1) பூமித்தாய்
அன்று- பூகம்ப பூமியாய் நீஅசைந்து அசைந்து ஆட்டிவைக்க
அனைவரும் ஒன்றாகி அருகருகே
உண்டோம்; உறங்கினோம்.
இன்றோ- மதக் கலவர பூமியாக
உன்னை மறந்து சண்டையிட்டோம்
எங்களக்குள், அனைத்தும் மறந்து!
2) உறவு
வெளிக்கதவு பூட்டி, உட்கதவு
திறந்திருக்கும்- சற்றே.
இருளை உணர்கையில் எல்லாமே
அடைத்திருக்கும்; உள்ளேயும் வெளியேயும்
பிரவேசிக்கத் தடை- உறவின் விரிசல்.
3) காற்று
வெயில் எங்கும் எரிக்கையில்
சிறிய நீரோட்டம்
காற்றுக் கடந்து வரும்; சிறிது
ஈரத்தையும் கலந்துகொண்டு-
‘சிலீர்' என்கிறது!
4) மூங்கில்
முழு மூங்கில் வெட்டி, பிளாச்சுகளாக்கி,
சாமிக்குச் சப்பரமும் சாவுக்குப் பல்லக்கும்
கட்டிடலாம்- பூக்கொண்டு;
பூவற்று கயிறு கொண்டு கட்டி
பாதாளச் சாக்கடை அடைப்பும் எடுக்கலாம்,
எதற்கும் வளையும் மூங்கில்- எனவே.
5) ரயில் நிலையம்-1
நடைமேடையும் அமர ஆங்காங்கே
கல் பெஞ்சுக்களும். அதில் வயோதிக,
இளம்ஜோடி, குடிகாரன், பிச்சைஎடுப்பவர்கள் என,
யார் யாரோ அமர்ந்தும் படுத்தும்-பெயர்ப்
பலகையில் மட்டும்தான்
மாற்றமுடன். மற்றெல்லாம் ஒன்றுபோல.
6) ரயில் நிலையம்-2
தண்டவாளத்தின் இடையில் ஆங்காங்கே
பிளாஸ்டிக் கோப்பைகள், தண்ணீர்ப் பைகள்,
சிகரெட்டுப் பெட்டிகள், அழுகிய பழங்கள்-
இடையிடையே பசும் புல்லும், பெயர் தெரியா
பலவண்ண மலர்களுமாய்
விடிகிறது ஸ்டேஷன்.
7) ரயில் நிலயம்-3
சிதறிவிட்ட பாப்கார்ன் பூக்கள், தவறிவிழுந்த
இட்லித் துண்டுகள், ஏதோதோ தின்பண்டம்.
தண்டவாளத்தின் அருகில் துளையில்
வெளிப்பட்ட எலி எதையும் உள்ளிழுத்துச்
சேமிக்கும் அவ்வப்போது; ரயிலில்
அடிபட்டு மாளாமல்.
No comments:
Post a Comment