Saturday, December 1, 2007

தலை அலங்காரம்-1-சிறுகதை

 தலை அலங்காரம்-1

எங்கள் வீடு விஸ்தாரமானதுதான். தெருவில் ஆரம்பித்து, தெருவில் முடியும். இருபுற வாசலிலும் போக்கு வரத்து இருக்கும். மொண்ணைப் பாம்பென இருதலை கொண்ட வீடு. அம்மாதான் எப்போதும் தலை வாரி விடுவாள். அம்மா வீடு விட்டு ராத்தங்கியதாக--எங்களை விட்டு--நினைவே இல்லை. அத்தனை பெரிய வீட்டிலும், அம்மா தலை வாருவது என்னவோ வாசல் படிக்கு சற்று மேலே, கீழ் திண்ணை, அதனினும் நான்கு படிகள் உள் நோக்கிச் செல்ல படிகள் சமன் படுத்தி எடுத்துச் செல்லும்மேல் திண்ணைமீது. எப்போதும் யாருடனாவது நிறைந்தே இருக்கும, திண்ணை. இழு கதவு போட்டு இருக்கும் வாசல் இரவு மட்டுமே அடைபடும். மேல் திண்ணையில் அம்மா அநேகமாக பின்னல் தொழிற்சாலையைத் தொடங்குவாள். ஒற்றைச் சடை, இரட்டைசடை,நாகர் பின்னல், ஆத்திக் கட்டு, குடலைப் பின்னல், தேவகிப் பின்னல், தாழம்பூ தைத்து, மல்லி முல்லைதைத்து, குஞ்சலம் வைத்து, ரிப்பன் வைத்து, உல்லன் நூல்வைத்து, ஆயிரங்கால் பின்னல், அஞ்சு கால் பின்னல் என, பருவத்தையும், காலத்தையும் விசேஷத்தையும் கொண்டு தலை அலங்காரம் மாறுபடும். அம்மாவின் கலை நயமும், அழகுணர்வும் உறவுப் பெண்களின் பின்னலையும் கவர்ந்திழுக்கும். யாராவது ஒருவர் கிராப் சீப்பு, பேன்சீப்பு, எண்ணை சகிதம் அம்மாவை அழைத்துப் பின்னலை ஆரம்பிக்க அவ்வப்போது கற்பனைகேற்ப தலையின் பின் வடிவம் மாறுபடும்.

மதிய வேளைகளில் படுக்கத் தலையணை மறுக்கப் பட்ட குடும்பம் அது. ஆனால் அம்மாவுக்குத் தலையணை எப்போதும் அவள் கொண்டையே. புத்தகம் படிக்க, படுத்துக் கொண்டே அரட்டை அடிக்க, எப்போதாவது கண் அசர என்று தலையின் கீழ் மடிந்த தலையணை. படுத்தால் கழுத்து வளைவை நிரப்பி, தலையையும் மேலெழுப்பி, இதமான படிமானமாகக் கொண்டை மாறும். வாசலின் அழைப்போ அல்லது தீவிரமான பேச்சோ, மறுத்தளிப்போ, கோவமோ, உபதேசமோ, என எல்லா உணர்வுக்கும் படுத்திருக்கும் அம்மா எழுந்தவுடன் வெளிப் படுத்தும் முதல் வினை தலை முடியை அவிழ்த்து உதறி, முடிச்சலிட்டு தலைமீது நிறுத்துவதைத்தான். அம்மாவின் உணர்ச்சிகள் வேகம் எல்லாம், தலையை முடியும் நிலையிலிருந்து அறிய முடியும் அளவுக்கு வேறுபட்டிருக்கும். அலுப்பு, உடல் வாதை, வாழ்க்கைச் சலிப்பு என எல்லாவற்றிற்கும் முன்னுரையாக தலைமுடித்துக் கொண்டையிடுதல் அறியப் படும். அவிழ்ந்த முடியின் அடர்த்தியும், நீளமும் விரிந்து முறம் போலத் தரை தொடும்.

ரேழியில் வாசம்செய்யும் நாட்களில் மட்டும் அம்மா தலைவாரி, ஓய்வாக பின்னலிட்டுக் கொள்வாள். அதையும் தொங்கவிடாமல் அடக்கி மேலெடுத்து, பிச்சோடாவாக முடிந்திருப்பாள். அந்த நேரங்களில் எனக்கும் தலைவாரல் இருட்டு ரேழியில்தான். வீழ்த்தியிடப்பட்ட உடை ரேழியின் விளிம்பில் காவல் நிற்க, உள்ளிருந்து தலைவாரும் அம்மா பின்னலின் நுனியில் உல்லன் வைத்து விடுவாள். ரோஸ், பச்சை, சிகப்பு, நீலம் என எல்லாமே ஒளிர் விடும் வண்ணத்தில் தனித் தனியாகவோ அல்லது இரு கலர் இணைந்தோ பின்னலின் நுனியில் தொங்கும். கனமற்ற நுனி வளைந்து மேல் நோக்கித் திரும்பி நிற்கும். உதிர்த்த துணி தரித்து, பள்ளி செல்வேன்.

அம்மாவைத் தவிர மற்ற யார் பின்னினாலும், கோடி முடியில் ஏதாவது ஒன்று இழுபட்டு ஓர் முனையில் வலிக்கும். ஆயின் அம்மா என்றுமே பின்னிய பின் முன் நெற்றி வார மாட்டாள், பின்னல், பின்னால் குளம் தூக்குமென்று. ஆனால் எப்போதாவது பின்னிவிடும் மற்றெல்லோரும் முன் நெற்றி அழுத்தி வாருவார். 'என் முகத்தைப் பாரடீ,' என்று கண்ணோடு கண் பார்த்து ' முன் நெற்றி வாரலைன்னா முகம் மறந்து போகும்' என்பார்கள். 'அப்படியா' என அம்மாவை வினவினால், ஆண்கள் பின்னறாளா என்ன? அவா முகமெல்லாம் மறந்தா போச்சு?' என்று திரும்பக் கேட்பாள். அதுவும் வாஸ்தவம்தானே?


' எப்போவாவது பின்னிப் பழகிக்கோ. சீப்பைக் கொண்டு வந்து நீட்டாதே விரிச்ச தலையோட; அப்புறமா பெரியவளானா பிரச்சனைதான்.'' என்பாள் அம்மா. பின்னும் முன்னால் அம்மாவின் மடி ஏறி அம்மாவின் முகத்தில் என் முதுகிட்டு, பின் தொங்கும் முடியைப் பிடித்து இழுத்து என் கழுத்தில் தொங்க விடுவேன். கால் தொடும், தரை புரளும். எனதேயான பிரமையில் இடுப்பு நெளித்து மகிழ்வேன். ''எல்லாம் உனக்கும் தானே வளரும் விடுடீ வலிக்கிறது'' என்று மடியில் இருந்து எழுப்புவாள். தாழம்பூ வைத்து மயிர் மூடிப் பின்னித் தொங்கவிடுவாள். முடியின் அளவு வெளியில் தெரியாமல் தலைக் கருமையிலிருந்து பொன்னிறத் தாழைமடல் கழுத்தில் முள்குத்தி மடித்து மடித்துப் பின்னலிடப்படும். தயாராய் வாழை நாரை நான் உரித்து வந்து நீளமாய் வைத்திருப்பேன். எங்கோ ஒரு கண்ணியில் முடியுடன் நார் சேர்த்து இழைந்து வளர்ந்து விடும். ஆனாலும் தாழை மேல் மூடி மறைக்கும் இடுப்புக்குக் கீழே வளைந்தாடாமல் விறைத்துத் தொங்கும் தாழம்பூப் பின்னல் ஒரு நாளில் என் முடியை இருமடங்காக்கும். பொன்நிறம் மாறி, பழுப்பேறிச் சுருங்கி இடையிடை நார் தெரியும் வரை அவிழ்க்க மாட்டேன். அப்பின்னலை. மறு தலைக்குளியல் வரை தலை அவிழ்த்தால் மூச்சு முட்டும் தாழை வாசம்.

விசேஷ நாட்களில் வீடு நிறையப் பெண்கள். அம்மா சீப்பையும், எண்ணெயையும் எடுத்துக் கொண்டு அமர்ந்தால் மணிக்கணக் காகும் பின்னல் கடைமுடிய. அம்மா தன் தலையை வாரிக் கொண்டையிட்டு கை சொடக்கிக் கொள்வாள். யார் யார் பின்னிக் கொள்கிறார்களோ, அவர்கள் அலங்காரம் முடிந்ததும், சீப்பில் சிக்கி இருக்கும் முடியை விரல் கொண்டு சுற்றித் திரித்துப் பின் தரை துடைத்து, அம்மா சுருட்டித் தரும் முடியை வாசலில் இட வேண்டும். அனைவரும் கலைந்த பின் அம்மா தன் தலைவாரிய பின் தரை வழித்து வீழ்ந்த முடி எடுத்து விரல் சுற்றி என் கையில் இட்டு வெளி வாசல் சென்று வீசி விடச் சொல்லுவாள். வெள்ளையும், பழுப்பும், கறுப்புமாக இருக்கும் அந்தச் சிறு வட்டம் என் விரல் நுனியில் விழுந்து விடும் போல தொங்கிக் கொண்டு வரும். வாசல் அடைவதற்குள் பல முறை வயிறு புரட்டி வாந்தி வரும். தலையில் இருந்த முடி கைவர மனத்தில் ஏறும் அருவருப்பு.

விசேஷ நாட்களில் சமையல், டிபன், பலகாரம் என எப்போதும் அடுக்களை நிறைந்திருக்கும். யார்யாரோ சமைப்பார்கள். எல்லோரும் அமர்ந்து உணவு அருந்துவோம். அது வரைக்கும் மகிழ்ச்சியாய் இருக்கும். அடுத்த கணம் சோர்ந்து போகும். வரிசையாய் 'ட' வடிவில் அல்லது 'ப' வடிவில் இடப்பட்டிருக்கும் இலை எடுத்து எச்சலிட வேண்டும். அடிக்கடி யாருக்காவது சாப்பாட்டில் முடி வரும். முடி உறவு வளர்க்கும் என்ற மற்றவர் கூற்றை மறுப்பாள் அம்மா 'உறவு, முடியால் வளராது, கீழ் விழுந்த முடியும் வளராது ' என்று. எச்சலிட்ட கையைத் தரையிலிருந்து எடுக்க ஏதாவது ஓரிரண்டு முடி விரல் மாட்டும். வாய் ஓக்காளிக்கும். ''எப்படிடீ உனக்கு மட்டும் இடுப்புக் கீழே தரையை எட்டுமோன்னு வெறுந் தேங்காயெண்ணைக்கு முடி வளரறது? எனக்குத் தைலமெல்லாந் தேச்சாலும் பொடனிக்கு மேலே வறள்றது ? ' என்பாள் அத்தை. அம்மாவிடம் வெறும் சிரிப்புத்தான் பதிலாக வரும்.

மாத இடை வெளியில் பின்னிப்பழகு என்பாள் அம்மா. தலை முடியை மூன்றாக சரியான அளவில் வகுக்காமல் இறை தின்ற பாம்பும், சணல் கயிறுமாகப் பிரித்து மணிக் கணக்கில் நேர மொதுக்கி நானே பின்னிக் கொண்டு உல்லனுடன் பள்ளி செல்லும் நாட்களில் '' அம்மா ஊருக்குப் போயிருக்காங்களா? '' என்னிடம் கண்ணில் சிரிப்பும் முகத்தில் கள்ளமற்றும் வினவும் தோழிகளுக்கு ஆம் என்று பதிலுரைப்பேன். கோணைப்பின்னலும் உல்லன் நூலுமாக வரும் மற்றவர்களை நானும் கேட்பேன் குறும்புடன். அந்தரங்கம் வெளியே வர கேள்விக்குள்ளானவள், கோபிப்பாள் அல்லது தலை குனிவாள்.

நானே பின்னிக் கொள்ளக் கற்றுக்கொண்டேன். மற்றவர்க்கும் பின்னி விடவும்தான். விதம் விதமாக்கக் கொண்டையிட்டுச் சொந்தக் கற்பனைக்கு மற்றவர்களைத் தலையாட்ட வைத்தேன். என் குழந்தைக்கும் பின்னி விட்டேன். அவள் வெகு சீக்கிரம் என் பின்னல் மேவாமல், தானே பின்னிக்கொண்டாள். பல நாட்கள் விரித்த தலையுடன் அலைய ஆசைப் பட்டாள். அம்மாவிடம் தலை பின்னிக்கொள்ளல் ஏதோ ஒரு அந்யோன்யம் என்ற எனது எண்ணத்தை வலிந்து மாற்றினாள். அது தன் சொந்த அந்தரங்கம், அம்மாவின் தொடல் அந்நியம் என உணர்ந்தாள். பின்னல், விட்டொழித்த வழக்கு என்றாள். தன் எண்ணத்தில் என் குறுக்கீடு என்றாள். உடைப் பொருத்தமற்றது பின்னல் என்றாள். பூவைத்தல் தவறென்றாள். பூப் பறித்தால் செடிக்கு வலிக்கும் என்றாள். அதை நானும் உணர்ந்தேன். பூப்பறித்தல் கொலை என்று நானும் உணர்ந்து விட்டொழித்தேன்.

உடை குறுகிய காலமிது. பின்னல், கால் பிளந்த உடைக்களுக்குப் பொறுந்தாமல்தான் போயிற்று. தலை முடி பராமரிப்பு பெரும் சுமையாயிற்று. என் பெண்ணுக்கு நேரமற்று அவள் பறக்கும் சமயம் எனக்கும் அது சரி என்றே பட்டது. நீர் பற்றாக் குறை மற்றொரு உண்மையாயிற்று.

என் தலைவாரலில் சீப்பில் சிக்குண்டு உதிரும் முடிகள் கருப்பு, பழுப்பு வெளுப்பு என்று சுழன்று சுழன்று மூவண்ணம் பிணைந்த உதிரிகளாய் சிக்கி வரவாரம்பித்தது. சீப்பு மாயத் தோற்றத்தைக் கொடுத்தது. கொத்து முடியுடன் கீழிறங்கிய சீப்பு என்னதா? அல்லது அம்மாவுடையதா? நான் மகளா? அல்லது அம்மாவா? இந்த விழுந்த முடிகளை நான் விரல் நுனியில் அருவருப்புடன் வாசலில் இடுவதா? அல்லது என் மகளிடம் அளிப்பதா?அம்மாவாய் நானும் ஆகி மகளிடம் உதிர்ந்ததைப் பொறுக்கிக் கொடுக்க எதிரில் யாரும் இல்லை. மகள் வெளி நாட்டில் வெட்டிய குட்டை முடியுடன். மின் அஞ்சலிலும், ஊடுருவி ஒளியூட்டும் பிம்பப் படங்களிலும், எப்போதாவது நேரிலும். அது கனவு போல மங்கி மங்கி அழியும்நினைவுகளிலும், தொலைபேசியிலும், ஏதோ ஒரு நுனியில் இழைந்தும் பிரிந்தும், பின்னியும், இழைந்தும் பிரிந்தும், பின்னியும்... .. .. . .. ..
காலம் பிழன்ற நினைவுச் சங்கிலி மாறி மாறி என் முன் வந்து சென்றது.

No comments: