Saturday, September 5, 2009

திரவத்தினுள் திடமும், திடத்தினுள் திரவமும்


காலடியில் நானிருக்கும் பூமி, சற்றே குலுங்கியது.

முன்பெல்லாம், உடல் முழுதும் தரைமேல் பரவ பாம்பு போலக் கிடக்கும் பொழுது-தலை முதல் கால் வரை உடல் அழுந்தித் தரை கிடக்க- அதிகம் பரவிய உடலின் ஏதோ ஒரு பாகத்தில் (உற்றுக் கேட்டால்) உணருவேன், பூமியின் குலுக்கலை.

ஒளிப் பந்து அதி வேகம் கொண்டு சுழன்று கொண்டிருந்தது அன்று; இன்றும் கூட. எப்போதும் சுற்றிக் கொண்டு உள்ளது சூரியன்.

அன்றொரு நாள், பல கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள், ஒளிப்பந்தின் சிறு துளி உருண்டையை விட்டுச் சிதறி வெளியே விழுந்தது.
அதுவும் ஒரு ஒளித் துண்டாகவே இருந்திருக்கலாம். உருகி ஒழுகிய ஒரு துளி திரும்ப ஒடிக் கொள்ள இயலாமல், மேலிருந்து கீழிறங்கி தானும் தனியே உருளத் தொடங்கியது.

ஆனால், அதுவோ தனது உஷ்ணத்தைத் தக்க வைக்க இயலாமல் சற்றே குளிரத் தொடங்கியது. ஒளிப் பந்தின் விழும் துளியும் உருண்டைதானோ?
இரு பாதங்களின் அகலம் ஒரு சதுர அடி என சிறு சதுரம். முதலில் குளிரத் தொடங்கிய பகுதி உலகின் முதலில் கெட்டிப்பட்ட எனது நிலம்.
கழனியிலிருந்து வெட்டிப் பரத்திய களிமண்ணின் ஓரம்தானே முதலில் காயும்?

காய்ச்சிக் கொட்டிய இனிப்பின் சூடும் ஒரு மூலையில் முதலில் ஆறும்.
எனவே ஓர பூமியோ என் நிலம்? எனவேதான் எப்போதுமே என் பூமியில் நில அதிர்வு உணரப்படாத ஒன்றாகவே இருந்து வந்தது. சில நாட்களுக்கு முன் வரை, அனுபவம் அற்றுத் திரிந்தோம் நாங்கள்.

மெல்ல மெல்ல ஒளிப் பந்தின் ஒரு துளி மேற்பரப்புக் காய்ந்து கெட்டி பட்டது.

ஆனாலும், தன்னுள்ளே, வெகு உள்ளே இன்னமும் திரவமாகத்தான் தகித்துக்கொண்டு இருக்கிறது. அடுக்குப் பாறைகளும், கனிமப் பொருட்களும், கடலும் மணலும், மலையும் பள்ளமும், மேடும் கொண்டு, நதியும் நெருப்பும், மரமும் உயிரும் கொண்டு தன்னை நிறைத்துப் போர்த்தி நிற்கிறது பூமி.
சுழலும் பூமியில் நீர் சிதறாமல் நிற்கிறது கடலில். நதியோ எப்படி யெப்படியோ ஓடிக் கடலில் கலக்கிறது கதி மாறாமல். வேர்கள் பூமியில் பின்ன, கிடக்கும் தாவர உயிர்களும் பிடிப்பு மண்ணில் கொண்டு கட்டிக் கிடக்கின்றன தங்களை.

பூமி குலுங்கியது அப்போதெல்லாம் கற்பனையில்தான். எப்போதும் கற்பனைதான்.

உறக்கத்திலிருந்து எழுப்ப அப்பா தலையணிக்கடில் காலிட்டுக் குலுக்கும் போது தலை குலுங்குமே அது போன்றா? எப்போதேனும் துடிக்குமே என் உடலின் மேற்பரப்பு அது போன்றா? தோலின் மேற்பகுதியில், அடியிலிருந்து எதோ நெம்புவது போல் விட்டு விட்டு மேழும்பும். எப்பகுதியிலும், எந்த நேரமும். என் உடல் என்பதாயினும் அதன் கட்டுப்பாடு என் வசம் இல்லை.
இடது தோளும் கண்ணும் துடிப்பது பெண்ணுக்கு நல்லது. சகுனம் சொல்லும். 'எந்தன் இடது தோளும் கண்னும் துடிப்பதென்ன? இன்பம் வருகுதென்று சொல் சொல் சொல் கிளியே' பாட்டுப் பாடும்போது சரியா யிருக்கும். எழுதியதோவெனில் 'எந்தன் இடது தேளும் கண்ணும் துடிப்ப தென்ன, சொல் சொல் சொல் கிளியே' கால்களற்றும் முளைத்தும் என. வெகு நாட்கள் வரை கேலிக்கு ஆளான வரிகள்.

பூமி ஆணா, பெண்ணா? அதற்குத் துடிப்பு வலப்புறமா? இடப்புறமா? உருண்டைக்கு எது வலது, எது இடது? எது கிழக்கு, எது மேற்கு? என் வீட்டில் நின்றால் இடதும் வலதுமாக இருக்கும் வீடுகள், இன்னமும் சில அடிகள் நடந்து சாலை கடந்து நான் நின்றாலோ இடதும் வலதும் இடம் மாறிப் போகின்றன பிரதிபலிப்புப் போல்.

இடமும் வலமும், வடக்கும் தெற்கும் நிற்கும் இடத்திற்கும் கடக்கும் பகுதிக்குமாக மாற்றப்படுகின்றன. அல்ல. அவைகள் அங்குதான் இருக்கின்றன. நகருவது நானும் என் மனமும் ஏற்கனவே சொல்லப்பட்ட, உண்டாக்கப்பட்ட கணக்குகளும் மாத்திரமே.

தூரத்தில் ரயில் வரும் சமயம் நடை மேடைமெல்ல நடுங்கும், இலேசாக.
விரைவு வண்டிக்கு சிறிது அதிகம் அதிரும். அதுதான் குலுக்கலா?
"குலுக்கி அளடீ. தலை தட்டிப் போடாதே. தலை ரொப்பி அள. ஒரு குலுக்கலில் முக்கால் ஆகும்."

பூமி குலுங்கினால் எது, எதனுள் செல்லும்? பூமி ஏற்கனவே கெட்டிப் பட்ட பகுதிகள் கொண்டிருப்பது. மேலிருக்கும் வஸ்துக்கள் உள் நுழைய, உள்ளிருப்பவை வேறொரு பக்கம் வெளியேறி இடம் தரலாம். அல்லது அடுக்குகள் கலைக்கப்பட்டு உதிரி உதிரியாய் இடம் ஏற்படுத்தித் தரலாம்.
"போடீ, பைத்தியம். எப்ப பார்த்தாலும் எதயோ யொசிச்சுண்டு. எங்க ஊர்ல அடிக்கடி பூமி நடுங்கும். தூளி கொழந்தையோட ஆடும். பாத்திரம் விழும். சித்த நாழிக்கெல்லாம் சரியாயிடும். சீதாதேவிய, பூமி நடுங்கி உள் வாங்கிண்டு திரும்பவும் மூடினூடுத்து தெரியுமா? பூமி தெய்வம் டீ." தெய்வம் கொல்லுமா? பூகம்பத்தில் எத்தனை உயிர்கள் அழிகின்றன? தெய்வம் நின்று கொல்லும். குலுங்கியும் கொல்லும்.

காலடியில் ஒரு சதுர அடி பூமி குலுங்கியது. உணர்வதற்கு முன்பாக முதல் பதிவு எப்போது?

அடுக்ககத்தில் குடியிருந்த போது நாற்காலி ஆடியது. துணியில் இட்டு உடலை உருட்டுவது போல சிறிது அசைந்தது, ஆடாத நாற்காலி. சில நாட்கள் முன்பாகத்தான் குஜராத்தில் குலுக்கலையும், மற்ற உயிர்களின் குவியலான உயிரற்ற உடல்களையும், சிக்கி இருக்கும் உயிருள்ள உடல்களையும் கண்டேன் ஊடகங்களின் வாயிலாக.

உடன் எனது நாய் குட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு கீழிறங்கி ஓடினேன். யாரும் வெளியில் இல்லை. தொலைக்காட்சியில் அனைவரும் ஐக்கியம். நொடிகளில் தொலைக்காட்சியின் அடி வரிகளாக தமிழ் நாட்டில் சில பகுதிகளில் குலுக்கல் உணரப்பட்டதென்றவுடன் நிறைய முகங்கள், நிறைய குரல்கள், திறந்த வெளியில்.

திரும்பக் குலுங்கும். எதை எதை எடுப்பது? யார் உள்ளே போவது? போகும் போது குலுங்கி விட்டால்? எல்லோருக்கும் ஒரே பயம். பணக்காரன், ஏழை, மேல் சாதி, கீழ் சாதி, மதம் எல்லோருக்கும் ஓரே பயம். எல்லோரும் ஓர் இனம்.

தொலைபேசியிலும், கைப் பேசியிலும் உறவு நட்பு விசாரிப்புக்கள். தலை சுற்றியது. 'என்னை நீ தள்ளினாயா? என்ன என் கட்டுப்பாடற்று வாணலி அசைகிறது? எங்கே பாத்திரம்? எனக்கு என்ன ஆச்சு? உங்களுக்கு?'
குலுங்கிய அதிர்ச்சியில் எல்லோரும், எல்லோருடனும் பேசினார்கள் எதன் மூலமாவது. சில நொடிகள் திரும்பத் திரும்ப நினைவு கூறப்பட்டு பகிர்ந்து கொள்ளப்பட்டது.

நானும் உணர்ந்தேன். ரயிலின் தண்டவாள தட தடப்பு, விரைவு வண்டியின் அதிர்வு என எல்லாமே மேற்பரப்பில் மட்டுமே ஏற்படுவது என்பதை.
இந்த அதிர்வு உள்ளிருந்து. புறம் நோக்கி செலுத்தப்பட்டதாகத் தோன்றியது.
உள்ளே, இன்னமும் உள்ளே என்று பூமியின் நடுப்பகுதிலிருந்து எதோ பீரிட்டுக் கிளம்பியதோ?

"ஏண்டீ, வயத்திலே கொழந்தே வளையவருதா? அப்பப்போ கவனிச்சுக்கோ"
எந்த அசைவும் வெகு நாட்கள் வயிற்றுனுள் உணரப்படவில்லை. உயிரற்ற பிண்டமோ? எப்படித் துடிக்கும்? எப்படி? ஏறக்குறைய அசைவு பற்றி மறந்த நிலை. நிறையப் பேர்களுடன் உரையாடலும், பகிர்வுமாக இருந்த போது, சட்டென்று வயிற்றின் கீழ் பகுதிக்கும் சற்றே மேலே, மத்தியப் பகுதிக்கும் சற்றே இறக்கமாக வயிற்றினுள் நான் அறியாமல் சென்று விட்ட பல்லி பூச்சியைப் பிடித்து, அதைத் தரையில் தலையால் அடித்துக் கொல்வது போல் வயிற்றின் கோளத்தில் ஒரு அசைவு.

அசைவு உணரப்படும் முன்பாக முடிந்துவிட்டும் இருந்தது. அப்புறம் அடுத்த உணர்தலுக்காக நிறையக் காத்திருக்கவும் நேர்ந்தது.

இந்த உள் துடிப்பும் உடல் எனதாயினும், கட்டுப்பாடு எனதன்றி அதன் போக்கில். என் உடல் எனது மட்டுமே என்பது ஒரு ஜோடிக்கப்பட்ட பொய்யாய் உணர்ந்தேன். உடைமைகளும், கட்டுப்பாடுகளும், நடை பெற்றவை களும், நடைபெற இருப்பவைகளும் கூட பூமியின் மேற்பரப்பில் நீரைப் போன்று அதனதன் வழியில் தீர்மானிக்கப்பட்ட முன் பதிவின் வழியில் பயணம்.

தோலின் அடிப் பரப்பிலிருந்து மேல் தள்ளும் துடிப்புக்கும், உள்ளிருந்து வெளிக்கிளம்பும் துடிப்பிற்கும் வேறுபாடு அகப்பட்டது. தோலின் கீழ் அசைவு கண்ணுக்குப் புலனாகிறது. விரல் உணர்கிறது. சிறு பகுதியில் சிறு அசைவு.
வயிற்றினுள் அசைவு வேறு.

தரையின் மீது அழுந்திக் கிடந்தேன். தரை அசையாமல் கெட்டிப்பட்டுக் கிடந்தது. தரையில் கீழ் தளத்திலிருந்து ஒரு அதிர்வு. பூமியிடம் நான் கோபித்துக்கொண்டேன். இப்போதுதானே கெட்டியாய் இருந்தாய்? ஏன் கொழகொழத்தாய்? சமாதானம் அடைந்தேன். லாரியின் அதிர்வாயிருக்கும் என்று. சில மணிகளில் ஊடகங்களில் உலகத்தின் ஏதோ மூலையில் ஏற்பட்ட அதிர்வு பற்றிக் கூறப்பட்டது.

அதன் பிறகு நான் அடிக்கடி வெறும் தரையில் அழுந்திக் கிடப்பேன். பொறுக்குத்தட்டி மேல் பகுதி கெட்டிப் பட்டுப் போயிருந்த பூமியின் உட்புறம் அழுகத் தொடங்கி விட்டதோ, மிகவும் பழுத்த பழம் போல். அவ்வப்போது அதிர்வு செய்தியாய் வராமல் முன்னால் என்னால் உணரப் பட்டும், பின்னால் ஊடகங்களின் வாயிலாக அறியப்பட்டும் நிகழ்ந்தன. ஜப்பானில், ரஷ்யாவில், ரிக்டர் அளவில், உயிர் பலியில், முன்பான அளவுகளில், எத்தனை ஆண்டுகளுக்குப் பின் என்பது போன்ற எல்லாக் கணக்குகளும் எண்ணிக்கை முன் நோக்கியும் பின் இழுத்துமாக அங்கு இங்கு என கோடுகள் மேலேறி கீழிறங்கி ஒன்று இரண்டு என்ற எண்களாக வெளிப்பட்டன, மனித அறிவு மற்றும் விஞ்ஞானத்தின் மூலமாகவும்.

தரையில் அமிழ்ந்து கிடந்து பூமியுடன் உதடு பொறுத்தி பேசத்தொடங்கினேன். இன்னமும் எத்தனை உயிர்கள் உனக்குத் தேவை? நீ கெட்டியானதால்தானே நாங்கள் மேல் தங்கி உள்ளோம்? நீர் உன் மேல் அப்பிக் கொண்டு பயணம் செய்கிறது. அல்லது நிலையாய் நிற்கிறது. வேர்கள் பரத்தி மரங்களும் செடிகளும், அஸ்திவாரம் பரத்தி நாங்களும் மல்லாந்து கிடக்கிறோம்?

இந்த முறை மட்டும் மன்னித்துக் கொள். இன்னமும் குறைந்த பட்சம் ஒரு வாரம் எங்குமே குலுங்கமல் இருக்கிறேன். வாக்களிக்கிறேன். என்னிடம் சொன்னது பூமி. ஆனால், இதோ மனிதர்களைப் போல வாக்குத்தவறி ஒரு சதுர அடி நிலப்பரப்பில் என் உடலின் ஒரு பகுதி படர்ந்து கிடக்கும் காலடியில் பூமி குலுங்கியது. வாக்குத் தவறிய பூமியுடன் உதடு பொருத்தி உறவாட மனம் ஒப்பவில்லை. மறுபடியும் மன்னிக்கக் கேட்கும்.
நான் யாருடன் பகிர்ந்து கொள்வது இந்த பூமியின் அசைவை. நான் உணர்ந்ததை? இம்முறை சற்றே கூடுதல் நேரம் இடி முழக்கம் போல் உறுமி, உறுமி பொருமிக் கொண்டிருந்தது. முணுமுணுப்பாக இல்லாமல் உரத்த குரலில். நீண்ட அதிர்வு நீண்ட சேதம். அதிகம் அழிப்பு. எதைப் பிடித்திழுத்து நிறுத்த? எந்த முனையில் என் பூமியை நான் கட்டி வைக்க? நீரில் ஸ்திர மில்லா படகுக்கும், தோணிக்கும், கப்பலுக்கும் முளைகள் உண்டு, நிரந்தர கெட்டிப்பட்ட பூமியில். திரவம் நிலை அற்றது. நிரந்தரம் அற்றது. உருண்டோ டுவது. தங்காதது. எதையும் தன் மேல் தங்க விடாதது.

எனவேதான், பூமியை சாஸ்வதம் என்றெண்ணி நீரின் பிடியை இளக்கி நிலத்தில் பிடியை இறுக்கி வைக்கிறோம். மேற்பரப்பில் திரவம் தெரிகிறது தெளிவாய். ஆயின் அடிப்பரப்பு நெகிழ் மணலும் திரவ நெருப்பும் உணரப் படுவதே இல்லை, என்றென்றும்.

என்றாவது பீரிட்டு வெளியில் தெறித்து உயிர்கள் அழித்து, சாம்பலாக்கி, அனல் கக்கி தன் திரவம் வெளிப்படுத்தும் பூமி. ஆழத்தில் நீரையும் அடி ஆழத்தில் நெருப்பையும், அடுக்கிப் பிதுக்கிய மலைகளையும் கொண்டு உருண்டு கொண்டே இருக்கிறது பூமி.

மேலும் உள்ளும் கெட்டிப்பட்ட அறை சுவற்றில் உயிர் தரித்து, சுற்றிலும் நீருடன் நடுவில் திடமாய் உயிர் கொண்டு கோள வயிற்றினுள் உருண்டு கிடக்கிறது அசையும் உடல். எத்தனை உயிர்களை வாய் பிளந்து உள்வாங்கி முழுங்கிக் கிடக்கிறது கோள பூமி? யாறிவார்? எட்டாத தூரத்தில் எங்கோ ஓர் நாட்டில் குலுங்குகிறது பூமி.

உருண்டையான பந்தின் ஓர் புள்ளியில் ஏற்பட்ட அழுத்தம், அதன் சுற்றுப் பரப்பிலும் அதன் அழுத்தத்தின் அளவைக் கொண்டு விஸ்தீரணம் அடையும் என்ற விஞ்ஞான விளக்கத்தைக் கொடுக்கிறது வெகுதூர பூமிக்குலுக்கல் என் காலடியில் உணரப்பட்டு. ஊடகங்கள் உணர்த்தும் உன்பே அருகிலிருக்கும் சிலருக்கு உணர்த்த முற்படுகிறேன்.

எங்கு, ரிக்டர் அளவு என்ன, ஏதும் சொல்ல இயலாத ஓர் கணிப்பு நகைப்புக்கு ஆளாகிறது.யாரோ ஒருவருடனாவது சொல்லாமல் இருக்க இயலவில்லை. நம்பிக்கை மற்றவர்களுக்கு என் மீதும், எனக்கு பூமியின் மீதும் இல்லாமல் போயிற்று. நம்பிக்கை அற்ற பூமியுடன் எப்படி உரையாட இயலும்?
எப்படி உரையாடாமல் புறக்கணிக்க, எப்போதும் என்னுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் காலடி மண்ணை விட்டு?

என்றோ ஓர் நொடி அசைந்து உணர்த்திய வயிற்றுக் கரு அவ்வப்போது துடிக்கத் தொடங்கியது. சாப்பிடும் போதும் குளிக்கும் போதும், பஸ்ஸில், படுக்கையில் என் எந்த அசைவுகளியும் கணக்கில் கொள்ளாமல் தன் அசைவை நீருக்கு நடுவில் அடுத்து அடுத்து நிகழ்த்தத் தொடங்கியது. விருப்பம் இன்றியும், என் விருப்பமற்றும் என்னுடன் ஒட்டிக் கொண்டு என்னுள் உருவான அந்த நீருக்குள் மிதக்கும் அத்திடக் கோளம் மூழ்கி மூழ்கி மிதந்தது.

அண்டமும் உருண்டு அசைந்தது. உருண்டு கொண்டே அசைந்தது. பிண்டமோ ஓரிடத்தில் உருண்டு உருண்டு அசைந்தது. என் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத என்னுள் வளர் உயிரிடமும் உரையாடல் அற்றுப் போகாமல் தொடர்ந்து கொண்டே இருந்தது.

சிறு முட்டைகளோவெனில், உருளாமல் அசையாமல், திரவத்தின் நடுவில் தன்னுயிர் வளர்த்தது, அதன் துடிப்பை யாரும் அறியா வெளியில் கிடந்து. நீர் வற்றிப் போய் நீரும் உயிராக திரண்டு வெளிவந்தது யாருடனும் உரையாடாமல்.

இன்றோ பூமி என்னிடம் ஏதும் சொல்லவும் இல்லை. நானும் பேசவும் இல்லை.

கழுத்தை வயிற்றில் புதைத்துப் படுத்திருக்கும் மாட்டின் எந்த இடமும் தனித்தசையும் என் தொடுகையின் போதும், ஈயின் அமர்தலின் போதும். சுழிப்பு ஆங்காங்கே என்றாலும் மாடு ஒன்றுதானே.

பூமி சுருண்டு இருக்க அவ்வப்போது சுழித்துக் கொள்கிறது. சுழிக்கும் புள்ளியிலிருந்து ஒரு நேர் கோடு, ஒரு கோடு எப்போதும் என் காலடி மண்ணையும் இணைக்கிறது, புள்ளியில் விரிவடையும் ஒளிக்கதிர் திசை எங்கும் கதிர் பரப்புதல் போன்று. ஏதோ ஒரு கோட்டில் என் காலடி மண். என்னுடலில் ஊசியிட்டு அக்கதிர்கள் ஊடுருவி, ஊடுருவி உட்புகுந்து வெளி வந்து கொண்டிருக்கிறது எப்போதும். என்னுடல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது, அதிர்ச்சி களையும் அதிர்வுகளையும் பதிவுகளையும்.

உரையாடிக் கொண்டிருந்த பூமியும் என்னை நிராகரித்தது ஒரு நாள்.
ஊசி குத்தி ஊடுருவும் கதிர்களும் என்னைப் புறந்தள்ளின. ஒரு சதுர அடி காலடி மண்ணும் ஏமாற்றிவிட்டது.

என்னை உடல் அழுத்தித் தரையில் கிடக்கும் நொடிகளில் ஒன்றேனும் உணர்த்தி இருக்கலாம். என்னை உருண்டு கொண்டிருக்கும் பூமி வெளித்தள்ளி விட்டது.

பேரோசை, பெரும் அமைதி. பெரும் அமைதி, பேரோசை. பெரும் வலி, நினைவிழத்தல். பெரு நோய் வலியற்றது. பெரும் நம்பிக்கை மரணம். என்னை மற்றொரு மூலைக்குள் மூளையற்று அடைத்து விடுகின்றன இன்றைய நிகழ்வுகள்.

ஏதும் பதிவாகாமல் அலைந்து கொண்டிருந்தேன் பஸ்ஸிலும் ரயிலிலும். ரயிலில் பூமி உள்ளே, ஸ்திரமில்லாச் சக்கரத்தின் துணையில் பூமியை விட்டு அரையடி உயரத்தில் ஸ்திரமாக உட்கார்ந்து பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். கண்ணில் தென்படும் பரந்த பூமி எங்கும் ஆங்காங்கே, அசையும் வண்ணப் புதர்களாய் மனிதர்கள். வண்ணம் மிக்க உடைக்குள் பொருந்தாத ஒரு ஓரங்களில், கால்களில் செருப்பற்று, பெண்கள் புதிய இடங்களின் பரிச்சயம் அற்று, அந்த உணர்வற்று விளையாடிக் கொண்டிருந்தன குழந்தைகள்.
எல்லோருடனும் பலவகை அளவிலான, சிறியது முதல் பெரியது வரை, துணியால் கட்டப்பட்ட மூட்டைகள். அனைவரும் எனோ தங்களுக்குள் உரையாடல் அற்று, அமைதியாயிருந்தனர்.

கூட்டம் சளசளப்புக்கானது, அலறலுக்கானது, உரத்த குரலில் விவாதத்திற் கானது, ஒருவர் கதறிக் கூற மற்றவர்கள் கேட்கும் மேடைக்கானது. எதிலும் சேர்க்க இயலாத அதிகம் பெண்களும் குழந்தைகளும், நெளிந்து கொண்டிருக்கும் தூரத்தில் கூட்டம், மழை பெய்து ஆங்காங்கே தங்கிய நீர்ப் பரப்பை ஒத்திருந்தது. பிரதிபலிப்பற்ற, சலனமற்ற மௌனமான வண்ண நீர்ப் பரப்பு.

எல்லோரிடமும் ஏதோ ஒரு பீதி. நிறைய பெண்கள். நிறைய குழந்தைகள். நிறைய பயம். நிறைய இழப்பு. நிறைய சோகம். நிறைய மரணம். நிறைய, நிறைய. மறு முறையும் நிகழும் எனத் தீர்மானம். ஆயினும் எல்லாவற்றிற்கும் ஏதும் செய்ய இயலாத செயலற்ற நிலை.

ரஷ்யாவில் பூகம்பம், ஜப்பானில் நில நடுக்கம். பாகிஸ்தானில் நொறுங்கிய கட்டிடங்களும் நிகழ்ந்த பூமி அதிர்வும் என எல்லாம், எல்லாம், எல்லாமே பதிவாகியது உடனுக்குடன் என் கால் மண்ணில். நான் வசிக்கும் நிலத்தில் என் சக உயிர்களின் ஒட்டு மொத்த மரணமும், கரை தாண்டி மேலேறி வந்த கடலலையோ, அதன் முன்பான கடலில் உள்வாங்கலோ, அதன் முன்னான நில அதிர்வோ, ஏதும் தெரியாமல் பயணித்துக் கொண்டிருந்தேன் நான் பஸ்ஸிலும், ரயிலிலும்.

No comments: