Tuesday, January 22, 2013

ஒலிக்காத இளவேனில்-கவிதைத் தொகுப்பு விமர்சனம்

ஒலிக்காத இளவேனில்

கனடாவில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைப்  பெண்களின் தொகுப்பாக வடலி பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது ‘ஒலிக்காத இளவேனில்'. 2009 ஆம் ஆண்டு கனடாவில் வெளியிடப்பட்ட இந்தத் தொகுப்பு எனக்கு 2012 இன் இறுதியில் ஜெ. சாந்தாராமின் மூலம் வந்தடைந்தது.  மூன்றாண்டு காலம் கழிந்தபின்னும் இந்த நூல் பரவலாக அறியப்படவில்லை. இதை நினைக்கும் போது ஏற்பட்ட தடைகளைத் தவிர, உண்டாக்கப்பட்ட தடைகளும் கூட காரணங்களும்  இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.  பெண் எழுத்து எப்போதும் போராடிப் போராடித்தான் வெளிவர வேண்டியிருக்கிறது என்பது இன்னும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது.

இந்தத் தொகுப்பில் பதினெட்டுப் பெண்களின் கவிதைகள் உள்ளன.  கவிதைகள் கருப்பொருள் வாரியாகப் பிரிக்கப்பட்டு, உள்ளீடு கொடுக்கப்பட்டிருப்பது ஒருவித சமனை உண்டாக்கி உள்ளது. தலைப்பில்லா கவிதைகளுக்கு அதன் முதல் வரியே உள்ளீட்டில்கொடுக்கப்படிருப்பதும் வாசிக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு எளிய வழி.  தேசம் யுத்தகாலம், யுத்த நிறுத்தம், புலம் பெயர்வு-மாணவம், குடும்பம் எனவும் பெண் வாழ்வியல் என்ற ஒரு தனிப் பிரிவும் கொடுக்கப்படிருந்தாலும் அனைத்துமே பெண்கள் வாழ்வியல் என்ற அடிப்படைப் பார்வையிலேயே உருவானதுதான். இதில் எழுதி இருக்கும் கவிஞர்கள் சில பெண்கள், தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சில இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து முன்னமே கவிதை தொகுதிகள் வெளியிட்டும் இருக்கிறார்கள். அதனால்  பரவலாக அறியப்பட்டும், அதிகம் பேசப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

யுத்தம், யுத்தத்தின் விளைவு பற்றிய பதிவு இல்லாமல் இலங்கைக் கவிதைகள் இருக்க முடியாது. அதன் காரணமான புலம் பெயர்வு, புகலிடத்தில் இணைய முடியாத தனிமைத் திணறல், அதன் பின் தாய் மண் கனவுகள் கொஞ்சம் அடித்தட்டுக்குள் செலுத்தப்பட்ட நிதர்சன வாழ்க்கை என எல்லாமே பதிவாகி உள்ளன.

கவிஞர்கள் பற்றிய குறிப்புக்கள் மிக முக்கியம் என நான் கருதுகிறேன். அவர்களின் வாழ்வனுபவத்தின்  ஊடாக கவிதைகளை கருத்தில் கொள்ள இயலும். கவிஞர்களின் பிறந்த ஆண்டும், புலம் பெயர்ந்த ஆண்டும் இருந்திருந்தால், இன்னமும் தெளிவு பெற அது உதவும்.

மொழி தமிழ் என்பதானாலும் கூட அந்தந்த வட்டாரப் பிரிவு, மதம் சாதி எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகத்தான் கருத வேண்டி உள்ளது. மொழியை வாயைத் திறந்து முழுதாக உச்சரிக்கவும், உதடு பிரிபடாமல் அடுத்தவர்களிடம் கொண்டு சேர்க்கவும் அவரவர் வாழும் நாட்டின் தட்பவெட்பம் காரணியாகிறது.  மேலும் தாய் மொழியுடன், அந்தந்த வாழ்விடத்தின் சூழலும், அனுபவமும் இணைய மொழி இன்னமும் மாற்றம் கொள்கிறது. தாய் மண்ணுடன் இணைந்தே.

மொழி மாற்றம் கொண்டாலும், ஆண்களின் அடிப்படை மொழி மாறாமல்  தொடரும் நிலையை மோனிக்காவின் ‘இயந்திரப் போக்கு' கவிதையில் பர்க்க முடிகிறது. எல்லா மக்களுக்கும் துன்பம் தரும் யுத்தம் ஒருபக்கம் தனது இருப்பை உணர்த்திக் கொண்டே இருந்தாலும் கூட, ‘வெறும் பெண்' என்ற  தொனியைக் காணும் பொழுது அதிர்ச்சி அளிக்கிறது. பொது துக்கம் கூட மாற்ற இயலாத போது வேறு எது இவர்களுக்குள் மாற்றத்தைக் கொடுக்கும்?

தாய் மண்ணிலிருந்து பெண்களை மணந்து கொண்டு வரும் ஆண்கள், சிலர், அவர்களுக்கு ‘வீட்டு விஷயங்கள் வெளியே போகக்கூடாது என்ற பெயரில் வாய்ப்பூட்டு மட்டுமல்ல  பெண்ணின் வெளியையும் குறுக்கி ஒருவித மூச்சுத் திணறலுக்கு ஆளாக்குகிறார்கள் என்றால் என்ன சொல்வது?  இந்த ‘பளப்பளப்பான' குடும்ப விஷயம் சொற்கள் உள் வன்முறைக்கு வழிவகுக்காது என்பது என்ன நிச்சயம். இவை  துர்காவின் கவிதைகளில் காண முடிகிறது. மைதிலியோ ‘தயவு செய்து கவிதை கேட்காதீர்கள்'  என்று நுழைவிடத்திலேயே போர்ட் மாட்டிவிடுகிறார்.  இளம்பிறையின் கவிதையிலும் இது போன்ற பதிவு ஒன்று உண்டு. குடும்பப் பின்ணனியில் கவிதைகள் கொலை செய்யப்படுகின்றன. போரின் பிண்ணனியில்  சொல்லவே தேவை இல்லை. கலைகள் கொலை செய்யப்படுகின்றன என்றும் கூறலாம். பீரோக்களில், கொதிக்கும் குழம்பில், மனத்தின் அடியில், கனவுக்குள், வெளியில் யாருக்கும் தெரியாமல், உரத்து சொல்ல இயலாமல் என்றபடி, போரும், அதன் விளைவுகளும், குடும்பமும், பெண்ணை மனச்சீரழிவுக்கு  ஆளாக்கி அலைக் கழிக்கிறது. தற்கொலையும், மரணமும் மட்டுமே சிறு சலனத்தை சிறிது நேரம்- தொகுப்பாளரின் முன்னுரையில் கூறுவது  உண்டாக்குகிறது. பிறகு சுலபமாக மறக்கவும் படுகிறது. வாசிப்போரின் மனம் பீதிக்குள்ளாவதைத் தவிர்க்க முடியவில்லை. போர் அதனால் ஏற்பட்ட வன்முறை, குடும்பத்தை இழந்த தனிமை, குடும்பம் உண்டானதால் தனிமை, என்று பலவும் பெண்களின் மன நலத்தைச் சிதைக்கிறது. கடல் கடந்தும், நாடு இழந்தும், இன்னமும் சாதி, மதம், சடங்குகள் என பின்பற்றும் மக்கள், என  எல்லாக்குரல்களும் இணைந்த நூல் இது.

காதல், காமம், உடல் குதூகலம், உடல் மறுப்பு என எதுவும் சிந்திக்க இயலாத பெண்கள். நிறைய துக்கப்பதிவுகள். எதையோ அல்லது யாரையோ சார்ந்த தொடர் வாழ்க்கைப் பதிவுகள்.

நிவேதாவின் கவிதைகள் என்னை மிகவும் ஈர்த்தன. சிறப்பாகவும், ஆழமாகவும், இருக்கின்றன. மாணவி என்றும் அறிந்தேன். கவிதை மிக அற்புதமான வடிவம் கொண்டு வெளிவருகின்றன. துருத்திக் கொண்டு இல்லாத உணர்வு வெளிப்பாடு, பாசாங்கற்ற உண்மையான நிலையை எடுத்துரைத்தல், குறியீடுகளும், படிமங்களும், உதாரணங்களும் புதிய தளத்திலிருந்து கையாளப்படுவது, கையறு நிலை உணர்த்துதல், பயத்தையும், மரணத்தையும், கலையையும் இணைத்து மென் உணர்வுகளுடன், கடும் (கனத்த) துயரங்களும் நிறைந்த சொற்களைக் கொண்டும்  கவிதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

தொகுப்பாளரின் குறிப்பும் பிற் சேர்க்கையும் மிக கவனம் கொண்டு படிக்க வேண்டியவை. சொல்லித் தீர்க்க முடியாத கோபங்கள், ஆதங்கங்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

பெண்களின் எழுத்து இன்னமும் இன்னமும் அதிகமாகத் தொகுக்கப்பட வேண்டியவை. பதிக்கப்படாவிட்டால் காலப்போக்கில் மறதிக்கு ஆளாகும்.
படைப்பாளி என்ற தன்னிச்சைப் போக்கிலிருந்து மாறுபட்டது, தொகுப்பது.  தொகுப்பாளரின் பார்வையும், தேர்வில் -தெரிந்தும், தெரியாமலும்- சேர்க்கையும், நிராகரிப்பும் அரசியலும் உள்ளடங்கியதுதான். இதிலும் அரசியல் இருக்கலாம்.  எழுத்து என்பதே அரசியல்தான். கவிதைகளை மேற்கோள் காட்டாமல் எழுதி இருக்கிறேன். தேடிப் படிக்கட்டும் ஆர்வலர்கள்.

கருப்பொருள், வடிவம், உத்தி, சமகாலப் பார்வை என எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக பல கவிதைகள் உள்ளன இத்தொகுப்பில். உணர்வுகள் கவிதையாய் மாற்றப்படாமல் சில கவிதைகளும் காணக்கிடைக்கின்றன. உணர்வுகள் கவிதையாய் மாற சில காலமும்,  பக்குவமும் தேவைப்படுகிறது  ஆனாலும் பெண்கள் எழுத்து (இத்தனை துன்பங்களுக்கும், பிரிவுகளுக்கும், மரணங்களுக்கும் இடையில்) எழுதப்பட்ட இவ்வகை எழுத்துக்கள் இன்னமும் பரவலாக வெளிச்சத்திற்கு வரவேண்டியவையே. நல்ல வடிவத்தில் வடலியினால் வெளியிடப் பட்டிருக்கிறது, 'ஒலிக்காத இளவேனில்'.
தொகுப்பு:தான்யா,பிரதீபா கனகா-தில்லைநாதன்
வடலி வெளியீடு
Email:sales.vadaly@gmail.com

No comments: