Wednesday, April 1, 2009

தட்டுக் கழி

தட்டுக் கழி
அந்தப் பழுப்பு நிற உறை அரசு தொலைக்காட்சி நிலையத்திலிருந்து வந்திருந்தது. சில நாள் முன்னதாக நான் கொடுத்திருந்த 'தகுதி மேலாக்க' விண்ணப்பத்திற்கான நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு அது. இது அரசு தொலைக் காட்சியின் மற்றொரு படி. முக்கியமான படியும் கூட ஆகும்.

முதல்முறை தொலைக் காட்சியில் என்னை கலை நிகழ்த்த அழைத்த போதும் இதே மகிழ்ச்சிதான். ஒலியும் ஒளியுமுள்ள தொலைகாட்சி மூலமே நிகழ்கலையான நடனத்தைக் கொடுக்க இயலும், எல்லோருக்கும் அவரவர் இருப்பிடத்தில். வீட்டிலிருப்போர் கண்ணயர்ந்தும், வெளியில் இருப்போர் காண இயலாதததுமான ஒரு உச்சிப் பொழுதில் எனது முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டது. ஆனால் அதன் பின் விளைவாய் பலர் என்னை விசாரித்துப் பாராட்டியபோதும், மீண்டும் ஒரு முறை வேறு ஒரு நாளில் அதே நிகழ்ச்சி மறு ஒளிபரப்பானபோதும் அது சென்றடையும் வீச்சு என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. எனவே அப்போதே 'தகுதி மேலாக்கமும்' அணுகவேண்டியதுதான் என்று தீர்மானித்து இருந்தேன்.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை 'தகுதி மேலாக்க' விண்ணப்பங்கள் தொகுக்கப்பட்டு பின்னர் இரண்டு அல்லது அதற்கும் மேலான நாட்கள் நேர்முகம் நடைபெறும் என்பதையும் முன்பே சேகரித்திருந்தேன். இந்தக் கடிதத்தில் எனக்கான நாளும் நேரமும் குறிப்பிடப் பட்டிருந்தன. இந்தத் தேதியில்தான் ஆரம்பமா அல்லது நிறைய நிகழ்ச்சிகள் பார்த்துச் சலித்து அலுப்பூட்டுவதாக அமையும் கடைசீ நாள் நிகழ்ச்சியா எனது என்று விசாரிக்க யாருமில்லை.

கடிதம் கண்ட தொடக்க சந்தோஷத்திலிருந்து நான் மெல்லமெல்ல நிதர்சன உலகிற்கு வரவேண்டி இருந்தது. என்னைப் பல கேள்விகள் சுற்றி அலைந்தன. நிகழ்ச்சி சென்னை தொலைகாட்சி நிலையத்தில் பதிவாக்கப்பட்டு, அங்குள்ள குழுவினரால் வடிகட்டப்பட்டு, பின் தலைநகரம் சென்று அங்கும் தேர்வாக வேண்டும் என்பதுதான் கல்கட்டி இழுத்தது. மேலும் கேமராவின் முன் நின்று ஆடும் எனது உடையும், நகைகளும், முகமும் தெளிவாகவும் கச்சிதமாகவும் அமையவேண்டும். திறமை கலை மூலமாயினும் இக்கலை உடல் சார்ந்த்ததுதானே? அல்லாமலும், ஆடும்போது இரண்டு மூன்று ஜோடிக் கண்கள் என்னைச் சுற்றி தானிருந்த இடத்திலிருந்தே உற்றுப் பார்ப்பதும், விலகிப் பார்ப்பதும், அருகில் பார்ப்பதும், நாம் பாராமல் பார்ப்பதும் என, எல்லாவற்றிற்குமான ஒப்பனையும் வேண்டும். மேடையில் அணிகலனில் கற்கள் பொக்கையாயினும் கருத்திருப்பினும் கட்டியிருக்கும் புடவை சற்றே பழையதாயினும் எல்லாக்குறைகளையும் ஒளி இட்டு நிரப்பி இருப்பை நிறைவாக்கிவிடும். இவை யெல்லாம் தொலைகாட்சியில் முடியாத காரியம். அதன் கிட்டப் பார்வைக்கும் தூரப் பார்வைக்கும் சமவிகிதத்தில் அழகூட்டும் விதமான உடையும் அலங்காரமும் எனது முதல் தேவை. உடை கச்சிதமாகப்பொருந்தி யிருத்தல் வேண்டும்; அணியும் நகைகள் கல் உதிர்ந்து பாசிபடர்ந்து காட்சி அளிக்காது இருத்தல் வேண்டும். கால் சலங்கையின் மணிகள் உதிராமல் இருக்கவேண்டும். குஞ்சலம் நசுங்கி சடைசடையாகத் திரிந்து தொங்காது இருத்தல் வேண்டும். எப்போதும் புதியதாய் மலர்ந்திருக்கும் நெட்டிப்பூ அணிவதற்கு இயலாது; அது ஒரு முறை முதலீடு என்பதானாலும் விலை அதிகம். காகிதம் பிளாஸ்டிக் என இப்போது நடனத்துக்கு வாடாத பூக்கள் அநேகம் வந்து விட்டிருக்கின்றன. ஆனால் எல்லாம் காசின் அடிப்படையில் அழகின் ரகசியம். நிஜமான பூ என்றாலும் தலை நிறைய இட்டு பின்னலுக்கும் சுற்றவேண்டும்.

போனமுறை ஆடியபோதும் நிஜப்பூதான். வாடகை நகையும் வாடகை உடையும்தான். எல்லாவற்றிற்கும் மணிக்கணக்கு உண்டு. மலர்ந்த பூக்கள் நிறம் மாறி துவண்டு தொங்குவதற்கும்கூட. ஆனால் அது முதல் நிகழ்ச்சி. எனவே என்னுடைய திறமை வெளிப்பட ஒரு வாய்ப்பு என்பதாகக் கருதினோம்.
நிகழ்ச்சிக்கான நேர ஒதுக்கீடு முப்பது நிமிடங்கள். அதைப் பற்றிய அறிவிப்புக்கு முன்னும் பின்னுமாக இரு நிமிடங்கள். மேலும் இடை இடையே அறிவிப்புக்கென்று ஐந்து நிமிடங்கள், மேலும் பக்கவாத்திய, நட்டுவாங்க பெயர்கள் இட என்று எல்லாமாக எனது முப்பது நிமிடங்களிலிருந்து விலகி நின்றது. இதனால் பக்கவாத்தியக் காரர்களுடன் எனது ஒத்திகை நாட்டியத்தைவிடவும் நேரத்தின் மீதான கவனத்துடனேயே அமைந்தது. வெட்டியபின் இடைவெளி தெரியாமலும், ஒட்டியதன் வீரல் வெளிவராமலும் வர்ணத்தை நடுவாக்கி முன்னும் பின்னுமாக மூன்று ஐட்டங்களுடன் நிகழ்ச்சியைத் தயார் செய்திருந்தேன்.

நிகழ்ச்சி ஒளிநாடாவாகும் நாளன்று மேற்சொன்ன அலங்காரங் களுடன் -வீட்டிலிருந்தே ஒப்பனையுடன்- பக்கவாத்தியக் காரர்களையும் உடன் அழைத்துச் சென்று குறிப்பிட்டிருந்த நேரத்துக்கு முன்னதாகவே நிலையத்தை அடைந்து விட்டோ ம். எங்களுக்கான ஒப்பனை அறையில் அமரவைக்கப் பட்டோ ம். காத்திருப்பு மதியம் வரை தொடர்ந்தது, 'ஸ்டூடியோ காலியில்லை' என்ற ஒற்றை வரி பதிலுடன். மதிய உணவு நேரமும் வந்து விட்டது. அனைவருக்கும் உணவு வழங்கினார் அப்பா. தலைப்பூ தனது நிறம் மங்கித் தொங்க ஆரம்பித்திருந்தது. A.C. அறையிலும் கண்மை கண்களைவிட்டுக் கீழிறங்கி அகலமாய்ப் படர ஆரம்பித்தது. கை கால்களில் ஆல்தாவும் வாயில் 'லிப்ஸ்டிக்' குமாக இருந்த நான் அவசர உணவு உண்டு மறுபடியும் முகத்தைப் புதுப்பித்தேன், உடன் எடுத்துச் சென்றிருந்த ஒப்பனைப் பெட்டியின் மூலம். ஆனால் மனதையும், பூக்களையும் புதிதாக்கும், உடைகளைக் கலையாமல் வைக்கும் உத்தி அந்தப் பெட்டிக்குள்ளும் வெளியேயும் எங்கும் எனக்குக் கிட்டவில்லை.

"ஸ்டூடியோ" காலி என்ற அறிவிப்பைத் தொடர்ந்து சிறு நடைபாதை வழியே கனத்த கதவுகள் உந்தித் திறந்து உள்ளே நாங்கள் நுழைந்தபோது ஒளி ஆட்களும் கேமரா நபர்களும் உணவருந்தச் சென்று இருந்தனர். இன்னமும் ஒரு மணிநேரத்திற்கு அங்கு அமர்ந்திருக்கவேண்டிய நிபந்தம் எங்களுக்கு. அங்கும் ஒரு முறை ஒத்திக்கை பார்த்தோம்; நேரத்தை சரியாகத்தான் பயன்படுத்தினோம் என்ற மனத் திருப்திக்காக. நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும் நேரம் சூரியன் மேற்கில் மறையாமல் சற்றே உக்கிரம் தணியத்தொடங்கிய வேளை. பக்கவாத்தியம் வாசித்தவர்களையும் பாட்டுப் பாடியவர்களையும் அவரவர் வீட்டில் கொண்டு சேர்த்துவிட்டு வீடு திரும்பும்போது இன்றைய செலவுக்கான அதிகப்படியான ஆயிரம் ரூபாயை அப்பா எப்படி சரிக்கட்டப் போகிறார் என்பதையே மனம் யோசித்துக் கொண்டிருந்தது.

சிறுவயதிலிருந்தே எனது பிடிவாதக் கனவான பரதம் பயிலுதல் குடும்பப் பொருளாதாரத்துக்கு அடங்காதது. ஆனாலும் அந்த ஆசை அப்பாவால் நிறைவேற்றப்பட்டுக்கொண்டே வருகிறது. தொலைகாட்சி, அரசு அமைப்பில் உதவி பெறுதல், அல்லது நிகழ்ச்சி தருதல் போன்றவை மட்டுமே என்போன்றவர்களால் நிகழ்த்தப்படும் தனிநபர் நடனம். சபாக்களுக்குக் காசு கொடுத்தோ அல்லது அதற்கீடாக ஏதேனும் கொடுத்தோ நாட்டியத்தில் என் திறமையை வெளிக்காட்ட என்னால் நிச்சயம் முடியாது. நாட்டியத்தில் முழுப்படிப்பும் பயிலவேண்டும் என்ற என் அதீத ஆசைக்கு ஈடுகொடுத்து பட்டம் வாங்கவைக்கவே எவ்வளவு கசக்கிக்கொள்ள வேண்டியிருந்தது என்பது எப்போதும் என் நினைவில் இருக்கும் விஷயம்தான். ஆனாலும் தொடர் உற்சாகம் எனது திறமைக்கு அவ்வப்போது கிடைத்துவருவது பெரிய ஊக்க மருந்து.

நடன நிகழ்ச்சிக்காக என்றபோதில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி வரும் தீர்மானம் 'தகுதி மேலாக்க' நேர் காணலில் உண்டா என்று எண்ணியபோது ஒரு நிச்சயமற்றதன்மை மனதுள் நிறைந்தது. அப்போதும் எதிர்மறையான எண்ணங்களுக்கே இடம் தரலாகாது என்ற எனது பிடிவாதம் ஒளி ஊறச் செய்தது. வர்ணம் செய்து பத்து நிமிட நேர்காணலை ஒரு நிறைவான வெளிப்பாடாகக் காட்ட இயலும் என்று தோன்றியது. வர்ணத்தில் 'பாவமும்' நிருத்தமும் என அனைத்தும் காட்டி பூரணத்தில் சிறிது கிள்ளி நடுவர்முன் வைக்க ஏதுவாகும். எனவே ஒலிநாடாவின் வார்த்தைகளுக்கு என்னைத் தயார்செய்துகொள்ள வேண்டும்.

'தகுதி மேலாக்க' நேர்காணலின் நேரத்தையும் தேதியையும் ஒரு முறை மீண்டும் தொலைபேசி மூலம் நிச்சயித்துக் கொண்டால் நலமாயிருக்கும் என்று எண்னி பொது தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். வினாக்கள் தொலைபேசியில் பகிரப்படுகையில் திடீரென்று எழுந்த சந்தேகம் கேள்வியாய் வைக்கப்பட்டது." நேர்காணலுக்கான நிகழ்ச்சியில் ஒலிநாடா உதவியுடன் ஆடலாம்தானே?" ஆனால் அது சட்டென்று மறுக்கப்பட்டு " லைவ் ம்யூஸிக்" அதாவது பக்கவாத்தியக் காரர்களும் உடன் வரவேண்டும் என்றும் அவ்வாறில்லாவிடில் அது ஒரு குறையாகக் கருதப்பட்டு வாய்ப்பு நிராகரிக்கப்படலாம் என்றும் பதில் வந்தது. மனம் பகீரென்றது. குறுகிய கால அவகாசம் மட்டும் காரணமன்று, மற்றுமொரு முழு செலவு.

உதவி நாடிக் குருவிடம் சென்றேன். அவருக்கு என் திறமைமீது அதிக மதிப்பு. கொஞ்சம் பாசமும் கூட. " live music aunty என்ன செய்யறதுன்னு தெரியல்ல" "ஏன் கவலப்படறே நான் பாட்டும் நட்டுவாங்கமும் செய்யறேன். எனக்கு நீ பணம் ஏதும் தரவேண்டாம். மிருதங்கமும் வயலினும்தான் பத்து நிமிடத்துக்கு என்ன கேக்கப்போறா? நானே கேக்கறேன் கவலப்படாதே! tape போட்டு ஆடிப்பழகு வர்ணத்தை. பத்து நிமிடத்துக்கு ஆறாப்போல வர்ணத்தைப் பிரிச்சு வேரொரு tapeலே பதிவு பண்ணு. சாயங்காலமா இங்க வா, அதை நான் பாட ப்ராக்டீஸ் செய்யலாம்."

மாலையில் குருவுடன் பயிற்சி; மறுநாளும் கூட.

அடுத்த நாள் காலை அலங்காரம் எல்லாம் வீட்டிலேயே முடித்துக் கொண்டு பெரிய ஷால் கொண்டு உடல் போர்த்தி ஆட்டோ வில் குருவீடு சென்று அவருடன் பக்கவாத்தியக் காரர்களை அழைக்கப் போனோம்.
இருவரும் தாங்கள் வேலை செய்யும் இடமான "க்ஷேத்திரா' போய்விட்டிருந்தனர் விடுமுறை எடுக்காமல். கலங்கிய மனதுடன் அவர்கள் பணிபுரியும் இடம் சென்றோம்.
"என்னம்மா உங்க ஆன்டீதானே பெரிய பொசிஷன் இங்க? இங்க எங்களுக்கெல்லாம் லீவு வாங்கி வைக்க வேண்டாமா? ஒண்ணும் சொல்லாம நாங்க எப்படி வரது? பிரின்ஸிபால் லீவு தரமாட்டேன்னுட்டார். உனக்கு வேணும்னா நீதானெ முன்கூட்டிக் கேட்டு வைக்கணும்??
" என்ன ஆன்டி இது?" நான்.
" பேசாம வா மூணு நாள் நடக்கற இன்டர்வ்யூ எல்லாருக்கும் live musicனா ஏதாவது மிருதங்கத்தைத் தயார் பண்ணிக்கலாம், இந்த வர்ணம் தெரிஞ்சவா நெறயப்பேர் இருப்பா. வயலின்காரா எப்படியும் சமாளிச்சுபா. பத்து நிமிஷம் தானே? போகலாம் வா, நேரமாயிடும்"
" வேண்டாம் ஆன்டி! இத்தனை கஷ்டப்பட்டு இன்டெர்வ்யூ போனால் கிடைக்கும்கறது என்ன நிச்சயம்?"
"கிடைக்காதுன்னு என்ன நிச்சயம்? இதுலே தேறினா நாளைக்கு டில்லிலே ஆடலாம் அதெ நெனைச்சுப்பார்! போகலாம் வா."
நான் உதிர்ந்த மணலாய் சிரிக்கிறேன்; இவர்களோ என்னை ஈர மணலாக்கிக் கட்டிவைக்கின்றனர்.

நிலயத்துக்குள் சென்றதும் அங்கிங்கென எங்கெங்கும் நாட்டிய உடையில் பலரும் அவர்களுடன் வந்தவரும், மிருதங்கமும், வயலினும், வீணையும், ஒப்பனை சாதனங்களும், தன் நம்பிக்கைகளும், நிராசைகளும், எதிர்பார்ப்புக்களும், மிகச் சாதாரண உடைகளும், ஆகக்கூடிய விலைகளில் நகைகளும், ஆட்டோ க்களும், கார்களும், ஸ்கூட்டர்களும் நிறைந்திருந்தன.

அதற்குள்ளாகவே என் குரு யாருக்கு என்னென்ன நேரம், அதில் மிருதங்கம் வாசிப்பவர் தனக்கு முன்பே தெரிந்தவர் யார் என்று தேட ஆரம்பித்து விட்டிருந்தார். கண்டுபிடித்தும் விட்டார். "ரூபமு ஜூசி" வர்ணம்தான் தெரியும்தானே? இவளுக்குத்தான் என்னோட சிஷ்யை. நன்னா ஆடுவா, இதோ பாரு பொண்ணே இவர்தான் மிருதங்கக் காரர் , அவர் வயலினுக்கு; கொஞ்சம் பாத்துக்கலாமா? எதிலே ஆரம்பிச்சு எதிலே முடிக்கப்போறே? ஜதி, கோர்வை எல்லாமா ஒருதடவ சொல்லிக் காட்டிடு. இந்த ஓரமாப் போலாம் வா," எங்கெங்கும் தட்டுக்கழி, சலங்கைஒலி, அல்லது சப்தம். அனைத்திலிருந்தும் என் ஒலி என் சலங்கை என் தட்டுக்கழி என் மிருதங்கம் எனப் பகிர்ந்து மற்ற ஒலிகளிலிருந்து என்னை உரைபோட்டு தனித்தெடுத்து ஆடத் தொடங்கினேன்.

உள் நுழைதலுக்கான பத்து நிமிடமும் வந்தது. அத்தனை சப்தத்திலிருந்தும் எங்களைப் பிரித்தெடுத்த அடுத்தடுத்த கனமான கதவுகளைத் தள்ளித் தள்ளி நாங்கள் உள் நுழைந்தோம். நேர்காணலுக்கு அழைத்திருந்த பொறுப்பாளரும் நடனமணியின் திறமையை அறிந்தறியும் நேர்த்தியாளர். பாசாங்கு அற்றவர். தளத்தில் படம் பிடிக்கும் கேமராக்கள் அசையாது ஸ்திரம் கொண்டு நின்றுகொண்டிருந்தன.ஒளி உமிழ் பல்புகளும் ஆடும் சதுரத்துக்கும் ஆடுபவரின் உடலுக்கும் ஏற்றார்போல தயார் நிலையில் இருந்தன. தம்பூரா ஸ்ருதிமட்டும் சற்றே மாற்றி அமைக்கப் பட்டது. பின் நடனம் ஆடுபவரின் உயரத்துக்குத் தக்கவாறு ஒளியும் சற்றே கீழிறக்கப்பட்டது. நிகழ்ச்சி அமைப்பாளரின் காது மாட்டிகளில் கிடைத்த உத்தரவுப்படி நான் ஆடத் தொடங்கினேன். அறையின் வேறு ஏதோ ஒரு மூலையில் கண்ணாடிக்கு அப்பால் அரூபிகளாக மிதந்தபடி நடுவர்கள் அசிரீரியாக குரல் ஒலித்துக் கொண்டிருந்தார்கள்.

பத்து நிமிடம் முடியும் முன்னதாகவே ஆட்டம் நிறுத்தப் பட்டுவிட்டது. ஒளிநாடாவில் என் பெயர் எழுதப்பட்டு ஒரு பெட்டியில் அடைக்கப் பட்டது, ரத்தப் பரிசோதனை மாதிரி. இங்கும் சிலர் ஒலி நாடாவின் துணயுடன் ஆடப் பதட்டம் இன்றிக் காத்திருந்தனர்.

வெளியே வந்தோம். வாசலில் வாயிகாப்போனிடம் கையொப்பம் இட்டுவிட்டு வெளியேறினோம். பணத்தை மிருதங்கம் வாசித்தவருக்கும் வயலின் காரருக்கும் கொடுத்தோம். மிருதங்கம் வாசித்தவர் முகத்தில் கடும் கோபம்.

" என்ன? முழுக் கச்சேரிக்கான பணம்னா தரணும், இது என்ன பிசாத்து?"

"பத்து நிமிடம்தானே இன்டெர்வியூ."

இதற்குள் பேசியபடியே தெருவுக்கு வந்துவிட்டிருந்தோம். கடும் வெயில் கொளுத்தியது.

" பத்து நிமிஷம் நீங்க ஆடினா அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்? இதோ இங்கே ஆடுங்கோ மீதிக்கும் வாசிச்சுட்டு பணம் வாங்கிக்கிறேன். நான் வாசிக்கமாட்டேன்னா சொல்றேன் ஆடறியா பொண்ணே?" தெருவோர சாக்கடையை மூடியிருந்த சிமென்ட் தளத்தைக் காட்டிக் கேட்டார் வித்வான். என்ன செய்வது ? எங்கே பணம்? குருவின் கை என்னை இறுக்கமாகப் பற்றியது. அவரின் பர்ஸ் திறக்கப்பட்டு இருவருக்கும் முழுத் தொகையும் கொடுக்கப்பட்டது. அவர்கள் வீடு செல்ல ஆட்டோ வும் பிடித்து அதற்கும் உரிய தொகை கொடுக்கப்பட்டது.

இந்தச் சாக்கடையுடன் நான் என்னைக் கரைத்துக் கொள்ளலாமா? அல்லது பூமி பிளந்து உட்புகலாமா? இல்லவிட்டால் என் ஆசையை கால் சலங்கையை இந்த வாசலில் புதைத்துச் செல்லலாமா?

நடனம் கற்பித்து அதன் மூலம் பணம் ஈட்டத் தொடங்கினால் என்னை இன்னமும் தகுதியாக்கிக் கொள்ளும் நிலையிலிருந்து மனம் பணம் நோக்கி செல்ல ஆரம்பித்துவிடும் என்றும் சொல்லித்தர இன்னமும் நான் வெகுதூரம் பயணப்படவேண்டும் என்றும் என்னுள் கட்டிவைத்திருந்த கட்டுகளை உடைத்தெறிந்தேன். எனது நாட்டிய ஆசைகளுக்கு இன்னமும் பெற்றோரின் ஆகுதி, அதில் என் சுய முன்னேற்றம், மிகத் தகுதியற்றது என்று எனது உயிரில் சுளீரென அடிக்க நானும் தட்டுக் கழியைக் கையில் எடுத்தேன்.

தகுதி மேலாக்கம் தானே வரட்டும் வரும்போது!