Sunday, September 2, 2012

ப. முத்துக்குமாரசாமி 'குருவே சரணம்' நூலிலிருந்து

ப. முத்துக்குமாரசாமி

நான் பிறந்தது இலங்கையில். என் அம்மாவின் ஊர் சுழிபுரம் என்னும் கிராமம். அருகில் பறாலை முருகன் கோவில். அம்மா திருமணமானபின் புகுந்த இடமும் நல்லூர். முருகன் கோவிலுக்கு புகழ்வாய்ந்த இடம். எனவே, அம்மா வாழ்நாள் முழுவதும் முருகா முருகா என்னும் நாமத்தையே கேட்டவர்.

என் அப்பாவின் பெயர், பரமசாமிக் குருக்கள். நல்லூர் முருகன் கோவில் அர்ச்சகர். அப்பாவுக்குப் பொய் சொன்னால் பிடிக்காது. யாராயிருந் தாலும் பொய் சொன்னால் மிகவும் கோபிப்பார். தமிழ், ஆங்கிலம் வடமொழி ஆகிய மூன்றிலும் புலமை பெற்றிருந்தார். எனக்கு சைவ வினா விடை, பால பாடம் நன்னெறி, நல்வழி ஆகிய பாடங்களச் சொல்லிக் கொடுத்தவர். நாங்கள் நான்கு ஆண் பிள்ளைகள், ஒரு பெண். எப்போழுதும் கலகலப்பு நிறைந் திருக்கும் வீடு.

என்னுடைய மூன்றாம்வயதில் சிறுத்தொண்டர் நாடகத்தில்  சீராளனாக வேடமிட்டு, பாட்டும் பாடி நடிக்கவும் செய்தேன். என் மாமா வைத்தியநாத சர்மா என்னை வழிநடத்திய சிற்பி. மிக இனிமையாகப் பாடக்கூடியவர். அவரின் குரலின் இசை மயக்கத்தில்தால்தான் நான் இசைத்துறைக்கு வந்தேன். என் மாமா, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, இவைகளை பிருந்தாவனசாரங்கா, திலங், மாண்டு, ரஞ்சனி போன்ற ராகங்களில் பாடக்கேட்ட அனுபவம் இன்னும் மனதில் தெளிவாகப் பதிவாகி இருக்கிறது.

இப்படி வாழ்க்கை சுகமாகவே சென்று கொண்டிருக்குமா என்பது பற்றிய அறிவுகூட இல்லாத என்னுடைய ஏழாவது வயதில் என் அப்பா மறைந்தார். ஐந்து குழந்தைகளையும் வைத்துக்கொண்டு அம்மா கடுமையாயப் போராடினார். என் அம்மாவின் உடன்பிறப்புக்கள் எங்களைப் பிரித்துப் பகிர்ந்து கொண்டு இருக்க வேண்டிய காலமானது. நான் என் அம்மாவின் பாட்டி, மற்றும் பெரிய மாமாவுடன் வசித்தேன். பெரிய மாமா கண்டிப் பானவர், காரணம் குழந்தை சரியான பாதையில் நடக்கத்தானே பொறுப்பு என்ற அக்கறையும், அன்புமே. ஆனால் அந்த மாமாவும் சிறிது காலம் கழித்து மறைந்துவிட்டார். நானும் என் பாட்டியும் தனித்துவிடப் பட்டோம். எனவே என் கல்வி, வாழ்வு எல்லாமே பெரும் போராட்டத்தில் கழிந்தது.

பள்ளிக்கூடத்தில், சனி, ஞாயிறு இசை வகுப்புகள் உண்டு. வசதி இன்மையினால் என்னால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் இசையின் மீதிருந்த ஆர்வத்தினால் வகுப்பு நடக்கும் இடத்திற்கு வெளியே சுவருக்கு அப்புறம் நின்றுகொண்டு பாடங்களைக் கேட்டுக் கொண்டிருப்பேன். ஒரு நாள், நிசப்தமாகவே இருந்தது. பாட்டு சப்தமே இல்லை. ஏன் என்று அறிந்துகொள்ள மெல்லச் சுவர் ஏறி  உள்ளே பார்த்தேன். அப்போது என் சித்திர ஆசிரியர் சி.பொன்னம்பலம்  என்னைப் பார்த்து விட்டார். ‘இசை மேல் இவ்வளவு ஆர்வமா, கற்றுக்கொள்கிறாயா?' என்றார். ஆனால், நான் அவரிடம் ‘என்னிடம் பணம் இல்லை, எனவே வேண்டாம்' என்றேன். ‘நான் பணம் கட்டினால் கற்றுக்கொள்வாயா?' என்றார். சரி என்றேன். என்னை வகுப்பில் சேர்த்தார். முந்தையப் பாடங்களைக் கற்றுக்கொள் என்றார் இசை ஆசிரியர், தா.பொன்னம்பலம். எனக்கு அனைத்தும் மனப் பாடம் நான் சுவருக்கு வெளியே நின்றுகொண்டு அனைத்தும் பயின்று உள்ளேன் என்றேன். எனது முதல் குருநாதர் தா.பொன்னம்பலம் அவர்கள் தான். சுமார் பத்து மாதங்கள் அந்த இசை வகுப்பு நடந்தது. கீதம், சுரஜதி, வர்ணம், கீர்த்தனம் வரைக்கும் இவரிடம் பயின்றேன். அதுதான் என்னை இன்றுவரை வழிநடத்திய பலமான அடிப்படைப் பாடம்.

நடன ஆசிரியர் செல்லத்துரையிடம் நாடகமும், நடனமும், இசையும் பயின்றேன். இவர் மேடை ஏற்றிய  ‘ஸ்ரீ வள்ளி' நாடகத்தில் நான்தான் முருகன். இந்த நாடகம் 21 பள்ளிகளுக்கிடையே நடந்த  நாடகப் போட்டியில் முதல் பரிசும் பெற்றது. எனக்கு சிறப்புப் பரிசும் கிடைத்தது. அந்தப் பள்ளியின் தமிழ் ஆசிரியர் பொன்.சிவப்பிரகாசம் எழுதி இயக்கிய பதினாறு  நாடகங்களிலும் நானே கதாநாயகன். நான் படித்து, இசை பயின்ற அதே  மேல் நிலைப்பள்ளியில் இசை ஆசிரியராக இருந்த வைத்யலிங்கம் அவர்களிடம் இசை பயின்றேன். பிறகு நாதசுர வித்வான், சுப்பையா பிள்ளையிடம் என்னை இசை பயில வைத்தார் என் பெரிய மாமா. ஆனால் பெரியப்பாவின் மறைவுக்குப் பிறகு வாழ்க்கைப் போராட்டத்தில் என்னால் இசை பயில முடியாமல் போயிற்று. 

பள்ளிப் படிப்பு முடித்துப் பல நாட்கள் சென்றபின் 1957ல் நான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சேர்ந்தேன். நான் சேர்ந்த முதல் நாள், முதல் வகுப்பில் நுழைந்த என்னை அன்புடன் ‘வாங்க' என்று அழைத்து பாடம் நடத்தினார். அவர்தான் ‘தான் பெரிய இசை மேதை' என்ற கர்வம் துளியுமற்ற மன்னார்குடி ராஜகோபால பிள்ளை. திருப்பாம்புரம் என்.சிவசுப்ர மணிய பிள்ளை அந்தப் பல்கலைக் கழகத்தில் எனக்கு, சுரதாளக் குறிப்புகள் எழுதக் கற்றுத் தந்தார். இவர் புல்லாங்குழல் இசைக்கலைஞர் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளையின் சகோதரர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள், அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக சுரதாளக் குறிப்புகளுடன் வெளிவந்தன.

மயிலை வஜ்ஜிரவேல் முதலியார், இவர் அக்கல்லூரியில் மாணவர்கள் இலகுவாகக் கற்கும் வண்ணம் சொல்லிக் கொடுப்பார். மணிக்கணக்கில் ராகம் பாடி, சுரம் பாடி என்றெல்லாம் இல்லாமல் ஒரு கீர்த்தனையை சில நாட் களில் கற்றுக் கொடுப்பார்.  டி.கே.ரங்காச்சாரி, சுருதியுடன் இழைந்து பாடு வதில் வல்லவர். உருப்படிகளை அழகுபடுத்திப் பாடுவார். அவரின் வகுப்பு எப்போதும் ‘பாவ' சங்கீதத்தில் இழைந்து முழங்கும். கல்யாணி அட தாள வர்ணம், ரீதிகௌள வர்ணம் போன்ற பலவும் இவரிடம் கற்றேன். எனது இசைப் பயணத்தில் பெரும்பங்காற்றியவர் இவர்.

தஞ்சாவூர் ராமதாஸ் ராவ் லயசிம்மம். இவரிடம் மிருதங்கம் பயின்றேன். இவரின் வாசிப்பே அலாதியானது. மாமேதை. இவர் பக்கவாத்யமாக வாசிக்கும் கச்சேரி மிகுந்த களைக்கட்டிவிடும். எனக்கு மிருதங்க வாத்யம் என்றால் என்ன, அதில் நாதம் எப்படி எழ வேண்டும், என்று ஆரம்பப் பாடத்திலிருந்து ஆரம்பித்து நன்கு கற்றுத்தந்தார். ‘பாடல்களைக் கற்றுக்  கொள்வது என்பது வேறு, பக்க வாத்யங்களுடன் பாடுவது வேறு. வீட்டிற்கு வா உனக்குச் சொல்லித் தருகிறேன்' என்று கூறி எனக்குக் கற்றுத் தந்தார்.

என் குருநாதர் வர இயலாது போன ஒரு நாள் வந்து எனக்கு வகுப்பு எடுத்தவர், பிடில் மேதை கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை. அவரின் ஒரு கூற்று என்னால் எப்போதுமே மறக்க இயலாது. ‘குரு என்றால், அவர் உன்னிடம் ஒரு பைசாக் கொடுப்பார். அதை நீ சொந்த உழைப்பில் 99 பைசாவைச் சேர்த்து ஒரு ரூபாயாக ஆக்க வேண்டும்'அதாவது, உன்னுடைய உழைப்பு அதில் அவ்வளவு இருக்க வேண்டும் என்பதுதான் குருவின் விருப்பம்'என்றார். அதேபோல, கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி, ப.சிவஞான சுப்ரமணிய முதலியார் ஆகியோரும் என் ஆசிரியர் களாவர். ப.சிவஞான சுப்ரமணிய முதலியார், பெரும் பாரதி பக்தர். கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். கவிஞர். தமிழ், வடமொழி, சிங்களம் அனைத்திலும் புலமை உடையவர். தந்தையை இழந்து எங்கள் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தபோது இசைகற்கும் வாய்ப்பில்லாமல் முடங்கிக் கிடந்த என்னை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்த்துப் படிக்கவைத்துத் திரும்ப எனது இசை வாழ்க்கையை மீட்டெடுத்தவர். எனது தம்பி என்றாலும் கூட என்னுடைய முழு கல்லூரிச் செலவையும் அவரே ஏற்று என்னை சங்கீத பூஷணம் பட்டம் பெற வைத்தார். அவரின் ஆதரவால்தான் நான் இன்றைக்கு ஒரு இசைக்கலைஞனாக வாழ்கிறேன். கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி ஒரு அற்புதமான இசைக்கலைஞர். ஆழமான ஞானஸ்தர். அவரை என் ஆசிரியராகப் பெற்றது பெரும் பேறு. அவரிடம் இரண்டு ஆண்டுகள் தெலுங்குக் கீர்த்தனகளை முறைப்படி பயின்றேன். வெளியூர்களில் கச்சேரி நடக்கும்போது என்னையும் உடன் அழைத்துச் செல்வார். பலரிடம் அறிமுகப் படுத்துவார். என்னை ஊக்குவித்து பாடவைத்தவர்களில் இவரும் ஒருவர்.

பறாலை  முருகன் கோவிலில் அதிகாலை பாடிக்கொண்டே தொழும் பக்தர், காந்தீயவாதி, சு.சண்முக சர்மா. இவர் ஒரு கல்லூரிக்கு அதிபர். காந்தி மறைவைக் கேட்டவுடம் மொட்டை அடித்துக் கொண்டவர். உணவைக் குறைத்துக் கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயப் பிரவேசம் செய்ய வைத்தார். மனித நேயம் மிக்கவர். தமிழ், சமயம், இசை இந்த மூன்றும் என்னிடம் இருப்பதினால் என் மீது மிகுந்த அன்பு கொண்டு தமது மகள் நளின ரஞ்சனியை எனக்கு மணம் முடித்துக் கொடுத்தார். என் வாழ்வை செப்பனிட்டார் என்றே சொல்லலாம். 

உயர்ந்த உள்ளமும், ஆஜானுபாகுவான தோற்றமும், முற்போக்குச்  சிந்தனையும், தெளிவும் கொண்டவர்-சாகித்யகர்த்தா, சிதம்பரம் நடராஜர் கோவில் டிரஸ்டி டி.நடராஜ தீட்சிதர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் பயின்று கொண்டிருக்கும்போது டி.கே.சுப்ரமணியன் பாடிய சிந்து பைரவி ராகத்தில் அமைந்த அழகான பாடலான ‘கானரீங்காரம் செய்யும் கருவண்டே'என்ற பாடலைக்கேட்டு மயங்கினேன். அதை இசை அமைத்தவர், நடராஜ தீட்சிதர் என்று அறிந்து, டி.கே.ஸ். உடன் அவரைச் சந்தித்தேன். கல்லூரி நாட்கள் முழுவதும், கல்லூரி முடிந்தவுடன் தீட்சிதரின் வீடே கதி என்று இருந்தேன். அவரின் நட்பு எனக்குக் கிட்டவில்லை எனில் என் பாதை வேறாகி இருக்கும். தீட்சிதரின் மறைவுவரை எங்கள் நட்புத் தொடர்ந்தது. கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகத்தில் தேவார மூவர் இசை விழாவில், ‘தீட்சிதரும் அவரின் கீர்த்தனைகளும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினேன். டி.நடராஜ தீட்சிதர் அற்புதமான பல தமிழ்க் கீர்த்தனைகளுக்கு இசை அமைத்துள்ளார்.

என் வாழ்நாளில் மறக்கவே முடியாதவர் அண்ணாமலை அரசர் அவர்கள். அவர் நிறுவிய பல்கலைக் கழகம் இல்லாதிருந்தால், என் போன்ற பொருளாதாரம் குறைந்த மாணவர்கள் இசை பயின்றே இருக்க முடியாது. சிறு வயது முதல் இசை மேல் ஆர்வமாக இருந்த எனக்கு வாழ்வின் பொருளாதாரச் சரிவு இசை பயில முடியாமல் செய்து விட்டது. அண்ணா மலைப் பல்கலைக் கழகம் மிகமிகக் குறைந்த கட்டணத்தில் இசை பயில வகை செய்திருந்தது என்ற காரணத்தால் என்னால் பயில முடிந்தது. விண்ணப்பப் படிவம் அனுப்பி, நேர்முகத்தேர்வும் முடிந்து, தேர்ச்சியும் பெற்றேன். விண்ணப்பத்துடன் இருபத்தியோரு ரூபாய் மட்டுமே கட்டமாக கட்டினேன். பிறகு நான்கு மாதங்கள் கழித்துத்தான் கட்ட வேண்டும். எம்.எம்.தண்டபாணி தேசிகரை எனது குருவாகக் கொண்டு பயில முடிந்தது. கோடி கோடியாகக் கொடுத்தாலும் கிட்டாத பெரும் பேறு இது. அரசரின் உள்ளம் மென் மையானது. நடராஜப் பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவர்  இல்லை என்றால் தமிழிசை மறைந்திருக்கும். தமிழிசை இயக்கம் தொடங்கி, அதில் பெரும் வெற்றியும் பெற்றார். நான் ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தேன். இருபது ஆண்டுகள் இலங்கையில் பல கல்லூரி களில் பணியாற்றியிருக்கிறேன். எல்லாமே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தால்தான்.

தாரமும், குருவும் தலைவிதிப்பயன் என்பார்கள். தேசிகர் அய்யா எனக்குக் குருவாகக் கிட்டினார். அவரின் ஆளுமை, கம்பீரமான குரல் வளம், தாய் மொழியை உச்சரிக்கும் போது மிளிரும் அழகு, உருப்படிகளை செம்மையூட்டிப் பாடும் அழகு என சொல்லிக் கொண்டே போகலாம். என்னிடம் மாணவன் என்ற நிலையையும் தாண்டி ஒரு மகனைப்போல பாசம் கொண்டு பாதுகாத்தார். என் மீது ஏன் இந்த அன்பு, பரிவு என்பது எனக்கு இன்றுவரை விளங்காத புதிர். எனது பொருளாதாரச் சூழல் காரணமாக என்னுடைய இசை ஆர்வம் சிறு வயது முதலே இருந்தாலும் கூட என்னுடைய 26 ஆவது வயதில்தான் நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசை பயின்றேன். 1957-58 முதல் 1961ம் ஆண்டுவரை அங்கு பயின்றேன். பிறகு குடும்பச்சுழல் காரணமாக இலங்கைக்குத் திரும்பினாலும் இசை ஆசிரியர் வேலை உடனே கிடைக்கவில்லை. எனவே  வேலைகிட்டாத இசை ஆசிரியர்களை ஒருங் கிணைத்து, ‘பணியற்ற இசை ஆசிரியர்கள் சங்கம்' என்று ஒன்றை ஆரம்பித்தேன். ஆட்சியாளருக்கு எங்கள் நிலையை எடுத்துக் காட்டியதால், எனக்கும், ஏனையப் பணியற்ற இசை ஆசிரியர் களுக்கும் நான்கு ஆண்டுகளுக்குப்பின் கல்லூரிகளில் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது.

ஈழத்தில் பணியாற்றிக்கொண்டே விடுமுறை வரும் இரண்டு மாதங்கள், நான் தமிழகம் வந்து விடுவேன். என் குருநாதைரை சந்திக்கவும், அவரிடம் பாடம் பயிலவும் இங்கு வருவேன். அந்தத் தொடர்பு என் குருநாதர் மறையும் வரை தொடர்ந்தது. ஈழத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே வட இலங்கை சங்கீத சபை என்ற நிறுவனத்தின் தேர்வாளர்களில் ஒருவனாகப் பணி புரிந்தேன். 1976, 77 இல் உயர் வகுப்புகளுக்கான இசை நூல்  எழுதினேன்.

தேவார இசையை முறைப்படி பயில ஓதுவார் பி.எஸ்.ராஜசேகரன் அவர்களிடம் பயின்றேன். ஈழத்தில் பணியாற்றும் போதே இலங்கை வானொலியில் கர்நாடக இசை, பக்தி இசை, மெல்லிசை மூன்று தளங்களிலும் ‘ஏ'கிரேட் ஆர்டிஸ்டாக இருந்தேன். இசைச் சித்திரம், பாமாலை, கலைக் கோலம் என பல இசை வடிவ நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். தமிழகத்திலிருந்து பல இசைக்கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தி, வானொலியில் பேட்டியும் இடம் பெறச்செய்துள்ளேன். அதில் திருவாவடுதுறை ராஜரத்தினம் அவர்களை நேர்காணல் செய்தது மறக்க முடியாதது. தமிழக இசைக் கலைஞர்களைப் பற்றிய கட்டுரைகளும் இலங்கையின் முக்கிய இதழ்களில் எழுதி இருக்கிறேன். நடனதிற்கும் பாடி இருக்கிறேன். ஒலிப் பேழையில் ‘தண்டபாணி தேசிகர் கீர்த்தனைகள்' என்று ஒன்றும், ‘ஈழத்துக் கோவில்கள் பற்றிய பாடல்கள்' என்று ஒன்றும் கொடுத்துள்ளேன்.

ஈழத்து வானொலியில் ஏற்பட்ட இரண்டு சுவையான நிகழ்ச்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வானொலியில் அப்போதெல்லாம் நேரலை நிகழ்ச்சிகள்தான் இசை நிகழ்ச்சிகள். எனக்கு இசை நிகழ்ச்சிக்கு ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு வந்திருந்தது. பக்க வாத்யக் கலைஞர்கள் பெயரும் அளிக்கப் பட்டிருந்தது. நிகழ்ச்சி முன் கூறியபடியே நேரலை என்பதை நினைவு கொள்ளுங்கள். வானொலியில் குறிப்பிட்ட நேரத்திற்கு நான் நிலையம் சென்று விட்டேன். ஆனால், அங்கு தயாரிப்பாளரும் இலை, பக்க வாத்யக் கலைஞர்களும் இல்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. வேறொரு தயாரிப் பாளரை அணுகி வினவினேன். அவரோ ‘இதைப்  பெரிது படுத்தாதீர்கள். மேலிடத்தில் முறையிடாதீர்கள். அவருக்கு வேலை போய்விடும். நான் உங்களுக்குப் பக்க வாத்யக் கலைஞர்களை ஏற்பாடு செய்து நிகழ்ச்சி தயாரிக் கிறேன்' என்று கூறி நிலையத்திற்கு ஜலதரங்கம் வாசிக்க வந்திருந்தவரை பிடிலுக்கு பதில் போட்டு, மிருதங்கக் கலைஞரையும் ஏற்பாடு செய்து நிகழ்ச்சியை ஒலிபரப்பினார். எனக்கு அன்று ஜலதரங்கத்துடன் பாடும் படியாக ஆயிற்று.

மற்றொரு நிகழ்ச்சி, அதுவும் நேரலைதான். அன்று எனக்கு இசை நிகழ்ச்சி அளிக்க நேரம் ஒதுக்கி இருந்தார்கள். இம்முறை என்னுடனேயே பக்க வாத்யக் கலைஞர்களும் வந்திருந்தனர். வானொலி நிலையத்தில் எனக்கு பலமுறை பக்கவாத்யம் வாசித்த ஒரு பிடில் கலைஞர் இருந்தார். அன்று அவர் முழு போதையில் இருந்தார். அவரோ என்னைக் கண்டவுடன், என்னுடன் வந்திருந்த பிடில் கலைஞரை விரட்டி விட்டார். ‘நான்தான் எப்போதும்  முத்துக் குமாரசாமிக்கு வாசிப்பேன். நீங்கள் போய்விடுங்கள்' என்று அவரை அனுப்பி விட்டார். நாங்கள் எவ்வளவு கூறியும் புரிந்து கொள்ளும் நிலையில் அவர் இல்லை. பிடில் கலைஞர் கோபித்துக் கொண்டு சென்று விட்டார். நான் இவருடனேயே நிகழ்ச்சி நடத்தும்படி ஆகிவிட்டது. முன்னமே சொன்னேன் இல்லையா அது நேரலை நிகழ்ச்சி என்று; தயாரிப்பாளருக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை. நிகழ்ச்சி தொடங்கவேண்டிய நேரமும் நெருங்கி விட்டது. நான் பாடும் போது மிருதங்கத்திற்கு ஒலியைக் கூட்டியும், பிடிலுக்கு ஒலியை மொத்தமாக நிறுத்தி மௌனமாக்கியும் ஒலிபரப்ப வேண்டியதுதான் என்று தயாரிப்பாளர் முடிவெடுத்து, நிகழ்ச்சியைத் துவக்கினார். பிடில் வித்வானோ, வில்லை பிடிலுக்கு வெளிப்புறமும், பிடிலுக்கும் தந்திக்கும் இடையிலுமாக தடுமாறித் தடுமாறிப் போட்டுக் கொண்டிருக்கிறார். இதற்குள்ளேயே பல இடங்களிலிருந்து பிடில் ஒலி கேட்க வில்லை என்று தொலைப்பேசி அழைப்புக்கள் வரத் துவங்கிவிட்டன.. தயாரிப்பாளர் பார்த்தார், பாதியிலேயே நிகழ்ச்சியை முடித்துவிட்டார். அது என் மீதான குற்றம் இல்லை என்பதால் எனக்கு வேறு ஒரு நாள் மீண்டும் நிகச்சி அளிக்க ஏற்பாடு செய்தார்கள். அன்று நிகழ்ச்சி நன்கு நடைபெற்றது.

ஈழத்தில் என் சமகால இசையாளர்கள் எஸ்.பாலசிங்கம், ஏழிசை வாரிதி ந.வீரமணி ஐயர், செல்வி.நரகம்மா, கதிர்காமர், தமிழகத்தில் திருப்பாம்புரம் சோ.சண்முகசுந்தரம், மா.வைத்தியலிங்கம், பெரும்பாண நம்பி, மா.கோடி லிங்கம், டி.கே.சுப்ரமணியன், தாராபுரம் சுந்தரராஜன் தேசிகரின் மூத்த மாணவர் வே.சோமசுந்தர தேசிகர் ஆகியோராவர்.

எனது குருநாதரைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் போதாது. எனவே அதைத் தனியாகப் பின்பகுதியில் சொல்கிறேன். கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது என் குருநாதர் எம்.எம்.தண்டபாணி தேசிகர் ஒரு நாள் என்னிடம், ‘தமிழிசையால் நீ எத்தனையோ பெறப்போகிறாய்.  உனக்கு எல்லாவற்றையும் கொடுக்கும் தமிழுக்கு நீ என்ன செய்யப்போகிறாய்?' என்று கேட்டார். அது என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. கல்லூரிக் காலத்திலேயே கையெழுத்துப் பிரதியாக ‘இசை அருவி' என்னும் இசை ஏட்டை மாதாமாதம் கொண்டு வந்தேன். அது, பின்னட்களில் ‘கலை அருவி' எனப் பெயரிட்டப்பட்டு வெளிவந்தது. அதில் நடனம் மற்ற கலைகளுக்கும் இடமளிப்பதால், அது பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற நண்பர்களின் அறிவுரைப்படி சில காலம் அப்பெயரில் வந்தது. பின்னாளில் அது ‘இசை ஏடு'என்ற பெயரில் ஏறக்குறைய 47 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக் கிறது. நான் ஒருவனாகவே செயற்பட்டு வடிவமைத்து வெளியிட்டுக்கொண்டு வருகிறேன். குருநாதரின் கேள்விக்கு ஏதோ என்னால் சிறிய அளவில் பங்காற்ற முடிந்தது என்றும் எண்ணுகிறேன்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, 1986 இல் நான் தமிழகத்திற்கு வசிக்க வந்துவிட்டேன். ஈழத்து வானொலியில் பல ஆண்டுகாலம் இசைக் கச்சேரிகள் அளித்திருக்கும் என்னை அகில இந்திய வானொலியில் ஆடிஷன் செய்துதான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்கள். எனக்கு வானொலி நிகழ்ச்சிகள் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். தமிழகத்திற்கு வந்தபின் ராஜா அண்ணாமலை மன்றக் கல்லூரியில் குரலிசை விரிவுரையாளராக இணந்த பின், தண்டபாணி தேசிகர் அறக்கட்டளை நிறுவி அவருக்கு ஆண்டுதோறும் விழா எடுத்து வருகிறேன். எஸ்.ராமநாதனுடன் இணைந்து ‘நாதன் நுண் கலை'அமைப்பின் செயலாளராகவும் செயற்பட்டேன். இப்போதும் இருக் கிறேன்.

‘இசை ஏடு' இதழில், மி.ப.பெரியசாமித்தூரன் அவர்களின் ‘பண் வரலாறு' தி.ச.சுந்தர ஓதுவாமூர்த்தியின் ‘தமிழிசை மாண்பு'  நா.மஹாலிங்கம்  அவர்களின் ‘இசை', ‘இசையும் நடனமும்' க.வெள்ளை     வாரணன் அவர் களின் ‘தேவாரத்திற் பயின்ற பண்கள்', டாக்டர் பிரமீளா குருமூர்த்தியின் ‘காவடிச் சிந்து', திருமதி.சுதா ரகுநாதனின் 'நிகண்டு இசை' முதலியன ஆய்வு மேற்கொள்வோருக்கு உதவும் சிறந்த கட்டுரைகள்.

நான் மூன்று வயதில்மேடை ஏறி  சிறுத்தொண்ட நாயனார் நாடகத்தில் சீராளனாக நடித்தேன். அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடமான திருச் செங்காட்டாங்குடியில் அதே ஊரில் பிறந்தவர்தான் என குருநாதரான தண்ட பாணி தேசிகரும். ஆண்டவன் அன்றே சொல்லி வைத்தார் போலும் ‘மகனே இன்று சீராளனாக நடிக்கும் நீ இந்தக்கதை நிகழ்ந்த திருச் செங்காட்டாங்குடியில் பிறந்த தேசிகருக்கு மாணவராக இசை கற்கும் வாய்ப்பைப் பெறுவாய். அவரே உன் குரு' என்று.

