Friday, January 18, 2013

குருவே சரணம் நூலிலிருந்து-திருச்சூர் ராமசந்திரன்

திருச்சூர் ராமசந்திரன்

குடும்பத்தில் ஒன்றிய இசை

என் பூர்வீகம் கேரளாவில் உள்ள திருச்சூர். 1940 இல் பிறந்தேன். என் அப்பாவுக்கு சீப் ஜட்ஜ் (தலைமை நீதிபதி) உத்தியோகம். என்னுடன் பிறந்த வர்கள் அதிகம். சிறுவயது முதலே நான் சங்கீதம் கற்றுக்கொண்டு இருக் கிறேன். அதற்குக் காரணம் என் அம்மாதான். எனக்கு நான்கு வயதாக இருக்கும்போதே காலை நான்கு மணிக்கு எழுந்து, என் அம்மா பக்திப் பாட்டுக்கள் பாடுவார். என் சகோதரிகளும் சங்கீதம் கற்றுக்கொண்டனர். இதனால், சங்கீதம் கேட்கும் வாய்ப்பு எனக்கு சிறு வயதிலேயே அதிகம் கிட்டியது. எனவே எனக்கும் சிறு வயதிலேயே பாட்டு கிட்டியது. நான் பி.எஸ்.சி. படித்து முடித்த உடன் சங்கீதத்தையே பிரதானமாக எடுத்துக் கொள்ள முடிவெடுத்தேன்.

மருத்துவக் கல்லூரியிலிருந்து  குருவிடம்

என்னுடைய ஏழாவது வயதில் வர்கலா சுப்ரமணிய பாகவதரிடம் இசைப் பாடம் ஆரம்பித்தேன். அதன் பிறகு திருப்பனந்துறை கிருஷ்ண அய்யரிடம் மேற்கொண்டு கற்றேன். படிப்பும் நன்றாக வந்தது. எனக்கு மெடிக்கல் சீட் கிடைத்தது. நான் மெடிக்கல் கல்லூரியில் சேர்ந்தும் விட்டேன். அப்போதுதான், திரு ஜி.என்.பாலசுப்ரமணியம் அவர்களிடம் சங்கீதம் பயில  வந்து சேர்ந்தேன். அவர் அப்போது பெரிய வித்வான். மிகவும் பிரபல மானவர். அவர் என்னைப் பாடச் சொல்லிக் கேட்டார். பிறகு, ‘உனக்கு சங்கீதத்தில் ஒரு உன்னத இடம் கிடைக்கும். அதற்கு நான் பொறுப்பு. எனக்கு என்ன என்ன தெரியுமோ அவற்றையெல்லாம் உனக்கு சொல்லித்தருவேன். நீ சங்கீதத்திற்கே வா' என்றார். அதைவிட எனக்கு வேறு என்ன பெரிது? இவ்வளவு பெரிய வித்வான் சொல்கிறார். எனவே நான் மெடிக்கல் காலேஜில் படிப்பதை விட்டுவிட்டு ஜி.என்.பி. அவர்களிடம் வந்து சேர்ந்தேன். சங்கீதத்தையே தொழிலாகக் கொள்ளத் தீர்மானித்தேன். அவருடன் ஐந்து ஆண்டுகள் இருந்து சங்கீதம் கற்றேன். அவரின் சிஷ்யனாக சேர்ந்தது மஹா பாக்யம். அந்த ஐந்து வருட அனுபவம் ஐம்பது வருட அனுபவத்திற்குச் சமம்.   எனக்கு மறக்க முடியாத நிகழ்ச்சி என்றால், என்னுடைய இருபத்தோ ராவது வயதில் சங்கீதம் கற்க என் குருநாதரான ஜி.என்.பி. அவர்களிடம்  சேர்ந்ததைத்தான் சொல்ல வேண்டும். அந்த நாட்களில் எங்கள் ஊரில் கோவில் விழாக்களில், திருமணங்களில், பொது விழாக்களில் பெரிய பெரிய வித்வான்கள் வந்து பாடுவார்கள். நிறைய கச்சேரிகள் நடைபெறும். அவற்றை யெல்லாம் நான் போய் கேட்பேன். அப்படித்தான் ஒரு முறை ஜி.என்.பி. அவர்கள் வந்து பாடினார். ‘சரசிஜநாப சோதரி' என்ற பாடலைப் பாடினார். இப்போதும் அது நினைவுக்கு வருகிறது. அதைக் கேட்டு மயங்கினேன். அவரிடம் சென்று கற்க மாட்டோமா என்ற தாபம். அது கிடைப்பதற்கும் ஒரு நாள் வந்தது.

என் அம்மா என்னை அவரிடம் அழைத்துச் சென்றார். ‘இவன் சுமாராகப் பாடுகிறான். உங்களிடம் சேர ஆசைப்படுகிறான். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படிச் செய்யலாம்'' என்று சொன்னார். என்னைப் பாடச் சொல்லிக் கேட்டார். பின், “நாளை முதல் வந்து விடு” என்று கூறினார். மறுநாள் பாடம் ஆரம்பித்து விட்டார். இக்காலத்தில் பெற்றோர், ‘இவன் மிக நன்றாகப் பாடுகிறான் இவனுக்கு நீங்கள் சொல்லிக் கொடுங் கள்' என்று பேசி குருவையே அசத்தி விடுவார்கள். 

அப்போது ஜி.என்.பி. திருவனந்தபுரத்தில் ஸ்வாதித்திருநாள் இசைக் கல்லூரியில் முதல்வராக இருந்தார். சங்கீத வித்வான்களுடன் இருக்கும் பொழுதுதான் சங்கீதத்தின் நுட்பங்கள் எல்லாம் நன்கு தெரியும். இருபத்தி நான்கு மணி நேரமும் அவர் கூடவே இருக்கும்பொழுது சங்கீதம் சம்பந்த மாகத்தான் பேசுவார். மஹா வித்வான்கள் எல்லோரும் அவரைப் பார்க்க வருவார்கள். சங்கீதத்தைப் பற்றி நிறைய சர்ச்சைகள் செய்வார்கள். அப்போது நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. இப்போது இது போன்ற வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. குருகுலவாசம் சுத்தமாக இல்லாமல் போய் விட்டது.

குருவிடம் பயிலுதல்

நான் அவரிடம் ஐந்து ஆண்டுகள்தான் இருக்க முடிந்தது. திடீரென்று என்னுடைய குருநாதர் தமது 54 வது வயதில் காலமானார். நான் அதன் பிறகு என்ன செய்வது என்கிற குழப்பமான மனோநிலையில் இருந்தேன். ஒன்றும் புரியவில்லை. அந்த நேரத்தில் எனக்கு மத்திய அரசின் ‘ஸ்காலர்ஷிப்' எனப்படும் ஊக்கத் தொகை ஜி.என்.பி. அவர்களின் மேற்பார்வையில் கற்கத் தான்  கிடைத்தது. ஆனால் அவர் காலமாகி விட்டதால், அந்தப் பாணி மாறக் கூடாது என்பதால் எம்.எல்.வசந்தகுமாரி அவர்களின் பெயரைப் போட்டு மாற்றிக் கொண்டேன். இரண்டு ஆண்டுகள் அவரிடம் கற்றுக் கொண்டேன். அதன் பிறகும் கூட அந்த அம்மையாரிடம் நிறைய உருப்படிகள் கற்றுக் கொண்டேன். நிறைய கச்சேரிகள் கேட்டேன்.  மதுரை மணி அய்யர், மஹா ராஜபுரம் விஸ்வநாத அய்யர், ஆலத்தூர் சகோதரர்கள், நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகள் என்று பலவகையான கச்சேரிகள் கேட்டேன். கேட்டுக் கேட்டு இன்னமும் என்னைத் தெளிவுபடுத்திக் கொண்டேன். மேம்படுத்திக் கொண்டேன் என்பதும் பொருந்தும். “நாம் அனைவரும் வித்யார்த்திகள், வித்வான்கள் அல்ல.  அனைவருமே என்றுமே மாணவர்கள்தான். எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். சங்கீதம் ஒரு கடல் அல்லவா?  அதில் முழுவதும் கற்றுக்கொண்டுவிட்டேன் என்று யாரும் கூற முடியாது. பாடிப் பாடி நம்மை நாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். கச்சேரிகள் கேட்கும் போதே எந்த வித்வான் எப்படிப் பாடுகிறார் என்று கவனமாய் கேட்டு அதை நாம் பயிற்சி செய்து அதில் உள்ள நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் ‘ஏன்? எதற்கு?' என்பதும் அவரவர் முயற்சியாலேயே தெளிவு கிட்டும்.'' என்றெல்லாம் என் குருநாதர் கூறுவார். அவர் எனக்கு குருவானதும், அவரைப் போன்ற ஒருவரின் ஆசி கிட்டியதும் பெரும் பேறு என்று நான் கருதுகிறேன். என்னைத் தன் மகனாகவே எண்ணிப் பழகினார்.

என் குருநாதர் எப்போதும் கச்சேரிகளில் புதிது புதிதாகத்தான் பாடுவார். அப்போது நிறைய  புதிய  விஷயங்கள் தெரிந்துகொள்ள முடியும். புதுமையாக இருக்கும். மாணவர்களுக்கு நிறைய பாடங்கள் கிடைக்கும். நேற்றுப் பாடியதுபோல் இன்று பாட மாட்டார். அவரொரு லட்சிய வித்வான். லட்சண வித்வானும்கூட. மேலும், படித்தவர். அவர் வித்வான்களில் தனித் தன்மையுடன் மிளிர்ந்தார்.

குருவின் பயிற்சி முறை

என் குருநாதர் பாட்டு கற்றுக் கொடுக்கும் முறையைப் பற்றிக் கூற வேண்டும். அவர் தன் சிஷ்யர்கள்  எல்லோரும் பிரகாசமான அறிவோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். ‘சொல்லிக் கொடுத்த உடன் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்தப் பாணி சற்று கடினமானது. எனவே, எளிமையாய் கற்றுக்கொண்டுவிட முடியாது. உண்மையான சங்கீதம் ‘வாய்ஸ் கல்ச்சர்' எனப்படும் குரல் வளத்தைப் பெருக்கிக் கொண்டால்தான் சரியாகப் பாட வரும். நுணுக்கமாக கவனிக்கும் திறன் படைத்தவர்களுக்கே இது பிடி படும். சொல்லிக் கொடுப்பது கஷ்டமான காரியம் அல்ல. ‘ஒரு கீர்த்தனையை இரண்டு நாட்களில் கூட பாடம் செய்துவிடலாம். அப்புறம் அதை கச்சேரியில் பாடப் பாட சரியாகி விடும்' என்பார்.

அவர் பழகுவதற்கு மிக எளிமையானவர். அன்பானவர். மிகவும் நட்போடு பழகுவார். கச்சேரியின்போது அவருடைய ரசிகர்கள் எல்லோருமே கூட்டம் கூட்டமாக அமர்ந்து அன்று புதிதாக என்ன பாடப் போகிறார், எப்போது ஆரம்பிப்பார் என்று மிகவும் ஆர்வத்தோடு, எதிர்பார்ப்போடு காத்திருப்பார்கள். கச்சேரியின் இறுதி வரை அனைவரும் இருப்பார்கள். ஏதாவது புதிதாகச் செய்வார் என்ற  எதிர்பார்ப்புதான் அதற்குக் காரணம்.


குருவுடன் சேர்ந்து கச்சேரிகளில் பாடியும் இருக்கிறேன். அவருடன் நான் இணைந்து பாடிய கச்சேரிகளில் மறக்க முடியாதது என்று இதைக் குறிப்பிடலாம். ஒரு முறை திருநெல்வேலியில் கச்சேரி. அங்கு சென்றபின் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. ஆனால் அங்கே உள்ள ரசிகர்களுக்கெல்லாம் ஏமாற்றம். ‘நாங்கள் எங்கெங்கிருந்தோ வந்திருக்கிறோம். கச்சேரி கான்சல் ஆகிவிட்டதே' என்று வருத்தத்துடன் சொன்னார்கள். ‘சாயங்காலம் பாடுகிறேன்' என்று ஜி.என்.பி. அவர்கள் சொல்லிவிட்டார். ஆனால் டாக்டரோ பாடவேகூடாது என்கிறார். ‘நான் பாடுவேன், ரசிகர்கள் எதிர்பார்ப்போடு வந்திருக்கின்றனர். அவர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது' என்று கூறி, சாயங்காலம் மூன்று மணிக்கு உள்ளூரில் பக்க வாத்யக்காரர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டார். நெல்லை மணி வயலின், நெல்லை தேவராஜன் மிருதங்கம். கச்சேரி மிக நன்றாக அமைந்தது. நான்கு மணி நேரம் கச்சேரி செய்து ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டார். அன்றைய கச்சேரி அமர்க்களமாக அமைந்தது. தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாது ரசிகர்களுக்காக, அவர்கள் தம்மீது வைத்திருந்த மரியாதைக்காகப் பாடினார். நல்ல கூட்டம். மக்கள் நன்கு ரசித்தனர்.

என் குருநாதரே என்னுடைய கச்சேரியை ஒரு முறை கேட்டிருக்கிறார். அவர் முன் பாட எனக்கு மிகவும் பயம். ஆனால் அவர் என் பயத்தைப் போக்கி பாடும் முறைகளைக் கற்றுக் கொடுத்து, எந்த எந்த ராகங்களைப் பாட வேண்டும், என்று சொல்லிக் கொடுத்து நான் பாடியதைக் கேட்டார். மும்பை ஷண்முகாநந்த சபாவில் அன்று நல்ல கூட்டம். பாலக்காட்டு மணி அய்யர் மைக்கின் முன் வாசிக்க மாட்டார். மைக் இல்லாமல் யாரும் பாட மாட்டார்கள். அன்று நான் பாடினேன்.

புதுப் பாணியை உருவாக்கிய எனது குரு

என் குருநாதர் எந்த குருவிடமும் பயிலாதவர். அது உங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதுதான் உண்மை. அவர் இயற்கையிலேயே நல்ல குரல்வளம் கொண்டவர். அவருடைய அப்பா நன்றாகப் பாடுவார். பெரிய வித்வான்கள் அவர் வீட்டிற்கு வருவார்கள். மஹாராஜபுரம் விஸ்வநாத அய்யர் போன்றோரையெல்லாம் அவர் தனது வீட்டில் சந்தித்து இருக்கிறார். வீட்டில் சங்கீத சர்ச்சைகள் நடக்கும். அதைக் கேட்டுக்கேட்டு தனது ஞானத்தை வளர்த்துக்கொண்டு இருக்கிறார். அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் போன்றோரை தனது மானசீக குருவாகக் கொண்டு தானே கற்றுத் தேர்ந்து பெரிய இசைக் கலைஞர் ஆனார். அவர் தனது தங்கம் போன்ற குரலை நன்கு பயன்படுத்தி தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர். அவருடைய குடும்பத்தில் யாரும் சங்கீதத்திற்கு வரவில்லை. அவருடைய சிஷ்யனாக நான் வந்திருக்கிறேன். அவருடைய ஆசீர்வாதத்தில் பாடிக்கொண்டு இருக்கிறேன். அவருடைய இன்னொரு சிஷ்யர் கல்யாண ராமனுடன் இணைந்து கச்சேரி செய்து இருக்கிறேன். மஹாராஜபுரம் சந்தானமும் நானும் நெருங்கிய நண்பர்கள். அவருக்கு என் குருநாதரின் பாட்டு மிகவும் பிடிக்கும். எனக்கு சந்தானத்தின் பாட்டு மிகவும் பிடிக்கும். நானும் அவரும் சேர்ந்து ஐந்து, ஆறு  கச்சேரிகள் செய்து இருக்கிறோம்.

குருவே என் பாக்யம்

ஜி.என்.பி. அவர்களுடன் செல்வதே ஒரு பெரிய பாக்யம். அதுவே ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சியாகும். அவருடன் இணைந்து போட்டோ ஒன்றும் எடுத்துக் கொண்டுள்ளேன். அப்போது அருகிலிருந்த பலருடனும் தானே அழைத்து போட்டோ எடுத்துக்கொண்டார். வாரத்தில் இரண்டு மூன்று கச்சேரிகள் நடைபெறும். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும் குறை வாக இருந்தாலும் ஒரே மாதிரிப் பாடுவார். கூட்டம் எப்படி இருந்தாலும் அதில் ஞானமுள்ளவர்களும் இருப்பார்கள். எனவே அவர்களுக்காக உழைத்துப் பாட வேண்டும் என்பார். ராகங்களை விஸ்தாரமாக, மிக அழகாகப் பாடுவார். 

கற்பனைதான் நமது சங்கீதத்தில் உயர்ந்தது என்று பட்டணம் சுப்ரமணிய அய்யர் சொல்லுவாரென்று அவர் சொல்லியிருக்கிறார். எனது குரு, மஹாராஜபுரம் விஸ்வநாத அய்யர்,  செம்மங்குடி ஸ்ரீநிவாச அய்யர் ஆகியோர் கற்பனை வளத்துடன் பாடுவதில் வல்லவர்கள். எப்போதும் புதிதாகவும், மலர்ச்சியுடனும் பாடுபவர்கள். இவர்கள் சங்கீதம் எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்காது. எம்.எல்.வி. அம்மாவும் அப்படித்தான். சங்கீதம் அதிகம் கேட்க வேண்டும்.  கேள்வி ஞானம் மிக முக்கியம். என் குருநாதர் நளினகாந்தி, ஆபோகி, செஞ்சுகாம்போதி, ரஞ்சனி, தேவ மனோஹரி ஆகிய பல ராகங்கள் பாடுவார். ராகங்களைக் கையாள்வது எளிமையானது. அவற்றை விஸ்தாரமாகவும் பாடத் தெரியவேண்டும். சில நொடிகளிலும் அவற்றிற்கு ஜீவனூட்ட வேண்டும் என்பார். அப்படித் தெரிந்து கொள்வதும் பாடுவதும்தான் நாம் கற்ற ராகங்கள் என்பார். வீணை பாலசந்தர் ஒரு முறை என் குருவைப் பற்றி குறிப்பிடும் போது, ‘இவர் ஒரு ராகத்தை ஒன்றரை மணிநேரமும் பாடுவார், ஒன்றரை நிமிடமும் பாடுவார்' என்று குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களின் நாடி நரம்பினை அறிந்தவர்கள்தான் வெற்றி அடைய முடியும். ஜி.என்.பி. அவர்கள் நமக்குத் தெரிந்த, பிரபலமான பல ராகங்களில் சாகித்தியங்களும் இயற்றியுள்ளார். சிலதுதான் கிடைத்துள்ளன. இரண்டு தொகுப்பாகப்  போட்டாகிவிட்டது. இன்னமும் தேடிக் கொண்டு இருக்கிறோம். அவர் பாடிய பாடல்களை வைத்துக் கொண்டு செயல் முறை விளக்கம் (டெமான்ஸ்ட்ரேஷன்) செய்கிறோம். 200க்கும் மேற்பட்ட கீர்த்தனைகள் படைத்திருக்கிறார். அவற்றைத் தற்போதும் வித்வான்கள் பாடிக் கொண்டு இருக்கின்றனர்.

என் குருநாதர், ‘அபூர்வ ராகங்களை நன்றாகப்  பாடுவது  ஒன்றும் கஷ்டம் கிடையாது. நடை முறையில் உள்ள ராகங்களான தோடி, கரகரப்பிரியா, கல்யாணி, காம்போதி போன்ற ராகங்களைப் பாடுவதுதான் அதி முக்கியம். அதில் மனோதர்மங்கள், சங்கதிகள் எல்லாம் புதிது புதிதாகப் போட்டுப் பாடவேண்டும்' என்பார். நான்கு அல்லது ஐந்து மணி நேரம்கூட சிறிதும் சிரமம் இல்லாமல் அநாயாசமாகப் பாடுவார். எப்போதும் நேரம் தவறாமையைப் பற்றி முன்னமே குறிப்பிட்டுள்ளேன். இவற்றையெல்லாம் இக்கால வித்வான்களும் தெரிந்துகொள்ள வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும். தெரியாதனவற்றைத் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் தவறே கிடையாது.

முதல் கச்சேரி

நான் என்னுடைய பதினான்காவது வயதில் எங்கள் ஊரான திருச்சூரில் முதன் முதலாக கச்சேரி செய்தேன். அப்போது முதல், கடந்த  ஐம்பது ஆண்டுகளாக எல்லா இடங்களிலும் பாடிவருகிறேன். தாம்பரத்தில் உங்கள் சபாவிலும் பாடி உள்ளேன். சபாக்களின் ஆதரவும் ரசிகர்களின் ஆதரவும் நிறையக் கிடைத்துள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, ஸ்ரீலங்கா, ஜெர்மனி போன்ற பல நாடுகளுக்கும் சென்று கச்சேரி செய்து இருக்கிறேன். போகாத பெரிய நாடு என்பது ரஷ்யாதான்.

காஞ்சிப் பெரியவர், ஜீயர் மற்றும் சாயிபாபா

நான் காஞ்சி மடத்தில் பெரியவர் முன்னிலையிலும், ஜீயர் சுவாமிகள் முன்னிலையிலும், புட்டபர்த்தி சத்யசாய்பாபா முன்னிலையிலும் பாடி உள்ளேன். மஹாப் பெரியவர் முன்பாக நான் ஒரு முறை பாடியபோது, ஜி.என்.பி.அவர்களைப் பற்றிப் பேசி, அவர் பாடும் பாடல்களைப் பற்றிக் கூறினார். கானடா ராகத்தில் “பராமுக மேலரா'' என்னும் பாடலை எப்படி அமைத்துள்ளார் என்பதையும் பாடிக்காண்பித்தார். ‘அவைகளெல்லாம் உனக்குத் தெரியுமா?' என்றும் கேட்டார்.

எனக்கு எல்லோருமே பக்க வாத்தியம் வாசித்திருக்கிறர்கள். வயலினில் டி.என்.கிருஷ்ணன், எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், லால்குடிஜி.ஜெயராமன், வி.வி.சுப்ரமணியம், எம்.சந்திரசேகரன் போன்றோரும்; மிருதங்கத்தில், உமையாள்புரம் சிவராமன், டி.கே. மூர்த்தி, பாலக்காட்டு மணி அய்யர் போன்று அநேகம் பேர் வாசித்திருக்கின்றனர்.

ஒருமுறை தாம்பரம் ம்யூசிக் கிளப்பில் எனக்குக் குரல் சரியில்லாத போது அதன் செயலாளர் பாஷ்யம் நிறையப் பேரை  அணுகிபோது, யாரும் பாட வரவில்லை. ஆனால் டி.வி. ராம்பிரசாத் வந்து பாடினார்.  நானும் அது போல பாடியிருக்கிறேன்.  ஏற்பாடு செய்யப்பட்ட வித்வானுக்குப் பாட இயலாமல் போனதற்கான காரணம் நேர்மையாய் இருக்கும் பட்சத்தில் அவருக்குப் பதிலாகப் பாடி இருக்கிறேன். டி.என்.சேஷகோபாலனுக்கு ரயில் தாமதம் ஆகிப் போனபோது, ஆறு மணிக்கு போன் செய்து  சொன்ன போதுகூட நான் போய் பாடியிருக்கிறேன். நாம் மட்டும் நினைத்தால் போதாது. எல்லோருமே அது போல எண்ண வேண்டும். எனக்கு எந்த வேறு பாடும் கிடையாது. கடைசி நிமிடத்தில் சொன்னாலும் காரணம் சரியாயிருந்தால் நான் போய் பாடுவேன். கோயமுத்தூரில்  உமையாள்புரம் சிவராமன் மிருதங்கம், ஹரிசங்கர் கஞ்சிரா. இந்தப் பக்க வாத்யங்களுடன் நான் செய்த கச்சேரி என்னால் மறக்க முடியாத ஒன்று. 1999 அல்லது 2000 ஆம் ஆண்டில் சென்னை மடிப்பாக்கத்தில் ஒரு கச்சேரி, ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்றது. உமையாள்புரம் சிவராமன் மிருதங்கம். அவரெல்லாம் கச்சேரி நன்றாக நடைபெற வேண்டும் என்ற எண்ணத்துடன் நிறைய சின்சியராக நினைத்து நல்ல முறையில் வாசிப்பவர். தான் நன்றாக வாசிப்பதாக ஒரு முறைகூடக் கூறிக்கொள்ள மாட்டார். அவர்கள்தான் உண்மையான கலைஞர்கள்.

நாராயணீயம், ஜி.என்.பி. அவர்களின் சாகித்யங்கள், தீட்சிதர் கிருதிகள் என்று நானும் என் மனைவி சாருமதியுமாக இணைந்து நூற்றுக் கணக்கில்   காஸட்டுக்கள்(ஒலிநாடா), சி.டி.(குறுந்தகடு) எல்லாம் கொடுத்திருகிக்றோம். எங்கள் மகள் சுபஸ்ரீயும் இப்போது பாடிக்கொண்டிருக்கிறள். அவளும் ஒலி நாடாக்களில் பாடி இருக்கிறாள். மூன்று பேரும் இணைந்து பாடுவது என்றால் வீட்டில் பயிற்சி எடுத்துக்கொண்டுதான் பாடுவோம். 

இசை உலகம் - அப்போதும், இப்போதும்.

அப்போது இசை உலகில் இவ்வளவு அரசியல் கிடையாது. எனது குரு தனி இடத்தை வகித்தார். அக்காலத்தில் நேர்மையும் உண்மையும் அதிகம் இருந்தது. இப்போது ஈடுபாடு குறைவாக உள்ளது. நான் ஒரு உண்மையைச் சொல்லியே ஆக வேண்டும். அந்தக் காலத்து ரசிகர்கள் போல் இப்போதைய ரசிகர்களும் இல்லை.  கச்சேரியின் கடைசிவரை எல்லோரும் இருந்து கேட்ப தில்லை. இப்போது ரசிகர்களுக்கு விஷயம் தெரியும். ஆனால் அது மட்டும் போதாது. ரசித்துக் கேட்க வேண்டும். அப்போதுதான் நுட்பங்கள் தெரியும். பாடும் வித்வான்களும் நன்றாகப் பாடுவார்கள். நிறைய நுணுக்கங்கள் தெரிந்து கொள்ள முடியும். ஜி.என்.பி.அவர்களைப் பார்க்க, அவரது கச்சேரியைக் கேட்டு ரசிக்க, மக்கள் ஓடி வருவார்கள். இப்போது ஆறு மணிக்கு கச்சேரி என்றால், வித்வான்களும், ரசிகர்களும் தாமதமாக வருகிறார்கள். ஆனால், அப்போது ஆறு மணிக்கு கச்சேரி என்றால், 5.30 மணிக்கே கூட்டம் கூடிவிடும். ரசிகர்களைக் காக்க வைக்கக் கூடாது என்று என் குருநாதர் அடிக்கடி கூறுவார். எங்கெங்கிருந்தோ இசை கேட்க மக்கள் வருகிறார்கள் அவர்களை நாம் காக்க வைக்கக் கூடாது என்பார் என் குருநாதர். ஆறு மணிக்கு முன்னதாகவே வந்திருந்து சரியாக ஆறு மணிக்குக் கச்சேரியைத் துவக்கி விடுவார். முன்பெல்லாம் நான்கு மணி நேரம் கச்சேரி இருக்கும். இப்பொதோ இரண்டரை மணி நேரம்தான் கச்சேரி. ராகம், தானம், பல்லவி பாட நேரமே இருப்பதில்லை. அனுபவித்துக்  கேட்க ஆட்களும் இல்லை. ‘ஃபாஸ்ட் புட்' எனப்படும் துரித வகை உணவு போல் ஆகிவிட்டது இசையும்.

இப்போதெல்லாம் கச்சேரிகளில் நிறைய சப்தம். இங்கேயே நாம் பேச முடிவதில்லை. அவ்வளவு சப்தம். அமைதியாக இருந்தால் நன்றாகக் கேட்கலாம். இளம் கலைஞர்கள் கூட மைக் இல்லாமல் பாடுவதில்லை. முன்பு ரசிகர்கள் அமைதியாயிருந்தார்கள். இந்நாட்களில் யாருக்கும் எதற்கும் நேரம் இருப்பதில்லை. எல்லாவற்றிக்கும் அவசரம்தான். சாப்பிட, தூங்கக்கூட நேரம் இல்லை யென்றால்,  கச்சேரி உட்கார்ந்து கேட்க ஏது நேரம்? பட்டங்கள், பட்டயங்கள், கலைமாமணி, பத்மபூஷன் எல்லாம் எனக்குக் கிடைத்திருக் கிறன்றன. ஆனால் அதை எல்லாம் நான் பெரிதாக நினைக்கவில்லை.  பெரிய வித்வான்கள் தங்களுடைய முன்னோர்கள்போல் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அது போல நானும் புகழ்பெற்ற பழைய வித்வான் கள் போல் பாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இசை பெரிய கடல். இதில் இவ்வளவுதான் என்று முடிவு கிடையாது. நிறைய பாட வேண்டும். நன்றாகப் பாட வேண்டும். இதுதான் என் ஆசை. இப்போதும் நான் மாணவன்தான்.

சாருமதி

நானும் எனது இசை பரிசோதனைகளும்

கச்சேரி மட்டும் பாடுவது என்றில்லாமல் புதிய சோதனைகளும் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் நான். எழுபத்தியிரண்டு மேளகர்த்தா ராகங்களின் தாளங்களில் மிகப் பெரிய அட்சரம் கொண்டது கீர வாணி ராகம், கீரவாணி தாளம், நீதிமதி ராகம், நீதிமதி தாளம். அறுபத்தி எட்டாவது மேளகர்த்தாவில் பல்லவிக்கு முக்யத்துவம் கொடுத்து மியூஸிக் அகடெமியில் செயல்முறை விளக்கம் செய்தேன். எல்லோரும் பாராட்டினார் கள். ராகமாலிகையில் பல்லவி, அதாவது பல்லவிக்கு முக்யத்துவமும் அழுத்தமும் கொடுப்பதற்காக நிறைய செய்திருக்கிறேன். ‘கிருஷ்ணாமிர்த தரங்கிணி' என்று நானும் ராமச்சந்திரனும் இணைந்து எங்கள் மாணவர் களுடன் செய்து இருக்கிறோம். ‘கர்ணாமிர்த ஸ்லோகங்கள்', ‘கிருஷ்ண லீலா தரங்கிணி' பக்திப்  பாடல்களை, பக்க வாத்யங்களுடன் குழந்தைகளை வைத்து காஸட் செய்து இருக்கிறோம். இது நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்காவிலும்கூட நிறைய பெற்றோர்கள், உங்கள் காஸட்டு போட்டால்தான் எங்கள் குழந்தை தூங்குகிறது என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். அதாவது இந்தப் பரிசோதனை குழந்தைகளைச் போய்ச் சேர்ந்துள்ளது. இதில் என் பெண் சுபஸ்ரீ ஏழு வயதில் பாடியிருக்கிறாள். ‘கோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா', ‘மாமவ மாதவ' போன்ற பாடல்களைக் குழந்தைகள் பாடியுள்ளனர். ‘ஹம்டி டம்டி சேட் ஆன் எ வால்' என்று பாடும் குழந்தைகள் சம்ஸ்கிருதத்தில் பாடியது எனக்கு மகிழ்ச்சி.

ஓவிய இசை

ரவி வர்மாவின் ஓவியங்களை வைத்து கேரளாவில் பக்திப் பாடல்கள் பாடினோம். ‘ஸ்ரீ க்ருஷ்ண மாதுரி' என்ற மேடை நாடகம் ஒன்றும் செய்தோம். பாடுபவர்கள் வேடம் அணிந்து வந்து பாடுவார். உன்னி கிருஷ்ணன் ஜெய தேவர், டி.எம்.கிருஷ்ணா அர்ச்சுனன், நான் துக்காராமின் மனைவி, என்று வேடமிட்டு ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் நடித்தோம். இதே போன்று பக்த மீராவையும் செய்தோம். பிறகு சில இடைவெளி விட்டு விட்டு, திரும்ப ரவி வர்மாவின் வீணை வைத்துக்கொண்டுள்ள சரஸ்வதி படத்தைப் போல் வெள்ளைப் புடவை கட்டிக்கொண்டு வீணையைக் கையில் கொண்டு  மேடையில் வந்து பாடுவது, ராமர் பட்டாபிஷேக படத்தை அடிப்படையாகக் கொண்டு ராமர், சீதை எல்லோரும் நாட்டியம் ஆடிக் கொண்டு பாடினார்கள். அதேபோல் ராதா கிருஷ்ணன் படம் போல் எல்லாம் செய்தோம். இதற்கு வரவேற்பு நன்றாக இருந்தது. தியாகராஜரின் நௌகா சரித்திரம் பண்ணினோம். உடனே பிரான்சிலிருந்து இதை செய்யச் சொல்லி அழைத்தார்கள். நாங்கள் இருவருமாக அங்கு சென்று செய்தோம்.  தெலுங்கில் வெறுமே பாடினால் அவர்களுக்கு, அதுவும் வெளிநாடுகளில்  இருப்பவர்களுக்கு எப்படிப் புரியும்? எனவே அவற்றை காட்சிகளாக்கி அவற்றுடன் பாட்டும் பாடினோம். கிருஷ்ணனும் கோபிகைகளும் துவார கைக்கு படகில் செல்வார்கள். கோபிகளின் அகம்பாவத்தை அழிக்க கிருஷ்ணன் புயலை கொண்டு வருவார். படகு ஓட்டையாகிவிடுகிடும். யார் தன்னுடைய உடையை அவிழ்த்து ஓட்டையை அடைக்கிறார்களோ அப்போது படகு  ஓட்டை அடைபட்டு மிதக்கத் துவங்கும்; துவாரகை சென்றுவிடலாம் என்பார் கிருஷ்ணர். இது கேட்ட கோபிகைகளுக்கு மிகுந்த அவமானமாகி விடுகிறது. பிறகு கோபிகைகள் பிரார்த்தனை செய்ய புயல் ஓய்ந்து விடுகிறது. அகம்பாவம் அழிகிறது. பக்திதான் முக்கியம். அகம்பாவம் அல்ல என்பதைப் புரிய வைக்கிறார்.

இதை  ஓவியமாக்கி ப்ரெஞ்ச் மொழியில் எழுதியும் வைத்தோம். எல்லா மக்களும் புரிந்து கொண்டார்கள். எங்களிடம் நீங்கள்தான் கிருஷ்ணாவை பற்றிப் பாடப் போகிறீர்களா என்று ஆர்வமாகக் கேட்டார்கள். நான்கு காட்சிகளிலும் அவை நிறைந்தது. அது போல பன்னிரெண்டு இடங்களிலும் அவை நிறைந்த கூட்டம்தான். இவையெல்லாம் மறக்க முடியாது. இவற்றை நாங்கள் பெற்ற அனுபவங்கள், படைத்த சாதனைகள் என்றும் கூறலாம். இதே போல ‘சர்வம் விஷ்ணு மயம்' என்று விஷ்ணு ஸ்தலங்களை போட்டோ எடுத்து அத்துடன் வீணை, தபலா வைத்துக் கொண்டு அதன் பின்னணியில் பாடினோம். நல்ல வரவேற்பைப் பெற்றது. இது போல இன்னமும் நிறைய நிகழ்ச்சிகள் தயாரிக்கும் திட்டம் உள்ளது.

No comments: