Monday, July 23, 2012

நான்கு கவிதைகள்

(1) நீர் விழுங்கும் நில முதலைகள்

ஆங்காங்கே சேகரிக்கப்பட்ட கழிவுகள்
வந்திறங்கின, வண்டி வண்டியாய்.
ஒரு நெடிய காம்பவுண்டு சுவரும்,
வண்டி நுழையும் அளவிற்கு
சிறிய கேட்டும் அந்த வெட்டவெளி
ஏரிக்கரையின் ஒரு ஓரம்.
பள்ளம் மேடாகியது,கழிவுகள் நிரப்பியதால்
அழுத்தி, நசுக்கியது அவற்றை ஒரு
பெரும் வண்டி வந்திறங்கி

சுவர் உடைக்கப்பட்டு.
இன்னமும் சில நாட்களில்
மீதமுள்ள சுவற்றுக்குப் பின்னால்
சூலம் நட்ட மரமோ,
சிறு குடிசையோ,
கோவிலோ, வீடோ,
மெல்ல மெல்ல முளைக்கும்.
எல்லோருக்கும் அது தெரியும்.
என்ன, ஒரு சிறு மாற்றம் தானே?
நீர்ப் பரப்பு நிலமாகிறது.

ஏரி முன்புண்டு நூறு ஏக்கர்.
இப்போதோ எனில் அறுபதுக்குள் அடக்கம்.
அதிலும் சில சதுர அடிகள் உள்வாங்கி
விழுங்கப்படுகிறது கண்ணெதிரே.
எந்த வண்ணக் கொடியுடன் போராட?
கையறு நிலையில் கவிதையாய் வடிக்கிறேன்
அதை நான்.



(2) ரயில்பெட்டியில் கும்பி வித்தை

மெத்தென்ற முதல் ஒலி உள்நுழைந்தது
சூடுபடுத்தப்படாத தோல்கருவியின் ஒற்றையாக
கணுக்காலளவு ‘கவுன்' அணிந்த சின்னஞ்சிறு சிறுமி,
ரயில்பெட்டியை நோட்டமிட்டு அளந்தாள்.
இரண்டெட்டு வைத்து ஏதோ தீர்மானித்தவள்போல
சடாரெனத் தலையை பின்புறமாகத் தாழ்த்தினாள்

உடல் வில்லாயிற்று, கை இரண்டும் கால்களும் தரையில்;
கணநேரத்தில் கால்கள் மேலெழும்ப - திகைத்துப்
பதறியது என்மனம் சுழன்றது. உள்ளாடை உண்டா?
ஆண்களும் பெண்களுமாக வழியும் அப்பெட்டியினுள்
எத்தனை ஜோடிக் கண்கள் எதையெதைக் காணும்?
சொல்லொணா சோகத்துடன் தூக்கும் கால்கள் கண்டேன்.
தோல்நிறத்தொரு பைஜாமா இறுக்கமாக,

கால்களை முன்வளைத்து கையொன்றில் மட்டும்
ஏந்தி நின்றாள் உடலை, சிவனைக் காணக்
கைலாயம் சென்ற சிறு புனிதவதியென
மறுபடியும் கவிழ்ந்தாள், மீண்டும் இரண்டடி,
பின்னொரு வில், பின் ஒரு கால்தூக்கி
பின்னும் விழுந்தாள்- பெட்டியின் தரைதனில்
கதவோரம் ஓய்வெடுக்கும் சொகுசுக்காரர்களின்
முன்னாலும், தரைமீதும், பின்னாலும்
துவண்டு படுத்து, அமர்ந்திருக்கும் மெதுபொம்மையென
புரண்டெழுந்தாள் பெட்டியின் கடைசிவரை.

மறுமுறை சிறுவளையம் கைகொண்டு கண் அளந்தாள்.
மறுமுறையும் தோதான இடந்தனில் உட்செலுத்தி
வெளியிலிழுத்துவிட்டாள் வளையத்தில் சிறு உடலை.
கண்கள் விரிய கண்டு களித்தனர் சிறுவர்கள்.

சூடூட்டப்படாத தொய்ந்த தோல் கருவியுடன்
ஆணும் அச்சிறுபெண்ணும் ஏற்கனவேயிருந்த
சில்லரையைக் குலுக்கி ஒலியெழுப்பியபடி
வலம் வந்தனர். சில காசுகள் இணைந்து குலுங்க
அடுத்த நிறுத்தத்தில்வேகம் குறைந்த
ரயில் நிற்கத்தயாரானது.

ஒத்த வயதுடைய என் சிறுமியை பற்றியிழுத்தேன்
வளையும் வளையச் சிறுமியின் மீது பட்டுவிடாதவாறு,
நகரும் ரயிலிலிருந்தே இறங்கிவிடுவானோ
எனப் பயந்த மற்றொரு ஆணோ-பதறிக்
கதவருகில் சென்றணைத்தான் தன் பிள்ளையை.

காசு இட்டவரும் இடாதவரும் என
சிறு கூட்டம் இறங்கியது - மெதுச் சிறுமியும்
மெத்தொலிக் கருவியுடன் ஆணும்கூட.
ரயிலின் எல்லாப் பெட்டிகளும் எப்போதும்
ஒரே அகல நீளம் கொண்டவைதான்.

----------------------------------------------------------------------
 (3) லேடீஸ் கம்பார்ட்மெண்ட் 

வீட்டின் வாயிலிருந்து காலி வயிற்றுடன்
விரந்து கிளம்புகிறார்கள் -- இவர்கள்

கிழமையும், மூகூர்த்த நாட்களின் முன் தினமும்
தீர்மானிக்கின்றன இவர்களின் உடையை.

வெள்ளிக்கிழமையில், பிடரியிலிருந்து
இடுப்புவரை அவரவர் இருப்புக்கு ஏற்ப
படர்ந்த ஈர முதுகோடு ரயில் ஏறுகிறார்கள் -- இவர்கள்.

அமர்ந்து, உடன் தலை உதறி, சீப்பெடுத்து வாரி
சுற்றிக் கொண்டு வந்த புடவையைச் சீர் செய்து உடுத்தி--பின்
சிறு டிபன் பாக்ஸ் திறக்கிறார்கள் -- இவர்கள்.

விட்டுப்போன ஸ்லோகங்கள் படிக்கப்படும்
உரத்தகுரலில் பக்திப்பாட்டுக்கள் ஒலிக்கப்படும்
பிறரிடம் கையேந்தாமல் ஆண்டவனிடம் ஏந்தி
அவ்வப்போது நீளும் கைகளுக்கும் தவறாமல் இடுகிறார்கள்-- இவர்கள்.

அடையாள அட்டையைப் பொத்தி எடுத்து
கண்ணாடித் திரை அகன்று உள் நுழையும் நேரம்
வெளியிடத்தில் திறந்த வெளியில்
விட்டு விடுகிறார்கள் வீட்டை-- இவர்கள்.

குட்டி வளர்ப்பு மிருகம் போல கண்ணாடித்
திரை தாண்டியும் கெஞ்சும் கண்களுடன்
அவ்வப்போது திறப்படும் கதவின்
காற்றுடனும் எட்டிப் பார்த்து ஏங்கி நிற்கும் வீடு

சக்தியெல்லாம் வழிந்துவிட, கசங்கிய உடை
மடங்கிய பைல்களுடன் முகப்பூச்சற்று
உரிய நேரத்திற்கும் பிறகே எப்போதும் கட்டாயமாக
வெளியேற்றப்படுகிறார்கள் -- இவர்கள்.

கண்ணாடித் திரையிடை விட்ட குட்டியை எடுத்துத்
தோள் மீது சாற்றி அலுவலகத்தைத் தன் ஒரு விரல்
பிடித்துக் கீழிறக்கி உடன் நடத்தி தளர் நடையுடன்
வாகனம் அடைய விரைந்து நடக்கிறார்கள் -- இவர்கள்.

உப்பிட்ட ஒற்றைக் கொய்யா, ஒரு சப்போட்டா
சிறு சொமோசாக்கள் ஒன்றிரண்டு, பாப்கார்ன்
முதல் வியாபாரமாகத் தொடங்குகிறார்கள் -- இவர்கள்.

நெடு நேரம் சிறு உணவை மென்று
பசி ஆற்றிக் கொண்டு, கழுவி வைத்த டிபன்
டப்பாக்களில் உதிரி மலர்கள்
நூலெடுத்துக் கட்டி வைத்து, பொதினா
காலிப்பிளவர், கீரைகள் ஆய்ந்து
காலடியில்  இட்டுக் கொள்கிறார்கள் கழிவுகளை--இவர்கள்.

சிறிதே சிறிது நேரம் அடுத்திருப்பவருடன் பேசி பின்
கைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து
உரையாடிக் கண் மூடுகிறார்கள்--இவர்கள்.

ஜன்னல்களில் பான்பராக் எச்சலோ
காறித்துப்பிய கோழைத் துணுக்குகளோ
சிறு சிகரெட் துண்டுகளோ
வேர்க்கடலை தோல்களோ இல்லாமல்தான்
இருக்கிறது, வீட்டின் சமையல் கழிவுகள்.

தரை நிரம்பி, எல்லோர் கைகளிலும் இடுப்பிலும்
அலுவலகமும் வீடுமாக  நிரம்பி வழிகிறது
லேடீஸ் கம்பார்ட்மெண்ட்
..
( 4) வட்ட மேசை

எத்தனையோ நாற்காலிகள் இருந்தாலும்
அமர்ந்தது என்னவோ அந்த
வட்ட மேசையின்மீது- சற்றே
குனிந்து கையூன்றி எதிர் இருக்கையில்
விவாதமும், விமர்சனமும், கவிதையும், நெருக்கமும்
மற்றெல்லாமாக என விழுந்துகொண்டு
இருந்தன சொற்கள் மேசையின்
மீதாக

ஒன்றின்மீது ஒன்றாக,
குறுக்கு நெடுக்காக,
குவியல் குவியலாக,
சிறுமலையென.. ஆனால்
ஏதொன்றும் சிதறி தவறிக் கீழே
இறங்கவும் இல்லை; விழவும் இல்லை.

வட்டம் என்றால் சுழலும்
அல்லது உருளும்.
ஏதோவொரு அசைவுக்குட்பட்டதே
உருண்டால் சிதறும், சுழன்றால்
சொற்கள் விசிறி அடிக்கப்படும்.
ஏதும் நிகழாமல்
நிலைத்தே நின்றது வட்ட மேசை.

என் வீட்டிற்கு எடுத்துவர
மேலெழும்பியது விருப்பம்.
அது ஒருநாள்

நிறைவேறியது, உண்மையாகவே
எல்லோரும் எப்போதும் பேசிய
பழந்தமிழும், செந்தமிழும், அயல்
தமிழும், இவற்றுடன்
என் சொற்களுமாக வந்து
இறங்கியது மேசை.

ஆனால்,

நான் நினைதவாறில்லாமல் தலை
கழற்றப்பட்டு சக்கரம்போல
பக்கவாட்டில் அடுக்கப்பட்டு
வண்டியில் இருந்தது.
அவசரம் அவசரமாக வண்டியோட்டியிடம்
“சிதறி உருளும் சொற்களையும்
சற்றே சிரமம் பாராமல் எடுத்துவரவும்”
பணிந்து பணித்தேன்.

முகத்திலும், உதட்டோரத்திலும், பார்வையின்
ஊடுருவலிலும் எளனமும் பயமும்.
நானும் உடன் சென்று வண்டியிலிருந்து
விடுபட்ட சொற்களைப் பொறுக்கிக்
கைகளில் அள்ளிவந்தேன்.

இப்போது என்வீடு முழுக்க சொற்கள்
குதித்துக்கொண்டும், ஏற்கனவே இருந்த
இளைய சொற்களோடு
கைகோர்த்து விளையாடியபடியே.

அதிலிருந்து எடுத்த சில சொற்கள் இவை.


வெள்ளை யானையும் குளிர்பதனப் பெட்டியும்(சிறுகதை)

   







 வெள்ளை யானையும் குளிர்பதனப் பெட்டியும்






மூடிய கண்ணினுள் ஒரு சிறு உறுத்தலும் இல்லாமல் அந்தப் பெரிய வௌ¢ளை யானை என்னைப் பார்த்தபடியே உள் நுழைந்திருந்தது. யானையின் நிறம் என் மனத்தினுள் சற்றே ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், உருவத்தின் பாங்கும் அதன் அசைவுகளும் என்னோடு எப்போதும் உறைந்திருக்கும் காட்சிகளுக்கு ஒப்பவே இருந்ததினால் நிறம் ஏற்படுத்தும் ஆச்சரியமும் சில நிமிடங்களில் பிரிந்து போயிற்று.  யானைக் கலரிலோ அல்¢லது பஞ்சு நிறத்திலோ மேகங்களில் காணப்படும் வடிவ ஒற்றுமையில் உள்ள மெத்மெத்தென்ற மென்மையோ என்னவோ இந்த வௌ¢ளை யானையில் காணாமல் போயிருந்தது. மூடிய கண்ணின் முன் யானை வரக் காரணம் ஆராய மனம் மேற் கொண்டது.  

    யானை என்னை எப்போதும் மரணத்தின் துக்கத்தினுள் கொண்டு செலுத்தும். இப்போதும் அப்படியே.  எனவே கண் தானாகத் திறந்¢தது. சூழலை உள் வாங்கிக் கொண்டது.  யானை வந்ததாக எண்ணிய கதவு என்னமோ மூடிய படியேதான் இருந்தது.

    அம்மாவின் திடீர் இறப்புவரை என் அறியாப் பருவம் யானையுடனேயே  கழிந்தது. எப்போதும் வீட்டில் கல் மீது ஏற்படும் உளிச் சத்தம். முடிந்ததும் முடியாததும், நிமிந்ததும், அமர்ந்ததும், படுத்ததுமாக பல வகையில் கடவுள் உருவங்கள் கல்லிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.  நிலமெங்கும் சிறு சிறு துகள்களாக கருங்கற்கள். துகள்கள் யானைக் கலரில் அல்லது அதையொத்த வெண்மையையும் கருமையுமாய், இறைந்து கிடக்கும். அமைதியாய் அமர்ந்திருக்கும் புரியாத விலங்காக கடினமான வெறும் பாறை. ஆங்காங்கே உருண்டிருக்கும் தூண்கள் சிற்பங்கள் என முழுமையடைந்த கற்களின் உருவ மாறுபாட்டில் கொக்கி போல துருத்திக் கொண்டிருக்கும் எந்தக் கல் நுனியிலும் ஏதோ ஒரு துணி தொங்கிக் கொண்டு, கனத்துடனேயோ அல்லது காற்றில் ஆடிக் கொண்டோ, பை, சட்டை, துண்டு என்று எந்த வடிவத்திலும் சிற்பத்துடன் துண்டாடிய நவீனத்துடன் சிற்பியிடமிருந்து பிரிந்து உசலாடிக் கொண்டிருக்கும்.  பள்ளி விட்டு வீட்டிற்குத் திரும்பிய பின் முதல்நாள் முடிவுக்குப் பின், பகலில் மலர்ந்திருக்கும் சிலை பார்க்க ஆவல் கொண்டு ஓடிவரும் நாட்கள் அவை. என் கையிலும் உளி ஆடும் நாட்களைக் கற்பனை செய்து கொண்டே வலம் வரும் பள்ளி நாட்கள்.  திறந்த வெளிதாண்டி, வீட்டினுள் அம்மாவைக் காண ஓடிவிடுவேன். சிலைகளிலும் கம்பத்திலும் அசையாது நிற்கும் யானை தினமும் அசைந்து எங்கள் வீட்டைக் கடக்கும், கோவிலுக்கு அபிஷேக நீர் தளும்பத் தளும்ப சுமந்தபடி.  அம்மாவோடு யானைக்கு நல்ல சிநேகிதம். எனக்கும் தான்.  பூஜை முடிந்து வரும் வழியில் அம்மா முறத்தில் வைத்திருக்கும் வெல்லமும் அரிசியும் எடுத்து சாப்பிட்டு, எப்போதும் முறத்தை சுழற்றித் தட்டித் திரும்ப அம்மா கையில் திணிக்கும் யானை.

    பள்ளிச்சவாரி எனக்கு அவனின் மீதுதான்.  ஸ்தபதி பிள்ளை. அவனின் முன் நெற்றியின் அருகாமையில் அமர்ந்து பையைத் தொங்கவிட்டு, அனைத்து வீடுகளையும் கடக்கையில் எனக்கு ஏகப்பட்ட உயரம் கூடி விடும்.  எல்லோர் வீட்டு ஓடும் அதன் மீது எறிந்தும், விழுந்ததுமான பல விதப் பொருட்கள் கண்டு, ஓடுகளைத் தொட்டு மரத்தின் பெரிய கிளைகளைக் கை கொண்டு எட்டிப் படித்து என யாருக்கும் கிடைக்காத யானைச சவாரி. . புட்டத்தில் முடி முள்ளாய்க் குத்தும்,  டிராயரையும் மீறி.. வெற்றுக் கால்களில் வீட்டு வாசலில் உருட்டி விடப்பட்டிருக்கும் கற்களின் சொரசொரப்போடு என்னையும் அசைத்துக் கொண்டு பள்ளி நோக்கி


நடப்பான்,  பாகன் கால் நடையாக உடன் வர. என் தின் பண்டங்களில் அவனுக்கும் பங்கு உண்டு.                         
    ஒருநாள் பள்ளி விட்டு அகாலத்தில் வந்த எனக்கு  அம்மாவின் மரணம் புரியாத பயமாய் இருந்தது. அதன் விளைவுகள், காரணம் ஏதும் அறியாமல் எல்லாம்
நடந்தேறியது. அடுத்த நாள் அவன் வரும் நேரம் பாட்டி அவன் ஏங்கக் கூடாதென்று முறத்தில் அரிசியும் வெல்லமுமாகத் தெருவிற்குக் கொண்டு வந்தாள்.  வெற்றுப்
பார்வை பார்த்து விட்டு கலங்கிய கண்களுடன் வீட்டைக் கடந்து சென்றான் அவன், முறத்தைத் தொடாமல்.  மறுநாளும், அதற்கு மறுநாளும் கூட. இதுவே தொடந்தது.  எனக்கு மரணத்தின் துக்கத்தை அதிகப் படுத்தலை அவன் ஒவ்வொரு நாளும் உணவின் மறுப்பு மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.

இன்று தரிசித்த கோவிலின்  வாசலில் கட்டியிருந்த யானை என் உள் மனத்தை மேலெழுப்பி யிருக்கலாமோ?  பாகன் சாப்பிட்டு இலையை மடித்து யானையின் வாயினுள் இட்டுக் கையையும் இரு முறை உள் வாயினுள் செலுத்தி புரட்டி எடுத்துப் பின் தன் மேல் துண்டால் துடைத்துக் கொண்டான்¢. வௌ¢ளையானை கண்ணில் முளைக்க இது கூடக் கரணமாயிருக்கலாம். 

வௌ¢ளையானை கனவில்கண்டது பற்றிப் பலரால் பலன் சொல்லப்பட்டது.  புத்தரையும் மற்ற புனிதரையும் இணைத்து .  வௌ¢ளையானை பிரிவின் விளக்கம், ஞானத்தின் வடிவம், அறிவின் படிமம், என அவரவர்க்கு ஏற்றபடி. எனக்கென்னவோ நகரத்தின் சிறிய பிளாட்டினுள், போதாத வாயிற் படியில் இது எப்படி சிரமத்துடன் உள் நுழைந்திருக்கும் என்பதே கேள்வியாய் இருந்தது. பாமரேனியன் நாய்க்குட்டி வேண்டுமானால் குனியாமல் நுழையலாம் வௌ¢ளையாய், பொதியாய் கிரில் கதவின் உட்பக்கம்.  ஆனால் யானை எப்படி? 
   
‘ என்ன வௌ¢ளையானையா?  வெறும் யானைக்கே சம்பளம் கட்டாது. வௌ¢ளை யானை வேறயா?’
இப்படி பலப்பல வழிகளில் என்னுடன் வௌ¢ளை யானை அநேக நாட்கள் பேசப்பட்டது பெரியோராலும், சிறியோராலும். 

நான்கு பெரிய வௌ¢ளை மர ஸ்டாண்ட்  பெரிய கால்களுடன் சதுரமாக நின்று கொண்டிருந்தது அந்தக் குளிர்பதனப் பெட்டி, அதன் கைப்பிடி சற்றே நீளமாய் தொங்கிக் கொண்டு துதிக்கையைப் போல. சாவித்துவாரம் சிறு உலோக வட்டமும், அதன் ஒரு  கோடு கீற்றுப்  பார்வையுமாய்.  கடையினுள் நுழைந்து அதன் அருகில் சென்று சற்றே தடவிப் பார்த்தேன். மிக வழவழப்பு.  கன்னத்தைஉரசினேன். ஸ்டாண்டின் கால்களைத் தட்டிப் பார்த்தேன்.  மேலும் கீழும் பார்த்துச் சுற்றிச் சுற்றி வந்தேன். அது என்னைப் பெயரிட்டு அழைத்தது , அம்மாவின்குரலில்.
பிளாட்டின் இடம் கருதி அம்மா என் யானையுடன் இரண்டரக்கலந்து என் வீட்டில் இடம் பெற சதுரமாய் அச்சிலடக்கி உள் மனம் குளிர என்னை அழைக்கிறாள் என்று. சில நாட்கள் தொடர்ந்து கடை சென்று காசு போட்டு வௌ¢ளைச் சதுரத்தைத் துதிக்கையுடன், கால்களுடன் வாங்கி உள் அறையில் இரவும் பகலும் எந்தேரமும் வெளிச்சம் படும்படி அமர்த்தினேன்.  அருகமர்ந்து முகம் தேய்த்தேன்.

அம்மாவின் மடிமீது.  யானைத் தன் சிறு கண்களால் என்னைப் பார்த்து நான் இட்ட  அனைத்தையும் தன் வயிற்றுக்கிள் அடக்கி எனக்காகப் பாதுகாத்து நின்றிருந்தது, வெளிச்சத்தில்.  சிறு கீறல் கூட அற்று எனது பிளாட்டின் ‘கிரில்’களையும், கதவுகளையும் கடந்து உள் வந்த போது சேதாரமில்லாமல் என்னை அடைந்த---இருப்பிடம் நுழைந்த வௌ¢ளை யானையை எல்லோருக்கும் காட்டினேன்.   


                           















மாசறு (சிறுகதை)






மாசறு








    " ஆன்ட்டி, நான் ஒரு படம் வரையறேன் பாக்கறீங்களா? அம்மா! ஒரு பேப்பர் குடு".

    நிச்சயம் நான் அந்த இடத்தில் ஒரு சிறுமியை எதிர்பார்க்கவில்லை. மிகச்சிறிய -பகலிலும் மின் விளக்கின் உதவி தேவைப்படும்- ஜன்னல்கள் கொண்ட அறை அது. ஜன்னலை அடுத்த அடுத்த கட்டடச் சுவர் அடைத்தது. சுவர்களின் அருகே ஒரு கணினி சிறிய இடைவெளிவிட்டு. அதன்முன் ஒருவர். கணினிமுன் அமர்ந்திருப் போரைத் தவிர வருவோரும் போவோரும் என்று எல்லோரும் வளர்ந்தவர்கள், வளர்ந்து விட்டவர்கள், முதியோர்கள். ஒரு பக்கச் சுவற்றில் சிறு படங்கள், பள்ளிப் புத்தகப்பை சற்று தள்ளி சீருடை அவிழ்க்கப்பட்டு வெறும் 'சிம்மிஸி'லும் அச் சிறுமி.

    தூக்கம் விடுபட்டு எழுந்து மேஜை உயரத்தில் தலையை எட்டி அவள் வெளிப்பட்டபோது, பள்ளியில் இருந்து இன்னமும் விடுபடாத, அதையும் விட ஒரு சிறிய அறையில் காற்றற்று புழுக்கத்தால் முகத்தில் ஒட்டியிருந்த சிறு சிறு முடிகளுடன் தென்பட்டாள். தூக்கத்திலிருந்து விடுபட்டதும் என்னிடம் விளையாட ஆரம்பித்துப் பேசுகிறாள். விளையாட்டும் கூட குதித்து ஆடி ஓடாமல் ஒரு பேப்பரில் தன் நேரத்தைக் கழிக்க என்று.

" ஆன்ட்டி இதபாருங்களேன், இது ஒரு ஆள்."

    ஒரு கோடும் அதன்மேல் பக்கவாட்டில் இரு கோடுகள் கைகளாகவும், நீளக்கோட்டை இரண்டாக வகுந்து கால்களாகவும்  மாற்றப்பட்டு, அதன் ஒரு உருண்டை தலையாக ஆக்கப்பட்டது.  தலையில் இரு வட்டங்கள் கண்களாகவும் இடைப்பட்ட கோடு மூக்காகவும், அதன் மீது கீழான குறுக்குக் கோடு வாயாகவும்  வரையப்பட்டது. 

"இல்லை- ஒரு பொண்ணு"

    சட்டென்று நெற்றியின் மத்தியில் ஒரு சிறு வட்டம் பொட்டென.

"பொண்ணு பொடவை கட்டி இருக்கா"

    கைகளின் இடையில் இரண்டு மூன்று கோடுகள் தாவணியாயின.

"பொண்ணு வீட்ல இருக்கா"

    அந்தக்கோட்டொவியத்தைச் சுற்றி ஒரு சாதுரம் வரையப்பட்டு, மேற் புறச் சதுரத்தின் மீது முக்கோணம்--

" வீடுண்ணா கதவு வேண்டாமா?"

    சதுரத்தைக் கீறி ஒரு நீள் சதுரம் வரையப்பட்டது. பெண்ணை அவள் உயரத்தை உடலை ஒட்டி.

"வீடு எங்கேயிருக்கு? ரோட்டு மேலதானே? ரோட் போடறேன்."

    அந்தக் கீறப்பட்ட நீள் சதுரத்தையும் முன்பு வரைந்த வீட்டிற்கான சதுரத்தையும் முன்னும் பின்னுமாகக் கடந்து கரையென கோடுகள்  ரோடாகியது.

"ஆண்ட்டி ரோட்லே மரம் யெல்லாம் இருக்கணும் தானே?"

    அங்கொன்றும் இங்கொன்றுமாக ரோடின் மீதும் இரு மருங்கும் இலைகள், கிளைகள் அடுக்கி வைக்கப்பட்டு அவற்றை இணத்துக் கோடுகள் வரைந்து அவைகள் நிலத்தில் இழுத்துக் கட்டப்பட்டன; சிறு சிறு வேர் களுடன். ஒவ்வொரு மரத்தின் இலையும் சற்றே மாறு பட்டு இருந்தது.

"ரோட்லே வண்டி யெல்லாம் போகும். இது அம்மா. அம்மா ஸ்கூலேருந்து வர பொண்ணுக்காக வேனுக்காக நிக்கறாங்க, சரி பொண்ணு போட்டச்சு. அப்புறம்? மரத்தில காக்கா குருவி யெல்லாம் போடணுமே. அப்புறம் பூ போடணும்."

    மரத்தின் மீதாகவும், அள்ளையில் இறகும் காலும்  உடலும் வாயுமாக பறவைகளும் பூக்களும் மலரவும் உலவவும் ஆரம்பித்தன.

" வீட்டுக்கு மாடிப் படி போட மறந்துட்டேனே? மாடிக்குப் போக படி வேண்டாமா?அய்யே"

    தலையில் அடித்துக் கொண்டே பேப்பரைத் திருப்பி  செங்குத்தாக நிற்கும் கோடுகளை படுக்க வைத்து பற்கள் போல் படிகள் அடுக்கப் படுகின்றன. முக்கோணம் ஆரம்பிக்கும் முனைவரை.

"வீட்டுக்கு மேலே சூரியன், வானம் , நிலா, ஸ்டார்ஸ் யெல்லா இருக்கும்"

    வீட்டுக்கும் பேப்பரின் முனைக்குமாக மேகமும் சூரியனும், நட்சத்திரமும் நிலாவும் ஒரு சேர ஒளிர்கின்றன. வீடுக்குக் கட்டப்பட்ட படிதான் அவளுக்கு வானத்தைக் காட்டியது போல.

"ஆண்ட்டி ரோட்லெ மாடு போடட்டுமா. ஆனா மாட்டோட மூக்கு எனக்கு வரையத் தெரியாது கொஞ்சம் வரைஞ்சு தறீங்களா?"

    எதிர் முகமாக மாட்டின் முகம் வரையப்பட்டு பக்கவாடில் உடலும் கால்களுமாக,

"நீங்க போட்டிருக்கற கண்ணாடி மாதிரி  ரண்டு வட்டம் போட்டு, நடுலே ஒரு கோடு போடப் போறேன் மூக்குக்கு. சரியா? ஐய்யா, ஸ்கூல் வேன் வந்து பொண்ணு வந்திட்டா. இது பொண்ணு."

    அம்மா போலவே ஒரு நெடுங்குச்சியும், பக்கவாட்டுக் கைகளும், கவட்டை கால்களும், தலைக்கென சிறு வட்டமும் அளவில் சிறியதாக வரையப்பட்டது. கால்களின் கவட்டையில் நெளிந்து வளைந்த கோடுகள் கவுன் ஆயிற்று. முக வட்டத்தின்  இருபுறமும் காதுகளின் இடத்தின் இரண்டு சடைகள் தொங்க மகள் அன்னையின் அருகில் நின்றாள்; கீறி எடுத்த நீள் சதுரத்தையும், சற்றே கடந்து கட்டடத்தின் மற்ற வெளியிலும் பரவி.  மேலும் சில வாக்கியங்கள் பேப்பரிலிருந்து வாய் வழியாக உரைக்கப் பட்டது.

"சொன்ன பேச்சு கேட்கவே மாட்டா. வெளையாட தெருவுக்கு ஓடுவா. மாடிப்படி ஏறி தானே மேலெ போவா. ரோட்லெ எவ்ளவு கார் வரும்? ஆக்ஸிடெண்ட் ஆனா என்ன செய்யறது?  அன்னக்கி இப்படித்தா, மாடி ஏற்னா, படிலேருந்து கீழே விழுந்திட்டா. ஆண்டி, அடி பட்டா டாக்டர் வேணும், ஆஸ்பிடல் வேணும், படுக்கறத்துக்கு படுக்க வேணும் ."

    ரோடிற்கென வரையப்பட்ட வீட்டிற்கருகில் ஓடும் ஒட்டிய கோட்டின் எதிர் புறம் ஒரு கோட்டின் மீதாக, மீதமுள்ள வெள்ளைத்தாளின் முனை வரையில் கோடுகள் இழுக்கப்பட்டு, பெரிய ஒரு சதுரம் வரைந்து, அதை குறுக்காக கோடிட்டுத் தடுத்து, ஆஸ்பத்திரி கட்டினாள். ஒரு அறையின் சதுரத்தில் நட்ட நடுவில் பக்கவாட்டு நீள் சதுரம் போட்டு அதன் கீழாக நான்கு கால்கள்- கோடுகள்-- இட்டு கட்டில் ஆக்கினாள். ஒரு முறைக்கு இரு முறை கால்களின் எண்ணிக்கையை சரி பார்த்தாள்.

    இதற்குள்ளாகவே, அவளின் உரையாடல் கதையில் அந்த வீட்டின் சிறுமி அடிபட்டுக் கொண்டாள். எனவே கதையிலும், காகிதத்திலும் மருத்துவரின் அவசியம் உருவாயிற்று.

    அதே கவட்டைக்கால்கள், அதே தலை, பக்கவாட்டுக் கைகள், மேல் சுற்றிய முந்தானை. எனவே அதுவும் பெண். தலை வட்டத்தில் இந்த உருவத்திற்கு மட்டும் காதுகள் அரை வட்டங்களாக வரையப்பட்டன. ஏன் எனில் ஸ்டெதஸ்கோப் மாட்டிக் கொள்ள. டாக்டர், அம்மாவைக் கடிந்து கொண்டாள். குழந்தையை ஆறுதல் படுத்தினாள். சாக்லேட்  கொடுத்தாள். ஏற்கனவே  அறையில் கால்கள் நான்குதான் என நிச்சயக்கப்பட்டு வரையப் பட்ட கட்டிலின் மீது வெள்ளைத்தாளின் மீது கிடத்தினாள். ஊசி மட்டும் போடக்கூடாதென அடி பட்ட சிறுமி டாக்டரைக் கேட்டுக் கொண்டாள்.  

"ஆஸ்ப்பிடல் மட்டும் கட்டினா எப்படி? மெடிகல் ஷாப் இருக்கணுமே? எங்க போடலாம்? இடமே இல்லையே? அம்மா, இன்னோரு பேப்பர் தா."

