டெல்லியில் நடந்த பாலியல் வன்முறையினால் ஏற்பட்ட அதிர்வால் நாடு முழுக்க ஒரு பெரிய மாற்றம் நடக்கும் என்று நாம் நம்பலாம். பெண்ணை சமமாகப் பார்க்க வேண்டும். பெண்ணை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பெற்றோர் இரு பாலாரையும் சமமாக எண்ண வேண்டும். பள்ளிக்கூடங்களில் ஆண் பெண் கலந்து படிக்க வேண்டும். இப்படி எல்லோரும் எல்லா இடங்களிலும் இது பற்றியே பேசிக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறோம்.
இப்படிப்பட்ட காலத்திலும் கூட சப்தமில்லாமல் ஒரு சில சொற்கள் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம், ‘துப்பாக்கி' இப்படத்தில் குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்தும் படியான வசனங்கள் வெளியாகி இருக்கின்றன என்று அந்த மதம் சார்ந்த அமைப்புக்கள் போராடி வருகின்றன. இன்று (10-1-13) நீதிபதிக்களுக்கும் கோர்ட்டுக்கும் படத்தைப் போட்டுக் காண்பித்து, அதில் ஒரு மதத்தை இழிவுபடுத்தும்படியான வசனங்கள் இருந்தால் அவற்றை நீக்கி, அதன் ‘யு' சர்டிபிகேட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மதம்,சாதி இவைகள் பற்றிய-சார்பான போராட்டங்களை ஆண்கள் கையிலெடுப்பதும், அதில் பெண்களும் பங்கு கொள்வதும் எப்போதும் நிகழ்வதுதான். சாதி, மதம் அனைத்தையும் கையில் கொள்பவர்கள் ஆண்கள். அதைக் கட்டிக்காத்து, திருமணங்கள் மற்றும் குடும்பச் சடங்குகள் மூலம் அவற்றை அணையாமல் அடுத்த தலைமுறைக்கும் அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்ப்பவர்கள் பெண்கள். அப்படித்தான் செயல்படவேண்டும் என்று அதிகாரம் மிக்கவர்களால் உண்டாக்கப் பட்ட பாதையில் இன்னமும் நம் சமூகம் சென்று கொண்டிருக்கிறது. ‘துப்பாக்கி' படத்தில் ஒரு மதத்தை இழிவு படுத்தும்படியான வசனங்கள் இடம் பெற்று இருந்து, ‘அது யாரையாவது புண்படுத்தும் எனில் அந்த வசனங்களை நீக்கிவிடுவோம், நீக்கிவிட்டோம்' என்று படம் சம்பந்தப்பட்டவர்கள், தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர் அறிக்கை கூட விட்டிருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் சில ஊர்களில் அவை நீக்கப்படவில்லை என்று தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டும் இருக்கின்றார்கள். தணிக்கைக் குழுவினரின் பங்கு இதில் உள்ளது.
இதே படத்தில் ஒரு காவல்துறை அதிகாரியிடம் கதாநாயகன் பேசுவதாக சில சொற்தொடர் வருகிறது. கதாநாயகன் இரண்டு துப்பாக்கிகளைக் கையில் வைத்துக் கொண்டு, காவல்துறை அதிகாரியிடம் கூறுவது போல வரும் காட்சியில், காவல்துறை அதிகாரி தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்தால் என்ன என்ன விதமான சாதக பாதகங்கள் வரும், கதாநாயகன் சுட்டு இறந்து போனால் என்ன என்ன பின் விளைவுகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. மிக மென்மையான குரலில் எந்தவிதாமான உணர்வும் கேட்பவர்களுக்கு ஏற்பட்டுவிடா வண்ணம் இயல்பாக சொல்லப்படுகிறது. ‘உன் குடும்பம் நடுத்தெருவுக்கு வரும். உன் குழந்தைகள் தெருவில் கை நீட்டி பிச்சை எடுப்பார்கள். உன் மனைவி இரவு நேரத்தில் தெருவில் ஆண்களைக் கை நீட்டிக் கூப்பிடுவாள்' என்று. ஏதோ காப்பி சாப்பிடலாமா? காற்று இதமாக அடிக்கிறது இல்லையா என்று சொல்லும் போது மேற்கொள்ளும் மென்மையான குரல். ஆனால் சொல்லப்படும் செய்தியோ, பெண்ணை மிக மிக அவமானப் படுத்துவது.
இந்த கதையின் நாயகன், அந்தத் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரின் மரணத்திற்குப் பிறகும் இது போன்ற நிலைதான் ஏற்படப்போகிறதா? கணவன் என்பவன் இறந்தால் பெண்கள் பாலியல் தொழிக்குத்தான் போக வேண்டும் என்று சட்டம் இயற்றப்போகிறார்களா? காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலைதான் என்று திரைப்படங்கள் சொன்னால், கூலி வேலை செய்வோரின் மனைவியும், ஏழை மக்களின் மனைவிகளும் என்ன செய்ய முடியும்? என்ன செய்ய வேண்டும் என்று இவர்கள் அறிவுறுத்துவார்கள்? எல்லாத் தரப்பினருமாக இருக்கும் அந்த நடிகரின் ரசிகர்(ஆண்)களின் மறைவுக்கிற்குப் பின் அவர்களின் மனைவியும் இதே பாலியல் தொழிலுக்குப் போக வேண்டும் என்று ரசிகர்கள் உறுதி மொழி வாங்கிக் கொண்டு சாகப்போகிறார்களா?இது திரையின் ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் மட்டுமே என்று கூறுவார்களா?
அப்படி என்றால் மற்ற வசனங்களுக்கு மட்டும் ஏன் பதில் தர வேண்டும்? ஒரு வேளை அந்தப் படத்தில் அந்த காவல்துறையின் அதிகாரியின் சாதி சொல்லப்பட்டு அதன் மூலம் இது போன்ற வசனமும் பேசப்பட்டிருந்தால், அப்போது சாதிக் கலவரம் ஏற்பட்டிருக்கலாம். இது வெறும் ஒரு பெண். எந்த அடையாளமும் சூட்டப்படவில்லை. அதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று எல்லொருமே நினைத்துவிட்டார்களா? தெரியவில்லை.
ஒரு படத்தில் ஒரு கதாநாயகன் பேசும் சில சொற்களாவது புகழ்பெற வேண்டும் என்று ஒவ்வொரு நடிகருக்கும் அவரவர்களுக்குத் தகுந்தாற்போல சில வசனங்களை உண்டாக்கி, அதை அப்படத்தில் திரும்பத் திரும்பப் பேசவைத்து, அதுவும் கூர்மையான உச்சரிப்போடு, அங்க அசைவுகளோடு பேசவைத்து, அந்த வசனத்தை அந்தப் படமாகவே மக்கள் பார்க்கும்படி மாற்றுகிறார்கள். நடிகரும் சரி, மற்ற படம் சார்ந்தவர்களும் சரி அதை தவறாமல் மக்கள் கையில் கொண்டு சேர்க்கிறார்கள். அது அந்த நடிகனின் ரசிகர்களால் காற்றுப் பரவும் திசை எங்கும் அலைபாய்ந்து கொண்டு இருக்கும். அதைக் கேட்டுக் குழந்தைகளும் நடிகனைப்போலவே உடல் மொழியுடன் சொல்லும். அதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி கொள்கின்றனர் பெற்றோர். அந்த வகை வசனங்கள் அந்த நடிகரின் உண்மைக் குரலாகத்தானே எதிரொலிக்கிறது. படத்தின் பாத்திரம் பேசப்படுவதாகச் சொல்ல முடியுமா?
அப்படிப்பட்ட சொற்கள் போலவே இந்தப் பேச்சையும் எடுத்துக் கொள்வதா? அல்லது நடிகரின் குரலில் வெளிப்பட்ட எல்லாமே மாயை என்று சொல்லப்போகிறோமா?
ஒரு புறம் இப்போதுதான் பெண்ணின் இருப்பு பற்றிய தெளிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று நம்பிக்கை கொண்டிருக்கிறோம். ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அந்த பாலியல் குற்றம் எல்லோர் மனதிலும் இன்னமும் ஆறாத புண்ணாக மாறி இருக்கிறது. ஆண்களும், பெண்களும் சேர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இளைஞர்கள் மத்தியில் ஆண், பெண் சமத்துவமும் ஏற்படும் என்று நேர்மறையான எண்ணம் தோன்றும் சமயம் இது.
பெண்ணை எந்த வயதிலும் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கலாம். கணவன் இறந்துவிட்டால் மனைவி அவளாகவே பாலியல் தொழிலுக்கு வரவேண்டும் என்று கூறுவது போல இல்லையா இது? பாலியல் தொழில் செய்யும் பெண்களை நான் எந்தவிதத்திலும் இழிவு படுத்தவில்லை. பெண் என்பவள் எப்போதும் உடல் சார்ந்தவளாகவே பார்க்கப்படுவாள், அதுதான் சரி என்ற நோக்கில் அல்லவா இருக்கிறது இது? பெண் எந்த நிலையிலும் தனக்கான எதையும் தானே தேர்ந்தெடுக்கக் கூடாது அப்படித்தானே? சாதி, மதம் என்பது போல பெண்ணை இழிவுபடுத்தினால் அதற்காகவும் குரல் கொடுக்க மக்கள் முன்வரவேண்டும். நிச்சயம் வருவார்கள்.
இவ்வளவுக்கும் மேல் இந்தப் படம் தணிக்கைக்குள்ளாகும் போது, தனிக்க¨யாளார்களில் பெண்ணும் இருத்தாரா? இல்லையா?
Wednesday, January 16, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment