Wednesday, December 26, 2012

கட்டுரை-பாரம்பரிய பரதத்தில் நுழையும் புதுமையும், காக்கப்படும் பழமையும்

பாரம்பரிய பரதத்தில்
நுழையும் புதுமையும், காக்கப்படும் பழமையும்

    பத்து ஆண்டுகளுக்கு முன் நான் எனது தோழியுடன் (ஆங்கிலத்தில் எழுதுபவள்) தஞ்சாவூரில் பல கிராமங்களூக்குச் சென்று நாதஸ்வரக் கலைஞர்களைக் கண்டு அவர்களின் தற்கால நிலை பற்றி அறிந்து ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் எழுதுவதற்காக சென்றிருந்தேன். எங்களுடன் ஒரு மூத்த நாதஸ்வரக் கலைஞர் அவர்களின் பேரனும் உடன் வந்திருந்தார். அவரும் நாதஸ்வரக் கலையை இன்னமும் பரவலாகச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். கோவில்களில் பரந்த மண்டபங்களிலும், வெளிப் பிரகாரங்களிலும், கோவிலைச் சுற்றியுள்ள தெருச் சந்திப்புக்களிலும் நாதஸ்வர ஓசையும், தவிலின் கம்பீரமும், சலங்கையின் நாதமும் நிறைந்து வழிந்து ஓடிக் கொண்டிருந்தது என் மனதில்.  
    ஒரு கோவிலில் கல் நாயனம் கண்டேன். அதை  அதற்காவே ஏற்படுத்திய ஸ்டாண்டில் வைத்து வாசிப்பார்கள் என்றனர். யானையின்  தந்தத்தில் இரண்டு நாதஸ்வரம் அக்கோவிலில் இருந்தது எனவும், அதில் ஒன்று தற்போது சென்னையில் ஒரு பெரிய மனிதரிடம் இருப்பதாகவும், மற்றொன்று வேறு ஒருவரிடம் இருப்பதாகவும் தெரிவித்தனர். தந்த நாயனமோ, கல் நாயனமோ இப்போது உபயோகத்தில் இல்லை எனினும், அதை வாசித்த பரம்பரை இன்னமும் இருக்கிறது. தந்த நாயனத்தில் காற்று ஊதி உள்ளிழுக்கும் பொழுது அதன் ஊடாக ஊடாடி வரும் காற்று உடலுக்கு மிகுந்த உஷ்ணத்தை கொடுக்கும், அதனால் வாய் மற்றும் மூக்கு வழியே குருதி வெளிப்படும். அதை ஈடுகட்ட நிறைய உருக்கிய நெய் சாப்பிட வேண்டும் என்றும் கூறினார். அதன் நாதம் எவ்வாறு இருக்கும்? கல் நாயனத்தின் உள்ளே காற்று செலுத்த நிறைய பிரயத்தனப் பட வேண்டுமா?அதை முதலில் கண்டு பிடித்தவர் யார்? அதை வாசிக்கத் தெரிந்தவர் இன்னமும் யாராவது இருக்கிறர்களா? 
    நாதஸ்வர இசை செழித்து எல்லோர் இல்லங்களிலும் சலங்கையும், ஓசையும் பொங்கிக் கொண்டு இருக்கும் என்று என் மனதில் குதூகலம் இருந்தது. எனது குதூகலம் வெறும் புனைவாகவே இருந்தது. நிறைய நாதஸ்வர வித்வான்களின் வீடுகளில் வாசிப்போர் இன்றி ஒரு தூசி படிந்த உறையில் இட்டு நாதஸ்வரம் தொங்கிக் கொண்டு இருந்தது. அடுத்த அடுத்த சந்ததியினர் பல பணிகளைக் கற்று வேற்றூரில் அல்லது நாட்டில் வசிப்பதை 'அப்பாடா' என்ற நிறைவுடன் கூறினர். இசை கல்லூரியில், நாதஸ்வரம் கற்றுக் கொள்ள உதவித் தொகை அளித்தும் கூட ஐந்து அல்லது ஆறு மாணவர்களே கல்வி மேற் கொண்டிருந்தனர். கோவில்களில் பூஜைக்காக வாசிக்கும் சிலர் இருந்தனர். மனம் மிகவும் கனத்தது. சென்னை போன்ற பெரு நகரங்களில் டிசம்பர் மாதத்தில் மட்டும் அதாவது, இசை விழாக் காலத்தில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன என்று ஒரு கூற்று தெரிவிக்கிறது .அதில் எத்தனை நாதஸ்வரக் கச்சேரி? விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்போதும் சில விரல்கள் மீதமாக நெரலாம். ஆரம்ப நாட்களில் இசைக்கப்படும் மங்கள இசை தவிர. ஆனால் அதற்கு பிறகு பெரும் முயற்சியில் தற்போது நாதஸ்வரத்திற் கென்றும் கச்சேரிகள் ஏற்பட்டுள்ளன. அதே இசை வேளாளர் பரம்பரைச் சார்ந்த பெண்கள் பலர் தன்னை இறைவனுக் கென்றே அற்பணித்துக் கொண்டு, மிகுந்த அறிவும், சுதந்திரமும், கல்வியும் கொண்டு விவாதங்கள் புரிந்து, விரிவுரை ஆற்றி கலை நிகழ்த்தி கலைக்காகவே வாழ்ந்து இருக்கின்றனர். வாழ்ந்தும் வருகின்றனர் இன்னமும் வெகு சிலர், மீதமுள்ளோர்.

    பரத நாட்டியம் என்பது நாட்டிய சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. அது கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டுகளுக்குள் எழுதப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. பரத  சாஸ்திரம், ரிக் வேதத்தில் இருந்து சொற்களையும், உரையாடலையும், சாம வேதத்திலிருந்து இசையையும், யஜுர்  வேதத்திலிருந்து உணர்வுகளையும், அதர்வண வேதத்திலிருந்து அழகியலையும் எடுத்து, திரட்டி ஐந்தாவது படைக்கப்பட்ட ஒன்று என்றும் புராணம் கூறுகிறது. ஆனால் இப்படிப்பட்ட நாட்டிய சாஸ்திரத்தை வைத்துக் கொண்டு வெறுமே படித்து அதை உடலில் கொணர்ந்து ஆடிவிட யாராலும் இயலாது. நாட்டியத்தை நிகழ் கலையாக உருவாக்கியதை  பல நூற்றாண்டுகளாக கற்பித்து, நிகழ்த்தியும் காத்தும் வரும் நட்டுவனார்கள் இல்லை என்றால் இது உயிரோடு இருந்திருக்குமா? கற்பித்தலை மட்டுமே வாழ்வாகக் கொண்டிருந்ததினால், தனது நிகழ்ச்சிகள்,. அதன் மேடை ஏற்றம், அதன் மூலம் மற்றவை என எதைப்பற்றியும்  அக்கறை கொள்ளாமல் சொல்லிக் கொடுத்து  வளர்ப்பதிலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்தி இருக்கின்றனர்.

    கற்பவரின் உடல் பாங்கு, அவர் வாழ்விடத்தின் சூழல் என சில அடிப்படை மாற்றங்களைக் கணக்கெடுத்து, சொல்லிக் கொடுத்து அக் கலையை வளர்த்தனர். மெல்ல மெல்ல கலைஞர்களின் வாழ்வியல் முறை மாற்றத்திற்கு ஆளாகிப் போயிற்று. பரத கலை கோவில்களையும், பக்தியையும் விட்டு நகரம் நோக்கிப் இடம்பெயரத் தொடங்கியது. இசை வேளாளர் பாரம்பரையில் இல்லாத மற்றவர்களும் பயில்வது   ஆரம்பம் ஆயிற்று. நகரம் நோக்கி எடுத்து வந்தவர்கள் பலர். கற்பிக்கும் பலரும் பரத்தத்தில் தமக்குத் தோன்றிய மாற்றங்களை செய்ய முற்பட்டனர். மெல்ல மெல்ல பரதம் பரவத் தொடங்கியது நகரத்தில் தன் இயல்பை விடுத்து. இதற்கான பெருமை, புகழ், பரவப் பரவ கற்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக கற்பிப்போர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. கற்பத்தலில் பணம் பண்ண ஆரம்பித்தனர். கலை சிறிது சிறிதாக நீர்க்கத் தொடங்கியது.

    நகரங்களில், பெரு நகரங்களில் கற்பிக்க என காளான்கள் போல் அனுபவமற்ற, சிறிதே கற்ற  பலரும், தங்களுக்குத் தெரிந்த அந்தக் கொஞ்சத்தில் கொஞ்சத்தை  தனி நிறுவனமாகவும், கல்விக் கூடங்களிலும், பெரிய நாட்டியத் தாரகைகளின் பள்ளிகளில் ஆரம்பப்பாடம் கற்பிப்பவராகவும்  பணிபுரிய ஆரம் பித்தனர். அந்தக் கொஞ்சத்தில் கொஞ்சத்தை சில வருடங்கள் பகுதி நேரமாகப் பயின்றனர் பலர். அதில் பொருளாதார மற்றும் செல்வாக்கு உள்ளவார்களின் பிள்ளைகள் மேடை ஏறத் தொடங்கினர்.

    வெளி நாடுகளில் வாழும் இந்தியர்களும், தங்கள் குழந்தைகள் இந்திய பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதில் ஒரு பகுதியாக பரதத்தை உணர்ந்து கொண்டிருக் கின்றனர். எனவே நீண்ட நாட்களாக வாழும் இந்தியர்கள், தற்காலிகமாக குடி பெயர்ந்து இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை பரதம் பயில அனுப்புகின்றனர். இது வெளி நாட்டுப் பணம் மற்றும் மோகத்தை இங்கிருக்கும் நாட்டிய ஆசிரியர்ககளுக்கு ஏற்றி விட்டிருக்கிறது. எனவே, சில நாட்கள் பயணம் என வெளி நாடுகளுக்குக் கற்பிக்கப் பயணப்படுபவர்கள் அதிகமாகி விட்டனர்.

    ஆனால் வெளி தேசத்தில் வாழும் மக்களிலும் கலையை மிக உன்னதமாகக் கருதி, அதில் தம் முழு நேரத்தையும் செலவிட்டுக் கற்பிக்கும், கற்கும் மக்கள் மிக அதிகமாக இருக்கின்றனர். ஆழத்தையும் உணர்ந்து கற்று நிகழ்ச்சிகள் தந்து, கற்பிக்கும் கலைஞர்களும் இருக்கின்றனர். அவர்களிடம் புதுமை, பழமைக் குழப்பம் இருப்ப தாகத் தெரியவில்லை. புதுமையைத் தனியாகவும், முழுதான பாரம்பரியத்தை தனியாகவும் உணர்ந்து செயல் படுகின்றனர். கலையின் வேரைத் தேடி இந்தியாவிற்கு வரும் பொழுது முழுமையாக தனது நேரத்தை அதற்காக செலவு செய்கின்றனர். பணத்தையும் கூட.. தேடித் தேடி அலைந்து கற்றுக் கொள்கின்றனர்.  டிசம்பர் மாத விழாக்களில் பல சபாக்களில் அவர்களைக் காணலாம். இதன் மற்றொரு பகுதியும் வெளி தேசங்களில் நிகழ்கிறது.சீசனுக்கு இந்தியா வந்து, நடனக்கலைஞர்களிடம் மணிக்கு இவ்வளவு டாலர் எனக் கொடுத்து இரண்டு அல்லது நான்கு வாரங்கள் மட்டும் கற்றுக் கொண்டு ஊர் திரும்புகிறவர்களும் உள்ளனர்.  அப்படிக் கற்றுக் கொண்டவர்கள் இன்னாரின் சிஷ்யர் என்று போட்டுக் கொண்டு அவர்களின் வழி பரதம் எனக் கூறிக் கொண்டு கற்பிக்கவும் செய்கின்றனர். விவரம் தெரியாதவர்கள் இவர் பெரிய குருவிடம் ஏதோ பத்தாண்டுகள் பயின்றவர் என்று எண்ணுகின்றனர்.  இப்போது இன்னமும் ஒரு வடிவமும் பரதம் பெற்றுள்ளது. அதாவது, வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை இந்தியாவில் கொடுத்தோம் என்று சொல்லிக் கொள்வதற்காக பல சபாக்களில் பணம் கொடுத்து ஆடி, சி.டியும் , வந்த விமர்சனங்களையும் எடுத்துக் கொண்டு திரும்புகின்றனர். எனவே, சில சபாக்கள் Only for N.R.Is என ஏற்படுத்திக் கொடி கட்டிப் பறக்கின்றனர்.

    இசை வேளாளர்கள் பாரம்பரியத்தில் வந்த நாதஸ்வரம் ஒரு பக்கம் குறுகிக் கொண்டு வந்துள்ளது. அவைகளின் பரதம் நகர மற்றும் பணக்கார மேட்டுக் குடி மக்களால் பறிக்கப்பட்டு பணம் கொழிக்கிற வியாபாரமாக மாறி விட்டிருக்கிறது. இரண்டும் இன்றி ஒரு சாரார் மிகவும் பின் தங்கி இருகின்றனர். நிறைய எதிர் மறையாகவே பேச வேண்டி வருவது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது.

    டிசம்பரில் செனையில் 2000க்கும் மேற்பட்ட நிகழ்வுகள். ஒருவரே பல சபாக்களில் நிகழ்ச்சி தருதல், எங்கெங்கும் சபாக்கள், எங்கெங்கும் சலங்கை ஒலிகள். ஆனால், அவைகள் அநேகமாக வெகு சிலரே அமர்ந்திருக்க, பெரும் பாலான இருக்கைகள் காலியாக இருக்கும் அரங்காகவேதான் காட்சி அளிக்கறது. இதில் மிகவும் பரபரப்பாக இயங்கி பணம் பண்ணுகிறவர்கள், பக்க வாத்யக்காரர்களும், பாடகர்களும்தான். பலருக்கும் ‘ரிகர்சல்' எனப்படும் பயிற்சிக்காக நேரம் ஒதுக்க முடியாமல், காலை ஒரு நடனமணிக்கு, மதியம் ஒரு நடனமணிக்கு, மாலை ஒரு நடன மணிக்கு எனப் பறந்து பறந்து காரில் சென்று கொண்டிருக்கின்றனர்.

    எனவேதான், நாம் உண்மையான கலையை அதன் ஆழத்தையும், நேர்த்தியையும் உணர்ந்து  அவற்றை அடைய முயலும் கலைஞர்களைக் கண்டு கொண்டு அவர்களின் பாரம்பரியம் வழுவாக் கலையை இன்னமும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, காளான்களை அழித்து விருட்சங்களை போஷிக்க வேண்டும். இங்கு நான் சில நிகழ்வுகளை இதற்காகத்தான் பதிவு செய்து உள்ளேன். நடனத்தில் நவீன முயற்சிகளும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அது இன்னமும் செழுமையையும், உறுதியான வடிவமைப்பையும், ஆழத்தையும் பெற வேண்டும் என்பது என் எண்ணம்.
வளரும்

No comments: