Wednesday, December 9, 2009

முன்னுரை

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் சிந்தித்தல்தானே--திருமந்திரம்.

குருவின் மேன்மையை திருமூலர் மிகவும் அழகாக, மிகவும் தெளிவாக, மிகவும் எளிமையாக எடுத்துரைத்துள்ளார். மாதா, பிதா, குரு, தெய்வமென்பது எல்லோருமே அறிந்த கூற்று. இதை அவரவர்களின் புரிதல் மூலம் தெளிவுரை கூறியும், கண்டடைந்தும் வருகின்றனர். பிறப்பு என்பதோ, தாய் தந்தையர் யார் என்பதோ பிறக்கும் யாராலும் தீர்மானிக்க முடியாதது. பிறப்பும் இறப்பும் நமது கட்டுக்குள் நிலைப்பது இல்லை. எனவே, பிறக்கும் ஒரு ஜீவன் முதன்முதலில் சில நாட்களுக்குள் அறிந்து கொள்வது தனக்குப் பாலூட்டி, ஊன் வளர்க்கும் தாயையே. அவளின் மொழிதலின் மூலமாகவே தந்தையின் அறிமுகம் கிடைக்கிறது. உயிரின் வளர்ச்சிக்குத் தாய் தந்தையரின் பங்கு பெரியது. ஆனால் அறிவின் வளர்ச்சிக்கு குருவின் பங்கு அளவுகடந்தது. ஆரம்பப் பாடத்திற்கான, கல்விக்கான, புரிதலுக்கான குரு தந்தையால் சுட்டிக் காட்டப்படுவது என்பது என்னவோ உண்மைதான். ஆனால், தாய், தந்தை வழி பிறெப்பெடுத்தாலும் கூட மனிதனின் வாழ்க்கைப் பாதை அவன் வளர்ந்த பின் தனித்தனியாக மாறிப் போகிறது. தாய் தந்தையால் உரு கொண்டாலும்கூட ஜீவன் தனக்கான தனிவழி கொண்டது. உருவம் ஒற்றுமை கொண்டிருக்கலாம். ஆனால், எண்ணமும் ஒன்றே போல இயங்குதல் இயலாது. எல்லாப் பிள்ளை களும் தாய் தந்தையரின் வழி காட்டுதலில் தமக்கான பாதையைத் தேர்ந் தெடுத்து அதில் பயணித்து வாழ்கின்றனர்.

மனிதன் வாழ்க்கையில் தான்சார்ந்திருக்கும் துறையில் உள்ளவர்களுடன் தன்னை இணைத்துக் கொள்வதும், அதில் ஏற்றமும், மாற்றமும் பெருவதும், தனி லட்சியத்தை அடைவதும், எண்ணமும், செயலும், தான்சார்ந்த, தன் துறை சார்ந்த இயங்குதலில் வாழ்க்கை கழிகிறது. தனது லட்சியத்தை அடையப் பெரும் துணையாய் இருப்பவர் குருவே. தாய், தந்தையரை நாம் தேர்ந்தெடுக்க இயலாது என்று முன்னமே சொன்னோம். னால் குரு சிஷ்யனைக் கண்டுணர்வதும், சிஷ்யன் குருவைத் தேடித்தேடி அலைவதும் அந்த உறவின் ரகசியம். தேடி அலைந்த குரு தனது சீடனை விருப்பப் பாதையில் முன்னேற்றி, அவன் தன் லட்சியத்தை அடைய ஒரு பாதையாய் நிற்கிறார். குருவின் வழிகாட்டலின் மூலமே எந்தத் துறையில் இயங்கும் மனிதனும் மேன்மை அடைய முடியும். மனித மேன்மை, ஒவ்வொரு மனிதனும் மனிதன் என்ற நிலையிலிருந்து மேம்பட்டு, கடவுளைக் கண்டடைய, அல்லது மனித நிலையிலிருந்து மேம்பட்டுத் தன்நிலை உணர்தல் என்பதாகத் தான் அமையும். எல்லாவகைப் பாதைக்கும் அவரவர் வாழ்க்கைத் துறை சார்ந்த ஆசிரியர் அமைவதும், அதற்கான கதவு திறத்தலும் உலகில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. எனவே, வாழ்க்கை தேர்ந்தெடுக்கும் துறை சார்ந்த மற்றவர்களுடன் பயணிப்பதாகவே இருக்கும். ஒரு பழ வியாபாரி, தனது அறிவையும், உறவையும் பழ வியாபாரியுடன் இணைத்துக் கொள்கிறார். வளர்கிறார். ஒரு விஞ்ஞானி தனது துறைசார்ந்த விஞ்ஞானியுடன் பயணிப்பார்.

இந்த நூல் இசைத்துறை சார்ந்தது. எனவே சம்பவங்கள், தகவல்கள், பயணங்கள் இசைத்துறை சார்ந்த ஒரு கொத்துப் பூக்கள் போலக் காட்சி அளிக்கும். இசைப் பயண வழ்க்கை வரலாறுகளாவே இவை அமைந்திருக் கின்றன. இசை, அதன் நுணுக்கம் என்று 'தியரி' எனப்படும் விளக்கம் சார்பாக சிறிதும், குரு-சிஷ்ய உறவு, அதனதன் மேம்பட்ட நிலை, குருவே பெற்றோராக மாறும் மாயம், பெற்றோரே குருவாகும் நிலை என்று அவரவர் வாழ்வின் உணர்வு நிலைகளைச் சொல்வதே "குருவே சரணம்" நூல்.

தற்காலத்தில் எந்தத் துறைக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் குரு சிஷ்ய உறவு இசைத் துறையில் அருகிவிட்டது என்றே சொல்லலாம். காரணம், கலையை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டு பயணம் செய்த, அதையே மூச்சாகக் கொண்ட, இந்த புத்தகத்தில் உள்ளவர்கள் போன்ற வாழ்க்கை தற்காலத்தில் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. காலம் வேக வேகமாக ஓடிக் கொண்டே இருக்கிறது. கல்வி அறிவு பெறாத வாழ்க்கை பயத்தைக் கொடுக்கிறது. கலையையே வாழ்க்கையாகக் கொள்ள மிகவும் போராட வேண்டி வருகிறது. உண்மை வைரங்களை விடவும், செயற்கைக் கற்கள் மின் வெளிச்சத்தில், இரவில், சூர்ய வெளிச்சத்தில் பகலில் கூடுதல் வர்ண ஜாலங்களுடன் பிரகாசித்து மயங்கச் செய்கிறது. உண்மையின் ஒளியை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. இறுதியில் வெற்றியடையும் உண்மைக் காக மனிதன் தன் வாழ்வில் பல சோதனைகளைக் கடக்க நேரிடுகிறது. உடன் பயணிப்பவர் அதிக தூரத்தையும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்ற பட்டத்தையும் கூடப் பெற்றுவிடுகிறார்.

இத்தொகுப்பில் இசை சார்ந்த அக்கால சாதனை, சோதனை என்பதாக பேசப் பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆசான் களுமே சங்கீதத்துறையில் உன்னமாக மிளிர்ந்தவர்கள். மறைந்து விட்டவர்கள். இசைக்கு உயிர் கொடுத்தவர்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட பாணி, இசைப் பாதை இன்னமும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் உன்னதப் பாதை. வாழையடி வாழையாக வளர்ந்து வரும் பாதை. இந்தத் தொகுப்பில் தனது குரு பற்றிக் கூறியிருக்கும் சங்கீத வித்வான்களும் மிகுந்த மேன்மை கொண்டிருப்பவர்கள். குருவின் வழிகாட்டுதலுடன் சங்கீதத்தையும், தன்னையும் வளர்த்திக்கொண்டு மேம்பட்டவர்கள். உயர்ந்த இடத்தை அடைந்தவர்கள். குருவின் பாதையில் தன்னை இணைத்துக்கொண்டு சங்கீதத் துறைக்கு பெரும் பங்காற்றியவர்கள். மேன்மேலும் சங்கீதத்தில் தனக்கான வழியைக் கண்டடையக் கடுமையாக உழைத்தவர்கள். வாழ்வின் சோதனைகளைத் தாங்கிக் கடந்தவர்கள். இந்த நூலில் குரு சிஷ்ய உறவைச் சொல்லும் வித்வான்கள், இவர்களின் வழிகாட்டுதலில் தாமே குருவாகி நின்று பலருக்கும் சங்கீதத்தில் தெளிவையும் வழிகாட்டுதலையும் வழங்கியவர்கள், சிஷ்யர்களை இத்துறையில் சாதிக்க வைத்தவர்கள். இது ஒரு முதல் முயற்சி. இது தொடரும் முயற்சியுமாகும். ஒரு சில வித்வான்களை மட்டுமே இத்தொகுப்பில் இடம் பெறச்செய்ய முடிந்தது. அடுத்து, அடுத்து இன்னமும் பல புத்தகங்கள் இப் பாதையில் வர உள்ளன.

தொகுப்பு என்று இணைக்கும் போது வரும் சில நெருக்கடிகள் இங்கும் ஏற்பட்டன. பேட்டியில் அன்று இடம்பெற்ற சில வித்வான்கள் இன்று நூலைத் தொகுக்கும் போது நம்மிடையே இல்லை. முதலில் அவர்களைத் தொகுப்பில் இணப்பதா, வேண்டாமா என்ற வினா எங்களுக்குள் எழுந்தது. அவர்களையும் இணைக்கத்தான் வேண்டுமென்பதில் நான் பிடிவாதமாக இருந்தேன். அவர்களின் பாதையும் உண்மைகளைக் கொண்டது. எனவே அதன் தனித் தன்மையும் தொகுப்பில் இடம் பெறச்செய்ய வேண்டும். தொகுப்பு என்று வரும்போது இவைகள் எல்லாம் நேரும்தான்.

குரு சிஷ்யர் புகைப்படம் இணத்து வெளியிடவேண்டும் என்று விரும்பினோம். இன்றுவரை அதற்கான வேலை செய்து கொண்டிருக்கிறேன். கிடைத்தவரை பதிவு செய்துள்ளேன்.

சங்கீதத்துறை சார்ந்த வித்வான்களிடம் ஏறக்குறைய ஒரே மாதிரியான கேள்விகள்தான் முன் வைக்கப்பட்டன. அவை அவர்களின் வாழ்க்கைப் பதிவு போல, வாழ்க்கை வரலாறு போலப் பதிவாகியிருக்கிறது. தொழில் நுணுக்கக் கேள்விகளாக மட்டும் முன் வைக்கப்படவில்லை. இசையையும், உணர்வு களையும் சார்ந்த கேள்விகளாக அவை அமைக்கப்பட்டன.
அக் கேள்விகள் பின் வருமாறு:

1. வித்வான்களின் பிறப்பு, பெற்றோர்கள் இசைச்சுழல்
2. முதல் குரு, இசை ரம்பம்.
3. குருகுல வாசம், அதில் அவர்களின் குருவைப்பற்றிய பதிவு, மறக்க முடியாத சம்பவங்கள்.
4. முதல் கச்சேரி, தொடர் கச்சேரி
5. கச்சேரிகளில் மறக்க முடியாத சம்பவம் (உள்ளூர் மற்றும் சபாக்கள்)
6. வெளிநாட்டு அனுபவம், ஒலிப்பதிவு; குறுந்தகடுப் பதிவுகள், வானொலி நிகழ்ச்சிகள்.
7. இவர்கள் வளர்ந்தடைந்த நிலை, இவர்களின் வழிகாட்டுதலில் மேம்பட்ட மாணாக்கர்கள், அதன் பதிவு
8. மடங்களுடன், அரசர்களுடன் இவர்களின் தொடர்பு, மற்றும் அது சார்ந்த பதிவுகள்.

ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட பேட்டி இவை. என்னிடம் வந்து சேர்ந்தே இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. நான் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி, எழுத்து வடிவம் கொடுத்து, தட்டச்சும் செய்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இது புத்தகமாக வரவேண்டும் என்று பெரிதும் விரும்பினேன். எல்லா வித்வான்களின் பேட்டியுமே நான் எழுத்தாக மாற்றும் போது அது பேச்சின் பாதையில் திசை மாறி மாறி எங்கெங்கோ பயணித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். நீளம் கருதிச் சிலவற்றை நீக்க வேண்டி வந்தது. மேலும், அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லும் வார்த்தைகளை நாம் அப்படியே பதிவும் செய்ய இயலாது. யாருடைய மனமும் புண்பட்டுவிடக் கூடாது. யாருடைய பேட்டியையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. வாழ்வின் அழகு வெளிப்படும் விதமாகவும் இதை உருவாக்க வேண்டும். முன் பின்னாக சொல்லிய சம்பவங்களை நான் முடிந்த வரை கேள்விகளின் அருகாமையில் இருக்கும் படி ஒன்று திரட்டி எழுதி உள்ளேன். வித்வான்கள் கூறாத ஒற்றைச் சொல் கூட இத்தொகுப்பில் கிடையாது. ஒலிப் பதிவு நாடாக்கள் எங்கள் வசம் உள்ளன. பேட்டியின் இறுதியில் அவர்களின் பேச்சிலிருந்தே எடுத்த சில வார்த்தைகள் வாழ்க்கையின் நீதிகளைச் சொல்வதைப் போலவோ, சங்கீதத்தை இன்னமும் உன்னதத்தை நோக்கி எடுத்துச் செல்ல தூண்டும் வாக்கியங்களாகவோ வடிவமைத்திருக்கிறேன். அடுத்த தலைமுறைக்கு அவர்களின் வழிகாட்டுதலும் இறுதி வார்த்தைகளாக அமைந்திருக்கலாம். தம் பதிவில் சிலர் அதிகம் கூறியிருக்கிறார்கள், சிலர் குறைவாகக் கூறியிருக்கிறார்கள். அது அவரவர்களின் பேச்சுப் பாணியை பொறுத்ததே தவிர, வேறு ஏதுமல்ல.

தனது குருவைப் பற்றிப் பேசிய அனைத்து வித்வான்களும் நெகிழ்ந்து, மகிழ்ந்து கூறியிருக்கிறார்கள். அவர்களின் உரலில் அவர்களின் குரு பக்தி துல்லியமாக வெளிப்படுகிறது. தனது கலைத்தரு குருவால்தான் முளைத்தது என்றும் அவரிட்ட பிச்சைதான் தனது இசை என்றும் அனைவருமே கூறியிருக்கின்றனர். குரு-சிஷ்ய உறவு பெற்றோரின் நிலையைவிட உயர்ந்தது என்பது ஒவ்வொருவரின் கூற்றும் நமக்கு எடுத்து உரைக்கிறது.

இதில் பதிவாகியுள்ள அனைத்து வித்வான்களும் மிகப் பெரிய அந்தஸ்தும், புகழும், பெருமையும் பல பட்டங்களும் கொண்டவர்கள். அனைவரும் மனமுவந்து அளித்த பேட்டிகளை எழுத்துருவாக்கியதை எனக்குக் கிடத்த பெரும்பேறாகக் கருதுகிறேன்.

இவ்வளவு பேரும், புகழும், வித்வத்தும் உள்ள இவர்களை பொருளடக்க வரிசையில் எப்படி பட்டியலிடுவது என்பது எனக்கும், திருமதி. சூடாமணி பாஷ்யம் திரு. பாஷ்யம் அவர்களுக்கும் குழப்பமாகவே இருந்தது. எனவே என் புத்திக்கு எட்டியபடி அவரவர்களின் பெயரின் ஆங்கில முதலெழுத்தைக் கொண்டு வரிசைப்படுத்துவது எனத் தீர்மானித்தோம்.. வயதில் மூத்தவர்கள் அவர்களைவிட ஓரிரு வயது குறைந்தவர்கள் என வரிசைப் படுத்தும்போதும் கூட சிலர் ஒரே வயதுடையவர்களாகவும் இருக்கிறார்கள். எனவேதான் ஆங்கில எழுத்து வரிசையை பயன் படுத்தினேன். இது வெறும் 1, 2 என்ற எண்ணிக்கை மட்டுமே என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத் தொகுப்பில், வாய்ப்பாட்டு மற்றும் இசைக் கருவிகள் ஒருங்கிணந்து பேட்டிகள் இடம்பெற்றுள்ளன

தற்காலத்தில், குரு சிஷ்ய உறவு இன்னமும் சிலருக்கு வாய்க்கப் பெற்றிருந்தாலும் கூட, மெல்ல மெல்ல மறைந்து கொண்டே வருகிறது என்பதை நாமனைவரும் அறிவோம். அது சார்ந்த என் எண்ணத்தையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இசையின்மீதான வெறி, அதன் மீதான தீராத தாகம் தற்காலத்தில் கலை கற்போரிடம் குறைந்து கொண்டேதான் போயிருக்கிறது. இது இசைக்கு மட்டும் வந்தது என்று கூற முடியாது. எல்லாக் கலைகளிலும் இதுதான் இன்றைய நிலை. காரணம் கற்போரின் எதிர் பார்ப்பும் அவர்தம் பெற்றோரின் எதிர்பார்ப்பும். எனவே இயல்பான வளர்ச்சிக்கு இடம் கொடுக்காமல், ரசாயன உரமிட்டு வளரும் செடிபோல பெரிய பலன்களைத் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது. அதுவே வேகமான வளர்ச்சிக்கும், அதன்பின், அதனினும் அதிவேகமான மறைவிற்கும் காரணமாகிறது. பெற்றோர்கள் தன் பிள்ளைகளின் குருவை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். பிள்ளைகளை ஒரு ரேஸ் குதிரையைப் போன்று தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதனால் பிள்ளைகள் குழப்பத்திற்குள்ளாகின்றனர். நெருக்கடி அதிகமாகும்போது அவர்கள் கலையிலிருந்து விலகவும் துவங்குகிறார்கள். எனவே கற்கும் பிள்ளைகள் ஒரு நீண்ட பருவம் கூட ஒரே குருவிடம்பயிலுவதில்லை. கற்கும் போதே பள்ளிப் போட்டி, கல்லூரிப் போட்டிகளில் முதலிடம் பெறத் தயார் செய்ய எண்ணுகிறார்கள். தவிரவும், புகழ் பெற்ற கலைஞர்களிடம் தங்கள் பிள்ளைகளை விட்டவுடன் பிளாட்டிங் பேப்பர் போல கலையை உறிஞ்சிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறர்கள். நம்புகிறார்கள். புகழ் பெறுவதற்கு முன்னான அவர்களின் உழைப்பு இவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறது. புகழ் பெற்றவர்களின் சீடர்கள் என்று சொல்லிக் கொண்டு பெயரைப் பயன் படுத்தி நிறைய நிகழ்ச்சிகள் அளிக்கத் திட்டமிடுகிறார்கள். எல்லோரும் இது போல என்று ஒட்டுமொத்தமாகக் கூறக்கூடாது; கூறவும் முடியாது. அது பெரும் ஆறுதலைத் தருகிறது. ஆனாலும் கூட சிலரிதுபோன்ற வழியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்களே என்ற ஆதங்கத்தில் சொல்ல வேண்டியுள்ளது. நிகழ்ச்சிகள் பணம் கொடுத்து நிறைவேற்றிக் கொள்கிறார்கள். பணம் கொடுத்துப் பத்திரிகையில் அதுபற்றி விமர்சனம் வரச் செய்கிறார்கள். அந்தப் பதிவுகளை முதலீடாக்கி இன்னமும், இன்னமும் என முன்னேறப் பாடு படுகிறார்கள். இதனால், உண்மையான ஒரு சங்கீதக் கலைஞனின், போதிய பொருளாதார வசதியற்ற கலைஞனின் பயணம் பின் தங்க நேரிடுகிறது. அனால், இந்த மின்னல் சட்டென காணாமலும் போகும். இறுதியில் உண்மை வெல்கிறது. தாமதமானாலும் கூட.