முதலில் குருநாதரின் தோற்றப்பொலிவையும், அவரின் நேர்த்தியான உடையணியும் முறைபற்றியும் குறிப்பிட வேண்டும். அவரைப் பார்க்கும் போதே மிக அழகாக இருக்கும். ஜரிகை தலைப்பா, ஜரிகை வேட்டி, காதில் வைரக்கடுக்கண், மேலே கோட்டு, கட் ஷூ, நெற்றியில் குங்குமம், கைகளில் தங்கத்தில் வைரம் இழைத்த மோதிரங்கள் என்று அவரது தோற்றம் ஒரு அரசரைப்போல இருக்கும். அவரின் அலங்காரமே அவரின் மற்ற ஒழுக் கத்தையும் நேர்த்தியையும் காட்டும். துளியும் அழுக்கு இருக்காது, அவர் இருக்கும் இடத்தில். எப்போதும் மின்விசிறி  சுழன்று கொண்டே இருக்க வேண்டும்  அவருக்கு. தலைக்கு மேல் ஒரு விசிறி, பக்கத்தில் டேபிள் விசிறி என்று அவரின் வீட்டிலும் அலுவலகத்திலும் எப்போதும் மின்விசிரிகள் சுற்றி கொண்டே இருக்கும். அவர் தனது மனைவியான எங்கள் தாயைப் போன்றவரான தேவசேனா அம்மையாருக்கு சம அந்தஸ்து கொடுத்து இருப்பார். எப்போதும் எல்லா விஷயங்களையும் அவருடன் கலந்து சொல்வார். மாணவர்கள் பற்றிய கருத்துக்களுக்குக் கூட தேவசேனா அம்மையார்  குருவுக்கு மாற்றாக நியாயத்தை எடுத்துரைத்தால் உடனே மாற்றிக் கொள்வார். இதற்கு ஒரு உதாரணமாக என்னுடைய அனுபவத்தையே இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

ஒருநாள், குரு வழக்கம்போல எங்களுக்குபாடம் நடத்திக் கொண்டிருந் தார். ஜவ்வாது புனுகு மணக்க எல்லாம் பட்டுமயமாய், காதில் வைரக்கடுக்கண் மின்ன. மிக அழகான தோற்றத்துடன். ‘திருமகளே நல்வரம் அருள்வாய்' என்றபாடல். தோடி ராகம், ஆதி தாளம், இரண்டு களை. பேராசிரியர் மு. அருணாச்சலம் பிள்ளை இயற்றியது. பல்லவியில் கடினமான சங்கதிகள் ஏழு எட்டுப் போட்டுப் பாடிவிட்டு எங்களையும் தன்னுடன் பாடச்சொன்னார். ஓரிரு சங்கதிகளாகப் பிரித்து, அவர் பாட நாங்களும் பாடிக் கொண்டே வந்தோம். எனது முறை வந்தது. கஷ்டமான சங்கதி போட்டுப் பாடினார். பாடினேன், சங்கதி சரியாக வரவில்லை. குருவுக்குக்கோபம் வந்துவிட்டது. ‘என்னப்பா நினைச்சுக்கிட்டே? நில்லு, என்ன பாடறே?  உனக்கு சங்கீதம் வருமா? சங்கீதம்னா எத்தனை புனிதமானது? கேட்டு ஒழுங்காப் பாடத் தெரியல்லை?' என்று என்னைத் திட்டிவிட்டு மற்ற மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆரம்பித்தார். எனக்கோ மனம் உடைந்துவிட்டது. கண்ணீல் நீர். வகுப்பு முடிந்து வெளிவரும் போது மற்றவர்கள் என்னைத் தேற்றினாலும் மனம் ஒப்பவில்லை. மறுநாள், அதற்கு மறுநாள் என்று மூன்று நாட்கள் நான் வகுப்பிற்கே செல்லவில்லை. மூன்றாவது நாள் விடுதியில் படுத்தே இருந்தேன். என் அறைக் கதவை யாரோ தட்டினார்கள். திறந்து பார்த்தால், குரு! ‘முத்து சாமி, முகமெல்லாம் அலம்பிக்கொண்டு வகுப்புக்கு வா' என்று சொல்லிச் சென்று விட்டார். என்ன நடக்குமோ என்ற பயத்துடன் வகுப்புக்குச் சென்றேன். வகுப்புக்குள் நுழைந்த என்னைப் பார்த்து, ‘என்னப்பா பாடியது சரியில்லை என்று சொன்னதற்காகவா இவ்வளவு மனத்தாங்கல்?  உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. நண்பனைப்  போலத்தான் குருவும், சீடன் சரியாகப் பாடவில்லை என்றால் தடுத்துத் தவறைச் சுட்டிக் காட்டித்  திருத்துவார். அவர்தான் உண்மையான குரு. சரி வகுப்பு முடிந்ததும் ஏழு மணிக்கு வீட்டுக்கு வா' என்றார்.

என் மனம் இளகிவிட்டது. ஒரு மாணவன் வரவில்லை என்றா அவன் இருக்கும் இடம் தேடி வந்து அழைத்த பண்பு என்னை மிகவும் நெகிழச் செய்துவிட்டது. இதுவே இது போல குருவின் மனதிற்கு துன்பம் கொடுத்த கடைசி நிகழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். மாலை குருநாதர் வீட்டிற்குப் போனேன். என்னைக் கண்டவுடன் தேவசேனா அம்மாவைப் பார்த்து, ‘அம்மா இவனுக்கு வந்த கோபத்தைப் பாரேன்.  சரியாகப் பாடலை என்னடா பாடறேன்னு கேட்டேன், வந்தது வினை' என்றார். உடனே அந்தம்மா ‘உங்களுக்கு எத்தனை வருட அனுபவம்? அவனுக்கு எத்தனை வருட அனுபவம்? நீங்கள் போடும் சங்கதியெல்லாம் அவனால் போட முடியுமா?' என்று சொன்னார். உடனே அவர், ‘ ஓஹோ, நீயும் அவன் கட்சியா?' என்று கூறி சிரித்துவிட்டு தன் பக்கத்தில் இலை போடச்சொல்லி சாப்பிடச் சொன்னார். இது என் மனதில் நீங்காத நிகழ்ச்சி. குரு மட்டுமல்ல அவர். அதற்கும் மேலாக பாசம் நிறைந்தவர் என்பதை உணர்த்திய பதிவு.

தேசிகர் ஐய்யாவின் தமிழிசை மேன்மையைக் கண்டு கேட்டு அனுபவித்தவர் பாவேந்தர் பாரதிதாசன். தேசிகரின் பாட்டு என்றால் முதல் வரிசையில் அமர்ந்து கேட்பாராம் பாவேந்தர். பாவேந்தர் பாடல்களை முதன் முதலில் இசை அமைத்துப் பாடிய பெருமை என் குருவையே சாரும்.  ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ'  என்ற பாடலும். ‘வெண்ணிலாவும் வானும் போலே'என்ற பாடலும் பட்டி தொட்டியெல்லாம் எதிரொலித்ததை மறக்க முடியுமா?  இன்றும் மக்களால் விரும்பிக் கேட்பதை என் கண்ணால் பார்த்து இருக்கிறேன். குரு கூறுவார், “ ‘துன்பம் நேர்கையில்' பாடலுக்கு இசை அமைக்க எனக்கு இரண்டு வருடம் ஆயிற்று. காரணம் பாட்டின் பொருள் கெடாமல், பொருத்தமான ராகத்தைத் தேர்ந்தெடுத்து, தாள நடையுணர்ந்து பாடலுக்கு ஏற்ற மாதிரியும்-கேட்பவர்மனதைக் கொள்ளை கொள்ளும் வகையிலும் அது சிறப்புற வர வேண்டுமல்லவா? தேர்ந்து, தேர்ந்து கடைசியில் தேஷ் ராகத்தில் அமைத்தேன். அதனை அடாணாவில் அமைத்திருந்தால், குழந்தைகூட ஓடிப்போயிருக்கும்.' என்று நகைச் சுவையாகக் கூறுவார். இசை, பாடலை சிறக்கச் செய்ய வேண்டும் என்பார். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து நுணுக்கமாக அறிந்து முடிவெடுப்பார்.

குருநாதரின் குரல் கம்பீரமாது. அவரின் குரலில் விரைவான சக்கதி களும், ப்ருக்காக்களும் அனாயாசமாகப் பேசும். அது அப்படி ஒரு மந்திரசக்தி படைத்த குரல். கடவுளின்கொடை. ஒரு நாள் தேசிகர் அய்யா என்னை அழைத்து, ‘மூன்றாம் ஆண்டு முடிந்து நான்காம் ஆண்டு போகப் போகிறாய். இன்னமும் ரவை சங்கதிகள் உன் குரலில் சரியாகப் பேச வில்லையே? சரி, இன்றிரவு என்னுடனேயே படுத்துக்கொள். காலையில் நான் சாதகம் செய்யும் முறையைச் சொல்லித் தருகிறேன்' என்றார். அதிகாலையில் என்னை எழுப்பினார். சுருதி காதில் விழுகிறது. கண்ணக் கசக்கிக் கொண்டு கனவில் நடப்பது போல நடந்தேன். சுரங்களை மிகச் சவுக்கமாகவும், வேகமாகவும் பாடினார். என்னையும் பாடச்சொன்னார். மேல் காலம் மிகவும் கஷ்டமாயிருந்தது. அவர் விடவில்லை. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தேவசேனா அம்மா ‘என்னங்க, தயவு செய்து உங்கள் சாரீரத்தில் பேசும் சங்கதிகளைப் பாடு என்று அவன்மேல் திணிக்காதீர்கள். படிபடியாகத்தான் கொண்டு வரவேண்டும்' என்று சொல்லவும். அதை ஒப்புக்கொண்ட குரு உடனே, ‘நாளை வா வேறு முறையில் சாதகம் செய்யலாம்' என்றார்.

     ஒருநாள், குரு, தேவசேனா அம்மா, நான் மூவரும் அமர்ந்திருக்கும் போது, குரு என்னிடம் சொன்னார் “கடமையைச் செய். பலனை எதிர் பார்க்காதே. உன்னுடைய உழைப்புக்கு உனக்கு ஊதியம் வரும். இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. இசை என்பது ஆழமான பெருங்கடல். அதுவும் நமது தமிழ் இசை என்பது காலங்கண்டறியாத பழமையான இசை. அதன் பெருமை அதிகம். முன்னொரு காலத்தில், இந்தியா முழுவதும் ஒரே இசைதான் இருந்தது. அது தமிழ் இசைதான். ஆரியரின் வருகைக்குப் பின் தான் மாறுதல் ஏற்பட்டது. அப்பொழுது தென்னிந்திய இசை, வட இந்திய  இசை -அதாவது ஹிந்துஸ்தானி இசை, திராவிட இசை அல்லது கர்நாடக இசை- தோன்றியது. வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வருவோர்க்கு முதலில் வரவேற்புக் கொடுப்பது கர்நாடகம். கர்நாடகத்தை முகப்பு வாயிலாகக் கொண்ட தமிழ் நாட்டின் இசை கர்நாடக இசை. இது ஒரு வரலாறு. இது தவிர, பழமை என்ற போருளிலும் கர்நாடகம் என்ற சொல் உபயோகப் படுத்தப்பட்டு இருக்கலாம். எனவே, நமது இசையின் பெருமை உணர்ந்து, தொன்மை அறிந்து அதன் இடர்பாடுகளை அறிந்து அவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும். தமிழ் இசை மேன்மையுற நாமெல்லலாம் கடினமாக உழைக்க வேண்டும். உழைக்க வேண்டிய பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது. பிறகு வருந்திப் பயனில்லை.

“இவ்வேளையில் உனக்கொன்று சொல்லுவேன். உன்னிடம் அன்போடு நடந்து கொள்கிறேன் என்ற காரணத்தினால், கடமையை செய்யாது, பாடங்களைப் பயிற்சி செய்யாது விட்டுவிட்டு, என்னிடம் நீ சிபாரிசுக்கு வரக்கூடாது. அது எனக்குப் பிடிக்காது.” என்றார். நானும் உடனே எந்தக் காரணம் கொண்டும் சிபாரிசுக்கு வர மாட்டேன் என்று சொன்னேன்.  அவர் மேலும் ‘கடின உழைப்புக்கு ஈடு இணை கிடையாது. எனவே குறுக்கு வழியில் புகழ்பெற எண்ணாமல், உழைத்து முன்னெறிப் பெரும்புகழ் எடுக்க வேண்டும். சிபாரிசில் கிடைத்தால் அது போலி. உண்மையானதாகாது. எதற்குப் பொய்? போலி? உண்மையே உன்னை உயர்த்தும் ஏணி,' என்றார். இதுவும் மறக்க முடியாததுதான் எனக்கு மட்டு மல்ல எல்லோருக்குமானது தானே?

தமிழில், தமிழ் இசையில், தமிழின் பொருள் உணர்ந்து பாடுவதில் அவருக்கு இணை அவரே. ஒருசமயம் நான் ‘அருள வேண்டும் தாயே, அங்கையற் கண்ணி நீயே எனக்கருள வேண்டும் தாயே' சாருமதி ராகத்தில் அமைந்த இந்தப்பாடலைப் பாடும்போது ‘எனக்கருள' என்னும் இடத்தில் எனக்(Ga)கருள வேண்டும் எனப்பாடினேன். ‘எனக்கருள' என்றுதானே பாட வேண்டும் நீ என்ன க (Ga)  என்று பாடுகிறாய்?' என்று விரைந்து வந்து திருத்தினார். தமிழில் ஒரு எழுத்தும் தவறாக ஒலிக்ககூடாது என்று நினைப்பவர். தேசிகர் இசை பாடிக்கொண்டிருந்த காலத்தில் வேற்று மொழிப் பாடல்கள் செங்கோலோச்சிக் கொண்டிருந்தன. அதைப் பொருட்படுத்தாமல் அந்த நேரத்திலும் எதிர் நீச்சல் போட்டுத் தமிழிசையை வளர்த்தவர் என் குருநாதர்.

அண்ணாமலை அரசர் அவர்களின் தமிழ் இசை இயக்கத்திற்கு தோளோடு தோள் கொடுத்து அத்தனை மாநாடுகளிலும் தமிழிசை பாடிப் பெரும் இசைப் புரட்சி செய்தவர் தேசிகர். அவர் ‘நாமார்க்கும் குடியல்லோம்' என்று பாடிய திருநாவுக்கரசரை குலகுருவாக மதிப்பவர். நாவுக்கரசர் மீது ஹேமவதி ராகத்தில் ஒரு அழகிய பாடலைப் புனைந்தவர். அது ஒரு கம்பீரமான பாடல். என் குரு நிறைய தமிழ்ப் பாடல்கள் புனைந்து தானே இசை அமைத்துப் பாடியுள்ளார்.

என் குரு தவறு தனது என்றால் அதை உடனேயே ஒப்புக்கொள்வார். அவர் ஒரு முறை அவருக்கு ஈழத்திலிருந்து ஒரு இசைக் கச்சேரிக்கு அழைப்பு வந்தது. கச்சேரி முடிந்து, பெரும் பாராட்டுகளுடன் தமிழகம் திரும்பியிருந்தார். மறுநாள் அவர் என்னைப் பார்த்து, ‘நான் சிலோன் போயிருந்தேன், தெரியுமா?' என்றார். ‘தெரியும்' என்றேன். ‘அவர்கள் ஏன் தமிழை இழுத்து இழுத்துப் பேசுகிறார்கள்? அங்கு சிவஞானரத்தினம் பேசும்போது ‘தேசிகர் கேதாரகௌளையை எடுத்துக் கொண்டு ஒரு சுழற்று சுழற்றினார் பாருங்கள்' என்று இழுத்தார் எனக்கு சிரிப்பு வந்தது,'என்றார். உடனே நான்'ஐயா, ஈழத்துக் காரர்கள் தமிழை இழுத்துப் பேசினாலும் தமிழ்தான் பேசுகிறார்கள். ஆனால் தமிழ் நாட்டிலோ நிறுத்திப் பேசினாலும் தமிழைக் காணோமே?' என்றேன். உடனே தேசிகருக்கு கடும் கோபம் வந்துவிட்டது. ‘நீ என்ன சொல்கிறாய்?' என்று வெகுண்டார். நானோ, ‘காலை எழுந்தது முதல் எத்தனை எத்தனை ஆங்கில சொற்கள் கலந்து இங்கு பேசுகிறார்கள்? குட்மார்ணிங், காபி, ஸ்டிராங், டிபன், போஸ்ட் ஆபீஸ், லெட்டர், லைட், லெப்ட், பஸ் கூல்டிரிங் எத்தனை எத்தனை? இவையெல்லாம் தமிழா? தமிழ் சொற்கள் இருக்கும் போது அவைகளுக்குக்கூட ஆங்கிலச் சொற்கள்தான். இது தானே நடைமுறையாய் இருக்கிறது இங்கு?' என்றேன். உண்மையை உணர்ந்த தேசிகருக்குக் கோபம் பறந்து போனது. சிரித்தார். தான் பேசியது தான் சரி என்று வாதிடவில்லை.


     தேசிகர் கச்சேரிக்கு ஒப்புக்கொள்வதென்றால், கச்சேரிக்குப் பேசிய தொகையில் பாதியை ஒப்பந்தம் செய்யும்போது கொடுத்துவிட வேண்டும். மீதியை கச்சேரி முடிந்ததும் மேடையிலேயே தர வேண்டும். தங்குவதற்குத் தனி வசதி கொண்ட இருப்பிடம் கொடுக்க வேண்டும். மின்விசிறி, குளிப்பதற்கு வெந்நீர், உணவு வகை எல்லாமே சொல்லி விடுவார். அவை களுக்கு ஒப்புக்கொண்டால் சரி என்பார்.

சிதம்பரம் டி.நடராஜ தீட்சிதர் சங்கீதவித்வான் என்பதெல்லாம் முன்ன மேயே சொல்லி இருக்கிறேன். ஒருநாள் அவர் பிரகாரம் சுற்றி வரும் பொழுது மடைப்பள்ளி மண்டபத்தில் வலப்பக்க மூலையில் ஒரு பெரிய கல் தூண் சாந்தினால் பூசி மறைக்கப்பட்டிருந்தது. தீட்சிதர் அதன் அருகே போய்த் தட்டிப்பார்த்தார். பிறகு என்ன தோன்றியதோ என்னமோ மரச்சுட்டி ஒன்று எடுத்து வரச்சொல்லி, லேசாக ஒரு இடத்தில் தட்டிப் பார்த்தார்.  அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் ஆண்டவன் உருவம் தென்படலாயிற்று. அதனை அத்துடன் நிறுத்திவிட்டு அதே சிந்தனையுடன் இரவு முழுக்க இருந் திருக்கிறார். அதைப்பற்றியே எல்லோருடனும் பேசியிருக்கிறார். மறு நாள், தைப்பூசத்தன்று இரவு மிகவும் கவனமாகச் சிறிது சிறிதாக சாந்துப் பூச்சுக்கள் நீக்கப்பட்டன. ஆச்சரியம்! கால சம்ஹார மூர்த்தியின் தோற்றம் ஒரு பக்கம், ரிஷபத்தில் பார்வதியுடன் பரமசிவன் மறு பக்கம். உடனே அதற்கு எண்ணெய் தடவி ஆடை தரித்தனர். 48 நாட்கள் மண்டலாபிஷேகமும் விமர்சையாகச் செய்ய ஆரம்பித்தனர். 48 நாட்களும் மாலையில் இசைக் கச்சேரிகள். என்னைக் கண்ட நடராஜ தீட்சிதர், ‘முத்து ஏன் தண்டபாணி தேசிகரை இங்கு பாடவைக்கக் கூடாது? நீங்கள்தான் அவரை அழைத்து வர வேண்டும்' என்றார். ஆனால் அது கடினமான பணி என்று எல்லோருக்கும் தெரியும். அவருக்கு தீட்சிதர்கள் என்றாலே பிடிக்காது. கோபம் வரும். கடுமையாகத் திட்டுவார். ஆனாலும் நான் இதைச் செய்ய வேண்டும் என்று தீட்சிதர் விரும்பினார்.

மறுநாள், நான் குருவிடம் சென்று தூணில் இருந்த ஆண்டவரின் வடிவங்கள் பற்றி பேசினேன். கேட்டுக் கொண்டு இருந்தார். கச்சேரிகள் நடை பெறுவதைப்பற்றியும் சொன்னேன். அப்படியா என்று கேட்டார். மிகுந்த பயத்துடன் நீங்களும் அங்கு கச்சேரி செய்ய வேண்டும் என்றேன். வந்ததே கோபம். ‘ஏ! என்ன பேசறே? தீட்சிதர்கள் என்னை மதிப்பதே இல்லை. அங்கு வந்து என் மானத்தைப் போக்கிக் கொள்ளவா?' என்று  கடுமையாகப் பேசினார். ‘உங்கள் இசையைக் கேட்க அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதற்காக ஒரு தீட்சிதர் கூட்டமே முயல்கிறது. அவர்களே நேரில் வந்து அழைக்கிறோம் என்கிறார்கள்' என்றும் கூறிப்பார்த்தேன். ‘என்னம்மா இவன்?' என்று தேவசேனா அம்மாவைப் பார்த்தார். ‘தீட்சிதர்களே வந்து அழைத்தால் கௌரவமாக நீங்கள் சென்று பாடிவிட்டு வாருங்கள்,' என்றார் அம்மா. ‘சரி, எனக்குப் பணம் எதுவும் வேண்டாம். நீயே வண்டி வைத்துக் கூட்டிக்கொண்டு போய், கச்சேரி முடிந்ததும் திரும்ப அழைத்துக்கொண்டு வந்து விடவேண்டும். நேரே மேடை, நேரே வீடு.' என்றார். ஒரு தட்டு நிறைய பழங்கள், வெற்றிலை பாக்கு, மலர் மாலை, சாதராப்பட்டு, விபூதி பிரசாதம் எடுத்துக்கொண்டு தீட்சிதரும் நானும் நேரே வண்டி வைத்து தேசிகரை வீடு சென்று அழைக்கச் சென்றோம். வீடு சேர்ந்ததும் நான் உள்ளே ஓடி குருவிடம் சென்று தீட்சிதர் கோவில் செகரெட்டரி அழைக்க வந்துள்ளார் என்று சொல்லவும், அவரே கதவருகே வந்து, ‘வாங்க, வாங்க' என்று வரவேற்றார். தம்பதி சமேதராக அவர் களுக்குப் பட்டு அளித்து ‘நீங்கள் நடராஜர் கோவிலில்பாடிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் வந்து பாடவேண்டும் என்று எங்கள் எல்லோரின் விருப்பம்,'என்றார் செகரெட்டரி. ‘ஆஹா, இறை வனுக்குப் பாடக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று ஒப்புக் கொண்டு அதே போலப் பாடவும் பாடினார். அன்றைய கச்சேரி மிக நன்றாக அமைந்து எல்லோரையும் மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கோவிலைச் சார்ந்தவர்கள் பிரசாதத்துடன் பணமும் வைத்துக் கொடுக்க, அதை வாங்க மறுத்தார் குருநாதர். அவர்களோ, ‘நீங்கள் பாடியது கோடி பெறும். இதை நடராஜர் பிரசாதமாக ஏற்றுக் கொள்ளுங்கள்' என்றவுடன் மறுப்பேதும் கூறாமல் எடுத்துக்கொண்டு பெருமைப் படுத்தினார். வீட்டில் அம்மாவிடம் ‘என்னம்மா இவன், இது எத்தனை பெரிய சாதனை?' என்று என்னைப் பாராடினார். பணம் சரியானபடி தர வேண்டும் பேசிய தொகை வர வேண்டும் என்று நினைப்பவர் குரு. ஆனால் பணம் மட்டுமே தான் உலகம் என்று எண்ணுபவருமல்ல. இதுவும் என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி.

இசையில் ஈடுபாடு, தமிழில் மாறாக்காதல் -தேவார திருவாசகம் திருப்புகழ் பாடல்களைப் பாடுவதில் தனெக்கென ஒரு தனித்துவம் கொண்டவர் தேசிகர். எனக்கும் அவரைக் கண்டதுமுதல் ஒரு மதிப்பும், மரியாதையும் என்னுள் என்னையறியாமலே தோன்றியது. அது, ஒருதளிர் செடியாவதைப் போல தினமும் சிறிது சிறிதாகத் தழைத்தது. என்னுள் என்றும் நீங்காமல் இருப்பவர் என் குரு. அவர் எனக்கு வாய்த்தது நான் செய்த தவமே. ஒரு மகனைபோல பரிவுடன் நடத்தினார். என் மீது ஏன் இவ்வளவு அன்பு என்று வியக்காத நாள் இல்லை. அவரது பெருமை எல்லாவற்றையும் முழுவதுமாகப் பகிர வேண்டும் என்ற பேரவா இருந்தாலும் ஒரு சிறு துளி அளவு உங்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். படிக்கும் உங்களுக்கும் என் குருநாதரைப் பற்றிய சிறு சித்திரம் தெரியவரும். குரு சிஷ்யன் உறவென்பது புனிதமானது. குருவின் வழி காட்டலிலே தன்னை ஈடுபடுத்தி நடந்து கொள்ளும் சீடன் எதிர்காலத்தில் பிரகாசமடைவான். நிழல் போல் குருவருள் சீடனை நடத்திச் செல்லும். எனது குருநாதர் எம். எம். தண்டபாணி தேசிகர் இதற்கு இலக்கமாய் அமைந்தவர்.

ஓதுவா மூர்த்தியாக இருந்த நாளில், அதிலும் ஒரு உன்னத இடத்தில் இருந்தவர். ஓதுவார்களுக்கே அவரால் பெரும் மதிப்புக் கிடைத்தது. பின் இசைக் கச்சேரிகளின் மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களையும் கவர்ந்தவர். உலகம் முழுவதும் தமிழ் மக்களின் நன் மதிப்பைப் பெற்றவர். அவரை தேடி பல இசை மேதைகள் வருவார்கள். அவருள் மதுரை சோமசுந்தர பட்டர், விளாத்திக் குளம் சுவாமிகள், மதுரை மாரியப்ப சுவாமிகள் ஆகியோரும் சிலர். சினிமாத் துறையில் தனக்கு ஒரு தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தேசிகர். அருமையாக நடித்து நந்தனார் படத்தை இன்றளவும் பேச வைத்தவர். வித்வான்கள் ஏ.கே.சி.நடராஜன், காருக்குருச்சி அருணாசலம் போன்ற பலரும் அவரக்க் காண வருவார்கள். ‘தாமரைப் பூத்த தடாகமடி', ஜகஜ்ஜனனி, இன்பகனா, ஐயே மெத்தக் கடினம், பாட்டுக் கொரு புலவன் பாரதியடா, வெண்ணிலாவும் வானும் போலே,துன்பம் நேர்கையில், எனப் பலப்பல பாடல்கள் இன்றளவும் மனதில் நிற்கின்றன.

எனது மாணாக்கர்கள் மாணிக்கம் யோகேஸ்வரன் (இலண்டன்), உமா சற்குணம் (கனடா), கலா யோகராசா (இலண்டன்), ச.பார்த்தசாரதி, தவிர இன்னமும் பலர் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

எனது மூத்த மகன் கலாதரன், கனடாவில் நாடகம், நடிப்பு மற்றும் பொத்துத்துறை ஊடகங்கள் நடத்தி வருகிறார். இன்னொரு மகன், பத்மவாசன்  ஓவியக் கலைஞர்களில் குறிப்பிடும்படியானவர். சமயம் மற்றும் வரலாற்று ஓவியங்கள் வரைபவர். மகள் கீதா சுரேஷ் கலாக்ஷேத்ராவில் வீணை பயின்றவர். சாரங்கன், செந்தில்குமார் இரு மகன்களும் கணினியில் தேர்ச்சி பெற்று ‘லாண்ட் மார்க்'கிலும், எஸ்.எஸ்.ம்யூசிக்கிலும் பணி புரிகின்றனர். 


   
 
 

No comments: