உடல்மொழியில் சிக்கல்
தெருவைக் கடந்து வரும் பொழுது இரு சிறுவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவனுக்கு ஏழு வயது இருக்கும். மற்றொரு சிறுவனுக்கு பனிரெண்டு வயது இருக்கும். வலியவன் பெரியவன், தன்னைவிட சிறிய பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தான். வலி தாளாமல் சிறுவன் அலறினான். இடையில் சென்று திட்டிவிட்டு இருவரையும் பிரித்துவிட்டேன். பெரியவன் சில அடி தூரம் சென்றுவிட்டான். பின் அவன், தன் பக்கம் திரும்பி அடிக்க வரமாட்டான் என்ற தைரியம் பெற்ற சிறியவன் அக்கணத்தில் பெருங்குரலெடுத்து, பெரியவனின் தாயையும் தன்னையும் சம்பந்தப்படுத்தி கூவினான். உடல் ரீதியான சம்பந்தம். இது போன்ற சொற்கள் எப்போதும் எல்லோராலும் சொல்லப்படும் சொற்கள்தான் என்றும் அந்த சொற்களுக்குப் பொருள் தேடவேண்டாம் என்றும் விடமுடியவில்லை. ஏழு வயதேயான சிறுவனின் அங்க அசைவுகளும் அவனின் தொடர் சொற்களும் மனதில் சங்கடத்தை ஏற்படுத்தின.
பலமானவனை வீழ்த்த, அல்லது தன்னால் சரியான பலத்தைப் பிரயோகிக்க முடியாது எதிராளி வலிமை நிறைந்தவன் என்பதனை உணர்ந்து தனது பலத்தையும் பலவீனத்தையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்த சிறுவன் ஒரு பெண்ணைக் கேவலமாக்குகிறான். இது இச்சிறுவன் மட்டும் செய்வதோ அல்லது இந்தக் காலத்தில் மட்டுமே நடைபெறுவதோ கிடையாது.
இரு மதங்களிடையே மோதல், இரு சாதியரிடையே மோதல், ஒரு சாரார் வலிமை மிக்கவர்கள், பொருளாதார ரீதியாக உயர்ந்தவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் என எவராயினும், அங்கு கிழிபடுவது பெண்களின் உடல்கள்தான். தன் வலிமையை நிரூபிக்க, மற்றொருவனை அவமானப்படுத்த என எந்த நிலையிலும் ஆண்களின் செயல்பாடுகள், தான் சார்ந்த பெண்ணைக் காப்பாற்றுவதும், எதிர் மக்களின் பெண்களை உடலாக இயங்கச் செய்வதும் மாத்திரமே. எனவேதான் இருசாராரும் தான் சார்ந்த பெண்களைக் மிகவும் அடக்கி, தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முற்படுகின்றனர்.
போர், சண்டை முதலான நிலைகளிலும் பெண்களின் இருப்பு இப்படியாகத்தான் இருக்கிறது. எனவே பெண்கள் சொத்தாகக் கருதப் படுகின்றனர். சொத்தைக் காப்பாற்றவும், அழிக்கவும் என இரு பிரிவாக ஆண்கள் பெண் உடல் மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
எனவே பெண் பிறப்பிலிருந்து உடலாகவே காப்பாற்றப்படுகிறாள். கால்களை அகட்டி உட்காராதே, துணிவிலக்கூடாது, சிரிக்கக்கூடாது, அதிக ருசிகளுக்கு ஆளாகக் கூடாது, இரவிற்குப் பின் எங்கும் திரியக்கூடாது எனவும் கட்டு திட்டங்களுக்கு ஆளாகிறாள். 'பெண்' என்பது ஒரு இழிச் சொல் போல எப்போதும் தொடர்ந்து வருகிறது. அலங்கரித்துப் பார்ப்பார்கள். நகையிட்டு நடமாட வைப்பார்கள். நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வார்கள். கூடவே பாதுகாப்பு வளையத்துடனேயே. எனவே, பெண் தனது உடல் இழுக்கா, அருவருப்பா, பெரும் வரமா என்று புரியாமலே வாழ்ந்து மறைந்தும் விடுகிறாள்.
திருமணத்திலும், அதற்குப் பின்னும் இக் கட்டு திட்டங்கள் உடன் உலாவிக் கொண்டே இருக்கும், இறப்பு வரை. அவள் தனது மறு உற்பத்தி களையும் இவ்வாறே தன் கையிலிட்ட கடமைகளைக் காத்து, அவளுக்கு மறுபடியும் அளித்துவிட்டு மறைகிறாள். மனம், உடல் சார்ந்த கட்டுப்பாடு களுடன்.
அனைத்துப் பெண்களுக்கும் கட்டுபாடுகள் ஒன்று போல இருக்க முடியாது. ஜாதி, மதம், பொருளாதாரம் சார்ந்து கயிற்றின் நீளம் கூடலாம் அல்லது குறையலாம். தன் உடல் சார்ந்த எண்ணம் எழ இங்கு இடமே கிடையாது. ஆண் வர்ணனைகள் பெண் உடலைப் பற்றி ஆண்டாண்டு காலமாக காதலாக, பிரிவாக கொண்டாடுதலாக எழுதப்பட்டுள்ளது, பேசப்பட்டுள்ளது. எல்லாவற்றிக்கும் மேல் அவ்வுடலை அடையவும் அடையலாம்.
சுயம் அறிந்தபின் எழுதவந்த பெண்கள் பலர் இந்த நிலை பற்றி பேசி எழுதி இருக்கிறாகள். ஆணின் ஆதிக்கம் பற்றி, குடும்பத்தில் பெண்ணின் இருப்பு பற்றி, கணவன் மனைவி-ஆண் பெண் சமத்துவம் பற்றி, பெண் தன் பிறப்பிலிருந்து ஆண் சார்ந்த வாழ்வு வாழும் நிலை பற்றி, ஒரு வேளை உணவுக்காக-தன் குழந்தையின் பாலுக்காக- தன் உடல் புழங்கக் கொடுக்கும் பெண் பற்றி, அலுவலகத்தில் மற்றும் அரசியலில் பெண்ணின் இருப்பு பற்றி என எல்லாத் தரப்புகளிலும் கவிதைகளும், சிறுகதைகளும், நாவல்களுன் ஏற்கனவே பெண்களால் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இவற்றின் தொடர்ச்சியாகத்தான் பெண் உடல் மொழி எழுதவரும் பெண் கவிஞர்களையும் சங்கிலிக் கண்ணியாகக் கொள்ளப்படல் வேண்டும். மற்றொரு சிறு வெளித்திறப்பு என்பதாக் கருத வேண்டும். பொதுப் பெண்ணியம் சாத்தியமில்லாதது போலவே பொது உடல் மொழியும் சாத்தியமில்லாததே.
தனது உடல் அடையாளம் காணப்படுதல், தனது உடல் தனதென்று உணர்தல், தன்னுடல் போற்றுதல் என்பது ஒருவகைக் கொண்டாட்டம்.
முன்னமே சொன்னபடி பெண் உடல் அவளின் விருப்பம் சார்ந்தோ, தேர்வு சார்ந்தோ வழங்கப்படுவது கிடையாது. அங்கீகரிக்கப்பட்ட உறவாயினும், அங்கீகரிக்கபடாத உறவாயினும் கூட்டமாக அல்லது தனியாக என்று எந்த இடத்திலும்.
எனவே அதிலிருந்து விடுபட்டு தன் உடல் தனதென்று உணர்ந்து, தன் விருப்பம் முதன்மையாகக் கொண்டு தன் உடல் ஆணுக்கு வழங்குதல் என்பது ஒரு வகை. இன்னொருவகையில் ஜாதி, மதம் தன்னுடலிருந்து பிய்த் தெடுக்கப்படுகிறது. பின் உடல் பகிர்தல் நிகழ்கிறது. எனவே உடல் தனதாகக் கருதப்படுவதால் தேர்வு தன்னுடையது ஆகிறது. அது ஆணா, பெண்ணா என்பதும் கூட.
எந்த ஆணுக்கும் தனது உடல் வழங்கப்படாதிருத்தல், தன் உடல்சார் தேவையை தன்பால் உறவுடன் மீட்டல், மறு உற்பத்திக்கு உடலை அளிக்காமல் மறுத்தல்; இது இன்னுமொரு வகை.
இன்னமும் இது போன்ற தனது ஜாதி மத அடையாளத்துடன் தன்னுடல் கொண்டாடுதல் மேலும் ஒரு வகையாகும். பல பிரிவுகளுக்குச் செல்லும் வழியாகத்தான் உடல் மொழி வழிவகுக்கும்.
உடல் மொழி என்பதில் இவைகள் ஒரு சிறு கீற்று மட்டுமே. ஆனால் இவை மட்டுமே பெண்ணியம் பேசும் கவிதைகள் என்பதில் உடன்பாடு கிடையாது. இந்த உடல் மொழி பேசும் கவிஞர்களிடமும் குழப்பமும், முரணும் உண்டு. குழப்பமே திறப்புக்கு வழி வகுக்கும்.
உடல் மொழி பற்றி எழுதும்-பேசும் கவிதைகளில் கட்டமைக்கபட்ட சொற்களும், சொல்லடுக்குகளும் எல்லாமே -உடல் உறுப்புகளுக்கான சொற்கள் உட்பட- ஏற்கனவே புழக்கத்தில் இருந்துகொண்டு இருப்பவைகள்தான்.
எண்ணங்களையும் கருத்துக்களையும் மற்றொரு தளத்திற்கு கொண்டுசெல்ல ஆயத்தமான ஒரு முயற்சி என்று இவைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். தொடர் செயல்பாடுகளாலும், முயற்சிகளாலும், பரிசோதனைகளாலும் மட்டுமே எதிர்காலத்தில் புதிய தளங்களையும் மொழியையும் கண்டறிய இயலும்.
உடல் மொழிக்குப் பயன் படுத்தப்படும் அழகியல் சொற்கள், படிமங்கள், கொண்டாட்டச் சொற்கள் என எல்லாம் முன்னம் இருந்தவைகளிலிருந்துதான் எடுத்தாள வேண்டி உள்ளது.
பெண் உடல் சார்ந்த எழுத்துக்களில் இன்னமும் நிராகரிக்கப்படும் பெண்ணுடல், உபயோகப்படுத்தக்கூடாத உடல்களின் உபயோகம் போன்றன வற்றைப்பற்றி எழுத வேண்டியுள்ளது.
புற்று நோயால் மார்பகங்கள் அகற்றப்பட்ட பெண் உடல் உதாசீனப் படுத்தப் படுகிறது; அவளைச் சார்ந்தவர்களாலேயும், சமூகத்திலும், சந்தையிலும்.
ஆணுடன் தன் உடலைப் பகிரத் தயாராயிருந்தாலும்கூட, கருப்பை சிதைந்த பெண் நிராகரிக்கப்படுகிறாள். நடுவயதில் கருப்பை அகற்றப்பட்டாலும் கூட அவள் சார்ந்த ஆணால் குறையுடைவளாகவும், உபயோகம் அற்றவளாகவும் கருதப்படுகிறாள்.
பூப்பெய்தாப் பெண்ணுடல் உடலாகக் கருதப்பட மாட்டாது. மறு உற்பத்திக்கு இயலாத உடல் உடலல்ல.
ஆண்மையற்ற ஆண்கள் உற்ற நண்பன் அல்லது உறவு மூலமாக தன் மனைவியைக் கருத்தரிக்க வைத்து, தம் ஆண்மையை, இயங்கு திறனை நிரூபித்துக் கொள்ள முடியும்.
இன்னொரு நிலையில் உபயோக்கிக் கூடாத உடல் உபயோகம் ஆதல் என்று உள்ளது.
இவ்வகைப் பெண் உடல்கள் சீரழிக்கப்படுகின்றன. சிறுமிகளின் உடல் கலவிக்கு உபயோகப்படுத்தபடுகிறது. மனம் வளரா, உடல் மட்டுமே வளர்ந்த பெண் -எல்லா இடங்களிலும் இல்லையென்றாலும் சில தருணங்களில்- பெண் உடலாகப் பார்க்கப்படுகிறாள். மன நோய்க்கு ஆளாகி தெருவில் திரியும் பெண் கர்ப்பமாக்கப் படுகிறாள்.
அழகான பெண்ணின் உடல் தற்கொலைக்குப் பின்னும் உடலாகவே பார்க்கப் படுகிறது பிணவறைகளில்.
உடல் பற்றிப் பேசும் எழுத்துக்களே ஆபாசம் என்று கருதுபவர்கள் அறியாமை குறித்து பரிதாப்பப்படத்தான் முடியும். மருத்துவமனைகளில் பிரசவம் ஆபாசம். எய்ட்ஸ் ஆபாசம். அதற்கு மருந்து கண்டு பிடித்தல் ஆபாசம். நோயாளிகளை அரவணைத்தல் ஆபாசம் எனக் கொள்ளல் வேண்டி வரும். எது களையப்பட வேண்டும், எது குறித்து கவலை கொள்ள வேண்டும் என்ற தெளிவு இன்னமும் வரல் வேண்டும்.
பெண் என்பவள் எவற்றையெல்லாம் எழுதலாம், எழுதக் கூடாது. எங்கு செல்லலாம், செல்லக் கூடாது. எந்த மேடைகளில் பங்கு பெறலாம், பங்கெடுக்கக் கூடாது. எவரையெல்லாம் கொண்டாடலாம், போட்டு உடைக்கலாம் என்பது போன்ற இன்னமும் பலவும் ஆண்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிற நிலைமை மாற வேண்டும். எவற்றை எழுதவும், எழுதாமல் இருக்கவும் கவிஞர் தன் சுயம் சார்ந்து மட்டுமே முடிவெடுக்க வேண்டும். ஆதரவும், மறுப்பும் பக்க வாட்டில் இருக்க வேண்டும்.
Thursday, July 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment