Wednesday, December 5, 2007

தலை அலங்காரம்-2-சிறுகதை

தலை அலங்காரம்-2

என் இருப்பிடத்திலிருந்து ஏதேதோ பாதைகள் கடந்து, நான் செல்ல வேண்டிய இடத்தை அடைய பலவிதமான வாகனங்களும்; கூட நடையுமாக எதனூடாகச் செல்லும்போதும் ஏதாவது ஒரு இடத்தில் பதிக்கப்படும் தார் கற்களையோ அல்லது அப்போதுதான் பதித்த தார் அடைந்த சாலைகளையோ கண்டிப்பாக இப்போது கடந்து போகிறேன்.

சித்தியை நான் கண்டதே காவி உடையும் முக்காடிட்ட ரவிக்கையற்ற உருவத்துடந்தான். எனக்கு மடாதிபதிகள் எப்போதும் சித்திதான். மற்றவர்கள் சொல்லுவார்கள் சித்தி மிக அழகி என்று. எனக்கு எப்போதும் அப்படி தோன்றியதே இல்லை. கழுத்து மூடி இழுத்துச் சொருகப்பட்ட ஒரே வண்ணப் புடவையில் எந்த ஓரத்து வழியாகவும் அழகு வெளி வழிந்த தில்லை. மூடியதினுள்ளான அழகு காண என் அறிவுக்கு எட்ட வில்லை. உடை, மடம் பூஜை, தன்னலமற்றிருத்தல், இரவு பலகாரம், யாரோடும் எதிர்படாதிருத்தல், பெரிய வீட்டில் கூட நடமாட்டம் ஒருசில அடிக்களுக்குள் என்ற சிறு பட்டியல் தான் சித்தியிடம். பசி சொல்லிக் கேட்டதில்லை.

அன்றைய நானின் ஊடாக இன்றைய நானும் எங்கெங்கு கலந்து வருமோ? எங்கும் நிறைந்துவிடுமோ?

மடிப்புடவையின் நிறம் வறுமைக்கானது, மரக்கலர் துக்கத்திற்கானது. துக்கம் வறுமையினால். வறுமை எதனால்? எப்போதும் வாசம் மிகுந்த தின் பண்டங்கள் சித்தி மடியிலும், துணியிலும் அருகிலும் நிறைந்திருக்கும்.

இரவு படுத்திருக்கும் போதோ குளித்துத் துணி மாற்றும் போதோ சற்றே வளர்ந்த கருமையான தலைமுடி பார்வைக்குப் படும், தார் வண்ணத்தில். சட்டென்று இயல்பாக இழுத்து மூடும் சித்தியின் கை சற்றே பதட்டத்துடன். துணியிலிருந்து வெளி வழிந்து முகம் அடையும் முன்னரே அவை மழிக்கப்பட்டு இருக்கும். விடியற் கருக்கலில், வீட்டின் பின்புறம் இருட்டும் முடியும் களையப்பட்டு யாராவது ஒருவர் தலைக்கு நீர் விட்டு வேறு துணி கொடுத்து வீட்டிற்குள் கூட்டி வருவர். பருவ கால மாற்றம் பாதிக்கப்படாத தொடர்செயல் இது. விஷ ஜந்துக்களுக்கும், செடி, தலை முடிக்கும் தடை நிறைந்த அப்பாதையில் அன்று சித்தி பயணப்பட்டு வருவாள். புடவைக் கலரில் தலையும் மின்னும்.

நிறைய ராஜ குமாரன்கள் வருவார்கள், குமரிகளைக் கொத்திக் கொண்டு செல்வார்கள், குறுக்கே நிற்கும் குண்டோதரக் கல் திறந்து தங்கம் தரும், கிளி பெண் குழந்தை வளர்க்கும், ராட்சசன் நகம் வளர்ப்பான், சின்னப் பெண் கொடுமைப் படுத்தப்படுவாள், பகவான் க்ருபையால் கஷ்டம் நீங்கும், காலுடைந்த குதிரையில் பல தேசங்களையும் மனிதன் 'கடக் கடக் கடக்' என்ற சப்தத்துடன் கடப்பான், உதடு பெருத்த ஆணை விருப்பம் இன்றி மணம் செய்து கொண்ட பெண் பல விதத்திலும் சித்திரவதைக்கு ஆளாவாள், புருஷனை 'உதடா! உதடா!' என்று வெறுப்பேத்துவாள், கடைசியில் செத்து மண்ணாவாள், இப்படி பலப் பல இரவுகள் பகல்கள். தேவைக்கு ஏற்ப இரவோ பகலோ நீளும் அல்லது சுருங்கும், அகலமாகும், பயமுறுத்தும், கண் கசிய வைக்கும். சித்தி மணம் என் மீதும் படியும்.

என் இருப்பிடத்திலிருந்து ஏதேதோ பாதைகள் கடந்தடைய வேண்டியவை விதவித வாகனங்கள்கால் நடையாகவும் ஏதோ ஒரு இடத்தில் இட்டுப் புதைத்த தார் சாலை புதைந்து கொண்டிருக்கும் புழுதி இருபுறமும் மலை என எழும்பித் தார் கொதித்துக் கொண்டிருக்கும், தெருவோரம் மஞ்சள் நெருப்பு சப்தமிட சாக்கு சுற்றிய காலுடன் தார் எடுத்துக் கோல மிடுவார்கள். தாருடன் கலந்து கல் கொட்டி இழுப்பார்கள். தாருடனும் ரோட்ரோலருடனும் நானும் காய்ந்துவிட்டு அதிசயத்தை அனைவரிடமும் பகிர வேண்டி ஓட்டமும் நடையுமாக வீடு திரும்பினேன். வழி நெடுக கருங்கற்கள் உப்பி உப்பி ரோடோரம் படுத்திருந்தது. ரோடுமீது பரப்பக் காத்து இருந்தது.

சித்தி படுத்து விட்டார்; சில நட்களாயிற்று. அவர் உடல் முழுவதும் தரை பரவி நிமிர்ந்தபடி படுத்துக் கிடக்கும் அவரின் முழு உடலும் வயிறாக உப்பி ஊதி மேடிட்டிருந்தது. நார்மடி, தலையில் தனிந்திருக்கிறது. கருப்புத் தார் பொங்கி வழிகிறது சித்தியில் தலையிலிருந்து. படுக்கையைச் சுற்றி யார் யாரோ? அனேகர் வந்து பார்க்கின்றனர். குரலும் வார்த்தையும் மங்காமல், ஏதேனும் தின்ன வாங்கித் தரும்படி எல்லோரிடமும் முறையிடுகிறார் சித்தி. அவரவர் வசதிக் கேற்ப சின்னதாகவோ பெரியதாகவோ உள் நுழைகின்றன தின் பண்டங்கள். வெங்காயமும் வேண்டும் பூண்டும் உடன் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார் சித்தி. வம்பு பேசும் ஊர் என பயந்தாலும் ஏதோ ஒரு சமயம் உள் நுழையும் அவைகளும். நான் உள் நுழைவதில்லை அழைத்தாலும்.

வீடொழிக்கும் போது வேண்டாததை அடைத்து வைக்கும் சாக்கென சித்தி வயிறு பெருக்கிறது. எல்லவற்றையும் உள் தள்ளிப் புதைக்கும் சித்தி, அருகில் யாரும் வந்து பங்கு கேட்டு விடுவார்களோ என்று அள்ளி அள்ளி அடைத்துக் கொள்ளும் சித்தி, பசியாகவே உருமாறிவிட்டாரோ? படுத்தபடி எல்லா பண்டங்களும் வாய் வழி நுழைந்து வயிறு அடைந்து கல்லாகி விடுகிறது. கற்களால் கட்டப்பட்ட வட்டம் அல்லது கருங்கற் குவியல் என வயிறு இடம் மாறி இடம் மாறி இளைப்பாறுகிறது.

சாலை ஓரத்தில் கருங்கற்கள் வெளியில் வீட்டின் எதிரில், தார் கொதித்துக் கொதிக்கும் மணம். சித்தியின் வயிற்றுக் கற்கள், தலைமுடி. தார், கருப்பு முடிகள், கற்கள், வயிறு, முடி, சித்தி, ராஜகுமாரன், நான், சித்தி வாசனை, தின் பண்டம், சித்தியின் துர் நாற்றம், நான். . . . .

தரையின் சிறு சிறு சிமெண்ட் சதுரங்கள் என் முன் பரந்து பெரிதாகி சித்தியின் வயிறு என குமிழ் குமிழாய் எழும்பி மேடிட்டு, மேடிட்டு அறை முழுதும். மதியம் அப்படியே உறங்கிப் போனேன். எழும்போது தார் வாசனையும், தலைவலியுமாய் நான். முதல் பகல் தூக்கம், முதல் தார்வாசனை, முதல் தலைவலி.

இருப்பிடத்திலிருந்து எதேதோ பாதைகளைக் கடந்து நான் அடைய வேண்டிய இடத்தை அடைய பல விதமான வாகனங்களும், கூட நடையுமாக. எதனூடாகச் செல்லும் போதும், ஏதோ ஒரு இடத்தில் பதிக்கப்படும் தார் கற்களையோ அல்லது அப்போதுதான் தார் அடைத்த சாலைகளையோ கண்டிப்பாக இப்போது நான் கடந்து போகிறேன். தார் மணமும், தலைவலியும், வயிறுமாக.

No comments: