Monday, July 23, 2012

நான்கு கவிதைகள்

(1) நீர் விழுங்கும் நில முதலைகள்

ஆங்காங்கே சேகரிக்கப்பட்ட கழிவுகள்
வந்திறங்கின, வண்டி வண்டியாய்.
ஒரு நெடிய காம்பவுண்டு சுவரும்,
வண்டி நுழையும் அளவிற்கு
சிறிய கேட்டும் அந்த வெட்டவெளி
ஏரிக்கரையின் ஒரு ஓரம்.
பள்ளம் மேடாகியது,கழிவுகள் நிரப்பியதால்
அழுத்தி, நசுக்கியது அவற்றை ஒரு
பெரும் வண்டி வந்திறங்கி

சுவர் உடைக்கப்பட்டு.
இன்னமும் சில நாட்களில்
மீதமுள்ள சுவற்றுக்குப் பின்னால்
சூலம் நட்ட மரமோ,
சிறு குடிசையோ,
கோவிலோ, வீடோ,
மெல்ல மெல்ல முளைக்கும்.
எல்லோருக்கும் அது தெரியும்.
என்ன, ஒரு சிறு மாற்றம் தானே?
நீர்ப் பரப்பு நிலமாகிறது.

ஏரி முன்புண்டு நூறு ஏக்கர்.
இப்போதோ எனில் அறுபதுக்குள் அடக்கம்.
அதிலும் சில சதுர அடிகள் உள்வாங்கி
விழுங்கப்படுகிறது கண்ணெதிரே.
எந்த வண்ணக் கொடியுடன் போராட?
கையறு நிலையில் கவிதையாய் வடிக்கிறேன்
அதை நான்.(2) ரயில்பெட்டியில் கும்பி வித்தை

மெத்தென்ற முதல் ஒலி உள்நுழைந்தது
சூடுபடுத்தப்படாத தோல்கருவியின் ஒற்றையாக
கணுக்காலளவு ‘கவுன்' அணிந்த சின்னஞ்சிறு சிறுமி,
ரயில்பெட்டியை நோட்டமிட்டு அளந்தாள்.
இரண்டெட்டு வைத்து ஏதோ தீர்மானித்தவள்போல
சடாரெனத் தலையை பின்புறமாகத் தாழ்த்தினாள்

உடல் வில்லாயிற்று, கை இரண்டும் கால்களும் தரையில்;
கணநேரத்தில் கால்கள் மேலெழும்ப - திகைத்துப்
பதறியது என்மனம் சுழன்றது. உள்ளாடை உண்டா?
ஆண்களும் பெண்களுமாக வழியும் அப்பெட்டியினுள்
எத்தனை ஜோடிக் கண்கள் எதையெதைக் காணும்?
சொல்லொணா சோகத்துடன் தூக்கும் கால்கள் கண்டேன்.
தோல்நிறத்தொரு பைஜாமா இறுக்கமாக,

கால்களை முன்வளைத்து கையொன்றில் மட்டும்
ஏந்தி நின்றாள் உடலை, சிவனைக் காணக்
கைலாயம் சென்ற சிறு புனிதவதியென
மறுபடியும் கவிழ்ந்தாள், மீண்டும் இரண்டடி,
பின்னொரு வில், பின் ஒரு கால்தூக்கி
பின்னும் விழுந்தாள்- பெட்டியின் தரைதனில்
கதவோரம் ஓய்வெடுக்கும் சொகுசுக்காரர்களின்
முன்னாலும், தரைமீதும், பின்னாலும்
துவண்டு படுத்து, அமர்ந்திருக்கும் மெதுபொம்மையென
புரண்டெழுந்தாள் பெட்டியின் கடைசிவரை.

மறுமுறை சிறுவளையம் கைகொண்டு கண் அளந்தாள்.
மறுமுறையும் தோதான இடந்தனில் உட்செலுத்தி
வெளியிலிழுத்துவிட்டாள் வளையத்தில் சிறு உடலை.
கண்கள் விரிய கண்டு களித்தனர் சிறுவர்கள்.

சூடூட்டப்படாத தொய்ந்த தோல் கருவியுடன்
ஆணும் அச்சிறுபெண்ணும் ஏற்கனவேயிருந்த
சில்லரையைக் குலுக்கி ஒலியெழுப்பியபடி
வலம் வந்தனர். சில காசுகள் இணைந்து குலுங்க
அடுத்த நிறுத்தத்தில்வேகம் குறைந்த
ரயில் நிற்கத்தயாரானது.

ஒத்த வயதுடைய என் சிறுமியை பற்றியிழுத்தேன்
வளையும் வளையச் சிறுமியின் மீது பட்டுவிடாதவாறு,
நகரும் ரயிலிலிருந்தே இறங்கிவிடுவானோ
எனப் பயந்த மற்றொரு ஆணோ-பதறிக்
கதவருகில் சென்றணைத்தான் தன் பிள்ளையை.

காசு இட்டவரும் இடாதவரும் என
சிறு கூட்டம் இறங்கியது - மெதுச் சிறுமியும்
மெத்தொலிக் கருவியுடன் ஆணும்கூட.
ரயிலின் எல்லாப் பெட்டிகளும் எப்போதும்
ஒரே அகல நீளம் கொண்டவைதான்.

----------------------------------------------------------------------
 (3) லேடீஸ் கம்பார்ட்மெண்ட் 

வீட்டின் வாயிலிருந்து காலி வயிற்றுடன்
விரந்து கிளம்புகிறார்கள் -- இவர்கள்

கிழமையும், மூகூர்த்த நாட்களின் முன் தினமும்
தீர்மானிக்கின்றன இவர்களின் உடையை.

வெள்ளிக்கிழமையில், பிடரியிலிருந்து
இடுப்புவரை அவரவர் இருப்புக்கு ஏற்ப
படர்ந்த ஈர முதுகோடு ரயில் ஏறுகிறார்கள் -- இவர்கள்.

அமர்ந்து, உடன் தலை உதறி, சீப்பெடுத்து வாரி
சுற்றிக் கொண்டு வந்த புடவையைச் சீர் செய்து உடுத்தி--பின்
சிறு டிபன் பாக்ஸ் திறக்கிறார்கள் -- இவர்கள்.

விட்டுப்போன ஸ்லோகங்கள் படிக்கப்படும்
உரத்தகுரலில் பக்திப்பாட்டுக்கள் ஒலிக்கப்படும்
பிறரிடம் கையேந்தாமல் ஆண்டவனிடம் ஏந்தி
அவ்வப்போது நீளும் கைகளுக்கும் தவறாமல் இடுகிறார்கள்-- இவர்கள்.

அடையாள அட்டையைப் பொத்தி எடுத்து
கண்ணாடித் திரை அகன்று உள் நுழையும் நேரம்
வெளியிடத்தில் திறந்த வெளியில்
விட்டு விடுகிறார்கள் வீட்டை-- இவர்கள்.

குட்டி வளர்ப்பு மிருகம் போல கண்ணாடித்
திரை தாண்டியும் கெஞ்சும் கண்களுடன்
அவ்வப்போது திறப்படும் கதவின்
காற்றுடனும் எட்டிப் பார்த்து ஏங்கி நிற்கும் வீடு

சக்தியெல்லாம் வழிந்துவிட, கசங்கிய உடை
மடங்கிய பைல்களுடன் முகப்பூச்சற்று
உரிய நேரத்திற்கும் பிறகே எப்போதும் கட்டாயமாக
வெளியேற்றப்படுகிறார்கள் -- இவர்கள்.

கண்ணாடித் திரையிடை விட்ட குட்டியை எடுத்துத்
தோள் மீது சாற்றி அலுவலகத்தைத் தன் ஒரு விரல்
பிடித்துக் கீழிறக்கி உடன் நடத்தி தளர் நடையுடன்
வாகனம் அடைய விரைந்து நடக்கிறார்கள் -- இவர்கள்.

உப்பிட்ட ஒற்றைக் கொய்யா, ஒரு சப்போட்டா
சிறு சொமோசாக்கள் ஒன்றிரண்டு, பாப்கார்ன்
முதல் வியாபாரமாகத் தொடங்குகிறார்கள் -- இவர்கள்.

நெடு நேரம் சிறு உணவை மென்று
பசி ஆற்றிக் கொண்டு, கழுவி வைத்த டிபன்
டப்பாக்களில் உதிரி மலர்கள்
நூலெடுத்துக் கட்டி வைத்து, பொதினா
காலிப்பிளவர், கீரைகள் ஆய்ந்து
காலடியில்  இட்டுக் கொள்கிறார்கள் கழிவுகளை--இவர்கள்.

சிறிதே சிறிது நேரம் அடுத்திருப்பவருடன் பேசி பின்
கைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து
உரையாடிக் கண் மூடுகிறார்கள்--இவர்கள்.

ஜன்னல்களில் பான்பராக் எச்சலோ
காறித்துப்பிய கோழைத் துணுக்குகளோ
சிறு சிகரெட் துண்டுகளோ
வேர்க்கடலை தோல்களோ இல்லாமல்தான்
இருக்கிறது, வீட்டின் சமையல் கழிவுகள்.

தரை நிரம்பி, எல்லோர் கைகளிலும் இடுப்பிலும்
அலுவலகமும் வீடுமாக  நிரம்பி வழிகிறது
லேடீஸ் கம்பார்ட்மெண்ட்
..
( 4) வட்ட மேசை

எத்தனையோ நாற்காலிகள் இருந்தாலும்
அமர்ந்தது என்னவோ அந்த
வட்ட மேசையின்மீது- சற்றே
குனிந்து கையூன்றி எதிர் இருக்கையில்
விவாதமும், விமர்சனமும், கவிதையும், நெருக்கமும்
மற்றெல்லாமாக என விழுந்துகொண்டு
இருந்தன சொற்கள் மேசையின்
மீதாக

ஒன்றின்மீது ஒன்றாக,
குறுக்கு நெடுக்காக,
குவியல் குவியலாக,
சிறுமலையென.. ஆனால்
ஏதொன்றும் சிதறி தவறிக் கீழே
இறங்கவும் இல்லை; விழவும் இல்லை.

வட்டம் என்றால் சுழலும்
அல்லது உருளும்.
ஏதோவொரு அசைவுக்குட்பட்டதே
உருண்டால் சிதறும், சுழன்றால்
சொற்கள் விசிறி அடிக்கப்படும்.
ஏதும் நிகழாமல்
நிலைத்தே நின்றது வட்ட மேசை.

என் வீட்டிற்கு எடுத்துவர
மேலெழும்பியது விருப்பம்.
அது ஒருநாள்

நிறைவேறியது, உண்மையாகவே
எல்லோரும் எப்போதும் பேசிய
பழந்தமிழும், செந்தமிழும், அயல்
தமிழும், இவற்றுடன்
என் சொற்களுமாக வந்து
இறங்கியது மேசை.

ஆனால்,

நான் நினைதவாறில்லாமல் தலை
கழற்றப்பட்டு சக்கரம்போல
பக்கவாட்டில் அடுக்கப்பட்டு
வண்டியில் இருந்தது.
அவசரம் அவசரமாக வண்டியோட்டியிடம்
“சிதறி உருளும் சொற்களையும்
சற்றே சிரமம் பாராமல் எடுத்துவரவும்”
பணிந்து பணித்தேன்.

முகத்திலும், உதட்டோரத்திலும், பார்வையின்
ஊடுருவலிலும் எளனமும் பயமும்.
நானும் உடன் சென்று வண்டியிலிருந்து
விடுபட்ட சொற்களைப் பொறுக்கிக்
கைகளில் அள்ளிவந்தேன்.

இப்போது என்வீடு முழுக்க சொற்கள்
குதித்துக்கொண்டும், ஏற்கனவே இருந்த
இளைய சொற்களோடு
கைகோர்த்து விளையாடியபடியே.

அதிலிருந்து எடுத்த சில சொற்கள் இவை.


No comments: