வெள்ளை யானையும் குளிர்பதனப் பெட்டியும்
மூடிய கண்ணினுள் ஒரு சிறு உறுத்தலும் இல்லாமல் அந்தப் பெரிய வௌ¢ளை யானை என்னைப் பார்த்தபடியே உள் நுழைந்திருந்தது. யானையின் நிறம் என் மனத்தினுள் சற்றே ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், உருவத்தின் பாங்கும் அதன் அசைவுகளும் என்னோடு எப்போதும் உறைந்திருக்கும் காட்சிகளுக்கு ஒப்பவே இருந்ததினால் நிறம் ஏற்படுத்தும் ஆச்சரியமும் சில நிமிடங்களில் பிரிந்து போயிற்று. யானைக் கலரிலோ அல்¢லது பஞ்சு நிறத்திலோ மேகங்களில் காணப்படும் வடிவ ஒற்றுமையில் உள்ள மெத்மெத்தென்ற மென்மையோ என்னவோ இந்த வௌ¢ளை யானையில் காணாமல் போயிருந்தது. மூடிய கண்ணின் முன் யானை வரக் காரணம் ஆராய மனம் மேற் கொண்டது.
யானை என்னை எப்போதும் மரணத்தின் துக்கத்தினுள் கொண்டு செலுத்தும். இப்போதும் அப்படியே. எனவே கண் தானாகத் திறந்¢தது. சூழலை உள் வாங்கிக் கொண்டது. யானை வந்ததாக எண்ணிய கதவு என்னமோ மூடிய படியேதான் இருந்தது.
அம்மாவின் திடீர் இறப்புவரை என் அறியாப் பருவம் யானையுடனேயே கழிந்தது. எப்போதும் வீட்டில் கல் மீது ஏற்படும் உளிச் சத்தம். முடிந்ததும் முடியாததும், நிமிந்ததும், அமர்ந்ததும், படுத்ததுமாக பல வகையில் கடவுள் உருவங்கள் கல்லிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். நிலமெங்கும் சிறு சிறு துகள்களாக கருங்கற்கள். துகள்கள் யானைக் கலரில் அல்லது அதையொத்த வெண்மையையும் கருமையுமாய், இறைந்து கிடக்கும். அமைதியாய் அமர்ந்திருக்கும் புரியாத விலங்காக கடினமான வெறும் பாறை. ஆங்காங்கே உருண்டிருக்கும் தூண்கள் சிற்பங்கள் என முழுமையடைந்த கற்களின் உருவ மாறுபாட்டில் கொக்கி போல துருத்திக் கொண்டிருக்கும் எந்தக் கல் நுனியிலும் ஏதோ ஒரு துணி தொங்கிக் கொண்டு, கனத்துடனேயோ அல்லது காற்றில் ஆடிக் கொண்டோ, பை, சட்டை, துண்டு என்று எந்த வடிவத்திலும் சிற்பத்துடன் துண்டாடிய நவீனத்துடன் சிற்பியிடமிருந்து பிரிந்து உசலாடிக் கொண்டிருக்கும். பள்ளி விட்டு வீட்டிற்குத் திரும்பிய பின் முதல்நாள் முடிவுக்குப் பின், பகலில் மலர்ந்திருக்கும் சிலை பார்க்க ஆவல் கொண்டு ஓடிவரும் நாட்கள் அவை. என் கையிலும் உளி ஆடும் நாட்களைக் கற்பனை செய்து கொண்டே வலம் வரும் பள்ளி நாட்கள். திறந்த வெளிதாண்டி, வீட்டினுள் அம்மாவைக் காண ஓடிவிடுவேன். சிலைகளிலும் கம்பத்திலும் அசையாது நிற்கும் யானை தினமும் அசைந்து எங்கள் வீட்டைக் கடக்கும், கோவிலுக்கு அபிஷேக நீர் தளும்பத் தளும்ப சுமந்தபடி. அம்மாவோடு யானைக்கு நல்ல சிநேகிதம். எனக்கும் தான். பூஜை முடிந்து வரும் வழியில் அம்மா முறத்தில் வைத்திருக்கும் வெல்லமும் அரிசியும் எடுத்து சாப்பிட்டு, எப்போதும் முறத்தை சுழற்றித் தட்டித் திரும்ப அம்மா கையில் திணிக்கும் யானை.
பள்ளிச்சவாரி எனக்கு அவனின் மீதுதான். ஸ்தபதி பிள்ளை. அவனின் முன் நெற்றியின் அருகாமையில் அமர்ந்து பையைத் தொங்கவிட்டு, அனைத்து வீடுகளையும் கடக்கையில் எனக்கு ஏகப்பட்ட உயரம் கூடி விடும். எல்லோர் வீட்டு ஓடும் அதன் மீது எறிந்தும், விழுந்ததுமான பல விதப் பொருட்கள் கண்டு, ஓடுகளைத் தொட்டு மரத்தின் பெரிய கிளைகளைக் கை கொண்டு எட்டிப் படித்து என யாருக்கும் கிடைக்காத யானைச சவாரி. . புட்டத்தில் முடி முள்ளாய்க் குத்தும், டிராயரையும் மீறி.. வெற்றுக் கால்களில் வீட்டு வாசலில் உருட்டி விடப்பட்டிருக்கும் கற்களின் சொரசொரப்போடு என்னையும் அசைத்துக் கொண்டு பள்ளி நோக்கி
நடப்பான், பாகன் கால் நடையாக உடன் வர. என் தின் பண்டங்களில் அவனுக்கும் பங்கு உண்டு.
ஒருநாள் பள்ளி விட்டு அகாலத்தில் வந்த எனக்கு அம்மாவின் மரணம் புரியாத பயமாய் இருந்தது. அதன் விளைவுகள், காரணம் ஏதும் அறியாமல் எல்லாம்
நடந்தேறியது. அடுத்த நாள் அவன் வரும் நேரம் பாட்டி அவன் ஏங்கக் கூடாதென்று முறத்தில் அரிசியும் வெல்லமுமாகத் தெருவிற்குக் கொண்டு வந்தாள். வெற்றுப்
பார்வை பார்த்து விட்டு கலங்கிய கண்களுடன் வீட்டைக் கடந்து சென்றான் அவன், முறத்தைத் தொடாமல். மறுநாளும், அதற்கு மறுநாளும் கூட. இதுவே தொடந்தது. எனக்கு மரணத்தின் துக்கத்தை அதிகப் படுத்தலை அவன் ஒவ்வொரு நாளும் உணவின் மறுப்பு மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.
இன்று தரிசித்த கோவிலின் வாசலில் கட்டியிருந்த யானை என் உள் மனத்தை மேலெழுப்பி யிருக்கலாமோ? பாகன் சாப்பிட்டு இலையை மடித்து யானையின் வாயினுள் இட்டுக் கையையும் இரு முறை உள் வாயினுள் செலுத்தி புரட்டி எடுத்துப் பின் தன் மேல் துண்டால் துடைத்துக் கொண்டான்¢. வௌ¢ளையானை கண்ணில் முளைக்க இது கூடக் கரணமாயிருக்கலாம்.
வௌ¢ளையானை கனவில்கண்டது பற்றிப் பலரால் பலன் சொல்லப்பட்டது. புத்தரையும் மற்ற புனிதரையும் இணைத்து . வௌ¢ளையானை பிரிவின் விளக்கம், ஞானத்தின் வடிவம், அறிவின் படிமம், என அவரவர்க்கு ஏற்றபடி. எனக்கென்னவோ நகரத்தின் சிறிய பிளாட்டினுள், போதாத வாயிற் படியில் இது எப்படி சிரமத்துடன் உள் நுழைந்திருக்கும் என்பதே கேள்வியாய் இருந்தது. பாமரேனியன் நாய்க்குட்டி வேண்டுமானால் குனியாமல் நுழையலாம் வௌ¢ளையாய், பொதியாய் கிரில் கதவின் உட்பக்கம். ஆனால் யானை எப்படி?
‘ என்ன வௌ¢ளையானையா? வெறும் யானைக்கே சம்பளம் கட்டாது. வௌ¢ளை யானை வேறயா?’
இப்படி பலப்பல வழிகளில் என்னுடன் வௌ¢ளை யானை அநேக நாட்கள் பேசப்பட்டது பெரியோராலும், சிறியோராலும்.
நான்கு பெரிய வௌ¢ளை மர ஸ்டாண்ட் பெரிய கால்களுடன் சதுரமாக நின்று கொண்டிருந்தது அந்தக் குளிர்பதனப் பெட்டி, அதன் கைப்பிடி சற்றே நீளமாய் தொங்கிக் கொண்டு துதிக்கையைப் போல. சாவித்துவாரம் சிறு உலோக வட்டமும், அதன் ஒரு கோடு கீற்றுப் பார்வையுமாய். கடையினுள் நுழைந்து அதன் அருகில் சென்று சற்றே தடவிப் பார்த்தேன். மிக வழவழப்பு. கன்னத்தைஉரசினேன். ஸ்டாண்டின் கால்களைத் தட்டிப் பார்த்தேன். மேலும் கீழும் பார்த்துச் சுற்றிச் சுற்றி வந்தேன். அது என்னைப் பெயரிட்டு அழைத்தது , அம்மாவின்குரலில்.
பிளாட்டின் இடம் கருதி அம்மா என் யானையுடன் இரண்டரக்கலந்து என் வீட்டில் இடம் பெற சதுரமாய் அச்சிலடக்கி உள் மனம் குளிர என்னை அழைக்கிறாள் என்று. சில நாட்கள் தொடர்ந்து கடை சென்று காசு போட்டு வௌ¢ளைச் சதுரத்தைத் துதிக்கையுடன், கால்களுடன் வாங்கி உள் அறையில் இரவும் பகலும் எந்தேரமும் வெளிச்சம் படும்படி அமர்த்தினேன். அருகமர்ந்து முகம் தேய்த்தேன்.
அம்மாவின் மடிமீது. யானைத் தன் சிறு கண்களால் என்னைப் பார்த்து நான் இட்ட அனைத்தையும் தன் வயிற்றுக்கிள் அடக்கி எனக்காகப் பாதுகாத்து நின்றிருந்தது, வெளிச்சத்தில். சிறு கீறல் கூட அற்று எனது பிளாட்டின் ‘கிரில்’களையும், கதவுகளையும் கடந்து உள் வந்த போது சேதாரமில்லாமல் என்னை அடைந்த---இருப்பிடம் நுழைந்த வௌ¢ளை யானையை எல்லோருக்கும் காட்டினேன்.
No comments:
Post a Comment