Monday, July 23, 2012

ஓளியிடை நிழலாய்-கவிதை

ஓளியிடை நிழலாய்

1.நீ நிழல் பற்றி என்ன எழுதி இருக்கிறாய்?
இல்லை என்றே நினைக்கிறேன்.
எப்போதும் உடன் உழலும் நிழல் பற்றி
ஏன் எழுதத் தோன்றவில்லை உனக்கு?
தெரியவில்லையே? ஏன்?
நிழலாக எட்டி நின்று கேட்டுக்கொள்கிறேன்.

2.ஒளியின் நிறம் பச்சை, நீலம், சிவப்பு
பொருளின் நிறமும் ஏதாகிலும் இருக்கலாம்.-ஆனால்
எப்போதும்,எந்நேரமும், நீளமாகவோ, குட்டையாகவோ
பருத்தோ, சிறுத்தோ விழும் நிழல் என்ன நிறம்?
தோற்றம் தரும் கருமைதானே?
நிழல்கள் ஏன் நிறத்தைத் துறக்கின்றன?

3. குழந்தையைக் கொஞ்சினாள்
கோடி சூர்யப் பிரகாசமே
சுட்டுபொசுக்கும் ஒரு சூரியனே போதாதா?
மேற்கின் கோடியில் விழும்வரை.
கோடி சூரியன்? தாங்குமா?
உட்சபட்ச ஒளி பொருந்திய
அறிவுச் சுடர், ஞான சூரியன், எல்லாமாக
வந்து விழுகின்றன தாயின் மொழியில்.

4. அதீத ஒளி, ஒளியின் வெளி
ஒளி திடப்பொருளை ஊடுருவாது.
ஒளிக்குத்தடை திடப்பொருள்.
தடை செய்யும் பொருளை,
உருவத்தை ஒன்றுமில்லாமல் செய்து
பொருளையே நிழலாக்குகிறது
பின்புலத்தின் அதீத ஒளி.

5.எங்கள் ஊரில் என்றும் உண்டு சூரியன்,
வருடத்தில் ஓரிரு மாதங்கள் தவிர.
சூரியனை வழிபடுவோம்,
பயிருக்காகவும், உயிருக்காகவும்.
உடலின் நீரும், நிலத்தடி நீரும்
உஷ்ணப் பெருக்கில் வெளியேறும்
இருப்பிடம் விட்டு.
உனக்கோ ஆரஞ்சுச் சூரியன் அதிசயம்.
என்றேனும் எட்டிப் பார்க்கும் ஒளி உருண்டை
கொண்டாட்டமாகிறது, உயிர்களுக்கு.
ஆரஞ்சு சூரியன் ஆரஞ்சுத் திரையிடை
தோன்றித் தோன்றி மறைந்து
பின்னிருந்து வெளியேறும் ஒளிவெள்ளம்
பிடித்துத் தள்ளி, உன்னையும் ஆடவைக்கிறது
ஓளியிடை நிழலாய், உருவத்தின் வெளிக்கோடுகளாய்.

                                    க்ருஷாங்கினி.

Sunday, November 6, 2011

8-5-1969-adyar-chennai-our marriage

Posted by Picasa
தாய்மை போற்றுதும்

மிகப்பெரிய பரந்தவெளி. எங்கும், எங்கெங்கும் மனிதத் தலைகள். நின்ற நிலையில் மனிதர்கள். அனைவரும் இணைந்து ஒட்டு மொத்தமாகத் தட்டையாய் காட்சி அளிக்கின்றனர். சற்று உற்றுப் பார்க்க அனைவரும் பெண்கள் என்பது புலப்படுகிறது. பெண்கள்! பெண்கள்! எங்கெங்கும் பெண்கள். பனிரெண்டு முதல் நூறு வயதிற்கு அருகில் வரை பல வயதில் பெண்கள். அழகான, அழகற்ற, உயரமான, குட்டையான, நிற மாறுதல்களுடன் என எல்லாவிதமான மாறுதல் களுடனும் நிறைந்திருந்தது அந்த மைதானம். ஆனாலும், அனைவரும் பெண்கள். விதை நன்றாக மண்ணிலிட்டு, அது ஒன்றுபோல வளர்ந்து, பின் பல கட்டங் களில் நடப்பெற்று, ஒன்றாக வளர்ந்து, ஒன்றாக பருவம் எய்தி, ஒன்றாய்ப் பூத்து, ஒன்றாக நெல்மணிகளை சூல்கொண்டு, அதுமுற்றி தலைதாழ்த்தி அசைந்து நிற்கும் அறுவடைக்குத் தயரான வயலின் கதிர் தாங்கிய நெற் செடிகள் போல, எல்லோரும் பெண்கள். முற்றிய, தலைசாய்ந்த கதிரான எல்லாப் பெண்களின் கைகளிலும் ஒரு சிறு குழந்தை. பிறந்து சில நாட்களேயான குழந்தைகள். அவை அனைத்தும் பெண் குழந்தைகளா? அடையாளம் தெரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் ஒரு தலை இருப்பதைப்போல எல்லோரின் இடுப்பிலோ தோளிலோ ஒரு புத்தம் புது சிசு. பனிரெண்டு வயதுப் பெண்ணின் கைகளிலும் குழந்தை; தொண்ணூறு வயதுக் கிழவியின் கையிலும் குழந்தை. ஆண் என ஒருவரையும் காணக் கிடைக்காத அந்த மைதானத்தில் அனைவர் கைகளிலும் ஒரு குழந்தை.

குழந்தைகள் பிறந்து அதிகபட்சமாக பத்து நாட்களே ஆகியிருக்கலாம்; அல்லது சில மணிகளே ஆகியிருக்கலாம். குழந்தையின் கையில் ஒரு குழந்தை, குழந்தையின் தாயின் கையில் ஒரு குழந்தை; பாட்டியின் கையில் ஒரு குழந்தை; அத்தை, சித்தி, அக்கா என அனைத்துப் பெண் உறவுகளிடமும், உறவுகளற்ற பெண்களிடமும் ஆளுக்கொரு குழந்தை. என்றாலும் ஒன்றுபோல இல்லை; நிறம், அளவு தரம் என எல்லாமே மாறுபட்டுத்தான். ஆனாலும், எல்லாப் பெண்களின் கைகளிலும் குழந்தை. குழந்தைகள் ஒன்றொன்றாகவோ, அல்லது ஒட்டு மொத்த மாகவோ, விட்டு விட்டோ அழுதுகொண்டே இருந்தன. அந்த அழுகை குழந்தையின், குழந்தைகளின் வாயிலிருந்து வெளியேறி பெரும் குரலாக மாறி விண்ணை நோக்கி உயர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு குழந்தையின் அழுகையும் எறியப்பட்டு எறியப்பட்டு, வானத்துக்கும் பூமிக்கும் இடையில் குறுக்கு இழைகளாக நெய்யப்பட்டது போன்ற, மழைத் தரை போல, ஆனால் வானத்திலிருந்து நிலத்துக்கு மேல் கீழாக இல்லாமல் கீழிருந்து வான்நோக்கி எழும்பி எழும்பி கோடிழுத்துக் கொண்டிருந்தன. கோடுகள் அருகருகாக ஒன்றன்மீது ஒன்றாக ஏறி ஏறி அடுக்காக மாறி, திரையைப்போல அசைந்து நெளிந்து புகையைப் போல மேலெழும்பிக் கொண்டிருந்தது. புகை கெட்டிப் பட்டு கண்ணாடியைப் போல ஊடுறுவி அசையாத் திரை ஆயிற்று. அசையாத் திரை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்டு தடித்த, கனத்த, நகர்த்த இயலாத திரையாகியது. வானத்தில் ஏற்ற இறக்கம் கொண்ட நுனியையும் பெண்களின் தலைமீதாக சீரான அடிக்கோடிட்டு அடுக்கப்பட்ட குரல்களாகவும், எம்பி எம்பி ஹைட்ரஜன் பலூன்போல பறந்து கொண்டிருந்தன.

இத்தனை பெண்களுக்கும் வயிற்றில் பிள்ளை திணித்த ஆண்கள் எங்கு சென்றனர்? என்னவானார்கள்? எல்லாப் பெண்களும் பிரசவ வலியில் அலறிய குரல் எங்கு சென்று ஒளிந்து கொண்டிருக்கும்? எத்தனை வயிறுகள் கீறப்பட்டு குழந்தையை வெளித் தள்ளியிருக்கும்? எத்தனை குழந்தை யோனி வழி தலை முதலாக வந்திருக்கும்? கால் முதலாக வந்தது எத்தனை? கருப்பை சுறுங்கி வற்றிய உடல் கொண்ட பாட்டிக்கு திரும்பவும் கருப்பை விரிந்த ரகசியம் என்ன? மனிதர் தவிர மற்ற இயற்கையின் உயிர்கள் அனைத்தும் ஒரே பருவத்தில் குட்டிகள் ஈனும். தெருவெங்கும் ஆங்காங்கே நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகள், மாமரத்தில் காய்கள், மல்லிகைப் பூக்கள், ரோஜா, டிசம்பர் பூக்கள். மனிதனுக்கு ‘சீசன்' உண்டா? வயல்களில் கரும்பு, நெல், கம்பு, ராகி எல்லாம் நிறையலாம்; மைதானத்தில் பிள்ளை நிறைய முடியுமா? முடியும் என்று ஆகியிருக்கிறதே அனைவரின் கையிலும்! பள்ளிப் பருவ பெண்கள் தாய்மைப்பேறு அடைந்து கையில் குழந்தையுடன் தனித்து நிற்கின்றனர். அதன் தாக்கம்தானா இந்தக் காட்சி?

‘பெண்களே பள்ளிப்பருவத்தில் பிள்ளைகள் உங்களுக்குத் தொல்லையே.' இரு நாள் கருத்தரங்கு. நிறைய பள்ளி மாணவிகளின் ஒருங்கிணைப்பு இருந்தது. 12 முதல் 16 வயது வரைக்குமான பெண்கள் சீருடையில் அமர்ந்திருக்க ஆளுக் கொரு பொம்மைக் குழந்தை கொடுக்கப்பட்டது, வினாத்தாள் வினியோகம் போல. அனைவரின் கவனமும் பாடத்தின்மீது. கல்வியின் பொருள் ‘பள்ளிப் பருவத்தில் பிள்ளைச் சுமை'. பொம்மைக் குழந்தைகள் நன்கு அழுது புட்டிப்பால் குடித்தன. உடனே கழிந்தன. உறங்கின. சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த பொம்மைகள் முன்னரே முறைப்படுத்தப் பட்டிருந்த நேரத்தில் மிகச் சரியாக அழுதும், கழிந்தும், களைத்தும், உறங்கியும், விழித்தும் உண்டும் பிழையின்றி செயற் பட்டன. ஆனால் பொம்மைக்கு பொம்மை அந்த இயக்கங் களின் நேரம் வேறு வேறாக அமைக்கப் பட்டிருந்தது. எனவே அவற்றின் அழுகை இடம் மாறி இடம் மாறி தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தது.

இரண்டு நாள் கருத்தரங்கம் முடிந்தபின், அதனை வடிவமைத்து செயற் படுத்தியவர் தொலை காட்சிப் பேட்டியில் கருத்தரங்கம் மகத்தான வெற்றி என்று கூறிக் கொண்டிருந்தார். “பிள்ளை பிறத்தல், மாணவப் பருவத்தில் காதல், உடல் உறவு எல்லாம் ஆபத்தானது, தொந்தரவானது என மாணவிகள் உணர்ந்து கொண்டு விட்டனர், இனி பள்ளி மாணவியரின் பிரசவ எண்ணிக்கையின் விகிதாசாரம் கண்டிப்பாகக் குறையும். அவர்களுக்கு ஆண் நண்பர்களின் எண்ணிக்கை எப்படியிருந்தாலும் குழந்தைப் பிறப்பு எண்ணிக்கை கண்டிப்பாகக் குறையும். இது எங்கள் மூன்றாவது ஆண்டுத் தொடர் கருத்தரங்கு. அதன் தாக்கமாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பைவிட புள்ளி ஐந்து சதவிகிதம் இந்த மாநிலத்தில் குறைந்திருக்கிறது. கருத்தரங்கிற்கான செலவுப் பட்டியல் கோடிக்கணக்கில்” என்று மேலும் மேலும் சொல்லிக்கொண்டே போனார்.

“மன்னிக்க வேண்டும் குறுக்கிடுவதற்கு. கருத்தரங்கு பிள்ளை பெறும் மாணவிகளுக்கு மட்டும் ஏன்?”

சற்றே முகம் சிவக்க, பேட்டியை ஒரு இனிய சிரிப்புடன் முடித்துக் கொண்டார் ஏற்பாட்டாளர்.

“இங்கு பங்கேற்ற மாணவிகளில் பலருக்கு உண்மையிலேயே நிஜமாகவே அழுது, உணவருந்தி, உறங்கி, மலம் கழிந்து, தவழும், நடக்கும் ஒன்றுக்கு மேற் பட்ட குழந்தைகள் உள்ளன. அவர்கள் இதுபற்றி ஏதும் கருத்துகள் தெரிவித்தனரா?”
“மன்னிக்கவும். பேட்டி நேரம் முடிந்துவிட்டது. நன்றி, மிக்க நன்றி அன்பரே. தொலைகாட்சிக்கும் நன்றி.” சற்றே சிவந்த முகத்துடன் சிரிப்பின்றித் திரும்பினார் ஏற்பாட்டாளப் பிரமுகர். பேட்டி எடுத்தவர் தொலைகாட்சி நிலையத்தின் அரங்கத்தில் செயற்கை வெளிச்சமூட்டப்பட்ட இதம் தரும் அறையில் ஒப்பனையுடன் பிரமுகரைப் பற்றி முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, சற்றே கிண்டல் கலந்த குரலில் கருத்தரங்க ஏற்பாட்டாளர் எதிர் கொள்ள நேர்ந்த சிரமங்கள் பற்றி பேசி நிகழ்ச்சியை முடித்தார்.

பள்ளி மாணவப் பருவத்துத் தாய்மார்கள் சந்திக்கும்போது முகமனுக்குப் பின் கேட்கப்படும் கேள்வி, “என்ன, இது உன் பிள்ளையா?” “ஆம்” என்னும் சிரிப்புடன், “இது உன் பிள்ளையா?” என்ற கேள்வி இன்னொருத்தியிடம் கேட்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் நண்பர்களையும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளையும் சுமந்து செல்லும் பள்ளிச் சிறுமிகள்.

பால்ய விவாஹத்தை மிகப்பாடுபட்டு ஒழித்த நாட்டிலிருந்து சென்றவர் களுக்கு விவாகமற்ற தாய்மையும் பெண்ணுக்கே பாரமாவது குறித்த கவலை கொள்ளத் தோன்றியது.

இளம் தாய்மார்கள் தங்களது உணர்வுப் பகிர்தலுக்கும் பின் பிரிகின்றனர். அவரவர் வேலைத் தளத்திற்கு - ஏதோவொரு கண்ணாடித் தடுப்புக்குப் பின் புறம் கால் வலிக்க நின்று ஈட்டும் சொற்பப் பணம் அவர்களின் உதட்டுப் பூச்சுக்கும், வாழ்க்கையின் மேல் பூச்சுக்கும் பிள்ளையின் வயிற்றுக்குமாகப் பகிர்ந்தளிக்கப் படும். எதிர்பார்ப்பும் இல்லாத ஆண் நண்பர்கள் எனில், ஏமாற்றம் குறைவு. எதிர்பார்த்து ஏமார்ந்தாலும், எதிர்பாராமல் எதிர்பார்ப்பற்று விலகிச் சென்றாலும் பெறும் பிள்ளை என்னவோ பெண்ணோடுதான்.

‘தனிப்பெண், பிள்ளையுடன்' என்னும் அடைமொழியுடன் அல்லது ‘ஒற்றைத் தாய்' என்ற சொல்லோடு பெண்கள் உலகெங்கும் வயிற்றிலும் கையிலு மாக பிள்ளைகள் சுமந்து அலைகின்றனர். தந்தையற்ற பிள்ளைகள் தாயோடு அங்கம் ஒன்றென துருத்திக்கொண்டு நிற்கும் மருக்களைப்போல, கை வண்டி, தள்ளு வண்டி, கருப்பையில் சுமக்கும் தாய் வண்டி என எப்போதும் அசைந்து கொண்டும், இடம் பெயர்ந்து கொண்டும் இருக்கின்றனர்.

எதிர்பார்ப்பும் அற்று, அதனால் ஏமாற்றமுமற்று பிள்ளையுடன் அலையும் பெண்கள், தம் வாழ்வில் எதிர்கொண்டதுஒற்றை ஆணெனில் அவன் தலையை டாலர் போல சங்கிலியிலோ, அழகுக் கயிற்றிலோ மாட்டி நெஞ்சின் நடுவே பிறர் பார்க்க அலைகின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களின் தலைகளை கழுத்தில் மாலையாய் அணிந்துகொண்டும், உள்ளங் கழுத்து நெக்லஸ் போல சம இடைவெளியில் கோர்த்து முகத்துக்குக் கீழாக பட்டையாக அணிந்துள்ளனர். எதிர்பார்ப்பும் இருந்து, ஏமாற்றமும் அடைந்த சமூக அவமானமாகக் கருதப்படும் பெண்களும் தங்கள் கோபத்தைக் கொண்டு கொய்த ஆண் / ஆண்களின் தலைகளை ஊசி கொண்டு கோர்த்துத் துவளத் துவளத் தொங்கும் அவற்றை காடை கௌதாரியென ஒரு கையிலும், பிள்ளை மற்றொரு கையிலுமாக, தொங்கும் தலைகள் இடிபடும் பேரோசையுடன் பாதைகளைக் கடந்து கடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

ஏமாற்றப்பட்டது, துப்பப்பட்டது எதையும் இயம்ப இயலாதவர்கள் தம் ஆண்களின் கொய்த தலைகளை அவசர அவசரமாகத் தட்டையாக்கித் துளையிட்டு, கயிறு கொண்டு பிணைத்து, இடுப்பு உடைக்கு அடியில் அரைஞாண் கயிறென திறந்த வெளியில் காட்சிப்படுத்தத் தயக்கம்கொண்டு, சலங்கைபோல கோர்த்துக் கொண்டு அலைகின்றனர். உலகின் வீதிகளில், சாலை ஓரங்களில், புல்வெளிகளில், பாதைகள் எங்கும் தம் கால்களின் அணிகள் ஒலியெழுப்ப, கோர்க்கப்பட்ட தலைகள் சப்திக்க, குழந்தைகளின் அழுகை சப்தங்களுடன் இருவருக்கும் இடையிலான உரையாடல்களின் ஒலிகளுடன், இடம் பெயர்ந்து இடம் பெயர்ந்து தந்தைகளை நோக்கி இட்டுச் செல்லும் பயணத்துடன்- பிள்ளைகளுடன் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கின்றனர்.

ஓரிரு வினாடிகள் தடைபட்ட பயணத்தின் இடையில் ஒரு இடத்தில் அல்லது ஒரே இடத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட பெண்களின் சங்கமமே பிள்ளைகளுடன் பெண்களின் பெரும் கூட்டம். இன்னமும் சில நொடிகளில் ஒளிக்கதிர்கள் பரவுவதைப்போல தனித்தனிப் பாதையிலோ, பின் தொடரும் அணிவகுப்பாகவோ அனைவரும் கலைய நேரிடலாம். இனி எங்கும், எப்போதும் சந்திக்காதவர்களாகவும் பயணப்படலாம். புதுப் புதுத் தாய்களுக்கும் தமது பிள்ளைகள் பின் தொடர முன் சென்ற தாய் வழிகாட்டலாம். கையிலிருக்கும் பிள்ளை ஆணாயினும், வளர்ந்துவிட்ட அனைவரும் பெண் களாகவே இருப்பதாக அமைந்த அந்தப் பயணத்தின் பாதை சென்றடையும் முடிவு பாழாக இருக்கலாகாது.

at tiruvanmiyur beach-1967

Posted by Picasa

Saturday, October 29, 2011

In the garden-2006

Posted by Picasa

கவிதை

07-12-2008 அன்று சென்னை மெரீனா கடற்கரையில் கூடிய தமிழ் நவீன கவிஞர்களின் ஒருநாள் அடையாள போராட்டம் ஈழத்தமிழர் வாழ்வமைதி மற்றும் உரிமைகளுக்காக தமிழகமெங்கும் ஆதரவைத் தெரிவிக்க எழுதப்பட்ட கவிதையிது-
க்ருஷாங்கினி

இக்கரையில்

கடல் அனைவராலும் விரும்பப்படுகிறது
பாதுகாப்பாகவும் நிலம் இயல்பாகவும் இருப்பதால்.
குழந்தைகள் குனிந்து குனிந்து
கிளிஞ்சல் சங்கு சேகரிக்கிறார்கள்
சிறு சிறு நண்டும் பூச்சியும் கண்டு
மகிழ்ந்து கைகொட்டுகிறார்கள்.

அக்கரையிலோ

சுற்றிலும் கடலால் சூழப்பட்ட நிலமது
அலைகள் எப்போதும் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன,
பீதியால் சூழப்பட்ட இந்நிலத்தில்
குழந்தைகள் குனிவதில்லை-படுக்கிறார்கள்
பயந்து பயந்து பதுங்குகிறார்கள்,
சதைத்துண்டுகள் குழந்தைகள் பொறுக்குவதில்லை

இக்கரையில்

இளைஞர்கள் காதலைக் கொண்டாடுகிறார்கள்
அலைகளின் நடுவே சலிக்காமல் அமர்ந்து
பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள்.
மற்ரொருவருக்காக காத்தும் இருக்கிறார்கள்
கைகளில் ரோஜாமலர் ஏந்தி.

அக்கரையிலோ

போரால் சூழப்பட்ட நிலத்தில் இருக்கிறார்கள்
ஆண்-பெண் ஈர்ப்பு காணாமல் தொலைத்துவிட்டிருக்கிறார்கள்
பூக்களுக்கு பதிலாககைகளில் துப்பாக்கி திணிக்கிறார்கள்
போர் செய்யப் பணிக்கப்படுகிறார்கள்
கணவன், காதலன், சகோதரன், மகன்
அணைந்த உறவுகளில் ஆண்கள் பலர்.

இக்கரையில்

தீவுகளைக் கண்டுகளிக்க
கப்பற்பயணம் செய்கிறார்கள்-இனிதாய்
விமானப் பயணமும் மேற்கொள்கிறார்கள்
திரும்பவும் தம் மண் மிதிக்கும் பத்திரத்துடன் திரிகிறார்கள்.

அக்கரையிலோ

உயிர், மண்ணில்விதைத்திருக்கிறார்கள்
இருளையும் சோகத்தையும் சுமந்து திரிகிறார்கள்
மண்விட்டு, பொருள்விட்டு, உறவுவிட்டு
அலையிடைப் பயணிக்கும் இவர்கள் உடல்மட்டும்;
வேற்றுமண்ணில் வேறற்று மிதக்கிறார்கள்.

இக்கரையில்

கவிதை வாசிக்கிறார்கள் சகோதரர்களுக்காய்
சுதந்திரமாய் சுவாசித்துக்கொண்டு
கடலையும் அலையையும் கண்டு நெகிழ்ந்துகொண்டே
கையசைத்து அலைகள் நோக்கி.


அக்கரையிலோ

கருப்பைகளும் விதைப்பைகளும் அற்ற வெற்று
மயானபூமியில் மறு உற்பத்தி மறுக்கப்பட
அபாயம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும்
அந்த நிலத்தில் யாரை யார் ஆள
இரண்டு தலமுறைக்கும் மேலாய்
இப்போர்?

Thursday, October 27, 2011

பிறை சூடா பித்தி(சிறுகதை)

பிறை சூடா பித்தி

முதலில் நான் உணர்ந்தது என்னுடைய இடையில் மிகச் சிறிய ஒட்டுத் துணியுடன் மட்டுமே தார்ச் சாலையில் நடந்து கொண்டிருக்கிறேன். தார்ச் சாலையின் சூட்டில் கால்கள் சுடுகின்றன. சூட்டின் மீது கவனம் விழுந்தாலும், உடையற்று நான் திரிவது மேலோங்கி நிற்கிறது. சுற்றிலும் யாரும் என்னைக் கண்டு அதிர்ச்சி அடையவோ அல்லது உடை கொடுக்கவோ முற்படவில்லை. எல்லோரும் ஏதோ வேலைகளை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கின்றனர். தார்ச் சாலை சூட்டை எப்படித் தணிப்பது என்ற குழப்பம், சற்றே மணலில் மாற்றி நடந்தால் தீர்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் சாலையின் ஓரத்தில் சிதறிக் கிடக்கும் மணல் மீது வெற்றுக் கால்களைப் பதிய வைக்கிறேன். சூடு அதிகமாக உணர முடிகிறதே தவிரக் குறையவில்லை. கால்களின் சூட்டையும்விட ஆடையற்ற அவமானம் மேலோங்கி நிற்கிறது. என் உடலை நானே உற்று நோக்குகிறேன். நான் எண்ணுவது போன்றன்று, வற்றிச் சுருங்கி, கருத்து, யாரோபோலத் தோற்றம் தந்துகொண்டிருக்கிறது. உறக்கத்திலிருந்து திடீரென விழித்தாற்போல உலகம் எனக்கு தோற்றம் தருகிறது. தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள் எனக்கு பரிச்சயமற்றுத் தெரிகின்றனர். நடுத்தர வயதுடையோர், முதியோர் யாருமே எனக்குத் தெரிந்தவர் இல்லை போலும். யாரையுமே அடையாளம் காண இயலாமல் திரிகிறேன். தலை மீது தன்னிச்சையாகக் கை விழுகிறது. அடர்ந்த நீண்ட கூந்தல், அதன் பெருமிதம் ஒருசேர என்னிடம் நிமிர்ந்து நிற்கும். தலையின் மீது வெற்றுத் தோல் மிதக்கிறது. வெற்று கால்கள், வெற்று உடம்பு, வெற்றுதலை.

சாலையோர மரங்களும், சில வீடுகளும் எனக்கு அடையாளமாகிறது. நடக்கும் தெரு பரிச்சயமாகிறது. அசையும் உயிர்களில் தெளிவற்ற நான், அசையா உயிர்களில் என்னையும் அவற்றையும் இணைத்து அடையாளம் காண்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக உறக்கத்திலிருந்தது, இப்போது விழித்ததற்கும் இடையிலான காலம் சரியாக கணக்கிடப்பட முடியவிலை என்றாலும், ஓரளவுக்கு புரியத் தொடங்குகிறது.

தலையில் முடியெல்லாம் புழுக்களாக மாறி, என் உறக்க காலத்தில் என்னுடைய தலையை எப்போதும் துளைத்துக் கொண்டே இருந்தன. எனவே அவற்றை ஒவ்வொன்றாக பிடுங்கி எறிந்தேன். தரை புழுக்களால் நிரம்பத் துவங்கியது. புழுக்கள் என் மீது மறுபடியும் ஏறி ஏறி திரும்பவும் தலையில் வந்து அமர முயல்கின்றன. தலையில் ஓட்டையிட்டு குத்திட்டு நிற்க ஆரம்பிக்கின்றன. புழுக்களைக் கண்ட காகங்கள் உற்சாகமாக தலையிலமர்ந்து கொத்தித் தின்ன ஆசை கொள்கின்றன. கையில் கோலுடன் காக்கைகளையும், புழுக்களையும் விரட்ட ஆரம்பித்தேன். தலையில் ஓயாத துளையிடும் சப்தத்தையும், துளையிடுவதால் உண்டாகும் வலியையும் எத்தனை நேரம் பொறுத்துக் கொண்டிருப்பது? உடையின் மீதாக ஏறிச்சென்று தலையை அடைய முயலும் புழுக்களுக்காக உடையை உதறி அவிழ்த்தெறிவேன். இலைகளை கட்டி எடுத்து தரையைப் பெருக்கி எல்லாவற்றையும் நெருப்பிட்டுக் கொளுத்த வேண்டும். இப்போதுதான் தரையைப் பெருக்கத் துவங்கி இருந்தேன். ஓயாமல் புழுக்கள். ஓயாமல் துடைப்பம். ஓயாமல் காக்கைகள். ஓயாத மக்கள் என்னைச் சுற்றி வட்டமிட்டபடி. புழுக்கள் அங்கும் இங்குமாக ஓடத்துவங்க, நானும் தப்பிக்க முன்னே ஓடத்துவங்குவேன்.

இன்றுவரை ஓடிக்கொண்டே இருந்திருக்கிறேன் என்பதை விழித்தெழுந்த நான் கனவு போல உணரத்தொடங்குகிறேன். உறக்கத்திற்கும் விழிப்புக்குமான இடைப் பட்ட காலம் என்பது எனது வளமான அங்கங்களிலிருந்து, வறண்டு சுண்டிப்போனது வரையிலானதாக காலமாக இருக்கிறது. சிறிது சிறிதாக நான் என்னை உணர்கிறேன். எனது வீடு, எனது தெரு, எனது குடும்பம் எல்லாமே மேலேறி கிளர்ந்து நினைப்பின் மேல் அடுக்கில் வந்து அமர்கிறது. யாரோ ஒருவர் மேல் துணி கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால், அணிந்திருக்கும் ஒற்றை உடையைத் தவிர ஏதுமற்றுத்தான் திரிந்து கொண்டிருக்கிறார்கள் போலும். எல்லோரும் இல்லை என்கின்றனர். இதற்குள் விழிப்புற்ற என் உடலின் ஆடையற்ற நிலை என்னுள் இயல்பாகி போகிறது. யாரும் கவனிக்காத, அல்லது கவனிக்கத் தேவையற்றதான நிர்வாணத்திற்காக நான் ஏன் அல்லலுறவேண்டும்? கால்கள் தரையில் பரவ, ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நான் எனது அறிமுகமான தெருக்களின் இடையே நடந்து செல்கிறேன். சூடுடனும், சூடற்றும் பாதங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன, எனது வீட்டின் முன் நிற்கும் வரை.

வீடு அழிக்கப்பட்டு விட்டிருக்கிறது. வீட்டின் மக்களின் நினைவுகளிருந்தும் நான் அழிக்கப்பட்டும் நெடுங்காலமாகி விட்டிருக்கிறது. எனது அடையாளத்தை நான் உணரவும், என்னை அடையாளம் காணப்படவுமாக நான் எனது தாயைத் தேடுகிறேன். தாய் உடன் பிறப்பின் இடத்தில் இருப்பதாக அறிகிறேன். நெடுந்தூரம் நடந்து அடைய வேண்டிய தொலைவில் இருக்கும் சகோதரன் வீட்டிற்கு செல்ல வாகனம் ஏற முற்படும் பொழுதுதான் எந்த வாகனமும் காசற்றுக் கிடைக்காது என்பதையும் அறிவு மேலடுக்கிற்கு அனுப்புகிறது. கையில் கைப்பை, காசிருக்கும் பர்ஸ், அனுமதிச்சீட்டு, முகவரிக் காகிதம் ஏதுமற்று வெற்றுக் கைகளாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன இருபுறமும்.

திரும்பவும் நடக்கத் தொடங்குகிறேன். சாலையோரம் எறியப் பட்டிருந்த சிறு துணித் துண்டெடுத்து என் மேல் உடலைப் போர்த்திக் கொள்கிறேன். மிகப் பெரிய ஆசுவாசம் கிடைக்கிறது. சற்றே அமைதியும். அறிந்த பாதையிலும், அறியாத பாதையிலுமாக எனது பயணம் தொடர்கிறது. கால்கள் சோர, வெற்றுடம்புடன் வெற்று வயிறும், வெற்றுக் கால்களும் காய அன்னையைக் காண்கிறேன்.

உடன் பிறந்தவன் வீட்டில் மிகப் பெரிய கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. பெரிய பெரிய அடுப்புகள், பெரிய பெரிய எண்ணெய் சட்டி. எல்லோரும் முகங்களின் மீது மகிழ்ச்சியை அப்பிக்கொண்டு அலைந்து திரிந்துகொண்டு இருக்கின்றனர். ஆனால் யாருக்கும் என்னை அடையாளம் தெரிய வில்லை. அன்னையின் முன்பாக நிற்கிறேன். அவளும் அடையாளம் கடந்த வயோதிகத்தில் இருக்கிறாள்.

திடுக்கிட்டு அறுவருப்புடன் ஏறிட்டுப் பார்க்கிறாள் அவள். என்னைக் கண்ட அதிர்ச்சி முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. “இந்தப் பைத்தியம் இப்போது இங்கே எப்படி? “வா, வா, எப்படி வந்தாய்?” விசாரிப்பு ஊட்டப்பட்ட செயற்கை மகிழ்ச்சியுடனும், முகம் ஏற்காத பாவனையிலும், உடனே அப்புறப்படுத்தும் எண்ணத்திலும் இருக்கிறது. பைத்தியம் என்ற ஒற்றை சொல் என் மனதின் குழப்பத்தைத் தெளியச் செய்கிறது. நான் உறக்கத்தில் இருந்ததாக எண்ணிக் கொண்டிருக்கிறேன். இவர்களுக்கோ அது பித்தென்று புரிகிறது.

வெற்றுக் கால்களுக்கும், வெற்றுடம்பிற்கும், வெற்றுக் கைகளுக்கும், வெற்று வயிற்றிக்கும் காரணம் சற்றே புரிபடத்துவங்குகிறது. ஒளி பொருந்திய முகத்தை ஏந்தியபடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த முகங்கள் மங்கிப் போகின்றன. சங்கடமாக நெளிகின்றனர். என்னாலும் என்ன செய்வதென்று தீர்மானிக்க முடிய வில்லை. திகைக்கத்தான் முடிகிறது. என்னை எதிர்கொள்ளும் நிலையில் அங்கிருந்த யாருமே இல்லை அன்னையையும் சேர்த்து. ஏற்றுக் கொள்ளவும் முடியாது என்ற உண்மையும் புரிகிறது.

மனதிற்குள் கடல் பெரும் ஓசையை எழுப்புகிறது. கடல் பொங்கி, பொங்கி எனது எல்லா துவாரங்களின் வழியாகவும் வெளியேறத் தொடங்குகிறது. நீராக வழிகிறது கடல் என்னிலிருந்து. நீர் கீழிறங்கத் துவங்குகிறது. வெளியேற்றப்பட்ட நீரின் தாரை அறையில் பரவுகிறது. எல்லோரையும் அது கவலை கொள்ளச்செய்கிறது. விழாக் கோலத்தை மாற்றி அமைக்கவோ, நான் திரும்பி வந்ததை விழாவாக அறிவிக்கவோ அங்கு யாரும் தயாராக இல்லை. நான் பெருக்கெடுத்து ஓடும் என்னுள் ஓங்கும் கடலை ப்ரும்ம முயற்சிக்குப் பிறகு என்னுள் திரும்பவும் எடுத்து அடைத்துக் கொள்கிறேன்.

ஆனாலும் ஆடை ஒன்றாவது எனக்குக் கொடுக்கும் படி அங்கிருக்கும் உறவு அனைத்திடமும் கெஞ்சியபடியே இருக்கிறேன். விழா நாயகிக்கோ எனது வற்றல் உடலுக்கும், அவளது பூரித்த இளம் உடலுக்கும், எந்த விதத்திலும் ஒப்பிடமுடியாத சந்தேகம் இடையே நெளிகிறது. “உன்னுடைய சிறுவயது உடை ஏதாவது இருந்தால் எனக்குக் கொடு. மேலங்கி இவ்வளவு நீளமாக வேண்டாம்.” கொடுக்கப்பட்ட உடையை அங்கேயே அணிந்து கொள்கிறேன். மேலிருக்கும், இடுப்பிலிருக்கும் துண்டுத் துணிகளை உதறிவிட்டு. அனைவரும் அபாயகரமாக உணர்கின்றனர். ஆடையை அணிந்து கொள்வேனோ, அல்லது உதறிய நிலையில் நடுக்கூடத்தில் அமர்ந்து விடுவேனோ என்று. எனக்கு விழிப்பு ஏற்பட்டு விட்டது என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், என்னாலும் நிரூபிக்க முடியவில்லை. உடை அணிந்து, அதுவும் சரியான முறைப்படி அணிந்து கொண்டவுடன் எல்லொருக்கும் பெரிய ஆசுவாசம்.

பசி உணரத்தொடங்குகிறேன். விதம் விதமான பலகாரங்கள் அடுக்கப் பட்டவைகளிலிருந்து கையேந்திக் கேட்கிறேன். முகச் சுளிப்புடன் அளிக்கப் படுகிறது. ஆனாலும் ஆறுதலாய் உணர்கிறேன். எனது உறக்கதுக்கான காரணத்தை அன்னையிடமாவது கூற மனம் விழைகிறது. கூற முற்படும்போது வரவேற்பு அற்றதுடன், எதிர்ப்பும் காட்டும் முகத்தைக் காண்கிறேன். “அம்மா என்ன ஆயிற்று? என்று எனக்குப் புரிந்தவரை கூறட்டுமா?” எதையும் கேட்கப் பொறுமையற்ற முகங்கள். எங்காவது பூமியின் அடியில் என்னை ஒளித்து வைத்துவிட்டு தங்கள் கொண்டாட்டத்தை தொடர தயாராகிறார்கள். நானோ, சொற்கள் கோர்வையற்று உரைக்கிறேன்போலும், இன்னமும் தெளிவாக விளக்க முற்படுகிறேன். எதிரில் ஏந்துகிற கைகளற்ற வெற்றுச் சொற்கள். வீடெங்கும் இரைந்து கிடக்கின்றன. உறக்கத்திலும் இப்படித்தான் ஓயாமல் சொற்களை வீசினேனோ? என் விழிப்பின் அடையாளம் காக்கவேண்டும் என்றால் சொற்கள் அரிதாக வெளியேற்றப்பட வேண்டும். ஆனாலும் என் விழிப்பின் நிலையை, உறுதியை சொற்களைத் தவிர வேறு எதை நான் நம்ப இயலும்? எனது சொற்களோ கேட்பாரற்றுப் பாதாளச் சாக்கடையிலிருந்து, அடைப்பை நீக்கி வெளியேற்றப்பட்டு குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் துர் நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது.

“எனக்குக் குளிக்க வேண்டும். தயவு செய்து உதவுங்கள்.” “குளிப்பதற்கும், குடியிருப்பதற்கும் முற்படாதே. ‘சாப்பிட்டாயிற்றென்றால் இடத்தைக் காலி செய் விழாக்காலத்தில் சனியன் போல இது ஏன் இப்போது வந்து கழுத்தை அறுக்கிறது?'

‘அடர்ந்த கருங்கூந்தலோடு என்னை அனுப்பினாயே அம்மா, கணவன் வீட்டிற்கு. எல்லாக் கூந்தலும் புழுக்களாக மாறியது எந்த நாள் என்று நான் கூற வேண்டாமா? எல்லாப் புழுக்களையும் எவ்வளவு கஷ்டத்துடன் எடுத்து எறிந்தேன் என்று நீ அறிய வேண்டாமா? அதை நான் உன்னோடு பகிர்ந்து கொள்ள வேண்டாமா?'

‘இதோ பார். இங்கு இன்னொரு தலைமுறையின் முதல் திருமணம் நடக்க இருக்கிறது. பார் அவளை, எவ்வளவு அழகோடும், இளமை பொங்கும் அங்கங் களோடும் சுற்றித் திரிந்துகொண்டு இருக்கிறாள் என்பதை. வாருங்கள் பெண்களே! அக்கம் பக்கம் அழைக்க வேண்டும். எவ்வளவுதான் பார்த்து பார்த்துச் செய்தாலும், முக்கியமானவர்கள் விடுபட்டு விடுவார்கள். வாருங்கள் அழைக்கப் போகலாம்.'

பளபளப்பான உடைகளில் ஒரு குழு அழைக்கக் கிளம்புகிறது. என்னுள்ளும் உற்சாகம் பொங்கி வருகிறது. ‘நானும் கூட வருகிறேன். எனக்கும் எல்லோரையும் பார்த்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன. பல முகங்கள் மறந்து கூட போய்விட்டது. எவ்வளவு கால உறக்கம் கணக்கில்லாமல். இவளாவது உறக்கத்திற்கு ஆளாகமல் விழிப்புடனேயே எப்போதும் இருக்கும் படியான வாழ்வு அமைத்துக் கொடுப்பீர்களா? நான் பங்கு கொள்ளாமலா அழைப்பு? எனக்கும் நல்ல உடை கொடுங்கள். எல்லா தவறுகளுக்காகவும் உங்கள் அனைவரின் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.'

திரும்பவும் தெருவோரத்தில் குவிக்கப்பட்டிருக்கும் பாதாளச் சாக்கடையின் கழிவுக் குவியலைப்போல என்னை அனைவரும் பார்க்கின்றனர். நான் விழித்து விட்டவள் என்று நிரூபிக்க நான் செய்யும் முயற்சிகள் அனைத்துமே, புதைகுழிக்குள் எம்பித் தவிக்கும் ஒரு கனத்த உடல் இன்னமும் இன்னமும் மூழ்கிப் போவதை ஒத்ததாக முடிகிறது.

குடும்பத்தில் ஒரு பெண் மட்டும் என்னை அழைத்துச் செல்வதாக வாக்களிக்கிறாள். முகம் கழுவ குளியலறை செல்கிறேன். அங்கு இருக்கும் சீயக்காய்த் தூளைப் பார்க்கிறேன். கரு கருவென்று நீண்ட அடர்ந்த கூந்தலை குளித்து அலசி உதறி விரித்துப் போட்டால், உடலும் உலகமும் மயங்காதோ? தண்ணீரில் கரைத்து எடுத்து அப்பிக் கொண்டு வெளியில் வருகிறேன். நீரற்ற குளியல் அறையில் எப்படி குளிப்பதாம்? தண்ணீர் வேண்டும். குளிக்கத் தண்ணீர் வேண்டும். எடுத்துத்தாருங்கள். கண்கள் எரிகின்றன என்று அலறுகிறேன். அலற அலற எரிச்சலும், பயமும் என்னை நோக்கிப் பாய்ந்து வருகிறது.

முன் நின்ற ஒருத்தி வந்து ‘என்னுடன் வா. தண்ணீர் இருக்கும் இடம் காண்பிக்கிறேன்', என்று சொல்லி நான் அடைய முடியா வேகத்துடன் முன்னால் ஓடிக்கொண்டே இருக்கிறாள். நானும் பின் தொடர முயன்று ஓடிக் கொண்டே இருக்கிறேன். படிகளைக் கடந்தும், படிகளில் ஏறியும் பின் இறங்கியும், பின் சம தளத்தில் நடந்தும் செல்கிறாள். ஓடி ஓடிப் பின் தொடர்கிறேன். ஆனாலும் தண்ணீரும் குளியலறயும் மட்டும் காணவே இல்லை. இன்னமும், இன்னமும் நடை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நெடும் தொலைவு கடந்த பின்னே ஒரு பூட்டப் படாத கதவு காணக்கிடைக்கிறது. அப்பெண் அக்கதவருகில் புன்சிரிப்புடன் நின்று கொண்டிருக்கிறள். நான் அவள் அருகில் செல்லும் வரை அக்கதவு திறக்கப் படாமல் எனக்காகக் காத்துக் கிடக்கிறது. நான் சென்ற உடன் கதவு திறக்கப் பட்டு சட்டென்று பின் அறைந்து மூடப்பட்டும் விடுகிறது. ‘பக்கெட் எங்கே? தண்ணீர் எங்கே? என்று நான் தேடத் துவங்க அது அறையே இல்லை. அது ஒரு தெருவின் முனை.

ஆட்கள் அரவமற்ற அத்தெரு நீண்ட நெடும் தார்ச்சாலை கொண்டதாய் இருக்கிறது. அது முடிக் கற்றைகளாய் மாறி சீயக்காய் படிந்த என் தலையினுள் உள் நுழைந்து தொங்க ஆரம்பிக்கிறது, கரும் பாம்பென அலை அலையாய்.

மனம் கொள்ளாப் பெருமிதத்துடன் எனது ஆடைகளை ஒவ்வொன்றாய் வீசி எறிகிறேன். பொங்கும் அங்கங்கள் தளும்பித் ததும்புகின்றன.
க்ருஷாங்கினி

{ அணங்கு-இதழ்/7-அக்டோபர்-டிசம்பர்-2009 }