கற்பிப்போரிடமும் சில நிலைகள் உள்ளன. அதைப் பற்றியும் சொல்லித்தான் ஆகவேண்டும். இதிலும் அனைவரும் என்ற பொத்தாம் பொது நிலை கிடையாது. எங்கோ சிலர். பல நல்ல உள்ளங் கொண்ட ஆசான் வசதியற்றவர்களுக்குத் தமது சொந்த செலவில் கற்றுக் கொடுத்து உண்மையை பிரகாசிக்கச் செய்கிறார்கள். சிலர் பணம் படைத்த வீட்டுப் பிள்ளைகளிடம் அதிக கவனம் செலுத்தும் நிலையும் உள்ளது. புகழ் பெற்ற பாதையில் இருக்கும் கலைஞர்கள் தாம் பெற்ற புகழையும், பொருளையும் அதன் பாதையையும் விருப்பமில்லாத் தமது பிள்ளைகளிடம் மடைமாற்றம் செய்கிறார்கள். முழுமையாக கற்றுத் தேறாமல் தான் கற்றுக்கொண்ட சிறிதளவான இசையை முதலீடாக்கி பலருக்கும் போதிக்கும் ஆசிரியராகவும் சிலர் மாறிவிடுகிறார்கள். இவர்களிடம் கற்கும் சீடர்கள் என்ன கற்றுக் கொள்ள இயலும்?

இன்றளவும் தெலுங்கு, சம்ஸ்கிருதம், கன்னடம், தமிழ் போன்ற மொழிகளில் இருக்கும் சாஹித்யங்கள் ஏராளம். அவற்றுக்கு இசை வடிவத்தையும் கொடுத்து, அதைத் தமதினிய குரலால் பாடிப் பரவச்செய்த வாக்கேயகாரர்கள் தற்போது இந்தியா முழுவதுமே குறையக் காரணம் என்ன? என்ற கேள்வியை வட இந்திய விமர்சகர் ஒருவர் கேட்ட போது பதிலளித்த ஒரு வித்வான் 'அந்தக் காலத்தில் சங்கீத வித்வான்களும், கவிஞர் களும், நாட்டிய மணிகளும் இணைந்து, சந்தித்துப் பேசி, தர்க்கம் செய்து புதுப்புது வடிவ முயற்சிகளில் ஈடுபட்டனர். அந்த கூட்டு முயற்சி இப்போது அருகி விட்டது' என்றார். மேலும், 'அரசவையில் அல்லது கலையை போஷிக்கும் இடங்களில் எல்லோருடைய கருத்துக்களும் பகிர்ந்து கொள்ளப் பட்டன. இப்போது இசை, ஓவியம், கவிதை, நாட்டியம் என எல்லாக் கலை வடிவங்களும் தனித்தனியாக இயங்கி வருகின்றன. வீரியம் மிக்க சொற்களைக் கொண்ட பொருள் தரும் பாடல்களும், அதை சபையில் வெளிக் கொண்டு வருவோரும் குறைவாகி விட்டனர்' என்று சொன்னார். 'அவர்கள் எழுதிய பாடல்கள் இன்றைக்கும் பொருத்தமாகவும் புதுமையாகவும் இருக்கிறன. இன்றளவும் அப்பாடல்கள் தானே அதிகம் பாடப்படுகின்றன?' என்றும் சொன்னார்.

இரண்டாண்டுகள் கழித்தாலும் இந்த இசைப்பயணத்தின் பதிவைப் புத்தகமாகப் போட முழு அனுமதி கொடுத்த பாஷ்யம் தம்பதியருக்கு நன்றி. அனைத்து சங்கீத வித்வான்களுக்கும் அவர்களின் குரலில் உணர்வு பொங்க சொல்லிய பதிவைக் கேட்கச் செய்ததற்கும் நன்றி. சந்தேகம் எழும் போதெல்லாம் அதற்கு விளக்கம் அளித்து தெளிவு பெறச் செய்த வித்வான்களுக்கு நன்றி. புகைப் படங்கள் அளித்ததற்கும் நன்றி. இந்தப் பதிவைப் புத்தகமாக்க எண்ணியவுடன் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சிக் துறையின் நினைவுதான் வந்தது. இது போன்ற நாட்டியம் சார்ந்த நூல்களுக்கும், ஆவணப்பதிவான நூல்களுக்கும் பொருளுதவி செய்து என்னை ஊக்குவிக்கும் தமிழ் வளர்ச்சித் துறைதான் இந்த நூலுக்கும் உதவி செய்திருக்கிறது. தமிழ் வளர்ச்சித் துறைக்கு என் மனமுவந்த நன்றி. எனது எல்லா முயற்சிகளுக்கும் எப்போதும் உறு துணையாய் நின்று ஊக்கம் அளிப்பவர் என் கணவர், ஓவியர் நாகராஜன்.

கிருஷாங்கினி
சானடோரியம்,சென்னை-47

பேட்டிகண்ட அனுபவம்-பாஷ்யம் தம்பதியர்

நாங்கள் நடத்திவரும் 'தாம்பரம் மியூசிக் கிளப்' இசைக்கானது. அதன் ஆண்டு விழாவிற்கு சென்னை வானொலியின் முன்னாள் இயக்குனர் திரு. விஜய திருவேங்கடம் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். 'தாம்பரம் மியூசிக் கிளப்' செயலாற்றிவரும் இசைப் பணியினை சிறப்பித்துப் பேசும் போது அவர் 'எனக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை உண்டு. சங்கீத வித்வான் களை -அதாவது மூத்த கலைஞர்களை குருவாகக் கொண்டு கற்று இன்று புகழ்பெற்றவர்- ஒரு நேர்காணல் செய்து அதில் அவர்களின் குரு பற்றிய தகவல்கள், குரு சிஷ்ய உறவுகள் போன்ற பல்வேறு சுவையான விஷயங் களை தொகுத்து ஒரு நூலாகக் கொண்டுவரவேண்டும். அது இசைத் துறைக்கு வரும் வருங்கால இளைஞர்களுக்கு மிகுந்த உபயோகமாக இருக்கும்.' என்று கூறினார்.

அது எங்கள் மனதில் இருந்துகொண்டே இருந்தது. நாம் ஏன் அந்த எண்ணத்தை முயற்சிக்கக்கூடாது என்று தோன்றியது. பின்னொரு நாள் திருவேங்கடம் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். எங்கள் சந்திப்பு அடிக்கடி நிகழும். சங்கீதம் பற்றிப் பேசுவோம். அன்று அவரிடம் நாங்கள், 'விழாவில் நீங்கள் தெரிவித்த உங்கள் ஆசையை நாங்கள் செயற்படுத்தலாமா? தவறாமல் கொண்டு வருவோம்.' என்றோம். அவர் உற்சாகமாக, 'ஓ! தாராளமாகக் கொண்டு வரலாம். அதற்கு என்னால் முடிந்த உதவிகளைக் கண்டிப்பாகச் செய்கிறேன். தொடங்குங்கள்' என்றார்.

நாங்கள் சங்கீதத் துறையில் அன்று புகழ் பெற்றிருந்த பெரிய வித்வான்களின் சிஷ்யர் இன்று புகழ்பெற்று மூத்த இசைக் கலைஞராக விளங்குபவர் என்று ஒரு பட்டியல் தயாரித்தோம். அதில் வாய்ப்பாட்டு, பக்க வாத்தியங்கள், நாதசுரம், வீணை என்பதாக பலரையும் தேர்ந்தெடுத்தோம். குழல்மேதை திரு. ரமணி எங்களது நெருங்கிய நண்பர். குருவாயூர் துரை, பி.எஸ்.நாரயண சாமி ரமணி மூவரும்தான் எங்களுக்குத் தூண்போல. 'தாம்பரம் மியூசிக் கிளப்' வளர அவர்கள்தான் ஊக்கமளிப்பவர், வழிகாட்டி. ரமணியும் இதை செய்ய உற்சாகப்படுத்தினார்.

நாங்கள் அவர்களிடம் நேர்காணலுக்கான ஒரு கேள்விப்பட்டியல் தயாரித்தோம். திருவேங்கடம்தான் அதைத் தயாரித்தார். அதில் தனது குரு பற்றி,குருவுடன் அவர்களுக்கு கிடைத்த அனுபவங்கள், கச்சேரிகளில் நிகழ்ந்த மறக்கமுடியாத சம்பவங்கள், காஞ்சி பெரியவாளுடன் நேர்ந்த இசை அனுபவமும் கிடைத்த ஆசிகளும் போன்ற விஷயங்களை அடக்கியதாக அது இருந்தது. (எங்களுக்கும் மஹா பெரியவரிடம் ஈடுபாடு அதிகம்) வித்வான் களிடம் தொடர்புகொண்டு அவர்களது விருப்பத்தை தெரிந்து கொண்டோம்.
அந்தக் கேள்விப்பட்டியலை எடுத்துக்கொண்டு நேர்காணலுக்கு ஒப்புக் கொண்ட வித்வான்களின் இல்லத்துக்கு சென்று பேட்டியெடுத்தோம். அதை ஒலிநாடாவில் பதிவுசெய்துகொண்டோம். வித்வான்களுக்கும் பேட்டி என்பது உவகைதந்ததாக அமைந்தது. அடுத்தது, உரையாடல் எழுத்து வடிவம் பெற வேண்டும். அந்தப் பணியை திருவேங்கடம் ஏற்றுக் கொண்டார். ஆனால், அவகாசமின்மையால் அவரால் ஈடுபடமுடிய வில்லை. அவ்விதமே இரண்டு ஆண்டுகள் கழிந்தன. எங்களுக்கும் வழியேதும் தெரியாமல் இருந்தோம். யாரைக் கொண்டு எழுதச் சொல்லலாம் என்பதும் தெரியவில்லை. நூல் கொண்டுவர ஆகும் செலவு பற்றியும் யோசித்து, குழம்பி திட்டத்தை அப்படியே வைத்துவிட்டோம். தற்செயலாக கிருஷாங்கினி, நாகராஜனிடம் இதுபற்றிச் சொல்லவும் அவர்கள் தாங்கள் செய்வதாக ஒப்புக்கொண்டு இன்று வாசகர் கையில் நூல் தவழச் செய்துள்ளார்கள். எங்களுக்கு நிரம்ப மகிழ்ச்சி.
வளரும் இளம் கலைஞர்களுக்கு பயனளிப்பதாக இந்நூல் இருக்கும் என்று நம்புகிறோம்.

பேட்டியளித்து மிகுந்த உற்சாகத்துடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து கலைஞர் பெருமக்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நூலைப் டிக்கும்போது மீண்டும் ஒருமுறை அவரருகில் அமர்ந்துகொண்டு கேட்பதுபோன்ற அனுபவம் கிட்டுகிறது. எழுத்து விடிவில் கொடுத்த கிருஷாங்கினிக்கு மிக்க நன்றி. தியாகப் பிரம்மத்தின் அனுக்கிரகமும் பெரியவாளின் ஆசியும்தான் இதற்குக் காரணம் என்று நாங்கள் முழுதாக நம்புகிறோம். இது ஒரு தொடக்கம்தான் என்றும் கருதுகிறோம். இன்னமும் பல மூத்த வித்வான்கள் உள்ளனர். அவர்களிடமிருந்தும் இம்மாதிரியான பேட்டியின் மூலம் அடுத்த நூல் கொணர வேண்டும்.

தாம்பரத்தில் ஒரு நல்ல சங்கீத சபை இல்லையே என்ற குறை எங்களுக்கு இருந்தது. நாராயணன் என்பவர் எங்களது நண்பர். அவர்தான் சபா தொடங்கும் ஆசையை எங்களிடம் உண்டாக்கினார் எனலாம். 'நாம் தாம்பரத்தில் ஒரு சங்கீத சபா தொடங்கலாமா? ஜெயகோபால் பள்ளி பொறுப்பாளர் திரு. நாராயணராவ் அவர்களை சீதாதேவி கரோடியா பள்ளி வளாகத்தில் இடம்கேட்டு அணுகலாம்.' என்று சொன்னார். அவ்விதமே நாங்கள் அவரை அணுகிக் கேட்கவும் மிகவும் பெருந்தன்மையுடன் சீதாதேவி கரோடியா பெண்கள் பள்ளியில் இடம் கொடுத்து உதவினார். இன்றுவரை அது தொடர்கிறது. அந்த முயற்சியே திருவினையாகி கடந்த பதின்நான்கு ஆண்டுகளாக 'தாம்பரம் மியூசிக் கிளப்' செயற்பட்டு வருகிறது. மாதம் ஒரு இசை நிகழ்ச்சி, டிசம்பரில் இசை விழா தியாகப் பிரம்மத்தின் ஆராதனை உற்சவம், வளரும் கலைஞருக்கான இசைப்போட்டிகள் என்று நடத்தி வருகிறோம். இசைக்கலைஞர்களுடன் நெருக்கமான உறவு தொடர்கிறது. நூலுக்கு அது மிகவும் உதவியது.

எங்களது எதிர்கால ஆசை மயிலையில் உள்ள சங்கீத வித்வத் சமாஜம் போலத் தாம்பரத்தில் தியாக பிரம்மத்துக்கு ஒரு கோவில் நிர்மாணிக்க வேண்டும். அதைப் பேராசை என்றுகூடச் சொல்லலாம். அந்த மண்டபத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும். கடவுள் சித்தம் எப்படியோ?

சூடாமணி பாஷ்யம் தம்பதியர்
தாம்பரம்
சென்னை

Saturday, September 5, 2009

திரவத்தினுள் திடமும், திடத்தினுள் திரவமும்


காலடியில் நானிருக்கும் பூமி, சற்றே குலுங்கியது.

முன்பெல்லாம், உடல் முழுதும் தரைமேல் பரவ பாம்பு போலக் கிடக்கும் பொழுது-தலை முதல் கால் வரை உடல் அழுந்தித் தரை கிடக்க- அதிகம் பரவிய உடலின் ஏதோ ஒரு பாகத்தில் (உற்றுக் கேட்டால்) உணருவேன், பூமியின் குலுக்கலை.

ஒளிப் பந்து அதி வேகம் கொண்டு சுழன்று கொண்டிருந்தது அன்று; இன்றும் கூட. எப்போதும் சுற்றிக் கொண்டு உள்ளது சூரியன்.

அன்றொரு நாள், பல கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள், ஒளிப்பந்தின் சிறு துளி உருண்டையை விட்டுச் சிதறி வெளியே விழுந்தது.
அதுவும் ஒரு ஒளித் துண்டாகவே இருந்திருக்கலாம். உருகி ஒழுகிய ஒரு துளி திரும்ப ஒடிக் கொள்ள இயலாமல், மேலிருந்து கீழிறங்கி தானும் தனியே உருளத் தொடங்கியது.

ஆனால், அதுவோ தனது உஷ்ணத்தைத் தக்க வைக்க இயலாமல் சற்றே குளிரத் தொடங்கியது. ஒளிப் பந்தின் விழும் துளியும் உருண்டைதானோ?
இரு பாதங்களின் அகலம் ஒரு சதுர அடி என சிறு சதுரம். முதலில் குளிரத் தொடங்கிய பகுதி உலகின் முதலில் கெட்டிப்பட்ட எனது நிலம்.
கழனியிலிருந்து வெட்டிப் பரத்திய களிமண்ணின் ஓரம்தானே முதலில் காயும்?

காய்ச்சிக் கொட்டிய இனிப்பின் சூடும் ஒரு மூலையில் முதலில் ஆறும்.
எனவே ஓர பூமியோ என் நிலம்? எனவேதான் எப்போதுமே என் பூமியில் நில அதிர்வு உணரப்படாத ஒன்றாகவே இருந்து வந்தது. சில நாட்களுக்கு முன் வரை, அனுபவம் அற்றுத் திரிந்தோம் நாங்கள்.

மெல்ல மெல்ல ஒளிப் பந்தின் ஒரு துளி மேற்பரப்புக் காய்ந்து கெட்டி பட்டது.

ஆனாலும், தன்னுள்ளே, வெகு உள்ளே இன்னமும் திரவமாகத்தான் தகித்துக்கொண்டு இருக்கிறது. அடுக்குப் பாறைகளும், கனிமப் பொருட்களும், கடலும் மணலும், மலையும் பள்ளமும், மேடும் கொண்டு, நதியும் நெருப்பும், மரமும் உயிரும் கொண்டு தன்னை நிறைத்துப் போர்த்தி நிற்கிறது பூமி.
சுழலும் பூமியில் நீர் சிதறாமல் நிற்கிறது கடலில். நதியோ எப்படி யெப்படியோ ஓடிக் கடலில் கலக்கிறது கதி மாறாமல். வேர்கள் பூமியில் பின்ன, கிடக்கும் தாவர உயிர்களும் பிடிப்பு மண்ணில் கொண்டு கட்டிக் கிடக்கின்றன தங்களை.

பூமி குலுங்கியது அப்போதெல்லாம் கற்பனையில்தான். எப்போதும் கற்பனைதான்.

உறக்கத்திலிருந்து எழுப்ப அப்பா தலையணிக்கடில் காலிட்டுக் குலுக்கும் போது தலை குலுங்குமே அது போன்றா? எப்போதேனும் துடிக்குமே என் உடலின் மேற்பரப்பு அது போன்றா? தோலின் மேற்பகுதியில், அடியிலிருந்து எதோ நெம்புவது போல் விட்டு விட்டு மேழும்பும். எப்பகுதியிலும், எந்த நேரமும். என் உடல் என்பதாயினும் அதன் கட்டுப்பாடு என் வசம் இல்லை.
இடது தோளும் கண்ணும் துடிப்பது பெண்ணுக்கு நல்லது. சகுனம் சொல்லும். 'எந்தன் இடது தோளும் கண்னும் துடிப்பதென்ன? இன்பம் வருகுதென்று சொல் சொல் சொல் கிளியே' பாட்டுப் பாடும்போது சரியா யிருக்கும். எழுதியதோவெனில் 'எந்தன் இடது தேளும் கண்ணும் துடிப்ப தென்ன, சொல் சொல் சொல் கிளியே' கால்களற்றும் முளைத்தும் என. வெகு நாட்கள் வரை கேலிக்கு ஆளான வரிகள்.

பூமி ஆணா, பெண்ணா? அதற்குத் துடிப்பு வலப்புறமா? இடப்புறமா? உருண்டைக்கு எது வலது, எது இடது? எது கிழக்கு, எது மேற்கு? என் வீட்டில் நின்றால் இடதும் வலதுமாக இருக்கும் வீடுகள், இன்னமும் சில அடிகள் நடந்து சாலை கடந்து நான் நின்றாலோ இடதும் வலதும் இடம் மாறிப் போகின்றன பிரதிபலிப்புப் போல்.

இடமும் வலமும், வடக்கும் தெற்கும் நிற்கும் இடத்திற்கும் கடக்கும் பகுதிக்குமாக மாற்றப்படுகின்றன. அல்ல. அவைகள் அங்குதான் இருக்கின்றன. நகருவது நானும் என் மனமும் ஏற்கனவே சொல்லப்பட்ட, உண்டாக்கப்பட்ட கணக்குகளும் மாத்திரமே.

தூரத்தில் ரயில் வரும் சமயம் நடை மேடைமெல்ல நடுங்கும், இலேசாக.
விரைவு வண்டிக்கு சிறிது அதிகம் அதிரும். அதுதான் குலுக்கலா?
"குலுக்கி அளடீ. தலை தட்டிப் போடாதே. தலை ரொப்பி அள. ஒரு குலுக்கலில் முக்கால் ஆகும்."

பூமி குலுங்கினால் எது, எதனுள் செல்லும்? பூமி ஏற்கனவே கெட்டிப் பட்ட பகுதிகள் கொண்டிருப்பது. மேலிருக்கும் வஸ்துக்கள் உள் நுழைய, உள்ளிருப்பவை வேறொரு பக்கம் வெளியேறி இடம் தரலாம். அல்லது அடுக்குகள் கலைக்கப்பட்டு உதிரி உதிரியாய் இடம் ஏற்படுத்தித் தரலாம்.
"போடீ, பைத்தியம். எப்ப பார்த்தாலும் எதயோ யொசிச்சுண்டு. எங்க ஊர்ல அடிக்கடி பூமி நடுங்கும். தூளி கொழந்தையோட ஆடும். பாத்திரம் விழும். சித்த நாழிக்கெல்லாம் சரியாயிடும். சீதாதேவிய, பூமி நடுங்கி உள் வாங்கிண்டு திரும்பவும் மூடினூடுத்து தெரியுமா? பூமி தெய்வம் டீ." தெய்வம் கொல்லுமா? பூகம்பத்தில் எத்தனை உயிர்கள் அழிகின்றன? தெய்வம் நின்று கொல்லும். குலுங்கியும் கொல்லும்.

காலடியில் ஒரு சதுர அடி பூமி குலுங்கியது. உணர்வதற்கு முன்பாக முதல் பதிவு எப்போது?

அடுக்ககத்தில் குடியிருந்த போது நாற்காலி ஆடியது. துணியில் இட்டு உடலை உருட்டுவது போல சிறிது அசைந்தது, ஆடாத நாற்காலி. சில நாட்கள் முன்பாகத்தான் குஜராத்தில் குலுக்கலையும், மற்ற உயிர்களின் குவியலான உயிரற்ற உடல்களையும், சிக்கி இருக்கும் உயிருள்ள உடல்களையும் கண்டேன் ஊடகங்களின் வாயிலாக.

உடன் எனது நாய் குட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு கீழிறங்கி ஓடினேன். யாரும் வெளியில் இல்லை. தொலைக்காட்சியில் அனைவரும் ஐக்கியம். நொடிகளில் தொலைக்காட்சியின் அடி வரிகளாக தமிழ் நாட்டில் சில பகுதிகளில் குலுக்கல் உணரப்பட்டதென்றவுடன் நிறைய முகங்கள், நிறைய குரல்கள், திறந்த வெளியில்.

திரும்பக் குலுங்கும். எதை எதை எடுப்பது? யார் உள்ளே போவது? போகும் போது குலுங்கி விட்டால்? எல்லோருக்கும் ஒரே பயம். பணக்காரன், ஏழை, மேல் சாதி, கீழ் சாதி, மதம் எல்லோருக்கும் ஓரே பயம். எல்லோரும் ஓர் இனம்.

தொலைபேசியிலும், கைப் பேசியிலும் உறவு நட்பு விசாரிப்புக்கள். தலை சுற்றியது. 'என்னை நீ தள்ளினாயா? என்ன என் கட்டுப்பாடற்று வாணலி அசைகிறது? எங்கே பாத்திரம்? எனக்கு என்ன ஆச்சு? உங்களுக்கு?'
குலுங்கிய அதிர்ச்சியில் எல்லோரும், எல்லோருடனும் பேசினார்கள் எதன் மூலமாவது. சில நொடிகள் திரும்பத் திரும்ப நினைவு கூறப்பட்டு பகிர்ந்து கொள்ளப்பட்டது.

நானும் உணர்ந்தேன். ரயிலின் தண்டவாள தட தடப்பு, விரைவு வண்டியின் அதிர்வு என எல்லாமே மேற்பரப்பில் மட்டுமே ஏற்படுவது என்பதை.
இந்த அதிர்வு உள்ளிருந்து. புறம் நோக்கி செலுத்தப்பட்டதாகத் தோன்றியது.
உள்ளே, இன்னமும் உள்ளே என்று பூமியின் நடுப்பகுதிலிருந்து எதோ பீரிட்டுக் கிளம்பியதோ?

"ஏண்டீ, வயத்திலே கொழந்தே வளையவருதா? அப்பப்போ கவனிச்சுக்கோ"
எந்த அசைவும் வெகு நாட்கள் வயிற்றுனுள் உணரப்படவில்லை. உயிரற்ற பிண்டமோ? எப்படித் துடிக்கும்? எப்படி? ஏறக்குறைய அசைவு பற்றி மறந்த நிலை. நிறையப் பேர்களுடன் உரையாடலும், பகிர்வுமாக இருந்த போது, சட்டென்று வயிற்றின் கீழ் பகுதிக்கும் சற்றே மேலே, மத்தியப் பகுதிக்கும் சற்றே இறக்கமாக வயிற்றினுள் நான் அறியாமல் சென்று விட்ட பல்லி பூச்சியைப் பிடித்து, அதைத் தரையில் தலையால் அடித்துக் கொல்வது போல் வயிற்றின் கோளத்தில் ஒரு அசைவு.

அசைவு உணரப்படும் முன்பாக முடிந்துவிட்டும் இருந்தது. அப்புறம் அடுத்த உணர்தலுக்காக நிறையக் காத்திருக்கவும் நேர்ந்தது.

இந்த உள் துடிப்பும் உடல் எனதாயினும், கட்டுப்பாடு எனதன்றி அதன் போக்கில். என் உடல் எனது மட்டுமே என்பது ஒரு ஜோடிக்கப்பட்ட பொய்யாய் உணர்ந்தேன். உடைமைகளும், கட்டுப்பாடுகளும், நடை பெற்றவை களும், நடைபெற இருப்பவைகளும் கூட பூமியின் மேற்பரப்பில் நீரைப் போன்று அதனதன் வழியில் தீர்மானிக்கப்பட்ட முன் பதிவின் வழியில் பயணம்.

தோலின் அடிப் பரப்பிலிருந்து மேல் தள்ளும் துடிப்புக்கும், உள்ளிருந்து வெளிக்கிளம்பும் துடிப்பிற்கும் வேறுபாடு அகப்பட்டது. தோலின் கீழ் அசைவு கண்ணுக்குப் புலனாகிறது. விரல் உணர்கிறது. சிறு பகுதியில் சிறு அசைவு.
வயிற்றினுள் அசைவு வேறு.

தரையின் மீது அழுந்திக் கிடந்தேன். தரை அசையாமல் கெட்டிப்பட்டுக் கிடந்தது. தரையில் கீழ் தளத்திலிருந்து ஒரு அதிர்வு. பூமியிடம் நான் கோபித்துக்கொண்டேன். இப்போதுதானே கெட்டியாய் இருந்தாய்? ஏன் கொழகொழத்தாய்? சமாதானம் அடைந்தேன். லாரியின் அதிர்வாயிருக்கும் என்று. சில மணிகளில் ஊடகங்களில் உலகத்தின் ஏதோ மூலையில் ஏற்பட்ட அதிர்வு பற்றிக் கூறப்பட்டது.

அதன் பிறகு நான் அடிக்கடி வெறும் தரையில் அழுந்திக் கிடப்பேன். பொறுக்குத்தட்டி மேல் பகுதி கெட்டிப் பட்டுப் போயிருந்த பூமியின் உட்புறம் அழுகத் தொடங்கி விட்டதோ, மிகவும் பழுத்த பழம் போல். அவ்வப்போது அதிர்வு செய்தியாய் வராமல் முன்னால் என்னால் உணரப் பட்டும், பின்னால் ஊடகங்களின் வாயிலாக அறியப்பட்டும் நிகழ்ந்தன. ஜப்பானில், ரஷ்யாவில், ரிக்டர் அளவில், உயிர் பலியில், முன்பான அளவுகளில், எத்தனை ஆண்டுகளுக்குப் பின் என்பது போன்ற எல்லாக் கணக்குகளும் எண்ணிக்கை முன் நோக்கியும் பின் இழுத்துமாக அங்கு இங்கு என கோடுகள் மேலேறி கீழிறங்கி ஒன்று இரண்டு என்ற எண்களாக வெளிப்பட்டன, மனித அறிவு மற்றும் விஞ்ஞானத்தின் மூலமாகவும்.

தரையில் அமிழ்ந்து கிடந்து பூமியுடன் உதடு பொறுத்தி பேசத்தொடங்கினேன். இன்னமும் எத்தனை உயிர்கள் உனக்குத் தேவை? நீ கெட்டியானதால்தானே நாங்கள் மேல் தங்கி உள்ளோம்? நீர் உன் மேல் அப்பிக் கொண்டு பயணம் செய்கிறது. அல்லது நிலையாய் நிற்கிறது. வேர்கள் பரத்தி மரங்களும் செடிகளும், அஸ்திவாரம் பரத்தி நாங்களும் மல்லாந்து கிடக்கிறோம்?

இந்த முறை மட்டும் மன்னித்துக் கொள். இன்னமும் குறைந்த பட்சம் ஒரு வாரம் எங்குமே குலுங்கமல் இருக்கிறேன். வாக்களிக்கிறேன். என்னிடம் சொன்னது பூமி. ஆனால், இதோ மனிதர்களைப் போல வாக்குத்தவறி ஒரு சதுர அடி நிலப்பரப்பில் என் உடலின் ஒரு பகுதி படர்ந்து கிடக்கும் காலடியில் பூமி குலுங்கியது. வாக்குத் தவறிய பூமியுடன் உதடு பொருத்தி உறவாட மனம் ஒப்பவில்லை. மறுபடியும் மன்னிக்கக் கேட்கும்.
நான் யாருடன் பகிர்ந்து கொள்வது இந்த பூமியின் அசைவை. நான் உணர்ந்ததை? இம்முறை சற்றே கூடுதல் நேரம் இடி முழக்கம் போல் உறுமி, உறுமி பொருமிக் கொண்டிருந்தது. முணுமுணுப்பாக இல்லாமல் உரத்த குரலில். நீண்ட அதிர்வு நீண்ட சேதம். அதிகம் அழிப்பு. எதைப் பிடித்திழுத்து நிறுத்த? எந்த முனையில் என் பூமியை நான் கட்டி வைக்க? நீரில் ஸ்திர மில்லா படகுக்கும், தோணிக்கும், கப்பலுக்கும் முளைகள் உண்டு, நிரந்தர கெட்டிப்பட்ட பூமியில். திரவம் நிலை அற்றது. நிரந்தரம் அற்றது. உருண்டோ டுவது. தங்காதது. எதையும் தன் மேல் தங்க விடாதது.

எனவேதான், பூமியை சாஸ்வதம் என்றெண்ணி நீரின் பிடியை இளக்கி நிலத்தில் பிடியை இறுக்கி வைக்கிறோம். மேற்பரப்பில் திரவம் தெரிகிறது தெளிவாய். ஆயின் அடிப்பரப்பு நெகிழ் மணலும் திரவ நெருப்பும் உணரப் படுவதே இல்லை, என்றென்றும்.

என்றாவது பீரிட்டு வெளியில் தெறித்து உயிர்கள் அழித்து, சாம்பலாக்கி, அனல் கக்கி தன் திரவம் வெளிப்படுத்தும் பூமி. ஆழத்தில் நீரையும் அடி ஆழத்தில் நெருப்பையும், அடுக்கிப் பிதுக்கிய மலைகளையும் கொண்டு உருண்டு கொண்டே இருக்கிறது பூமி.

மேலும் உள்ளும் கெட்டிப்பட்ட அறை சுவற்றில் உயிர் தரித்து, சுற்றிலும் நீருடன் நடுவில் திடமாய் உயிர் கொண்டு கோள வயிற்றினுள் உருண்டு கிடக்கிறது அசையும் உடல். எத்தனை உயிர்களை வாய் பிளந்து உள்வாங்கி முழுங்கிக் கிடக்கிறது கோள பூமி? யாறிவார்? எட்டாத தூரத்தில் எங்கோ ஓர் நாட்டில் குலுங்குகிறது பூமி.

உருண்டையான பந்தின் ஓர் புள்ளியில் ஏற்பட்ட அழுத்தம், அதன் சுற்றுப் பரப்பிலும் அதன் அழுத்தத்தின் அளவைக் கொண்டு விஸ்தீரணம் அடையும் என்ற விஞ்ஞான விளக்கத்தைக் கொடுக்கிறது வெகுதூர பூமிக்குலுக்கல் என் காலடியில் உணரப்பட்டு. ஊடகங்கள் உணர்த்தும் உன்பே அருகிலிருக்கும் சிலருக்கு உணர்த்த முற்படுகிறேன்.

எங்கு, ரிக்டர் அளவு என்ன, ஏதும் சொல்ல இயலாத ஓர் கணிப்பு நகைப்புக்கு ஆளாகிறது.யாரோ ஒருவருடனாவது சொல்லாமல் இருக்க இயலவில்லை. நம்பிக்கை மற்றவர்களுக்கு என் மீதும், எனக்கு பூமியின் மீதும் இல்லாமல் போயிற்று. நம்பிக்கை அற்ற பூமியுடன் எப்படி உரையாட இயலும்?
எப்படி உரையாடாமல் புறக்கணிக்க, எப்போதும் என்னுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் காலடி மண்ணை விட்டு?

என்றோ ஓர் நொடி அசைந்து உணர்த்திய வயிற்றுக் கரு அவ்வப்போது துடிக்கத் தொடங்கியது. சாப்பிடும் போதும் குளிக்கும் போதும், பஸ்ஸில், படுக்கையில் என் எந்த அசைவுகளியும் கணக்கில் கொள்ளாமல் தன் அசைவை நீருக்கு நடுவில் அடுத்து அடுத்து நிகழ்த்தத் தொடங்கியது. விருப்பம் இன்றியும், என் விருப்பமற்றும் என்னுடன் ஒட்டிக் கொண்டு என்னுள் உருவான அந்த நீருக்குள் மிதக்கும் அத்திடக் கோளம் மூழ்கி மூழ்கி மிதந்தது.

அண்டமும் உருண்டு அசைந்தது. உருண்டு கொண்டே அசைந்தது. பிண்டமோ ஓரிடத்தில் உருண்டு உருண்டு அசைந்தது. என் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத என்னுள் வளர் உயிரிடமும் உரையாடல் அற்றுப் போகாமல் தொடர்ந்து கொண்டே இருந்தது.

சிறு முட்டைகளோவெனில், உருளாமல் அசையாமல், திரவத்தின் நடுவில் தன்னுயிர் வளர்த்தது, அதன் துடிப்பை யாரும் அறியா வெளியில் கிடந்து. நீர் வற்றிப் போய் நீரும் உயிராக திரண்டு வெளிவந்தது யாருடனும் உரையாடாமல்.

இன்றோ பூமி என்னிடம் ஏதும் சொல்லவும் இல்லை. நானும் பேசவும் இல்லை.

கழுத்தை வயிற்றில் புதைத்துப் படுத்திருக்கும் மாட்டின் எந்த இடமும் தனித்தசையும் என் தொடுகையின் போதும், ஈயின் அமர்தலின் போதும். சுழிப்பு ஆங்காங்கே என்றாலும் மாடு ஒன்றுதானே.

பூமி சுருண்டு இருக்க அவ்வப்போது சுழித்துக் கொள்கிறது. சுழிக்கும் புள்ளியிலிருந்து ஒரு நேர் கோடு, ஒரு கோடு எப்போதும் என் காலடி மண்ணையும் இணைக்கிறது, புள்ளியில் விரிவடையும் ஒளிக்கதிர் திசை எங்கும் கதிர் பரப்புதல் போன்று. ஏதோ ஒரு கோட்டில் என் காலடி மண். என்னுடலில் ஊசியிட்டு அக்கதிர்கள் ஊடுருவி, ஊடுருவி உட்புகுந்து வெளி வந்து கொண்டிருக்கிறது எப்போதும். என்னுடல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது, அதிர்ச்சி களையும் அதிர்வுகளையும் பதிவுகளையும்.

உரையாடிக் கொண்டிருந்த பூமியும் என்னை நிராகரித்தது ஒரு நாள்.
ஊசி குத்தி ஊடுருவும் கதிர்களும் என்னைப் புறந்தள்ளின. ஒரு சதுர அடி காலடி மண்ணும் ஏமாற்றிவிட்டது.

என்னை உடல் அழுத்தித் தரையில் கிடக்கும் நொடிகளில் ஒன்றேனும் உணர்த்தி இருக்கலாம். என்னை உருண்டு கொண்டிருக்கும் பூமி வெளித்தள்ளி விட்டது.

பேரோசை, பெரும் அமைதி. பெரும் அமைதி, பேரோசை. பெரும் வலி, நினைவிழத்தல். பெரு நோய் வலியற்றது. பெரும் நம்பிக்கை மரணம். என்னை மற்றொரு மூலைக்குள் மூளையற்று அடைத்து விடுகின்றன இன்றைய நிகழ்வுகள்.

ஏதும் பதிவாகாமல் அலைந்து கொண்டிருந்தேன் பஸ்ஸிலும் ரயிலிலும். ரயிலில் பூமி உள்ளே, ஸ்திரமில்லாச் சக்கரத்தின் துணையில் பூமியை விட்டு அரையடி உயரத்தில் ஸ்திரமாக உட்கார்ந்து பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். கண்ணில் தென்படும் பரந்த பூமி எங்கும் ஆங்காங்கே, அசையும் வண்ணப் புதர்களாய் மனிதர்கள். வண்ணம் மிக்க உடைக்குள் பொருந்தாத ஒரு ஓரங்களில், கால்களில் செருப்பற்று, பெண்கள் புதிய இடங்களின் பரிச்சயம் அற்று, அந்த உணர்வற்று விளையாடிக் கொண்டிருந்தன குழந்தைகள்.
எல்லோருடனும் பலவகை அளவிலான, சிறியது முதல் பெரியது வரை, துணியால் கட்டப்பட்ட மூட்டைகள். அனைவரும் எனோ தங்களுக்குள் உரையாடல் அற்று, அமைதியாயிருந்தனர்.

கூட்டம் சளசளப்புக்கானது, அலறலுக்கானது, உரத்த குரலில் விவாதத்திற் கானது, ஒருவர் கதறிக் கூற மற்றவர்கள் கேட்கும் மேடைக்கானது. எதிலும் சேர்க்க இயலாத அதிகம் பெண்களும் குழந்தைகளும், நெளிந்து கொண்டிருக்கும் தூரத்தில் கூட்டம், மழை பெய்து ஆங்காங்கே தங்கிய நீர்ப் பரப்பை ஒத்திருந்தது. பிரதிபலிப்பற்ற, சலனமற்ற மௌனமான வண்ண நீர்ப் பரப்பு.

எல்லோரிடமும் ஏதோ ஒரு பீதி. நிறைய பெண்கள். நிறைய குழந்தைகள். நிறைய பயம். நிறைய இழப்பு. நிறைய சோகம். நிறைய மரணம். நிறைய, நிறைய. மறு முறையும் நிகழும் எனத் தீர்மானம். ஆயினும் எல்லாவற்றிற்கும் ஏதும் செய்ய இயலாத செயலற்ற நிலை.

ரஷ்யாவில் பூகம்பம், ஜப்பானில் நில நடுக்கம். பாகிஸ்தானில் நொறுங்கிய கட்டிடங்களும் நிகழ்ந்த பூமி அதிர்வும் என எல்லாம், எல்லாம், எல்லாமே பதிவாகியது உடனுக்குடன் என் கால் மண்ணில். நான் வசிக்கும் நிலத்தில் என் சக உயிர்களின் ஒட்டு மொத்த மரணமும், கரை தாண்டி மேலேறி வந்த கடலலையோ, அதன் முன்பான கடலில் உள்வாங்கலோ, அதன் முன்னான நில அதிர்வோ, ஏதும் தெரியாமல் பயணித்துக் கொண்டிருந்தேன் நான் பஸ்ஸிலும், ரயிலிலும்.

Sunday, August 30, 2009

தெளிவு

தெளிவு

முதலில் நான் உணர்ந்தது என்னுடைய இடையில் மிகச் சிறிய ஒட்டுத் துணியுடன் மட்டுமே தார்ச்சாலையில் நடந்து கொண்டிருக்கிறேன். தார்ச் சாலையின் சூட்டில் கால்கள் சுடுகின்றன. சூட்டின் மீது கவனம் விழுந்தாலும், உடையற்று நான் திரிவது மேலோங்கி நிற்கிறது. சுற்றிலும் யாரும் என்னைக் கண்டு அதிர்ச்சி அடையவோ அல்லது உடை கொடுக்கவோ முற்படவில்லை. எல்லோரும் ஏதோ வேலைகளை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கின்றனர். தார்ச்சாலை சூட்டை எப்படித் தணிப்பது என்ற குழப்பம், சற்றே மணலில் மாற்றி நடந்தால் தீர்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் சாலையின் ஓரத்தில் சிதறிக் கிடக்கும் மணல் மீது வெற்றுக் கால்களைப் பதிய வைக்கிறேன். சூடு அதிகமாக உணர முடிகிறதே தவிரக் குறைய வில்லை. கால்களின் சூட்டையும் விட ஆடையற்ற அவமானம் மேலோங்கி நிற்கிறது. என் உடலை நானே உற்று நோக்குகிறேன். நான் எண்ணுவது போன்றற்று, வற்றிச் சுருங்கி, கருத்து, யாரோ போலத் தோற்றம் தந்து கொண்டிருக்கிறது. உறக்கத்திலிருந்து திடீரென விழித்தாற்போல உலகம் எனக்கு தோற்றம் தருகிறது. தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள் எனக்கு பரிச்சயமற்றுத் தெரிகின்றனர். நடுத்தர வயதுடையோர், முதியோர் யாருமே எனக்குத் தெரிந்தவர் இல்லை போலும். யாரையுமே அடையாளம் காண இயலாமல் திரிகிறேன். தலை மீது தன்னிச்சையாகக் கை விழுகிறது. அடர்ந்த நீண்ட கூந்தல், அதன் பெருமிதம் ஒருசேர என்னிடம் நிமிர்ந்து நிற்கும். தலையின் மீது வெற்றுத் தோல் மிதக்கிறது. வெற்று கால்கள், வெற்று உடம்பு, வெற்றுதலை.
சாலையோர மரங்களும், சில வீடுகளும் எனக்கு அடையாளமாகிறது. நடக்கும் தெரு பரிச்சயமாகிறது. அசையும் உயிர்களில் தெளிவற்ற நான், அசையா உயிர்களில் என்னையும் அவற்றையும் இணைத்து அடையாளம் காண்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக உறக்கத்திலிருந்தது, இப்போது விழித்ததற்கும் இடையிலான காலம் சரியாக கணக்கிடப்பட முடியவிலை என்றாலும், ஓரளவுக்கு புரியத் தொடங்குகிறது.

தலையில் முடியெல்லாம் புழுக்களாக மாறி என் உறக்க காலத்தில் என்னுடைய தலையை எப்போதும் துளைத்துக் கொண்டே இருந்தன. எனவே அவற்றை ஒவ்வொன்றாக பிடுங்கி எறிவேன். தரை புழுக்களால் நிரம்பத் துவங்கும். புழுக்கள் என்மீது மறுபடியும் ஏறி ஏறி திரும்பவும் தலையில் வந்து அமர முயல்கின்றன. தலையில் ஓட்டையிட்டு குத்திட்டு நிற்க ஆரம்பிக்கின்றன. புழுக்களைக் கண்ட காகங்கள் உற்சாகமாக தலையிலமர்ந்து கொத்தித்தின்ன ஆசை கொள்கின்றன. கையில் கோலுடன் காக்கைகளையும், புழுக்களையும் விரட்ட ஆரம்பித்தேன். தலையில் ஓயாத துளையிடும் சப்தத்தையும், துளையிடுவதால் உண்டாகும் வலியையும் எத்தனை நேரம் பொறுத்துக் கொண்டிருப்பது? உடையின் மீதாக ஏறிச்சென்று தலையை அடைய முயலும் புழுக்களுக்காக உடையை உதறி அவிழ்த்தெறிவேன். இலைகளை கட்டி எடுத்து தரையைப் பெருக்கி எல்லாவற்றையும் நெருப்பிட்டுக் கொளுத்த வேண்டும். இப்போதுதான் தரையைப் பெருக்கத் துவங்கி இருந்தேன். ஓயாமல் புழுக்கள். ஓயாமல் துடைப்பம். ஓயாமல் காக்கைகள். ஓயாத மக்கள் என்னைச் சுற்றி வட்டமிட்டபடி. புழுக்கள் அங்கும் இங்குமாக ஓடத்துவங்க, நானும் தப்பிக்க முன்னே ஓடத்துவங்குவேன்.
இன்றுவரை ஓடிக்கொண்டே இருந்திருக்கிறேன் என்பதை விழித் தெழுந்த நான் கனவு போல உணரத்தொடங்குகிறேன். உறக்கத்திற்கும் விழிப்புக்குமான இடைப் பட்ட காலம் என்பது எனது வளமான அங்கங்களிலிருந்து, வறண்டு சுண்டிப்போனது வரையிலானதாக காலமாக இருக்கிறது. சிறிது சிறிதாக நான் என்னை உணர்கிறேன். எனது வீடு, எனது தெரு, எனது குடும்பம் எல்லாமே மேலேறி கிளர்ந்து நினைப்பின் மேல் அடுக்கில் வந்து அமர்கிறது. யாரோ ஒருவர் மேல் துணி கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால், ஒருவரிடமும் அணிந்திருக்கும் ஒற்றை உடையைத் தவிர ஏதுமற்றுத்தான் திரிந்து கொண்டிருக்கிறார்கள் போலும். எல்லோரும் இல்லை என்கின்றனர். இதற்குள் விழிப்புற்ற என் உடலின் ஆடையற்ற நிலை என்னுள் இயல்பாகி போகிறது. யாரும் கவனிக்காத, அல்லது கவனிக்கத் தேவையற்றதான நிர்வாணத்திற்காக நான் ஏன் அல்லலுறவேண்டும்?

கால்கள் தரையில் பரவ, ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நான் எனது அறிமுகமான தெருக்களின் இடையே நடந்து செல்கிறேன். சூடுடனும், சூடற்றும் பாதங்கள் முன்னேறிக்கொண்டே இருக்கின்றன, எனது வீட்டின் முன் நிற்கும் வரை.

வீடு அழிக்கப்பட்டு விட்டிருக்கிறது. வீட்டின் மக்களின் நினைவுகளிருந்தும் நான் அழிக்கப்பட்டும் நெடுங்காலமாகி விட்டிருக்கிறது. எனது அடையாளத்தை நான் உணரவும், என்னை அடையாளம் காணப்படவுமாக நான் எனது தாயைத் தேடுகிறேன். தாய் உடன் பிறப்பின் இடத்தில் இருப்பதாக அறிகிறேன். நெடுந் தூரம் நடந்து அடைய வேண்டிய தொலைவில் இருக்கும் சகோதரன் வீட்டிற்கு செல்ல வாகனம் ஏற முற்படும் பொழுதுதான் எந்த வாகனமும் காசற்றுக் கிடைக்காது என்பதையும் அறிவு மேலடுக்கிற்கு அனுப்புகிறது. கையில் கைப்பை, காசிருக்கும் பர்ஸ், அனுமதிச்சீட்டு, முகவரிக் காகிதம் ஏதுமற்று வெற்றுக் கைகளாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன இருபுறமும்.
திரும்பவும் நடக்கத் தொடங்குகிறேன். சாலையோரம் எறியப் பட்டிருந்த சிறு துணித் துண்டெடுத்து என் மேல் உடலைப் போர்த்திக் கொள்கிறேன். மிகப் பெரிய ஆசுவாசம் கிடைக்கிறது. சற்றே அமைதியும். அறிந்த பாதையிலும், அறியாத பாதையிலுமாக எனது பயணம் தொடர்கிறது. கால்கள் சோர, வெற்றுடம்புடன் வெற்று வயிறும், வெற்றுக் கால்களும் காய அன்னையைக் காண்கிறேன்.

உடன் பிறந்தவன் வீட்டில் மிகப் பெரிய கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. பெரிய பெரிய அடுப்புகள், பெரிய பெரிய எண்ணெய் சட்டி. எல்லோரும் முகங்களின் மீது மகிழ்ச்சியை அப்பிக்கொண்டு அலைந்து திரிந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் யாருக்கும் என்னை அடையாளம் தெரிய வில்லை. அன்னையின் முன்பாக நிற்கிறேன். அவளும் அடையாளம் கடந்த வயோதிகத்தில் இருக்கிறாள்.

திடுக்கிட்டு அறுவருப்புடன் ஏறிட்டுப் பார்க்கிறாள் அவள். என்னைக் கண்ட அதிர்ச்சி முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. ஓஇந்தப் பைத்தியம் இப்போது இங்கே எப்படி? வா, வா, எப்படி வந்தாய்?ஔ விசாரிப்பு ஊட்டப் பட்ட செயற்கை மகிழ்ச்சியுடனும், முகம் ஏற்காத பாவனையிலும், உடனே அப்புறப்படுத்தும் எண்ணத்திலும் இருக்கிறது. பைத்தியம் என்ற ஒற்றை சொல் என் மனதின் குழப்பத்தைத் தெளியச் செய்கிறது. நான் உறக்கத்தில் இருந்ததாக எண்ணிக் கொண்டிருக்கிறேன். இவர்களுக்கோ அது பித்தென்று புரிகிறது.

வெற்றுக் கால்களுக்கும், வெற்றுடம்பிற்கும், வெற்றுக் கைகளுக்கும், வெற்று வயிற்றிக்கும் காரணம் சற்றே புரிபடத்துவங்குகிறது. ஒளி பொருந்திய முகத்தை ஏந்தியபடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த முகங்கள் மங்கிப் போகின்றன. சங்கடமாக நெளிகின்றனர். என்னாலும் என்ன செய்வதென்று தீர்மானிக்க முடிய வில்லை. திகைக்கத்தான் முடிகிறது. என்னை எதிர்கொள்ளும் நிலையில் அங்கிருந்த யாருமே இல்லை அன்னையையும் சேர்த்து. ஏற்றுக் கொள்ளவும் முடியாது என்ற உண்மையும் புரிகிறது.

மனதிற்குள் கடல் பெரும் ஓசையை எழுப்புகிறது. கடல் பொங்கி, பொங்கி எனது எல்லா துவாரங்களின் வழியாகவும் வெளியேறத் தொடங்குகிறது. நீராக வழிகிறது கடல் என்னிலிருந்து. நீர் கீழிறங்கத் துவங்குகிறது. வெளியேற்றப்பட்ட நீரின் தாரை அறையில் பரவுகிறது. எல்லோரையும் கவலை கொள்ளச்செய்கிறது. விழாக் கோலத்தை மாற்றி அமைக்கவோ, நான் திரும்பி வந்ததை விழாவாக அறிவிக்கவோ அங்கு யாரும் தயாராக இல்லை. நான் பெருக்கெடுத்து ஓடும் என்னுள் ஓங்கும் கடலை ப்ரும்ம முயற்சிக்குப் பிறகு என்னுள் திரும்பவும் எடுத்து அடைத்துக் கொள்கிறேன்.
ஆனாலும் ஆடை ஒன்றாவது எனக்குக் கொடுக்கும் படி அங்கிருக்கும் உறவு அனைத்திடமும் கெஞ்சியபடியே இருக்கிறேன். விழா நாயகிக்கோ எனது வற்றல் உடலுக்கும், அவளது பூரித்த இளம் உடலுக்கும், எந்த விதத்திலும் ஒப்பிடமுடியாத சந்தேகம் இடையே நெளிகிறது. ஓஉன்னுடைய சிறுவயது உடை ஏதாவது இருந்தால் எனக்குக் கொடு. மேலங்கி இவ்வளவு நீளமாக வேண்டாம்.ஔ கொடுக்கப்பட்ட உடையை அங்கேயே அணிந்து கொள்கிறேன். மேலிருக்கும், இடுப்பிலிருக்கும் துண்டுத் துணிகளை உதறிவிட்டு. அனைவரும் அபாயகரமாக உணர்கின்றனர். ஆடையை அணிந்து கொள்வேனோ, அல்லது உதறிய நிலையில் நடுக்கூடத்தில் அமர்ந்து விடுவேனோ என்று. எனக்கு விழிப்பு ஏற்பட்டு விட்டது என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், என்னாலும் நிரூபிக்க முடியவில்லை. உடை அணிந்து, அதுவும் சரியான முறைப்படி அணிந்து கொண்டவுடன் எல்லொருக்கும் பெரிய ஆசுவாசம்.

பசி உணரத்தொடங்குகிறேன். விதம் விதமான பலகாரங்கள் அடுக்கப் பட்டவைகளிலிருந்து கையேந்திக் கேட்கிறேன். முகச் சுளிப்புடன் அளிக்கப் படுகிறது. ஆனாலும் ஆறுதலாய் உணர்கிறேன். எனது உறக்கதுக்கான காரணத்தை அன்னையிடமாவது கூற மனம் விழைகிறது. கூற முற்படும்போது வரவேற்பு அற்றதுடன், எதிர்ப்பும் காட்டும் முகத்தைக் காண்கிறேன். ஓஅம்மா என்ன ஆயிற்று? எனக்குப் புரிந்தவரை கூறட்டுமா? ஓஎதையும் கேட்கப் பொறுமையற்ற முகங்கள். எங்காவது பூமியின் அடியில் என்னை ஒளித்து வைத்துவிட்டு தங்கள் கொண்டாட்டத்தை தொடர தயாராகிறார்கள். நானோ, சொற்கள் கோர்வையற்று உரைக்கிறேன்போலும், இன்னமும் தெளிவாக விளக்க முற்படுகிறேன். எதிரில் ஏந்துகிற கைகளற்ற வெற்றுச் சொற்கள். வீடெங்கும் இரைந்து கிடக்கின்றன. உறக்கத்திலும் இப்படித்தான் ஓயாமல் சொற்களை வீசினேனோ? என் விழிப்பின் அடையாளம் காக்க வேண்டும் என்றால் சொற்கள் அரிதாக வெளியேற்றப்பட வேண்டும். ஆனாலும் என் விழிப்பின் நிலையை, உறுதியை சொற்களைத் தவிர வேறு எதை நான் நம்ப இயலும்? எனது சொற்களோ கேட்பாரற்று பாதாளச் சாக்கடையிலிருந்து, அடைப்பை நீக்கி வெளியேற்றப்பட்டு குவிக்கப் பட்டிருக்கும் நிலையில் துர் நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது.
"எனக்குக் குளிக்க வேண்டும். தயவு செய்து உதவுங்கள்." "குளிப்பதற்கும், குடியிருப்பதற்கும் முற்படாதே. 'சாப்பிட்டாயிற்றென்றால் இடத்தைக் காலி செய் விழாக்காலத்தில் சனியன் போல இது ஏன் இப்போது வந்து கழுத்தை அறுக்கிறது?"

'அடர்ந்த கருங்கூந்தலோடு என்னை அனுப்பினாயே அம்மா, கணவன் வீட்டிற்கு. எல்லாக் கூந்தலும் புழுக்களாக மாறியது எந்த நாள் என்று நான் கூற வேண்டாமா? எல்லாப் புழுக்களையும் எவ்வளவு கஷ்டத்துடன் எடுத்து எறிந்தேன் என்று நீ அறிய வேண்டாமா? அதை நான் உன்னோடு பகிர்ந்து கொள்ள வேண்டாமா?' 'இதோ பார். இங்கு இன்னொரு தலைமுறையின் முதல் திருமணம் நடக்க இருக்கிறது. பார் அவளை, எவ்வளவு அழகோடும், இளமை பொங்கும் அங்கங்களோடும் சுற்றித் திரிந்து கொண்டு இருக்கிறாள் என்பதை. வாருங்கள் பெண்களே! அக்கம் பக்கம் அழைக்க வேண்டும். எவ்வளவுதான் பார்த்து பார்த்துச் செய்தாலும், முக்கியமானவர்கள் விடுபட்டு விடுவார்கள். வாருங்கள் அழைக்கப் போகலாம்.'

பளபளப்பான உடைகளில் ஒரு குழு அழைக்கக் கிளம்புகிறது. என்னுள்ளும் உற்சாகம் பொங்கி வருகிறது. 'நானும் கூட வருகிறேன். எனக்கும் எல்லோரையும் பார்த்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன. பல முகங்கள் மறந்து கூட போய்விட்டது. எவ்வளவு கால உறக்கம் கணக்கில்லாமல். இவளாவது உறக்கத்திற்கு ஆளாகமல் விழிப்புடனேயே எப்போதும் இருக்கும் படியான வாழ்வு அமைத்துக் கொடுப்பீர்களா? நான் பங்கு கொள்ளாமலா அழைப்பு? எனக்கும் நல்ல உடை கொடுங்கள். எல்லா தவறுகளுக்காகவும் உங்கள் அனைவரின் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.'
திரும்பவும் தெருவோரத்தில் குவிக்கப்பட்டிருக்கும் பாதாளச் சாக்கடையின் கழிவுக் குவியலைப்போல என்னை அனைவரும் பார்க்கின்றனர். நான் விழித்து விட்டவள் என்று நிரூபிக்க நான் செய்யும் முயற்சிகள் அனைத்துமே, புதைகுழிக்குள் எம்பித் தவிக்கும் ஒரு கனத்த உடல் இன்னமும் இன்னமும் மூழ்கிப் போவதை ஒத்ததாக முடிகிறது.

குடும்பத்தில் ஒரு பெண் மட்டும் என்னை அழைத்துச் செல்வதாக வாக்களிக்கிறாள். முகம் கழுவ குளியலறை செல்கிறேன். அங்கு இருக்கும் சீயக்காய்த் தூளைப் பார்க்கிறேன். கரு கருவென்று நீண்ட அடர்ந்த கூந்தலை குளித்து அலசி உதறி விரித்துப் போட்டால், உடலும் உலகமும் மயங்காதோ? தண்ணீரில் கரைத்து எடுத்து அப்பிக் கொண்டு வெளியில் வருகிறேன். நீரற்ற குளியல் அறையில் எப்படி குளிப்பதாம்? தண்ணீர் வேண்டும். குளிக்கத் தண்ணீர் வேண்டும். எடுத்துத்தாருங்கள். கண்கள் எரிகின்றன என்று அலறுகிறேன். அலற அலற எரிச்சலும், பயமும் என்னை நோக்கிப் பாய்ந்து வருகிறது.

முன் நின்ற ஒருத்தி வந்து 'என்னுடன் வா. தண்ணீர் இருக்கும் இடம் காண்பிக்கிறேன்', என்று சொல்லி நான் அடைய முடியா வேகத்துடன் முன்னால் ஓடிக்கொண்டே இருக்கிறாள். நானும் பின் தொடர முயன்று ஓடிக் கொண்டே இருக்கிறேன். படிகளைக் கடந்தும், படிகளில் ஏறியும் பின் இறங்கியும், பின் சம தளத்தில் நடந்தும் செல்கிறாள். ஓடி ஓடிப் பின் தொடர்கிறேன். ஆனாலும் தண்ணீரும் குளியலறயும் மட்டும் காணவே இல்லை. இன்னமும், இன்னமும் நடை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நெடும் தொலைவு கடந்த பின்னே ஒரு பூட்டப் படாத கதவு காணக் கிடைக்கிறது. அப்பெண் அக்கதவருகில் புன்சிரிப்புடன் நின்று கொண்டிருக்கிறள். நான் அவள் அருகில் செல்லும் வரை அக்கதவு திறக்கப் படாமல் எனக்காகக் காத்துக் கிடக்கிறது. நான் சென்ற உடன் கதவு திறக்கப் பட்டு சட்டென்று பின் அறைந்து மூடப்பட்டும் விடுகிறது. 'பக்கெட் எங்கே? தண்ணீர் எங்கே? என்று நான் தேடத் துவங்க அது அறையே இல்லை. அது ஒரு தெருவின் முனை.

ஆட்கள் அரவமற்ற அத்தெரு நீண்ட நெடும் தார்ச்சாலை கொண்டதாய் இருக்கிறது. அது முடிக் கற்றைகளாய் மாறி சீய்க்காய் படிந்த என் தலையினுள் உள் நுழைந்து தொங்க ஆரம்பிக்கிறது, கரும் பாம்பென அலை அலையாய்.

மனம் கொள்ளாப் பெருமிதத்துடன் எனது ஆடைகளை ஒவ்வொன்றாய் வீசி எறிகிறேன். பொங்கும் அங்கங்கள் தளும்பித் ததும்புகின்றன.

Wednesday, April 1, 2009

தட்டுக் கழி

தட்டுக் கழி
அந்தப் பழுப்பு நிற உறை அரசு தொலைக்காட்சி நிலையத்திலிருந்து வந்திருந்தது. சில நாள் முன்னதாக நான் கொடுத்திருந்த 'தகுதி மேலாக்க' விண்ணப்பத்திற்கான நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு அது. இது அரசு தொலைக் காட்சியின் மற்றொரு படி. முக்கியமான படியும் கூட ஆகும்.

முதல்முறை தொலைக் காட்சியில் என்னை கலை நிகழ்த்த அழைத்த போதும் இதே மகிழ்ச்சிதான். ஒலியும் ஒளியுமுள்ள தொலைகாட்சி மூலமே நிகழ்கலையான நடனத்தைக் கொடுக்க இயலும், எல்லோருக்கும் அவரவர் இருப்பிடத்தில். வீட்டிலிருப்போர் கண்ணயர்ந்தும், வெளியில் இருப்போர் காண இயலாதததுமான ஒரு உச்சிப் பொழுதில் எனது முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டது. ஆனால் அதன் பின் விளைவாய் பலர் என்னை விசாரித்துப் பாராட்டியபோதும், மீண்டும் ஒரு முறை வேறு ஒரு நாளில் அதே நிகழ்ச்சி மறு ஒளிபரப்பானபோதும் அது சென்றடையும் வீச்சு என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. எனவே அப்போதே 'தகுதி மேலாக்கமும்' அணுகவேண்டியதுதான் என்று தீர்மானித்து இருந்தேன்.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை 'தகுதி மேலாக்க' விண்ணப்பங்கள் தொகுக்கப்பட்டு பின்னர் இரண்டு அல்லது அதற்கும் மேலான நாட்கள் நேர்முகம் நடைபெறும் என்பதையும் முன்பே சேகரித்திருந்தேன். இந்தக் கடிதத்தில் எனக்கான நாளும் நேரமும் குறிப்பிடப் பட்டிருந்தன. இந்தத் தேதியில்தான் ஆரம்பமா அல்லது நிறைய நிகழ்ச்சிகள் பார்த்துச் சலித்து அலுப்பூட்டுவதாக அமையும் கடைசீ நாள் நிகழ்ச்சியா எனது என்று விசாரிக்க யாருமில்லை.

கடிதம் கண்ட தொடக்க சந்தோஷத்திலிருந்து நான் மெல்லமெல்ல நிதர்சன உலகிற்கு வரவேண்டி இருந்தது. என்னைப் பல கேள்விகள் சுற்றி அலைந்தன. நிகழ்ச்சி சென்னை தொலைகாட்சி நிலையத்தில் பதிவாக்கப்பட்டு, அங்குள்ள குழுவினரால் வடிகட்டப்பட்டு, பின் தலைநகரம் சென்று அங்கும் தேர்வாக வேண்டும் என்பதுதான் கல்கட்டி இழுத்தது. மேலும் கேமராவின் முன் நின்று ஆடும் எனது உடையும், நகைகளும், முகமும் தெளிவாகவும் கச்சிதமாகவும் அமையவேண்டும். திறமை கலை மூலமாயினும் இக்கலை உடல் சார்ந்த்ததுதானே? அல்லாமலும், ஆடும்போது இரண்டு மூன்று ஜோடிக் கண்கள் என்னைச் சுற்றி தானிருந்த இடத்திலிருந்தே உற்றுப் பார்ப்பதும், விலகிப் பார்ப்பதும், அருகில் பார்ப்பதும், நாம் பாராமல் பார்ப்பதும் என, எல்லாவற்றிற்குமான ஒப்பனையும் வேண்டும். மேடையில் அணிகலனில் கற்கள் பொக்கையாயினும் கருத்திருப்பினும் கட்டியிருக்கும் புடவை சற்றே பழையதாயினும் எல்லாக்குறைகளையும் ஒளி இட்டு நிரப்பி இருப்பை நிறைவாக்கிவிடும். இவை யெல்லாம் தொலைகாட்சியில் முடியாத காரியம். அதன் கிட்டப் பார்வைக்கும் தூரப் பார்வைக்கும் சமவிகிதத்தில் அழகூட்டும் விதமான உடையும் அலங்காரமும் எனது முதல் தேவை. உடை கச்சிதமாகப்பொருந்தி யிருத்தல் வேண்டும்; அணியும் நகைகள் கல் உதிர்ந்து பாசிபடர்ந்து காட்சி அளிக்காது இருத்தல் வேண்டும். கால் சலங்கையின் மணிகள் உதிராமல் இருக்கவேண்டும். குஞ்சலம் நசுங்கி சடைசடையாகத் திரிந்து தொங்காது இருத்தல் வேண்டும். எப்போதும் புதியதாய் மலர்ந்திருக்கும் நெட்டிப்பூ அணிவதற்கு இயலாது; அது ஒரு முறை முதலீடு என்பதானாலும் விலை அதிகம். காகிதம் பிளாஸ்டிக் என இப்போது நடனத்துக்கு வாடாத பூக்கள் அநேகம் வந்து விட்டிருக்கின்றன. ஆனால் எல்லாம் காசின் அடிப்படையில் அழகின் ரகசியம். நிஜமான பூ என்றாலும் தலை நிறைய இட்டு பின்னலுக்கும் சுற்றவேண்டும்.

போனமுறை ஆடியபோதும் நிஜப்பூதான். வாடகை நகையும் வாடகை உடையும்தான். எல்லாவற்றிற்கும் மணிக்கணக்கு உண்டு. மலர்ந்த பூக்கள் நிறம் மாறி துவண்டு தொங்குவதற்கும்கூட. ஆனால் அது முதல் நிகழ்ச்சி. எனவே என்னுடைய திறமை வெளிப்பட ஒரு வாய்ப்பு என்பதாகக் கருதினோம்.
நிகழ்ச்சிக்கான நேர ஒதுக்கீடு முப்பது நிமிடங்கள். அதைப் பற்றிய அறிவிப்புக்கு முன்னும் பின்னுமாக இரு நிமிடங்கள். மேலும் இடை இடையே அறிவிப்புக்கென்று ஐந்து நிமிடங்கள், மேலும் பக்கவாத்திய, நட்டுவாங்க பெயர்கள் இட என்று எல்லாமாக எனது முப்பது நிமிடங்களிலிருந்து விலகி நின்றது. இதனால் பக்கவாத்தியக் காரர்களுடன் எனது ஒத்திகை நாட்டியத்தைவிடவும் நேரத்தின் மீதான கவனத்துடனேயே அமைந்தது. வெட்டியபின் இடைவெளி தெரியாமலும், ஒட்டியதன் வீரல் வெளிவராமலும் வர்ணத்தை நடுவாக்கி முன்னும் பின்னுமாக மூன்று ஐட்டங்களுடன் நிகழ்ச்சியைத் தயார் செய்திருந்தேன்.

நிகழ்ச்சி ஒளிநாடாவாகும் நாளன்று மேற்சொன்ன அலங்காரங் களுடன் -வீட்டிலிருந்தே ஒப்பனையுடன்- பக்கவாத்தியக் காரர்களையும் உடன் அழைத்துச் சென்று குறிப்பிட்டிருந்த நேரத்துக்கு முன்னதாகவே நிலையத்தை அடைந்து விட்டோ ம். எங்களுக்கான ஒப்பனை அறையில் அமரவைக்கப் பட்டோ ம். காத்திருப்பு மதியம் வரை தொடர்ந்தது, 'ஸ்டூடியோ காலியில்லை' என்ற ஒற்றை வரி பதிலுடன். மதிய உணவு நேரமும் வந்து விட்டது. அனைவருக்கும் உணவு வழங்கினார் அப்பா. தலைப்பூ தனது நிறம் மங்கித் தொங்க ஆரம்பித்திருந்தது. A.C. அறையிலும் கண்மை கண்களைவிட்டுக் கீழிறங்கி அகலமாய்ப் படர ஆரம்பித்தது. கை கால்களில் ஆல்தாவும் வாயில் 'லிப்ஸ்டிக்' குமாக இருந்த நான் அவசர உணவு உண்டு மறுபடியும் முகத்தைப் புதுப்பித்தேன், உடன் எடுத்துச் சென்றிருந்த ஒப்பனைப் பெட்டியின் மூலம். ஆனால் மனதையும், பூக்களையும் புதிதாக்கும், உடைகளைக் கலையாமல் வைக்கும் உத்தி அந்தப் பெட்டிக்குள்ளும் வெளியேயும் எங்கும் எனக்குக் கிட்டவில்லை.

"ஸ்டூடியோ" காலி என்ற அறிவிப்பைத் தொடர்ந்து சிறு நடைபாதை வழியே கனத்த கதவுகள் உந்தித் திறந்து உள்ளே நாங்கள் நுழைந்தபோது ஒளி ஆட்களும் கேமரா நபர்களும் உணவருந்தச் சென்று இருந்தனர். இன்னமும் ஒரு மணிநேரத்திற்கு அங்கு அமர்ந்திருக்கவேண்டிய நிபந்தம் எங்களுக்கு. அங்கும் ஒரு முறை ஒத்திக்கை பார்த்தோம்; நேரத்தை சரியாகத்தான் பயன்படுத்தினோம் என்ற மனத் திருப்திக்காக. நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும் நேரம் சூரியன் மேற்கில் மறையாமல் சற்றே உக்கிரம் தணியத்தொடங்கிய வேளை. பக்கவாத்தியம் வாசித்தவர்களையும் பாட்டுப் பாடியவர்களையும் அவரவர் வீட்டில் கொண்டு சேர்த்துவிட்டு வீடு திரும்பும்போது இன்றைய செலவுக்கான அதிகப்படியான ஆயிரம் ரூபாயை அப்பா எப்படி சரிக்கட்டப் போகிறார் என்பதையே மனம் யோசித்துக் கொண்டிருந்தது.

சிறுவயதிலிருந்தே எனது பிடிவாதக் கனவான பரதம் பயிலுதல் குடும்பப் பொருளாதாரத்துக்கு அடங்காதது. ஆனாலும் அந்த ஆசை அப்பாவால் நிறைவேற்றப்பட்டுக்கொண்டே வருகிறது. தொலைகாட்சி, அரசு அமைப்பில் உதவி பெறுதல், அல்லது நிகழ்ச்சி தருதல் போன்றவை மட்டுமே என்போன்றவர்களால் நிகழ்த்தப்படும் தனிநபர் நடனம். சபாக்களுக்குக் காசு கொடுத்தோ அல்லது அதற்கீடாக ஏதேனும் கொடுத்தோ நாட்டியத்தில் என் திறமையை வெளிக்காட்ட என்னால் நிச்சயம் முடியாது. நாட்டியத்தில் முழுப்படிப்பும் பயிலவேண்டும் என்ற என் அதீத ஆசைக்கு ஈடுகொடுத்து பட்டம் வாங்கவைக்கவே எவ்வளவு கசக்கிக்கொள்ள வேண்டியிருந்தது என்பது எப்போதும் என் நினைவில் இருக்கும் விஷயம்தான். ஆனாலும் தொடர் உற்சாகம் எனது திறமைக்கு அவ்வப்போது கிடைத்துவருவது பெரிய ஊக்க மருந்து.

நடன நிகழ்ச்சிக்காக என்றபோதில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி வரும் தீர்மானம் 'தகுதி மேலாக்க' நேர் காணலில் உண்டா என்று எண்ணியபோது ஒரு நிச்சயமற்றதன்மை மனதுள் நிறைந்தது. அப்போதும் எதிர்மறையான எண்ணங்களுக்கே இடம் தரலாகாது என்ற எனது பிடிவாதம் ஒளி ஊறச் செய்தது. வர்ணம் செய்து பத்து நிமிட நேர்காணலை ஒரு நிறைவான வெளிப்பாடாகக் காட்ட இயலும் என்று தோன்றியது. வர்ணத்தில் 'பாவமும்' நிருத்தமும் என அனைத்தும் காட்டி பூரணத்தில் சிறிது கிள்ளி நடுவர்முன் வைக்க ஏதுவாகும். எனவே ஒலிநாடாவின் வார்த்தைகளுக்கு என்னைத் தயார்செய்துகொள்ள வேண்டும்.

'தகுதி மேலாக்க' நேர்காணலின் நேரத்தையும் தேதியையும் ஒரு முறை மீண்டும் தொலைபேசி மூலம் நிச்சயித்துக் கொண்டால் நலமாயிருக்கும் என்று எண்னி பொது தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். வினாக்கள் தொலைபேசியில் பகிரப்படுகையில் திடீரென்று எழுந்த சந்தேகம் கேள்வியாய் வைக்கப்பட்டது." நேர்காணலுக்கான நிகழ்ச்சியில் ஒலிநாடா உதவியுடன் ஆடலாம்தானே?" ஆனால் அது சட்டென்று மறுக்கப்பட்டு " லைவ் ம்யூஸிக்" அதாவது பக்கவாத்தியக் காரர்களும் உடன் வரவேண்டும் என்றும் அவ்வாறில்லாவிடில் அது ஒரு குறையாகக் கருதப்பட்டு வாய்ப்பு நிராகரிக்கப்படலாம் என்றும் பதில் வந்தது. மனம் பகீரென்றது. குறுகிய கால அவகாசம் மட்டும் காரணமன்று, மற்றுமொரு முழு செலவு.

உதவி நாடிக் குருவிடம் சென்றேன். அவருக்கு என் திறமைமீது அதிக மதிப்பு. கொஞ்சம் பாசமும் கூட. " live music aunty என்ன செய்யறதுன்னு தெரியல்ல" "ஏன் கவலப்படறே நான் பாட்டும் நட்டுவாங்கமும் செய்யறேன். எனக்கு நீ பணம் ஏதும் தரவேண்டாம். மிருதங்கமும் வயலினும்தான் பத்து நிமிடத்துக்கு என்ன கேக்கப்போறா? நானே கேக்கறேன் கவலப்படாதே! tape போட்டு ஆடிப்பழகு வர்ணத்தை. பத்து நிமிடத்துக்கு ஆறாப்போல வர்ணத்தைப் பிரிச்சு வேரொரு tapeலே பதிவு பண்ணு. சாயங்காலமா இங்க வா, அதை நான் பாட ப்ராக்டீஸ் செய்யலாம்."

மாலையில் குருவுடன் பயிற்சி; மறுநாளும் கூட.

அடுத்த நாள் காலை அலங்காரம் எல்லாம் வீட்டிலேயே முடித்துக் கொண்டு பெரிய ஷால் கொண்டு உடல் போர்த்தி ஆட்டோ வில் குருவீடு சென்று அவருடன் பக்கவாத்தியக் காரர்களை அழைக்கப் போனோம்.
இருவரும் தாங்கள் வேலை செய்யும் இடமான "க்ஷேத்திரா' போய்விட்டிருந்தனர் விடுமுறை எடுக்காமல். கலங்கிய மனதுடன் அவர்கள் பணிபுரியும் இடம் சென்றோம்.
"என்னம்மா உங்க ஆன்டீதானே பெரிய பொசிஷன் இங்க? இங்க எங்களுக்கெல்லாம் லீவு வாங்கி வைக்க வேண்டாமா? ஒண்ணும் சொல்லாம நாங்க எப்படி வரது? பிரின்ஸிபால் லீவு தரமாட்டேன்னுட்டார். உனக்கு வேணும்னா நீதானெ முன்கூட்டிக் கேட்டு வைக்கணும்??
" என்ன ஆன்டி இது?" நான்.
" பேசாம வா மூணு நாள் நடக்கற இன்டர்வ்யூ எல்லாருக்கும் live musicனா ஏதாவது மிருதங்கத்தைத் தயார் பண்ணிக்கலாம், இந்த வர்ணம் தெரிஞ்சவா நெறயப்பேர் இருப்பா. வயலின்காரா எப்படியும் சமாளிச்சுபா. பத்து நிமிஷம் தானே? போகலாம் வா, நேரமாயிடும்"
" வேண்டாம் ஆன்டி! இத்தனை கஷ்டப்பட்டு இன்டெர்வ்யூ போனால் கிடைக்கும்கறது என்ன நிச்சயம்?"
"கிடைக்காதுன்னு என்ன நிச்சயம்? இதுலே தேறினா நாளைக்கு டில்லிலே ஆடலாம் அதெ நெனைச்சுப்பார்! போகலாம் வா."
நான் உதிர்ந்த மணலாய் சிரிக்கிறேன்; இவர்களோ என்னை ஈர மணலாக்கிக் கட்டிவைக்கின்றனர்.

நிலயத்துக்குள் சென்றதும் அங்கிங்கென எங்கெங்கும் நாட்டிய உடையில் பலரும் அவர்களுடன் வந்தவரும், மிருதங்கமும், வயலினும், வீணையும், ஒப்பனை சாதனங்களும், தன் நம்பிக்கைகளும், நிராசைகளும், எதிர்பார்ப்புக்களும், மிகச் சாதாரண உடைகளும், ஆகக்கூடிய விலைகளில் நகைகளும், ஆட்டோ க்களும், கார்களும், ஸ்கூட்டர்களும் நிறைந்திருந்தன.

அதற்குள்ளாகவே என் குரு யாருக்கு என்னென்ன நேரம், அதில் மிருதங்கம் வாசிப்பவர் தனக்கு முன்பே தெரிந்தவர் யார் என்று தேட ஆரம்பித்து விட்டிருந்தார். கண்டுபிடித்தும் விட்டார். "ரூபமு ஜூசி" வர்ணம்தான் தெரியும்தானே? இவளுக்குத்தான் என்னோட சிஷ்யை. நன்னா ஆடுவா, இதோ பாரு பொண்ணே இவர்தான் மிருதங்கக் காரர் , அவர் வயலினுக்கு; கொஞ்சம் பாத்துக்கலாமா? எதிலே ஆரம்பிச்சு எதிலே முடிக்கப்போறே? ஜதி, கோர்வை எல்லாமா ஒருதடவ சொல்லிக் காட்டிடு. இந்த ஓரமாப் போலாம் வா," எங்கெங்கும் தட்டுக்கழி, சலங்கைஒலி, அல்லது சப்தம். அனைத்திலிருந்தும் என் ஒலி என் சலங்கை என் தட்டுக்கழி என் மிருதங்கம் எனப் பகிர்ந்து மற்ற ஒலிகளிலிருந்து என்னை உரைபோட்டு தனித்தெடுத்து ஆடத் தொடங்கினேன்.

உள் நுழைதலுக்கான பத்து நிமிடமும் வந்தது. அத்தனை சப்தத்திலிருந்தும் எங்களைப் பிரித்தெடுத்த அடுத்தடுத்த கனமான கதவுகளைத் தள்ளித் தள்ளி நாங்கள் உள் நுழைந்தோம். நேர்காணலுக்கு அழைத்திருந்த பொறுப்பாளரும் நடனமணியின் திறமையை அறிந்தறியும் நேர்த்தியாளர். பாசாங்கு அற்றவர். தளத்தில் படம் பிடிக்கும் கேமராக்கள் அசையாது ஸ்திரம் கொண்டு நின்றுகொண்டிருந்தன.ஒளி உமிழ் பல்புகளும் ஆடும் சதுரத்துக்கும் ஆடுபவரின் உடலுக்கும் ஏற்றார்போல தயார் நிலையில் இருந்தன. தம்பூரா ஸ்ருதிமட்டும் சற்றே மாற்றி அமைக்கப் பட்டது. பின் நடனம் ஆடுபவரின் உயரத்துக்குத் தக்கவாறு ஒளியும் சற்றே கீழிறக்கப்பட்டது. நிகழ்ச்சி அமைப்பாளரின் காது மாட்டிகளில் கிடைத்த உத்தரவுப்படி நான் ஆடத் தொடங்கினேன். அறையின் வேறு ஏதோ ஒரு மூலையில் கண்ணாடிக்கு அப்பால் அரூபிகளாக மிதந்தபடி நடுவர்கள் அசிரீரியாக குரல் ஒலித்துக் கொண்டிருந்தார்கள்.

பத்து நிமிடம் முடியும் முன்னதாகவே ஆட்டம் நிறுத்தப் பட்டுவிட்டது. ஒளிநாடாவில் என் பெயர் எழுதப்பட்டு ஒரு பெட்டியில் அடைக்கப் பட்டது, ரத்தப் பரிசோதனை மாதிரி. இங்கும் சிலர் ஒலி நாடாவின் துணயுடன் ஆடப் பதட்டம் இன்றிக் காத்திருந்தனர்.

வெளியே வந்தோம். வாசலில் வாயிகாப்போனிடம் கையொப்பம் இட்டுவிட்டு வெளியேறினோம். பணத்தை மிருதங்கம் வாசித்தவருக்கும் வயலின் காரருக்கும் கொடுத்தோம். மிருதங்கம் வாசித்தவர் முகத்தில் கடும் கோபம்.

" என்ன? முழுக் கச்சேரிக்கான பணம்னா தரணும், இது என்ன பிசாத்து?"

"பத்து நிமிடம்தானே இன்டெர்வியூ."

இதற்குள் பேசியபடியே தெருவுக்கு வந்துவிட்டிருந்தோம். கடும் வெயில் கொளுத்தியது.

" பத்து நிமிஷம் நீங்க ஆடினா அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்? இதோ இங்கே ஆடுங்கோ மீதிக்கும் வாசிச்சுட்டு பணம் வாங்கிக்கிறேன். நான் வாசிக்கமாட்டேன்னா சொல்றேன் ஆடறியா பொண்ணே?" தெருவோர சாக்கடையை மூடியிருந்த சிமென்ட் தளத்தைக் காட்டிக் கேட்டார் வித்வான். என்ன செய்வது ? எங்கே பணம்? குருவின் கை என்னை இறுக்கமாகப் பற்றியது. அவரின் பர்ஸ் திறக்கப்பட்டு இருவருக்கும் முழுத் தொகையும் கொடுக்கப்பட்டது. அவர்கள் வீடு செல்ல ஆட்டோ வும் பிடித்து அதற்கும் உரிய தொகை கொடுக்கப்பட்டது.

இந்தச் சாக்கடையுடன் நான் என்னைக் கரைத்துக் கொள்ளலாமா? அல்லது பூமி பிளந்து உட்புகலாமா? இல்லவிட்டால் என் ஆசையை கால் சலங்கையை இந்த வாசலில் புதைத்துச் செல்லலாமா?

நடனம் கற்பித்து அதன் மூலம் பணம் ஈட்டத் தொடங்கினால் என்னை இன்னமும் தகுதியாக்கிக் கொள்ளும் நிலையிலிருந்து மனம் பணம் நோக்கி செல்ல ஆரம்பித்துவிடும் என்றும் சொல்லித்தர இன்னமும் நான் வெகுதூரம் பயணப்படவேண்டும் என்றும் என்னுள் கட்டிவைத்திருந்த கட்டுகளை உடைத்தெறிந்தேன். எனது நாட்டிய ஆசைகளுக்கு இன்னமும் பெற்றோரின் ஆகுதி, அதில் என் சுய முன்னேற்றம், மிகத் தகுதியற்றது என்று எனது உயிரில் சுளீரென அடிக்க நானும் தட்டுக் கழியைக் கையில் எடுத்தேன்.

தகுதி மேலாக்கம் தானே வரட்டும் வரும்போது!

Tuesday, March 10, 2009

தண்ணீர்க் கொலை-சிறு கதை

தண்ணீர்க் கொலைகாகம் தாகம் தணிந்த கதை, படம் பார்த்துக்கதை சொல்லில் பார்த்தது. காகம் மாறாமல் அதே உருவத்தில் ஆனால் நீர் குறைந்த குடம் மட்டும் பல வகைகளில். உள்ளிருப்பை வெளிக் காட்டும் ஊடுருவல் கொண்ட மண் பானைகள். உள்ளிருப்பைக் காட்டுவது கண்ணாடி அல்லவா? அது எப்படி மண் பானைஆக முடியும்? அல்லது மண்பானை தன்னுள்ளை எப்படி வெளிக்காட்ட இயலும்? எனவே கதைக்காக நான் வரைந்த ஓவியக் காகம் சிறியது. பானை, கண்ணாடிக் குடுவையானது. நீர் சிறு சிறு தொடரற்று வெட்டப் பட்ட கோடுகளாயின. வாழையிலையின் வெளிமுனையில் சுற்றிக் கொண்டிருக்கும் கருப்புச் சுருளை இடை வெளி விட்டு விட்டு இழுத்து மெலிதான தொடர் தொங்கலாக வெளித் தெரியும், கரும் சுருள் நிறமற்ற அரூப இழையையும் உடன் இருத்தி வித்தை காட்டும் வண்ணம் குடுவையில் தண்ணீர் கருப்பு பென்சில் கோடுகள் பாதி நிறைந்தன. சிறு கற்கள் காகம் கொத்தி குடுவையிலிட, நீர் வெளிவந்து தாகம் தணிந்தது. பறக்கும் காகத்தைப் பார்த்து, சிரிப்பு வந்தது. கல்லைச் சற்றுவேகமாக எறிந்து பானையை அல்லதுகண்ணாடியை - உடையும் பொருளானதை - உடைத்து ஏன் ஓட்டை வழியே நீர் அருந்தி இருக்கக்கூடாது இந்த காகம்? இது காகத்தின் புத்தி சாதுர்யத்திற்கானது மட்டுமல்ல, தாகம் தணிந்ததற் கானதாகவும் எடுத்துக் கொள்ளாமல் கனமான பொருளிட்டால் நீர் மேலேறும் என்பதாகப் புரிந்துக் கொள்ளப் படல் வேண்டும். ஆனால் இன்று அந்தப் புரிந்து கொள்ளல் தவறானது.

எந்தவொரு தனி வீடும் அல்லது நீண்ட அகல நிலமும் அடுக்க கத்திற்கானது என்பது இந்த நகர வாழ்க்கையில் எழுதப்படாத விதி । இதே விதியின் அடிப்படையில் அருகிருந்த வீடும் அழிக்கப்பட்டுவிடும்; அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது। சுற்றிலும் மரங்களும் அதன் பூக்களும், கனிகளும் இன்னும் சில நாட்களில் இருப்பற்றுப் போக நிச்சயம் நேரிடும்। வாழ்ந்து, வறுமைக்காளாகி அழிந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய குடும்பம் போன்று அடுத்திருந்த செவ்வக நிலம் மாறிக் கொண்டு வருகிறது. கடப்பாறை, பெரும் சுத்தியல், மண்வெட்டி, காலை முதல் மாலை வரை சூரியனின் கீழ் நடமாடும் கரும் மனிதர்கள் எல்லாமே. சத்தத்தையும் பார்வையையும் வடிகட்டி உட் செலுத்த ஒருபில்டர் பொருத்திக் கொள்ள நேர்கிறது. கண்ணுக்குத் தெரியாமல் கண்களின்மீதும், காதுகளின் பக்கவாட்டிலும் சிறு வடிகட்டிகள் எப்போதும் தொங்கிக் கொண்டிருந்தன. பாளம் பாளமாய்ச் சுவர்த் துண்டுகள் எங்கும் சிதறி உள்ளிருக்கும் சிமெண்டையும், சுண்ணாம்பையும் வண்ணப் பூச்சுகளையும் பிரித்து, பிரிந்து இணைந்து கிடந்தன எங்கும்.

இன்றும் அதிகாலையில் தொடங்கப்பட்டது அழிப்பு வேலை. வீட்டின் பின்புறம் தரையிலிருந்து எழுப்பட்டிருந்த வட்டச் சுவரும், உருளையைத் தாங்கும் கம்பமும் காணாமல் போயிருந்தது. வட்டச்சுவர் நொறுக்கப்பட்டு, கிணற்றுக்குள் எறியப்பட்டுக்கொண்டு இருந்தது. விழப்படும் கனப் பொருள்களின் எதிரொலி மனிதன் உள் குதிக்கும் சப்தத்திற்கு ஒப்பாகவே இருந்தது. நடமாடும் மனிதர்கள் எவரும் நீருக்குள்ளோ, சுவற்றுக்கடியிலோ சென்று விடக் கூடாது என்ற தவிப்பும் எதிர்பார்ப்பும் இருந்தது.

சுவரில்லா ஆழ வட்டத்தைச் சுற்றிலும் மனிதர்கள்; நடமாடி நடமாடிப் பெரும் சுவர்த் துண்டுகளை உருட்டியும், புரட்டியும் தூக்கி எறிந்தும் நீருக்கள் இட்டபடியே.

காகத்திற்கு மேலெழும்பிய நீர் இதிலிருந்தும் மேல் எழும்பும். சுவரற்ற தரை தாண்டிப் பெருக்கெடுத்து ஜி.எஸ்.டி. சாலை நெடுக ஓடி ஆங்காங்கே உயிர்களின் தாகம் தீர்த்து நகரத்தின் குதூகல நாளாக மாறி, நீர் விரோதமற்று, எல்லை அருகி, எங்கும் பாய்ந்து, எல்லோரையும் நேசிக்கும். மனிதனும், பயிரையும் உயிரையும், நீரையும் நேசிப்பான். அப்போதுகாதலர்கள், குழந்தைகள் ஒருவருக்கொருவர் நீர் அடித்துக் கொண்டும், மூச்சுத் திணறி சிரித்தும், நகரம், அகமும் புறமும் குளிர்ந்து, நீர் வழி பின் தொடரும் இசையும், ஓசையுமாய்.

ஏதும் நகழவில்லை. இதில் எதுவுமே நிகழவில்லை. அடிமை மிருகம் போல் தனக்குள் எறிந்த அத்தனை சுவர்த் துண்டுகளையும் ஏற்றுக் கொண்டது கிணறு. தண்ணீரைச் சுவரும், செங்கற்களும் உறிஞ்ச தனது வட்டத்தில் எறிந்தத்தனையும் உள்வாங்கிக் கொண்டு எதிர்ப்பின்றி. சலனமற்று இருந்தது கிணறு. சுவர் துண்டுகளுக்கு இடையிலேயும், மேலும் மேலும் எறியப்படும் முண்டுச் சுவர்களாலும் காயம் பட்டு நசுங்கி, அனைத்து உயிர்களையும் காக்கும் நன்னீர் இறந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய்ப் பள்ளம் மறைய தரை நோக்கி இளகிய நீர் எழும்பாமல் இறுகிய சுவர் எழும்ப, நீர் இருந்த தடமுமற்று, கிணறு முழுதுமாக இறந்து கிடந்தது சமதரையாக .

Thursday, February 12, 2009

குருவேசரணம்

விநாயக் ராம்

கடமும், உடலும், மண்ணும்.

நான் இந்த கடம் என்ற வாத்தியத்தை எடுத்துக் கொண்டதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனெனில், கடம் என்பது மண்ணால் னது. எந்தக் கலப்பும் இல்லாத பூமிதேவியின் அருளில் ன வாத்யம். என் பெயர் விநாயக் ராம் அல்ல. நிஜப் பெயர், ராமகிருஷ்ணன். நானும் என் சகோதரியும் இரட்டைப் பிறவிகள். இரண்டில் ஒன்றுதான் பிழைக்கும் என்று மருத்துவர் சொல்லிவிட்டார். நான் உடம்நலம் குன்றி இறக்கும் நிநலையில் இருந்தேனாம். அப்பொழுது என் அப்பாவிற்கு அசரீரி வாக்காக 'ஒரு குழந்தையைத் தத்துக் கொடுத்தால் இன்னொன்றும் பிழைத்துக் கொள்ளும்' என்று கூறினாற்போல் கேட்டிருக்கிறது அப்பாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்தக் காலத்தில், பெண் குழந்தையை யாரும் தத்து எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எங்கள் அப்பாவிற்கு இஷ்ட தெய்வம் பிள்ளையார். உடல் நலம் குன்றிய என்னையும் கொடுக்க இயலாது.

எனவே பிள்ளையாருக்கு என்னைத் தத்து கொடுப்பது என்று முடிவு செய்து, திருச்சிக்குப் பக்கத்தில் தின்னூரில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலில் ஒரு சாஸ்திரிகளுடன் சென்று மறுநாள் என்னை பிள்ளையாருக்கு தத்துக் கொடுத்துவிட்டார்களாம்। என்னை தத்துக் கொடுத்து விட்டதால் அதிகாரபூர்வமாக என் பெயரை மாற்றியாக வேண்டும்। எனவே என் தாத்தாவின் பெயரான ஑ராம்ஒ உடன் பிள்ளையாரின் பெயரையும் இணைத்து ஑விநாயக் ராம்ஒ என்று பெயர் வைத்துவிட்டனர்। இந்த இணைப்பு கொஞ்சம் புதுமை. வேடிக்கை என்னவென்றால், பிள்ளயாரையும் மண்ணால்தான் செய்வார்கள். என் வாத்யமான கடத்தையும் மண்ணால்தான் செய்வார்கள். எனவே முன் நீங்கள் சொன்னது போல 'கடம் என்றால் விநாயக் ராம், விநாயக் ராம் என்றால் கடம்' என்றானது போன ஜன்மத்தின் தொடர்பு.

தந்தையே தெய்வம் - தந்தையே குரு

இது போன்று நான் புகழ்பெறக் காரணமானவர் என் தந்தை. அவரின் முழு முயற்சியால்தான் நான் கடம் கற்றுக் கொண்டேன். எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஆறு குழந்தைகள். மிகவும் ஏழ்மையான குடும்பம். என்னுடைய அப்பா மோர்சிங் வாசிப்பார். வேதாரண்யத்திலிருந்து, நடந்து வந்து தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரிடம் மிருதங்கம் கற்றுக்கொண்டார். இப்படி நடந்து வந்து குருகுலத்தில் இருந்து கற்றுக்கொண்டு கச்சேரிகளுக்கு மிருதங்கம் வாசித்தார். ஒரு கலையைக் கற்றுக்கொள்ள எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். பள்ளியில் சிரியராக இருந்தவர் சங்கீதத்துக்கு வரவேண்டும் என்று மிகுந்த சிரமத்திற்கு ளாகி இதற்குள் வந்தார். கச்சேரி வாசித்துக்கொண்டு இருந்த அவருக்கு டேபிள் மின்விசிறியில் அடிபட்டு கை விரல் துண்டாகி விட்டது. இனி மிருதங்கம் வாசிக்க முடியாது என்றாகி விட்டது. எனவே மோர்சிங் கற்றுக் கொண்டு அதை வைத்துக் கச்சேரிகளில் பங்கு பெற்றார். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை என்று ஒன்று உள்ளதல்லவா? அகில இந்திய வானொலியில் நிலைய வித்வானாக இருந்தார். அப்போது மோர்சிங் ஒரு வாத்யமே கிடையாது அதை எடுத்து விட வேண்டும் என்று நிலையம் முடிவெடுக்க, அந்த வேலையும் போயிற்று. பிறகு என்ன செய்ய? மெட்ராஸ் வந்து சினிமாவில் மோர்சிங் வாசித்துக் குடும்பத்தைக் காப்பாற்றினார். கச்சேரிகளிலும் வாசித்தார்.
எனது கலைப் பயிற்சி

குழந்தைகளுக்கும் ஏதாவது கற்றுத்தந்து வித்வானாக வைக்க வேண்டும் என்று என்னை மிருதங்கத்தில் சேர்த்து விட்டார். நான் அதை சரியாகக் கற்றுக் கொள்ள மாட்டேன். சிறு பிள்ளை விளையாட்டுத்தனம்தான். பள்ளிக்கூடமும் செல்ல மாட்டேன். காலை நான்கு மணிக்கு எழுப்பி, சொல்லிக்கொடுத்து, பழையது போட்டு, சாப்பிட வைத்து, படிப்பை இரண்டாவதாக வைத்து மிருதங்கத்தை முதலாவது இடத்தில் வைத்து, எனக்குக் கற்றுக் கொடுத்தார். பிறகு கடம் வாசிக்கவும் கற்றுக் கொடுத்தார். ஒரு கச்சேரிக்கும் அனுப்பினார். 12 வயதில் கற்றுக்கொள்ள ரம்பித்து 13 வது வயதில் (1955) கச்சேரி வாசிக்க ரம்பித்தேன். என் கூடவே எல்லாக் கச்சேரிகளுக்கும் வந்து இருந்து எப்படி வாசிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து என்னை கவனித்துக் கொண்டார் என் அப்பா. இப்போது நினைத்தாலும் கண்களில் கண்ணீர் மல்குகிறது.

முதல் நிகழ்ச்சி

வி.வி. சடகோபன் அவர்களுக்கு வாசித்ததுதான் எனது முதல் கச்சேரி. டி.வி.குப்புசாமி என்பவருக்கு, தூத்துக்குடியில் ஸ்ரீ ராமநவமி கச்சேரியில் வாசித்தேன். தூத்துகுடியில் நான் விளையாட சிப்பி வாங்கிக் கொடுக்கும்படி கேட்டேன். அப்பா வாங்கிக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். நான் பிடிவாதம் பிடிக்க எனக்கு ஆறு அணாவுக்கு சிப்பிகள் வாங்கித் தந்தார். அதில் ஒரு சிப்பியில் முத்து இருந்தது. முத்தின் விலை ரூ. 100, 200 இருக்கும் என் அதிர்ஷ்டம் அது எனக்குக் கிடைத்தது. எல்லோரும் இவன் முத்தைப் போல் பிரகாசிக்கப் போகிறான் என்றனர். அந்த ஸ்ரீ ராமநவமி கச்சேரியில் எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம் அது.

பிறகு நிறைய கச்சேரிகள் வாசித்தேன். நான் தனியாக வாசிக்க ஆரம்பித்தேன். தனியாகச் செல்லவும் துவங்கினேன். அந்தக் காலத்தில் பெண்பாடகிகள்தான் கடத்தைப் பக்க வாத்யமாக வைத்துக் கொள்வார்கள். சூலமங்கலம் சகோதரிகள், பி.லீலா, டி.வி.ரத்னம் போன்றோருக்கு நிறைய வாசித்திருக்கிறேன். சினிமாவிலும் வாசித்திருக்கிறேன் சினிமாவில், டி.ஆர்.மஹாலிங்கம் போன்றவர்களுக்கும் வாசித்தேன். அந்தக் காலத்தில் ஆண்களுக்கு வாசித்தால்தான் கௌரவம் என்னும் போக்கு இருந்தது. பெண்களுக்கு வாசித்தால் கௌரவம் இல்லை என்று நான் சொல்லவில்லை. நான் பிரபலம் ஆனதே அவர்களால்தான். என் அப்பா என்னை செம்பை வைத்யநாத பாகவதர், ஜி.என்.பாலசுப்ரமணியம், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் போன்றவர்களின் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய், என்னைப் பற்றிச் சொல்லுவார். டி.என். கிருஷ்ணன் அவர்களோடு கடத்தைத் தூக்கிக் கொண்டு சிஷ்யன் போல் போவேன். அப்பொதெல்லாம் கச்சேரிக்கு 'ரேட்' எனப்படும் பணம் பற்றிய நிர்ணயமெல்லாம் கிடையாது. சிறுவன் என்னுடன் வந்திருக்கிறான். நன்றாக கடம் வாசிப்பானென்று கூறுவார்கள். அவர்களும் சரி வாசிக்கட்டும் என்று சொல்லுவார்கள். அப்படி வாசித்து வாசித்துத்தான் பிரபலம் ஆனேன்.

அந்தக் காலத்தில் திரு வில்வாத்திரி அய்யர், கோதண்டராம அய்யர் போன்றோர்தான் கடம் வாசித்தனர். எல்லாக் கச்சேரிகளுக்கும் கடம் இருக்கும் என்றும் கூற முடியாது. சில ஆண் வித்வான்கள் கச்சேரிக்கு கடம் வைத்துக் கொள்வார்கள். பிறகு அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், ஜி.என்.பால சுப்ரமணியம், லால்குடி ஜெயராமன், டி.ர்.மஹாலிங்கம் (புல்லாங்குழல்), மஹாராஜபுரம் விஸ்வநாத அய்யர், மதுரை மணிஅய்யர், செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர் போன்றோருக்கும் வாசிக்க ரம்பித்தேன். அப்படியே நிலை உயர ரம்பித்தது.

சபாக் கச்சேரி

1960-61 இல் மியூசிக் அகாடமியில் செம்மங்குடி ஸ்ரீநிவாச அய்யருக்கு மாலை 5.30 மணி கச்சேரியில் வாசித்தேன். பக்கவாத்தியமாக பாலக்காடு மணி அய்யர், உமையாள்புரம் சிவராமன் போன்றோர் வாசிக்கும் நேரம். அன்று செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர் பாட்டு, லால்குடி ஜெயராமன் வயலின், உமையாள் புரம் சிவராமன் மிருதங்கம். அவர்களுடன் நான். அந்தக் காலகட்டத்தில் அகடமியில் வாசிப்பது என்பது அதிசயமான ஒரு செயல். அது ஆட்களைப் பிடித்து இடம் வாங்கும் நேரம். முதல் முறையாக பெரிய வித்வான்களுடன் வாசித்தேன். அது எனக்கு பெரிய திருப்புமுனை. கச்சேரி மிகவும் நன்றாக அமைந்தது. சிவராமன் மிக நன்றாக வாசித்தார். 'தனி'யில் நான் கடம் வாசித்து முடித்தவுடன் கட்டிடமே இடிந்து விழுந்து விடும் போல ஒரு கைதட்டல். செம்மங்குடி மாமா என்னைப் பார்த்து 'சபாஷ்' என்று சீர்வதித்தார். என் அப்பா இவற்றை எல்லாம் பார்த்து மிகவும் மகிழ்ந்தார். அப்போதெல்லாம், பெரிய வித்வான்களின் சீர்வாதம் இருந்தால்தான் முன்னுக்கு வரமுடியும். அவர்களிடம் நல்லபெயர் வாங்க வேண்டும், மரியாதையாக இருக்க வேண்டும். இது என் அப்பா கற்றுத்தந்த பாடம்.

வழ்க்கையின் முக்கிய திருப்பம்

பின்பு, செம்மங்குடி ஸ்ரீநிவாச அய்யர் அவர்கள் வீட்டிற்குச் சென்று வெற்றிலை பாக்கு வைத்து நமஸ்காரம் செய்தேன். அப்பொழுது அவர் என்னிடம், 'நீ ஏன் பெண் பாடகிகளுக்கு வாசிப்பதில்லை?'' என்றார். அதற்கு நான், 'நான் அவர்களால்தான் முன்னேற்றம் அடைந்தேன். இப்போது வேண்டாம் இன்னமும் சிறிது காலம் போகட்டும் என்றிருக்கிறேன்' என்றேன். அதற்கு அவர், எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவுக்கு வாசிக்கும்படி கூறினார். அந்த சமயத்தில் அவர்களுக்கு கோதண்டராமய்யர் கடம் வாசித்துக்கொண்டு இருந்தார். அவருக்கு 75 வயது. உடம்பு முடியாத சமயம். எம்.எஸ். அவர்கள் மியூசிக் அகாடமிக்கு வந்து அன்றையக் கச்சேரியைக் கேட்டு இருப்பார் என்று எண்ணுகிறேன். தனக்கு கடம் வாசிக்க என்று நிரந்தமாக ஒருவர் வேண்டு மென்று கேட்டிருப்பார் என்று தோன்றுகிறது. செம்மங்குடி மாமா என்னைக் கேட்டவுடன், 'நீங்கள் சொன்னால் நான் வாசிக்கிறேன்' என்றேன். 'நாளைக்கு "கல்கி கார்டனு"க்குப் போய் அவர்களைப் பார்' என்றார்.

எம்.எஸ் அம்மாவுக்கு வாசிக்கிறதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சிதான். ஏனெனில், அப்போதுதான் ஒரு 'பச்சை நோட்டு' பார்க்க முடியும். பச்சை நோட்டென்றால் நூறு ரூபாய். அது இப்போது வாங்குகிற 10,000 ரூபாய்க்கு சமம். அப்பொழுதெல்லாம் ரூ.50, 60, 25/- என்றுதான் 'ரேட்'. ஆரம்ப காலத்தில் நான் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கெல்லாம் வாசித்திருக்கிறேன். மேலும் எனக்கு அந்த மாதம் வரவு ஏதாவது இருந்தால்தான் குடும்பம் ஓட்ட முடியும் என்ற நிலை. எனவே நான் எம்.எஸ். அம்மாவைப் போய் பார்த்தேன். 'வா, விநாயக் ராம்' என்று கூப்பிட்டார். என்னிடம் ஒரு பட்டியல் தந்தார். மாசம் 10 கச்சேரி. ஆறு மாதங்களுக்கு டெல்லி, கல்கட்டா, பம்பாய், அமெரிக்கா, என்று லிஸ்டைப் பார்த்த என் மனோநிலையை விவரிக்க இயலாது. மாதத்திற்கு இரண்டு மூன்று கச்சேரி வாசித்து குடும்பம் நடத்துபவன் நான்.

இது வாழ்க்கையில் இன்னொரு திருப்பம். அதிலிருந்து இன்று வரை நான் கஷ்டப்படாமல் நன்றாக இருக்கிறேன். இதெல்லாம் கடவுளுடைய செயல் என்றாலும் இதில் என் அப்பாவின் உழைப்பும், அவர்களின் ஆசியும் கண்டிப்பாக கலந்து இருக்கிறது. இதையெல்லாம் பார்க்க என் அப்பாவும் இருந்தார். அதுதான் எனக்கு மிக்க சந்தோஷம் தரும் நினைவு. அது முதல், நிறைய வாசிக்க ஆரம்பித்துவிட்டேன் அவர்களுடன். ஆனால், அதன் பிறகு ஆண் வித்வான்கள் என்னைக் கூப்பிடுவது நின்று விட்டது. ஏதாவது ஒன்றுக்குத்தான் வாசிக்க முடியும். அவருக்கு வாசிப்பதும் கௌரவம்தான்.

அக்காலத்தில், இசை நிகழ்ச்சிகளில் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மதுரை மணி, போன்ற பெரிய வித்வான்களின் லிஸ்டில்தான் எம்.எஸ். அம்மாவுடையதும் இருக்கும். 1964 இல் இருந்து கடைசிவரை நான் வாசித்துக் கொண்டு இருந்தேன். முதல் முதலில் வெளிநாடு சென்றது கடத்துடன், எம்.எஸ் அம்மாவுடன் தான். அதன் பிறகு இன்று வரை வெளிநாடுகளுக்குப் போய்க்கொண்டுதான் இருக்கிறேன்.

கடம் வாசித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்

முன் காலத்தில் சுந்தரமய்யரும், பழநி கிருஷ்ண அய்யரும்தான் கடம் வாசித்துக்கொண்டு இருந்தார்கள். இவர்கள் இரண்டு பேருடைய 'பாணி' தான் கடம் வாசிப்பது. ஆனால், பழநி கிருஷ்ண அய்யர் பாணியில்தான் கடம் வாசிப்பதில் ஒரு வடிவமைப்பு வந்ததெனலாம். அவர் பத்துவிரல் சொல்லும் சேர்த்து வாசிப்பார். அதன் பிறகு கடம்போய் விட்டது. பிறகு அதை மறுபடி கொண்டு வந்தவர் என்று ஆலங்குடி சோமு அவர்களைத்தான் சொல்ல வேண்டும். அவருக்கு, தந்தி விலாசம் என்று ஒன்று உண்டு, இப்போ கம்ப்யூட்டரில் ஈ மெயில் இருப்பது போல. தந்தி விலாசத்தில் நம் பெயரையும் இணைத்து விட்டால், நாம் எங்கிருந்தாலும் கடிதம் வந்துவிடும். 'கடம்' என்றே தந்தி விலாசம் கொடுத்து, 'கல்கி'யில் கால் பக்கம் விளம்பரம் கொடுத்து கடத்திற்குத் தனியிடம் கொண்டுவந்தார் ஆலங்குடி சோமு. எம்.கே. தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள் ஆகியோருக்கு கடம் வாசித்தார். வில்வாத்திரி அய்யர் எம்.எல்.வசந்தகுமாரிக்கும், கே.எம்.வைத்தியநாதன் டி.கே.பட்டம்மாளுக்கும் வாசித்தார்கள். இவர்களைத் தவிர வேறுயாரும் அப்போது கிடையாது.

அதன் பிறகுஆ ர்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ராவ், பாலக்காடு சுந்தரம் போன்றவர்கள் வாசித்துக்கொண்டு இருந்தார்கள். கே.எம். வைத்தியநாதனை என் அப்பாதான் முதன்முதலாகத் தயார் செய்தார். ஆலங்குடி சோமுதான் முதன் முதலாக எடின்பரோ விழாவில் வாசித்தவர். அதற்கு முன்பாக எஸ். பாலசந்தர் வீணைக்கு, உமையாள்புரம் சிவராமன் மிருதங்கம், கடம் வாசிக்க வேலூர் ராமபத்திரன் வெளிநாடு போனார். எனவே நான்தான் முதன் முதலாக வெளிநாட்டிற்கு கடம் வாசிக்கச் சென்றேன் என்று சொல்லக் கூடாது. நான் அமெரிக்கா போகும்போது அகில இந்திய வானொலியில் நிலைய வித்வானாக வேலையில் இருந்தேன். அப்போதைய நிலைய இயக்குனர், எம்.எஸ். கோபால். அவர் எல்லோரையும் நிரந்தரப் பணியாளராக்க ஏற்பாடு செய்திருந்தார். அப்போது ஒரு திருப்புமுனை எனக்கு.

மற்றொரு திருப்பு முனை

1966ல் அமெரிக்காவில் கர்னாடக சங்கீதத்திற்காக, நங்கள் அமெரிக்கா போகிறோம். அங்கே, வசிக்கும் இந்தியர்கள்தான் சங்கீதம் கேட்க வருவார்க்கள். அமெரிக்கர்கள் அவ்வளவாக வர மாட்டார்கள். ஆனால், எம்.எஸ். அவர்கள், சங்கீதம் என்றால் என்ன, ராகம் என்றால் என்ன, யார் யார் சங்கீதத்திற்காக என்ன செய்து இருக்கிறார்கள், நிரவல் என்றால் என்ன, பாடும் பாட்டு என்ன ராகம், யார் இயற்றியது, அதன் பொருள் என்ன என்பன போன்ற அனைத்தையும் பட்டியலிட்டுத் தயார் செய்து அங்குள்ள மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். தாளம் பற்றியும் செய்தார்கள். அதைப் அச்சுக் கோர்த்து அதை பிரதி எடுத்து அனைவருக்கும் கொடுக்க, அதைப் பார்த்த மக்கள் அவர் பாடப் போகும் பாட்டு பற்றித் தெரிந்து கொண்டு அதை ரசிக்க ரம்பித்தனர்.'சாரசாக்ஷ' என்ற பாட்டு என்றால், என்ன ராகம், என்ன ஸ்வரம், நிரவல் எப்படி, என்ன தாளம் என்று எல்லாவற்றையும் தெளிவாக விவரமாக எழுதி அச்சில் கொடுத்தவுடன், இந்த சங்கீதத்தில் இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா என ச்சர்யப்பட்டுப் போனார்கள். மேலும் இந்தப் பாட்டில் இவ்வளவு விஷயங்கள் உண்டா என்ற பிரமிப்புடன் ரசித்துப் பாராட்டினார்கள். இந்தப் பெருமை எம்.எஸ். அம்மாள் அவர்களையே சாரும்.


சக்தி குழு

இது நடந்தது 1977ல். நான் அகில இந்திய வானொலியில் பணி புரிந்து வந்தபோது, ஜான் மெட்ரோ என்னும் கிதார் வாசிப்பவர் இந்தியா வந்தார். அவர், தான் ஒரு புதிதான குழு ரம்பிக்கப் போவதாகவும், அதில் நானும் இணையவேண்டும் என்றும் சொன்னார். 'சக்தி' என்று அந்தக் குழுவுக்குப் பெயர். எல்.சங்கர் இருந்தார். இதில் கிடார், தபேலா, வயலின், கடம் நான்கும் ஏற்படுத்தப்பட்டது. மிருதங்கம், தபலா இரு வாத்யங்களிலுமே தோல் சம்பந்த மாக ஒரே போல சத்தம் வருகிறது. சற்று வேறு மாதிரி, உலோக சப்தம் வர வேண்டும் என்றும் அதற்கு கடம்தான் ஏற்ற வாத்தியம், அதற்கு நான்தான் ஏற்றவன் என்று கூப்பிட்டார்கள். இது கர்னாடக இசையை போன்றது அன்று, 'பியூஷன்' என்ற இணைப்பு வகையைச் சார்ந்தது என்றும் தெரிவித்தார்கள். நான் கடம், மிருதங்கம் இரண்டும் வாசித்தேன்.
எல்லோரும் ஒருவர் பின் ஒருவராகத் தனித் தனியாக வாசித்ததையே வாசிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. நிகழ்ச்சியில் எல்லோருக்கும் சம பங்கு உண்டு. எனக்கு இதற்குப் போவதா, அகில இந்திய வானொலியில் நிரந்தரப்பணி நியமனத்தில் நிரந்தர வருமானத்தில் தொடர்வதா என்ற குழப்பம். அம்மாவுக்கு நான் வேலையில் தொடர ஆசை, குடும்பம் முழுமைக்கும் அதுதான் சரி என்று பட்டது. ஆனால் அப்பா மட்டும், 'நீ நன்றாக வாசிக்க ஆரம்பித்து விட்டாய். நீ கடத்தில் தனித்தன்மையுடன் செயல் படவேண்டும். நீ பிரபலம் கிவிட்டால் வானொலி உன்னைத் தானே கூப்பிடும். 'கபியூஷ'னில் சேர்வதுதான் நல்லது, நல்ல சந்தர்ப்பம் ஒரு முறைதான் கதவைத் தட்டும்' என்று சொல்லி என்னை அனுப்பினார். பிரதி பலன் பார்க்காமல் உழைக்க வேண்டும். வாழ்க்கையில் கஷ்டப்பட்டால் எல்லாம் தானே வரும். உழைத்தால்தான் உலக அளவில் உயரலாம் என்றும் கூறினார். அத்துடன், 'உன் எண்ணப்படி யோசித்துத் தேர்வு செய். உனக்கு முழு சுதந்திரம் உண்டு' என்றும் சொன்னார்.

வானொலி வேலை

அப்போது ஈமனி சங்கர சாஸ்திரிகள் நிலைய இயக்குனராக இருந்தார். எல்லோரையும் நிரந்தரம் செய்யப் போகிறோம் என்று கூறியவுடன் அனைவரும் கையெழுத்துப் போட ஓடினார்கள். எனக்கு மட்டும் ஒரே குழப்பம். அப்பா சொன்னதும், இந்த வேலையின் நிரந்தரத் தன்மையும், வருமானமும் எல்லாமே என் மனதினுள் ஓடியது. அப்போது, வானொலியில் நல்ல சம்பளம். சங்கர சாஸ்திரியும் என்னை கையெழுத்துப் போட வேண்டாம் எதிர்காலத்தில் தனித்து நிற்கலாம் என்றார். கையெழுத்துப் போடவில்லை என்றால் நிரந்தரம் கிடையாது. கையெழுத்துப் போட்டுவிட்டுப் போனால் விடுப்பும் உண்டு. ஆனால் நான் வேலையை 'ரிசைன்' பண்ணிவிட்டேன். அதில் எல்லோருக்கும் மிகுந்த கோபம்.

நான் 'சக்தி' குழுவுடன் இணைந்து 'பியூஷன்' வாசிக்க அமெரிக்கா சென்றேன். அப்படியே 'பிளேட் டிரம்' என்ற குழுவில் இணைந்து வாசிக்கஆ ரம்பித்தேன். நான் அந்த முடிவு எடுத்ததால்தான் வித்வான்கள் யாருக்கும் கிடைக்காத 'கிராமி அவார்ட்' எனக்குக் கிடைத்தது. இது 1990ல் கிடைத்தது. அங்கே கற்றுக் கொடுக்க 1994ல் கூப்பிட்டார்கள். அப்போது எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அப்பாதான் எனக்கு கற்றுக் கொடுத்தார். எனக்கு குரு, தெய்வம், எல்லாமே அப்பாதான். ஏனெனில் எனக்கு கிரகிக்கும் சக்தி அதிகம் கிடையாது. எப்போதும் விளையாட்டுத் தனமாயிருப்பேன். யாரிடம் விட்டாலும், அவர்கள் அடிப்பார்கள், திட்டுவார்கள். நம் மகன் கஷ்டப்படக் கூடாது என்று எனக்கு அப்பாவே சொல்லிக் கொடுத்தார்.

காஞ்சி மடத்துடன் என் அனுபவங்கள்

இப்படி நிறைய வாசித்துக்கொண்டு இருக்கும் போது எனக்கு காஞ்சி சங்கர மடத்தின் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் அருள் கிடைத்தது. மடத்திற்கு 88, 89 லிருந்தே போவேன். அவர்கள்தான் தெய்வம் என்று எண்ணி உள்ளேன். எம்.எஸ் அம்மாவுடன் மடத்தில் வாசித்திருக்கிறேன். அப்பா இறந்து போன பிறகுதான் எனக்கு கலைமாமணி போன்ற எல்லாப் பட்டங்களும் கிடைத்தன. அக்காலத்தில் சங்கீத நாடக அகாடெமி விருது பிரதான வித்வான்களுக்குத்தான் கிடைக்கும். பிறகு வயலின், மிருதங்கத்திற்குக் கொடுக்க ஆரம்பித்தனர். உப பக்க வாத்தியங்களுக்கு கிடையாது. இவர்களையெல்லாம் தாண்டி கடத்துக்கு கிடையவே கிடையாது. ஆனால் எனக்கு சங்கீத நாடக அகடெமி அவார்டு கிடைத்தது. கிடைத்தவுடன் பெரியவரிடன் சென்றேன். சீர்வாதம் வாங்கப் போனேன். அவரிடம் கூறியபோது, 'இது அவார்டா, இல்லை விருதா?' என்றார். இரண்டிற்கும் வித்யாசம் எனக்கு புரிய வில்லை. 'என்ன அவார்ட் பணம் அவார்டா, எவ்வளவு, ஒருதரம் தான் கொடுப்பார்களா அல்லது ஒவ்வொரு ஆண்டுமா?' என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

டெல்லியில் அப்போது அவார்ட் வாங்குகிறவர்கள் கச்சேரி செய்ய வேண்டும். பாட்டு, வயலின், மிருதங்கம் எல்லாம் தனித்தனியாக வாசித்து விடுவார்கள். ஆனால் கடத்திற்கு தனியாக கச்சேரி கிடையாது. மிருதங்கத்துடன்தான் வாசிக்க வேண்டும். அப்போது செகரெட்டரி, 'கடத்திற்கு தனி அந்தஸ்து கொடுத்து இருக்கிறோம். நீங்கள் தவிலுடன் வாசிக்கிறீர்களா' என்றார். சரி என்று சொல்லிவிட்டேன். வலையப்பட்டியுடன் வாசிக்க வேண்டும். அவர், நான் தனியாக தவில் வாசிக்க மாட்டேன் எனக்கு உடன் திருவிழா ஜெய்சங்கர் நாகஸ்வரம் வாசிக்க வேண்டும் என்று கூறி விட்டார். சரி என்று சொல்லிவிட்டனர். இப்போது நாதஸ்வரத்திற்கு தவில், கடம் என்றானது. முதன் முதலில் நாதஸ்வரத்திற்கு நான் கடம் வாசித்ததால் பெரும் பெயர் கிட்டியது. உப பக்க வாத்யம் மாதிரி இல்லாமல் நாகஸ்வரத்திற்கு கடம் என்றானது. அவர் வாசிக்க, எனக்கு பரிபூரணமாக என்னுடன் இருக்கும் காஞ்சிப் பெரியவரின் ஆசியுடன் நான் வாசிக்க, ரசிகர்கள் மனதில் மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்து. அது எனக்கு பெரிய கைதட்டலை வாங்கிக் கொடுத்தது.
ஆர்.வெங்கட்ராமன் அவர்கள்தான் அப்போது ஜனாதிபதி, கிரீஷ் தான் செகரெட்டரி. இதுவரை இந்த அவார்டுக்கு, 10,000, 15,000 ரூபாய்தான் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். இந்த ண்டு முதல் 25,000 ரூபாயாக ஆக்குகிறோம் என்று சொல்லி, ரூ25,000/- கொடுத்தார்கள். காஞ்சிப் பெரியவரின் கேள்வியின் அர்த்தம் எனக்கு அப்போதுதான் புரிந்தது. திரும்பி வந்தவுடன் அப்பாவிடம் இதைக் கூறினேன். பதினைந்தாயிரம்தான் தருவார்கள். எனவே அந்தப் பத்தாயிரத்தை பெரியவர் பாதத்தில் சமர்ப்பித்துவிடு என்றார். பெரியவர் லேசில் பாதம் காட்ட மாட்டார். அவர் என்னை வாசிக்கச் சொன்னார். என்னுடைய அண்ணா, அவர் நிறுத்தச் சொல்லும் வரை வாசி என்றார். நீயாக நிறுத்தாதே என்றும் சொன்னார். நான் அரை மணி வாசித்தேன், ஒரு மணி வாசித்தேன், அவர் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. வாசித்து வாசித்து என்னிடமிருந்த சரக்கெல்லாம் தீர்ந்துவிட்டது. அவர் பாட்டுக்கு வருபவர்களுடன் பேசுகிறார். பிரசாதம் தருகிறார். நானோ வாசித்ததையே திரும்ப வாசிக்கிறேன். எனக்கு அசந்து போய்விட்டது. பெரியவர் திரும்பிப் பார்க்கும் போது, போதும் வா என்று கூப்பிடுவார் என்று எண்ணினால் இன்னும் வாசி என்று சொல்லிவிட்டார். எனக்குக் கையெல்லாம் ஓய்ந்து கண்களில் கண்ணீர் வந்து விட்டது. அதன் பிறகும் ஒரு மணிநேரம் கழித்து போதும் என்றார். நான் உன்னை வாசி என்றேன். அதைத் திருப்பிப் போட்டு வாசி என்றார். இது சிவனுக்கு அர்ப்பணம் என்று சொல்லி பிரசாதம் கொடுத்தார். சீர்வாதம் செய்தார். அவர் பாதத்தில் 10,000 ரூபாயை வைத்து காணிக்கையாக செலுத்தி விட்டு வந்தேன்.

கதையல்ல, உண்மை

அதன் பிறகு நிறைய வாசித்தேன். ரவிசங்கர், அல்லா ராக்கா, ஹரிப் பிரசாத் சௌராஸ்யா போன்ற வட இந்தியக் கலைஞர்கள் பலருடனும் வாசித்தேன். ஒரு மாதம் டூர் ஜெர்மனியில். நான், ஜாஹிர் ஹுசைன், ஹரிப்பிரசாத் சௌராஸ்யா எல்லோரும் போயிருந்தோம். எல்லாம் முடிந்து கடைசிக் கச்சேரி. ஏர் போர்ட்டில் இறங்கியவுடன் டிராலி என்ற தள்ளு வண்டி இருக்கும். இங்கேயும் இருந்தது. னால் இங்கே கைப்பிடியைப் பிடித்தால் நிற்கும் விட்டால் போய்விடும் என்பது எனக்குத் தெரியாது. நான் மற்ற பொருட்களுடன் கடத்தையும் வைத்துவிட்டு, கையை விட்டுவிட்டேன். வண்டி நேரே சென்று சுவற்றில் மோதி கடம் சுக்கல், சுக்கலாக உடைந்து விட்டது. ஜெர்மனியில் இருந்து எழுபது கிலோமீட்டர் தள்ளிக் கச்சேரி. என்ன செய்வது என்று ஒருவருக்கும் ஒன்றும் புரிய வில்லை. ஒருமணி நேரம் பயணம் செய்து கச்சேரிக்குச் செல்ல வேண்டும். அவர்கள் 'கொன்னக் கோல்' சொல்லி விடுங்கள்' என்றனர். முதலில் ஒரு மணி நேரம் ராகம் வாசிப்பார்கள் அப்புறம்தான் தபலா, கடம் எல்லாம். நான் அவர்களை போகச் சொல்லிவிட்டு, பசை ட்யூப் ஒன்றும் கொஞ்சம் கயிறும் வாங்கிக் கொண்டேன். 'க்ளு' (GLUE) என்பது 'பெவிகால்' போன்றது. அதைக் கயிற்றில் தடவி கடம் உருவத்திற்கு அத்துடன் ஒட்டி விட்டேன். தட்டிப் பார்த்தேன் சுருதி மிகச் சரியாக இருந்தது, பெரியவர் ஆசிதான். கடத்தைக் கட்டவோ ஒட்டவோ முடியாதுதான். அங்கு அவர்கள் ராகம் வாசித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒட்டிக்கொண்டு கடத்துடன் வருவேனா என்ற சந்தேகம்தான். வாசிப்பவர்களுக்குத் தெரியும் கடம் சுருதி சேராது. 'சுருதி சேர்ந்தால் கடம், இல்லாவிட்டால் சங்கடம்' என்று ஒரு பழ மொழி உண்டு

நான் கடத்துடன் மேடை ஏறி சுருதி தட்டிப் பார்த்தேன் மிக சரியாக இருந்தது. உடைந்திருந்த கடம் முழு ரூபத்திற்கு வந்திருந்தது. அனைவருக்கும், -விஷயம் தெரிந்தவர்கள் அனைவருக்கும் - ஒரே ச்சரியம். அன்று மிகவும் நன்றாக வாசித்து மிகப் பெரிய கைதட்டல் வாங்கினேன். இது மிகப் பெரிய அதிசயம் இல்லையா? இது நடந்தது பெரியவரின் ஆசியால்தான். அதைவிட மிகப் பெரிய அதிசயம், கச்சேரி முடிந்து வந்தால், கடம் சுக்கல் சுக்கலாகப் போய்விட்டது. இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி ஆகும். கடம் உடையும், வேறு கடம் எடுத்து வாசிப்பார்கள், ஆனால் இது இதுவரை யாருக்குமே நடக்காத ஒரு அதிசய நிகழ்வு கும். இதை நான் புகைப் படம் எடுத்துக்கூட வைக்கவில்லை. நம்புவது கூட கடினம்தான், ஆனால் உண்மை.

வாசிப்பது கடவுளுக்கு மட்டும்

என்னுடன் கற்றுக் கொண்டவர், சாமிநாதன் என்று ஒருவர். அவர் இப்போது இல்லை. என்னுடன் கடம் படித்தவர்கள் யாரும் இல்லை. காரைக் குடி மணிக்கு என் அப்பாதான் சொல்லிக் கொடுத்தார். ஜி.என்.பாலசுப்ரமணியம் பாடி, பாலக்காடு மணி அய்யர் மிருதங்கம் வாசித்த ஒலிநாடாவை நானும் காரைக்குடி மணியும் போட்டுக் கேட்டு நிறைய பயிற்சி எடுத்து இருக்கிறோம். அதை ராய்ந்தும் இருக்கிறோம். நாங்கள் - அதாவது நானும், காரைக்குடி மணியும் - ஒரே பாணியைச் சார்ந்தவர்கள். நான் இப்பொது அதிகம் கச்சேரிகளுக்கு வாசிக்கறதில்லை. வாசிக்க முடியும். ஆனாலும் கடவுளுக்கு என்று மட்டும் வாசிக்கிறேன். என் மகன் செல்வ கணேஷ், நான் வாசித்துக்கொண்டு இருந்த 'சக்தி' குழுவில் ஜாஹீர் ஹுசைனுடன் வாசித்துக்கொண்டு இருக்கிறான்.

கை கொடுத்த பாஷ்யம்

நான் மற்றொரு சம்பவத்தையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். நான் முதல் முதலாக, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாளுடன் அமெரிக்கா செல்லப் போகிறேன். நாளை காலை நான்கு மணிக்கு விமானம் ஏற வேண்டும். எனக்கு அவர்களின் சுருதிக்கான கடம் கிடைக்கவில்லை. எங்கெங்கோ கேட்டுப் பார்த்துவிட்டேன். எந்தக் கடத் தயாரிப்பாளரிடமும் இந்த சுருதியில் இல்லை. கே.எம். வைத்தியநாதன் அவர்களிடமும் கேட்டேன். கிடைக்கவில்லை. என் தம்பி சுபாஷ் சந்திரன் தாம்பரத்திலுள்ள பாஷ்யம் என்பவரிடம் இந்த சுருதிக்குச் சரியாக கடம் உள்ளது என்று கூறினார். நான் காலை பத்து மணிக்கு அவரிடம் போய்க்கேட்டேன். எந்தக் கலைஞரும் தனக்கு சந்தர்ப்பம் வரவில்லையே என்றுதான் எண்ணுவார்கள். ஆனால், அவரிடம் கேட்டபோது எந்தத் தயக்கமும் இல்லாமல் இதை எடுத்துக் கொண்டு போய் வாசியுங்கள் என்று கடத்தை கொடுத்தார். அப்படியென்றால் அவருடைய குணம், பெருந்தன்மை ஆகியன புலப்படும். அவர் கொடுத்த கடம் இன்றும் நாத வடிவில் ஊர் முழுவதும் உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டுதான் உள்ளது. அப்பேர்ப்பட்ட இந்த பாஷ்யம் என் வீட்டிற்கு வந்து என்னைப் பற்றி எழுதுகிறார் என்றால், எனக்கு மிகவும் பெருமையாய் உள்ளது. நான் அவருக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். நான் இந்த நிலைமைக்கு வந்ததற்கு முக்கிய காரணமே திரு பாஷ்யம் தான்.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

என் அப்பாவின் வார்த்தைகளை இறுதியாகப் பதிவு செய்யலாம் என்று எண்ணம். என் அப்பா, 'நீ முன்னேற வேண்டும் என்றால், அவமானப்பட வேண்டும். தைரியம் வேண்டும். துணிச்சல் வேண்டும். கடல் அலை ஓய்ந்து சமுத்திரத்தில் குளிப்பது என்றால், அது இயலாத காரியம். எனவே வாழ்க்கையில் முன்னேற, துணிவே முக்கியம்'' என்று உபதேசித்தார். அது உண்மைதானே?