    முன்னிருந்த வெள்ளைத்தாளின் முடிவுற்றுப் போன கோடுகளை இரண்டாவது தாளிலும் ஊடுவி வரும் சாலை என கோடுகள் வரைந்தாள். சாலை ஓரத்தில் மருந்துக் கடையும், பக்கத்தில் அவளுக்குப் பிடித்த ஐஸ்க்ரீம் கடையும் சதுரமாக உருவாயின. மருத்துவ மனையின் உள்ளும், வெளியிலும் உள்ள குழந்தை களுக்காகவும், நோயுற்றால் ஆறுதல் அளிக் கவும், அம்மாவுக்கு உடம்புக்கு வந்தால் குழந்தகளுக்கு பசிக்குமே என்றும் ஐஸ்க்ரீம் கடை திறந்ததாகக் கூறினாள். இரண்டாவது வெள்ளைத் தாளில் அதிக இடம் வெறும் வெள்ளையாயிருப்பதை எனக்கு சுட்டிக் காட்டினாள்.  என்ன வரையலாம் என்று என்னைக் கேட்டாள், ஒப்புக்கு. பிறகு, அவளே அந்த இரண்டு தாள்களின் முழுச் சதுரத்திலும் முன்னும் பின்னும் பக்க வாட்டிலும் அடுக்கடுக்காக கோடுகளைப் பரத்தினாள் சிறு சிறு சம்பவங் களைக் கூறி.  அவளின் கற்பனையும், என்னுள் ஆச்சிரியமும், வெளி வானில் சிவப்பும், கணினியில் எழுத்துக்களும் படங்களும், அறையில்  அதிக உரு வங்களும், வெளியில் இரைச்சல்களும், அறையினுள் புழுக்கமும், மனதினுள் மகிழ்ச்சியும் கிளர்ந்து வெளி எங்கும் எல்லை கடந்து பரவலாயின.

    (இந்தக் கதையில் வரும் படங்கள் பற்றிச் சொல்லியாகவேண்டும். கதையில் வரும் சிறுமி வரைந்த சித்திரங்களுக்கும் காணப்படும் படங்களுக்கும் சிறிது வித்தியாசம் காணக் கிடைக்கலாம். கதைச் சிறுமியின் வயது நான்கு அல்லது ஐந்து இருக்கலாம். அவளையே தேடி திரும்பவும் அதே படங்களைப் போட்டு வாங்க இயலாமல் கதை முடிந்ததும் அவள் அப்பால் சென்று விட்டாள். வேறு ஒரு சிறுமியைத் தேடினேன்; வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்தாள்.

    ஆனால் நான் இந்த இரண்டாவது சிறுமியின் சுதந்திரத்துக்குத் தடை விதித்து என் தேவையைக் கூறி படங்கள் வாங்கவேண்டும். அது சிறுமிக்கு எதிரான செயல்தான். என்னுடன் சிறுமியின் பெரியோரும் அமர்ந்துகொண்டு சிறுமி படம் வரைய வழிநடத்தத் தொடங்கினார்கள். நானும்தான். சிறுமி செய்யும் காரியத்தை செவ்வனே செய்ய எண்ணி முதலில் அழிப்பானும் தாளும் எடுத்துக்கொண்டு பின் ஒரு பென்சிலையும் கொணர்ந்தாள். வட்டம் வரையும்போதே சரியாக வரவில்லையோ என்ற அச்சமும் தயக்கமும் கொண்டு அடிக்கடி என்முகம் பார்த்தாள். பிறகு சொல்லச் சொல்லக் கேட்டுக்கொண்டு படங்களை வரைந்துகொடுத்தாள். அப்போதே அவளுக்கு இது அலுத்துப் போய்விட்டது. எனக்கோ ஒவ்வொரு நிலையிலும் படங்கள் அடுக்கப்பட்டுக் கொண்டே வருவற்கேற்ப பிரதி எடுத்து வரையச் சொல்லலாமா என்று எண்ணம் ஓடியது. ஆனால் ஜெராக்ஸ் கடைக்கு அவளைக் கூட்டிச் சென்று சிறுமியின் நேரத்தை மேலும் எனதாக்கிக் கொள்ள ஒப்பவில்லை. எனவே அத்துடன் நிறுத்திக்கொண்டு கிளம்பி விட்டேன். இதனிடையே, குடும்ப விசாரிப்புகள், வரும் விருந்தினர்கள், காபி உபசாரம், டி.வி.யில் சினிமா என்று பலவிதத்தில் கவனம் கலைய நேர்ந்தது. சிறுமி தனது சுதந்திர ஓவியங்கள் சிலவற்றை எனக்கு இலவச இணைப்பாக மிகப் பெருந்தன்மையுடன் அளித்தாள்.

    மறுநாள் சற்றே கசங்கியிருந்த பென்சில் படங்களை ஜெராக்ஸ் பிரதி எடுத்துப் பார்த்தபோது படத்தில் கோடுகள் சாம்பல்பூத்துத் தெளிவில்லாமல் இருந்தன. பென்சில் படங்களை கருப்பாக்க நான் மற்றொரு சிறுமியை நாடவேண்டி வந்தது. ஏறக்குறைய அதே வயதிற்கு, என் வீட்டினருகில் உள்ள ஓர் அரசுப் பள்ளியிலிருந்து. கணினிக்கும், வீட்டிற்கும், மூன்றாம் சிறுமிக்கும் தளம் வேறு வேறு. மூன்றாம் சிறுமியை நான் நாடி வரையச் சொன்னபோது - வரைதல் என்றுகூடக் கூற இயலாது; இருக்கும்கோட்டிற்கு மேலாக வண்ணத்திலோ அல்லது கருப்பு மசியிலோ விளம்புதல் மட்டுமே -அது அந்தச் சிறுமியின் மீது நான் செலுத்தும் வன்முறை என்று உணர்ந்தேன். ஆனாலும் செய்தேன். இச்சிறுமியோ கோட்டின்மீது வரைய மிகப் பயந்தாள். கோடு தவறாகிவிட்டால்? கோணலாகிவிட்டால்? என்று என்னிடம் கேட்டுக் கேட்டுத் தயங்கித் தயங்கி வரைந்தாள். சில நெளிதல்களுடனான கோடுகள் உருவான போது மிரண்டாள். சிறிது சிறிதாக தைரியம் அடைந்து பேசிக்கொண்டே வரைந்தாள். தனது தந்தை அலுவலகத்தில் மேனேஜர் என்றாள். வேனில் பள்ளி வருவதாகச் சொன்னாள். படம் போடுவது தனக்குப் பிடிக்கும் என்றாள். நாட்டியம் ஆடுவேன் என்றாள். முடித்தபின் திரும்பவும் இதுபோல வரைய எப்போது கூப்பிடு வேன் என்று கேட்டாள். பலரில் தன்னை தெரிவு செய்ததற்காகப் பெருமை கொண்டாள்.

    சில தாள்களையும் வண்ணப் பெட்டியையும் கொடுத்து அவளுக்கு விருப்ப மானதை வரையச் சொன்னேன். மகிழ்ச்சியுடன் வரைந்து வண்ண மிட்டாள். பெட்டி வண்ணங்களில் மாட்டுக்கு தீட்ட என்று வண்னம் ஏதும் இல்லையே என்றபோது எனக்கும் அது சரிதான் என்று தோன்றியது. சிவப்பு, பச்சை, மஞ்சள் இவை மிருகங்களில் இல்லாத வண்ணம் அல்லவா?  வெள்ளை மாடு என்று சொல்லிவிட்டு வெள்ளைத் தாளில் வெள்ளை வண்ணம் தீட்டினாள். அதற்குள் அவளது ஆசிரியை நேரமாகிவிட்டதாகச் சொல்லி அவளைக் கூட்டிச் சென்றாள். செல்லும்முன் சிறுமி தனது ஓவியங்களை எனக்கே பரிசளித்தாள்.

    இப்போது நான் எல்லாவற்றையும் இணைத்துத் தங்களுக்கு அனுப்பி யுள்ளேன். மழைத்துளி சிற்றோடையாய் வழிவதுபோன்று இந்த அனுபவம் தங்களை வந்து அடைந்துள்ளது.

க்ருஷாங்கினி


ஓளியிடை நிழலாய்-கவிதை

ஓளியிடை நிழலாய்

1.நீ நிழல் பற்றி என்ன எழுதி இருக்கிறாய்?
இல்லை என்றே நினைக்கிறேன்.
எப்போதும் உடன் உழலும் நிழல் பற்றி
ஏன் எழுதத் தோன்றவில்லை உனக்கு?
தெரியவில்லையே? ஏன்?
நிழலாக எட்டி நின்று கேட்டுக்கொள்கிறேன்.

2.ஒளியின் நிறம் பச்சை, நீலம், சிவப்பு
பொருளின் நிறமும் ஏதாகிலும் இருக்கலாம்.-ஆனால்
எப்போதும்,எந்நேரமும், நீளமாகவோ, குட்டையாகவோ
பருத்தோ, சிறுத்தோ விழும் நிழல் என்ன நிறம்?
தோற்றம் தரும் கருமைதானே?
நிழல்கள் ஏன் நிறத்தைத் துறக்கின்றன?

3. குழந்தையைக் கொஞ்சினாள்
கோடி சூர்யப் பிரகாசமே
சுட்டுபொசுக்கும் ஒரு சூரியனே போதாதா?
மேற்கின் கோடியில் விழும்வரை.
கோடி சூரியன்? தாங்குமா?
உட்சபட்ச ஒளி பொருந்திய
அறிவுச் சுடர், ஞான சூரியன், எல்லாமாக
வந்து விழுகின்றன தாயின் மொழியில்.

4. அதீத ஒளி, ஒளியின் வெளி
ஒளி திடப்பொருளை ஊடுருவாது.
ஒளிக்குத்தடை திடப்பொருள்.
தடை செய்யும் பொருளை,
உருவத்தை ஒன்றுமில்லாமல் செய்து
பொருளையே நிழலாக்குகிறது
பின்புலத்தின் அதீத ஒளி.

5.எங்கள் ஊரில் என்றும் உண்டு சூரியன்,
வருடத்தில் ஓரிரு மாதங்கள் தவிர.
சூரியனை வழிபடுவோம்,
பயிருக்காகவும், உயிருக்காகவும்.
உடலின் நீரும், நிலத்தடி நீரும்
உஷ்ணப் பெருக்கில் வெளியேறும்
இருப்பிடம் விட்டு.
உனக்கோ ஆரஞ்சுச் சூரியன் அதிசயம்.
என்றேனும் எட்டிப் பார்க்கும் ஒளி உருண்டை
கொண்டாட்டமாகிறது, உயிர்களுக்கு.
ஆரஞ்சு சூரியன் ஆரஞ்சுத் திரையிடை
தோன்றித் தோன்றி மறைந்து
பின்னிருந்து வெளியேறும் ஒளிவெள்ளம்
பிடித்துத் தள்ளி, உன்னையும் ஆடவைக்கிறது
ஓளியிடை நிழலாய், உருவத்தின் வெளிக்கோடுகளாய்.

                                    க்ருஷாங்கினி.