Thursday, July 29, 2010

உயிரா வெறும் கறியா?

உயிரா வெறும் கறியா?
___________________போக்குவரத்து அதிகமாகிவிட்ட தெரு. இரண்டுசக்கர வாகனங்களும், நாலு சக்கரமும், ஆறு சக்கரங்கள் கொண்ட லாரிகளும், கண்டெய்னர்களும் என, எப்போதும் இரைச்சல் வழிந்து ஓடிக் கொண்டிருக்கும் தெரு. அவ்வப் போது திடீரென நிறுத்தப்படும் வண்டிகளின் ஒலிகளும், தொடர்ந்த மனித ஓலங்களும், சண்டைகளும் என்று, நடந்த அல்லது நடக்கவிருந்த விபத்தை சப்தங்களின் அளவைக் கொண்டு வீட்டின் மற்றொரு மூலையில் இருந்தாலும் கூட ஊகிக்கலாம். வீண்சண்டை, வெறுங்கூச்சல் என்றுகூடத் தெரு சப்தங்களால் நிறையும். எப்போதும் வேகத்துடன் கடக்க முயலும் வாகனங் களுக்கு, சிறிதே குறுக்கீடாக பெரிய வாகனங்கள் இடை நின்றுவிட தொடர்ந்து ஒலிக்கும் ஆத்திரமும், ஒலிப்பான்களும் அதிரச் செய்யும் வேகம் முனை திரும்பிக் கடக்க என எப்போதும் அவசரத்துடன் மூச்சுத் திணறி தத்தளித்துக் கொண்டு அந்த குறுகலான தெரு தன் உடலைக் கிடத்திக் கொண்டு சற்றும் முனகாமல், அரைத்த கரும் பாம்பென சப்பையாய்க் கிடக்கும்.

அன்றும், எப்போதும் போல கூடுதல் அவசரத்துடன் கிறீச்சிட்ட இரு சக்கர வாகனம். ஆனால் பின் எந்த சத்தமும் இல்லாமல் போக்குவரத்து ஓரமாக நிகழ்ந்து கொண்டே இருந்தது. இருசக்கர வாகனங்கள் தடுமாற்றம் இன்றியும், நாலு சக்கர வாகனங்கள் சற்றே தயங்கிப் பின் தொடர்ந்து ஓடிக் கொண்டும் இருந்தன. ஆனால், அனைவரின் பார்வையிலும் பரிதாபமோ, கோபமோ இல்லை. சிலர் கருந்தரையைப் பார்த்து சங்கடம் மட்டும் பட்டனர். நிறுத்தி விசாரிக்கவோ உதவவோ செல்லவில்லை. கடும் அமைதி. கூச்சல் இல்லை. என்ன?

தெருவுக்கு வந்து பார்த்தேன். பாதித் தெருவின் ஒரு ஓரத்தில் நிறுத்தப் பட்டிருந்த டி.வி.எஸ்.இல் பின் அமரும் இருக்கையின் இரு புறமும் கால்கள் கட்டப்பட்டு தலை கீழாக இறகு விரித்து சற்றே தலைகளைத் தூக்கி அசைந்து கொண்டிருந்தன வெண்ணிற கோழிகள். இடப்பக்கம் ஐம்பதும், வலப்பக்கம் ஐம்பதும் (ஒரு உத்தேசக் கணக்குதான்) தொங்கிக் கொண்டிருந்த கொத்துக் கொத்தான கோழிகளில் வலப்புறம் இருந்த கூட்டத்தில் மற்றொரு வண்டி மோதியதால் கால்களைக் கட்டியிருந்த கயிறு அறுந்து தரையில் சில கோழிகள் சிதறிக் கிடந்தன. எந்த எதிர்ப்பும், வலியும், முனகலும் இன்றி உறைந்து கிடந்தன அவை. ரோஜாப்பூவும் மல்லிகையும் கலந்து கட்டப்பட்ட பூப்பந்து போல வெண்ணிற இறக்கைகளும், விபத்தால் கிழிந்த உள்சதை ரோஸ் நிறத்திலும் தெரிய ஆங்காங்கே உருண்டையாய் பந்துகளாய்க் கிடந்தன. வாகனங்கள் அதன் மீது ஏறாமல் சற்றே இடையிடை பிரிந்து, தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன. எதிர்ப்பின்றி, இன்னமும் சிலமணி நோத்தில் உயிர்விட இருக்கும் அவைகள் குற்றுயிரும் குலையுயிருமாய் கரும் தரையில் கிடந்தன.

உணவுப் பழக்கம் என்பது அவரவர் உரிமை. அதைக் கேள்வி கேட்கவோ தடை செய்யவோ இல்லை இக்கட்டுரை. ஆயின் இறப்புக்கு முன் வரை ஒரு உயிரைப் பேணுவது ஆறறிவு என மார் தட்டிக் கொள்ளும் மனிதனின் கடமை அல்லவா? கறிக்காகத்தான் உயிர் வளர்க்கப்படுகிறது. 'கொன்றால் பாவம் தின்றால் போச்சு' என்ற பழமொழியையும் மனிதன் உண்டாக்கி வைத்துள்ளான். கொன்று சமைக்கும் வரை அதை ஒரு உயிராகக் கருதாமல் கறியாகக் கருதுவது நியாயம்தானா?

சமீப காலமாக கோழிக்கும் மற்ற பறவையினத்திற்கும் ஏற்பட்டிருக்கும் நோயும், அதன் விளைவாக மற்ற செய்திகளும் ஊடகங்கள் வழியாக அடிக்கடி காண்பிக்கப்படுகின்றன. பறவை, உணவாக முடியாமல் போய் விடுகிறது. உணவானால் மனிதனையும் தாக்கும் என்பதும், உணவாகாமல் கூட மற்றவர் களை பாதிக்கும் நோய் அது என்பதைக் கண்டறிந்துள்ளான் மனிதன். தனக்கு உணவாகாதது மட்டுமல்ல உபயோகமற்ற அவற்றிக்கு உணவளிப்பதும், பரா மரிப்பதும் பெருஞ்சுமையாகி விடுகிறது. அவ்வப்போது மனிதர்களால் உண்ணப் படாததால் எண்ணிக்கை குறையாமல் மாறாக மிக அதிகமாகிப் பெருகி பெரும் கேள்வியாய் மனிதன் முன் நிற்கிறது எழும்பி. மக்கள் நோய் பயத்தில் ஒதுங்கி ஓடிவிடுகிறார்கள். பண்ணையில் வேலை செய்யும் மனிதனுக்கும் போதுமான பாதுகாப்பில்லை. கோழிகளின் தீவனத்துடன் ஒட்டிக்கொண்டு வரலாம் நோய்க் கிருமிகள் என்று அஞ்சப் படுகிறது. எனவே உணவுப் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. இவை அனைத்தும் முதலில் வெளிநாடுகளில் நடை பெறுவதாகக் காட்டப்பட்டு வந்தன. சிங்கப்பூரில், இந்தோனேஷியாவில் கோழிகள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டு வந்தன. எல்லாமே ஊடகங்கள் மூலமாகக் காண முடிந்தது.

தற்போது நம் நாட்டிலும், இதே நோயும், இதே பிரச்சினைகளும், இதே கூட்டம் கூட்டமான அழிப்பும் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. வழக்கம் போல, நம்மிடத்தில் இல்லை அங்குதான் என ஒருசாராரும், இதே சொற்களை மற்றசாரார்களும் சொல்லி வருகின்றனர். சர்ச்சை செய்கின்றனர். மிகச் சாதாரணமாக கொல்லப்பட்டவைகளின் எண்ணிக்கை இருபதாயிரம், எழுபதாயிரம், லட்சம், பல லட்சம் என்று எண்ணிக்கைகளும் தொடர்ந்து அறிவிக்கப்படுகிறது.

மனிதனுக்கு உணவாகாததினால், கேடு விளைவிப்பதினால், நோய் பரப்பும் அபாயம் இருப்பதினால், பறவைகள் அழிக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.

என்னுடைய சந்தேகங்கள் இவை.

இதற்கு முன்பாக இது போன்ற நோய் நம் நாட்டில் பறவைகளைத் தாக்கியுள்ளதா?

மனிதனால் மனிதனுக்குப் பரவும், (இருமல் / தும்மல் மூலமும்) சார்ஸ் என்ற நோய் கண்டறியப்பட்ட பொழுது ஏன் மருந்து கண்டுபிடிக்காத அந்தப் பரவும் நோய்க்கு ஆளான மனிதர்களை நாம் கூட்டம் கூட்டமாகக் கொல்ல வில்லை? அப்படி கொன்று எரித்திருந்தால் நோய் பரவுவதைக் கட்டுப் படுத்தியிருக்கலாம் அல்லவா?

மேலும் ஆட்கொல்லி நோயுற்ற மனிதர்களையும், கட்டுப்படுத்த இயலாமல் மற்ற நோய் தாக்கப்பட்ட மனிதர்களையும் நாம் ஏன் அழிப்ப தில்லை? தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அவர்களை ஏன் காப்பாற்ற வேண்டும்?

மருத்துவத்திற்கான பொருளாதாரம் இல்லாமலும், சிகிச்சை பலன் அளிக்காது என்ற கடைசிக் கட்டத்திலும் கூட கருணையுடன் செய்யப் படுவது கூட, மனிதர்களுக்கானதென்றால் கொலை என்று சட்டம் சொல்லுகிறதே.

மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறோமே?

மனிதர்களைத் தாக்கி, உயிர் போக்கும், மற்ற மனிதர்களுக்கும் பரவும் வாய்ப்புள்ள பல நோய்களுக்கு மருந்து கண்டு பிடிக்கும் விஞ்ஞானம் மற்ற உயிர்களுக்கும் உதவும். அப்படித்தானே?

பெரிய கருப்பு பிளாஸ்டிக் பைகளில் கழுத்தொடித்து இறக்கச் செய்து உள்ளிடும் செயல்கள் கூட வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி ஆகியுள்ளதா?

அழிக்கத்தான் வேண்டும் என்ற கடைசி நிலைக்குத் தள்ளப் பட்டிருந் தாலும் ஒவ்வொரு நொடியும் அவை ஊடகங்களில் உயிருடன் அசை பவையாகவும், பிறகு படக்கென்று கழுத்து திருக்கப்பட்டு கொல்லப் படுபவை களாகவும் தொலைக்காட்சிகளில் திரும்பத்திரும்பக் காட்டப் படத்தான் வேண்டுமா? (ஆனால் பல விபத்துக்களையும் எரிந்த குழந்தைகளையும், இறந்த மனிதர்களையும் ரத்தத்துடன் அடிக்கடி காட்டும் ஊடகங்கள்தான் இவை)

நெரிசலில் சிக்கி உயிர்கள் பலி, விபத்தில் பலி, கலவரத்தில் பலி, என்று கணக்கிட்டு பரிதாபமாக உயிரிழந்தனர் என விவரிக்கும் மனித இனம் மற்றவைகளை வெறும் கறியாகக் கணக்கிட்டு லட்சக் கணக்கில் என்று அறிவிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?

வாடிய பயிரைக் கண்டு வாட வேண்டாம். உயிரை வெறும் கறியாக கருதாமல் இருந்தால் போதும்.

No comments: