Thursday, October 27, 2011

பிறை சூடா பித்தி(சிறுகதை)

பிறை சூடா பித்தி

முதலில் நான் உணர்ந்தது என்னுடைய இடையில் மிகச் சிறிய ஒட்டுத் துணியுடன் மட்டுமே தார்ச் சாலையில் நடந்து கொண்டிருக்கிறேன். தார்ச் சாலையின் சூட்டில் கால்கள் சுடுகின்றன. சூட்டின் மீது கவனம் விழுந்தாலும், உடையற்று நான் திரிவது மேலோங்கி நிற்கிறது. சுற்றிலும் யாரும் என்னைக் கண்டு அதிர்ச்சி அடையவோ அல்லது உடை கொடுக்கவோ முற்படவில்லை. எல்லோரும் ஏதோ வேலைகளை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கின்றனர். தார்ச் சாலை சூட்டை எப்படித் தணிப்பது என்ற குழப்பம், சற்றே மணலில் மாற்றி நடந்தால் தீர்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் சாலையின் ஓரத்தில் சிதறிக் கிடக்கும் மணல் மீது வெற்றுக் கால்களைப் பதிய வைக்கிறேன். சூடு அதிகமாக உணர முடிகிறதே தவிரக் குறையவில்லை. கால்களின் சூட்டையும்விட ஆடையற்ற அவமானம் மேலோங்கி நிற்கிறது. என் உடலை நானே உற்று நோக்குகிறேன். நான் எண்ணுவது போன்றன்று, வற்றிச் சுருங்கி, கருத்து, யாரோபோலத் தோற்றம் தந்துகொண்டிருக்கிறது. உறக்கத்திலிருந்து திடீரென விழித்தாற்போல உலகம் எனக்கு தோற்றம் தருகிறது. தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள் எனக்கு பரிச்சயமற்றுத் தெரிகின்றனர். நடுத்தர வயதுடையோர், முதியோர் யாருமே எனக்குத் தெரிந்தவர் இல்லை போலும். யாரையுமே அடையாளம் காண இயலாமல் திரிகிறேன். தலை மீது தன்னிச்சையாகக் கை விழுகிறது. அடர்ந்த நீண்ட கூந்தல், அதன் பெருமிதம் ஒருசேர என்னிடம் நிமிர்ந்து நிற்கும். தலையின் மீது வெற்றுத் தோல் மிதக்கிறது. வெற்று கால்கள், வெற்று உடம்பு, வெற்றுதலை.

சாலையோர மரங்களும், சில வீடுகளும் எனக்கு அடையாளமாகிறது. நடக்கும் தெரு பரிச்சயமாகிறது. அசையும் உயிர்களில் தெளிவற்ற நான், அசையா உயிர்களில் என்னையும் அவற்றையும் இணைத்து அடையாளம் காண்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக உறக்கத்திலிருந்தது, இப்போது விழித்ததற்கும் இடையிலான காலம் சரியாக கணக்கிடப்பட முடியவிலை என்றாலும், ஓரளவுக்கு புரியத் தொடங்குகிறது.

தலையில் முடியெல்லாம் புழுக்களாக மாறி, என் உறக்க காலத்தில் என்னுடைய தலையை எப்போதும் துளைத்துக் கொண்டே இருந்தன. எனவே அவற்றை ஒவ்வொன்றாக பிடுங்கி எறிந்தேன். தரை புழுக்களால் நிரம்பத் துவங்கியது. புழுக்கள் என் மீது மறுபடியும் ஏறி ஏறி திரும்பவும் தலையில் வந்து அமர முயல்கின்றன. தலையில் ஓட்டையிட்டு குத்திட்டு நிற்க ஆரம்பிக்கின்றன. புழுக்களைக் கண்ட காகங்கள் உற்சாகமாக தலையிலமர்ந்து கொத்தித் தின்ன ஆசை கொள்கின்றன. கையில் கோலுடன் காக்கைகளையும், புழுக்களையும் விரட்ட ஆரம்பித்தேன். தலையில் ஓயாத துளையிடும் சப்தத்தையும், துளையிடுவதால் உண்டாகும் வலியையும் எத்தனை நேரம் பொறுத்துக் கொண்டிருப்பது? உடையின் மீதாக ஏறிச்சென்று தலையை அடைய முயலும் புழுக்களுக்காக உடையை உதறி அவிழ்த்தெறிவேன். இலைகளை கட்டி எடுத்து தரையைப் பெருக்கி எல்லாவற்றையும் நெருப்பிட்டுக் கொளுத்த வேண்டும். இப்போதுதான் தரையைப் பெருக்கத் துவங்கி இருந்தேன். ஓயாமல் புழுக்கள். ஓயாமல் துடைப்பம். ஓயாமல் காக்கைகள். ஓயாத மக்கள் என்னைச் சுற்றி வட்டமிட்டபடி. புழுக்கள் அங்கும் இங்குமாக ஓடத்துவங்க, நானும் தப்பிக்க முன்னே ஓடத்துவங்குவேன்.

இன்றுவரை ஓடிக்கொண்டே இருந்திருக்கிறேன் என்பதை விழித்தெழுந்த நான் கனவு போல உணரத்தொடங்குகிறேன். உறக்கத்திற்கும் விழிப்புக்குமான இடைப் பட்ட காலம் என்பது எனது வளமான அங்கங்களிலிருந்து, வறண்டு சுண்டிப்போனது வரையிலானதாக காலமாக இருக்கிறது. சிறிது சிறிதாக நான் என்னை உணர்கிறேன். எனது வீடு, எனது தெரு, எனது குடும்பம் எல்லாமே மேலேறி கிளர்ந்து நினைப்பின் மேல் அடுக்கில் வந்து அமர்கிறது. யாரோ ஒருவர் மேல் துணி கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால், அணிந்திருக்கும் ஒற்றை உடையைத் தவிர ஏதுமற்றுத்தான் திரிந்து கொண்டிருக்கிறார்கள் போலும். எல்லோரும் இல்லை என்கின்றனர். இதற்குள் விழிப்புற்ற என் உடலின் ஆடையற்ற நிலை என்னுள் இயல்பாகி போகிறது. யாரும் கவனிக்காத, அல்லது கவனிக்கத் தேவையற்றதான நிர்வாணத்திற்காக நான் ஏன் அல்லலுறவேண்டும்? கால்கள் தரையில் பரவ, ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நான் எனது அறிமுகமான தெருக்களின் இடையே நடந்து செல்கிறேன். சூடுடனும், சூடற்றும் பாதங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன, எனது வீட்டின் முன் நிற்கும் வரை.

வீடு அழிக்கப்பட்டு விட்டிருக்கிறது. வீட்டின் மக்களின் நினைவுகளிருந்தும் நான் அழிக்கப்பட்டும் நெடுங்காலமாகி விட்டிருக்கிறது. எனது அடையாளத்தை நான் உணரவும், என்னை அடையாளம் காணப்படவுமாக நான் எனது தாயைத் தேடுகிறேன். தாய் உடன் பிறப்பின் இடத்தில் இருப்பதாக அறிகிறேன். நெடுந்தூரம் நடந்து அடைய வேண்டிய தொலைவில் இருக்கும் சகோதரன் வீட்டிற்கு செல்ல வாகனம் ஏற முற்படும் பொழுதுதான் எந்த வாகனமும் காசற்றுக் கிடைக்காது என்பதையும் அறிவு மேலடுக்கிற்கு அனுப்புகிறது. கையில் கைப்பை, காசிருக்கும் பர்ஸ், அனுமதிச்சீட்டு, முகவரிக் காகிதம் ஏதுமற்று வெற்றுக் கைகளாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன இருபுறமும்.

திரும்பவும் நடக்கத் தொடங்குகிறேன். சாலையோரம் எறியப் பட்டிருந்த சிறு துணித் துண்டெடுத்து என் மேல் உடலைப் போர்த்திக் கொள்கிறேன். மிகப் பெரிய ஆசுவாசம் கிடைக்கிறது. சற்றே அமைதியும். அறிந்த பாதையிலும், அறியாத பாதையிலுமாக எனது பயணம் தொடர்கிறது. கால்கள் சோர, வெற்றுடம்புடன் வெற்று வயிறும், வெற்றுக் கால்களும் காய அன்னையைக் காண்கிறேன்.

உடன் பிறந்தவன் வீட்டில் மிகப் பெரிய கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. பெரிய பெரிய அடுப்புகள், பெரிய பெரிய எண்ணெய் சட்டி. எல்லோரும் முகங்களின் மீது மகிழ்ச்சியை அப்பிக்கொண்டு அலைந்து திரிந்துகொண்டு இருக்கின்றனர். ஆனால் யாருக்கும் என்னை அடையாளம் தெரிய வில்லை. அன்னையின் முன்பாக நிற்கிறேன். அவளும் அடையாளம் கடந்த வயோதிகத்தில் இருக்கிறாள்.

திடுக்கிட்டு அறுவருப்புடன் ஏறிட்டுப் பார்க்கிறாள் அவள். என்னைக் கண்ட அதிர்ச்சி முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. “இந்தப் பைத்தியம் இப்போது இங்கே எப்படி? “வா, வா, எப்படி வந்தாய்?” விசாரிப்பு ஊட்டப்பட்ட செயற்கை மகிழ்ச்சியுடனும், முகம் ஏற்காத பாவனையிலும், உடனே அப்புறப்படுத்தும் எண்ணத்திலும் இருக்கிறது. பைத்தியம் என்ற ஒற்றை சொல் என் மனதின் குழப்பத்தைத் தெளியச் செய்கிறது. நான் உறக்கத்தில் இருந்ததாக எண்ணிக் கொண்டிருக்கிறேன். இவர்களுக்கோ அது பித்தென்று புரிகிறது.

வெற்றுக் கால்களுக்கும், வெற்றுடம்பிற்கும், வெற்றுக் கைகளுக்கும், வெற்று வயிற்றிக்கும் காரணம் சற்றே புரிபடத்துவங்குகிறது. ஒளி பொருந்திய முகத்தை ஏந்தியபடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த முகங்கள் மங்கிப் போகின்றன. சங்கடமாக நெளிகின்றனர். என்னாலும் என்ன செய்வதென்று தீர்மானிக்க முடிய வில்லை. திகைக்கத்தான் முடிகிறது. என்னை எதிர்கொள்ளும் நிலையில் அங்கிருந்த யாருமே இல்லை அன்னையையும் சேர்த்து. ஏற்றுக் கொள்ளவும் முடியாது என்ற உண்மையும் புரிகிறது.

மனதிற்குள் கடல் பெரும் ஓசையை எழுப்புகிறது. கடல் பொங்கி, பொங்கி எனது எல்லா துவாரங்களின் வழியாகவும் வெளியேறத் தொடங்குகிறது. நீராக வழிகிறது கடல் என்னிலிருந்து. நீர் கீழிறங்கத் துவங்குகிறது. வெளியேற்றப்பட்ட நீரின் தாரை அறையில் பரவுகிறது. எல்லோரையும் அது கவலை கொள்ளச்செய்கிறது. விழாக் கோலத்தை மாற்றி அமைக்கவோ, நான் திரும்பி வந்ததை விழாவாக அறிவிக்கவோ அங்கு யாரும் தயாராக இல்லை. நான் பெருக்கெடுத்து ஓடும் என்னுள் ஓங்கும் கடலை ப்ரும்ம முயற்சிக்குப் பிறகு என்னுள் திரும்பவும் எடுத்து அடைத்துக் கொள்கிறேன்.

ஆனாலும் ஆடை ஒன்றாவது எனக்குக் கொடுக்கும் படி அங்கிருக்கும் உறவு அனைத்திடமும் கெஞ்சியபடியே இருக்கிறேன். விழா நாயகிக்கோ எனது வற்றல் உடலுக்கும், அவளது பூரித்த இளம் உடலுக்கும், எந்த விதத்திலும் ஒப்பிடமுடியாத சந்தேகம் இடையே நெளிகிறது. “உன்னுடைய சிறுவயது உடை ஏதாவது இருந்தால் எனக்குக் கொடு. மேலங்கி இவ்வளவு நீளமாக வேண்டாம்.” கொடுக்கப்பட்ட உடையை அங்கேயே அணிந்து கொள்கிறேன். மேலிருக்கும், இடுப்பிலிருக்கும் துண்டுத் துணிகளை உதறிவிட்டு. அனைவரும் அபாயகரமாக உணர்கின்றனர். ஆடையை அணிந்து கொள்வேனோ, அல்லது உதறிய நிலையில் நடுக்கூடத்தில் அமர்ந்து விடுவேனோ என்று. எனக்கு விழிப்பு ஏற்பட்டு விட்டது என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், என்னாலும் நிரூபிக்க முடியவில்லை. உடை அணிந்து, அதுவும் சரியான முறைப்படி அணிந்து கொண்டவுடன் எல்லொருக்கும் பெரிய ஆசுவாசம்.

பசி உணரத்தொடங்குகிறேன். விதம் விதமான பலகாரங்கள் அடுக்கப் பட்டவைகளிலிருந்து கையேந்திக் கேட்கிறேன். முகச் சுளிப்புடன் அளிக்கப் படுகிறது. ஆனாலும் ஆறுதலாய் உணர்கிறேன். எனது உறக்கதுக்கான காரணத்தை அன்னையிடமாவது கூற மனம் விழைகிறது. கூற முற்படும்போது வரவேற்பு அற்றதுடன், எதிர்ப்பும் காட்டும் முகத்தைக் காண்கிறேன். “அம்மா என்ன ஆயிற்று? என்று எனக்குப் புரிந்தவரை கூறட்டுமா?” எதையும் கேட்கப் பொறுமையற்ற முகங்கள். எங்காவது பூமியின் அடியில் என்னை ஒளித்து வைத்துவிட்டு தங்கள் கொண்டாட்டத்தை தொடர தயாராகிறார்கள். நானோ, சொற்கள் கோர்வையற்று உரைக்கிறேன்போலும், இன்னமும் தெளிவாக விளக்க முற்படுகிறேன். எதிரில் ஏந்துகிற கைகளற்ற வெற்றுச் சொற்கள். வீடெங்கும் இரைந்து கிடக்கின்றன. உறக்கத்திலும் இப்படித்தான் ஓயாமல் சொற்களை வீசினேனோ? என் விழிப்பின் அடையாளம் காக்கவேண்டும் என்றால் சொற்கள் அரிதாக வெளியேற்றப்பட வேண்டும். ஆனாலும் என் விழிப்பின் நிலையை, உறுதியை சொற்களைத் தவிர வேறு எதை நான் நம்ப இயலும்? எனது சொற்களோ கேட்பாரற்றுப் பாதாளச் சாக்கடையிலிருந்து, அடைப்பை நீக்கி வெளியேற்றப்பட்டு குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் துர் நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது.

“எனக்குக் குளிக்க வேண்டும். தயவு செய்து உதவுங்கள்.” “குளிப்பதற்கும், குடியிருப்பதற்கும் முற்படாதே. ‘சாப்பிட்டாயிற்றென்றால் இடத்தைக் காலி செய் விழாக்காலத்தில் சனியன் போல இது ஏன் இப்போது வந்து கழுத்தை அறுக்கிறது?'

‘அடர்ந்த கருங்கூந்தலோடு என்னை அனுப்பினாயே அம்மா, கணவன் வீட்டிற்கு. எல்லாக் கூந்தலும் புழுக்களாக மாறியது எந்த நாள் என்று நான் கூற வேண்டாமா? எல்லாப் புழுக்களையும் எவ்வளவு கஷ்டத்துடன் எடுத்து எறிந்தேன் என்று நீ அறிய வேண்டாமா? அதை நான் உன்னோடு பகிர்ந்து கொள்ள வேண்டாமா?'

‘இதோ பார். இங்கு இன்னொரு தலைமுறையின் முதல் திருமணம் நடக்க இருக்கிறது. பார் அவளை, எவ்வளவு அழகோடும், இளமை பொங்கும் அங்கங் களோடும் சுற்றித் திரிந்துகொண்டு இருக்கிறாள் என்பதை. வாருங்கள் பெண்களே! அக்கம் பக்கம் அழைக்க வேண்டும். எவ்வளவுதான் பார்த்து பார்த்துச் செய்தாலும், முக்கியமானவர்கள் விடுபட்டு விடுவார்கள். வாருங்கள் அழைக்கப் போகலாம்.'

பளபளப்பான உடைகளில் ஒரு குழு அழைக்கக் கிளம்புகிறது. என்னுள்ளும் உற்சாகம் பொங்கி வருகிறது. ‘நானும் கூட வருகிறேன். எனக்கும் எல்லோரையும் பார்த்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன. பல முகங்கள் மறந்து கூட போய்விட்டது. எவ்வளவு கால உறக்கம் கணக்கில்லாமல். இவளாவது உறக்கத்திற்கு ஆளாகமல் விழிப்புடனேயே எப்போதும் இருக்கும் படியான வாழ்வு அமைத்துக் கொடுப்பீர்களா? நான் பங்கு கொள்ளாமலா அழைப்பு? எனக்கும் நல்ல உடை கொடுங்கள். எல்லா தவறுகளுக்காகவும் உங்கள் அனைவரின் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.'

திரும்பவும் தெருவோரத்தில் குவிக்கப்பட்டிருக்கும் பாதாளச் சாக்கடையின் கழிவுக் குவியலைப்போல என்னை அனைவரும் பார்க்கின்றனர். நான் விழித்து விட்டவள் என்று நிரூபிக்க நான் செய்யும் முயற்சிகள் அனைத்துமே, புதைகுழிக்குள் எம்பித் தவிக்கும் ஒரு கனத்த உடல் இன்னமும் இன்னமும் மூழ்கிப் போவதை ஒத்ததாக முடிகிறது.

குடும்பத்தில் ஒரு பெண் மட்டும் என்னை அழைத்துச் செல்வதாக வாக்களிக்கிறாள். முகம் கழுவ குளியலறை செல்கிறேன். அங்கு இருக்கும் சீயக்காய்த் தூளைப் பார்க்கிறேன். கரு கருவென்று நீண்ட அடர்ந்த கூந்தலை குளித்து அலசி உதறி விரித்துப் போட்டால், உடலும் உலகமும் மயங்காதோ? தண்ணீரில் கரைத்து எடுத்து அப்பிக் கொண்டு வெளியில் வருகிறேன். நீரற்ற குளியல் அறையில் எப்படி குளிப்பதாம்? தண்ணீர் வேண்டும். குளிக்கத் தண்ணீர் வேண்டும். எடுத்துத்தாருங்கள். கண்கள் எரிகின்றன என்று அலறுகிறேன். அலற அலற எரிச்சலும், பயமும் என்னை நோக்கிப் பாய்ந்து வருகிறது.

முன் நின்ற ஒருத்தி வந்து ‘என்னுடன் வா. தண்ணீர் இருக்கும் இடம் காண்பிக்கிறேன்', என்று சொல்லி நான் அடைய முடியா வேகத்துடன் முன்னால் ஓடிக்கொண்டே இருக்கிறாள். நானும் பின் தொடர முயன்று ஓடிக் கொண்டே இருக்கிறேன். படிகளைக் கடந்தும், படிகளில் ஏறியும் பின் இறங்கியும், பின் சம தளத்தில் நடந்தும் செல்கிறாள். ஓடி ஓடிப் பின் தொடர்கிறேன். ஆனாலும் தண்ணீரும் குளியலறயும் மட்டும் காணவே இல்லை. இன்னமும், இன்னமும் நடை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நெடும் தொலைவு கடந்த பின்னே ஒரு பூட்டப் படாத கதவு காணக்கிடைக்கிறது. அப்பெண் அக்கதவருகில் புன்சிரிப்புடன் நின்று கொண்டிருக்கிறள். நான் அவள் அருகில் செல்லும் வரை அக்கதவு திறக்கப் படாமல் எனக்காகக் காத்துக் கிடக்கிறது. நான் சென்ற உடன் கதவு திறக்கப் பட்டு சட்டென்று பின் அறைந்து மூடப்பட்டும் விடுகிறது. ‘பக்கெட் எங்கே? தண்ணீர் எங்கே? என்று நான் தேடத் துவங்க அது அறையே இல்லை. அது ஒரு தெருவின் முனை.

ஆட்கள் அரவமற்ற அத்தெரு நீண்ட நெடும் தார்ச்சாலை கொண்டதாய் இருக்கிறது. அது முடிக் கற்றைகளாய் மாறி சீயக்காய் படிந்த என் தலையினுள் உள் நுழைந்து தொங்க ஆரம்பிக்கிறது, கரும் பாம்பென அலை அலையாய்.

மனம் கொள்ளாப் பெருமிதத்துடன் எனது ஆடைகளை ஒவ்வொன்றாய் வீசி எறிகிறேன். பொங்கும் அங்கங்கள் தளும்பித் ததும்புகின்றன.
க்ருஷாங்கினி

{ அணங்கு-இதழ்/7-அக்டோபர்-டிசம்பர்-2009 }

Wednesday, October 26, 2011

இடப்பெயர்ச்சி (சிறுகதை)

இடப்பெயர்ச்சி



பாட்டியின் ஓயாத அறிவுரைகளும் எனது சந்தேகங்களுக்குமாக பந்துபோல எழும்பி எழும்பி திரும்ப வருகிறது இருவரிடமும்.

'எச்சப்பண்ணாதேடீ! வாழபழத்த கடிச்சுத்தான் திங்கணுமா? உரிச்சுப் பிச்சுப் போட்டுக்கோ'

'அப்போ முறுக்க கடிக்கலாமா பாட்டி'

'அதயும் விண்டுதான் வாயிலே போட்டுக்கணும்'

என்ன பாட்டி, எப்பப்பாத்தாலும் என்ன எச்சப்பண்ணாதேடீ, எச்சப் பண்ணாதேடீன்னுண்டே இருக்க'

'எச்ச எறக்க அடிக்கும், பத்து பறக்க அடிக்கும்டீ பொண்ணே'

'எந்த வயசு வரைக்கும் பாட்டீ?'

ஆயுசு முழுக்கவுந்தான்'

அண்ணா கடிச்சுத் திங்கறானே பாட்டீ'

'அதான் நீ அதைத் தொடச்சிடறேயேடீ ஜலம் தெளிச்சு'

'அண்ணா எச்சப் பண்ணலாமா?'

'எதுத்துப் பேசாதேடீ, அவன் ஆம்பள.'

'ஆம்பளேன்னாக்க எச்ச ஒசத்தியா?'

'பொம்மனாட்டிக்குட்டி எல்லாத்துக்கும் கேழ்வி கேக்கப் படாது.'

‘ஏன் பாட்டி?'

அதுக்குங்கூடவா கேழ்வி கேப்போ? ஈஸ்வரா! இந்தப் பொட்டகுட்டி எப்படித்தான் இன்னொரு ஆத்துக்குப் போயி காலந்தள்ளப்போறதோ? நீ தான் காப்பாத்தணும்.

'ஏ குட்டி! பரமாற வா, அண்ணாவும் அப்பாவும் சாப்படணும் பாரு, சாதம் போடு.'

'சரி'

'இதோ பாரு, கால அகட்டி வச்சிண்டு பரமாறப்படாது. கால ரெண்டையும் சேத்தி வச்சுக்கோ. இடுப்பக் குனிஞ்சு பரமாறு. உட்காந்துண்டு பரமாறக்கூடாது. கால சேத்தி வையி'

'பாட்டி, நான் ஒருநா அப்பாவோட சாப்பட உக்காந்துக்கறேனே, அண்ணா பரமாறட்டுமே எனக்கும்'

வாய மூடுடீ.'

‘குட்டி சாதத்த தூக்கிப் போடு. எச்சத்தட்டுலே இடிச்சுடப்போறது'

‘சரி, பாட்டி'

'கொழம்ப உசத்தி ஊத்த்துடீ, தட்டுலே கரண்டி இடிச்சுடப்போறது.'

'ஏன், பாட்டி'

'கரண்டி எச்சலாயிடும், அத அலம்பிட்டு அப்பறமாத்தான் கொழம்புலே போடணும்.'

''ஏம்பாட்டி?கரண்டி வழியா கொழம்பு தட்டுலே விழறதே? அப்ப எச்சல் ஒட்டிக்காதா? அப்பறமா அதே கரண்டியத்தானேத் திரும்ப கொழம்புலே போடறோம்?அப்ப முழுக் கொழம்பும் எச்சத்தானே?'

'ஒன்னோட யாரு மல்லுக்கு நிக்கறது? எப்பப்பாத்தாலும் கேள்வி, கேள்விக்கு எதிர்க்கேள்வி. கேள்விக்கு கேள்வி, எதிர் வாதம். விவாதம். நன்னாத்தான் வளத்தினா பொண்ண, உங்கம்மா?'

'ஏன் பாட்டி நான் நன்னாஇல்லயா? இதோ பார் பாவாட, சட்டை எல்லாம் போட்டுண்டு நன்னாத்தானே இருக்கேன்?'

'நாம்போறேண்டியம்மா, அந்தாண்ட, என்னால முடியாது.'

சில நிமிடங்களில் திரும்பவும் பாட்டி,

' ஏய்! குட்டீ, இங்கவாடீ. சோத்தபோட்டுட்டு, மோர ஊத்திட்டு ஓடாதேடி. எச்சலிடனும், பாரு.'

'சரி'

'தோ பாரு, கால ரெண்டையும் சேத்தி வச்சுக்கோ. இப்படி இடுப்ப குனி. எச்சலிடறதுக்கு முன்ன, பாவாடய தூக்கி இடுப்புலே சொருகிக்கோ. இடது கையால ஜலப்பாத்திரத்த வச்சுக்கோ, ஜலத்த கொஞ்சங்கொஞ்சமா ஊத்து. அத வலது கை நாலுவிரலாலெ இப்படியும் அப்படியுமா இழுத்துண்டு வா, மொழுகற மாதிரி,'

'பாட்டி, கைய எரியறது. வெறுமன துணி போட்டுத் தொடச்சுடறேனே?'

'அழகுதாம்போ. எப்போவோ லீவுக்கு வரும்போதுதான் உங்காத்து வண்டவாள மெல்லாந் தெரியறது? ஊர்லே இப்படித்தான் பண்ணுவாளா உங்கம்மா? நான் எப்படிடீ உங்காத்துக்கு வந்து சாப்படறது? வீடே எச்சலும் பத்துமா இருக்கும் போல இருக்கே? இதோ பருடீ, ஜலந்தீந்து போச்சு. இன்னுங் கொஞ்சமா ஜலம் விட்டுக்கோ. உட்காந்துண்டு எச்சலிடப்படாதுடீ. நின்னுக்கோ. நாலு எச்சலிடறத்துக்கே இந்தப்பாடா? எனக்கு உன்னோட வயசுலே நாலு புள்ளப் பொறந்தாச்சு. புக்காத்துலே ஒரு வேளைக்கு சாப்பாட்டுக்கு வீட்டு மனுஷாளே இருவது பேருக்கு மேல இருப்பா. ஒரு பந்தி பரமாற ஏந்துண்டாக்க எச்சலிட்டு துணி போட்டுத் தொடைக்கறத்துக்குள்ள முதுகு வலி கண்டுடும். ஆனா வாயத் தொறக்க முடியுமா?'

'போறும் பாட்டீ. எத்தன தடவ கேட்டாச்சு இதையே, போரடிச்சுப் போச்சு.'

'ஏய், என்னடி பாட்டிய எதுத்துப் பேசறே?'

இது அப்பா.

கேள்வி கேட்டுக் கேட்டுத்தான் எங்கும் வளர வேண்டி இருந்தது. கேட்கும் கேள்விக்கு பதில் தெரியாது, அல்லது பெண் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தேவையில்லை. எங்கும் எப்போதும் இதே போல பார்த்தும், கேட்டும் பழகிவிட்டிருக்கமாட்டேன் என்கிறது. இந்தக் குளிர் பிரதேசத்தில், அமெரிக்காவில் ஒரு சிறு நிலத்தில், எல்லோருடனும் கேக்கைக் கடித்து சாப்பிடவும் சற்றே யோசிக்க வேண்டியிருக்கிறது.

'எச்சலிட எச்சலிட தொடைக்கக்கூடாதுடீ பொண்ணே. எச்சலிட்டு முடிச்சப்பறந்தான் தொடைக்கணும். இல்லையானாக்க, சாணித்துணி எச்சலோட ஏகமாயி அதுவும் எச்சலாயிடும். எச்சலிட்டு முடிக்கட்டும். கொஞ்சம் காத்திண்டிரு.'

கேள்வி அம்மாவிடம்.

'அம்மா, எச்சலிடச் சொல்றே, செய்யறேன். ஆனாக்க என் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிடு.'

'என்னடீயம்மா, இன்னக்கிப் புதுக் கேள்வி?'

'ஏம்மா? எல்லோருந் தரையிலேதானே உட்காந்துண்டு சாப்படறோம். அப்ப தட்டு வச்ச இடமட்டுந்தான் எச்சலாகுமா? தரை முழுக்கதானே எச்சல் ஆகும்? அப்ப வீடே முழுக்க எச்சல்தானே? அப்படீன்னாக்க ஒவ்வொரு தடவையும் வீட்ட முழுக்கக் கழுவறோமா? தட்டு வச்சு சாப்பட இடத்த மட்டுந்தானே எச்சலிடறோம்? ஏன் தட்டச்சுத்தி நீர் சுத்தின இடத்த மட்டும் எச்சலிடணும்?"

'அது ஒரு விதமான சுத்தம்தான். சாப்ட இடத்திலே சாத்துப்பருக்க இருக்கும். அது கால்ல பட்டு வீடு முழுக்க பிசு பிசுன்னு அப்பும். எறும்பு, ஈ மொய்க்கும் அதுக்காகத்தான்.'

'அப்படியா, அப்ப சரி.'

'ஏ குட்டி! எச்சலிட வா. ஓடாதே. தாவணி போட்டுண்டாச்சு. அதிந்து நடக்காதே.'

'பாட்டி, நானுஞ்சாப்படறேன், அண்ணாவுந்தான் சாப்பறான் தினமும். அப்படீன்னாக்கா, ஒருநாள் நான் எச்சலிடறேன். ஒருநாள் அண்ணா எச்சலிடட்டுமே? ஏன் என்ன மட்டும் தினமும் எச்சலிடச் சொல்லி தொந்தரவு பண்றே? மாத்தி மாத்தி எச்சலிடக்கூடாதா?'

‘சிவ, சிவ! இந்தப்பொண்ணு ஏன் இப்படிக் கேழ்வி கேக்கறதோ தெரியல்லயேடா ஈச்வரா? நல்ல படியா காப்பாத்து.'

'பாட்டி எனக்கு பதில் சொல்லாம, எதேதோ பிராது கொடுக்கறேயே?'

'ஏண்டி? ஆம்பள தொடப்பத்தை எடுத்து பெருக்கினாக்க அவனுக்குக் கொழந்த பொறக்காம போயிடும். ஆம்பள சாணியைத் தொட்டு எச்சலிட்டாலும் அதுவேதான். அப்பறமா வம்ச விருத்தி ஆக வேண்டாமா? ஆம்பள சாணியத் தொட்டு எச்சலிடலாமா, சொல்லு, இப்போ?'

'போ, பாட்டி. நம்மாத்து மாட்டுத்தொழுவத்த பெருக்கி சாணி அள்ளறது, பால் கறக்கறது ஆம்பளதானே?'

'பூத்தொடுத்தாக்க நாரைக் கடிச்சுத்தான் அறுக்கணுமா? தோ பாரு, தரையிலே இப்படி ரெண்டு இழுப்பு இழுத்தாக்க நாரு அறுகப் போறது. எப்பப் பாத்தாலும் எச்சப்பண்ணிண்டு. என்ன விதியோ போ?'

அண்ணாவை மாட்டிவிட எனக்குத் தெரிந்த ஒரே வழி, அவன் காபி குடிக்கும் போது மட்டும்தான்.

'காபிய ஒசத்திக் குடி, என்ன கடிவாளம் போட்டுண்டு' என இருவருக்குமே வசவு விழும். வாரத்தில் இரண்டு நாட்களாவது அண்ணனின் அருகில் சென்று காபி குடிப்பேன். அப்போது அம்மாவோ, பாட்டியோ இருக்கும்படியாக பார்த்துக் கொள்வேன். என் டம்பளரில் என் நகத்தால் ஒரு சிறு தட்டு தட்டுவேன். ‘டங்' என்ற சப்தம் எழும்.

'பாட்டி, அம்மா, இதோ பாருங்கோ அண்ணா காபி குடிக்கும் போது டம்பளர் பல்லுலே பட்டுடுத்து. எச்சலாயிடுத்து. அவன அலம்பச் சொல்லுங்கோ. என்ன மட்டும் எதுக்கெடுத்தாலும் திட்டறேளே? என அலறுவேன். அது சில சமயம் அண்ணனை டம்பளர் அலம்ப வைப்பதில் முடியும்.

ஆனால் அதுவே எனக்கு எதிராகவும் முடியும்.

'பாட்டி, அது அவ டம்பளரிலிருந்து வந்த சத்தம். பொய் சொல்லறா பாரு, பொம்மனாட்டி போய் சொல்லலாமா?' அண்ணாவின் புகாரும், சில சமயம் மட்டுமே எடுபடும். என்ன முடிவு எப்போது பெரியவர்கள் எடுப்பார்கள் என்பது அறிய முடியாத புதிர்தான், எப்போதும்.

எம்.எஸ்ஸி படித்து முடித்த பின்னும் பி.ஹெச்டி செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தேன். பாட்டியின் மறுப்பும், அம்மாவின் அரைச் சம்மதமும், அப்பாவின் ஊக்குவிப்பும், அண்ணனின் உறுதுணையும் என்னைப் படிக்க வைத்தது.

என் அம்மாவிற்கு என்னை வேலைக்கு அனுப்ப இருந்த தைரியம், என்னைத் திருமணம் செய்து கொல்ளாமல் தனித்திருக்க விரும்பிய முடிவிற்கு இல்லாமல் போயிற்று. இணங்க இயலவில்லை. பாட்டியின் மறைவிற்குப் பின் அம்மா, பாட்டியின் வேடத்தையும் சேர்ந்த்தே தரிக்கத் தொடங்கினாள். பாட்டியாயும் பல முறை மாறினாள்.

பணிக்குச் சென்று வரும் போது என்னைப் பார்த்த அவனின் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் மருமகளாக்கிக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டது. அமெரிக்கா வரன். அப்பா, அம்மாவிற்கு அமெரிக்க வரன்மீது மகிழ்ச்சி. எனக்கும் ஆசாரத்திலிருந்து விடுதலை. விசா கிடைக்கும் வரை தொடர்ந்து வேலைக்குச் செல்ல அனுமதி கிடைத்தது. பரந்த மனம் கொண்டவர்கள் என்று அம்மா மிகவும் பாராட்டினாள்.

திருமணத்திற்குப் பின் கணவன் வீட்டில் எனக்கு நிறைய பசித்தது. எப்போதும் வயிறு பசி நிரம்பியதாகவே இருந்தது. ‘பெண் உணவுக் கட்டுப்பாட்டுடந்தான் இருக்க வேண்டும். வீணாக உடல் பருக்கக்கூடாது. பருத்த பெண்களை என் மகனுக்குப் பிடிக்காது' என்றனர். எப்போதும் பசியுடனே வேலைக்குச் சென்று வர இயலவில்லை.
அலுவலகமும் கணவனின் வீட்டிற்கு வெகு அருகிலேயே இருந்தது. வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் இடையில் உள்ள மற்றொரு தெரு வழியாக நான் சற்றே சுற்றி இளைப்பாறி, பின் வீடு அடைவதை வழக்கமாகக் கொண்டேன். இடையிலிருந்த தெருவில் என் தோழி இருந்தாள். தோழியின் வீட்டிற்கு சற்றே மூச்சுவிட சென்று வாருவதையும் வழக்கமாகக் கொண்டேன்.

ஒரு நாள் மிகுந்த பசியினால், என் நிலையை தோழியிடம் அறையும் குறையுமாகத்தான் சொல்ல முடிந்தது. அவள் வயிறு நிரம்ப உணவு அளித்தாள். தினமும் போக எனக்குத் தயக்கமாகவும், அவமானமாகவும் இருந்தது. ஆனால், அவளோ 'இது நிரந்தரமல்ல. கணவனிடம் சென்றுவிட்டால் இந்தக் கட்டுப் பாடுகள் இருக்காது. சில நாட்கள்தானே பொறுத்துக்கொள்' என்றாள்.

இடைப்பட்ட தெருவில் நான் வந்து கொண்டிருந்தபோது, கணவனின் வீட்டார் என்னக் கண்டு கொண்டனர். அன்று மிகுந்த கலவரத்துக் குள்ளானேன். வீடு திரும்பிய என்னை மிகவும் கேள்விகள் கேட்டதோடு அவமானப்படுத்தவும் செய்தனர். என்ன தோன்றியதோ அவர்களுக்கு என் வலது உள்ளங்கையை எடுத்து மூக்கருகில் கொண்டு சென்று, முகர்ந்து பார்த்து நான் சாப்பிட்ட விஷயம் அறித்தனர். ‘இதுதான் நீ தினமும் லேட்டா வரத்துக்குக் காரணமா?' என்று கேட்டுவிட்டு அன்று இரவு உணவை வெட்டிவிட்டனர்.

அன்றும் வழக்கம் போல நானே அனைவருக்கும் பறிமாரினேன். எச்சலிட்டேன். அதாவது டேபிள் துடைத்தேன். சொப்புப் போட்டுத் திரும்பத் துடைத்தேன். சாப்பாட்டு மணம் டேபிளில் வீசினால், மாமனாருக்குப் பிடிக்காது. அன்று நிரம்பிய பசியுடன் காலியான வயிற்றுடன் இரவு படுத்தேன்.

இங்கு அமெரிக்காவில், கணவன் டேபிள் துடைத்தான். சமயலறை வேலைகளைப் பகிர்ந்து கொண்டான். எச்சல் டேபிள் துடைத்தபோது அன்பென்று உணர்ந்தேன்.

ஆனால், ஒரு சில நாட்களில் மட்டுமே அவன் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுவதும், அன்று படுக்கை உறவும் இருந்ததும் சில நாட்களிலேயே அனுமானிக்க முடிந்தது. உறவின் தேவைகளுக்காக வன் முகத்தருகில் வந்து முத்தமிட்டபோது ‘எச்சல், எச்சல்' என்று பாட்டியும், அம்மாவும் மாமியாரும் கூட அலறியதாகப் பட்டது. நானும் சிறிது முனகி இருக்கலாமோ என்னவோ.

அமெரிக்காவில் கணவனுடன் வாழ்ந்த நாட்களில் முதல் வீட்டு விலக்கு ஏற்பட்ட போது, என்னை அவன் தனியே படுக்கச் சொன்னான். ‘கட்டில் தீட்டாயிடும்' என்றான் கடுங்குளிரில் மற்றொரு அறையில் தனியே படுத்தேன்.

மறுநாள் காலையில், ‘குளிச்சுட்டு சமைச்சுடு. ஆபீஸ் போகணும் பாரு' என்றான். என்னுள் எப்போதும் போல கேள்விகள் எழும்பத் தொடங்கின.

'குளிச்சா தீட்டுப் போயிடுமா? ராத்திரி கட்டில்லே படுக்கக் கூடாதுன்னேள்? நான் சமைச்சா சாப்பிடுவேளா?'

முறைத்தான்.

அன்று என்னை டைனிங் டேபிளில் சாப்பிடக்கூடாது என்றான். தரையில் உட்கார்ந்து சாப்பிடச் சொன்னான்.

'சமயலே நான் செஞ்சதுதானே?'

குளிரில் தரையில் அமர்ந்து சாப்பிட்டேன்.

சொன்னபடி கேட்டு வளர்ந்த பிள்ளை. அம்மாவின் வளர்ப்பு. வளர்க்கப்பட்ட பிள்ளை. வளர்ந்த பிள்ளையல்ல.

எதிர்க் கேள்விகள் அற்ற ஆண்.

உணவருந்திய பின் எச்சலும் இட்டேன். சுடுநீர் கொண்டு.

அடுத்த முறை தீட்டு வராத போது சந்தோஷப்பட்டேன்; குளிரில் எச்சலிட வேண்டாம் என்று. பிரசவம் அமெரிக்காவில்தான் என்றான். அப்போதுதான் பிறக்கும் பிள்ளை அமெரிக்கப் பிரஜையாக முடியுமென்றான். 'மசக்க, சீமந்தம் ஒரு புண்ணாக்கும் வேண்டாம். இங்கேயே இரு. புள்ள சரியாத்தான் பொறக்கும்'

எச்சில் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் உடல் விரியும்தான். உள் செல்லும்தான். இது அவ்வப்போது நிகழும்,
கருவும் உண்டாகும்

இரண்டாடுகளுக்குள் அவன் நிறையக் குடிப்பது தெரிய வந்தது. நிறையக் குடித்தான், நிறைய அடித்தான். எச்சில் ஒழுக ஒழுக குழறி குழறிப் பேசினான்.

சமைத்தேன்.

சாப்பாடு பறிமாறினேன்.

எச்சில் டேபிள் துடைத்தேன்.

குழந்தையின் ஜொள் துடைத்தேன்.

அவனின் வாந்தியையும் துடைத்தேன்

முத்தமே எச்சிலாயிருந்தது.

எச்சில் நாற்றமாயிருந்தது.

எச்சில் உணவுக்கானதாக இல்லாமல், உணவு வாசனைகளோடு இல்லாமல், நாற்றம் சம்பந்தப்பட்டதாய் இருந்தது.

எச்சில் உஷ்ணநாட்டோடு உணவாகவும், குளிர்நாட்டோடு நாற்றமுடையதாகவும், என் உடலில் இரு பாகங்களாக ஒட்டிக்கொண்டும், ரத்தத்தினுள் ஓடிக் கொண்டும் இருந்தது. எந்த நீரில் கழுவ இதை? எப்படி எச்சலிட்டுத் துடைக்க? எந்த சாணித்துணி போட்டுத் துடைக்க? சுத்தமாக்க பசுஞ்சாணி போட வேண்டுமா? எருமைச் சாணியா?

'பாட்டி நீ உன் அம்மாவின் எச்சில். அப்பா உன் எச்சில். நான் என் அம்மாவின் எச்சில். எச்சில் வாயிலிருக்கிறது. வாய் உடலில் இருக்கிறது. வாய் வழியாகப் பேசுகிறோம். எனவே எல்லா சொற்களும் எச்சில் எச்சில் நிரம்பியது. எல்லாச் சொற்களையும் கழுவி எடு. சாணி போட்டுக் கழுவு,

பாட்டி. பாட்டி! நீ பஸ்ஸில் போகும்போது சின்ன பாட்டிலில் நீர் கொண்டு போவாயே, கண்டக்டர் டிக்கட்டை எச்சில்படுத்திக் கிழித்துக் கொடுப்பதால் ஒவ்வொரு முறையும் டிக்கட்டை வலக்கையிலிருந்து மாற்றாமல், பத்திரமாக எடுத்துக் கொண்டு, பஸ்ஸை விட்டு இறங்கியவுடன், டிக்கட்டை தூர எறிந்து விட்டு, எச்சில் டிக்கட் பிடித்த கையையும் கழுவுவாயே. சொற்களை மட்டும் கழுவக் கூடாதா பாட்டி? சாப்பாட்டு எச்சில் இலையைப் போடுவதால், தெரு எச்சில் ஆகிவிட்டது. எச்சில் இலையை சாப்பிட்டதால் நாயும், அது நடந்து வரும் பாதையும் எச்சில் ஆகிவிட்டது. காகம் உட்காரும் காம்பவுண்ட் சுவரும் எச்சில் நிறைந்ததே. ஈக்கள் புழங்கும் சமயலறையும், காகத்தால் மற்றும் ஈயால் கிணறும், செடியும், கொடியும், மரமும் என எல்லாமே எச்சிலாகி விட்டது. அம்மா, இத்தனையும் எப்படிக் கழுவ?

நீ கவலையே படாதே அம்மா, அதற்காகத்தான் மழை பெய்கிறது. மழை எல்லா இடங்களையும் எச்சலிடுகிறது. கடல் நீர் உள் நுழைந்து தன்னால் ஆனவரை கடற்கரையின் எச்சில் போக்குகிறது. எல்லாமே வம்சவிருத்தி செய்கிறது. அதனால் எல்லாம் எச்சில். எனவே உலகம் முழுவதும் எச்சிலாக நிரம்பியுள்ளது.

'பாட்டீ, அம்மா! யாராவது சொல்லுங்களேன். என் பிள்ளை என் எச்சிலா? அவன் எச்சிலா? எனக்கு சிலசமயம் அவர்களைப் பார்க்கும்போது என் எச்சிலாகத் தோன்றுகிறது. ஆனால், பலசமயம் அவன் எச்சிலாகத்தான் தோன்றுகிறது. அவன் புழங்கிய இந்த உடல் கூட எச்சிலாகத்தான் இருக்கிறது. அதனால்தான் நான் இங்கும் அடிக்கடி குளிக்கிறேன். நிறைய வாசனை திரவியங்கள், இல்லாவிட்டால் எச்சில் போக்க உடல் முழுவதும் சாணி தேய்த்துக் குளிக்கிறேன். தலையிலிருந்து எச்சில் ஒழுகி, ஒழுகி எப்போதும் என் உடல் கொழகொழப்பாக என்னிலிருந்து வழுக்கிக் கொண்டே இருக்கிறது.

நான் நம் வீட்டு வாசலில் நிற்கும் போது உனக்கு பயம் தோன்றலாம் அம்மா. என்னைக் கேள்விகள் கேட்கத் தோன்றலாம், அம்மா. இந்த முறை பதில் என்னிடமிருந்து எதிர் பார்ப்பாய். ஆனால் என்னால் சரியான, சரியாக பதில் சொல்ல முடியுமா? தெரியவில்லை. ஆனாலும் இந்தக் குளிர் பிரதேசத் திலிருந்தும், எச்சில் கணவனிடமிருந்தும் எனக்கு விடுதலை. அவன் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது சாதம் போட, எச்சலிட நான் இருக்க மாட்டேன். நன்றாக ஏமாறட்டும். என்னை மட்டும் அவன், அவனின் அப்பா, அம்மா எல்லோரும் ஏமாற்ற வில்லையா? எனக்கு என் பணி இருக்கிறது. எச்சில் படாமல் எனக்காகவே. திரும்பவும் நான் வயிறு நிரம்பச் சாப்பிடுவேன், நன்றாக உடை அணிவேன். எங்கும் வலம்வருவேன். அம்மா சொல்லாமலே சாதம் போடுவேன், சமைப்பேன், எச்சிலும் இடுவேன். அவன் எச்சில் படாமல் என் குழந்தைகளை நான் வளர்ப்பேன்.

க்ருஷாங்கினி

Thursday, July 29, 2010

உயிரா வெறும் கறியா?

உயிரா வெறும் கறியா?
___________________



போக்குவரத்து அதிகமாகிவிட்ட தெரு. இரண்டுசக்கர வாகனங்களும், நாலு சக்கரமும், ஆறு சக்கரங்கள் கொண்ட லாரிகளும், கண்டெய்னர்களும் என, எப்போதும் இரைச்சல் வழிந்து ஓடிக் கொண்டிருக்கும் தெரு. அவ்வப் போது திடீரென நிறுத்தப்படும் வண்டிகளின் ஒலிகளும், தொடர்ந்த மனித ஓலங்களும், சண்டைகளும் என்று, நடந்த அல்லது நடக்கவிருந்த விபத்தை சப்தங்களின் அளவைக் கொண்டு வீட்டின் மற்றொரு மூலையில் இருந்தாலும் கூட ஊகிக்கலாம். வீண்சண்டை, வெறுங்கூச்சல் என்றுகூடத் தெரு சப்தங்களால் நிறையும். எப்போதும் வேகத்துடன் கடக்க முயலும் வாகனங் களுக்கு, சிறிதே குறுக்கீடாக பெரிய வாகனங்கள் இடை நின்றுவிட தொடர்ந்து ஒலிக்கும் ஆத்திரமும், ஒலிப்பான்களும் அதிரச் செய்யும் வேகம் முனை திரும்பிக் கடக்க என எப்போதும் அவசரத்துடன் மூச்சுத் திணறி தத்தளித்துக் கொண்டு அந்த குறுகலான தெரு தன் உடலைக் கிடத்திக் கொண்டு சற்றும் முனகாமல், அரைத்த கரும் பாம்பென சப்பையாய்க் கிடக்கும்.

அன்றும், எப்போதும் போல கூடுதல் அவசரத்துடன் கிறீச்சிட்ட இரு சக்கர வாகனம். ஆனால் பின் எந்த சத்தமும் இல்லாமல் போக்குவரத்து ஓரமாக நிகழ்ந்து கொண்டே இருந்தது. இருசக்கர வாகனங்கள் தடுமாற்றம் இன்றியும், நாலு சக்கர வாகனங்கள் சற்றே தயங்கிப் பின் தொடர்ந்து ஓடிக் கொண்டும் இருந்தன. ஆனால், அனைவரின் பார்வையிலும் பரிதாபமோ, கோபமோ இல்லை. சிலர் கருந்தரையைப் பார்த்து சங்கடம் மட்டும் பட்டனர். நிறுத்தி விசாரிக்கவோ உதவவோ செல்லவில்லை. கடும் அமைதி. கூச்சல் இல்லை. என்ன?

தெருவுக்கு வந்து பார்த்தேன். பாதித் தெருவின் ஒரு ஓரத்தில் நிறுத்தப் பட்டிருந்த டி.வி.எஸ்.இல் பின் அமரும் இருக்கையின் இரு புறமும் கால்கள் கட்டப்பட்டு தலை கீழாக இறகு விரித்து சற்றே தலைகளைத் தூக்கி அசைந்து கொண்டிருந்தன வெண்ணிற கோழிகள். இடப்பக்கம் ஐம்பதும், வலப்பக்கம் ஐம்பதும் (ஒரு உத்தேசக் கணக்குதான்) தொங்கிக் கொண்டிருந்த கொத்துக் கொத்தான கோழிகளில் வலப்புறம் இருந்த கூட்டத்தில் மற்றொரு வண்டி மோதியதால் கால்களைக் கட்டியிருந்த கயிறு அறுந்து தரையில் சில கோழிகள் சிதறிக் கிடந்தன. எந்த எதிர்ப்பும், வலியும், முனகலும் இன்றி உறைந்து கிடந்தன அவை. ரோஜாப்பூவும் மல்லிகையும் கலந்து கட்டப்பட்ட பூப்பந்து போல வெண்ணிற இறக்கைகளும், விபத்தால் கிழிந்த உள்சதை ரோஸ் நிறத்திலும் தெரிய ஆங்காங்கே உருண்டையாய் பந்துகளாய்க் கிடந்தன. வாகனங்கள் அதன் மீது ஏறாமல் சற்றே இடையிடை பிரிந்து, தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன. எதிர்ப்பின்றி, இன்னமும் சிலமணி நோத்தில் உயிர்விட இருக்கும் அவைகள் குற்றுயிரும் குலையுயிருமாய் கரும் தரையில் கிடந்தன.

உணவுப் பழக்கம் என்பது அவரவர் உரிமை. அதைக் கேள்வி கேட்கவோ தடை செய்யவோ இல்லை இக்கட்டுரை. ஆயின் இறப்புக்கு முன் வரை ஒரு உயிரைப் பேணுவது ஆறறிவு என மார் தட்டிக் கொள்ளும் மனிதனின் கடமை அல்லவா? கறிக்காகத்தான் உயிர் வளர்க்கப்படுகிறது. 'கொன்றால் பாவம் தின்றால் போச்சு' என்ற பழமொழியையும் மனிதன் உண்டாக்கி வைத்துள்ளான். கொன்று சமைக்கும் வரை அதை ஒரு உயிராகக் கருதாமல் கறியாகக் கருதுவது நியாயம்தானா?

சமீப காலமாக கோழிக்கும் மற்ற பறவையினத்திற்கும் ஏற்பட்டிருக்கும் நோயும், அதன் விளைவாக மற்ற செய்திகளும் ஊடகங்கள் வழியாக அடிக்கடி காண்பிக்கப்படுகின்றன. பறவை, உணவாக முடியாமல் போய் விடுகிறது. உணவானால் மனிதனையும் தாக்கும் என்பதும், உணவாகாமல் கூட மற்றவர் களை பாதிக்கும் நோய் அது என்பதைக் கண்டறிந்துள்ளான் மனிதன். தனக்கு உணவாகாதது மட்டுமல்ல உபயோகமற்ற அவற்றிக்கு உணவளிப்பதும், பரா மரிப்பதும் பெருஞ்சுமையாகி விடுகிறது. அவ்வப்போது மனிதர்களால் உண்ணப் படாததால் எண்ணிக்கை குறையாமல் மாறாக மிக அதிகமாகிப் பெருகி பெரும் கேள்வியாய் மனிதன் முன் நிற்கிறது எழும்பி. மக்கள் நோய் பயத்தில் ஒதுங்கி ஓடிவிடுகிறார்கள். பண்ணையில் வேலை செய்யும் மனிதனுக்கும் போதுமான பாதுகாப்பில்லை. கோழிகளின் தீவனத்துடன் ஒட்டிக்கொண்டு வரலாம் நோய்க் கிருமிகள் என்று அஞ்சப் படுகிறது. எனவே உணவுப் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. இவை அனைத்தும் முதலில் வெளிநாடுகளில் நடை பெறுவதாகக் காட்டப்பட்டு வந்தன. சிங்கப்பூரில், இந்தோனேஷியாவில் கோழிகள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டு வந்தன. எல்லாமே ஊடகங்கள் மூலமாகக் காண முடிந்தது.

தற்போது நம் நாட்டிலும், இதே நோயும், இதே பிரச்சினைகளும், இதே கூட்டம் கூட்டமான அழிப்பும் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. வழக்கம் போல, நம்மிடத்தில் இல்லை அங்குதான் என ஒருசாராரும், இதே சொற்களை மற்றசாரார்களும் சொல்லி வருகின்றனர். சர்ச்சை செய்கின்றனர். மிகச் சாதாரணமாக கொல்லப்பட்டவைகளின் எண்ணிக்கை இருபதாயிரம், எழுபதாயிரம், லட்சம், பல லட்சம் என்று எண்ணிக்கைகளும் தொடர்ந்து அறிவிக்கப்படுகிறது.

மனிதனுக்கு உணவாகாததினால், கேடு விளைவிப்பதினால், நோய் பரப்பும் அபாயம் இருப்பதினால், பறவைகள் அழிக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.

என்னுடைய சந்தேகங்கள் இவை.

இதற்கு முன்பாக இது போன்ற நோய் நம் நாட்டில் பறவைகளைத் தாக்கியுள்ளதா?

மனிதனால் மனிதனுக்குப் பரவும், (இருமல் / தும்மல் மூலமும்) சார்ஸ் என்ற நோய் கண்டறியப்பட்ட பொழுது ஏன் மருந்து கண்டுபிடிக்காத அந்தப் பரவும் நோய்க்கு ஆளான மனிதர்களை நாம் கூட்டம் கூட்டமாகக் கொல்ல வில்லை? அப்படி கொன்று எரித்திருந்தால் நோய் பரவுவதைக் கட்டுப் படுத்தியிருக்கலாம் அல்லவா?

மேலும் ஆட்கொல்லி நோயுற்ற மனிதர்களையும், கட்டுப்படுத்த இயலாமல் மற்ற நோய் தாக்கப்பட்ட மனிதர்களையும் நாம் ஏன் அழிப்ப தில்லை? தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அவர்களை ஏன் காப்பாற்ற வேண்டும்?

மருத்துவத்திற்கான பொருளாதாரம் இல்லாமலும், சிகிச்சை பலன் அளிக்காது என்ற கடைசிக் கட்டத்திலும் கூட கருணையுடன் செய்யப் படுவது கூட, மனிதர்களுக்கானதென்றால் கொலை என்று சட்டம் சொல்லுகிறதே.

மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறோமே?

மனிதர்களைத் தாக்கி, உயிர் போக்கும், மற்ற மனிதர்களுக்கும் பரவும் வாய்ப்புள்ள பல நோய்களுக்கு மருந்து கண்டு பிடிக்கும் விஞ்ஞானம் மற்ற உயிர்களுக்கும் உதவும். அப்படித்தானே?

பெரிய கருப்பு பிளாஸ்டிக் பைகளில் கழுத்தொடித்து இறக்கச் செய்து உள்ளிடும் செயல்கள் கூட வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி ஆகியுள்ளதா?

அழிக்கத்தான் வேண்டும் என்ற கடைசி நிலைக்குத் தள்ளப் பட்டிருந் தாலும் ஒவ்வொரு நொடியும் அவை ஊடகங்களில் உயிருடன் அசை பவையாகவும், பிறகு படக்கென்று கழுத்து திருக்கப்பட்டு கொல்லப் படுபவை களாகவும் தொலைக்காட்சிகளில் திரும்பத்திரும்பக் காட்டப் படத்தான் வேண்டுமா? (ஆனால் பல விபத்துக்களையும் எரிந்த குழந்தைகளையும், இறந்த மனிதர்களையும் ரத்தத்துடன் அடிக்கடி காட்டும் ஊடகங்கள்தான் இவை)

நெரிசலில் சிக்கி உயிர்கள் பலி, விபத்தில் பலி, கலவரத்தில் பலி, என்று கணக்கிட்டு பரிதாபமாக உயிரிழந்தனர் என விவரிக்கும் மனித இனம் மற்றவைகளை வெறும் கறியாகக் கணக்கிட்டு லட்சக் கணக்கில் என்று அறிவிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?

வாடிய பயிரைக் கண்டு வாட வேண்டாம். உயிரை வெறும் கறியாக கருதாமல் இருந்தால் போதும்.

இரவுகள் யாருடையவை?

இரவுகள் யாருடையவை?

என் வீட்டின் வலது புறம் ஒரு குடும்பம் வசிக்கிறது. அதில் திருமணத்தை எதிர் நோக்கியிருக்கும் ஒரு ஆண். அவருக்கு ஏற்ற பெண் தேடும் படலம் நடைபெறுகிறது. மேல் வகுப்பைச் சார்ந்தவர்கள். பையனுக்கு நல்ல வேலை. மாதத்திற்கு 40000 சம்பளம். அழைப்பு மையத்தில் வேலை. குழுவுக்கு மேளாளர். எப்போதும் இரவுப் பணிதான். அது எல்லோரும் அறிந்தது தானே. சொந்த வீடு, மற்ற வசதிகள் என எல்லாமும் நிறைந்த வரனாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.
திருமணச் சந்தையில் அழகாவும், அடக்கமானவளாகவும் உள்ள பெண்ணைத் தேடும் வேட்டையில் அவரது சுற்றத்தார்கள் ஈடுபட்டுள்ளனர். பையனின் சம்பளத்தை கணக்கில் கொண்டு ஏகப்பட பெண்களின் பெற்றோர்கள் அவ்வரனை அணுகுகின்றனர். எனவே மணப் பையனுக்கு நிராகரிப்புக்கு நிறைய வாய்ப்பு. மிகவும் நிதானமாக அலசி ஆராய்ந்து தனக்கான மனைவியைத் தேர்ந்தெடுக்க நிறைய நேரமும் தேடுதலும் மேற் கொள்கிறார்கள். இதில் ஒன்றை அடிக்கோடிட்டு கவனியுங்கள். இந்த ஆணுக்கு நிரந்தர இரவுப் பணி.

என் வீட்டின் மற்றொரு புறம் ஒரு குடும்பம் வசிக்கிறது. அவர்களுக்குத் திருமண வயதில் ஒரு பெண். அவள் முதுகலைப் பட்டங்கள் மற்றும் பட்டயங்கள் கை நிறைய அடுக்கி வைத்துள்ளாள். நல்ல உயரமும், சிவப்பும், அழகான உருவமும் கொண்ட பெண். அவளும் மேல் சாதி சார்ந்தவள்தான். அவளுக்கு சம்பளம் முப்பதாயிரத்திற்கும் மேல். அவள் தனியார் விமான கம்பெனியில் விமானம் வான் ஏறும் மற்றும் தரை இறங்கும் பொழுது பயணிகநபயும், சுமைகளையும் சரிபார்த்து ஏற்றி அல்லது இறக்கி அனைவரையும் சரி பார்த்துப் பின் திரும்பும் பணி புரிகிறாள். விமானம், எப்போதும் பகல்களில் மட்டும் வான் ஏறியும், தரை இறங்கியும் செல்ல இயலாது. இரவுகளிலும் அதன் போக்குவரத்து உண்டு அல்லவா? எனவே பணி முறையில் வாரம் இரண்டு அல்லது ஒரு நாள் இரவுப் பணி ஏற்க வேண்டும். இது அவளுக்குத் திருமணம் என்ற உறவுக்கு ஆண் தேடும் படலத்தின் முன்பு வரை இயல்பான ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால் பையனின் பெற்றோர்கள், "பையன் ஆசை ஆசையாய் வீடு தேடி நாடி வரும் பொழுது, அவள் நைட் டூட்டி என்று வேலைக்குப் போய்விட்டால் எப்படி சரிப்பட்டு வரும்?
இரவு அவன் ஏமாற மாட்டானா? தேதி பார்த்து, கணக்குப் பார்த்தா ஆசை வரும்? வரும்பொழுது மனைவி வீட்டில் இருக்க வேண்டாமா? எனவே, இரவுப்பணியிலிருந்து விடுதலை பெறச்சொல்லுங்கள். திருமணத்திற்கு நாள் பார்க்கலாம். எவ்வளவோ வரன்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது. என்னவோ என் பையன் உங்கள் பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று சொல்லி விட்டான். உங்களிடம் இவ்வளவும் சொல்லவேண்டியிருக்கிறது. பெண்ணுக்கு எது நல்லது என்று உங்களுக்கும் தெரியும். நாளைக்கு வயிற்றில் பிள்ளை கையில் குழந்தை என்று ஆகிவிட்டால்? எல்லாவற்றையும் யோசியுங்கள். இரவுப் பணி இல்லாமல் ஆக்கிக் கொண்டு வாருங்கள் திருமணம் பற்றிப் பேசுவோம்."

இரு தனித்தனி நிலை இது. குடும்பங்களில் நிலை இது. ஆணின் நிரந்த இரவுப் பணி கூட அவனின் வருவாயை மனதில் பணத்தின் அடிப்படையில் பெண்ணைப் பெற்றவர்களால் நல்ல வரன் என்று சிலாகிக்கப்பட்டு எளிதாக ஒப்புக்கொள்ளப்பட்டு தன் பெண்ணுக்குக் கிடைக்காதா என்று ஏங்க வைக்கிறது. ஆனால் பெண் ஒரிரு நாட்கள் கூட இரவுப் பணி செய்வது கணவனின் சுகத்திற்கு ஒரு தடையாய் மறுக்க வைக்கிறது.

பணி என்று வந்துவிட்டால் ஆணும் பெண்ணும் சமமதான். எனவே எந்த விதமான இடர்பாடும் இன்றி பணி புரிகிறார்கள். திறமையை நிரூபிக்கிறார்கள். உயர்வு பெருகிறார்கள். ஆண்களுக்கான இரவுப் பணி எல்லா தளத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. பெண்ணின் இரவுப் பணி செவிலியர் மருத்துவர் போன்ற சில குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்கி விட்டிருக்கிறது. ஒரு ஆண் இரவு நேரம் பணி முடிந்து வீட்டிற்கு வந்து உணவு அருந்திவிட்டு உடன் உறங்க குடும்ப அமைப்பு அனுமதிக்கும். பெண் இரவுப் பணி முடிந்து வீடு திரும்பியவுடன் அவளுக்கான மற்ற இதர பொறுப்புக்களை நிறைவேற்றிய பிறகே ஓய்வு எடுக்க முடிகிறது.

திருமணம் என்ற உறவு ஏற்பட, வாரம் ஒரு நாள் மட்டும் இரவு தங்கும் மகனையும் ஏற்றுக் கொண்டு பெண் கொடுக்க ஓடி ஓடி வரும் சமுதாயம் அப்பெண்ணின் குடும்ப உறவுகள் மற்றும் ஆசைகள் பற்றி கேள்வி கெட்க என்றில்லை, மனத்தளவில் கூட இடம் தர மறுக்கிறது. ஆனால், பெண் ஒரு நாள் கூட கட்டியவனுக்கு உபயோகம் ஆகாமல் இரவுப் பணிக்கு செல்வதை ஏற்க மறுக்கிறது.

எப்போதும் இரவுப் பணியில் இருக்கும் அழைப்பு மையத்தில் பணி புரியும் பெண்களின் திருமணம் இச்சமுதாயத்தில் எப்படி எதிர் கொள்ளப் படப் போகிறது என்பது இன்னமும் சில ஆண்டுகளில் புகைய ஆரம்பிக்கும். பெண் கை நிறைய சம்பாதித்தாலும் கூட அதற்கும் மேலாக ஒரு ரூபாயாவது அதிகம் சம்பாதிப்பதுதானே ஆணுக்கு அழகு? இரவு உபயோகம் தானே பெண்ணுக்கு அழகு?

நமது உறவுகளையும், இரவுகளையும் தீர்மானிப்பது இன்று யார் கையில் உள்ளது? நம்மிடத்திலா அல்லது பன்னாட்டுக் கம்பனிகளிடமா?

Thursday, July 15, 2010

சிறப்புக் குழந்தைகள்

பத்து சிறப்புக் குழந்தைகள் எனப்படும் மனவளம் குன்றிய குழந்தைகளை ஒரு சேரப் பார்க்கின்ற போதே நெகிழும் மனம் என்று ஒன்று உள்ள அனைவருக்கும். ஏறக்குறைய 600 சிறப்புக் குழந்தைகள் அவர்களை அணைத்துப் பாதுகாக்க அவர்களின் பெற்றோர்கள் அல்லது பெற்றோர், மற்றும் அவர்களைப் பெறாத பிள்ளைகள் என தாங்கி வளர்க்கும் பயிற்சி கொடுக்கும் ஆசிரியர்கள், அந்தப் பள்ளிகளை உருவாக்கி நடத்திவரும் தனியார் நிறுவனங்களின் நிறுவனர்கள் என, 2000க்கும் மேல் ஒருங்கினைந்திருந்தார். கலைவாணர் அரங்கிலிருந்து அவர்கள் ஊர்வலமாக கோட்டையை அடையும் முகமாக நடந்து வந்து கொண்டிருந்தனர். கையில் போராட்டத்திற்கான விளக்க அட்டை களுடன் தளர்ந்த கைகளுக்குள் இறுக்கிப்பிடித்தவாறு தகிக்கும் வெயிலில் நடந்து வருகின்றனர். சென்னையின் முக்கிய சாலைகளில் நடந்து வந்து கொண்டு இருக்கும் இவர்களைக் காண நேர்ந்தவர்கள் யாருக்குமே அன்றைய உணவு இதமளிப்பதாய் இருந்திருக்காது. அன்று காவலுக்கு உடன் நடந்த காவலர் அனைவரும்-ஆண்களும் பெண்களும், மனித நேயம் மிக்க நெகிழ்ச்சி கொண்ட உயிர்களாக கண்கள் பனிக்க காக்கி உடைக்குள் உடல் தளர இதயம் வெடிக்கும் ஆத்மாக்கள் எனக் கண்டேன். முக்கிய சாலைகளின் போக்கு வரத்தில் இந்தப் பிள்ளைகள் சிக்கிக் கொண்டு விடக்கூடாதே எறு கரிசனம் கொண்டு வழி நடத்திக் கொண்டு செல்கின்றனர். அங்கு பாதையில் போகும் வாகனங்களுக்குள் இருப்பவர்களும், கால் நடையாகச் செல்லும் இவர்களைக் கடந்து செல்லும் மனிதர்களும், ஒருசேர இவ்வளவு சிறப்புக் குழந்தைகளைக் கண்ட சங்கடத்தில் கடந்து செல்கின்றனர்.

சரி, இந்த சிறப்புக் குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் போராட்டம் நடத்தும் அளவுக்கு என்ன குறை? அரசிடம் என்ன கோரிக்கை? அதைப் பற்றி அறியும் முன்பாக சில வார்த்தைகள்.

உடல் ஊனமுற்ற- பார்வை஡ற்ற, கை கால்களற்ற, வாய் பேச முடியாத, காது கேட்காத மற்ற அனைத்து மக்களுக்கும் அந்த ஊனம் பிறவியிலேயோ அல்லது இடையிலேயோ ஏற்பட்டிருக்கலாம். சில ஊனங்கள் சிகிச்சைகள் மற்றும் மாற்று அங்கம் பொருத்துதலினால் நிவாரணம் அடையலாம். அவர்களைப் பயிற்றுவித்து அவரவர்களின் சுய தேவைகளை அவர்களே செய்து கொள்ளும் அளவுக்கு பழக்கலாம். தனியே வெளியில் சென்றுவர இவர்களுக்கு பயிற்றுவிக்க இயலும். ஏன் எனில் இவர்களின் மூளை முழு வளர்ச்ச்சி அடைந்துள்ளது. எனவே புரிதல் சாத்யம். இவ்வகை மனிதர்களுக்கு அரசு பல உதவிகளையும் செய்து வருகிறது. உதாரணமாக பேருந்துகளில் இலவச பயணம். மிகவும் நல்ல விஷயங்கள்தான் இந்த அரசு உதவிகள்.

ஆனால் மன வளர்ச்சி குன்றிய சிறப்புப் பிள்ளைகளிடம், சிறிய சிறிய முன்னேற்றங்களைத் தவிர்த்து வேறு எதையும் அதிகமாக நீங்கள் எதிர்பார்க்க முடியாது. இத்தகைய பிறப்பு ஓர் நிலை. அதை அப்படியே ஏற்றுக் கொள்ள மனப் பக்குவம் மிகவும் தேவை. முக்கியமாக பெற்றோருக்கு தேவை. இவ்வகை பிள்ளைகள் தனியே வெளியே செல்ல இயலாது. துணைக்கு ஒருவர் அவசியம். மேலும் இது போன்ற பிள்ளைகளில் 60 சதவிகிதம் பேருக்கு வலிப்பு நோய் இருக்கும். உடல் பலமற்று இருக்கும். நரம்புகளும் பலமற்று இருக்கும். எனவே எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும். நோய் எதிர்ப்பு மாத்திரைகளும், சத்தான உணவுகளும், வலிப்பு நோய்க்கான மாத்திரைகளும் கண்டிப்பாக தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். பேச்சுப் பயிற்சியும் அவசியம். பிசியோ தெரபி எனப்படும் உடல் செயற்பட அளிக்கும் பயிற்சிகளும் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். இவைகள் அத்தனையும் எப்போதும் தேவை. சில சமயங்களில் மருந்தின் அளவு குறையலாம் அல்லது கூடலாமே தவிர மருந்து உட்கொள்ள வேண்டாம் என்ற நிலை ஏற்படுவது மிக அரிது. இவ்வகை பயிற்சிகள் அனைத்துமே இதற்கான சிறப்புப் பள்ளிகளில்தான் கிடைக்கும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதும் கட்டாயமாகிறது. கூட ஒருவரின் துணை இல்லாமல் இவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாது. குறைந்த பட்சம் இருவருக்காவது பஸ் கட்டணச் சலுகை அவசியம்.

சில சிறப்பு பிள்ளைகளுக்கு வளைந்த பாதங்கள் இருக்கும். வளைந்த பாதங்களுக்காக தயாரிக்கப் பட்ட காலணிகள் ஷுக்கள் அணிவிக்க வேண்டும். அது மிகவும் விலை அதிகமானது. வலியும் அளிப்பதுதான். ஆனாலும், அது போன்ற காலணிகள் அணிவித்து காலப் போக்கில் சிறிது சிறிதாக வளைந்த கால்கள் நிமிர்ந்து ஓரளவுக்காவது நடக்க முடியும். இவ்வகை ஷுக்கள் உட்புறம் மிருதுவாகவும் வெளிப்புறம் எலும்பை வளைக்கும் அளவுக்கு கடினமானதாகவும் தயாரிக்கப்படுகிறது. மென்மையான பாதங்கள் புண் ஆகிவிடக் கூடாது. இவ் வகைக் குழந்தைகளுக்கு -எவ்வளவு வயதானாலும் இவர்கள் குழந்தைகள்தான்- பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும்.

சிறப்பு பிள்ளைகள் தமது வலியையோ, வேதனையையோ, பசியையோ, நோயையோ நமக்குப் புரியும் வகையில் நேரடியாக கூறத் தெரியாதவர்கள். எல்லாவற்றிக்கும் இன்னொருவர் துணை தேவை.

முதலில் இவர்களுக்கு அளிக்கப்பட வேண்டியது சுயதேவைப் பராமரிப்புப் பயிற்சி. அவற்றுள் முதன்மையானது கழிப்பறை பயிற்சி.

இவ்வகை பயிற்சிகள் அனைத்தும் இதற்காக சிறப்புப் படிப்புப் படித்து பயிற்சியும் பெற்ற ஆசிரியகளால்தான் அளிக்க முடியும்.

இது போன்ற எல்லா அடிப்படை நிலைகளும் பொருளாதாரத்தைச் சார்ந்தே இயங்குகின்றன. இவ்வகை பிள்ளைகள் ஜாதி, மதம், இன, பொருளா தாரம் என எந்த வகை ஏற்ற தாழ்வும் இன்றி எந்தக் குடும்பத்திலும் பிறக்கலாம். இது போன்ற பிள்ளைகளைப் பெற்றவர்கள் அனைவரும் ஒரே இனம். ஏனெனில் அவர்களின் சிரமம் ஒன்றேதான்.

அரசு சாரா தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் சிறப்புப் பிள்ளை களுக்கான பள்ளிகள் தமிழ்நாட்டில் மட்டும் 84 பள்ளிகள் உள்ளன. ஆனால் அரசின் பள்ளி ஒன்றே ஒன்று மட்டுமே உள்ளது. அது சென்னை சிட்லபாக்கத்தில் இருக்கிறது. அது, தங்கும் இட வசதியுடன் கூடியது. மன வளம் குன்றிய ஆதரவற்ற குழந்தைகளின் இல்லம் 'பால விஹார்' என்னும் பெயரில் கீழ்பாக்கத்தில் பஞ்சவடியில் இயங்கி வருகிறது. இப்பள்ளிக்குப் பின் புறம் இவ்வகை பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியும் இருக்கிறது.

இன்னொருவர் துணையுடன் பயணம் செய்யும் இப்பிள்ளைகளுடன் வருவோருக்கு இலவச பஸ் பாஸ் கிடையாது. தனியார் நிறுவனங்கள் எவ்வளவு தான் கருணை நோக்கில் பள்ளிகள் நடத்தி வந்தாலும் கூட தொடர்ந்து நடத்த ஆகும் செலவு அதிகம். மேலும் முழு மன வளர்ச்சி அடைந்த பிள்ளைகளை வகுப்புக்கு 40 அல்லது 50 என்று ஒருங்கினைத்து நடத்துவது போல இப்பிள்ளை களை கூட்டமாக உட்கார்த்தி வகுப்பு எடுக்க இயலாது. முழு வளர்ச்சி அடைந்த பிள்ளைகளைக்கூட பெரும் கூட்டமாக அமர்த்தி அவர்களின் தனி வளர்ச்சியில் கவனம் இல்லாமல் நடத்தப்படும் பள்ளிகளை நாம் கண்டிக்க வேண்டும். அப்படி இருக்கும் நிலையில் இப்பிள்ளைகளின் மேல் அக்கறை எடுத்து நடத்தப்படும் பள்ளிகளில் 5 அல்லது ஆறு பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப் படையில்தான் நடத்த முடியும். இவை அனைத்திற்கும் அரசின் உதவி இருந்தால்தான் நல்ல பாராமரிப்பு கிடைக்கும். இவை அனைத்திற்குமாக நடத்தப்படும் போராட்டம்தான் நான் முதலில் கூறியது.

தனியார் நடத்தும் சிறப்புப் பள்ளிகளில் ஆசிரியராக பணி ஆற்றுவோர் பலர் தம்முடைய பங்களிப்பை இவர்களுக்கு ஆற்றும் நோக்கில் வேலை செய்ய வந்தவர்கள். .அதனால் ஊதியம் பற்றிக் கவலைப்படாமல் தன்னார்வத்தினால் பணி ஆற்ற முன் வருகிறார்கள். ஆனால் எல்லோரையும் அந்த நோக்கிலேயே அணுக முடியாது. சிறப்பு பிள்ளைகளைகளின் பெற்றோர்களே தனது முழு நேரத்தையும் பிள்ளைக்காகவே செலவிடும் தியாக உணர்வும் அர்ப்பணிப்பும் இருந்தால்தான் குழந்தைகள் ஓரளவாவது மேம்பட இயலும் என்கிற நிலையில், இப் பிள்ளைகளுக்காகப் பணி ஆற்றவரும் ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உடையவர்களாகத்தான் இருப்பார்கள் என்றாலும் கூட தனது குடும்பத்தையும் குழந்தைகளையும் பராமரிக்கும் அளவாவது ஊதியம் இருந்தால்தானே தனது முழு கவனத்தையும் இப்பிள்ளைகள் மீது செலுத்த இயலும்? பள்ளியில் ஒருசேர பல பிள்ளைகளை வழிநடத்தும் இவ்வகை சிறப்பு ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் தகும். இம்மாதிரியான சவால் மிகுந்த வேலைகளில் ஈடுபடும் இவர்களுக்கு ஊதியம் 2000 ரூபாய்க்கும் குறைவாகக் கிடைக்கிறது. நல்ல வருமானம் கிடைத்து அமைதியான குடும்பப் பிண்ணனி இருந்தால் இவ்வாசிரியர்கள் இன்னமும் முழு ஈடுபாட்டுடன் பணி ஆற்ற இயலும். குறைவான ஊதியம் காரணமாக ஏற்படும் மன உளைச்சலுக்கும் குடும்ப அமைதிக்கு பங்கமும் ஏற்பட்டால் ஆசிரியர்கள் எப்படி தன் கடமையில் முழு மனதுடனும், சிறப்பு பிள்ளைகளிடம் அன்பும் அரவணைப்பும் காட்ட முடியும்?

இத்தகைய பள்ளி நடத்துவோருக்கும் பலவகை சிக்கல்கள். இப்படிப்பட்ட பள்ளிகள் நடத்த இடம் தர முனைவோர் மிகக் குறைவு. சொந்த இடத்தில் பள்ளி நடத்தினாலும், இப்பிள்ளைகளின் ஒழுங்கற்ற சப்தத்தைத் தொந்தரவாகக் கருதும் மக்கள், -இது போன்ற பிள்ளைகளால் பாதிக்கப் படாத மக்கள்- பள்ளியை அகற்ற எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்கின்றனர். ஆகையால் தொடர்ந்து பள்ளி நடத்துவது என்பது கடுமையான விஷயமாக உள்ளது. அரசு உதவி கிடைத்தால் அல்லது இது போன்ற சிறப்பு பள்ளிகள் நடத்த இடம் அளித்தால் இது போன்ற பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் பேருதவியாக இருக்கும்.

சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் ஆயாக்கள் தெய்வத்திற்கும் மேலானவர் கள். எச்சில் ஒழுகி கொண்டும், அடிக்கடி வலிப்பு வந்து திடீர் திடீரென்று விழுந்து கொண்டும், கழிப்பறை உபயோகிக்கத் தெரியாதவரை உணர்வற்று கழிவுகளை வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கும் இப்பிள்ளைகளின் தேவைகள் அனைத்தையும் பள்ளியில் இருக்கும் வரை ஆயாக்கள்தான் கவனிக்கின்றனர். ஆனால் பல இடங்களில் ஆயாக்களுக்கு ஊதியம் 800 ரூபாய் தரப்படுகிறது.

குடும்பங்களில் ஏற்படும் குழப்பங்கள் குறித்தும் பேச வேண்டும். டூம் மாதிரியான சிறப்புப் பிள்ளைகள் பிறக்கக் காரணம் பெண்ணே, அதாவது மனைவியே என்ற மூடத்தனமான எண்ணத்தால், மனைவியை விட்டுப் பிரியும் ஆண்களும் உள்ளனர். வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்வித்து முழு மூளை வளர்ச்சியுடன் பிள்ளைகள் பிறக்கும் என்று ஆண்களைச் சார்ந்தவர் களும் நம்புவதால் பெண்ணுக்கு மண வாழ்க்கை பாதிக்கப் படுகிறது. பெண்ணே தன் குழந்தையின் முழுப் பொறுப்பையும் சுமப்பது, பெண்ணின் பிறந்த வீட்டில் இவர்களைக் கடைசிவரை காப்பற்றும் பொறுப்பும் கூடிவிடுகிறது. ஆண் பெண் இருவராலும் மற்றும் குடும்பத்தாராலும் நிராகரிக்கப் பட்டு இந்தப் பிள்ளைகள் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் பல பொது இடங்களிலும் விட்டுவிடப் படுகின்றனர். இது போன்ற ஆதரவற்ற சிறப்புப் பிள்ளைகளை கண்ட நல்ல உள்ளம் கொண்டோ ர் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்கின்றனர். இல்லையென்றால் அவர்கள் ஆதரவற்ற நிலையில் சமூகத்தில் நிராகரிக்கப்பட்டும் அலைய வேண்டி வருகின்றது. இது போன்ற பிள்ளைகளை தங்குமிடத்துடன் காப்பாற்ற இருக்கும் பள்ளிகள் முன் சொன்னபடி தமிழகத்தில் இரண்டே இரண்டுதான். தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பள்ளி களுக்கு அரசு இடம் கொடுத்து உதவலாம், பள்ளி நடத்த பொருளாதார முறையில் உதவலாம், அல்லது அரசே இவ்வகைப் பள்ளிகளை எடுத்து முன்னுதாரணமாக மிக நல்ல முறையில் நடத்தி பிள்ளைகளுக்குப் பாதுகாப்புத் தரலாம்.

சிறப்புப்பள்ளிகள், அவற்றினாசிரியர்கள், ஆயாக்கள், பள்ளி நடத்துவதில் உள்ள நடை முறைச் சிக்கல்கள் போன்றவற்றைப் பற்றின சில துளிகள் பற்றி பார்த்தோம். பள்ளிக்கு வரும் பிள்ளைகள் தவிர இன்னமும் அநேகர் உண்டு.

சிறப்புப் பிள்ளைகள் என்று அழைக்கப்படும் மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகள் அனைவரையும் ஒரே பட்டியலில் இட முடியாது. அவர்களின் புரிதலின் அடிப்படையில் மற்றும் மன வளர்ச்சியின் அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டு இருப்பார்கள். வெறும் உயிருள்ள அசையும் திறன் மட்டுமே கொண்டவர்கள் முதல், வெளிப்பார்வைக்கு ஒன்றுமே அறிய முடியாதவாறு சாதாரண பிள்ளைகளைப் போல இருப்பவர்கள் வரை பல நிலைகளில் இருக்கின்றனர்.

சரி. இப்படிப்பட்ட பிள்ளைகள் பிறக்கக் காரணங்கள் சிலவற்றைப் பார்ப்போம். பொது மக்களான நாம் இவற்றை உணர்ந்து இவ்வகை குழந்தைகளின் பிறப்பு தவிர்க்கப்பட ஆவன செய்ய வேண்டும். மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகள் மொத்த ஜனத்தொகையில் 3% மட்டுமே. இன்னமும் இது குறையவும், நல்ல மக்களை உருவாக்குவதும் நமது கடமை என்பதையும் உணர வேண்டும்.

1. நெருங்கிய சொந்தத்தில் திருமணம் தவிர்க்கப்பட வேண்டும்.

2. சற்றே மன வளர்ச்சி குன்றியிருந்தாலும் கூட அவர்களை திருமண பந்தத்தில் ஈடுபடுத்தாமல் இருப்பது மிக முக்கியம். அவர்களின் பிள்ளைகள் இன்மும் அதிக மனவளம் குன்றியவர்களாக பிறக்க கூடுதல் வாய்ப்பு உண்டு.

3. குழந்தை பிறந்த உடன், தொப்புள்கொடி அறுக்கப்பட்ட பின் அழ ஆரம்பிக்க வேண்டும். அப்படி அழத் தவறினால், தலைகீழாக தூக்கித் தட்டி அழ வைக்க வேண்டும். அப்படி முயற்சி செய்யாமல் இருக்கும் ஒவொரு வினாடியும் குழந்தையின் மூளை செல்கள் அழிந்து கொண்டே இருக்கும் அபாயம் உள்ளது என்பதை நாம் மிக முக்கியமாக உணர வேண்டும்.

4. கர்ப்பமாய் இருக்கும் சமயம் கருவுக்கு ஊறு விளைவிக்கும் மருந்துகள் எதையும் சாப்பிடக் கூடாது. மருத்துவரின் ஆலோசனை இன்றி வலி நிவாரணி கூட எடுத்துக் கொள்ளக் கூடாது. கருவின் வளர்ச்சியில் மருந்துகளின் பாதிப்பு அதிகம்.

5. கர்ப்பமாயிருக்கும் போது ஆறாம் மாதத்தில் கருப்பையின் நீரை எடுத்து பரிசோதிக்க வேண்டும். அதன் மூலம் குழந்நதைன் மூளை வளர்ச்சி குறித்து அறிய முடியும். ஒரு வேளை கரு மூளை வளர்ச்சி குன்றி இருப்பது தீர்மானம் ஆனது என்றால் மருத்துவரின் ஆலோசனையுடன் அடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவைகள் எல்லாவற்றையும் மீறி குழந்தை பிறந்து விட்டால், அதை பூரணமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்றோர்களுக்கு வர வேண்டும். எனக்கு இப்படிப்பட்ட ஒரு குழந்தையா? என்று மருகாமல் கடவுள் என்னைத் தேர்ந்தெடுக்க ஏதாவது சிறப்புக் காரணம் இருக்க வேண்டும் என்று ஆக்க பூர்வமாக நினைக்கப் பழக வேண்டும். சிறப்பு குழந்தைகளை குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக ஏற்று அன்பு செலுத்த முற்பட வேண்டும்.

சிறப்பு குழந்தைகளை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். எப்போதும் அறையில் அடைத்து வைப்பது, பூட்டிய வீடுகளினுள் விட்டு செல்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அருகில் அமைந்துள்ள பயிற்சி மையத்திற்கு அக்குழந்தையை சேர்க்க வேண்டும். நாம் மட்டுமல்ல நம் போன்ற பலர் உள்ளனர், எனவே ஓநான்'' இல்லை ஓநாம்'' என்ற மனப்பக்குவமும் தைரியமும் அடைய இது ஒரு சிறந்த வழி. குழந்தையும் பசி, தாகம், கழிப்பறை உபயோகம் போன்ற பலவற்றை உணர்ந்து, தனக்கேயான முறைகளில் வெளிப்படுத்தத் துவங்கும். தனியே வீட்டில் வைத்திருந்தால் இந்த வெளிப்பாடு வரவே வராது. எல்லோருடனுமிருப்பதும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பயிற்சி பெருவதிலுமே இது கை கூடும். சில குழந்தைகள் பேச, நடக்கக் கூட ஆரம்பிக்கும். எத்தனை வயது கூடினாலும் இவர்கள் குழந்தைகள் மட்டுமே என்பதையும் பெற்றோர் உணர வேண்டும்.

சிறப்புப் பிள்ளைகளின் மாற்றம் என்பதும் வளர்ச்சி என்பதும் பூ ஒன்று மலர்வதற்கு இணையானது. எனவே உடனே வெளிப்படையாக மாறுதல் கண்ணுக்குத் தெரிய முடியாது. மிக மெதுவாக நிகழும் மாற்றம் ஆகும். விளைவை நோக்கி துரித ஓட்டம் ஓடாமல், பெற்றோர்கள் மிகப் பொறுமையாக பள்ளிகளில் கற்றுக் கொடுத்த பயிற்சிகளில் குழந்தைகளைத் தொடர்ந்து ஈடுபடுத்தி வர வேண்டும்.

மருத்துவர்களும், பெற்றோர்களுக்கு இது ஒரு நிலை. தீர்க்கக்கூடிய நோய் அல்ல. அதிக மாற்றமோ அதிசய நிகழ்வுகளோ இதில் சாத்யம் இல்லை என்ற உண்மையை மெல்ல மெல்ல புரியவைக்க முயல வேண்டும். மருத்துவரின் பங்கு இதில் பெற்றோர்களுக்கு மிக முக்கியமானது. மிராக்கிள்ஸ் எனப்படும் மாயையை சாத்யமாக்குவேன் என்று தவறன நம்பிக்கைகள் கொடுக்காமல் இருந்தால் நல்லது.

இது போன்ற பிள்ளைகளுக்கு ஆகும் செலவு மிக அதிகம். பணம் உள்ளவரகளாக இருந்தால் சமாளிக்கலாம். ஏழை எளிய மக்களுக்கு வலிப்புக்கான மாத்திரை, ஷூக்கள், சத்தான உணவு என்பதெல்லாம் இயலாத விஷயம். அரசு இவ்வகைப் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு கூடுதல் கவனம் எடுத்து அவர்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை அளித்தால் ஏழை மக்கள் தம் சிறப்பு குழந்தைகள் மேல் கூடுதல் அன்பு செலுத்த முடியும். இதை அரசு செய்யும் என்று நான் பூரணமாக நம்புகிறேன். அரசே எடுத்து நடத்தும் சிறப்பு பள்ளிகள் இன்னமும் எண்ணிக்கையில் அதிகமாக்கி, தரமான பயிற்சி தரமான உணவு என்று வழங்கினால் நலம்.

அன்று நடந்த இவர்களின் போராட்டம் இவை அனைத்தையும் உள்ளடக்கியது தான். போராட்டம் நடந்து சில அதிகம் ஆகிவிட்டது என்றால் இதற்கான தேவை முடிந்து விட்டது, எல்லாம் சுபம் என்ற பொருள் அல்ல. போராட்டம் ஒரு பார்வைக் குவிப்பு. அவ்வளவே. இது ஒரு ஆரம்ப முயற்சி.

போராடத்தின் போது என்னை அதிசயிக்க வைத்தது பிள்ளைகளின் ஒழுங்கு, மற்றும் அமைதி காத்த விதம். நன்கு வளர்ந்த சிலர் கூடினாலே சப்தமும், விவாதங்களும், தான் என்ற ஈகோவுடன் போடும் கூச்சலும் இருக்கும். அன்று அத்தனை பிள்ளைகளும், கழிப்பறை உபயோகம், பசி, தாகம் என்று எதற்காகவும் கூச்சல் இடாமல் கைகளில் போராட்ட அட்டைகளுடன் சிலர் நடந்தும் சிலர் சைக்கிளிலும் பயணம் செய்து வந்தனர். ஒழங்கு கொண்டு நடந்து வந்த அத்தனை பிள்ளைகளும் அற்புதமானவர்களே. நம்மைப் போன்றவர்களோ, சிறு விஷயங்களுக்கெல்லாம் சண்டையும், கலவரமும், யுத்தமும், செய்து கொண்டு அப்பாவிகளைக் கொன்று, நமது நன்கு வளர்ந்த மூளைகளையும், உடல்களையும் தவறாகவும், பிடிவாதமாகவும் உபயோகித்துக் கொண்டு இருக்கிறோம். காலத்தையும் மனங்களையும் காயப்படுத்திக் கொண்டு நிரந்தரக் கருப்புப் பதிவுகளை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். தனக்கு உறு துணையாக இருக்கும் அனைத்தையுமே சுல நலம் கொண்டு இயற்கையையும் சேர்த்து, எடுத்தாள்கிறோம். அழிக்கிறோம்.

இவர்களை ஏற்றுக் கொண்டு இவர்களுக்கு அனுசரனையாக என்ன என்ன செய்யமுடியும்? முதல் நிலை இவர்களை பெற்றோர்களும், உற்றோர்களும், சமூகமும் தன்னுடைய ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ள பழக வேண்டும். சிறப்பு பிள்ளைகளால் உண்டாக்கப்படும் மெழுகுவர்த்தி, துடைக்கும் துணி, கைவினைப் பொருள்களையும் வாங்கி ஊக்கப்படுத்தலாம். எனக்கு இப்படி ஒரு குழந்தையா என்று ஆதங்கப்படாமல் தன்னுடன் கூட்டிச் சென்று, அவர்களுக்கும் வெளி உலகத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஓரளவு தேறி தன் வேலைகளை தானே செய்து கொண்டு, கற்றுக்கொடுத்த சின்னச் சின்ன வேலை களைச் செய்யும் பிள்ளைகளுக்கு தகுந்த வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கலாம். உலகம் வேகம் மிகுந்ததுதான். அவரச உலகம்தான். ஆனாலும் சற்றே பயணத்தை நிறுத்தி இவர்களையும் உடன் அழைத்துச் செல்லலாம்.

மருத்துவர்களும் தன்னாலியன்ற மட்டும் பெற்றோர்களுக்குப் புரிய வைக்கலாம். அதை விடுத்து புது புது விதமான சிகிச்சை முறைகளை இருப்பதாகச் சொல்லி பெற்றோர்களின் நம்பிக்கையை தூண்டி பணம் பண்ணும் சொல்லை விடுத்து, உண்மையாக என்ன செய்ய முடியுமோ என்ன செய்ய இயலுமோ அவற்றை மட்டுமே சொல்லி புரிய வைக்கலாம். பெற்றோர்களும் மருத்துவர் உண்மையைச் சொன்ன உடன் மந்திரத்தை நம்பி அடுத்து பணம் செலவழித்து அக்குழந்தையையும் இம்சைக்குள்ளாக்காமல், சரி, என்று ஏற்றுக் கொண்டு முழு குடும்பமும் குழந்தையின் மீது அன்பு செலுத்தலாம்.

சிறப்புப் பிள்ளைகளுக்கு வரும் நோய்களுக்கு- வலிப்பு, விழுந்து அடி பட்டுக் கொள்ளும் காயங்களுக்கு மருந்திட்டு ஆற்றுதல், இவர்களின் உடல் நலத்தின் தேவைகளுக்கு ஏற்ப சத்தான உணவு, நரம்புகளுக்கு வலு சேர்க்கும் மருந்துகள் போன்று பல மருத்துவ கவனிப்பு தற்காலத்தில் அதிகரித்திருப்பதால், இவர்களின் ஆயுளும் அதிகரித்து இருக்கிறது. இப்போது 40 வயது வரை கூட வாழ்கின்றனர்.

சிறப்புப் பிள்ளைகளில் ஒரு பகுதியினர் மட்டுமே அன்று வந்திருந்தார்கள். இன்னமும் நடக்கக் கூட இயலாமல், வெளி உலகத்திற்கு அறிமுகமே ஆகாமல் இருக்கும் பிள்ளைகளையும் கணக்கில் எடுத்து அவர்களின் மேம்பாடுக்கு அரசின் உதவி கிடைக்கவும் அவர்களை நம்மில் ஒருவராக ஏற்கவும் கற்போம், கற்பிப்போம்.

உடல்மொழியில் சிக்கல்

உடல்மொழியில் சிக்கல்

தெருவைக் கடந்து வரும் பொழுது இரு சிறுவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவனுக்கு ஏழு வயது இருக்கும். மற்றொரு சிறுவனுக்கு பனிரெண்டு வயது இருக்கும். வலியவன் பெரியவன், தன்னைவிட சிறிய பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தான். வலி தாளாமல் சிறுவன் அலறினான். இடையில் சென்று திட்டிவிட்டு இருவரையும் பிரித்துவிட்டேன். பெரியவன் சில அடி தூரம் சென்றுவிட்டான். பின் அவன், தன் பக்கம் திரும்பி அடிக்க வரமாட்டான் என்ற தைரியம் பெற்ற சிறியவன் அக்கணத்தில் பெருங்குரலெடுத்து, பெரியவனின் தாயையும் தன்னையும் சம்பந்தப்படுத்தி கூவினான். உடல் ரீதியான சம்பந்தம். இது போன்ற சொற்கள் எப்போதும் எல்லோராலும் சொல்லப்படும் சொற்கள்தான் என்றும் அந்த சொற்களுக்குப் பொருள் தேடவேண்டாம் என்றும் விடமுடியவில்லை. ஏழு வயதேயான சிறுவனின் அங்க அசைவுகளும் அவனின் தொடர் சொற்களும் மனதில் சங்கடத்தை ஏற்படுத்தின.

பலமானவனை வீழ்த்த, அல்லது தன்னால் சரியான பலத்தைப் பிரயோகிக்க முடியாது எதிராளி வலிமை நிறைந்தவன் என்பதனை உணர்ந்து தனது பலத்தையும் பலவீனத்தையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்த சிறுவன் ஒரு பெண்ணைக் கேவலமாக்குகிறான். இது இச்சிறுவன் மட்டும் செய்வதோ அல்லது இந்தக் காலத்தில் மட்டுமே நடைபெறுவதோ கிடையாது.

இரு மதங்களிடையே மோதல், இரு சாதியரிடையே மோதல், ஒரு சாரார் வலிமை மிக்கவர்கள், பொருளாதார ரீதியாக உயர்ந்தவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் என எவராயினும், அங்கு கிழிபடுவது பெண்களின் உடல்கள்தான். தன் வலிமையை நிரூபிக்க, மற்றொருவனை அவமானப்படுத்த என எந்த நிலையிலும் ஆண்களின் செயல்பாடுகள், தான் சார்ந்த பெண்ணைக் காப்பாற்றுவதும், எதிர் மக்களின் பெண்களை உடலாக இயங்கச் செய்வதும் மாத்திரமே. எனவேதான் இருசாராரும் தான் சார்ந்த பெண்களைக் மிகவும் அடக்கி, தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முற்படுகின்றனர்.

போர், சண்டை முதலான நிலைகளிலும் பெண்களின் இருப்பு இப்படியாகத்தான் இருக்கிறது. எனவே பெண்கள் சொத்தாகக் கருதப் படுகின்றனர். சொத்தைக் காப்பாற்றவும், அழிக்கவும் என இரு பிரிவாக ஆண்கள் பெண் உடல் மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

எனவே பெண் பிறப்பிலிருந்து உடலாகவே காப்பாற்றப்படுகிறாள். கால்களை அகட்டி உட்காராதே, துணிவிலக்கூடாது, சிரிக்கக்கூடாது, அதிக ருசிகளுக்கு ஆளாகக் கூடாது, இரவிற்குப் பின் எங்கும் திரியக்கூடாது எனவும் கட்டு திட்டங்களுக்கு ஆளாகிறாள். 'பெண்' என்பது ஒரு இழிச் சொல் போல எப்போதும் தொடர்ந்து வருகிறது. அலங்கரித்துப் பார்ப்பார்கள். நகையிட்டு நடமாட வைப்பார்கள். நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வார்கள். கூடவே பாதுகாப்பு வளையத்துடனேயே. எனவே, பெண் தனது உடல் இழுக்கா, அருவருப்பா, பெரும் வரமா என்று புரியாமலே வாழ்ந்து மறைந்தும் விடுகிறாள்.

திருமணத்திலும், அதற்குப் பின்னும் இக் கட்டு திட்டங்கள் உடன் உலாவிக் கொண்டே இருக்கும், இறப்பு வரை. அவள் தனது மறு உற்பத்தி களையும் இவ்வாறே தன் கையிலிட்ட கடமைகளைக் காத்து, அவளுக்கு மறுபடியும் அளித்துவிட்டு மறைகிறாள். மனம், உடல் சார்ந்த கட்டுப்பாடு களுடன்.

அனைத்துப் பெண்களுக்கும் கட்டுபாடுகள் ஒன்று போல இருக்க முடியாது. ஜாதி, மதம், பொருளாதாரம் சார்ந்து கயிற்றின் நீளம் கூடலாம் அல்லது குறையலாம். தன் உடல் சார்ந்த எண்ணம் எழ இங்கு இடமே கிடையாது. ஆண் வர்ணனைகள் பெண் உடலைப் பற்றி ஆண்டாண்டு காலமாக காதலாக, பிரிவாக கொண்டாடுதலாக எழுதப்பட்டுள்ளது, பேசப்பட்டுள்ளது. எல்லாவற்றிக்கும் மேல் அவ்வுடலை அடையவும் அடையலாம்.

சுயம் அறிந்தபின் எழுதவந்த பெண்கள் பலர் இந்த நிலை பற்றி பேசி எழுதி இருக்கிறாகள். ஆணின் ஆதிக்கம் பற்றி, குடும்பத்தில் பெண்ணின் இருப்பு பற்றி, கணவன் மனைவி-ஆண் பெண் சமத்துவம் பற்றி, பெண் தன் பிறப்பிலிருந்து ஆண் சார்ந்த வாழ்வு வாழும் நிலை பற்றி, ஒரு வேளை உணவுக்காக-தன் குழந்தையின் பாலுக்காக- தன் உடல் புழங்கக் கொடுக்கும் பெண் பற்றி, அலுவலகத்தில் மற்றும் அரசியலில் பெண்ணின் இருப்பு பற்றி என எல்லாத் தரப்புகளிலும் கவிதைகளும், சிறுகதைகளும், நாவல்களுன் ஏற்கனவே பெண்களால் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இவற்றின் தொடர்ச்சியாகத்தான் பெண் உடல் மொழி எழுதவரும் பெண் கவிஞர்களையும் சங்கிலிக் கண்ணியாகக் கொள்ளப்படல் வேண்டும். மற்றொரு சிறு வெளித்திறப்பு என்பதாக் கருத வேண்டும். பொதுப் பெண்ணியம் சாத்தியமில்லாதது போலவே பொது உடல் மொழியும் சாத்தியமில்லாததே.

தனது உடல் அடையாளம் காணப்படுதல், தனது உடல் தனதென்று உணர்தல், தன்னுடல் போற்றுதல் என்பது ஒருவகைக் கொண்டாட்டம்.

முன்னமே சொன்னபடி பெண் உடல் அவளின் விருப்பம் சார்ந்தோ, தேர்வு சார்ந்தோ வழங்கப்படுவது கிடையாது. அங்கீகரிக்கப்பட்ட உறவாயினும், அங்கீகரிக்கபடாத உறவாயினும் கூட்டமாக அல்லது தனியாக என்று எந்த இடத்திலும்.

எனவே அதிலிருந்து விடுபட்டு தன் உடல் தனதென்று உணர்ந்து, தன் விருப்பம் முதன்மையாகக் கொண்டு தன் உடல் ஆணுக்கு வழங்குதல் என்பது ஒரு வகை. இன்னொருவகையில் ஜாதி, மதம் தன்னுடலிருந்து பிய்த் தெடுக்கப்படுகிறது. பின் உடல் பகிர்தல் நிகழ்கிறது. எனவே உடல் தனதாகக் கருதப்படுவதால் தேர்வு தன்னுடையது ஆகிறது. அது ஆணா, பெண்ணா என்பதும் கூட.

எந்த ஆணுக்கும் தனது உடல் வழங்கப்படாதிருத்தல், தன் உடல்சார் தேவையை தன்பால் உறவுடன் மீட்டல், மறு உற்பத்திக்கு உடலை அளிக்காமல் மறுத்தல்; இது இன்னுமொரு வகை.

இன்னமும் இது போன்ற தனது ஜாதி மத அடையாளத்துடன் தன்னுடல் கொண்டாடுதல் மேலும் ஒரு வகையாகும். பல பிரிவுகளுக்குச் செல்லும் வழியாகத்தான் உடல் மொழி வழிவகுக்கும்.

உடல் மொழி என்பதில் இவைகள் ஒரு சிறு கீற்று மட்டுமே. ஆனால் இவை மட்டுமே பெண்ணியம் பேசும் கவிதைகள் என்பதில் உடன்பாடு கிடையாது. இந்த உடல் மொழி பேசும் கவிஞர்களிடமும் குழப்பமும், முரணும் உண்டு. குழப்பமே திறப்புக்கு வழி வகுக்கும்.

உடல் மொழி பற்றி எழுதும்-பேசும் கவிதைகளில் கட்டமைக்கபட்ட சொற்களும், சொல்லடுக்குகளும் எல்லாமே -உடல் உறுப்புகளுக்கான சொற்கள் உட்பட- ஏற்கனவே புழக்கத்தில் இருந்துகொண்டு இருப்பவைகள்தான்.

எண்ணங்களையும் கருத்துக்களையும் மற்றொரு தளத்திற்கு கொண்டுசெல்ல ஆயத்தமான ஒரு முயற்சி என்று இவைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். தொடர் செயல்பாடுகளாலும், முயற்சிகளாலும், பரிசோதனைகளாலும் மட்டுமே எதிர்காலத்தில் புதிய தளங்களையும் மொழியையும் கண்டறிய இயலும்.

உடல் மொழிக்குப் பயன் படுத்தப்படும் அழகியல் சொற்கள், படிமங்கள், கொண்டாட்டச் சொற்கள் என எல்லாம் முன்னம் இருந்தவைகளிலிருந்துதான் எடுத்தாள வேண்டி உள்ளது.

பெண் உடல் சார்ந்த எழுத்துக்களில் இன்னமும் நிராகரிக்கப்படும் பெண்ணுடல், உபயோகப்படுத்தக்கூடாத உடல்களின் உபயோகம் போன்றன வற்றைப்பற்றி எழுத வேண்டியுள்ளது.

புற்று நோயால் மார்பகங்கள் அகற்றப்பட்ட பெண் உடல் உதாசீனப் படுத்தப் படுகிறது; அவளைச் சார்ந்தவர்களாலேயும், சமூகத்திலும், சந்தையிலும்.

ஆணுடன் தன் உடலைப் பகிரத் தயாராயிருந்தாலும்கூட, கருப்பை சிதைந்த பெண் நிராகரிக்கப்படுகிறாள். நடுவயதில் கருப்பை அகற்றப்பட்டாலும் கூட அவள் சார்ந்த ஆணால் குறையுடைவளாகவும், உபயோகம் அற்றவளாகவும் கருதப்படுகிறாள்.

பூப்பெய்தாப் பெண்ணுடல் உடலாகக் கருதப்பட மாட்டாது. மறு உற்பத்திக்கு இயலாத உடல் உடலல்ல.

ஆண்மையற்ற ஆண்கள் உற்ற நண்பன் அல்லது உறவு மூலமாக தன் மனைவியைக் கருத்தரிக்க வைத்து, தம் ஆண்மையை, இயங்கு திறனை நிரூபித்துக் கொள்ள முடியும்.

இன்னொரு நிலையில் உபயோக்கிக் கூடாத உடல் உபயோகம் ஆதல் என்று உள்ளது.

இவ்வகைப் பெண் உடல்கள் சீரழிக்கப்படுகின்றன. சிறுமிகளின் உடல் கலவிக்கு உபயோகப்படுத்தபடுகிறது. மனம் வளரா, உடல் மட்டுமே வளர்ந்த பெண் -எல்லா இடங்களிலும் இல்லையென்றாலும் சில தருணங்களில்- பெண் உடலாகப் பார்க்கப்படுகிறாள். மன நோய்க்கு ஆளாகி தெருவில் திரியும் பெண் கர்ப்பமாக்கப் படுகிறாள்.

அழகான பெண்ணின் உடல் தற்கொலைக்குப் பின்னும் உடலாகவே பார்க்கப் படுகிறது பிணவறைகளில்.

உடல் பற்றிப் பேசும் எழுத்துக்களே ஆபாசம் என்று கருதுபவர்கள் அறியாமை குறித்து பரிதாப்பப்படத்தான் முடியும். மருத்துவமனைகளில் பிரசவம் ஆபாசம். எய்ட்ஸ் ஆபாசம். அதற்கு மருந்து கண்டு பிடித்தல் ஆபாசம். நோயாளிகளை அரவணைத்தல் ஆபாசம் எனக் கொள்ளல் வேண்டி வரும். எது களையப்பட வேண்டும், எது குறித்து கவலை கொள்ள வேண்டும் என்ற தெளிவு இன்னமும் வரல் வேண்டும்.

பெண் என்பவள் எவற்றையெல்லாம் எழுதலாம், எழுதக் கூடாது. எங்கு செல்லலாம், செல்லக் கூடாது. எந்த மேடைகளில் பங்கு பெறலாம், பங்கெடுக்கக் கூடாது. எவரையெல்லாம் கொண்டாடலாம், போட்டு உடைக்கலாம் என்பது போன்ற இன்னமும் பலவும் ஆண்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிற நிலைமை மாற வேண்டும். எவற்றை எழுதவும், எழுதாமல் இருக்கவும் கவிஞர் தன் சுயம் சார்ந்து மட்டுமே முடிவெடுக்க வேண்டும். ஆதரவும், மறுப்பும் பக்க வாட்டில் இருக்க வேண்டும்.

ஒளி உருண்டை விற்பவள்

ஒளி உருண்டை விற்பவள்


அடர் ஆரஞ்சு வண்ணத்தில் அடர் நீல பார்டர் இட்ட பாவாடை கட்டி இருந்தாள் அப்பெண். வெளிர் ஆரஞ்சு தாவணியும், அடர் நீல ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். 'ஆரஞ்சு இருபது, ஆரஞ்சு இருபது' எனக் கூவினாள். எனக்கோ எங்கோ கணக்கு இடருவதுபோல இருந்தது. ஆறும், ஐந்தும் பதினொன்று, ஆறு தடவை ஐந்திருந்தால் முப்பது. இடைப்பட்ட ஒரு எண்தானே இருபது? என்றாலும் கணக்கிற்குள் கட்டுப்படாதவாறு கூவல் என்னைத் தொடர்து வந்தது. 'மிட்டாய் ஆரஞ்சு, மிட்டாய் ஆரஞ்சு' கூவல் தொடர்ந்தது. இதுவும் முன்னுக்குப்பின் முரணாய் உள்ளது. ஆரஞ்சு மிட்டாய் உள்ளது. மிட்டாய் ஆரஞ்சு எங்கே உள்ளது? கூவல் அருகில் கடந்த போது பெண் கைகளில் நான்கு ஆரஞ்சு களையும், கூடையில் அநேக ஆரஞ்சு களையும், தலையில் சுமந்தும் ஆரஞ்சுப் பழத்தின் மீதான தனது திட நம்பிக்கையை உரிச்சொல்லாக முன்னெடுத்தும் கூவிக்கொண்டு சென்றாள். இரு கணக்குகளுமே அவளுக்கு சரி என்ற என் கணக்கு சரியாயிற்று.

பெண்கள், ஆண்கள் அநேகர் மிட்டாய் ஆரஞ்சு வாங்கினார்கள். அடர் ஆரஞ்சுத் தோலை அப்புறப்படுத்தி கைக்குக் கீழே உடன் தரையில் எறிந்து கொண்டே நகர்ந்தனர். தாவணி நிறம் கொண்ட உட்சுளைகளில் சிறு நரம் பெடுத்துவிட்டு, பின் கொட்டைகளையும் நீக்கி வீசிப் பிள்ளைகளுக்கு ஊட்டியும், தாங்களும் உண்டும் தீர்த்தனர். மெலிதான ஆரஞ்சு நிற பிளாஸ்டிக் பைகளுக்குள்ளும் சில குடியேறின. மற்றொரு கைகளுக்குப் பயணப்பட ஊட்டிவிட்ட சுளைகளின் சில மணிகள் தரையில் சிதறிக் கிடந்தன. தேளின் ஒளி பொருந்திய திரவம் மிகுந்த ஊடுருவும் கொடுக்கு களென தரையில் படுத்தும் மல்லாந்தும் இறைந்து கிடந்தன முத்துக்கள்.

கூடையில் நிரம்பிய ஆரஞ்சுகளிருந்தும், கைகளில் இருக்கும் சிறு உருண்டைகளிலிருந்தும் வெளிச்சம் பீரிட்டு அவளின் முகத்தில் பிரதி பலித்தது. அவள் செல்லுமிடமெங்கும் ஒளி வழிந்து பின் தொடர்ந்தது. அவள் காசிற்கும், காசில்லாமல் ஆசைப்படும் ஏழைச் சிறுவர்களுக்கு இலவசமாகவும், கைகளில் இட்டுக்கொண்டே இருந்தாள். அவள் கிள்ளிக் கொடுத்த பழங்களின் ஒளி வாங்கியவர்களிடமும் சிறிது நேரம் தங்கி இருந்தது. காசற்ற சிறுவர் களுக்குக் கையில் கிடைத்த அந்த ஒளி உருண்டை தன் ஒளியை அவர்களின் முகத்தில் கூடுதலாக சற்று நேரம் தங்க விட்டும் சென்றது. சாப்பிட்டுக் கொண்டிருந்த பிள்ளைகளின் உணவுக் குழாய்களில் சில அங்குலம் வரைஅந்த ஒளித்துகள்கள் உட்சென்றது காண முடிந்தது. விஷமருந்திய நீல கண்டனைப் போல அல்லாமல் இவர்கள் ஒளி அருந்திய, ஒளிபொருந்திய கழுத்துக்களைக் கொண்டவர்களாக அலைந்து தெருக்களில் திரிந்து கொண்டிருந்தனர்.

ஆரஞ்சுப்பாவாடை தாவணியைத் தடுத்து நிறுத்தி ஒளி உருண்டை களைப்பற்றி விசாரித்தேன். ஆனால், அவளோ அவை ஆரஞ்சுப்பழங்கள் என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். நான் தொடர்ந்து அவளிடம் விவாத்தித் தேன். ஒளி பொருந்திய கழுத்துக்களையும், உணவுக் குழாய்களையும் அவளின் சுடர் மிகுந்து பிரகாசிக்கும் உடலைப் பற்றியும் வலியுறுத்தி விசாரிக்க, அவள் மெல்ல மெல்ல, அக்கம் பக்கம் பார்த்து என்னைத் தனியிடத்திற்கு இட்டுச் சென்றாள்.

அவள் கண்கள் மினுக்க, உடல் இலேசாகிப் பரவசம் கொள்ள கூறத் தொடங்கினாள். ஓநேற்றுத்தான் சூரியனிடமிருந்து ஒரு பெருங்கூடை ஆரஞ்சுக் குழம்பெடுத்து வந்தேன். அதை என் வீட்டில் கொட்டி சிறு சிறு உருண்டை களாக்கி, வைத்துள்ளேன். இன்னமும் என் இருப்பிடத்தில் சூரிய பிஞ்சுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கூடை நிறைய அள்ளி வந்துள்ளதை விற்றுத்தான் உணவுக்கு அரிசி வாங்க வேண்டும்.ஔ

அவசர அவசரமாக நான் கேட்டேன் 'உன் வீட்டில் இருக்கும் சிறு உருண்டைகள் உஷ்ணம் கொண்டு சோறு வடிப்பாயா? உன் விட்டின் கூரை இது வரை எரிந்து சாம்பல் ஆகாமல் இருக்குமா? உன் உடல் வேகாமல் எப்படி ஒளி சுமக்கிறாய்?'

ஓமறுபடியும் மறுபடியும் சொல்கிறேன், இவை ஆரஞ்சுப்பழங்கள் என்று. மேலும் சூரியனின் குழம்பை நான் எடுத்து பக்குவமாக என் வீட்டின் மண்ணில் இட்டுப் புதைத்து வைத்திருந்தேன். என் அரவணைப்பால் அவற்றை உஷ்ணமற்ற உருண்டைகளாக மாற்றியிருக்கிறேன். மேலும் அதனுள் சுவை மிகுந்த சுளைகளும் உண்டு. அவற்றை உண்ட மக்கள் தாமே ஒளிபொருந்திய உணவுக் குழாய்களுடன் திரிகிறார்கள். எனவே இவைகள் ஆரஞ்சுப் பழங்கள்தான்.ஔ

நான் அவளுடன் தொடர்ந்து நடந்து அவளின் இருப்பிடத்திற்கு வருவேன் என்று பிடிவாதம் பிடித்தேன். 'வீடு நிறைய ஒளிஉருண்டைகளைச் சேமித்து வைத்திருக்கும் உன் வீடு, கோடி சூர்யப் பிரகாசத்தோடுதான் இருக்க வேண்டும்.'

ஊரின் கடைசியில் சலனமற்று இருந்த, தனக்குள் இருக்கும் ஒளி உருண்டைகளைப் பற்றி எந்த ஆரவாரமும் செய்யாமல், அமைதியாய் கூரையிட்ட தன் சிறு வீட்டின் கதவைத் திறந்தாள். அவளின் வீடு உள் முழுவதும் பிரகாசத்தைத் தன்னுள் இருத்தியதாக இருந்தது. கண்கள் இருட்டினுள் பழக இயலாதது போலவே, பெரும் ஒளியிலும் செயலற்றுத் தடுமாற்றம் கொண்டன. ஒளிக்குக் கண்களை மெல்லப் பழக்கிக் கொண்டேன். இமைகளை மூடி மூடித் திறக்க, இருளும் ஒளியுமாய் மாறிமாறிக் கண்களைச் சமநிலை கொள்ளச் செய்தன. அறையின் மூலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த அடர் ஆரஞ்சு உருண்டைகளின் ஒளி கூரையின் ஓட்டை களில் ஊடுருவி ஒளிக்கற்றைகள் மேல் நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தன.

திடீரென எனக்குள் பெரும் சந்தேகம். அவளிடமே கேட்டேன் 'சூரியனிலிருந்து நீ எடுத்து வந்த ஒளியின் இடம் இட்டு நிரப்பப்படாமல் அல்லவா இருக்க வேண்டும்? ஆனால், நேற்று மாலை சூரியன் எந்தக் கரும் பொட்டும் இல்லாமல்தானே இருந்தது?'
'முட்டாளே, இதற்குத்தான் சொன்னேன், என்னைப் பின் தொடராதே என்று. எல்லாவற்றையும் உன் அளவு கொண்டு கணக்கிட்டுவிடுகிறாய் நீ. ஆரம்ப முதலே ஆரஞ்சு பதினொன்றும், முப்பதும் உன் கணக்கு. இருவது என் கணக்கு. எடுத்த ஒளியில் குழிகளைக் காண்பது உன் கணக்கு. எடுத்தவுடன் ஒளி ஓடி சமனாவது என் கணக்கு. ஒளி உஷ்ணம் தரும் என்பது உன் கணக்கு. ஒளி பசியாற்றும் அது என் கணக்கு. ஒளியைக் காண்பது உன் கணக்கு. ஒளியை உண்பதும், உண்ணச்செய்வதும் என் கணக்கு. ஒளி என்றால் ஒளி மட்டுமே, இருள் என்றாள் இருள் மட்டுமே உன் கணக்கு. காலை ஆரஞ்சுக்குப் பின் காலையும், மாலை ஆரஞ்சுக்குப் பின் இருளும் என் கணக்கு. அளக்காமல் இல்லாமல் செய்வது என் கணக்கு. அளந்து இருப்பு வைப்பது உன் கணக்கு. இனிமேலும் என்னைப் பின் தொடராதே. எனக்கு இன்னமும் மிட்டாய் ஆரஞ்சு விற்பனைக்கு உள்ளது. வழிவிட்டு விலகு.'

மூர்க்கமாக மோதித் தள்ளிவிட்டாள் அவள். அவளின் பலம் ஆரஞ்சின் ஒளியை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது. அந்தி மாலையின் அடர் ஆரஞ்சு நிறத்தையும், அதன் பின்னான அடர் நீலத்தையும் ஆடையாக அணிந்திருந்த அவள், மறையும் சூரியனின் வெளிர் ஆரஞ்சை தாவணியாக்கி அணிந் திருந்தாள். ஒளி இறக்கைகளைப் படரவிட்டுத் தலையில் ஒளி உருண்டை களைச் சுமந்து, மெல்ல மெல்ல மிதந்து சென்றாள். அவள் கூடையில் சூரிய உருண்டைகளைச் சுமந்து பெரு நகர வெளிகளில் இரவும் பகலும் சுற்றித் திரிவதும், அலைவதுமாய் இருப்பதனாலேயே பெரு நகர வானம் எப்போதும் மெல்லிய ஆரஞ்சை பூசிக்கொண்டிருக்கிறது. இது தெரியாமல், நான் எதோ பெரு நகர ஆரஞ்சு விளக்குகள் மேல் நோக்கிப் பயணம் செய்கின்றன என்று அவள் கூறியபடியே ஒரு முட்டாளாகவே இவ்வளவு காலமும் இருந்திருக் கிறேன்.

கிருஷாங்கினி.
34, சிட்லபாக்கம் 2ஆம் பிரதான சாலை,
தாம்பரம் சானடோ ரியம்,
சென்னை-600 047