Thursday, December 12, 2013

பஞ்சாயத்து,.. ஒரு மரணத் தீர்ப்பு

பஞ்சாயத்து,.. ஒரு மரணத் தீர்ப்பு, மற்றொரு பஞ்சாயத்து, மற்றுமொரு தீர்ப்பு. சமூகம் விசித்திரமான சித்ரவதைக் கூடமாகி விட்டது. கடந்த சில நாட்களில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட கௌரவக் கொலைகள் பதிவாகி இருக்கின்றன.. பிறகு பஞ்சாப்பில், இப்போது புதிதாக புலந்த் நகரில். அப்துல் ஹகீமின் கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. மற்ற சாதாரண கௌரவக் கொலைகளிலிருந்து (இவை கௌரவக் கொலைகளா?  அல்ல, உண்மையில் இவற்றை அகௌரவக் கொலைகள் என்று சொல்லுவதுதான் பொருத்தமாக இருக்கும்.) இது ஹைப்ரொபைல் நிகழ்ச்சி ஆகிவிட்டது. அமீர்கானின் ‘சத்யமேவ ஜயதே' நிகழ்ச்சியில் இடம் பெற்றிருக்கிறது. இப்போது உத்திரப் பிரதேச மாநில அரசும் அந்தக் குடும்பத்திற்கு பொருளாதார உதவி செய்யப்போகிறது. மேலும், கொலையை விசாரிக்கவும் உத்திரவிடப் பட்டுள்ளது. எது எப்படியோ, காரனம் ஏதுவானால் என்ன? மற்றும் ஒரு மோசமான வெறுக்கத்தக்க நிகழ்வு. முன் நாட்களைப் போலவே சமூகத்தின் நீதியையும் சாதியையும் நிலைநாட்ட ஒளி பொருந்திய ஒரு நிகழ்வு எனலாம் சமூகம். எப்போதும் போலவே இப்போதும் பல கேள்விகள் முளைத்துள்ளன.
    புலந்த் நகரத்தில் அடோலி என்ற கிராமத்தில் வசிப்பவர், அப்துல் ஹகீம். நவம்பர் மாதம் இருபத்தி இரண்டாம் தேதி அவர் அலற அலற சுடப்பட்டு கொல்லப் பட்டார். இருபத்து ஒன்பது வயதே ஆன அப்துல் ஹகீம் செய்த குற்றம் என்ன? மஹ்விஷ் என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதுதான். ஹிந்து சமூகத்தில் மட்டுமே சாதி என்ற விஷக் கொடுக்கு தன் விஷத்தைச் செலுத்துகிறது என்று இனி நம்பவேண்டாம். மற்ற சமூகத்தைச் சார்ந்தவர்களும் இதே  மனப் பாங்குடன்தான் இருக்கிறார்கள்.
    விவசாயத்தை நோக்கி சமூகம் மெல்ல மெல்ல எப்படி உறுதியாக வளர்ந்து வருகிறதோ, அதே போல சாதியின் நிலைப்பாடும் மெல்ல மெல்ல மிகவும் திடமாக வளர்ந்து வருகிறது. ஹிந்து மதத்தின் (மனு) சாஸ்திரத்தின் அடிப்படையில் பிரம்மாவின் கால்களில் உற்பத்தியான சூத்திரர்கள், மேல் சாதியினரின் அடிமைகளாகவும், வேலைக்காரர்களுமாக இருந்து வந்தனர்.
    விவசாயத்தை நம்பி இருந்த இந்த சமூகத்தின் வளர்ச்சி, அடிமட்டத்தில் இருக்கும் உழைப்பாளிகளான இந்த நான்காவது பிரிவினர்கள் என்று சொல்லப் படும் சூத்திரர்கள் இன்றி சாத்யமாகி இருக்காது. அதனாலேயே இவர்களைச் சுரண்டுவதற்கும், நாசமாக்குவதற்கும் மனு நீதியும் வேத சாஸ்திரங்களும் உண்டாக்கப்பட்டு கொண்டே வருகின்றன. உழைப்பாளர்களான இந்த மக்கள் இப்படியே இருக்கட்டும் என்பதில் அனைவரின் சுயநலமும் அடங்கி உள்ளது. ஹிந்து மதத்தின் எல்லாத் தரப்பினரும் இந்த சமூகப் படி நிலையை இன்னமும் வலுப்படுத்துவதற்கான முக்கிய நிலைப்பாட்டையும் எடுத்துள்ளனர். எல்லா இதிகாச, புராணக் கதைகளும் இதை திடமாக வளர்த்தெடுக்கின்றன. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் இந்த வகையன மதக் கருத்துக்கள், சாதி என்னும் நஞ்சு இந்திய சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரது நாடி நராம்பிலும் பரவி இருக்கிறது. அது இப்போது ஒரு மனப்பாங்காக மட்டும் இல்லை இங்கிருக்கும் ஒவ்வொருவரது உயிரணுக்களிலும் பரவி, அது ஒரு மரபணு என்றாகி விட்டது. குரங்கிலிருந்து உயிரியல் மாற்றம் மெல்ல மெல்ல நிகழ்ந்து மனித உருவம் அடைந்ததைப் போல, வால் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தாற் போல, வால் சுருங்கி இன்னமும் கடைசியில் ஒரு சிறு முடிச்சாக நிலைத்து விட்டாற்போல, கண்களில் மேலாக பரவி இருந்த ஜவ்வு மறைந்தாற் போல, சாதியும் மரபணுவில் கலந்துவிட்டு இருக்கிறது.  இயற்கையின் பருவ மாற்றம் இடத்திற்கு ஏற்றாற் போல, ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து அசாதாரணமாக, வெகு நீளமாக மாறியதோ, அதைப் போல என்றும் சொல்லலாம்.
    அப்துல் ஹமீதின் கொலை நிகழ்விற்குப் பின் இந்திய சமூகத்தில் இந்த மரபணு குணம் இன்னமும் ஒரு முறை மிகவும் சுடர்விட்டு பிரகாசிக்கிறது. இது மக்களின் க்ரோமோசெம்களில் ஒரு பகுதியாகி விட்டதோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. ஆலிகட் டெல்லியின் நெடுஞ்சாலையில் உள்ளது புலந்த் நகரம். அந்த முக்கியமான நெடுஞ்சாலையின் பின்புறம் உள்ளது, அடோலி கிராமம். அங்கு மஹ்விஷ், அப்துல் ஹகீம் இருவரும் வசிக்கிறார்கள். ஏறக்குறைய நூறு குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமம், முஸ்லீம் அதிகம் உள்ள ஒரு சராசரி கிராமம். இவர்கள் ஹிந்து மதம் சார்ந்த ராஜபுத்திரர்களிலிருந்து முஸ்லீம் மதத்தைத் தழுவியவர்கள். அவர்கள், தங்களை ராஜபுத்திர வம்சத்தினர் என்று மனத்தளவில் எப்போதும் எண்ணிக் கொண்டு வாழ்பவர்கள். மற்ற சாதியினர் இங்கு மிகக் குறைந்த அளவிலேயே வசிக்கின்றனர். இக்கிராமம் ராஜபுத்திரரின் ஜோத்தா பிரிவினரின் முக்கிய அதிகாரத்தின் கீழ் இருந்தது. குறைந்த அளவில் இங்கு ஃபகீர் எனப்படும் பிரிவினரும் வசிக்கிறார்கள். இவர்கள் முஸ்லீம் பிரிவினரில், அவர்களின் சாதீயப் பிரிவில் மிகவும் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பிரிவில் வருபவர்கள். உயர் பிரிவினரின் கருணையையும், உதவியையும் எதிர்பார்த்து இருப்பவர்கள். உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். இவர்களில் சிலர் தங்களின் சிறிய அளவிலான நிலத்தில் உழுது விவசாயம் செய்பவர்கள். நிலத்தின் உரிமையாளரும் கூட.. ஆனால், இந்த கிராமத்தில் வசிக்கும்  பலர் கட்டிடத் தொழிலாளர்களாக வேலை  செய்து வருகிறார்கள். அக்கம் பக்கத்திலு:ள்ள நகரங்களுக்குச் சென்று வேலை செய்கிறார்கள். நகரங்களுடன் தொடர்பில் இருப்பதால்,  இவர்களின் பிள்ளைகள் படிக்கவும் செல்கின்றனர். வேலையும் செய்கின்றனர்.

    அடோலி கிராமத்தில் ராஜபுத்திர ஜோத்தா குடும்பங்கள் இந்த ஏழை சமுதாயத்துடன் நல்லுறவு வைத்திருக்கின்றனர். ஒரு விதத்தில் இவர்களைப் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்று சொன்னாலும், சாதி சமூகத்தில் வேறுபாடு இருந்தாலும் இந்த இரு சமூகத்தினருக்கும் இடுகாடு ஒன்றுதான். இவ்வளவு சமமான இடம் இருந்தாலும் சாதியால் உயர்வு தாழ்வு இவர்களிடையே உண்டு.  ஆனால் பொருளாதார வேறுபாடு மிகவும் ஏற்ற தாழ்வு கொண்டதல்ல. சாதிப் பிரிவில் உண்டு. மஹ்விஷ்ஷின் தந்தை ஷகரூக் விவசாயி. ஒரு சில ஏக்கரில் விவசாயம்  செய்து கொண்டு இருக்கிறார். இந்த நிகழ்வால் மிகவும் வருத்ததில் இருக்கிறார். அப்துல் ஹகீம் இவருடைய வீட்டிற்கு அடுத்தாற்போல் வசித்து வந்தான். மஹ்விஷ்ஷுக்கும், அப்துல் ஹகீமிற்கும் இடையே ஏற்பட்ட ஈர்ப்பு என்பது சாதாரணமாக வரக்கூடியதுதான். ஆனால், இதன் முடிவு என்பது இன்றைய காலகட்டத்தில் பல இடங்களிலும் ஏற்படுவதைப் போலவே நிகழ்ந்தது. இவர்களிடையே காதல் ஏற்பட்டது. நவம்பர் 29, 2010ல் இருவரும் தங்கள் கிராமங்களிலிருந்து வெளியேறி திருமணமும் செய்து கொண்டுவிட்டனர். தங்கள் கிராமங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கும் தீவிரமான எதிர் விளைவுகளைக் கண்டு, தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள ஊரூராய் மறைந்து திரிகின்றனர். கடைசியில் டில்லியில் வாழத் துவங்கிகின்றனர். அங்கு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. அப்துல் ஹகீம் அங்கு ஆட்டோ ஓட்ட, ,பிழைப்பு நடந்து வந்தது.  இவர்கள் இருவரின் கிராமம், இவர்களின் ஒவ்வொரு தலைக்கும் 25000 இனாம் என்று  அறிவிப்பு செய்திருக்கிறது. இருவரும் பயத்தில் இருந்தனர். தேசிய மனித உரிமைக் கழகம், அகில இந்திய மகளிர் ஆயோக் ஆகியவற்றுடன் தங்கள் வாழும் பகுதியின் காவல் நிலையத்திலும் தங்கள் உயிருக்கு பாதுகாப்புக் கேட்டிருந்தனார். ராஜபுத்திர ஜோத்தா சமுதாயத்தின்  தாக்குதல்களுக்கு பயந்து அப்துல் ஹகீமின் குடும்பம் பக்கத்து கிராமமான பாட்காடிக்குச் சென்று விட்டது. அங்கு தங்கள் உறவினர்களுக்கு அருகாமையில் வாழத் துவங்குகின்றனர். அங்கு ராஜபுத்திர ஜோத்தா குடும்பம் இல்லாதிதினால் அவர்கள் அந்த இடத்தை பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர்.
    இதற்கிடையில் இரண்டாவது முறையாக கருவுறுகிறாள், மஹ்விஷ். எனவே ஜூலை 2012ல் இவர்கள் இருவரும், பாட்காடி கிராமம் வந்து அப்துல் ஹகீமின் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழத் துவங்குகின்றனர். அவர்கள் இங்கு பாதுகாப்பாக இருப்போம் என்று எண்ணினார்கள். காரணம், அமீர்கானின் ‘சத்யமேவ ஜயதே' நிகழ்ச்சியில் இவர்கள் பற்றிய விவாதம் எழுந்தது. வெறோரு இடத்தில் இவர்களுக்கு பாதுகாப்புத் தருவதாக வாக்குறுதியும் அளித்திருந்தனர். அந்தப் படக் குழுவினர். அதனால் இருவரும் சற்றே ஆறுதல் அடநிதிருந்தனர். இவ்வளவு இருந்தும், அப்துல் ஹகீம் கொலை செய்யப்படுகிறான். 

    இந்த வழக்கு சம்பந்தமான ஐந்து நபர்கலை குற்றவாளிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிடிக்க்ப்பட்டு இருக்கின்றனர். மஹ்விஷ்ஷுக்கு இன்னமும் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. மஹவிஷ்ஷுக்கு நன்றாகத் தெரியும், இந்தக் கொலை தன் உடன் பிறந்த சகோதரர்களால் செய்யப்பட்டதே என்று.
    நமது அறிவுஜீவிகள் பலர், நண்பர்கள் பலர், இது பற்றி கேள்விகளை எழுப்பி இச்சம்பவம் மற்றவற்றில் இருந்து வேறுபட்டது என்று பிரிக்கிறார்கள். இங்கு காதலர்கள் இருவரும் ஒரே மதத்தவர்கள். இதுதான் வேறுபாடு என்கின்றனர். ஒரே மதத்தில் செய்யப்படும் திருமணங்கள் ஆனாலும் பெரிய மனிதர்களின் மானம் போகிறது. 2007-ல் வங்காளத்தில் ரிஜ்வான் உர் ரஹ்மான், கம்ப்யூட்ட கிராபிக் கற்றுக் கொடுப்பவராக பணி புரிந்து வந்தார். அறிந்தும், அறியாததுமான இவரின் கொலை நிகழ்வில், இதே சாதியைச் சார்ந்த பலரும் மௌனமாயிருந்தனர். இது ஒரு உயர் தொழில் கொலைதான். ஏன் எனில், இவர் திருமணம் செய்து கொண்ட பிரியங்காஎன்ற பெண் மிகப் பிரபலமான தொழிலதிபர் அஷோக் தோதியின் மகள். இதில் காவல் துறையில் பணி புரியும் உயர் அதிகாரிகளின் ஆயுதங்களும் களம் இறங்கியுள்ளன. இதுவும் தெரியும். இன்னொரு புறம் தலைவி மமதா பானர்ஜி இதை இடதுசாரிகளின் வேலை என்றும் அரசாங்கத்திற்கு எதிரானது என்றும் பெருங்குரல் எழுப்புகிறார்.
    பரம்பரையான பஞ்சாயத்துத் தீர்ப்பானது காதலர்களுக்கு எதிரானதாக இருக்கிறது. அதாவது, அந்த உரிமை என்பது வாழ்தல் சார்ந்தது அல்ல. சாவதற்கானது. அவர்கள் இருவரும் ஒரே மத்தைச் சார்ந்தவர்கள் ஒரே இடத்தைச் சார்ந்தவர்கள். மாற்று சாதியினர், ஒரே சாதியினர் திருமணம் செய்து கொண்டாலும், அங்கும் மரணம் என்ற பெரும் பள்ளம் காத்திருக்கிறது.
    பீகாரில், கோபால்கஞ்ச் என்ற கிராமத்தில் நடந்தது இது. அங்கு ஒரு முஸ்லீம் சமூகத்தைச் சார்ந்த பெண்மணிக்கு அந்நிய ஆடவனுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்படுகிறது. பஞ்சாயத்துக் கூடி எல்லோர் முன்னிலையிலும் அவளுக்கு மரண தண்டனையைத் தீர்ப்பாக கூறப்படுகிறது. அவளைக் கொலையும் செய்துவிடுகின்றனர். இவ்வளவுக்கும் அந்தப் பெண், கல்வி அறிவு பெற்றவர். கிராம மேம்பாட்டுக்காகவும் உழைத்து வருபவர். தானே ஒரு மகளிர் சுய உதவிக் குழுவும் நடத்தி வருகிறார். தாலிபான்களின் தீர்ப்பு வழங்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.பஞ்சாப்பில், பீகாரில், இப்போது புலந்த் நகரில்.

மரியாதை, மானம் இவற்றை நிலை நிறுத்துவதற்காகவே செய்யப்படும் கொலைகள், தமது சாதீயப் பிரிவின், மதப் பிரிவின் கொடுப்பினை. நல்ல வேளை. பல சமயங்களில் சாதி வேறுபாடு காரணமாக கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. பொருளாதார நிலை இல்லாவிட்டாலும், வேறுபாடு இருந்தாலும். புலந்த் நகரத்தின் பிரபலமானவரான டி.பி. யாதவ் வின் பெண் பாரதி..-நிதீஷ் கட்டாரவின் நிகழ்வு இன்னமும் மனதில் பசுமையாக இருக்கிறது. நிதீஷ் பெரும் செல்வந்த பிராம்மணக் குடும்பத்தில் பிறந்தவர்.

    சாதி மதம் என்ற பேய் எல்லா மதத்தையும், எல்லா சமூகத்தையும் பிடித்து ஆட்டுகிறது. அதிகாரம் செய்கிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்தப் பாறை, இளகிவிடாமல், காலம் செல்லச் செல்ல இன்னமும் இறுகிப் போய் கூடுதல் கடினமாகிக் கொண்டு வருகிறது.
    யோசிக்க வேண்டிய காலம் இது. பகுத்து ஆராய வேண்டிய காலம் இது. பழைய பாரம்பரிய பொருளாதார ஏற்ற தாழ்வு என்ற பிரிவுகளுடன் கூடவே புதிய புதிய மாற்றங்களும் இப்போது ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்தப் பிரிவுகள் ஏன் இன்னமும் பலம் பெற்று திகழ்கின்றன? நம்நாட்டில் புதிய எழுச்சி நிலை ஏற்பட்டு, அந்தச் சொல் நவ ஜாக்ரன் ஏற்பட்டு 150 ஆண்டுகள் ஓடிவிட்டன. பத்தொம்பாதாம் நூற்றாண்டின் முழுக்காலமும், இருபதாம் நூற்றாண்டின் பாதி வரைக்கும்கூட நாம் தொழில் துறையில் இன்னமும் முழு வளர்ச்சி எட்டவில்லை. அண்டை நாடுகளுடனான  மேடு பள்ளம் கவலை அளிக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் இதே நிலையை வளர்ச்சி என்று சொல்கிறோம். கல்வி ஏற்றம் காண்கிறது விட்டு விட்டு. பெண்கள் விழிப்புணர்வு வலிமை பெறுதல் என்று குரல் எழும்புகிறது. ஆனால் மிகவும் மந்தமாக, தட்டுத் தடுமாறி. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் கூட பெண்களில் நாற்பது சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே கல்வி பெற்றிருக்கின்றனர். இன்னமும் அறுபது சதவிகிதத்திற்கும் அதிகமானோர் கல்வியை அடைய முடியவில்லை. அண்டை மக்களுடன் நெருக்கம் என்பது அப்புறம், அடுத்த வீட்டில், அடுத்த தெருவில், அடுத்தடுத்த குடும்பங்களிடையே கூட வேற்றுமை இருக்கிறது. இந்த நிலையை மாற்றத்  தீவிரமான முயற்சி எடுக்கப்படவில்லை.

    முஸ்லீம் மதம் ஒரு சமத்துவ, சகோதரத்துவ மதம் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. அங்கு சாதி பேதம் இல்லை, வேறுபாடு இல்லை என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால், இவர்களிடையேயும் ஹிந்துக்களைப் போலவே பல பிரிவுகள், பல சாதிகள், பல தளங்கள் அங்கீகரிக்கப்படுள்ளன. இந்த அமைப்பைப் பற்றிய பேச்சுக்கள் இல்லை. இது பல அரசியல் நன்மைக்காகவும், ஆளும் அரசியலுக்கு ஏற்றதாகவும் இருக்கிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்திலேயும் இந்த சமூக சாதிப் பிரிவுகளைக் களைய எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அவர்கள் ஏன் ‘யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்கிறார்போல' செயல்பட வேண்டும்? ராம் மோஹன் ராய், ஈஸ்வர சங்கர வித்யாசாகர் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளை இன்னமும் ஒரு முறை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும். ஆணாதிக்க சமுதாயத்தில், பெண்களின் பலவீனமான நிலைக்காக தொடர்ந்து போராடினர்கள். அதன் விளைவாக (பால்ய விவாகம்) குழந்தைத் திருமணம் தடை செய்யப்பட்டது. கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு- அவர்களின் ஆதரவற்ற நிலைக்கு மருந்தாக- விதவைத் திருமணம் நடைமுறைச் சட்டமாக்கப்பட்டது. மிகக் கொடூரமான சமூகப் பழக்கம் ‘சதி' உடன் கட்டை ஏறுதல் -ஒழிக்கப்பட்டது. இந்த சமூக சீர்திருத்தங்களுக்கு எல்லா இடங்களில் வசிக்கும் எல்லா ஹிந்து மக்களிடமிருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதை ஆங்கிலேயர்கள் மூலமாக ஹிந்து சமுதாயச் சட்டத்தில் கையெழுத்து இடவைக்க நிறைய எதிர்ப்புக் குரல்கள் கடுமையாகக் கிளம்பின. ஆனால், சாதி மற்றும் வகுப்புப் பிரிவின் அடிப்படையில் சமூகப் பிரிவு என்பதையும், இந்தப் பழக்க வழக்கங்களையும் உள்ளது உள்ளபடி அப்படியே ஏற்றுக் கொண்டனர். உண்மையில் வகுப்பு, சாதி-பிளவுகளின் மூலம் தனது அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டனர். தனது பலத்தை இன்னமும் திடமாக்கிக் கொண்டனர். அவர்கள் படையில் இணைந்த சிப்பாய்கள் சாதிவாரியாக வேறு வேறாக இருந்தனர். அவர்களின் சாப்பாடு, தங்குமிடம் எல்லாமே வேறு வேறாகவே இருந்தது. இந்த நயவஞ்சகமான சாதி ஏற்பாடு ஏற்ற தாழ்வு எத்தனை எத்தனை துன்பங்களுக்குக்  காரணமாக இருந்திருக்கிறது. இது தனியே விவாதித்து எழுதப்பட வேண்டிய ஒன்று.

    இந்த சாதீய, வகுப்புப் பிரிவுகள், உயர்வு தாழ்வு நடுத்தரவர்க்க மக்களை ஒடுங்கிக் கூனிக் குறுகி, மனம் மறுக வைக்கிறது. இந்த பழக்க வழக்கங்கள் பெரிய பெரிய பதவியில் இருக்கும் மனிதர்களைக் கண் மூடித்தனமாக பின்தொடர வைத்தது. நமது சரித்திரம் இது போன்ற நிகழ்வுகளால் நிறைந்து இருக்கிறது.  பஞ்சாப்பைச் சார்ந்த அகாலிதளத் தலைவர் ப.£பீ.ஜாஹீர்கௌர்  அவரின் மகள் இருவரின் கொலை நிகழ்வு இன்னமும் மங்காமல் கண்முன்னே நிற்கிறது, எடுத்துக்காட்டாக.  சமூகம் இத்தகைய நிகழ்வுகளை மிகவும் சாதாரணமானதாக எடுத்துக் கொண்டு விடுகிறது. சாதீய சமூக வேறுபாடுகள், சாதீய விழிப்புணர்வின் ஒரு பகுதி என்றாகி விட்டது. காவல் துறையும் இதே மனப்பாங்கோடுதான் வேறுபாட்டோடுதான் செயல் புரிகிறது. இத்தகைய தீய உணர்வுகளால் இவர்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்வதில்லை.

    சமூகத்தில் ஒருவர் என்ற எண்ணம் ஹிந்து முஸ்லீம் இருவரிடமும் இல்லை. இன்றும் கூட மஹ்விஷ்ஷின் குடும்பம் தாங்கள் ராஜபுத்திரர்கள் என்ற எண்ணத்தைக் கைவிடுவதாக இல்லை. ஹிந்துக்கள், தலித் மக்களை எப்படித் தாழ்வானவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று பார்க்கின்றனரோ, அதே மாதிரியான வேறுபாட்டு உணர்வோடுதான் முஸ்லிம்களும் தலித மக்களைப் பார்க்கின்றனர்.

    வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் அருகருகே வசித்து நிறையக் கொடுத்தும், வாங்கியும் ஆகிவிட்டது.  பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறை சமூக மதிப்பீடுகள் போல, தீயவைகளையும் மக்கள் கற்றுக் கொள்கின்றனர். முஸ்லீம் சமூகத்தினரிடையேயும் இப்போது வரதட்சனை வாங்குவதும், சீர் வரிசை கேட்பதும் திருமணங்களில் நீக்கமற நிறைந்துவிட்டன.  மற்ற எந்த சமுதாயத்தினருக்கும் குறைந்துவிடாதபடி கடைபிடிக்கப்படுகிறது. வியாபாரக் கலாச்சாரம் எல்லா சமுதாயத்திலும் பரவி இருக்கிறது. இத்தகைய கால மாற்றங்களுக்கு இடையில் ஒரு புதிய ஒளிக்கீற்றும் தென்படுகிறது. சமுதாயத்தை அது முன்னெடுத்துச் செல்லும். அடிமை ஏவல் புரியும் மக்களும் இப்போது படிக்கத் தொடங்கி விட்டனர். எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாகிவிட்டனர். சமூகத்தின் மைய ஓட்டத்தில் இணையத் தயாரானவர்களாக இருக்கட்டும், கிராமத்திலிருந்து பிற நகரங்களில் வளர்ந்து கொண்டிருப்பவர்களாகட்டும் புதிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்பவர்களாகட்டும், புதிய பொருளாதார வழிமுறைகளில் தங்களைப் பதித்துக் கொண்டவர்களாகட்டும் புதிய வாழ்க்கையை தனதாக்கிக் கொண்டவர்களாகட்டும் இத்தகைய மக்களிடையே ஆண்-பெண் கலந்து பழகுதல் என்ற சகஜ நட்பு பரிமளிக்கத் தொடங்கி உள்ளது. ஆனால், சினிமாவில் மட்டும் அல்ல, வீட்டுக்கு வீடு ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியிலும், அவற்றின் தொடர்களிலும் காதல் என்பது புதுப் புது முறையில் புதுப் புது வண்ணத்தில் காட்சி படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அது மனங்களில் சலனத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. காதல் சொற்பொழிவுகள், வர்ணனைகள், காதல் கதைகள் இன்ப முடிவுகள் அல்லது துன்ப முடிவுகளுடன் காணக்கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. புதிய தலைமுறை சமுதாயத்திற்கு இது புதிய அமைப்பாகவும் அவைகள் இளைப்பாறும் இடமாகவும் குறிப்புணர்த்துகின்றன. இன்றைய வாழ்வியலில் இத்தகைய பகுப்பாய்வுக்கு முக்கிய இடம் உண்டு.
    ‘ஒரே தட்டு, ஒரே கோப்பை' என்பது எங்கு இருக்கிறது? எனவே இஸ்லாமியர்களில் எவ்வளவு சகோதரத்துவமும், சமத்துவமும் இருக்கிறது என்று ஆராய வேண்டி இருக்கிறது. ஹிந்துக் குடும்பங்களில் எத்தனை குடும்பங்கள் ‘எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் நிறை'  என்ற குரலில் இருக்கின்றனர். இத்தகைய குரல்களின் இடையில் விதம் விதமான பிரிவுகளுக்கு கோலூன்றுகின்றனர்.
    கல்வி அறிவு பெற்ற உயர் மட்டக் குடும்பங்களில் ஏற்படும் முக்கிய நிகழ்வுகளுக்கு எப்படியோ மனம் மறுகி, காதோடு ரகசியம் பேசி கண் காது மூக்கு வைத்து ஏற்றுக் கொண்டு விடுகின்றனர். மத்திய தர மக்களுக்கு மரியாதைக்கான களம் இல்லை. யாரும் கண்டு கொள்வதில்லை. எனவே அவர்கள் வகுப்பு, சாதி ஆகியவைகளைச் சுமக்கிறார்கள். தன்னுடைய மான மரியாதைகளை எல்லைக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள். பொருளாதார சேமிப்பின் கூடவே, தனது சாதியை நிலை நிறுத்த, தனது குடும்ப மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள ஆயுதத்தையும் தங்கள் கைகளில் எடுத்துள்ளனர்.

ஹிந்தி மூலம்-நமீதா சிங்.
தமிழ் மொழி வழி-க்ருஷாங்கினி.

பதிவாக மாறும் நிகழ்வு



நிகழ்வு சலனங்கள் கொண்டது
முன் பின் அடுக்குகளுக்கு இடையில்
சில மாற்றங்களையும், சில கண்ணிகளையும்
உள்ளடக்கியது.

நிகழ்வு தொடர்ச்சியானது
ஒவ்வொன்றுக்கும் தொடர்பு
இருந்தும் இல்லாமலும்
தனித்தும் இணைந்தும்
மேலும் கீழும் என
சங்கிலிகளாய் வழி நெடுக-பரவிக்
கிடக்கிறது.

நிகழ்வு பதிவாக மாறும் பொழுது
அந்தக் கணம் சலனம் இன்றி
உறைந்து நின்றுவிட்டிருக்கிறது.
முன் பின், மேல் கீழ் ஏதுமற்ற அந்த
ஒற்றைக் கணம் மட்டுமே.
உறைந்த நிலையில் அக்கணம்
திரும்பத் திரும்ப பார்க்கப்படுகிறது
எடுத்து, எடுத்தும்.
பார்ப்போரின் பார்வையில் ஒற்றைக் கணம்
மாற்றி, மாற்றி, மாறி மாறி
பதிவாகிறது.
பதிவு செய்யப்படும் பொழுதெல்லாம்
பதிப்போரின் சலனத்துடன் பதிவு
நிகழ்வாக பதிவாகிறது.
அவரவர் தளங்களில், அவரவர் நிறங்களில்.
அந்தக் கணத்தின் உறைவு காணாமல்
நிகழ்விலிருந்து பதிவான உறைவு
எல்லா சலங்களுடனும் அதுவே
நிகழ்வாய்ப் போனது.
நிகழ்வே பதிவாக, பதிவே நிகழ்வாக......

அம்பேத்கார் வகை இலக்கியம்- ஒரு பார்வை

.

    அம்பேத்கார் இலக்கியவகைப் புரட்சி 1960களின் ஆரம்பத்தில் தொடங்கி உள்ளது எனலாம். மராட்டிமொழியில் அறுபதுகளில் அம்பேத்கார் வகை இலக்கியங்கள்- அம்பேத்காரின் எண்ணங்களைத் தாங்கிய எழுத்துக்கள்- காணக் கிடைத்தன. குறுகிய காலத்திலேயே மராட்டி இலக்கிய உலகில் அம்பேத்கார் வகை எழுத்துக்கள் என்ற தலித் இலக்கியம் இன்றியமையாததாக, ஒதுக்கித்தள்ள முடியாத முக்கியமான இடத்தை அடைந்துவிட்டிருந்தது. ‘சுகாவா', ‘அஸ்மிதா ‘தர்ஷ்', ‘சமுசித்' ஆகிய இதழ்களில் அம்பேத்காரின் முழக்கங்கள் முன்னமேயே காணக்கிடைக்கின்றன. இத்தகைய இதழ்கள் பிராமண்யத்தை எதிர்த்துத் தாக்கும் எழுத்துகளுக்கு முதலிடம் கொடுத்துப் பிரசுரித்தன. அத்தகைய நிகழ்வுகளுக்கு அதிக முக்யத்துவம் கொடுத்தன. மேல் சாதியினராலும், நிலச்சுவாந்தார்களாலும் அடக்குமுறைக்கு ஆளான, உதவியற்ற தலித் மக்களின் துன்பங்களை வெளியிட்டு வந்தது. தலித்துகளால் படைக்கப்பட்ட மேல்சாதியினருக்கு எதிரான கருத்துக்களை அடிப்படையாகக கொண்ட படைப்புக்களுக்கு சிறப்பான இடம் கொடுத்துப் பதிப்பித்தன. “சமூக-பொருளாதார சமன்பாடு என்பது சமூகத்தில் உள்ள நச்சுத்தன்மை கொண்ட ‘உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள்' என்ற சாதி நிலையை அழிந்து ‘எல்லோரும் சமமே' என்பதை நிலைநாட்டுவதுதான்” என்று அம்பேத்கார் தனது எழுத்துக்களில் பதிவு செய்துள்ளார். அம்பேத்கார்  ‘வகுப்புப் பிரிவுகள் மனித விரோத செயல்' என்று தனது எழுத்துகளில் சொல்லி இருக்கிறார்.  அவர், தனது எழுத்துக்கள் மூலம் வேறு ஒரு சமூக அமைப்பை, வழிமுறையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார் எனலாம். அது அம்பேத்காரின் எழுத்துக்களை முன்னெடுத்துச் செல்லும் இந்த வகை இலக்கியங்களில் தீண்டாமை, விலக்கிவைத்தல் ஆகிய சொற்களுக்குப் புதிய பொருள்விளக்கம் அளிக்கப் பட்டது. இத்தகைய சொற்கள் இழிவானவை என்று எடுத்துரைக்கப் பட்டன.

    மராத்தி மொழியில் கவிஞர் நாம்தேவ் டசாலின் ‘கோல்பீடா' (முழுவட்டம்), அம்பேத்காரின் எழுச்சியை விவரித்தது. இவரின் கவிதைகளில், கலகமும், தீண்டாமை எதிர்ப்பும் தீவிரத்துடன் வெளிப்பட்டு இருக்கும். அவைகள் அனைவரையும் எழுச்சி பெற வைக்கும் தகுதி வாய்ந்தது. பாபுலால் பாகுல்-உடைய படைப்புகள் டசாலின் படைப்புக்களிலிருந்து வேறுபட்டது. பாபுலால் பாகுலின் எழுத்துக்களில் முதிர்ச்சியும், மார்க்சீசியக் கொள்கைகளின் சார்பும் இருக்கும். இவரின் படைப்புக்கள் வேறு விதமாக சிந்தனைக் கவரும். மராட்டி மொழியில் நவீனப் படைப்பு முறைக்கு பாகுல் அவர்களின் எழுத்து பெரும் தூண்டுதலாக இருந்தது. மராட்டி மொழியில் தலித் இலக்கியத்தில் கவிதையுடன் கூடவே உரைநடை இலக்கியமும் நவீனத்தையும் எழுச்சியையும் உடன் கொண்டதாக வெளிவந்தது. இவை ஏற்கனெவே முந்தைய கால கட்டத்தில் இருந்த படைப்புகளின் சாயலற்று வெளியாயின.
    மராத்தி மொழியில் படைக்கப்பட்டு வரும் சிறுகதைகளில், தலித் மக்களின் இயல்பான வாழ்க்கை, இயல்பாகவே பதிவு செய்யப்பட்டிருக்கும். தலித் மக்களை நல்ல முறையில் நிலை நிறுத்தவும், அவர்களுக்கு இன்னமும் மரியாதை சேர்க்கும் விதமாக இவ்வகை எழுத்துக்கள், இலக்கியங்கள் புதிய புதிய கருப்பொருளைக் கொண்டு இருந்தன. அதாவது, மராத்தி மொழியின் புத்திலக்கியம் அம்பேத்கார் வகை எழுச்சியின் வரமே.
    இந்தக் கட்டுரையில் மக்களின் நிலை பற்றியும், மதிப்பீடு பற்றியும் சொல்லப் பட்டிருக்கிறது. இந்தப் பார்வையில் தலித் மக்களின் வளர்ச்சியும் எப்படி மாற்றம் அடைந்தது என்பதும் சொல்லப் பட்டிருக்கிறது.  மராத்தி மொழியில் அம்பேத்கார் வகை இலக்கிய எழுத்தாளர்களின் நீண்ட பட்டியல் இருக்கிறது. அதில் வாமன்ஹோவால், கேஷவ் மேஷ்ராம், அர்ஜுன் டாங்கலே, சுகராம் ஹிம்வாலே, யோகிராஜ் வாக்மரே, ஷரண்குமார் லிம்பாலே, பாஷ்கர் சந்தனாஷிவ், ப்ரகாஷ் காரத், யோகேந்திர மேஷ்ராம், ஊர்மிளா பவார், பீமசேன தேடே ஆகியவர்கள் குறிப்பிட தகுந்தவர்கள். மராத்தி மொழியில் அம்பேத்காருக்கும் முன்னதாகவே ஜோதிபா புலே தன் எழுத்துக்களால் சமூகத்தின் பண்பாடு, தூய்மை ஆகியன குறித்துக் கேள்விகளை எழுப்பி உள்ளார். அதன் மூலம் இந்தவகை எழுத்துக்களுக்கான ஒரு பாதையை முன்னமே உண்டாக்கி விட்டிருக்கிறார். அம்பேத்கார் தன் எழுத்துக்களில் புலேயின் கருத்துக்களை வெளியிட்டார். அவைகள் வெடித்துக் கிளம்பிப் பண்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கின.
    அம்பேத்கார் அகை எழுத்துக்கள் சாதியையும், வகுப்புப் பிரிவுகளையும் அதன் ஏற்ற தாழ்வுகலையும் நிராகரிக்கிறது. இத்தகைய பிரிவுகள் பிராம்மணர் களால் ஏற்படுத்தப்பட்டது என்றும் கூறுகிறது.

    மராத்தி மொழியுடனேயே, மலையாளத்திலும் அம்பேத்கார் வகை படைப்புகள் உருவாகத் தொடங்கிவிட்டன.  அதன் குரல் பிராம்மண எதிர்ப்பு. இந்தவகை எண்ணங்களுக்கு அம்பேத்காருடன் கூட நாராயணகுருவும் இருக்கிறார். இவற்றிற்கு நல்ல பரந்துபட்ட வாசிப்பும், ஆதரவும் கிடைத்தன. கல்லாட ஷஷி, ராகவன் அத்தோலி, கே.கே.தாஸ், சஜ்ஜி கவிக்காடு, ஜி.சஷி ஆகியோர் அறுபதுகளின் ஆரம்பத்திலேயே  தலித் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்திய படைப்பாளிகள் எனலாம். கல்லாட ஷஷி தன் கவிதைகளில் தலித் அழகியலைப் படைத்தவர். அவருடைய கவிதைகளில், தொழிலாளர் வர்க்கத்தினரைப் பற்றி எழுதப்பட்டவற்றில் இந்த அழகியல் வெளிப்பட்டது. அவருடைய கவிதை தொகுதியான ‘பாரத மகள்'  விவாதத்தை உண்டாக்கியது.  அதில் அவர் ஒழுக்கத்தைக் கேள்விக் குறி ஆக்கியிருக்கிறார். அவர் ஒழுக்கம் என்பதை நிறுவிய மக்களை எதிர்க்கிறார். இவருடைய ‘சிலந்தி' கவிதை பசியைப் பற்றியது. ராகவன் அத்ஹோலியின் கவிதைத் தொகுப்பான ‘மௌன சிலைகளின் காதல்' தலித் மக்களின் அனுபவங்களின் தொகுப்பு. தலித் கவிஞர்களில் ஒருவரானவர் கே.கே.எஸ். சாதிப் பிரிவுகளை மறுக்கும் கவிதைகள் இவருடையது. இதில் மிகவும் சிறப்பானவரும் கூட. இவருடைய கவிதை வரிகள் இவை- ‘நான் மீண்டும் பிறப்பெடுப்பேன்/ வைகறையின் துகில் அணிந்து/சிங்கத்தின் பற்களுடன் காத்திருப்பேன்/இந்த பூமியின் வசந்தம் எங்களுடன் பகிரப்பட வேண்டும்'.
    இதே வரிசையில் அப்பையன் கவிதைத் தொகுதியான ‘மதிய உறக்கத்தின் கனவுகள்' பெரும் சர்ச்சைய ஏற்படுத்தியது. இவர் கவிஞர் மட்டுமல்ல. ஒரு சிற்பக் கலைஞரும் கூட. இரண்டிலும் அம்பேத்காரின் எழுச்சி காணக் கிடைக்கிறது.
    கன்னட மொழியில் ‘தலித்' என்ற இதழ் அம்பேத்கார் வகை எழுத்துக்களை சிறந்த முறையில் வெளியிட்டிருக்கிறது. புட்டண்ணா, டி.வி. ராஜசேகர், சந்திரசேகர் பாட்டீல் ஆகியோர் இவ்வகைப் படைப்புக்களைத் தீவிரமாக தந்துள்ளவர்கள். கவிதை, சிறுகதை, நாடகம் ஆகிய அனைத்து வடிவங்களிலும் தலித்துகளின் வாழ்க்கைக்கரு படைப்பாகி இருக்கிறது. சென்னப்பா, வாலிகார், பர்கூர் சந்திரப்பா, தேவனூர் மகாதேவன் ஆகியோர் இந்த வகை படைப்பாளிகள். இவர்கள் தலித்துகளின் களத்தை பரந்துபட்டதாக அகலப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களில் பலர் மார்க்சீய சிந்தனை உடையவர் களாகவும் இருந்திருக்கிறார்கள். கன்னட மொழியில் அம்பேத்கார் வகை படைப்புக்களை எழுத்தாளர்கள், எந்தவிதமான மேல் பூச்சும் அற்று பதிவு செய்திருக்கின்றனர். இயல்பான சொற்கள் கொண்டவை இவை. கன்னட மொழி இலக்கியத்தில் புரட்சி, கலகம், பஞ்சமர், சூத்திரர் ஆகியவை இவ்வகை எழுத்துக்களைப் பதிவு செய்த இதழ்களில் குறிப்பிடத்தக்கவை. சந்திரசேகர பாட்டீலின் படைப்புக்களில் கரு தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையே. இவரின் படைப்புகள் மிகுந்த கொந்தளிப்பைக் கொண்டவை.

    ஹிந்தி மொழியில் தற்காலத்தில் அம்பேத்கார் வகை எழுத்து மெல்ல மெல்ல விழிப்படைந்து  உள்ளது. மராத்தி, கன்னடம் போன்ற மொழிகளில் தலித் இலக்கியம் வந்து வெகு காலத்திற்குப் பிறகுதான் ஹிந்தியில் இவ்வகை இலக்கியப்படைப்புகள் உருவாகத் தொடங்கின. 1985க்குப் பிறகுதான் ஹிந்தி மொழியில் அம்பேத்கார் வகை எழுத்துக்களின் எழுச்சி உருவாகத் தொடங்கியது. மாதா பிரசாத்தின் ‘நூறு பீமன்' இந்த ஆண்டில்தான் வெளியானது. இவரின் மதிப்பீடுகள் அம்பேத்காரின் எண்ணங்களுடன் வேறுபாடு கொண்டவை. மாற்றுக் கருத்து இருந்தது. இந்த வகையில் ஓம்பிரகாஷ் வால்மீகி, மோஹன் தாஸ் நைமிஷ்ராய், டாக்டர். தர்மவீர், கவல் பாரதி, ஷ்யோர் ராஜ் சிங்,பேசைன், டாக்டர்.என்.சிங் ஆகியோர் ஆவர். 1988 இல் இந்திய தலித் எழுத்துக்களின் அரங்கில் ‘வலி எழுப்பிய அலறல்' நூல் குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு, ஓம்பிரகாஷ் வால்மீகியின் ‘நூற்றாண்டு கால துயர்' 1989 இல் வெளியானது. இதே சமயத்தில் மோஹன்தாஸ் நைமிஸ்ராயின் ‘ஒரு நீண்ட வாக்குமூலம்' வெளிவந்தது. இதே ஆண்டில் ஷ்யோர்ராஜ் சிங் அவர்களின் ‘புதிய விளைச்சல்' வெளியானது. ஹிந்தி மொழியில் அம்பேத்கார் பாணி எழுத்துக்கள் இதிலிருந்துதான் தொடங்கியது எனலாம்.

    1991 ஆம் ஆண்டு முதல் இவ்வகை எழுத்துக்கள் புனைவு அல்லாதது என்ற வகைப்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. அம்பேத்காரின் கருத்துக்களை இவ்வகை படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. இந்த காலகட்டத்தில் கவிதை விமர்சனம், எண்ணங்கள், தன் வரலாறு, நினைவு கூர்தல் போன்ற பலவகையில் நூல்கள் வெளிவந்தன. ஓம்பிரகாஷ் வால்மீகியின் தன் வரலாறு ‘எச்சில்' 1997 இல் வெளியாகி, நிறைய விமர்சனத்திற்கும் ஆளானது. மோஹன்தாஸ் நைமிஷ்ராயின் தன் வரலாறு ‘அவரவர் கூண்டு' 1995 இல் வெளியானது.   அதையும் புறந்தள்ளாமல் குறிப்பிட வேண்டும். இந்த நூல் ஹிந்தி மொழியின் முக்கியப் படைப்பாளிகளை பாதித்தது எனலாம். கவிதைத் தொகுதிகளில் ஓம்பிரகாஷ் வால்மீகியின் தொகுப்பான ‘போதும் நிறைய அனுபவித்தாயிற்று' மற்றும் கவல் பாரதியின், 'உன் தவம் இப்போது என்னவாயிற்று?' தொகுப்பும் முக்கியமானவை. ஓம்பிரகாஷ் வால்மீகியின் ‘சலாம்' சிறுகதைத் தொகுப்பு 2000ம் ஆண்டு வெளிவந்தது. இந்த நூலில் தலித் மக்களின் வாழ்க்கைப் பதிவு என்பதுடன் கூட இந்த நூற்றாண்டின் இறுதி குரல் என்ற கூற்றுடன் வெளியானது. இருபத்தியோராம் நூற்றாண்டுத் துவக்கம் ஆவதற்கு முன்னரே தர்மவீரின் நூலான ‘கபீர் பற்றிய ஆய்வு' 1997 இல் வெளிவந்துவிட்டது. அந்த நூல் ராமச்சந்திர சுக்ல, ஹஜாரிப்பிரசாத் த்விவேதி, ஹரி ஔத் போன்ற படைப்புக்களின், கபீர் பற்றிய பிற ஆராய்ச்சியாளரின் வரிசையில் இணந்தது. டாக்டர். தர்மவீரின் ஆய்வு, அம்பேத்கார் வகை எழுத்துக்களின் குரலாக ஒலித்தது என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
    இருபத்திஓராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளியான சிறந்த நூல்களில் சூரஜ்பால் சௌஹான் அவர்களின் ‘விலக்கப்பட்டவன்' தன் வரலாறு முக்கியமகக் கருதப்பட வேண்டியது. இதற்கு முன்னதாகவே வால்மீகியின் ‘தலித் படைப்புகளில் அழகியல் 2001-ம் ஆண்டு வெளிவந்துவிட்டது. இந்த நூலில் அம்பேத்கார் வகை இலக்கியப் பார்வை தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.  தலித்துக்களின் கேள்விகளைத் தீவிரமாகக் குரல்எழுப்பி ஒலிக்கும் ஹரிராம் மீணாவின் கவிதைக் காவியம் ‘யட்சன் அழவில்லை' (2003) சிறந்த நூல். ஏன் எனில், இதில் காளிதாசனின் ‘யட்ச காவ்யம்' மறுபடைப்பாக்கப் பட்டிருந்தது.  மீணா, சிறந்த, தரமான கவிதைகளைக் கொடுப்பவர். இயற்கையை வாழ்க்கையுடன் இணைத்து எழுதுவதில் வல்லவர். சிறுகதைத் தொகுதிகளும், நாவல்களும் கூட இதே வகையில் எழுதப்பட்டு கூடவே வெளிவந்தன. எம்.ஆர். ஹார்நோட் அவர்களின் நாவல், ‘ஹிடும்பு' மலைவாழ் தலித் மக்களின் வாழ்க்கையைக் கூறும் நூல். குறிப்பிடதக்க நூல். இந்த நூலில் கதையின் நாயகன், தலித் தன் நிலத்தைக் காப்பாற்றப் போராடுகிறான். இந்த நூல் சமுதாயத்தின் நெறிமுறைகளைத் தீவிரமாகக் கேள்வி கேட்டிகிறது. மூல்சந்த் சொனாகரின் ‘இரு வரிக் கவிதை' நூல் இதே வேளையில் வெளியானது. இதிலும் அம்பேத்கார் பாணி எண்ணங்கள் பதியப்பட்டுள்ளன.

    இப்போது அம்பேத்கார் வகை எழுத்துக்களில் புதிய இணைப்பாகப் பெண்ணின் படைப்பும் இணைந்துள்ளது. மெல்ல மெல்ல இந்த வகை எழுத்துக்களில் பெண்களின் பங்களிப்பும் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு வருகிறன. இந்தப் பெண் எழுத்துக்கள் உயர்சாதி பிராம்மணர்களை, பாரம்பரியக் கூறுகளை கேள்விக்குட்படுத்துவதுடன், தந்தைமை வழிப் பாரம்பரியத்தையும் அதே தீவிரத்துடன் கேள்விக்குட்படுத்துகிறது. குற்றம் சாட்டுகிறது. இந்தப் பெண் படைப்பாளிகள் ‘தன் வரலாறு' என்ற வகைமையைக் கையெலெடுத்து இருக்கிறார்கள். இங்கு கௌசல்யா பைசந்திரியின் தன் வரலாறு 'இரண்டாம் சாபம்' சிறந்த நூல். இதில் அவர் தனக்கு நேர்ந்த துன்பங்கள், அவமானங்கள் ஆகியவற்றை வாக்காகக் கொடுத்திருக்கிறார். இந்தப் பெண் எழுத்துக்களில், புதிய கோணம் தென் படுகிறது. இவர்கள் சமத்துவத்தையே குறிகோளாகக் கொண்டு இயங்குவதால், இவை அம்பேத்கார் வகையில் முதன்மை வாய்ந்தவை.
    இதைப் போலவே அம்பேத்கார் -தலித்- வகை இலக்கியம் ஹிந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுடன் கூட இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ளன.  ‘புனையப்பட்ட சமூகம்' சச்சிதானந்தனின் நூல். காவிய வகையில் எழுதப்பட்டது. அது ஒரு வகையில் தலித் கவிதையாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. அதில் அவர் மராத்தி, குஜராத்தி, கன்னடம், ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய மொழிகளின் தலித் கவிஞர்களை  இணைத் திருக்கிறார். அவரின் கூற்றுப்படி, இந்தக் கவிஞர்களுக்கு, பொருளாதார ஏற்ற தாழ்வைவிடவும், சமூகத்தில் சாதி ஏற்ற தாழ்வு இன்னமும் வலிமையானது. அருண் கம்ளே, யஷ்வந்த் மனோஹர், அர்ஜுன் தாங்கே, ஜே.வி.பவார், நாம்தேவ், டசால், தயா பவார், ப்ரகாஷ் ஜாதவ், புஜங்க மேஷ்ராம், யோசப் மைக்வான், ஜயந்த் பரமார், மங்கள் ரடௌர், கிசன் சோமா, சித்தலிங்கப்பா, ஓம்பிரகாஷ் வால்மீகி ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளவர்கள். அம்பேத்காரிய எழுத்துக்களை, இந்தியா முழுவதும் உள்ள இலக்கியங்களில் வாசித்தால், அம்பேத்காருடன் மறு சந்திப்பு நிகழ்ந்தாற்போல இருக்கிறது. இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. யாருக்கும் இருக்காது. அம்பேத்காரின் எண்ணங்களுக்கு ஒரு புதிய விளக்கமும், வாசிப்பும் கிடைக்கிறது.

ஹிந்தி மூலம்-அவதேஷ் நாரயண்.
தமிழ் மொழி வழி-க்ருஷாங்கினி.
------------------