Thursday, July 15, 2010

ஒளி உருண்டை விற்பவள்

ஒளி உருண்டை விற்பவள்


அடர் ஆரஞ்சு வண்ணத்தில் அடர் நீல பார்டர் இட்ட பாவாடை கட்டி இருந்தாள் அப்பெண். வெளிர் ஆரஞ்சு தாவணியும், அடர் நீல ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். 'ஆரஞ்சு இருபது, ஆரஞ்சு இருபது' எனக் கூவினாள். எனக்கோ எங்கோ கணக்கு இடருவதுபோல இருந்தது. ஆறும், ஐந்தும் பதினொன்று, ஆறு தடவை ஐந்திருந்தால் முப்பது. இடைப்பட்ட ஒரு எண்தானே இருபது? என்றாலும் கணக்கிற்குள் கட்டுப்படாதவாறு கூவல் என்னைத் தொடர்து வந்தது. 'மிட்டாய் ஆரஞ்சு, மிட்டாய் ஆரஞ்சு' கூவல் தொடர்ந்தது. இதுவும் முன்னுக்குப்பின் முரணாய் உள்ளது. ஆரஞ்சு மிட்டாய் உள்ளது. மிட்டாய் ஆரஞ்சு எங்கே உள்ளது? கூவல் அருகில் கடந்த போது பெண் கைகளில் நான்கு ஆரஞ்சு களையும், கூடையில் அநேக ஆரஞ்சு களையும், தலையில் சுமந்தும் ஆரஞ்சுப் பழத்தின் மீதான தனது திட நம்பிக்கையை உரிச்சொல்லாக முன்னெடுத்தும் கூவிக்கொண்டு சென்றாள். இரு கணக்குகளுமே அவளுக்கு சரி என்ற என் கணக்கு சரியாயிற்று.

பெண்கள், ஆண்கள் அநேகர் மிட்டாய் ஆரஞ்சு வாங்கினார்கள். அடர் ஆரஞ்சுத் தோலை அப்புறப்படுத்தி கைக்குக் கீழே உடன் தரையில் எறிந்து கொண்டே நகர்ந்தனர். தாவணி நிறம் கொண்ட உட்சுளைகளில் சிறு நரம் பெடுத்துவிட்டு, பின் கொட்டைகளையும் நீக்கி வீசிப் பிள்ளைகளுக்கு ஊட்டியும், தாங்களும் உண்டும் தீர்த்தனர். மெலிதான ஆரஞ்சு நிற பிளாஸ்டிக் பைகளுக்குள்ளும் சில குடியேறின. மற்றொரு கைகளுக்குப் பயணப்பட ஊட்டிவிட்ட சுளைகளின் சில மணிகள் தரையில் சிதறிக் கிடந்தன. தேளின் ஒளி பொருந்திய திரவம் மிகுந்த ஊடுருவும் கொடுக்கு களென தரையில் படுத்தும் மல்லாந்தும் இறைந்து கிடந்தன முத்துக்கள்.

கூடையில் நிரம்பிய ஆரஞ்சுகளிருந்தும், கைகளில் இருக்கும் சிறு உருண்டைகளிலிருந்தும் வெளிச்சம் பீரிட்டு அவளின் முகத்தில் பிரதி பலித்தது. அவள் செல்லுமிடமெங்கும் ஒளி வழிந்து பின் தொடர்ந்தது. அவள் காசிற்கும், காசில்லாமல் ஆசைப்படும் ஏழைச் சிறுவர்களுக்கு இலவசமாகவும், கைகளில் இட்டுக்கொண்டே இருந்தாள். அவள் கிள்ளிக் கொடுத்த பழங்களின் ஒளி வாங்கியவர்களிடமும் சிறிது நேரம் தங்கி இருந்தது. காசற்ற சிறுவர் களுக்குக் கையில் கிடைத்த அந்த ஒளி உருண்டை தன் ஒளியை அவர்களின் முகத்தில் கூடுதலாக சற்று நேரம் தங்க விட்டும் சென்றது. சாப்பிட்டுக் கொண்டிருந்த பிள்ளைகளின் உணவுக் குழாய்களில் சில அங்குலம் வரைஅந்த ஒளித்துகள்கள் உட்சென்றது காண முடிந்தது. விஷமருந்திய நீல கண்டனைப் போல அல்லாமல் இவர்கள் ஒளி அருந்திய, ஒளிபொருந்திய கழுத்துக்களைக் கொண்டவர்களாக அலைந்து தெருக்களில் திரிந்து கொண்டிருந்தனர்.

ஆரஞ்சுப்பாவாடை தாவணியைத் தடுத்து நிறுத்தி ஒளி உருண்டை களைப்பற்றி விசாரித்தேன். ஆனால், அவளோ அவை ஆரஞ்சுப்பழங்கள் என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். நான் தொடர்ந்து அவளிடம் விவாத்தித் தேன். ஒளி பொருந்திய கழுத்துக்களையும், உணவுக் குழாய்களையும் அவளின் சுடர் மிகுந்து பிரகாசிக்கும் உடலைப் பற்றியும் வலியுறுத்தி விசாரிக்க, அவள் மெல்ல மெல்ல, அக்கம் பக்கம் பார்த்து என்னைத் தனியிடத்திற்கு இட்டுச் சென்றாள்.

அவள் கண்கள் மினுக்க, உடல் இலேசாகிப் பரவசம் கொள்ள கூறத் தொடங்கினாள். ஓநேற்றுத்தான் சூரியனிடமிருந்து ஒரு பெருங்கூடை ஆரஞ்சுக் குழம்பெடுத்து வந்தேன். அதை என் வீட்டில் கொட்டி சிறு சிறு உருண்டை களாக்கி, வைத்துள்ளேன். இன்னமும் என் இருப்பிடத்தில் சூரிய பிஞ்சுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கூடை நிறைய அள்ளி வந்துள்ளதை விற்றுத்தான் உணவுக்கு அரிசி வாங்க வேண்டும்.ஔ

அவசர அவசரமாக நான் கேட்டேன் 'உன் வீட்டில் இருக்கும் சிறு உருண்டைகள் உஷ்ணம் கொண்டு சோறு வடிப்பாயா? உன் விட்டின் கூரை இது வரை எரிந்து சாம்பல் ஆகாமல் இருக்குமா? உன் உடல் வேகாமல் எப்படி ஒளி சுமக்கிறாய்?'

ஓமறுபடியும் மறுபடியும் சொல்கிறேன், இவை ஆரஞ்சுப்பழங்கள் என்று. மேலும் சூரியனின் குழம்பை நான் எடுத்து பக்குவமாக என் வீட்டின் மண்ணில் இட்டுப் புதைத்து வைத்திருந்தேன். என் அரவணைப்பால் அவற்றை உஷ்ணமற்ற உருண்டைகளாக மாற்றியிருக்கிறேன். மேலும் அதனுள் சுவை மிகுந்த சுளைகளும் உண்டு. அவற்றை உண்ட மக்கள் தாமே ஒளிபொருந்திய உணவுக் குழாய்களுடன் திரிகிறார்கள். எனவே இவைகள் ஆரஞ்சுப் பழங்கள்தான்.ஔ

நான் அவளுடன் தொடர்ந்து நடந்து அவளின் இருப்பிடத்திற்கு வருவேன் என்று பிடிவாதம் பிடித்தேன். 'வீடு நிறைய ஒளிஉருண்டைகளைச் சேமித்து வைத்திருக்கும் உன் வீடு, கோடி சூர்யப் பிரகாசத்தோடுதான் இருக்க வேண்டும்.'

ஊரின் கடைசியில் சலனமற்று இருந்த, தனக்குள் இருக்கும் ஒளி உருண்டைகளைப் பற்றி எந்த ஆரவாரமும் செய்யாமல், அமைதியாய் கூரையிட்ட தன் சிறு வீட்டின் கதவைத் திறந்தாள். அவளின் வீடு உள் முழுவதும் பிரகாசத்தைத் தன்னுள் இருத்தியதாக இருந்தது. கண்கள் இருட்டினுள் பழக இயலாதது போலவே, பெரும் ஒளியிலும் செயலற்றுத் தடுமாற்றம் கொண்டன. ஒளிக்குக் கண்களை மெல்லப் பழக்கிக் கொண்டேன். இமைகளை மூடி மூடித் திறக்க, இருளும் ஒளியுமாய் மாறிமாறிக் கண்களைச் சமநிலை கொள்ளச் செய்தன. அறையின் மூலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த அடர் ஆரஞ்சு உருண்டைகளின் ஒளி கூரையின் ஓட்டை களில் ஊடுருவி ஒளிக்கற்றைகள் மேல் நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தன.

திடீரென எனக்குள் பெரும் சந்தேகம். அவளிடமே கேட்டேன் 'சூரியனிலிருந்து நீ எடுத்து வந்த ஒளியின் இடம் இட்டு நிரப்பப்படாமல் அல்லவா இருக்க வேண்டும்? ஆனால், நேற்று மாலை சூரியன் எந்தக் கரும் பொட்டும் இல்லாமல்தானே இருந்தது?'
'முட்டாளே, இதற்குத்தான் சொன்னேன், என்னைப் பின் தொடராதே என்று. எல்லாவற்றையும் உன் அளவு கொண்டு கணக்கிட்டுவிடுகிறாய் நீ. ஆரம்ப முதலே ஆரஞ்சு பதினொன்றும், முப்பதும் உன் கணக்கு. இருவது என் கணக்கு. எடுத்த ஒளியில் குழிகளைக் காண்பது உன் கணக்கு. எடுத்தவுடன் ஒளி ஓடி சமனாவது என் கணக்கு. ஒளி உஷ்ணம் தரும் என்பது உன் கணக்கு. ஒளி பசியாற்றும் அது என் கணக்கு. ஒளியைக் காண்பது உன் கணக்கு. ஒளியை உண்பதும், உண்ணச்செய்வதும் என் கணக்கு. ஒளி என்றால் ஒளி மட்டுமே, இருள் என்றாள் இருள் மட்டுமே உன் கணக்கு. காலை ஆரஞ்சுக்குப் பின் காலையும், மாலை ஆரஞ்சுக்குப் பின் இருளும் என் கணக்கு. அளக்காமல் இல்லாமல் செய்வது என் கணக்கு. அளந்து இருப்பு வைப்பது உன் கணக்கு. இனிமேலும் என்னைப் பின் தொடராதே. எனக்கு இன்னமும் மிட்டாய் ஆரஞ்சு விற்பனைக்கு உள்ளது. வழிவிட்டு விலகு.'

மூர்க்கமாக மோதித் தள்ளிவிட்டாள் அவள். அவளின் பலம் ஆரஞ்சின் ஒளியை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது. அந்தி மாலையின் அடர் ஆரஞ்சு நிறத்தையும், அதன் பின்னான அடர் நீலத்தையும் ஆடையாக அணிந்திருந்த அவள், மறையும் சூரியனின் வெளிர் ஆரஞ்சை தாவணியாக்கி அணிந் திருந்தாள். ஒளி இறக்கைகளைப் படரவிட்டுத் தலையில் ஒளி உருண்டை களைச் சுமந்து, மெல்ல மெல்ல மிதந்து சென்றாள். அவள் கூடையில் சூரிய உருண்டைகளைச் சுமந்து பெரு நகர வெளிகளில் இரவும் பகலும் சுற்றித் திரிவதும், அலைவதுமாய் இருப்பதனாலேயே பெரு நகர வானம் எப்போதும் மெல்லிய ஆரஞ்சை பூசிக்கொண்டிருக்கிறது. இது தெரியாமல், நான் எதோ பெரு நகர ஆரஞ்சு விளக்குகள் மேல் நோக்கிப் பயணம் செய்கின்றன என்று அவள் கூறியபடியே ஒரு முட்டாளாகவே இவ்வளவு காலமும் இருந்திருக் கிறேன்.

கிருஷாங்கினி.
34, சிட்லபாக்கம் 2ஆம் பிரதான சாலை,
தாம்பரம் சானடோ ரியம்,
சென்னை-600 047

No comments: