றனர். உலகின் வீதிகளில், சாலை ஓரங்களில், புல்வெளிகளில், பாதைகள் எங்கும் தம் கால்களின் அணிகள் ஒலியெழுப்ப, கோர்க்கப்பட்ட தலைகள் சப்திக்க, குழந்தைகளின் அழுகை சப்தங்களுடன் இருவருக்கும் இடையிலான உரையாடல்களின் ஒலிகளுடன், இடம் பெயர்ந்து இடம் பெயர்ந்து தந்தைகளை நோக்கி இட்டுச் செல்லும் பயணத்துடன்- பிள்ளைகளுடன் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கின்றனர்.

ஓரிரு வினாடிகள் தடைபட்ட பயணத்தின் இடையில் ஒரு இடத்தில் அல்லது ஒரே இடத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட பெண்களின் சங்கமமே பிள்ளைகளுடன் பெண்களின் பெரும் கூட்டம். இன்னமும் சில நொடிகளில் ஒளிக்கதிர்கள் பரவுவதைப்போல தனித்தனிப் பாதையிலோ, பின் தொடரும் அணிவகுப்பாகவோ அனைவரும் கலைய நேரிடலாம். இனி எங்கும், எப்போதும் சந்திக்காதவர்களாகவும் பயணப்படலாம். புதுப் புதுத் தாய்களுக்கும் தமது பிள்ளைகள் பின் தொடர முன் சென்ற தாய் வழிகாட்டலாம். கையிலிருக்கும் பிள்ளை ஆணாயினும், வளர்ந்துவிட்ட அனைவரும் பெண் களாகவே இருப்பதாக அமைந்த அந்தப் பயணத்தின் பாதை சென்றடையும் முடிவு பாழாக இருக்கலாகாது.

No comments: