Tuesday, August 7, 2012

கவிதைகள் ஆறு(சென்னை வானொலியில் ஒலிபரப்பப்பட்டவை)

1-எங்கள் ஜாதி


மாத முதலில் அல்லது கடைசியில்
இடைவிடாத லாரிகளின் ஓட்டம்.
காலியாக அல்லது தானிய மூட்டையுடன்
அரசின் தானியக் கிடங்கு,
அதன் அருகில் எங்கள் வீடு.
விடியற்கருக்கலில் ஆளரவமற்ற போதில்
காக்கைகளும் குருவிகளும் தெருவில்
தானியம் கொத்திப் பசியாறுகின்றன.
( 27-4-2003- கல்கி )


2-விளை நிலங்கள்


ஏக்கரும் குண்டங்களும் துண்டாடப்பட்டு
சென்டுகள் ஆயின-அவை பின்
பிளாட்டுகள், அடுக்கு மாடிகள் ஆயின
இல்லாது போயின விளை நிலங்கள்
‘காம்பௌண்டு' சுவரோரம் ‘குரோடன்ஸ்'
பயிர்செய்து அழகு பார்த்தனர்.

3-ஆழ்துளைக் கிணறு


என் வீட்டுக் கிணற்றிற்கு
கம்பிவலையிட்டு பூட்டிட்டேன்
நீர் பாதுகாக்க,
அடுத்த தெருவில் இட்ட ஆழ்துளைக்
குழாய் அடித்துச் சென்றது
என் கிணற்றின் நீரையும்- பூட்டுக் கெடாமல்.

4-கொத்தித் திரியாக் கோழிகள்


இப்போதெல்லாம் கொத்துகின்றன
கோழிகள், தலைவிட்டு தட்டுத் தீவனத்தை
சேவலில்லா முட்டையிட்டு
கழுகின் பாதுகாப்புக்காக
கலரடிக்காக் குஞ்சுகள்
அடைகாக்க அவசியமில்லா மின்சார ஹீட்டர்
குயிலுக்கு மட்டுமா தாய்மை வேண்டாம்?-
கோழிக்கும்தான்.







5-பிளாஸ்டிக் பூக்கள்

என்றும் மலர்ந்திருக்கும், இயற்கை
பச்சையம், நீர், நிலம் ஏதும் வேண்டாம்.
இலை, மொக்கு, மலர்ச்சி என்றில்லாமல்
வீட்டிற்குள்ளும், வெளியிலும், அலுவகத்திலும்
அட்டையுடன் கட்டித் தொங்கவிட்டு
அவ்வப்போது துடைத்து தூசிதட்டு,
அன்றலர்ந்தது போல்.

6-இன்றைய ஆண்டாள்

வாரணமாயிரம் சூழ வலம்வந்து
கனவில் மணம் முடித்தாய் தெய்வத்தை
நிஜமென்று  கொண்டாடி- நானோ
மனிதனே அல்லாத மாற்றானுடன்
நடந்த நிஜ மணத்தைக் கனவாக்க
முயன்று முயன்று தோற்கிறேன்  -தோழியே
(இன்னும் வரும்)