Saturday, October 29, 2011

கவிதை

07-12-2008 அன்று சென்னை மெரீனா கடற்கரையில் கூடிய தமிழ் நவீன கவிஞர்களின் ஒருநாள் அடையாள போராட்டம் ஈழத்தமிழர் வாழ்வமைதி மற்றும் உரிமைகளுக்காக தமிழகமெங்கும் ஆதரவைத் தெரிவிக்க எழுதப்பட்ட கவிதையிது-
க்ருஷாங்கினி

இக்கரையில்

கடல் அனைவராலும் விரும்பப்படுகிறது
பாதுகாப்பாகவும் நிலம் இயல்பாகவும் இருப்பதால்.
குழந்தைகள் குனிந்து குனிந்து
கிளிஞ்சல் சங்கு சேகரிக்கிறார்கள்
சிறு சிறு நண்டும் பூச்சியும் கண்டு
மகிழ்ந்து கைகொட்டுகிறார்கள்.

அக்கரையிலோ

சுற்றிலும் கடலால் சூழப்பட்ட நிலமது
அலைகள் எப்போதும் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன,
பீதியால் சூழப்பட்ட இந்நிலத்தில்
குழந்தைகள் குனிவதில்லை-படுக்கிறார்கள்
பயந்து பயந்து பதுங்குகிறார்கள்,
சதைத்துண்டுகள் குழந்தைகள் பொறுக்குவதில்லை

இக்கரையில்

இளைஞர்கள் காதலைக் கொண்டாடுகிறார்கள்
அலைகளின் நடுவே சலிக்காமல் அமர்ந்து
பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள்.
மற்ரொருவருக்காக காத்தும் இருக்கிறார்கள்
கைகளில் ரோஜாமலர் ஏந்தி.

அக்கரையிலோ

போரால் சூழப்பட்ட நிலத்தில் இருக்கிறார்கள்
ஆண்-பெண் ஈர்ப்பு காணாமல் தொலைத்துவிட்டிருக்கிறார்கள்
பூக்களுக்கு பதிலாககைகளில் துப்பாக்கி திணிக்கிறார்கள்
போர் செய்யப் பணிக்கப்படுகிறார்கள்
கணவன், காதலன், சகோதரன், மகன்
அணைந்த உறவுகளில் ஆண்கள் பலர்.

இக்கரையில்

தீவுகளைக் கண்டுகளிக்க
கப்பற்பயணம் செய்கிறார்கள்-இனிதாய்
விமானப் பயணமும் மேற்கொள்கிறார்கள்
திரும்பவும் தம் மண் மிதிக்கும் பத்திரத்துடன் திரிகிறார்கள்.

அக்கரையிலோ

உயிர், மண்ணில்விதைத்திருக்கிறார்கள்
இருளையும் சோகத்தையும் சுமந்து திரிகிறார்கள்
மண்விட்டு, பொருள்விட்டு, உறவுவிட்டு
அலையிடைப் பயணிக்கும் இவர்கள் உடல்மட்டும்;
வேற்றுமண்ணில் வேறற்று மிதக்கிறார்கள்.

இக்கரையில்

கவிதை வாசிக்கிறார்கள் சகோதரர்களுக்காய்
சுதந்திரமாய் சுவாசித்துக்கொண்டு
கடலையும் அலையையும் கண்டு நெகிழ்ந்துகொண்டே
கையசைத்து அலைகள் நோக்கி.


அக்கரையிலோ

கருப்பைகளும் விதைப்பைகளும் அற்ற வெற்று
மயானபூமியில் மறு உற்பத்தி மறுக்கப்பட
அபாயம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும்
அந்த நிலத்தில் யாரை யார் ஆள
இரண்டு தலமுறைக்கும் மேலாய்
இப்போர்?

No comments: