Wednesday, October 26, 2011

இடப்பெயர்ச்சி (சிறுகதை)

இடப்பெயர்ச்சி



பாட்டியின் ஓயாத அறிவுரைகளும் எனது சந்தேகங்களுக்குமாக பந்துபோல எழும்பி எழும்பி திரும்ப வருகிறது இருவரிடமும்.

'எச்சப்பண்ணாதேடீ! வாழபழத்த கடிச்சுத்தான் திங்கணுமா? உரிச்சுப் பிச்சுப் போட்டுக்கோ'

'அப்போ முறுக்க கடிக்கலாமா பாட்டி'

'அதயும் விண்டுதான் வாயிலே போட்டுக்கணும்'

என்ன பாட்டி, எப்பப்பாத்தாலும் என்ன எச்சப்பண்ணாதேடீ, எச்சப் பண்ணாதேடீன்னுண்டே இருக்க'

'எச்ச எறக்க அடிக்கும், பத்து பறக்க அடிக்கும்டீ பொண்ணே'

'எந்த வயசு வரைக்கும் பாட்டீ?'

ஆயுசு முழுக்கவுந்தான்'

அண்ணா கடிச்சுத் திங்கறானே பாட்டீ'

'அதான் நீ அதைத் தொடச்சிடறேயேடீ ஜலம் தெளிச்சு'

'அண்ணா எச்சப் பண்ணலாமா?'

'எதுத்துப் பேசாதேடீ, அவன் ஆம்பள.'

'ஆம்பளேன்னாக்க எச்ச ஒசத்தியா?'

'பொம்மனாட்டிக்குட்டி எல்லாத்துக்கும் கேழ்வி கேக்கப் படாது.'

‘ஏன் பாட்டி?'

அதுக்குங்கூடவா கேழ்வி கேப்போ? ஈஸ்வரா! இந்தப் பொட்டகுட்டி எப்படித்தான் இன்னொரு ஆத்துக்குப் போயி காலந்தள்ளப்போறதோ? நீ தான் காப்பாத்தணும்.

'ஏ குட்டி! பரமாற வா, அண்ணாவும் அப்பாவும் சாப்படணும் பாரு, சாதம் போடு.'

'சரி'

'இதோ பாரு, கால அகட்டி வச்சிண்டு பரமாறப்படாது. கால ரெண்டையும் சேத்தி வச்சுக்கோ. இடுப்பக் குனிஞ்சு பரமாறு. உட்காந்துண்டு பரமாறக்கூடாது. கால சேத்தி வையி'

'பாட்டி, நான் ஒருநா அப்பாவோட சாப்பட உக்காந்துக்கறேனே, அண்ணா பரமாறட்டுமே எனக்கும்'

வாய மூடுடீ.'

‘குட்டி சாதத்த தூக்கிப் போடு. எச்சத்தட்டுலே இடிச்சுடப்போறது'

‘சரி, பாட்டி'

'கொழம்ப உசத்தி ஊத்த்துடீ, தட்டுலே கரண்டி இடிச்சுடப்போறது.'

'ஏன், பாட்டி'

'கரண்டி எச்சலாயிடும், அத அலம்பிட்டு அப்பறமாத்தான் கொழம்புலே போடணும்.'

''ஏம்பாட்டி?கரண்டி வழியா கொழம்பு தட்டுலே விழறதே? அப்ப எச்சல் ஒட்டிக்காதா? அப்பறமா அதே கரண்டியத்தானேத் திரும்ப கொழம்புலே போடறோம்?அப்ப முழுக் கொழம்பும் எச்சத்தானே?'

'ஒன்னோட யாரு மல்லுக்கு நிக்கறது? எப்பப்பாத்தாலும் கேள்வி, கேள்விக்கு எதிர்க்கேள்வி. கேள்விக்கு கேள்வி, எதிர் வாதம். விவாதம். நன்னாத்தான் வளத்தினா பொண்ண, உங்கம்மா?'

'ஏன் பாட்டி நான் நன்னாஇல்லயா? இதோ பார் பாவாட, சட்டை எல்லாம் போட்டுண்டு நன்னாத்தானே இருக்கேன்?'

'நாம்போறேண்டியம்மா, அந்தாண்ட, என்னால முடியாது.'

சில நிமிடங்களில் திரும்பவும் பாட்டி,

' ஏய்! குட்டீ, இங்கவாடீ. சோத்தபோட்டுட்டு, மோர ஊத்திட்டு ஓடாதேடி. எச்சலிடனும், பாரு.'

'சரி'

'தோ பாரு, கால ரெண்டையும் சேத்தி வச்சுக்கோ. இப்படி இடுப்ப குனி. எச்சலிடறதுக்கு முன்ன, பாவாடய தூக்கி இடுப்புலே சொருகிக்கோ. இடது கையால ஜலப்பாத்திரத்த வச்சுக்கோ, ஜலத்த கொஞ்சங்கொஞ்சமா ஊத்து. அத வலது கை நாலுவிரலாலெ இப்படியும் அப்படியுமா இழுத்துண்டு வா, மொழுகற மாதிரி,'

'பாட்டி, கைய எரியறது. வெறுமன துணி போட்டுத் தொடச்சுடறேனே?'

'அழகுதாம்போ. எப்போவோ லீவுக்கு வரும்போதுதான் உங்காத்து வண்டவாள மெல்லாந் தெரியறது? ஊர்லே இப்படித்தான் பண்ணுவாளா உங்கம்மா? நான் எப்படிடீ உங்காத்துக்கு வந்து சாப்படறது? வீடே எச்சலும் பத்துமா இருக்கும் போல இருக்கே? இதோ பருடீ, ஜலந்தீந்து போச்சு. இன்னுங் கொஞ்சமா ஜலம் விட்டுக்கோ. உட்காந்துண்டு எச்சலிடப்படாதுடீ. நின்னுக்கோ. நாலு எச்சலிடறத்துக்கே இந்தப்பாடா? எனக்கு உன்னோட வயசுலே நாலு புள்ளப் பொறந்தாச்சு. புக்காத்துலே ஒரு வேளைக்கு சாப்பாட்டுக்கு வீட்டு மனுஷாளே இருவது பேருக்கு மேல இருப்பா. ஒரு பந்தி பரமாற ஏந்துண்டாக்க எச்சலிட்டு துணி போட்டுத் தொடைக்கறத்துக்குள்ள முதுகு வலி கண்டுடும். ஆனா வாயத் தொறக்க முடியுமா?'

'போறும் பாட்டீ. எத்தன தடவ கேட்டாச்சு இதையே, போரடிச்சுப் போச்சு.'

'ஏய், என்னடி பாட்டிய எதுத்துப் பேசறே?'

இது அப்பா.

கேள்வி கேட்டுக் கேட்டுத்தான் எங்கும் வளர வேண்டி இருந்தது. கேட்கும் கேள்விக்கு பதில் தெரியாது, அல்லது பெண் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தேவையில்லை. எங்கும் எப்போதும் இதே போல பார்த்தும், கேட்டும் பழகிவிட்டிருக்கமாட்டேன் என்கிறது. இந்தக் குளிர் பிரதேசத்தில், அமெரிக்காவில் ஒரு சிறு நிலத்தில், எல்லோருடனும் கேக்கைக் கடித்து சாப்பிடவும் சற்றே யோசிக்க வேண்டியிருக்கிறது.

'எச்சலிட எச்சலிட தொடைக்கக்கூடாதுடீ பொண்ணே. எச்சலிட்டு முடிச்சப்பறந்தான் தொடைக்கணும். இல்லையானாக்க, சாணித்துணி எச்சலோட ஏகமாயி அதுவும் எச்சலாயிடும். எச்சலிட்டு முடிக்கட்டும். கொஞ்சம் காத்திண்டிரு.'

கேள்வி அம்மாவிடம்.

'அம்மா, எச்சலிடச் சொல்றே, செய்யறேன். ஆனாக்க என் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிடு.'

'என்னடீயம்மா, இன்னக்கிப் புதுக் கேள்வி?'

'ஏம்மா? எல்லோருந் தரையிலேதானே உட்காந்துண்டு சாப்படறோம். அப்ப தட்டு வச்ச இடமட்டுந்தான் எச்சலாகுமா? தரை முழுக்கதானே எச்சல் ஆகும்? அப்ப வீடே முழுக்க எச்சல்தானே? அப்படீன்னாக்க ஒவ்வொரு தடவையும் வீட்ட முழுக்கக் கழுவறோமா? தட்டு வச்சு சாப்பட இடத்த மட்டுந்தானே எச்சலிடறோம்? ஏன் தட்டச்சுத்தி நீர் சுத்தின இடத்த மட்டும் எச்சலிடணும்?"

'அது ஒரு விதமான சுத்தம்தான். சாப்ட இடத்திலே சாத்துப்பருக்க இருக்கும். அது கால்ல பட்டு வீடு முழுக்க பிசு பிசுன்னு அப்பும். எறும்பு, ஈ மொய்க்கும் அதுக்காகத்தான்.'

'அப்படியா, அப்ப சரி.'

'ஏ குட்டி! எச்சலிட வா. ஓடாதே. தாவணி போட்டுண்டாச்சு. அதிந்து நடக்காதே.'

'பாட்டி, நானுஞ்சாப்படறேன், அண்ணாவுந்தான் சாப்பறான் தினமும். அப்படீன்னாக்கா, ஒருநாள் நான் எச்சலிடறேன். ஒருநாள் அண்ணா எச்சலிடட்டுமே? ஏன் என்ன மட்டும் தினமும் எச்சலிடச் சொல்லி தொந்தரவு பண்றே? மாத்தி மாத்தி எச்சலிடக்கூடாதா?'

‘சிவ, சிவ! இந்தப்பொண்ணு ஏன் இப்படிக் கேழ்வி கேக்கறதோ தெரியல்லயேடா ஈச்வரா? நல்ல படியா காப்பாத்து.'

'பாட்டி எனக்கு பதில் சொல்லாம, எதேதோ பிராது கொடுக்கறேயே?'

'ஏண்டி? ஆம்பள தொடப்பத்தை எடுத்து பெருக்கினாக்க அவனுக்குக் கொழந்த பொறக்காம போயிடும். ஆம்பள சாணியைத் தொட்டு எச்சலிட்டாலும் அதுவேதான். அப்பறமா வம்ச விருத்தி ஆக வேண்டாமா? ஆம்பள சாணியத் தொட்டு எச்சலிடலாமா, சொல்லு, இப்போ?'

'போ, பாட்டி. நம்மாத்து மாட்டுத்தொழுவத்த பெருக்கி சாணி அள்ளறது, பால் கறக்கறது ஆம்பளதானே?'

'பூத்தொடுத்தாக்க நாரைக் கடிச்சுத்தான் அறுக்கணுமா? தோ பாரு, தரையிலே இப்படி ரெண்டு இழுப்பு இழுத்தாக்க நாரு அறுகப் போறது. எப்பப் பாத்தாலும் எச்சப்பண்ணிண்டு. என்ன விதியோ போ?'

அண்ணாவை மாட்டிவிட எனக்குத் தெரிந்த ஒரே வழி, அவன் காபி குடிக்கும் போது மட்டும்தான்.

'காபிய ஒசத்திக் குடி, என்ன கடிவாளம் போட்டுண்டு' என இருவருக்குமே வசவு விழும். வாரத்தில் இரண்டு நாட்களாவது அண்ணனின் அருகில் சென்று காபி குடிப்பேன். அப்போது அம்மாவோ, பாட்டியோ இருக்கும்படியாக பார்த்துக் கொள்வேன். என் டம்பளரில் என் நகத்தால் ஒரு சிறு தட்டு தட்டுவேன். ‘டங்' என்ற சப்தம் எழும்.

'பாட்டி, அம்மா, இதோ பாருங்கோ அண்ணா காபி குடிக்கும் போது டம்பளர் பல்லுலே பட்டுடுத்து. எச்சலாயிடுத்து. அவன அலம்பச் சொல்லுங்கோ. என்ன மட்டும் எதுக்கெடுத்தாலும் திட்டறேளே? என அலறுவேன். அது சில சமயம் அண்ணனை டம்பளர் அலம்ப வைப்பதில் முடியும்.

ஆனால் அதுவே எனக்கு எதிராகவும் முடியும்.

'பாட்டி, அது அவ டம்பளரிலிருந்து வந்த சத்தம். பொய் சொல்லறா பாரு, பொம்மனாட்டி போய் சொல்லலாமா?' அண்ணாவின் புகாரும், சில சமயம் மட்டுமே எடுபடும். என்ன முடிவு எப்போது பெரியவர்கள் எடுப்பார்கள் என்பது அறிய முடியாத புதிர்தான், எப்போதும்.

எம்.எஸ்ஸி படித்து முடித்த பின்னும் பி.ஹெச்டி செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தேன். பாட்டியின் மறுப்பும், அம்மாவின் அரைச் சம்மதமும், அப்பாவின் ஊக்குவிப்பும், அண்ணனின் உறுதுணையும் என்னைப் படிக்க வைத்தது.

என் அம்மாவிற்கு என்னை வேலைக்கு அனுப்ப இருந்த தைரியம், என்னைத் திருமணம் செய்து கொல்ளாமல் தனித்திருக்க விரும்பிய முடிவிற்கு இல்லாமல் போயிற்று. இணங்க இயலவில்லை. பாட்டியின் மறைவிற்குப் பின் அம்மா, பாட்டியின் வேடத்தையும் சேர்ந்த்தே தரிக்கத் தொடங்கினாள். பாட்டியாயும் பல முறை மாறினாள்.

பணிக்குச் சென்று வரும் போது என்னைப் பார்த்த அவனின் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் மருமகளாக்கிக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டது. அமெரிக்கா வரன். அப்பா, அம்மாவிற்கு அமெரிக்க வரன்மீது மகிழ்ச்சி. எனக்கும் ஆசாரத்திலிருந்து விடுதலை. விசா கிடைக்கும் வரை தொடர்ந்து வேலைக்குச் செல்ல அனுமதி கிடைத்தது. பரந்த மனம் கொண்டவர்கள் என்று அம்மா மிகவும் பாராட்டினாள்.

திருமணத்திற்குப் பின் கணவன் வீட்டில் எனக்கு நிறைய பசித்தது. எப்போதும் வயிறு பசி நிரம்பியதாகவே இருந்தது. ‘பெண் உணவுக் கட்டுப்பாட்டுடந்தான் இருக்க வேண்டும். வீணாக உடல் பருக்கக்கூடாது. பருத்த பெண்களை என் மகனுக்குப் பிடிக்காது' என்றனர். எப்போதும் பசியுடனே வேலைக்குச் சென்று வர இயலவில்லை.
அலுவலகமும் கணவனின் வீட்டிற்கு வெகு அருகிலேயே இருந்தது. வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் இடையில் உள்ள மற்றொரு தெரு வழியாக நான் சற்றே சுற்றி இளைப்பாறி, பின் வீடு அடைவதை வழக்கமாகக் கொண்டேன். இடையிலிருந்த தெருவில் என் தோழி இருந்தாள். தோழியின் வீட்டிற்கு சற்றே மூச்சுவிட சென்று வாருவதையும் வழக்கமாகக் கொண்டேன்.

ஒரு நாள் மிகுந்த பசியினால், என் நிலையை தோழியிடம் அறையும் குறையுமாகத்தான் சொல்ல முடிந்தது. அவள் வயிறு நிரம்ப உணவு அளித்தாள். தினமும் போக எனக்குத் தயக்கமாகவும், அவமானமாகவும் இருந்தது. ஆனால், அவளோ 'இது நிரந்தரமல்ல. கணவனிடம் சென்றுவிட்டால் இந்தக் கட்டுப் பாடுகள் இருக்காது. சில நாட்கள்தானே பொறுத்துக்கொள்' என்றாள்.

இடைப்பட்ட தெருவில் நான் வந்து கொண்டிருந்தபோது, கணவனின் வீட்டார் என்னக் கண்டு கொண்டனர். அன்று மிகுந்த கலவரத்துக் குள்ளானேன். வீடு திரும்பிய என்னை மிகவும் கேள்விகள் கேட்டதோடு அவமானப்படுத்தவும் செய்தனர். என்ன தோன்றியதோ அவர்களுக்கு என் வலது உள்ளங்கையை எடுத்து மூக்கருகில் கொண்டு சென்று, முகர்ந்து பார்த்து நான் சாப்பிட்ட விஷயம் அறித்தனர். ‘இதுதான் நீ தினமும் லேட்டா வரத்துக்குக் காரணமா?' என்று கேட்டுவிட்டு அன்று இரவு உணவை வெட்டிவிட்டனர்.

அன்றும் வழக்கம் போல நானே அனைவருக்கும் பறிமாரினேன். எச்சலிட்டேன். அதாவது டேபிள் துடைத்தேன். சொப்புப் போட்டுத் திரும்பத் துடைத்தேன். சாப்பாட்டு மணம் டேபிளில் வீசினால், மாமனாருக்குப் பிடிக்காது. அன்று நிரம்பிய பசியுடன் காலியான வயிற்றுடன் இரவு படுத்தேன்.

இங்கு அமெரிக்காவில், கணவன் டேபிள் துடைத்தான். சமயலறை வேலைகளைப் பகிர்ந்து கொண்டான். எச்சல் டேபிள் துடைத்தபோது அன்பென்று உணர்ந்தேன்.

ஆனால், ஒரு சில நாட்களில் மட்டுமே அவன் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுவதும், அன்று படுக்கை உறவும் இருந்ததும் சில நாட்களிலேயே அனுமானிக்க முடிந்தது. உறவின் தேவைகளுக்காக வன் முகத்தருகில் வந்து முத்தமிட்டபோது ‘எச்சல், எச்சல்' என்று பாட்டியும், அம்மாவும் மாமியாரும் கூட அலறியதாகப் பட்டது. நானும் சிறிது முனகி இருக்கலாமோ என்னவோ.

அமெரிக்காவில் கணவனுடன் வாழ்ந்த நாட்களில் முதல் வீட்டு விலக்கு ஏற்பட்ட போது, என்னை அவன் தனியே படுக்கச் சொன்னான். ‘கட்டில் தீட்டாயிடும்' என்றான் கடுங்குளிரில் மற்றொரு அறையில் தனியே படுத்தேன்.

மறுநாள் காலையில், ‘குளிச்சுட்டு சமைச்சுடு. ஆபீஸ் போகணும் பாரு' என்றான். என்னுள் எப்போதும் போல கேள்விகள் எழும்பத் தொடங்கின.

'குளிச்சா தீட்டுப் போயிடுமா? ராத்திரி கட்டில்லே படுக்கக் கூடாதுன்னேள்? நான் சமைச்சா சாப்பிடுவேளா?'

முறைத்தான்.

அன்று என்னை டைனிங் டேபிளில் சாப்பிடக்கூடாது என்றான். தரையில் உட்கார்ந்து சாப்பிடச் சொன்னான்.

'சமயலே நான் செஞ்சதுதானே?'

குளிரில் தரையில் அமர்ந்து சாப்பிட்டேன்.

சொன்னபடி கேட்டு வளர்ந்த பிள்ளை. அம்மாவின் வளர்ப்பு. வளர்க்கப்பட்ட பிள்ளை. வளர்ந்த பிள்ளையல்ல.

எதிர்க் கேள்விகள் அற்ற ஆண்.

உணவருந்திய பின் எச்சலும் இட்டேன். சுடுநீர் கொண்டு.

அடுத்த முறை தீட்டு வராத போது சந்தோஷப்பட்டேன்; குளிரில் எச்சலிட வேண்டாம் என்று. பிரசவம் அமெரிக்காவில்தான் என்றான். அப்போதுதான் பிறக்கும் பிள்ளை அமெரிக்கப் பிரஜையாக முடியுமென்றான். 'மசக்க, சீமந்தம் ஒரு புண்ணாக்கும் வேண்டாம். இங்கேயே இரு. புள்ள சரியாத்தான் பொறக்கும்'

எச்சில் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் உடல் விரியும்தான். உள் செல்லும்தான். இது அவ்வப்போது நிகழும்,
கருவும் உண்டாகும்

இரண்டாடுகளுக்குள் அவன் நிறையக் குடிப்பது தெரிய வந்தது. நிறையக் குடித்தான், நிறைய அடித்தான். எச்சில் ஒழுக ஒழுக குழறி குழறிப் பேசினான்.

சமைத்தேன்.

சாப்பாடு பறிமாறினேன்.

எச்சில் டேபிள் துடைத்தேன்.

குழந்தையின் ஜொள் துடைத்தேன்.

அவனின் வாந்தியையும் துடைத்தேன்

முத்தமே எச்சிலாயிருந்தது.

எச்சில் நாற்றமாயிருந்தது.

எச்சில் உணவுக்கானதாக இல்லாமல், உணவு வாசனைகளோடு இல்லாமல், நாற்றம் சம்பந்தப்பட்டதாய் இருந்தது.

எச்சில் உஷ்ணநாட்டோடு உணவாகவும், குளிர்நாட்டோடு நாற்றமுடையதாகவும், என் உடலில் இரு பாகங்களாக ஒட்டிக்கொண்டும், ரத்தத்தினுள் ஓடிக் கொண்டும் இருந்தது. எந்த நீரில் கழுவ இதை? எப்படி எச்சலிட்டுத் துடைக்க? எந்த சாணித்துணி போட்டுத் துடைக்க? சுத்தமாக்க பசுஞ்சாணி போட வேண்டுமா? எருமைச் சாணியா?

'பாட்டி நீ உன் அம்மாவின் எச்சில். அப்பா உன் எச்சில். நான் என் அம்மாவின் எச்சில். எச்சில் வாயிலிருக்கிறது. வாய் உடலில் இருக்கிறது. வாய் வழியாகப் பேசுகிறோம். எனவே எல்லா சொற்களும் எச்சில் எச்சில் நிரம்பியது. எல்லாச் சொற்களையும் கழுவி எடு. சாணி போட்டுக் கழுவு,

பாட்டி. பாட்டி! நீ பஸ்ஸில் போகும்போது சின்ன பாட்டிலில் நீர் கொண்டு போவாயே, கண்டக்டர் டிக்கட்டை எச்சில்படுத்திக் கிழித்துக் கொடுப்பதால் ஒவ்வொரு முறையும் டிக்கட்டை வலக்கையிலிருந்து மாற்றாமல், பத்திரமாக எடுத்துக் கொண்டு, பஸ்ஸை விட்டு இறங்கியவுடன், டிக்கட்டை தூர எறிந்து விட்டு, எச்சில் டிக்கட் பிடித்த கையையும் கழுவுவாயே. சொற்களை மட்டும் கழுவக் கூடாதா பாட்டி? சாப்பாட்டு எச்சில் இலையைப் போடுவதால், தெரு எச்சில் ஆகிவிட்டது. எச்சில் இலையை சாப்பிட்டதால் நாயும், அது நடந்து வரும் பாதையும் எச்சில் ஆகிவிட்டது. காகம் உட்காரும் காம்பவுண்ட் சுவரும் எச்சில் நிறைந்ததே. ஈக்கள் புழங்கும் சமயலறையும், காகத்தால் மற்றும் ஈயால் கிணறும், செடியும், கொடியும், மரமும் என எல்லாமே எச்சிலாகி விட்டது. அம்மா, இத்தனையும் எப்படிக் கழுவ?

நீ கவலையே படாதே அம்மா, அதற்காகத்தான் மழை பெய்கிறது. மழை எல்லா இடங்களையும் எச்சலிடுகிறது. கடல் நீர் உள் நுழைந்து தன்னால் ஆனவரை கடற்கரையின் எச்சில் போக்குகிறது. எல்லாமே வம்சவிருத்தி செய்கிறது. அதனால் எல்லாம் எச்சில். எனவே உலகம் முழுவதும் எச்சிலாக நிரம்பியுள்ளது.

'பாட்டீ, அம்மா! யாராவது சொல்லுங்களேன். என் பிள்ளை என் எச்சிலா? அவன் எச்சிலா? எனக்கு சிலசமயம் அவர்களைப் பார்க்கும்போது என் எச்சிலாகத் தோன்றுகிறது. ஆனால், பலசமயம் அவன் எச்சிலாகத்தான் தோன்றுகிறது. அவன் புழங்கிய இந்த உடல் கூட எச்சிலாகத்தான் இருக்கிறது. அதனால்தான் நான் இங்கும் அடிக்கடி குளிக்கிறேன். நிறைய வாசனை திரவியங்கள், இல்லாவிட்டால் எச்சில் போக்க உடல் முழுவதும் சாணி தேய்த்துக் குளிக்கிறேன். தலையிலிருந்து எச்சில் ஒழுகி, ஒழுகி எப்போதும் என் உடல் கொழகொழப்பாக என்னிலிருந்து வழுக்கிக் கொண்டே இருக்கிறது.

நான் நம் வீட்டு வாசலில் நிற்கும் போது உனக்கு பயம் தோன்றலாம் அம்மா. என்னைக் கேள்விகள் கேட்கத் தோன்றலாம், அம்மா. இந்த முறை பதில் என்னிடமிருந்து எதிர் பார்ப்பாய். ஆனால் என்னால் சரியான, சரியாக பதில் சொல்ல முடியுமா? தெரியவில்லை. ஆனாலும் இந்தக் குளிர் பிரதேசத் திலிருந்தும், எச்சில் கணவனிடமிருந்தும் எனக்கு விடுதலை. அவன் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது சாதம் போட, எச்சலிட நான் இருக்க மாட்டேன். நன்றாக ஏமாறட்டும். என்னை மட்டும் அவன், அவனின் அப்பா, அம்மா எல்லோரும் ஏமாற்ற வில்லையா? எனக்கு என் பணி இருக்கிறது. எச்சில் படாமல் எனக்காகவே. திரும்பவும் நான் வயிறு நிரம்பச் சாப்பிடுவேன், நன்றாக உடை அணிவேன். எங்கும் வலம்வருவேன். அம்மா சொல்லாமலே சாதம் போடுவேன், சமைப்பேன், எச்சிலும் இடுவேன். அவன் எச்சில் படாமல் என் குழந்தைகளை நான் வளர்ப்பேன்.

க்ருஷாங்கினி

Thursday, July 29, 2010

உயிரா வெறும் கறியா?

உயிரா வெறும் கறியா?
___________________



போக்குவரத்து அதிகமாகிவிட்ட தெரு. இரண்டுசக்கர வாகனங்களும், நாலு சக்கரமும், ஆறு சக்கரங்கள் கொண்ட லாரிகளும், கண்டெய்னர்களும் என, எப்போதும் இரைச்சல் வழிந்து ஓடிக் கொண்டிருக்கும் தெரு. அவ்வப் போது திடீரென நிறுத்தப்படும் வண்டிகளின் ஒலிகளும், தொடர்ந்த மனித ஓலங்களும், சண்டைகளும் என்று, நடந்த அல்லது நடக்கவிருந்த விபத்தை சப்தங்களின் அளவைக் கொண்டு வீட்டின் மற்றொரு மூலையில் இருந்தாலும் கூட ஊகிக்கலாம். வீண்சண்டை, வெறுங்கூச்சல் என்றுகூடத் தெரு சப்தங்களால் நிறையும். எப்போதும் வேகத்துடன் கடக்க முயலும் வாகனங் களுக்கு, சிறிதே குறுக்கீடாக பெரிய வாகனங்கள் இடை நின்றுவிட தொடர்ந்து ஒலிக்கும் ஆத்திரமும், ஒலிப்பான்களும் அதிரச் செய்யும் வேகம் முனை திரும்பிக் கடக்க என எப்போதும் அவசரத்துடன் மூச்சுத் திணறி தத்தளித்துக் கொண்டு அந்த குறுகலான தெரு தன் உடலைக் கிடத்திக் கொண்டு சற்றும் முனகாமல், அரைத்த கரும் பாம்பென சப்பையாய்க் கிடக்கும்.

அன்றும், எப்போதும் போல கூடுதல் அவசரத்துடன் கிறீச்சிட்ட இரு சக்கர வாகனம். ஆனால் பின் எந்த சத்தமும் இல்லாமல் போக்குவரத்து ஓரமாக நிகழ்ந்து கொண்டே இருந்தது. இருசக்கர வாகனங்கள் தடுமாற்றம் இன்றியும், நாலு சக்கர வாகனங்கள் சற்றே தயங்கிப் பின் தொடர்ந்து ஓடிக் கொண்டும் இருந்தன. ஆனால், அனைவரின் பார்வையிலும் பரிதாபமோ, கோபமோ இல்லை. சிலர் கருந்தரையைப் பார்த்து சங்கடம் மட்டும் பட்டனர். நிறுத்தி விசாரிக்கவோ உதவவோ செல்லவில்லை. கடும் அமைதி. கூச்சல் இல்லை. என்ன?

தெருவுக்கு வந்து பார்த்தேன். பாதித் தெருவின் ஒரு ஓரத்தில் நிறுத்தப் பட்டிருந்த டி.வி.எஸ்.இல் பின் அமரும் இருக்கையின் இரு புறமும் கால்கள் கட்டப்பட்டு தலை கீழாக இறகு விரித்து சற்றே தலைகளைத் தூக்கி அசைந்து கொண்டிருந்தன வெண்ணிற கோழிகள். இடப்பக்கம் ஐம்பதும், வலப்பக்கம் ஐம்பதும் (ஒரு உத்தேசக் கணக்குதான்) தொங்கிக் கொண்டிருந்த கொத்துக் கொத்தான கோழிகளில் வலப்புறம் இருந்த கூட்டத்தில் மற்றொரு வண்டி மோதியதால் கால்களைக் கட்டியிருந்த கயிறு அறுந்து தரையில் சில கோழிகள் சிதறிக் கிடந்தன. எந்த எதிர்ப்பும், வலியும், முனகலும் இன்றி உறைந்து கிடந்தன அவை. ரோஜாப்பூவும் மல்லிகையும் கலந்து கட்டப்பட்ட பூப்பந்து போல வெண்ணிற இறக்கைகளும், விபத்தால் கிழிந்த உள்சதை ரோஸ் நிறத்திலும் தெரிய ஆங்காங்கே உருண்டையாய் பந்துகளாய்க் கிடந்தன. வாகனங்கள் அதன் மீது ஏறாமல் சற்றே இடையிடை பிரிந்து, தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன. எதிர்ப்பின்றி, இன்னமும் சிலமணி நோத்தில் உயிர்விட இருக்கும் அவைகள் குற்றுயிரும் குலையுயிருமாய் கரும் தரையில் கிடந்தன.

உணவுப் பழக்கம் என்பது அவரவர் உரிமை. அதைக் கேள்வி கேட்கவோ தடை செய்யவோ இல்லை இக்கட்டுரை. ஆயின் இறப்புக்கு முன் வரை ஒரு உயிரைப் பேணுவது ஆறறிவு என மார் தட்டிக் கொள்ளும் மனிதனின் கடமை அல்லவா? கறிக்காகத்தான் உயிர் வளர்க்கப்படுகிறது. 'கொன்றால் பாவம் தின்றால் போச்சு' என்ற பழமொழியையும் மனிதன் உண்டாக்கி வைத்துள்ளான். கொன்று சமைக்கும் வரை அதை ஒரு உயிராகக் கருதாமல் கறியாகக் கருதுவது நியாயம்தானா?

சமீப காலமாக கோழிக்கும் மற்ற பறவையினத்திற்கும் ஏற்பட்டிருக்கும் நோயும், அதன் விளைவாக மற்ற செய்திகளும் ஊடகங்கள் வழியாக அடிக்கடி காண்பிக்கப்படுகின்றன. பறவை, உணவாக முடியாமல் போய் விடுகிறது. உணவானால் மனிதனையும் தாக்கும் என்பதும், உணவாகாமல் கூட மற்றவர் களை பாதிக்கும் நோய் அது என்பதைக் கண்டறிந்துள்ளான் மனிதன். தனக்கு உணவாகாதது மட்டுமல்ல உபயோகமற்ற அவற்றிக்கு உணவளிப்பதும், பரா மரிப்பதும் பெருஞ்சுமையாகி விடுகிறது. அவ்வப்போது மனிதர்களால் உண்ணப் படாததால் எண்ணிக்கை குறையாமல் மாறாக மிக அதிகமாகிப் பெருகி பெரும் கேள்வியாய் மனிதன் முன் நிற்கிறது எழும்பி. மக்கள் நோய் பயத்தில் ஒதுங்கி ஓடிவிடுகிறார்கள். பண்ணையில் வேலை செய்யும் மனிதனுக்கும் போதுமான பாதுகாப்பில்லை. கோழிகளின் தீவனத்துடன் ஒட்டிக்கொண்டு வரலாம் நோய்க் கிருமிகள் என்று அஞ்சப் படுகிறது. எனவே உணவுப் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. இவை அனைத்தும் முதலில் வெளிநாடுகளில் நடை பெறுவதாகக் காட்டப்பட்டு வந்தன. சிங்கப்பூரில், இந்தோனேஷியாவில் கோழிகள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டு வந்தன. எல்லாமே ஊடகங்கள் மூலமாகக் காண முடிந்தது.

தற்போது நம் நாட்டிலும், இதே நோயும், இதே பிரச்சினைகளும், இதே கூட்டம் கூட்டமான அழிப்பும் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. வழக்கம் போல, நம்மிடத்தில் இல்லை அங்குதான் என ஒருசாராரும், இதே சொற்களை மற்றசாரார்களும் சொல்லி வருகின்றனர். சர்ச்சை செய்கின்றனர். மிகச் சாதாரணமாக கொல்லப்பட்டவைகளின் எண்ணிக்கை இருபதாயிரம், எழுபதாயிரம், லட்சம், பல லட்சம் என்று எண்ணிக்கைகளும் தொடர்ந்து அறிவிக்கப்படுகிறது.

மனிதனுக்கு உணவாகாததினால், கேடு விளைவிப்பதினால், நோய் பரப்பும் அபாயம் இருப்பதினால், பறவைகள் அழிக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.

என்னுடைய சந்தேகங்கள் இவை.

இதற்கு முன்பாக இது போன்ற நோய் நம் நாட்டில் பறவைகளைத் தாக்கியுள்ளதா?

மனிதனால் மனிதனுக்குப் பரவும், (இருமல் / தும்மல் மூலமும்) சார்ஸ் என்ற நோய் கண்டறியப்பட்ட பொழுது ஏன் மருந்து கண்டுபிடிக்காத அந்தப் பரவும் நோய்க்கு ஆளான மனிதர்களை நாம் கூட்டம் கூட்டமாகக் கொல்ல வில்லை? அப்படி கொன்று எரித்திருந்தால் நோய் பரவுவதைக் கட்டுப் படுத்தியிருக்கலாம் அல்லவா?

மேலும் ஆட்கொல்லி நோயுற்ற மனிதர்களையும், கட்டுப்படுத்த இயலாமல் மற்ற நோய் தாக்கப்பட்ட மனிதர்களையும் நாம் ஏன் அழிப்ப தில்லை? தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அவர்களை ஏன் காப்பாற்ற வேண்டும்?

மருத்துவத்திற்கான பொருளாதாரம் இல்லாமலும், சிகிச்சை பலன் அளிக்காது என்ற கடைசிக் கட்டத்திலும் கூட கருணையுடன் செய்யப் படுவது கூட, மனிதர்களுக்கானதென்றால் கொலை என்று சட்டம் சொல்லுகிறதே.

மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறோமே?

மனிதர்களைத் தாக்கி, உயிர் போக்கும், மற்ற மனிதர்களுக்கும் பரவும் வாய்ப்புள்ள பல நோய்களுக்கு மருந்து கண்டு பிடிக்கும் விஞ்ஞானம் மற்ற உயிர்களுக்கும் உதவும். அப்படித்தானே?

பெரிய கருப்பு பிளாஸ்டிக் பைகளில் கழுத்தொடித்து இறக்கச் செய்து உள்ளிடும் செயல்கள் கூட வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி ஆகியுள்ளதா?

அழிக்கத்தான் வேண்டும் என்ற கடைசி நிலைக்குத் தள்ளப் பட்டிருந் தாலும் ஒவ்வொரு நொடியும் அவை ஊடகங்களில் உயிருடன் அசை பவையாகவும், பிறகு படக்கென்று கழுத்து திருக்கப்பட்டு கொல்லப் படுபவை களாகவும் தொலைக்காட்சிகளில் திரும்பத்திரும்பக் காட்டப் படத்தான் வேண்டுமா? (ஆனால் பல விபத்துக்களையும் எரிந்த குழந்தைகளையும், இறந்த மனிதர்களையும் ரத்தத்துடன் அடிக்கடி காட்டும் ஊடகங்கள்தான் இவை)

நெரிசலில் சிக்கி உயிர்கள் பலி, விபத்தில் பலி, கலவரத்தில் பலி, என்று கணக்கிட்டு பரிதாபமாக உயிரிழந்தனர் என விவரிக்கும் மனித இனம் மற்றவைகளை வெறும் கறியாகக் கணக்கிட்டு லட்சக் கணக்கில் என்று அறிவிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?

வாடிய பயிரைக் கண்டு வாட வேண்டாம். உயிரை வெறும் கறியாக கருதாமல் இருந்தால் போதும்.

இரவுகள் யாருடையவை?

இரவுகள் யாருடையவை?

என் வீட்டின் வலது புறம் ஒரு குடும்பம் வசிக்கிறது. அதில் திருமணத்தை எதிர் நோக்கியிருக்கும் ஒரு ஆண். அவருக்கு ஏற்ற பெண் தேடும் படலம் நடைபெறுகிறது. மேல் வகுப்பைச் சார்ந்தவர்கள். பையனுக்கு நல்ல வேலை. மாதத்திற்கு 40000 சம்பளம். அழைப்பு மையத்தில் வேலை. குழுவுக்கு மேளாளர். எப்போதும் இரவுப் பணிதான். அது எல்லோரும் அறிந்தது தானே. சொந்த வீடு, மற்ற வசதிகள் என எல்லாமும் நிறைந்த வரனாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.
திருமணச் சந்தையில் அழகாவும், அடக்கமானவளாகவும் உள்ள பெண்ணைத் தேடும் வேட்டையில் அவரது சுற்றத்தார்கள் ஈடுபட்டுள்ளனர். பையனின் சம்பளத்தை கணக்கில் கொண்டு ஏகப்பட பெண்களின் பெற்றோர்கள் அவ்வரனை அணுகுகின்றனர். எனவே மணப் பையனுக்கு நிராகரிப்புக்கு நிறைய வாய்ப்பு. மிகவும் நிதானமாக அலசி ஆராய்ந்து தனக்கான மனைவியைத் தேர்ந்தெடுக்க நிறைய நேரமும் தேடுதலும் மேற் கொள்கிறார்கள். இதில் ஒன்றை அடிக்கோடிட்டு கவனியுங்கள். இந்த ஆணுக்கு நிரந்தர இரவுப் பணி.

என் வீட்டின் மற்றொரு புறம் ஒரு குடும்பம் வசிக்கிறது. அவர்களுக்குத் திருமண வயதில் ஒரு பெண். அவள் முதுகலைப் பட்டங்கள் மற்றும் பட்டயங்கள் கை நிறைய அடுக்கி வைத்துள்ளாள். நல்ல உயரமும், சிவப்பும், அழகான உருவமும் கொண்ட பெண். அவளும் மேல் சாதி சார்ந்தவள்தான். அவளுக்கு சம்பளம் முப்பதாயிரத்திற்கும் மேல். அவள் தனியார் விமான கம்பெனியில் விமானம் வான் ஏறும் மற்றும் தரை இறங்கும் பொழுது பயணிகநபயும், சுமைகளையும் சரிபார்த்து ஏற்றி அல்லது இறக்கி அனைவரையும் சரி பார்த்துப் பின் திரும்பும் பணி புரிகிறாள். விமானம், எப்போதும் பகல்களில் மட்டும் வான் ஏறியும், தரை இறங்கியும் செல்ல இயலாது. இரவுகளிலும் அதன் போக்குவரத்து உண்டு அல்லவா? எனவே பணி முறையில் வாரம் இரண்டு அல்லது ஒரு நாள் இரவுப் பணி ஏற்க வேண்டும். இது அவளுக்குத் திருமணம் என்ற உறவுக்கு ஆண் தேடும் படலத்தின் முன்பு வரை இயல்பான ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால் பையனின் பெற்றோர்கள், "பையன் ஆசை ஆசையாய் வீடு தேடி நாடி வரும் பொழுது, அவள் நைட் டூட்டி என்று வேலைக்குப் போய்விட்டால் எப்படி சரிப்பட்டு வரும்?
இரவு அவன் ஏமாற மாட்டானா? தேதி பார்த்து, கணக்குப் பார்த்தா ஆசை வரும்? வரும்பொழுது மனைவி வீட்டில் இருக்க வேண்டாமா? எனவே, இரவுப்பணியிலிருந்து விடுதலை பெறச்சொல்லுங்கள். திருமணத்திற்கு நாள் பார்க்கலாம். எவ்வளவோ வரன்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது. என்னவோ என் பையன் உங்கள் பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று சொல்லி விட்டான். உங்களிடம் இவ்வளவும் சொல்லவேண்டியிருக்கிறது. பெண்ணுக்கு எது நல்லது என்று உங்களுக்கும் தெரியும். நாளைக்கு வயிற்றில் பிள்ளை கையில் குழந்தை என்று ஆகிவிட்டால்? எல்லாவற்றையும் யோசியுங்கள். இரவுப் பணி இல்லாமல் ஆக்கிக் கொண்டு வாருங்கள் திருமணம் பற்றிப் பேசுவோம்."

இரு தனித்தனி நிலை இது. குடும்பங்களில் நிலை இது. ஆணின் நிரந்த இரவுப் பணி கூட அவனின் வருவாயை மனதில் பணத்தின் அடிப்படையில் பெண்ணைப் பெற்றவர்களால் நல்ல வரன் என்று சிலாகிக்கப்பட்டு எளிதாக ஒப்புக்கொள்ளப்பட்டு தன் பெண்ணுக்குக் கிடைக்காதா என்று ஏங்க வைக்கிறது. ஆனால் பெண் ஒரிரு நாட்கள் கூட இரவுப் பணி செய்வது கணவனின் சுகத்திற்கு ஒரு தடையாய் மறுக்க வைக்கிறது.

பணி என்று வந்துவிட்டால் ஆணும் பெண்ணும் சமமதான். எனவே எந்த விதமான இடர்பாடும் இன்றி பணி புரிகிறார்கள். திறமையை நிரூபிக்கிறார்கள். உயர்வு பெருகிறார்கள். ஆண்களுக்கான இரவுப் பணி எல்லா தளத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. பெண்ணின் இரவுப் பணி செவிலியர் மருத்துவர் போன்ற சில குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்கி விட்டிருக்கிறது. ஒரு ஆண் இரவு நேரம் பணி முடிந்து வீட்டிற்கு வந்து உணவு அருந்திவிட்டு உடன் உறங்க குடும்ப அமைப்பு அனுமதிக்கும். பெண் இரவுப் பணி முடிந்து வீடு திரும்பியவுடன் அவளுக்கான மற்ற இதர பொறுப்புக்களை நிறைவேற்றிய பிறகே ஓய்வு எடுக்க முடிகிறது.

திருமணம் என்ற உறவு ஏற்பட, வாரம் ஒரு நாள் மட்டும் இரவு தங்கும் மகனையும் ஏற்றுக் கொண்டு பெண் கொடுக்க ஓடி ஓடி வரும் சமுதாயம் அப்பெண்ணின் குடும்ப உறவுகள் மற்றும் ஆசைகள் பற்றி கேள்வி கெட்க என்றில்லை, மனத்தளவில் கூட இடம் தர மறுக்கிறது. ஆனால், பெண் ஒரு நாள் கூட கட்டியவனுக்கு உபயோகம் ஆகாமல் இரவுப் பணிக்கு செல்வதை ஏற்க மறுக்கிறது.

எப்போதும் இரவுப் பணியில் இருக்கும் அழைப்பு மையத்தில் பணி புரியும் பெண்களின் திருமணம் இச்சமுதாயத்தில் எப்படி எதிர் கொள்ளப் படப் போகிறது என்பது இன்னமும் சில ஆண்டுகளில் புகைய ஆரம்பிக்கும். பெண் கை நிறைய சம்பாதித்தாலும் கூட அதற்கும் மேலாக ஒரு ரூபாயாவது அதிகம் சம்பாதிப்பதுதானே ஆணுக்கு அழகு? இரவு உபயோகம் தானே பெண்ணுக்கு அழகு?

நமது உறவுகளையும், இரவுகளையும் தீர்மானிப்பது இன்று யார் கையில் உள்ளது? நம்மிடத்திலா அல்லது பன்னாட்டுக் கம்பனிகளிடமா?

Thursday, July 15, 2010

சிறப்புக் குழந்தைகள்

பத்து சிறப்புக் குழந்தைகள் எனப்படும் மனவளம் குன்றிய குழந்தைகளை ஒரு சேரப் பார்க்கின்ற போதே நெகிழும் மனம் என்று ஒன்று உள்ள அனைவருக்கும். ஏறக்குறைய 600 சிறப்புக் குழந்தைகள் அவர்களை அணைத்துப் பாதுகாக்க அவர்களின் பெற்றோர்கள் அல்லது பெற்றோர், மற்றும் அவர்களைப் பெறாத பிள்ளைகள் என தாங்கி வளர்க்கும் பயிற்சி கொடுக்கும் ஆசிரியர்கள், அந்தப் பள்ளிகளை உருவாக்கி நடத்திவரும் தனியார் நிறுவனங்களின் நிறுவனர்கள் என, 2000க்கும் மேல் ஒருங்கினைந்திருந்தார். கலைவாணர் அரங்கிலிருந்து அவர்கள் ஊர்வலமாக கோட்டையை அடையும் முகமாக நடந்து வந்து கொண்டிருந்தனர். கையில் போராட்டத்திற்கான விளக்க அட்டை களுடன் தளர்ந்த கைகளுக்குள் இறுக்கிப்பிடித்தவாறு தகிக்கும் வெயிலில் நடந்து வருகின்றனர். சென்னையின் முக்கிய சாலைகளில் நடந்து வந்து கொண்டு இருக்கும் இவர்களைக் காண நேர்ந்தவர்கள் யாருக்குமே அன்றைய உணவு இதமளிப்பதாய் இருந்திருக்காது. அன்று காவலுக்கு உடன் நடந்த காவலர் அனைவரும்-ஆண்களும் பெண்களும், மனித நேயம் மிக்க நெகிழ்ச்சி கொண்ட உயிர்களாக கண்கள் பனிக்க காக்கி உடைக்குள் உடல் தளர இதயம் வெடிக்கும் ஆத்மாக்கள் எனக் கண்டேன். முக்கிய சாலைகளின் போக்கு வரத்தில் இந்தப் பிள்ளைகள் சிக்கிக் கொண்டு விடக்கூடாதே எறு கரிசனம் கொண்டு வழி நடத்திக் கொண்டு செல்கின்றனர். அங்கு பாதையில் போகும் வாகனங்களுக்குள் இருப்பவர்களும், கால் நடையாகச் செல்லும் இவர்களைக் கடந்து செல்லும் மனிதர்களும், ஒருசேர இவ்வளவு சிறப்புக் குழந்தைகளைக் கண்ட சங்கடத்தில் கடந்து செல்கின்றனர்.

சரி, இந்த சிறப்புக் குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் போராட்டம் நடத்தும் அளவுக்கு என்ன குறை? அரசிடம் என்ன கோரிக்கை? அதைப் பற்றி அறியும் முன்பாக சில வார்த்தைகள்.

உடல் ஊனமுற்ற- பார்வை஡ற்ற, கை கால்களற்ற, வாய் பேச முடியாத, காது கேட்காத மற்ற அனைத்து மக்களுக்கும் அந்த ஊனம் பிறவியிலேயோ அல்லது இடையிலேயோ ஏற்பட்டிருக்கலாம். சில ஊனங்கள் சிகிச்சைகள் மற்றும் மாற்று அங்கம் பொருத்துதலினால் நிவாரணம் அடையலாம். அவர்களைப் பயிற்றுவித்து அவரவர்களின் சுய தேவைகளை அவர்களே செய்து கொள்ளும் அளவுக்கு பழக்கலாம். தனியே வெளியில் சென்றுவர இவர்களுக்கு பயிற்றுவிக்க இயலும். ஏன் எனில் இவர்களின் மூளை முழு வளர்ச்ச்சி அடைந்துள்ளது. எனவே புரிதல் சாத்யம். இவ்வகை மனிதர்களுக்கு அரசு பல உதவிகளையும் செய்து வருகிறது. உதாரணமாக பேருந்துகளில் இலவச பயணம். மிகவும் நல்ல விஷயங்கள்தான் இந்த அரசு உதவிகள்.

ஆனால் மன வளர்ச்சி குன்றிய சிறப்புப் பிள்ளைகளிடம், சிறிய சிறிய முன்னேற்றங்களைத் தவிர்த்து வேறு எதையும் அதிகமாக நீங்கள் எதிர்பார்க்க முடியாது. இத்தகைய பிறப்பு ஓர் நிலை. அதை அப்படியே ஏற்றுக் கொள்ள மனப் பக்குவம் மிகவும் தேவை. முக்கியமாக பெற்றோருக்கு தேவை. இவ்வகை பிள்ளைகள் தனியே வெளியே செல்ல இயலாது. துணைக்கு ஒருவர் அவசியம். மேலும் இது போன்ற பிள்ளைகளில் 60 சதவிகிதம் பேருக்கு வலிப்பு நோய் இருக்கும். உடல் பலமற்று இருக்கும். நரம்புகளும் பலமற்று இருக்கும். எனவே எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும். நோய் எதிர்ப்பு மாத்திரைகளும், சத்தான உணவுகளும், வலிப்பு நோய்க்கான மாத்திரைகளும் கண்டிப்பாக தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். பேச்சுப் பயிற்சியும் அவசியம். பிசியோ தெரபி எனப்படும் உடல் செயற்பட அளிக்கும் பயிற்சிகளும் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். இவைகள் அத்தனையும் எப்போதும் தேவை. சில சமயங்களில் மருந்தின் அளவு குறையலாம் அல்லது கூடலாமே தவிர மருந்து உட்கொள்ள வேண்டாம் என்ற நிலை ஏற்படுவது மிக அரிது. இவ்வகை பயிற்சிகள் அனைத்துமே இதற்கான சிறப்புப் பள்ளிகளில்தான் கிடைக்கும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதும் கட்டாயமாகிறது. கூட ஒருவரின் துணை இல்லாமல் இவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாது. குறைந்த பட்சம் இருவருக்காவது பஸ் கட்டணச் சலுகை அவசியம்.

சில சிறப்பு பிள்ளைகளுக்கு வளைந்த பாதங்கள் இருக்கும். வளைந்த பாதங்களுக்காக தயாரிக்கப் பட்ட காலணிகள் ஷுக்கள் அணிவிக்க வேண்டும். அது மிகவும் விலை அதிகமானது. வலியும் அளிப்பதுதான். ஆனாலும், அது போன்ற காலணிகள் அணிவித்து காலப் போக்கில் சிறிது சிறிதாக வளைந்த கால்கள் நிமிர்ந்து ஓரளவுக்காவது நடக்க முடியும். இவ்வகை ஷுக்கள் உட்புறம் மிருதுவாகவும் வெளிப்புறம் எலும்பை வளைக்கும் அளவுக்கு கடினமானதாகவும் தயாரிக்கப்படுகிறது. மென்மையான பாதங்கள் புண் ஆகிவிடக் கூடாது. இவ் வகைக் குழந்தைகளுக்கு -எவ்வளவு வயதானாலும் இவர்கள் குழந்தைகள்தான்- பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும்.

சிறப்பு பிள்ளைகள் தமது வலியையோ, வேதனையையோ, பசியையோ, நோயையோ நமக்குப் புரியும் வகையில் நேரடியாக கூறத் தெரியாதவர்கள். எல்லாவற்றிக்கும் இன்னொருவர் துணை தேவை.

முதலில் இவர்களுக்கு அளிக்கப்பட வேண்டியது சுயதேவைப் பராமரிப்புப் பயிற்சி. அவற்றுள் முதன்மையானது கழிப்பறை பயிற்சி.

இவ்வகை பயிற்சிகள் அனைத்தும் இதற்காக சிறப்புப் படிப்புப் படித்து பயிற்சியும் பெற்ற ஆசிரியகளால்தான் அளிக்க முடியும்.

இது போன்ற எல்லா அடிப்படை நிலைகளும் பொருளாதாரத்தைச் சார்ந்தே இயங்குகின்றன. இவ்வகை பிள்ளைகள் ஜாதி, மதம், இன, பொருளா தாரம் என எந்த வகை ஏற்ற தாழ்வும் இன்றி எந்தக் குடும்பத்திலும் பிறக்கலாம். இது போன்ற பிள்ளைகளைப் பெற்றவர்கள் அனைவரும் ஒரே இனம். ஏனெனில் அவர்களின் சிரமம் ஒன்றேதான்.

அரசு சாரா தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் சிறப்புப் பிள்ளை களுக்கான பள்ளிகள் தமிழ்நாட்டில் மட்டும் 84 பள்ளிகள் உள்ளன. ஆனால் அரசின் பள்ளி ஒன்றே ஒன்று மட்டுமே உள்ளது. அது சென்னை சிட்லபாக்கத்தில் இருக்கிறது. அது, தங்கும் இட வசதியுடன் கூடியது. மன வளம் குன்றிய ஆதரவற்ற குழந்தைகளின் இல்லம் 'பால விஹார்' என்னும் பெயரில் கீழ்பாக்கத்தில் பஞ்சவடியில் இயங்கி வருகிறது. இப்பள்ளிக்குப் பின் புறம் இவ்வகை பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியும் இருக்கிறது.

இன்னொருவர் துணையுடன் பயணம் செய்யும் இப்பிள்ளைகளுடன் வருவோருக்கு இலவச பஸ் பாஸ் கிடையாது. தனியார் நிறுவனங்கள் எவ்வளவு தான் கருணை நோக்கில் பள்ளிகள் நடத்தி வந்தாலும் கூட தொடர்ந்து நடத்த ஆகும் செலவு அதிகம். மேலும் முழு மன வளர்ச்சி அடைந்த பிள்ளைகளை வகுப்புக்கு 40 அல்லது 50 என்று ஒருங்கினைத்து நடத்துவது போல இப்பிள்ளை களை கூட்டமாக உட்கார்த்தி வகுப்பு எடுக்க இயலாது. முழு வளர்ச்சி அடைந்த பிள்ளைகளைக்கூட பெரும் கூட்டமாக அமர்த்தி அவர்களின் தனி வளர்ச்சியில் கவனம் இல்லாமல் நடத்தப்படும் பள்ளிகளை நாம் கண்டிக்க வேண்டும். அப்படி இருக்கும் நிலையில் இப்பிள்ளைகளின் மேல் அக்கறை எடுத்து நடத்தப்படும் பள்ளிகளில் 5 அல்லது ஆறு பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப் படையில்தான் நடத்த முடியும். இவை அனைத்திற்கும் அரசின் உதவி இருந்தால்தான் நல்ல பாராமரிப்பு கிடைக்கும். இவை அனைத்திற்குமாக நடத்தப்படும் போராட்டம்தான் நான் முதலில் கூறியது.

தனியார் நடத்தும் சிறப்புப் பள்ளிகளில் ஆசிரியராக பணி ஆற்றுவோர் பலர் தம்முடைய பங்களிப்பை இவர்களுக்கு ஆற்றும் நோக்கில் வேலை செய்ய வந்தவர்கள். .அதனால் ஊதியம் பற்றிக் கவலைப்படாமல் தன்னார்வத்தினால் பணி ஆற்ற முன் வருகிறார்கள். ஆனால் எல்லோரையும் அந்த நோக்கிலேயே அணுக முடியாது. சிறப்பு பிள்ளைகளைகளின் பெற்றோர்களே தனது முழு நேரத்தையும் பிள்ளைக்காகவே செலவிடும் தியாக உணர்வும் அர்ப்பணிப்பும் இருந்தால்தான் குழந்தைகள் ஓரளவாவது மேம்பட இயலும் என்கிற நிலையில், இப் பிள்ளைகளுக்காகப் பணி ஆற்றவரும் ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உடையவர்களாகத்தான் இருப்பார்கள் என்றாலும் கூட தனது குடும்பத்தையும் குழந்தைகளையும் பராமரிக்கும் அளவாவது ஊதியம் இருந்தால்தானே தனது முழு கவனத்தையும் இப்பிள்ளைகள் மீது செலுத்த இயலும்? பள்ளியில் ஒருசேர பல பிள்ளைகளை வழிநடத்தும் இவ்வகை சிறப்பு ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் தகும். இம்மாதிரியான சவால் மிகுந்த வேலைகளில் ஈடுபடும் இவர்களுக்கு ஊதியம் 2000 ரூபாய்க்கும் குறைவாகக் கிடைக்கிறது. நல்ல வருமானம் கிடைத்து அமைதியான குடும்பப் பிண்ணனி இருந்தால் இவ்வாசிரியர்கள் இன்னமும் முழு ஈடுபாட்டுடன் பணி ஆற்ற இயலும். குறைவான ஊதியம் காரணமாக ஏற்படும் மன உளைச்சலுக்கும் குடும்ப அமைதிக்கு பங்கமும் ஏற்பட்டால் ஆசிரியர்கள் எப்படி தன் கடமையில் முழு மனதுடனும், சிறப்பு பிள்ளைகளிடம் அன்பும் அரவணைப்பும் காட்ட முடியும்?

இத்தகைய பள்ளி நடத்துவோருக்கும் பலவகை சிக்கல்கள். இப்படிப்பட்ட பள்ளிகள் நடத்த இடம் தர முனைவோர் மிகக் குறைவு. சொந்த இடத்தில் பள்ளி நடத்தினாலும், இப்பிள்ளைகளின் ஒழுங்கற்ற சப்தத்தைத் தொந்தரவாகக் கருதும் மக்கள், -இது போன்ற பிள்ளைகளால் பாதிக்கப் படாத மக்கள்- பள்ளியை அகற்ற எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்கின்றனர். ஆகையால் தொடர்ந்து பள்ளி நடத்துவது என்பது கடுமையான விஷயமாக உள்ளது. அரசு உதவி கிடைத்தால் அல்லது இது போன்ற சிறப்பு பள்ளிகள் நடத்த இடம் அளித்தால் இது போன்ற பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் பேருதவியாக இருக்கும்.

சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் ஆயாக்கள் தெய்வத்திற்கும் மேலானவர் கள். எச்சில் ஒழுகி கொண்டும், அடிக்கடி வலிப்பு வந்து திடீர் திடீரென்று விழுந்து கொண்டும், கழிப்பறை உபயோகிக்கத் தெரியாதவரை உணர்வற்று கழிவுகளை வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கும் இப்பிள்ளைகளின் தேவைகள் அனைத்தையும் பள்ளியில் இருக்கும் வரை ஆயாக்கள்தான் கவனிக்கின்றனர். ஆனால் பல இடங்களில் ஆயாக்களுக்கு ஊதியம் 800 ரூபாய் தரப்படுகிறது.

குடும்பங்களில் ஏற்படும் குழப்பங்கள் குறித்தும் பேச வேண்டும். டூம் மாதிரியான சிறப்புப் பிள்ளைகள் பிறக்கக் காரணம் பெண்ணே, அதாவது மனைவியே என்ற மூடத்தனமான எண்ணத்தால், மனைவியை விட்டுப் பிரியும் ஆண்களும் உள்ளனர். வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்வித்து முழு மூளை வளர்ச்சியுடன் பிள்ளைகள் பிறக்கும் என்று ஆண்களைச் சார்ந்தவர் களும் நம்புவதால் பெண்ணுக்கு மண வாழ்க்கை பாதிக்கப் படுகிறது. பெண்ணே தன் குழந்தையின் முழுப் பொறுப்பையும் சுமப்பது, பெண்ணின் பிறந்த வீட்டில் இவர்களைக் கடைசிவரை காப்பற்றும் பொறுப்பும் கூடிவிடுகிறது. ஆண் பெண் இருவராலும் மற்றும் குடும்பத்தாராலும் நிராகரிக்கப் பட்டு இந்தப் பிள்ளைகள் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் பல பொது இடங்களிலும் விட்டுவிடப் படுகின்றனர். இது போன்ற ஆதரவற்ற சிறப்புப் பிள்ளைகளை கண்ட நல்ல உள்ளம் கொண்டோ ர் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்கின்றனர். இல்லையென்றால் அவர்கள் ஆதரவற்ற நிலையில் சமூகத்தில் நிராகரிக்கப்பட்டும் அலைய வேண்டி வருகின்றது. இது போன்ற பிள்ளைகளை தங்குமிடத்துடன் காப்பாற்ற இருக்கும் பள்ளிகள் முன் சொன்னபடி தமிழகத்தில் இரண்டே இரண்டுதான். தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பள்ளி களுக்கு அரசு இடம் கொடுத்து உதவலாம், பள்ளி நடத்த பொருளாதார முறையில் உதவலாம், அல்லது அரசே இவ்வகைப் பள்ளிகளை எடுத்து முன்னுதாரணமாக மிக நல்ல முறையில் நடத்தி பிள்ளைகளுக்குப் பாதுகாப்புத் தரலாம்.

சிறப்புப்பள்ளிகள், அவற்றினாசிரியர்கள், ஆயாக்கள், பள்ளி நடத்துவதில் உள்ள நடை முறைச் சிக்கல்கள் போன்றவற்றைப் பற்றின சில துளிகள் பற்றி பார்த்தோம். பள்ளிக்கு வரும் பிள்ளைகள் தவிர இன்னமும் அநேகர் உண்டு.

சிறப்புப் பிள்ளைகள் என்று அழைக்கப்படும் மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகள் அனைவரையும் ஒரே பட்டியலில் இட முடியாது. அவர்களின் புரிதலின் அடிப்படையில் மற்றும் மன வளர்ச்சியின் அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டு இருப்பார்கள். வெறும் உயிருள்ள அசையும் திறன் மட்டுமே கொண்டவர்கள் முதல், வெளிப்பார்வைக்கு ஒன்றுமே அறிய முடியாதவாறு சாதாரண பிள்ளைகளைப் போல இருப்பவர்கள் வரை பல நிலைகளில் இருக்கின்றனர்.

சரி. இப்படிப்பட்ட பிள்ளைகள் பிறக்கக் காரணங்கள் சிலவற்றைப் பார்ப்போம். பொது மக்களான நாம் இவற்றை உணர்ந்து இவ்வகை குழந்தைகளின் பிறப்பு தவிர்க்கப்பட ஆவன செய்ய வேண்டும். மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகள் மொத்த ஜனத்தொகையில் 3% மட்டுமே. இன்னமும் இது குறையவும், நல்ல மக்களை உருவாக்குவதும் நமது கடமை என்பதையும் உணர வேண்டும்.

1. நெருங்கிய சொந்தத்தில் திருமணம் தவிர்க்கப்பட வேண்டும்.

2. சற்றே மன வளர்ச்சி குன்றியிருந்தாலும் கூட அவர்களை திருமண பந்தத்தில் ஈடுபடுத்தாமல் இருப்பது மிக முக்கியம். அவர்களின் பிள்ளைகள் இன்மும் அதிக மனவளம் குன்றியவர்களாக பிறக்க கூடுதல் வாய்ப்பு உண்டு.

3. குழந்தை பிறந்த உடன், தொப்புள்கொடி அறுக்கப்பட்ட பின் அழ ஆரம்பிக்க வேண்டும். அப்படி அழத் தவறினால், தலைகீழாக தூக்கித் தட்டி அழ வைக்க வேண்டும். அப்படி முயற்சி செய்யாமல் இருக்கும் ஒவொரு வினாடியும் குழந்தையின் மூளை செல்கள் அழிந்து கொண்டே இருக்கும் அபாயம் உள்ளது என்பதை நாம் மிக முக்கியமாக உணர வேண்டும்.

4. கர்ப்பமாய் இருக்கும் சமயம் கருவுக்கு ஊறு விளைவிக்கும் மருந்துகள் எதையும் சாப்பிடக் கூடாது. மருத்துவரின் ஆலோசனை இன்றி வலி நிவாரணி கூட எடுத்துக் கொள்ளக் கூடாது. கருவின் வளர்ச்சியில் மருந்துகளின் பாதிப்பு அதிகம்.

5. கர்ப்பமாயிருக்கும் போது ஆறாம் மாதத்தில் கருப்பையின் நீரை எடுத்து பரிசோதிக்க வேண்டும். அதன் மூலம் குழந்நதைன் மூளை வளர்ச்சி குறித்து அறிய முடியும். ஒரு வேளை கரு மூளை வளர்ச்சி குன்றி இருப்பது தீர்மானம் ஆனது என்றால் மருத்துவரின் ஆலோசனையுடன் அடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவைகள் எல்லாவற்றையும் மீறி குழந்தை பிறந்து விட்டால், அதை பூரணமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்றோர்களுக்கு வர வேண்டும். எனக்கு இப்படிப்பட்ட ஒரு குழந்தையா? என்று மருகாமல் கடவுள் என்னைத் தேர்ந்தெடுக்க ஏதாவது சிறப்புக் காரணம் இருக்க வேண்டும் என்று ஆக்க பூர்வமாக நினைக்கப் பழக வேண்டும். சிறப்பு குழந்தைகளை குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக ஏற்று அன்பு செலுத்த முற்பட வேண்டும்.

சிறப்பு குழந்தைகளை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். எப்போதும் அறையில் அடைத்து வைப்பது, பூட்டிய வீடுகளினுள் விட்டு செல்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அருகில் அமைந்துள்ள பயிற்சி மையத்திற்கு அக்குழந்தையை சேர்க்க வேண்டும். நாம் மட்டுமல்ல நம் போன்ற பலர் உள்ளனர், எனவே ஓநான்'' இல்லை ஓநாம்'' என்ற மனப்பக்குவமும் தைரியமும் அடைய இது ஒரு சிறந்த வழி. குழந்தையும் பசி, தாகம், கழிப்பறை உபயோகம் போன்ற பலவற்றை உணர்ந்து, தனக்கேயான முறைகளில் வெளிப்படுத்தத் துவங்கும். தனியே வீட்டில் வைத்திருந்தால் இந்த வெளிப்பாடு வரவே வராது. எல்லோருடனுமிருப்பதும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பயிற்சி பெருவதிலுமே இது கை கூடும். சில குழந்தைகள் பேச, நடக்கக் கூட ஆரம்பிக்கும். எத்தனை வயது கூடினாலும் இவர்கள் குழந்தைகள் மட்டுமே என்பதையும் பெற்றோர் உணர வேண்டும்.

சிறப்புப் பிள்ளைகளின் மாற்றம் என்பதும் வளர்ச்சி என்பதும் பூ ஒன்று மலர்வதற்கு இணையானது. எனவே உடனே வெளிப்படையாக மாறுதல் கண்ணுக்குத் தெரிய முடியாது. மிக மெதுவாக நிகழும் மாற்றம் ஆகும். விளைவை நோக்கி துரித ஓட்டம் ஓடாமல், பெற்றோர்கள் மிகப் பொறுமையாக பள்ளிகளில் கற்றுக் கொடுத்த பயிற்சிகளில் குழந்தைகளைத் தொடர்ந்து ஈடுபடுத்தி வர வேண்டும்.

மருத்துவர்களும், பெற்றோர்களுக்கு இது ஒரு நிலை. தீர்க்கக்கூடிய நோய் அல்ல. அதிக மாற்றமோ அதிசய நிகழ்வுகளோ இதில் சாத்யம் இல்லை என்ற உண்மையை மெல்ல மெல்ல புரியவைக்க முயல வேண்டும். மருத்துவரின் பங்கு இதில் பெற்றோர்களுக்கு மிக முக்கியமானது. மிராக்கிள்ஸ் எனப்படும் மாயையை சாத்யமாக்குவேன் என்று தவறன நம்பிக்கைகள் கொடுக்காமல் இருந்தால் நல்லது.

இது போன்ற பிள்ளைகளுக்கு ஆகும் செலவு மிக அதிகம். பணம் உள்ளவரகளாக இருந்தால் சமாளிக்கலாம். ஏழை எளிய மக்களுக்கு வலிப்புக்கான மாத்திரை, ஷூக்கள், சத்தான உணவு என்பதெல்லாம் இயலாத விஷயம். அரசு இவ்வகைப் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு கூடுதல் கவனம் எடுத்து அவர்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை அளித்தால் ஏழை மக்கள் தம் சிறப்பு குழந்தைகள் மேல் கூடுதல் அன்பு செலுத்த முடியும். இதை அரசு செய்யும் என்று நான் பூரணமாக நம்புகிறேன். அரசே எடுத்து நடத்தும் சிறப்பு பள்ளிகள் இன்னமும் எண்ணிக்கையில் அதிகமாக்கி, தரமான பயிற்சி தரமான உணவு என்று வழங்கினால் நலம்.

அன்று நடந்த இவர்களின் போராட்டம் இவை அனைத்தையும் உள்ளடக்கியது தான். போராட்டம் நடந்து சில அதிகம் ஆகிவிட்டது என்றால் இதற்கான தேவை முடிந்து விட்டது, எல்லாம் சுபம் என்ற பொருள் அல்ல. போராட்டம் ஒரு பார்வைக் குவிப்பு. அவ்வளவே. இது ஒரு ஆரம்ப முயற்சி.

போராடத்தின் போது என்னை அதிசயிக்க வைத்தது பிள்ளைகளின் ஒழுங்கு, மற்றும் அமைதி காத்த விதம். நன்கு வளர்ந்த சிலர் கூடினாலே சப்தமும், விவாதங்களும், தான் என்ற ஈகோவுடன் போடும் கூச்சலும் இருக்கும். அன்று அத்தனை பிள்ளைகளும், கழிப்பறை உபயோகம், பசி, தாகம் என்று எதற்காகவும் கூச்சல் இடாமல் கைகளில் போராட்ட அட்டைகளுடன் சிலர் நடந்தும் சிலர் சைக்கிளிலும் பயணம் செய்து வந்தனர். ஒழங்கு கொண்டு நடந்து வந்த அத்தனை பிள்ளைகளும் அற்புதமானவர்களே. நம்மைப் போன்றவர்களோ, சிறு விஷயங்களுக்கெல்லாம் சண்டையும், கலவரமும், யுத்தமும், செய்து கொண்டு அப்பாவிகளைக் கொன்று, நமது நன்கு வளர்ந்த மூளைகளையும், உடல்களையும் தவறாகவும், பிடிவாதமாகவும் உபயோகித்துக் கொண்டு இருக்கிறோம். காலத்தையும் மனங்களையும் காயப்படுத்திக் கொண்டு நிரந்தரக் கருப்புப் பதிவுகளை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். தனக்கு உறு துணையாக இருக்கும் அனைத்தையுமே சுல நலம் கொண்டு இயற்கையையும் சேர்த்து, எடுத்தாள்கிறோம். அழிக்கிறோம்.

இவர்களை ஏற்றுக் கொண்டு இவர்களுக்கு அனுசரனையாக என்ன என்ன செய்யமுடியும்? முதல் நிலை இவர்களை பெற்றோர்களும், உற்றோர்களும், சமூகமும் தன்னுடைய ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ள பழக வேண்டும். சிறப்பு பிள்ளைகளால் உண்டாக்கப்படும் மெழுகுவர்த்தி, துடைக்கும் துணி, கைவினைப் பொருள்களையும் வாங்கி ஊக்கப்படுத்தலாம். எனக்கு இப்படி ஒரு குழந்தையா என்று ஆதங்கப்படாமல் தன்னுடன் கூட்டிச் சென்று, அவர்களுக்கும் வெளி உலகத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஓரளவு தேறி தன் வேலைகளை தானே செய்து கொண்டு, கற்றுக்கொடுத்த சின்னச் சின்ன வேலை களைச் செய்யும் பிள்ளைகளுக்கு தகுந்த வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கலாம். உலகம் வேகம் மிகுந்ததுதான். அவரச உலகம்தான். ஆனாலும் சற்றே பயணத்தை நிறுத்தி இவர்களையும் உடன் அழைத்துச் செல்லலாம்.

மருத்துவர்களும் தன்னாலியன்ற மட்டும் பெற்றோர்களுக்குப் புரிய வைக்கலாம். அதை விடுத்து புது புது விதமான சிகிச்சை முறைகளை இருப்பதாகச் சொல்லி பெற்றோர்களின் நம்பிக்கையை தூண்டி பணம் பண்ணும் சொல்லை விடுத்து, உண்மையாக என்ன செய்ய முடியுமோ என்ன செய்ய இயலுமோ அவற்றை மட்டுமே சொல்லி புரிய வைக்கலாம். பெற்றோர்களும் மருத்துவர் உண்மையைச் சொன்ன உடன் மந்திரத்தை நம்பி அடுத்து பணம் செலவழித்து அக்குழந்தையையும் இம்சைக்குள்ளாக்காமல், சரி, என்று ஏற்றுக் கொண்டு முழு குடும்பமும் குழந்தையின் மீது அன்பு செலுத்தலாம்.

சிறப்புப் பிள்ளைகளுக்கு வரும் நோய்களுக்கு- வலிப்பு, விழுந்து அடி பட்டுக் கொள்ளும் காயங்களுக்கு மருந்திட்டு ஆற்றுதல், இவர்களின் உடல் நலத்தின் தேவைகளுக்கு ஏற்ப சத்தான உணவு, நரம்புகளுக்கு வலு சேர்க்கும் மருந்துகள் போன்று பல மருத்துவ கவனிப்பு தற்காலத்தில் அதிகரித்திருப்பதால், இவர்களின் ஆயுளும் அதிகரித்து இருக்கிறது. இப்போது 40 வயது வரை கூட வாழ்கின்றனர்.

சிறப்புப் பிள்ளைகளில் ஒரு பகுதியினர் மட்டுமே அன்று வந்திருந்தார்கள். இன்னமும் நடக்கக் கூட இயலாமல், வெளி உலகத்திற்கு அறிமுகமே ஆகாமல் இருக்கும் பிள்ளைகளையும் கணக்கில் எடுத்து அவர்களின் மேம்பாடுக்கு அரசின் உதவி கிடைக்கவும் அவர்களை நம்மில் ஒருவராக ஏற்கவும் கற்போம், கற்பிப்போம்.

உடல்மொழியில் சிக்கல்

உடல்மொழியில் சிக்கல்

தெருவைக் கடந்து வரும் பொழுது இரு சிறுவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவனுக்கு ஏழு வயது இருக்கும். மற்றொரு சிறுவனுக்கு பனிரெண்டு வயது இருக்கும். வலியவன் பெரியவன், தன்னைவிட சிறிய பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தான். வலி தாளாமல் சிறுவன் அலறினான். இடையில் சென்று திட்டிவிட்டு இருவரையும் பிரித்துவிட்டேன். பெரியவன் சில அடி தூரம் சென்றுவிட்டான். பின் அவன், தன் பக்கம் திரும்பி அடிக்க வரமாட்டான் என்ற தைரியம் பெற்ற சிறியவன் அக்கணத்தில் பெருங்குரலெடுத்து, பெரியவனின் தாயையும் தன்னையும் சம்பந்தப்படுத்தி கூவினான். உடல் ரீதியான சம்பந்தம். இது போன்ற சொற்கள் எப்போதும் எல்லோராலும் சொல்லப்படும் சொற்கள்தான் என்றும் அந்த சொற்களுக்குப் பொருள் தேடவேண்டாம் என்றும் விடமுடியவில்லை. ஏழு வயதேயான சிறுவனின் அங்க அசைவுகளும் அவனின் தொடர் சொற்களும் மனதில் சங்கடத்தை ஏற்படுத்தின.

பலமானவனை வீழ்த்த, அல்லது தன்னால் சரியான பலத்தைப் பிரயோகிக்க முடியாது எதிராளி வலிமை நிறைந்தவன் என்பதனை உணர்ந்து தனது பலத்தையும் பலவீனத்தையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்த சிறுவன் ஒரு பெண்ணைக் கேவலமாக்குகிறான். இது இச்சிறுவன் மட்டும் செய்வதோ அல்லது இந்தக் காலத்தில் மட்டுமே நடைபெறுவதோ கிடையாது.

இரு மதங்களிடையே மோதல், இரு சாதியரிடையே மோதல், ஒரு சாரார் வலிமை மிக்கவர்கள், பொருளாதார ரீதியாக உயர்ந்தவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் என எவராயினும், அங்கு கிழிபடுவது பெண்களின் உடல்கள்தான். தன் வலிமையை நிரூபிக்க, மற்றொருவனை அவமானப்படுத்த என எந்த நிலையிலும் ஆண்களின் செயல்பாடுகள், தான் சார்ந்த பெண்ணைக் காப்பாற்றுவதும், எதிர் மக்களின் பெண்களை உடலாக இயங்கச் செய்வதும் மாத்திரமே. எனவேதான் இருசாராரும் தான் சார்ந்த பெண்களைக் மிகவும் அடக்கி, தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முற்படுகின்றனர்.

போர், சண்டை முதலான நிலைகளிலும் பெண்களின் இருப்பு இப்படியாகத்தான் இருக்கிறது. எனவே பெண்கள் சொத்தாகக் கருதப் படுகின்றனர். சொத்தைக் காப்பாற்றவும், அழிக்கவும் என இரு பிரிவாக ஆண்கள் பெண் உடல் மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

எனவே பெண் பிறப்பிலிருந்து உடலாகவே காப்பாற்றப்படுகிறாள். கால்களை அகட்டி உட்காராதே, துணிவிலக்கூடாது, சிரிக்கக்கூடாது, அதிக ருசிகளுக்கு ஆளாகக் கூடாது, இரவிற்குப் பின் எங்கும் திரியக்கூடாது எனவும் கட்டு திட்டங்களுக்கு ஆளாகிறாள். 'பெண்' என்பது ஒரு இழிச் சொல் போல எப்போதும் தொடர்ந்து வருகிறது. அலங்கரித்துப் பார்ப்பார்கள். நகையிட்டு நடமாட வைப்பார்கள். நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வார்கள். கூடவே பாதுகாப்பு வளையத்துடனேயே. எனவே, பெண் தனது உடல் இழுக்கா, அருவருப்பா, பெரும் வரமா என்று புரியாமலே வாழ்ந்து மறைந்தும் விடுகிறாள்.

திருமணத்திலும், அதற்குப் பின்னும் இக் கட்டு திட்டங்கள் உடன் உலாவிக் கொண்டே இருக்கும், இறப்பு வரை. அவள் தனது மறு உற்பத்தி களையும் இவ்வாறே தன் கையிலிட்ட கடமைகளைக் காத்து, அவளுக்கு மறுபடியும் அளித்துவிட்டு மறைகிறாள். மனம், உடல் சார்ந்த கட்டுப்பாடு களுடன்.

அனைத்துப் பெண்களுக்கும் கட்டுபாடுகள் ஒன்று போல இருக்க முடியாது. ஜாதி, மதம், பொருளாதாரம் சார்ந்து கயிற்றின் நீளம் கூடலாம் அல்லது குறையலாம். தன் உடல் சார்ந்த எண்ணம் எழ இங்கு இடமே கிடையாது. ஆண் வர்ணனைகள் பெண் உடலைப் பற்றி ஆண்டாண்டு காலமாக காதலாக, பிரிவாக கொண்டாடுதலாக எழுதப்பட்டுள்ளது, பேசப்பட்டுள்ளது. எல்லாவற்றிக்கும் மேல் அவ்வுடலை அடையவும் அடையலாம்.

சுயம் அறிந்தபின் எழுதவந்த பெண்கள் பலர் இந்த நிலை பற்றி பேசி எழுதி இருக்கிறாகள். ஆணின் ஆதிக்கம் பற்றி, குடும்பத்தில் பெண்ணின் இருப்பு பற்றி, கணவன் மனைவி-ஆண் பெண் சமத்துவம் பற்றி, பெண் தன் பிறப்பிலிருந்து ஆண் சார்ந்த வாழ்வு வாழும் நிலை பற்றி, ஒரு வேளை உணவுக்காக-தன் குழந்தையின் பாலுக்காக- தன் உடல் புழங்கக் கொடுக்கும் பெண் பற்றி, அலுவலகத்தில் மற்றும் அரசியலில் பெண்ணின் இருப்பு பற்றி என எல்லாத் தரப்புகளிலும் கவிதைகளும், சிறுகதைகளும், நாவல்களுன் ஏற்கனவே பெண்களால் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இவற்றின் தொடர்ச்சியாகத்தான் பெண் உடல் மொழி எழுதவரும் பெண் கவிஞர்களையும் சங்கிலிக் கண்ணியாகக் கொள்ளப்படல் வேண்டும். மற்றொரு சிறு வெளித்திறப்பு என்பதாக் கருத வேண்டும். பொதுப் பெண்ணியம் சாத்தியமில்லாதது போலவே பொது உடல் மொழியும் சாத்தியமில்லாததே.

தனது உடல் அடையாளம் காணப்படுதல், தனது உடல் தனதென்று உணர்தல், தன்னுடல் போற்றுதல் என்பது ஒருவகைக் கொண்டாட்டம்.

முன்னமே சொன்னபடி பெண் உடல் அவளின் விருப்பம் சார்ந்தோ, தேர்வு சார்ந்தோ வழங்கப்படுவது கிடையாது. அங்கீகரிக்கப்பட்ட உறவாயினும், அங்கீகரிக்கபடாத உறவாயினும் கூட்டமாக அல்லது தனியாக என்று எந்த இடத்திலும்.

எனவே அதிலிருந்து விடுபட்டு தன் உடல் தனதென்று உணர்ந்து, தன் விருப்பம் முதன்மையாகக் கொண்டு தன் உடல் ஆணுக்கு வழங்குதல் என்பது ஒரு வகை. இன்னொருவகையில் ஜாதி, மதம் தன்னுடலிருந்து பிய்த் தெடுக்கப்படுகிறது. பின் உடல் பகிர்தல் நிகழ்கிறது. எனவே உடல் தனதாகக் கருதப்படுவதால் தேர்வு தன்னுடையது ஆகிறது. அது ஆணா, பெண்ணா என்பதும் கூட.

எந்த ஆணுக்கும் தனது உடல் வழங்கப்படாதிருத்தல், தன் உடல்சார் தேவையை தன்பால் உறவுடன் மீட்டல், மறு உற்பத்திக்கு உடலை அளிக்காமல் மறுத்தல்; இது இன்னுமொரு வகை.

இன்னமும் இது போன்ற தனது ஜாதி மத அடையாளத்துடன் தன்னுடல் கொண்டாடுதல் மேலும் ஒரு வகையாகும். பல பிரிவுகளுக்குச் செல்லும் வழியாகத்தான் உடல் மொழி வழிவகுக்கும்.

உடல் மொழி என்பதில் இவைகள் ஒரு சிறு கீற்று மட்டுமே. ஆனால் இவை மட்டுமே பெண்ணியம் பேசும் கவிதைகள் என்பதில் உடன்பாடு கிடையாது. இந்த உடல் மொழி பேசும் கவிஞர்களிடமும் குழப்பமும், முரணும் உண்டு. குழப்பமே திறப்புக்கு வழி வகுக்கும்.

உடல் மொழி பற்றி எழுதும்-பேசும் கவிதைகளில் கட்டமைக்கபட்ட சொற்களும், சொல்லடுக்குகளும் எல்லாமே -உடல் உறுப்புகளுக்கான சொற்கள் உட்பட- ஏற்கனவே புழக்கத்தில் இருந்துகொண்டு இருப்பவைகள்தான்.

எண்ணங்களையும் கருத்துக்களையும் மற்றொரு தளத்திற்கு கொண்டுசெல்ல ஆயத்தமான ஒரு முயற்சி என்று இவைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். தொடர் செயல்பாடுகளாலும், முயற்சிகளாலும், பரிசோதனைகளாலும் மட்டுமே எதிர்காலத்தில் புதிய தளங்களையும் மொழியையும் கண்டறிய இயலும்.

உடல் மொழிக்குப் பயன் படுத்தப்படும் அழகியல் சொற்கள், படிமங்கள், கொண்டாட்டச் சொற்கள் என எல்லாம் முன்னம் இருந்தவைகளிலிருந்துதான் எடுத்தாள வேண்டி உள்ளது.

பெண் உடல் சார்ந்த எழுத்துக்களில் இன்னமும் நிராகரிக்கப்படும் பெண்ணுடல், உபயோகப்படுத்தக்கூடாத உடல்களின் உபயோகம் போன்றன வற்றைப்பற்றி எழுத வேண்டியுள்ளது.

புற்று நோயால் மார்பகங்கள் அகற்றப்பட்ட பெண் உடல் உதாசீனப் படுத்தப் படுகிறது; அவளைச் சார்ந்தவர்களாலேயும், சமூகத்திலும், சந்தையிலும்.

ஆணுடன் தன் உடலைப் பகிரத் தயாராயிருந்தாலும்கூட, கருப்பை சிதைந்த பெண் நிராகரிக்கப்படுகிறாள். நடுவயதில் கருப்பை அகற்றப்பட்டாலும் கூட அவள் சார்ந்த ஆணால் குறையுடைவளாகவும், உபயோகம் அற்றவளாகவும் கருதப்படுகிறாள்.

பூப்பெய்தாப் பெண்ணுடல் உடலாகக் கருதப்பட மாட்டாது. மறு உற்பத்திக்கு இயலாத உடல் உடலல்ல.

ஆண்மையற்ற ஆண்கள் உற்ற நண்பன் அல்லது உறவு மூலமாக தன் மனைவியைக் கருத்தரிக்க வைத்து, தம் ஆண்மையை, இயங்கு திறனை நிரூபித்துக் கொள்ள முடியும்.

இன்னொரு நிலையில் உபயோக்கிக் கூடாத உடல் உபயோகம் ஆதல் என்று உள்ளது.

இவ்வகைப் பெண் உடல்கள் சீரழிக்கப்படுகின்றன. சிறுமிகளின் உடல் கலவிக்கு உபயோகப்படுத்தபடுகிறது. மனம் வளரா, உடல் மட்டுமே வளர்ந்த பெண் -எல்லா இடங்களிலும் இல்லையென்றாலும் சில தருணங்களில்- பெண் உடலாகப் பார்க்கப்படுகிறாள். மன நோய்க்கு ஆளாகி தெருவில் திரியும் பெண் கர்ப்பமாக்கப் படுகிறாள்.

அழகான பெண்ணின் உடல் தற்கொலைக்குப் பின்னும் உடலாகவே பார்க்கப் படுகிறது பிணவறைகளில்.

உடல் பற்றிப் பேசும் எழுத்துக்களே ஆபாசம் என்று கருதுபவர்கள் அறியாமை குறித்து பரிதாப்பப்படத்தான் முடியும். மருத்துவமனைகளில் பிரசவம் ஆபாசம். எய்ட்ஸ் ஆபாசம். அதற்கு மருந்து கண்டு பிடித்தல் ஆபாசம். நோயாளிகளை அரவணைத்தல் ஆபாசம் எனக் கொள்ளல் வேண்டி வரும். எது களையப்பட வேண்டும், எது குறித்து கவலை கொள்ள வேண்டும் என்ற தெளிவு இன்னமும் வரல் வேண்டும்.

பெண் என்பவள் எவற்றையெல்லாம் எழுதலாம், எழுதக் கூடாது. எங்கு செல்லலாம், செல்லக் கூடாது. எந்த மேடைகளில் பங்கு பெறலாம், பங்கெடுக்கக் கூடாது. எவரையெல்லாம் கொண்டாடலாம், போட்டு உடைக்கலாம் என்பது போன்ற இன்னமும் பலவும் ஆண்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிற நிலைமை மாற வேண்டும். எவற்றை எழுதவும், எழுதாமல் இருக்கவும் கவிஞர் தன் சுயம் சார்ந்து மட்டுமே முடிவெடுக்க வேண்டும். ஆதரவும், மறுப்பும் பக்க வாட்டில் இருக்க வேண்டும்.

ஒளி உருண்டை விற்பவள்

ஒளி உருண்டை விற்பவள்


அடர் ஆரஞ்சு வண்ணத்தில் அடர் நீல பார்டர் இட்ட பாவாடை கட்டி இருந்தாள் அப்பெண். வெளிர் ஆரஞ்சு தாவணியும், அடர் நீல ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். 'ஆரஞ்சு இருபது, ஆரஞ்சு இருபது' எனக் கூவினாள். எனக்கோ எங்கோ கணக்கு இடருவதுபோல இருந்தது. ஆறும், ஐந்தும் பதினொன்று, ஆறு தடவை ஐந்திருந்தால் முப்பது. இடைப்பட்ட ஒரு எண்தானே இருபது? என்றாலும் கணக்கிற்குள் கட்டுப்படாதவாறு கூவல் என்னைத் தொடர்து வந்தது. 'மிட்டாய் ஆரஞ்சு, மிட்டாய் ஆரஞ்சு' கூவல் தொடர்ந்தது. இதுவும் முன்னுக்குப்பின் முரணாய் உள்ளது. ஆரஞ்சு மிட்டாய் உள்ளது. மிட்டாய் ஆரஞ்சு எங்கே உள்ளது? கூவல் அருகில் கடந்த போது பெண் கைகளில் நான்கு ஆரஞ்சு களையும், கூடையில் அநேக ஆரஞ்சு களையும், தலையில் சுமந்தும் ஆரஞ்சுப் பழத்தின் மீதான தனது திட நம்பிக்கையை உரிச்சொல்லாக முன்னெடுத்தும் கூவிக்கொண்டு சென்றாள். இரு கணக்குகளுமே அவளுக்கு சரி என்ற என் கணக்கு சரியாயிற்று.

பெண்கள், ஆண்கள் அநேகர் மிட்டாய் ஆரஞ்சு வாங்கினார்கள். அடர் ஆரஞ்சுத் தோலை அப்புறப்படுத்தி கைக்குக் கீழே உடன் தரையில் எறிந்து கொண்டே நகர்ந்தனர். தாவணி நிறம் கொண்ட உட்சுளைகளில் சிறு நரம் பெடுத்துவிட்டு, பின் கொட்டைகளையும் நீக்கி வீசிப் பிள்ளைகளுக்கு ஊட்டியும், தாங்களும் உண்டும் தீர்த்தனர். மெலிதான ஆரஞ்சு நிற பிளாஸ்டிக் பைகளுக்குள்ளும் சில குடியேறின. மற்றொரு கைகளுக்குப் பயணப்பட ஊட்டிவிட்ட சுளைகளின் சில மணிகள் தரையில் சிதறிக் கிடந்தன. தேளின் ஒளி பொருந்திய திரவம் மிகுந்த ஊடுருவும் கொடுக்கு களென தரையில் படுத்தும் மல்லாந்தும் இறைந்து கிடந்தன முத்துக்கள்.

கூடையில் நிரம்பிய ஆரஞ்சுகளிருந்தும், கைகளில் இருக்கும் சிறு உருண்டைகளிலிருந்தும் வெளிச்சம் பீரிட்டு அவளின் முகத்தில் பிரதி பலித்தது. அவள் செல்லுமிடமெங்கும் ஒளி வழிந்து பின் தொடர்ந்தது. அவள் காசிற்கும், காசில்லாமல் ஆசைப்படும் ஏழைச் சிறுவர்களுக்கு இலவசமாகவும், கைகளில் இட்டுக்கொண்டே இருந்தாள். அவள் கிள்ளிக் கொடுத்த பழங்களின் ஒளி வாங்கியவர்களிடமும் சிறிது நேரம் தங்கி இருந்தது. காசற்ற சிறுவர் களுக்குக் கையில் கிடைத்த அந்த ஒளி உருண்டை தன் ஒளியை அவர்களின் முகத்தில் கூடுதலாக சற்று நேரம் தங்க விட்டும் சென்றது. சாப்பிட்டுக் கொண்டிருந்த பிள்ளைகளின் உணவுக் குழாய்களில் சில அங்குலம் வரைஅந்த ஒளித்துகள்கள் உட்சென்றது காண முடிந்தது. விஷமருந்திய நீல கண்டனைப் போல அல்லாமல் இவர்கள் ஒளி அருந்திய, ஒளிபொருந்திய கழுத்துக்களைக் கொண்டவர்களாக அலைந்து தெருக்களில் திரிந்து கொண்டிருந்தனர்.

ஆரஞ்சுப்பாவாடை தாவணியைத் தடுத்து நிறுத்தி ஒளி உருண்டை களைப்பற்றி விசாரித்தேன். ஆனால், அவளோ அவை ஆரஞ்சுப்பழங்கள் என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். நான் தொடர்ந்து அவளிடம் விவாத்தித் தேன். ஒளி பொருந்திய கழுத்துக்களையும், உணவுக் குழாய்களையும் அவளின் சுடர் மிகுந்து பிரகாசிக்கும் உடலைப் பற்றியும் வலியுறுத்தி விசாரிக்க, அவள் மெல்ல மெல்ல, அக்கம் பக்கம் பார்த்து என்னைத் தனியிடத்திற்கு இட்டுச் சென்றாள்.

அவள் கண்கள் மினுக்க, உடல் இலேசாகிப் பரவசம் கொள்ள கூறத் தொடங்கினாள். ஓநேற்றுத்தான் சூரியனிடமிருந்து ஒரு பெருங்கூடை ஆரஞ்சுக் குழம்பெடுத்து வந்தேன். அதை என் வீட்டில் கொட்டி சிறு சிறு உருண்டை களாக்கி, வைத்துள்ளேன். இன்னமும் என் இருப்பிடத்தில் சூரிய பிஞ்சுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கூடை நிறைய அள்ளி வந்துள்ளதை விற்றுத்தான் உணவுக்கு அரிசி வாங்க வேண்டும்.ஔ

அவசர அவசரமாக நான் கேட்டேன் 'உன் வீட்டில் இருக்கும் சிறு உருண்டைகள் உஷ்ணம் கொண்டு சோறு வடிப்பாயா? உன் விட்டின் கூரை இது வரை எரிந்து சாம்பல் ஆகாமல் இருக்குமா? உன் உடல் வேகாமல் எப்படி ஒளி சுமக்கிறாய்?'

ஓமறுபடியும் மறுபடியும் சொல்கிறேன், இவை ஆரஞ்சுப்பழங்கள் என்று. மேலும் சூரியனின் குழம்பை நான் எடுத்து பக்குவமாக என் வீட்டின் மண்ணில் இட்டுப் புதைத்து வைத்திருந்தேன். என் அரவணைப்பால் அவற்றை உஷ்ணமற்ற உருண்டைகளாக மாற்றியிருக்கிறேன். மேலும் அதனுள் சுவை மிகுந்த சுளைகளும் உண்டு. அவற்றை உண்ட மக்கள் தாமே ஒளிபொருந்திய உணவுக் குழாய்களுடன் திரிகிறார்கள். எனவே இவைகள் ஆரஞ்சுப் பழங்கள்தான்.ஔ

நான் அவளுடன் தொடர்ந்து நடந்து அவளின் இருப்பிடத்திற்கு வருவேன் என்று பிடிவாதம் பிடித்தேன். 'வீடு நிறைய ஒளிஉருண்டைகளைச் சேமித்து வைத்திருக்கும் உன் வீடு, கோடி சூர்யப் பிரகாசத்தோடுதான் இருக்க வேண்டும்.'

ஊரின் கடைசியில் சலனமற்று இருந்த, தனக்குள் இருக்கும் ஒளி உருண்டைகளைப் பற்றி எந்த ஆரவாரமும் செய்யாமல், அமைதியாய் கூரையிட்ட தன் சிறு வீட்டின் கதவைத் திறந்தாள். அவளின் வீடு உள் முழுவதும் பிரகாசத்தைத் தன்னுள் இருத்தியதாக இருந்தது. கண்கள் இருட்டினுள் பழக இயலாதது போலவே, பெரும் ஒளியிலும் செயலற்றுத் தடுமாற்றம் கொண்டன. ஒளிக்குக் கண்களை மெல்லப் பழக்கிக் கொண்டேன். இமைகளை மூடி மூடித் திறக்க, இருளும் ஒளியுமாய் மாறிமாறிக் கண்களைச் சமநிலை கொள்ளச் செய்தன. அறையின் மூலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த அடர் ஆரஞ்சு உருண்டைகளின் ஒளி கூரையின் ஓட்டை களில் ஊடுருவி ஒளிக்கற்றைகள் மேல் நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தன.

திடீரென எனக்குள் பெரும் சந்தேகம். அவளிடமே கேட்டேன் 'சூரியனிலிருந்து நீ எடுத்து வந்த ஒளியின் இடம் இட்டு நிரப்பப்படாமல் அல்லவா இருக்க வேண்டும்? ஆனால், நேற்று மாலை சூரியன் எந்தக் கரும் பொட்டும் இல்லாமல்தானே இருந்தது?'
'முட்டாளே, இதற்குத்தான் சொன்னேன், என்னைப் பின் தொடராதே என்று. எல்லாவற்றையும் உன் அளவு கொண்டு கணக்கிட்டுவிடுகிறாய் நீ. ஆரம்ப முதலே ஆரஞ்சு பதினொன்றும், முப்பதும் உன் கணக்கு. இருவது என் கணக்கு. எடுத்த ஒளியில் குழிகளைக் காண்பது உன் கணக்கு. எடுத்தவுடன் ஒளி ஓடி சமனாவது என் கணக்கு. ஒளி உஷ்ணம் தரும் என்பது உன் கணக்கு. ஒளி பசியாற்றும் அது என் கணக்கு. ஒளியைக் காண்பது உன் கணக்கு. ஒளியை உண்பதும், உண்ணச்செய்வதும் என் கணக்கு. ஒளி என்றால் ஒளி மட்டுமே, இருள் என்றாள் இருள் மட்டுமே உன் கணக்கு. காலை ஆரஞ்சுக்குப் பின் காலையும், மாலை ஆரஞ்சுக்குப் பின் இருளும் என் கணக்கு. அளக்காமல் இல்லாமல் செய்வது என் கணக்கு. அளந்து இருப்பு வைப்பது உன் கணக்கு. இனிமேலும் என்னைப் பின் தொடராதே. எனக்கு இன்னமும் மிட்டாய் ஆரஞ்சு விற்பனைக்கு உள்ளது. வழிவிட்டு விலகு.'

மூர்க்கமாக மோதித் தள்ளிவிட்டாள் அவள். அவளின் பலம் ஆரஞ்சின் ஒளியை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது. அந்தி மாலையின் அடர் ஆரஞ்சு நிறத்தையும், அதன் பின்னான அடர் நீலத்தையும் ஆடையாக அணிந்திருந்த அவள், மறையும் சூரியனின் வெளிர் ஆரஞ்சை தாவணியாக்கி அணிந் திருந்தாள். ஒளி இறக்கைகளைப் படரவிட்டுத் தலையில் ஒளி உருண்டை களைச் சுமந்து, மெல்ல மெல்ல மிதந்து சென்றாள். அவள் கூடையில் சூரிய உருண்டைகளைச் சுமந்து பெரு நகர வெளிகளில் இரவும் பகலும் சுற்றித் திரிவதும், அலைவதுமாய் இருப்பதனாலேயே பெரு நகர வானம் எப்போதும் மெல்லிய ஆரஞ்சை பூசிக்கொண்டிருக்கிறது. இது தெரியாமல், நான் எதோ பெரு நகர ஆரஞ்சு விளக்குகள் மேல் நோக்கிப் பயணம் செய்கின்றன என்று அவள் கூறியபடியே ஒரு முட்டாளாகவே இவ்வளவு காலமும் இருந்திருக் கிறேன்.

கிருஷாங்கினி.
34, சிட்லபாக்கம் 2ஆம் பிரதான சாலை,
தாம்பரம் சானடோ ரியம்,
சென்னை-600 047

Wednesday, December 9, 2009

முன்னுரை

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் சிந்தித்தல்தானே--திருமந்திரம்.

குருவின் மேன்மையை திருமூலர் மிகவும் அழகாக, மிகவும் தெளிவாக, மிகவும் எளிமையாக எடுத்துரைத்துள்ளார். மாதா, பிதா, குரு, தெய்வமென்பது எல்லோருமே அறிந்த கூற்று. இதை அவரவர்களின் புரிதல் மூலம் தெளிவுரை கூறியும், கண்டடைந்தும் வருகின்றனர். பிறப்பு என்பதோ, தாய் தந்தையர் யார் என்பதோ பிறக்கும் யாராலும் தீர்மானிக்க முடியாதது. பிறப்பும் இறப்பும் நமது கட்டுக்குள் நிலைப்பது இல்லை. எனவே, பிறக்கும் ஒரு ஜீவன் முதன்முதலில் சில நாட்களுக்குள் அறிந்து கொள்வது தனக்குப் பாலூட்டி, ஊன் வளர்க்கும் தாயையே. அவளின் மொழிதலின் மூலமாகவே தந்தையின் அறிமுகம் கிடைக்கிறது. உயிரின் வளர்ச்சிக்குத் தாய் தந்தையரின் பங்கு பெரியது. ஆனால் அறிவின் வளர்ச்சிக்கு குருவின் பங்கு அளவுகடந்தது. ஆரம்பப் பாடத்திற்கான, கல்விக்கான, புரிதலுக்கான குரு தந்தையால் சுட்டிக் காட்டப்படுவது என்பது என்னவோ உண்மைதான். ஆனால், தாய், தந்தை வழி பிறெப்பெடுத்தாலும் கூட மனிதனின் வாழ்க்கைப் பாதை அவன் வளர்ந்த பின் தனித்தனியாக மாறிப் போகிறது. தாய் தந்தையால் உரு கொண்டாலும்கூட ஜீவன் தனக்கான தனிவழி கொண்டது. உருவம் ஒற்றுமை கொண்டிருக்கலாம். ஆனால், எண்ணமும் ஒன்றே போல இயங்குதல் இயலாது. எல்லாப் பிள்ளை களும் தாய் தந்தையரின் வழி காட்டுதலில் தமக்கான பாதையைத் தேர்ந் தெடுத்து அதில் பயணித்து வாழ்கின்றனர்.

மனிதன் வாழ்க்கையில் தான்சார்ந்திருக்கும் துறையில் உள்ளவர்களுடன் தன்னை இணைத்துக் கொள்வதும், அதில் ஏற்றமும், மாற்றமும் பெருவதும், தனி லட்சியத்தை அடைவதும், எண்ணமும், செயலும், தான்சார்ந்த, தன் துறை சார்ந்த இயங்குதலில் வாழ்க்கை கழிகிறது. தனது லட்சியத்தை அடையப் பெரும் துணையாய் இருப்பவர் குருவே. தாய், தந்தையரை நாம் தேர்ந்தெடுக்க இயலாது என்று முன்னமே சொன்னோம். னால் குரு சிஷ்யனைக் கண்டுணர்வதும், சிஷ்யன் குருவைத் தேடித்தேடி அலைவதும் அந்த உறவின் ரகசியம். தேடி அலைந்த குரு தனது சீடனை விருப்பப் பாதையில் முன்னேற்றி, அவன் தன் லட்சியத்தை அடைய ஒரு பாதையாய் நிற்கிறார். குருவின் வழிகாட்டலின் மூலமே எந்தத் துறையில் இயங்கும் மனிதனும் மேன்மை அடைய முடியும். மனித மேன்மை, ஒவ்வொரு மனிதனும் மனிதன் என்ற நிலையிலிருந்து மேம்பட்டு, கடவுளைக் கண்டடைய, அல்லது மனித நிலையிலிருந்து மேம்பட்டுத் தன்நிலை உணர்தல் என்பதாகத் தான் அமையும். எல்லாவகைப் பாதைக்கும் அவரவர் வாழ்க்கைத் துறை சார்ந்த ஆசிரியர் அமைவதும், அதற்கான கதவு திறத்தலும் உலகில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. எனவே, வாழ்க்கை தேர்ந்தெடுக்கும் துறை சார்ந்த மற்றவர்களுடன் பயணிப்பதாகவே இருக்கும். ஒரு பழ வியாபாரி, தனது அறிவையும், உறவையும் பழ வியாபாரியுடன் இணைத்துக் கொள்கிறார். வளர்கிறார். ஒரு விஞ்ஞானி தனது துறைசார்ந்த விஞ்ஞானியுடன் பயணிப்பார்.

இந்த நூல் இசைத்துறை சார்ந்தது. எனவே சம்பவங்கள், தகவல்கள், பயணங்கள் இசைத்துறை சார்ந்த ஒரு கொத்துப் பூக்கள் போலக் காட்சி அளிக்கும். இசைப் பயண வழ்க்கை வரலாறுகளாவே இவை அமைந்திருக் கின்றன. இசை, அதன் நுணுக்கம் என்று 'தியரி' எனப்படும் விளக்கம் சார்பாக சிறிதும், குரு-சிஷ்ய உறவு, அதனதன் மேம்பட்ட நிலை, குருவே பெற்றோராக மாறும் மாயம், பெற்றோரே குருவாகும் நிலை என்று அவரவர் வாழ்வின் உணர்வு நிலைகளைச் சொல்வதே "குருவே சரணம்" நூல்.

தற்காலத்தில் எந்தத் துறைக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் குரு சிஷ்ய உறவு இசைத் துறையில் அருகிவிட்டது என்றே சொல்லலாம். காரணம், கலையை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டு பயணம் செய்த, அதையே மூச்சாகக் கொண்ட, இந்த புத்தகத்தில் உள்ளவர்கள் போன்ற வாழ்க்கை தற்காலத்தில் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. காலம் வேக வேகமாக ஓடிக் கொண்டே இருக்கிறது. கல்வி அறிவு பெறாத வாழ்க்கை பயத்தைக் கொடுக்கிறது. கலையையே வாழ்க்கையாகக் கொள்ள மிகவும் போராட வேண்டி வருகிறது. உண்மை வைரங்களை விடவும், செயற்கைக் கற்கள் மின் வெளிச்சத்தில், இரவில், சூர்ய வெளிச்சத்தில் பகலில் கூடுதல் வர்ண ஜாலங்களுடன் பிரகாசித்து மயங்கச் செய்கிறது. உண்மையின் ஒளியை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. இறுதியில் வெற்றியடையும் உண்மைக் காக மனிதன் தன் வாழ்வில் பல சோதனைகளைக் கடக்க நேரிடுகிறது. உடன் பயணிப்பவர் அதிக தூரத்தையும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்ற பட்டத்தையும் கூடப் பெற்றுவிடுகிறார்.

இத்தொகுப்பில் இசை சார்ந்த அக்கால சாதனை, சோதனை என்பதாக பேசப் பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆசான் களுமே சங்கீதத்துறையில் உன்னமாக மிளிர்ந்தவர்கள். மறைந்து விட்டவர்கள். இசைக்கு உயிர் கொடுத்தவர்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட பாணி, இசைப் பாதை இன்னமும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் உன்னதப் பாதை. வாழையடி வாழையாக வளர்ந்து வரும் பாதை. இந்தத் தொகுப்பில் தனது குரு பற்றிக் கூறியிருக்கும் சங்கீத வித்வான்களும் மிகுந்த மேன்மை கொண்டிருப்பவர்கள். குருவின் வழிகாட்டுதலுடன் சங்கீதத்தையும், தன்னையும் வளர்த்திக்கொண்டு மேம்பட்டவர்கள். உயர்ந்த இடத்தை அடைந்தவர்கள். குருவின் பாதையில் தன்னை இணைத்துக்கொண்டு சங்கீதத் துறைக்கு பெரும் பங்காற்றியவர்கள். மேன்மேலும் சங்கீதத்தில் தனக்கான வழியைக் கண்டடையக் கடுமையாக உழைத்தவர்கள். வாழ்வின் சோதனைகளைத் தாங்கிக் கடந்தவர்கள். இந்த நூலில் குரு சிஷ்ய உறவைச் சொல்லும் வித்வான்கள், இவர்களின் வழிகாட்டுதலில் தாமே குருவாகி நின்று பலருக்கும் சங்கீதத்தில் தெளிவையும் வழிகாட்டுதலையும் வழங்கியவர்கள், சிஷ்யர்களை இத்துறையில் சாதிக்க வைத்தவர்கள். இது ஒரு முதல் முயற்சி. இது தொடரும் முயற்சியுமாகும். ஒரு சில வித்வான்களை மட்டுமே இத்தொகுப்பில் இடம் பெறச்செய்ய முடிந்தது. அடுத்து, அடுத்து இன்னமும் பல புத்தகங்கள் இப் பாதையில் வர உள்ளன.

தொகுப்பு என்று இணைக்கும் போது வரும் சில நெருக்கடிகள் இங்கும் ஏற்பட்டன. பேட்டியில் அன்று இடம்பெற்ற சில வித்வான்கள் இன்று நூலைத் தொகுக்கும் போது நம்மிடையே இல்லை. முதலில் அவர்களைத் தொகுப்பில் இணப்பதா, வேண்டாமா என்ற வினா எங்களுக்குள் எழுந்தது. அவர்களையும் இணைக்கத்தான் வேண்டுமென்பதில் நான் பிடிவாதமாக இருந்தேன். அவர்களின் பாதையும் உண்மைகளைக் கொண்டது. எனவே அதன் தனித் தன்மையும் தொகுப்பில் இடம் பெறச்செய்ய வேண்டும். தொகுப்பு என்று வரும்போது இவைகள் எல்லாம் நேரும்தான்.

குரு சிஷ்யர் புகைப்படம் இணத்து வெளியிடவேண்டும் என்று விரும்பினோம். இன்றுவரை அதற்கான வேலை செய்து கொண்டிருக்கிறேன். கிடைத்தவரை பதிவு செய்துள்ளேன்.

சங்கீதத்துறை சார்ந்த வித்வான்களிடம் ஏறக்குறைய ஒரே மாதிரியான கேள்விகள்தான் முன் வைக்கப்பட்டன. அவை அவர்களின் வாழ்க்கைப் பதிவு போல, வாழ்க்கை வரலாறு போலப் பதிவாகியிருக்கிறது. தொழில் நுணுக்கக் கேள்விகளாக மட்டும் முன் வைக்கப்படவில்லை. இசையையும், உணர்வு களையும் சார்ந்த கேள்விகளாக அவை அமைக்கப்பட்டன.
அக் கேள்விகள் பின் வருமாறு:

1. வித்வான்களின் பிறப்பு, பெற்றோர்கள் இசைச்சுழல்
2. முதல் குரு, இசை ரம்பம்.
3. குருகுல வாசம், அதில் அவர்களின் குருவைப்பற்றிய பதிவு, மறக்க முடியாத சம்பவங்கள்.
4. முதல் கச்சேரி, தொடர் கச்சேரி
5. கச்சேரிகளில் மறக்க முடியாத சம்பவம் (உள்ளூர் மற்றும் சபாக்கள்)
6. வெளிநாட்டு அனுபவம், ஒலிப்பதிவு; குறுந்தகடுப் பதிவுகள், வானொலி நிகழ்ச்சிகள்.
7. இவர்கள் வளர்ந்தடைந்த நிலை, இவர்களின் வழிகாட்டுதலில் மேம்பட்ட மாணாக்கர்கள், அதன் பதிவு
8. மடங்களுடன், அரசர்களுடன் இவர்களின் தொடர்பு, மற்றும் அது சார்ந்த பதிவுகள்.

ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட பேட்டி இவை. என்னிடம் வந்து சேர்ந்தே இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. நான் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி, எழுத்து வடிவம் கொடுத்து, தட்டச்சும் செய்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இது புத்தகமாக வரவேண்டும் என்று பெரிதும் விரும்பினேன். எல்லா வித்வான்களின் பேட்டியுமே நான் எழுத்தாக மாற்றும் போது அது பேச்சின் பாதையில் திசை மாறி மாறி எங்கெங்கோ பயணித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். நீளம் கருதிச் சிலவற்றை நீக்க வேண்டி வந்தது. மேலும், அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லும் வார்த்தைகளை நாம் அப்படியே பதிவும் செய்ய இயலாது. யாருடைய மனமும் புண்பட்டுவிடக் கூடாது. யாருடைய பேட்டியையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. வாழ்வின் அழகு வெளிப்படும் விதமாகவும் இதை உருவாக்க வேண்டும். முன் பின்னாக சொல்லிய சம்பவங்களை நான் முடிந்த வரை கேள்விகளின் அருகாமையில் இருக்கும் படி ஒன்று திரட்டி எழுதி உள்ளேன். வித்வான்கள் கூறாத ஒற்றைச் சொல் கூட இத்தொகுப்பில் கிடையாது. ஒலிப் பதிவு நாடாக்கள் எங்கள் வசம் உள்ளன. பேட்டியின் இறுதியில் அவர்களின் பேச்சிலிருந்தே எடுத்த சில வார்த்தைகள் வாழ்க்கையின் நீதிகளைச் சொல்வதைப் போலவோ, சங்கீதத்தை இன்னமும் உன்னதத்தை நோக்கி எடுத்துச் செல்ல தூண்டும் வாக்கியங்களாகவோ வடிவமைத்திருக்கிறேன். அடுத்த தலைமுறைக்கு அவர்களின் வழிகாட்டுதலும் இறுதி வார்த்தைகளாக அமைந்திருக்கலாம். தம் பதிவில் சிலர் அதிகம் கூறியிருக்கிறார்கள், சிலர் குறைவாகக் கூறியிருக்கிறார்கள். அது அவரவர்களின் பேச்சுப் பாணியை பொறுத்ததே தவிர, வேறு ஏதுமல்ல.

தனது குருவைப் பற்றிப் பேசிய அனைத்து வித்வான்களும் நெகிழ்ந்து, மகிழ்ந்து கூறியிருக்கிறார்கள். அவர்களின் உரலில் அவர்களின் குரு பக்தி துல்லியமாக வெளிப்படுகிறது. தனது கலைத்தரு குருவால்தான் முளைத்தது என்றும் அவரிட்ட பிச்சைதான் தனது இசை என்றும் அனைவருமே கூறியிருக்கின்றனர். குரு-சிஷ்ய உறவு பெற்றோரின் நிலையைவிட உயர்ந்தது என்பது ஒவ்வொருவரின் கூற்றும் நமக்கு எடுத்து உரைக்கிறது.

இதில் பதிவாகியுள்ள அனைத்து வித்வான்களும் மிகப் பெரிய அந்தஸ்தும், புகழும், பெருமையும் பல பட்டங்களும் கொண்டவர்கள். அனைவரும் மனமுவந்து அளித்த பேட்டிகளை எழுத்துருவாக்கியதை எனக்குக் கிடத்த பெரும்பேறாகக் கருதுகிறேன்.

இவ்வளவு பேரும், புகழும், வித்வத்தும் உள்ள இவர்களை பொருளடக்க வரிசையில் எப்படி பட்டியலிடுவது என்பது எனக்கும், திருமதி. சூடாமணி பாஷ்யம் திரு. பாஷ்யம் அவர்களுக்கும் குழப்பமாகவே இருந்தது. எனவே என் புத்திக்கு எட்டியபடி அவரவர்களின் பெயரின் ஆங்கில முதலெழுத்தைக் கொண்டு வரிசைப்படுத்துவது எனத் தீர்மானித்தோம்.. வயதில் மூத்தவர்கள் அவர்களைவிட ஓரிரு வயது குறைந்தவர்கள் என வரிசைப் படுத்தும்போதும் கூட சிலர் ஒரே வயதுடையவர்களாகவும் இருக்கிறார்கள். எனவேதான் ஆங்கில எழுத்து வரிசையை பயன் படுத்தினேன். இது வெறும் 1, 2 என்ற எண்ணிக்கை மட்டுமே என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத் தொகுப்பில், வாய்ப்பாட்டு மற்றும் இசைக் கருவிகள் ஒருங்கிணந்து பேட்டிகள் இடம்பெற்றுள்ளன

தற்காலத்தில், குரு சிஷ்ய உறவு இன்னமும் சிலருக்கு வாய்க்கப் பெற்றிருந்தாலும் கூட, மெல்ல மெல்ல மறைந்து கொண்டே வருகிறது என்பதை நாமனைவரும் அறிவோம். அது சார்ந்த என் எண்ணத்தையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இசையின்மீதான வெறி, அதன் மீதான தீராத தாகம் தற்காலத்தில் கலை கற்போரிடம் குறைந்து கொண்டேதான் போயிருக்கிறது. இது இசைக்கு மட்டும் வந்தது என்று கூற முடியாது. எல்லாக் கலைகளிலும் இதுதான் இன்றைய நிலை. காரணம் கற்போரின் எதிர் பார்ப்பும் அவர்தம் பெற்றோரின் எதிர்பார்ப்பும். எனவே இயல்பான வளர்ச்சிக்கு இடம் கொடுக்காமல், ரசாயன உரமிட்டு வளரும் செடிபோல பெரிய பலன்களைத் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது. அதுவே வேகமான வளர்ச்சிக்கும், அதன்பின், அதனினும் அதிவேகமான மறைவிற்கும் காரணமாகிறது. பெற்றோர்கள் தன் பிள்ளைகளின் குருவை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். பிள்ளைகளை ஒரு ரேஸ் குதிரையைப் போன்று தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதனால் பிள்ளைகள் குழப்பத்திற்குள்ளாகின்றனர். நெருக்கடி அதிகமாகும்போது அவர்கள் கலையிலிருந்து விலகவும் துவங்குகிறார்கள். எனவே கற்கும் பிள்ளைகள் ஒரு நீண்ட பருவம் கூட ஒரே குருவிடம்பயிலுவதில்லை. கற்கும் போதே பள்ளிப் போட்டி, கல்லூரிப் போட்டிகளில் முதலிடம் பெறத் தயார் செய்ய எண்ணுகிறார்கள். தவிரவும், புகழ் பெற்ற கலைஞர்களிடம் தங்கள் பிள்ளைகளை விட்டவுடன் பிளாட்டிங் பேப்பர் போல கலையை உறிஞ்சிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறர்கள். நம்புகிறார்கள். புகழ் பெறுவதற்கு முன்னான அவர்களின் உழைப்பு இவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறது. புகழ் பெற்றவர்களின் சீடர்கள் என்று சொல்லிக் கொண்டு பெயரைப் பயன் படுத்தி நிறைய நிகழ்ச்சிகள் அளிக்கத் திட்டமிடுகிறார்கள். எல்லோரும் இது போல என்று ஒட்டுமொத்தமாகக் கூறக்கூடாது; கூறவும் முடியாது. அது பெரும் ஆறுதலைத் தருகிறது. ஆனாலும் கூட சிலரிதுபோன்ற வழியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்களே என்ற ஆதங்கத்தில் சொல்ல வேண்டியுள்ளது. நிகழ்ச்சிகள் பணம் கொடுத்து நிறைவேற்றிக் கொள்கிறார்கள். பணம் கொடுத்துப் பத்திரிகையில் அதுபற்றி விமர்சனம் வரச் செய்கிறார்கள். அந்தப் பதிவுகளை முதலீடாக்கி இன்னமும், இன்னமும் என முன்னேறப் பாடு படுகிறார்கள். இதனால், உண்மையான ஒரு சங்கீதக் கலைஞனின், போதிய பொருளாதார வசதியற்ற கலைஞனின் பயணம் பின் தங்க நேரிடுகிறது. அனால், இந்த மின்னல் சட்டென காணாமலும் போகும். இறுதியில் உண்மை வெல்கிறது. தாமதமானாலும் கூட.

கற்பிப்போரிடமும் சில நிலைகள் உள்ளன. அதைப் பற்றியும் சொல்லித்தான் ஆகவேண்டும். இதிலும் அனைவரும் என்ற பொத்தாம் பொது நிலை கிடையாது. எங்கோ சிலர். பல நல்ல உள்ளங் கொண்ட ஆசான் வசதியற்றவர்களுக்குத் தமது சொந்த செலவில் கற்றுக் கொடுத்து உண்மையை பிரகாசிக்கச் செய்கிறார்கள். சிலர் பணம் படைத்த வீட்டுப் பிள்ளைகளிடம் அதிக கவனம் செலுத்தும் நிலையும் உள்ளது. புகழ் பெற்ற பாதையில் இருக்கும் கலைஞர்கள் தாம் பெற்ற புகழையும், பொருளையும் அதன் பாதையையும் விருப்பமில்லாத் தமது பிள்ளைகளிடம் மடைமாற்றம் செய்கிறார்கள். முழுமையாக கற்றுத் தேறாமல் தான் கற்றுக்கொண்ட சிறிதளவான இசையை முதலீடாக்கி பலருக்கும் போதிக்கும் ஆசிரியராகவும் சிலர் மாறிவிடுகிறார்கள். இவர்களிடம் கற்கும் சீடர்கள் என்ன கற்றுக் கொள்ள இயலும்?

இன்றளவும் தெலுங்கு, சம்ஸ்கிருதம், கன்னடம், தமிழ் போன்ற மொழிகளில் இருக்கும் சாஹித்யங்கள் ஏராளம். அவற்றுக்கு இசை வடிவத்தையும் கொடுத்து, அதைத் தமதினிய குரலால் பாடிப் பரவச்செய்த வாக்கேயகாரர்கள் தற்போது இந்தியா முழுவதுமே குறையக் காரணம் என்ன? என்ற கேள்வியை வட இந்திய விமர்சகர் ஒருவர் கேட்ட போது பதிலளித்த ஒரு வித்வான் 'அந்தக் காலத்தில் சங்கீத வித்வான்களும், கவிஞர் களும், நாட்டிய மணிகளும் இணைந்து, சந்தித்துப் பேசி, தர்க்கம் செய்து புதுப்புது வடிவ முயற்சிகளில் ஈடுபட்டனர். அந்த கூட்டு முயற்சி இப்போது அருகி விட்டது' என்றார். மேலும், 'அரசவையில் அல்லது கலையை போஷிக்கும் இடங்களில் எல்லோருடைய கருத்துக்களும் பகிர்ந்து கொள்ளப் பட்டன. இப்போது இசை, ஓவியம், கவிதை, நாட்டியம் என எல்லாக் கலை வடிவங்களும் தனித்தனியாக இயங்கி வருகின்றன. வீரியம் மிக்க சொற்களைக் கொண்ட பொருள் தரும் பாடல்களும், அதை சபையில் வெளிக் கொண்டு வருவோரும் குறைவாகி விட்டனர்' என்று சொன்னார். 'அவர்கள் எழுதிய பாடல்கள் இன்றைக்கும் பொருத்தமாகவும் புதுமையாகவும் இருக்கிறன. இன்றளவும் அப்பாடல்கள் தானே அதிகம் பாடப்படுகின்றன?' என்றும் சொன்னார்.

இரண்டாண்டுகள் கழித்தாலும் இந்த இசைப்பயணத்தின் பதிவைப் புத்தகமாகப் போட முழு அனுமதி கொடுத்த பாஷ்யம் தம்பதியருக்கு நன்றி. அனைத்து சங்கீத வித்வான்களுக்கும் அவர்களின் குரலில் உணர்வு பொங்க சொல்லிய பதிவைக் கேட்கச் செய்ததற்கும் நன்றி. சந்தேகம் எழும் போதெல்லாம் அதற்கு விளக்கம் அளித்து தெளிவு பெறச் செய்த வித்வான்களுக்கு நன்றி. புகைப் படங்கள் அளித்ததற்கும் நன்றி. இந்தப் பதிவைப் புத்தகமாக்க எண்ணியவுடன் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சிக் துறையின் நினைவுதான் வந்தது. இது போன்ற நாட்டியம் சார்ந்த நூல்களுக்கும், ஆவணப்பதிவான நூல்களுக்கும் பொருளுதவி செய்து என்னை ஊக்குவிக்கும் தமிழ் வளர்ச்சித் துறைதான் இந்த நூலுக்கும் உதவி செய்திருக்கிறது. தமிழ் வளர்ச்சித் துறைக்கு என் மனமுவந்த நன்றி. எனது எல்லா முயற்சிகளுக்கும் எப்போதும் உறு துணையாய் நின்று ஊக்கம் அளிப்பவர் என் கணவர், ஓவியர் நாகராஜன்.

கிருஷாங்கினி
சானடோரியம்,சென்னை-47

பேட்டிகண்ட அனுபவம்-பாஷ்யம் தம்பதியர்

நாங்கள் நடத்திவரும் 'தாம்பரம் மியூசிக் கிளப்' இசைக்கானது. அதன் ஆண்டு விழாவிற்கு சென்னை வானொலியின் முன்னாள் இயக்குனர் திரு. விஜய திருவேங்கடம் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். 'தாம்பரம் மியூசிக் கிளப்' செயலாற்றிவரும் இசைப் பணியினை சிறப்பித்துப் பேசும் போது அவர் 'எனக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை உண்டு. சங்கீத வித்வான் களை -அதாவது மூத்த கலைஞர்களை குருவாகக் கொண்டு கற்று இன்று புகழ்பெற்றவர்- ஒரு நேர்காணல் செய்து அதில் அவர்களின் குரு பற்றிய தகவல்கள், குரு சிஷ்ய உறவுகள் போன்ற பல்வேறு சுவையான விஷயங் களை தொகுத்து ஒரு நூலாகக் கொண்டுவரவேண்டும். அது இசைத் துறைக்கு வரும் வருங்கால இளைஞர்களுக்கு மிகுந்த உபயோகமாக இருக்கும்.' என்று கூறினார்.

அது எங்கள் மனதில் இருந்துகொண்டே இருந்தது. நாம் ஏன் அந்த எண்ணத்தை முயற்சிக்கக்கூடாது என்று தோன்றியது. பின்னொரு நாள் திருவேங்கடம் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். எங்கள் சந்திப்பு அடிக்கடி நிகழும். சங்கீதம் பற்றிப் பேசுவோம். அன்று அவரிடம் நாங்கள், 'விழாவில் நீங்கள் தெரிவித்த உங்கள் ஆசையை நாங்கள் செயற்படுத்தலாமா? தவறாமல் கொண்டு வருவோம்.' என்றோம். அவர் உற்சாகமாக, 'ஓ! தாராளமாகக் கொண்டு வரலாம். அதற்கு என்னால் முடிந்த உதவிகளைக் கண்டிப்பாகச் செய்கிறேன். தொடங்குங்கள்' என்றார்.

நாங்கள் சங்கீதத் துறையில் அன்று புகழ் பெற்றிருந்த பெரிய வித்வான்களின் சிஷ்யர் இன்று புகழ்பெற்று மூத்த இசைக் கலைஞராக விளங்குபவர் என்று ஒரு பட்டியல் தயாரித்தோம். அதில் வாய்ப்பாட்டு, பக்க வாத்தியங்கள், நாதசுரம், வீணை என்பதாக பலரையும் தேர்ந்தெடுத்தோம். குழல்மேதை திரு. ரமணி எங்களது நெருங்கிய நண்பர். குருவாயூர் துரை, பி.எஸ்.நாரயண சாமி ரமணி மூவரும்தான் எங்களுக்குத் தூண்போல. 'தாம்பரம் மியூசிக் கிளப்' வளர அவர்கள்தான் ஊக்கமளிப்பவர், வழிகாட்டி. ரமணியும் இதை செய்ய உற்சாகப்படுத்தினார்.

நாங்கள் அவர்களிடம் நேர்காணலுக்கான ஒரு கேள்விப்பட்டியல் தயாரித்தோம். திருவேங்கடம்தான் அதைத் தயாரித்தார். அதில் தனது குரு பற்றி,குருவுடன் அவர்களுக்கு கிடைத்த அனுபவங்கள், கச்சேரிகளில் நிகழ்ந்த மறக்கமுடியாத சம்பவங்கள், காஞ்சி பெரியவாளுடன் நேர்ந்த இசை அனுபவமும் கிடைத்த ஆசிகளும் போன்ற விஷயங்களை அடக்கியதாக அது இருந்தது. (எங்களுக்கும் மஹா பெரியவரிடம் ஈடுபாடு அதிகம்) வித்வான் களிடம் தொடர்புகொண்டு அவர்களது விருப்பத்தை தெரிந்து கொண்டோம்.
அந்தக் கேள்விப்பட்டியலை எடுத்துக்கொண்டு நேர்காணலுக்கு ஒப்புக் கொண்ட வித்வான்களின் இல்லத்துக்கு சென்று பேட்டியெடுத்தோம். அதை ஒலிநாடாவில் பதிவுசெய்துகொண்டோம். வித்வான்களுக்கும் பேட்டி என்பது உவகைதந்ததாக அமைந்தது. அடுத்தது, உரையாடல் எழுத்து வடிவம் பெற வேண்டும். அந்தப் பணியை திருவேங்கடம் ஏற்றுக் கொண்டார். ஆனால், அவகாசமின்மையால் அவரால் ஈடுபடமுடிய வில்லை. அவ்விதமே இரண்டு ஆண்டுகள் கழிந்தன. எங்களுக்கும் வழியேதும் தெரியாமல் இருந்தோம். யாரைக் கொண்டு எழுதச் சொல்லலாம் என்பதும் தெரியவில்லை. நூல் கொண்டுவர ஆகும் செலவு பற்றியும் யோசித்து, குழம்பி திட்டத்தை அப்படியே வைத்துவிட்டோம். தற்செயலாக கிருஷாங்கினி, நாகராஜனிடம் இதுபற்றிச் சொல்லவும் அவர்கள் தாங்கள் செய்வதாக ஒப்புக்கொண்டு இன்று வாசகர் கையில் நூல் தவழச் செய்துள்ளார்கள். எங்களுக்கு நிரம்ப மகிழ்ச்சி.
வளரும் இளம் கலைஞர்களுக்கு பயனளிப்பதாக இந்நூல் இருக்கும் என்று நம்புகிறோம்.

பேட்டியளித்து மிகுந்த உற்சாகத்துடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து கலைஞர் பெருமக்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நூலைப் டிக்கும்போது மீண்டும் ஒருமுறை அவரருகில் அமர்ந்துகொண்டு கேட்பதுபோன்ற அனுபவம் கிட்டுகிறது. எழுத்து விடிவில் கொடுத்த கிருஷாங்கினிக்கு மிக்க நன்றி. தியாகப் பிரம்மத்தின் அனுக்கிரகமும் பெரியவாளின் ஆசியும்தான் இதற்குக் காரணம் என்று நாங்கள் முழுதாக நம்புகிறோம். இது ஒரு தொடக்கம்தான் என்றும் கருதுகிறோம். இன்னமும் பல மூத்த வித்வான்கள் உள்ளனர். அவர்களிடமிருந்தும் இம்மாதிரியான பேட்டியின் மூலம் அடுத்த நூல் கொணர வேண்டும்.

தாம்பரத்தில் ஒரு நல்ல சங்கீத சபை இல்லையே என்ற குறை எங்களுக்கு இருந்தது. நாராயணன் என்பவர் எங்களது நண்பர். அவர்தான் சபா தொடங்கும் ஆசையை எங்களிடம் உண்டாக்கினார் எனலாம். 'நாம் தாம்பரத்தில் ஒரு சங்கீத சபா தொடங்கலாமா? ஜெயகோபால் பள்ளி பொறுப்பாளர் திரு. நாராயணராவ் அவர்களை சீதாதேவி கரோடியா பள்ளி வளாகத்தில் இடம்கேட்டு அணுகலாம்.' என்று சொன்னார். அவ்விதமே நாங்கள் அவரை அணுகிக் கேட்கவும் மிகவும் பெருந்தன்மையுடன் சீதாதேவி கரோடியா பெண்கள் பள்ளியில் இடம் கொடுத்து உதவினார். இன்றுவரை அது தொடர்கிறது. அந்த முயற்சியே திருவினையாகி கடந்த பதின்நான்கு ஆண்டுகளாக 'தாம்பரம் மியூசிக் கிளப்' செயற்பட்டு வருகிறது. மாதம் ஒரு இசை நிகழ்ச்சி, டிசம்பரில் இசை விழா தியாகப் பிரம்மத்தின் ஆராதனை உற்சவம், வளரும் கலைஞருக்கான இசைப்போட்டிகள் என்று நடத்தி வருகிறோம். இசைக்கலைஞர்களுடன் நெருக்கமான உறவு தொடர்கிறது. நூலுக்கு அது மிகவும் உதவியது.

எங்களது எதிர்கால ஆசை மயிலையில் உள்ள சங்கீத வித்வத் சமாஜம் போலத் தாம்பரத்தில் தியாக பிரம்மத்துக்கு ஒரு கோவில் நிர்மாணிக்க வேண்டும். அதைப் பேராசை என்றுகூடச் சொல்லலாம். அந்த மண்டபத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும். கடவுள் சித்தம் எப்படியோ?

சூடாமணி பாஷ்யம் தம்பதியர்
தாம்பரம்
சென்னை